கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?

This entry is part 19 of 31 in the series 13 அக்டோபர் 2013

 

சிறுகதை :ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை.

 

 

நன்றாகக் குளித்துவிட்டு பழைய அழுக்குப் புடவை ஒன்றைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டு கதவுக்குப் பின்னால் சாத்தி வைத்திருந்த ஓட்டடைக் குச்சியைக்  கையில் எடுக்கிறாள் கோமதி. முதல்ல இந்த ஹாலை தூசி தட்டி ஒட்டடை அடிக்கணும் ,கட்டையை உயர்த்திப் பிடித்தது தான் தாமதம்…அவளது கைபேசிக்குத் மூக்கு வியர்த்து….”பாடி அழைத்தது…”

கீழே உருண்டு கிடந்த தம்ப்ளரில் கால் தடுக்கி தம்ப்ளர் சுழலும் சத்தம் பின்னணி இசை போட, ஹலோ..யார்  பேசறது ?

மேடம்……நாங்க ஹெட்ச் .டி.எஃப்  சி பாங்குலேர்ந்து கால் பண்றோம்….இந்த தசராவுக்கு ஸ்பெஷல் கார் லோன் மேளா…ஆரம்பமாயிருக்கு இப்ப நடக்குது அதுல பாத்தீங்கன்னா…….ஹன்ட்ரெட்  பர்சென்ட் இன்ட்ரெஸ்ட் ஃப்ரீ…லோன் ..! நீங்க ரெடின்னா….. நாங்களே உங்க வீட்டுக்கு வந்து….

ஒட்டடை அடிச்சித் தரேங்கறியா…?

மேடம்….என்ன சொல்றீங்க…..?

சும்மா ஜோக்கு பண்ணேன்….இதோ பாரும்மா கொழந்தே….உன் பேரு என்ன?

சுஜாதா..!

எனக்கு அவரோட நாவல்கள் ரொம்பப் பிடிக்கும்..அவரோட பேரை வெச்சுண்டு இருக்கியே…உனக்குப் அவரைப் பிடிக்குமோ?

தர்மசங்கடமான குரலில், மேடம்…நாங்க இந்த தசராவுக்கு கார் லோன்….

நீங்க லோன் வேணுமா..? லோன் வேணுமான்னு லோ…லோ…ன்னு கத்தினாக் கூட நான் மசிய மாட்டேன்….ஏன்னா….

ஏன் மேடம்…?

எனக்கு கார் ஓட்டத் தெரியாது….அதே மாதிரி….

அதே மாதிரி….? சொல்லுங்க மேடம்…சொல்லுங்க கேட்கிறேன் சொல்லுங்க….ஆவலாதியான குரலில் அடுத்த முனையில்…சுஜாதா .

எனக்கு ஸ்கூட்டரும் ஓட்டத் தெரியாது…!

மேடம்….நீங்க என்னைக்  கலாய்க்கிறீங்கன்னு புரியுது, நான் வெச்சிடறேன்…..

கொஞ்சம் பொறுடிம்மா சுஜாதா…நீங்க மட்டும் காலங்கார்த்தால வேலை செய்ய விடாம ஃபோனைப் போட்டு பிராணனை எடுக்கலாம்…அதுக்கு பதிலா நான் பேசினா களாககாயா…? உங்க பாங்க்கோட நியாயம் நன்னாத் தானிருக்கு….!

கோமதி முடிப்பதற்குள் டக்கென்று கைபேசி டயல்டோனுக்கு மாறியது.

சுவர் கடிகாரம் எண்பது வயதைத் தாண்டியிருந்தாலும், இன்னும் கணீரென்று பெண்டுலத்தால் “டங் …டங் …..டங் …டங் ..’ மண்டையைத் தட்டி எழுப்பும்  விதத்தில் நேற்றுப் பிறந்தது போலிருக்கும்.

அரை மயக்கத்தில் கஷ்டப்பட்டு கண்களைப் பாதி திறந்து மணியைப் பார்த்த  கோமதி அதிர்ந்தாள்…என்ன ஏழரையா…! அவசரமாக எழுந்தவள் கையை உதறிக்கொண்டே….ஒட்டடை….ஒட்டடை…..கனவா….எல்லாம்…கனவா……?

சத்தம் கேட்டு ஷேவிங் ப்ரஷும் நுரை தாடியுமாக எட்டிப் பார்த்த கணவர் அனந்தராமன், அசந்து தூங்கறியேன்னு எழுப்பாம விட்டுட்டேன்….தூக்கத்துலயும் நீ செருப்பும், குப்பையும், சாக்கடையும், ஒட்டடையும் பார்த்துட்டு இப்படி ஏழரையைக் கூட்டுவேன்னு யார் கண்டா.?

ஏன்னா…நான் நன்னா நாலு தரம் சொல்லிட்டு தானே படுத்தேன். நாலரைக்கு அலாரம் வெச்சு என்னை எழுப்பி விடுங்கோன்னு. நீங்க மட்டும் சீக்கிரமா எழுந்துண்டு சிங்காரிச்சுக்கோங்கோன்னா  சொன்னேன்,,,,!

அதில்லைடி ….கோமு…!

அச்சோ அச்சோ…கோமூ ன்னு நீட்டி முழக்காதேங்கோ…நேக்கு முட்டீண்டு வரது….!

என்னது….நமுட்டுச் சிரிப்புடன் அனந்தராமன் அவளை கேலி செய்வதாகக் ..கேட்க…!

ஆத்திரம்……முட்டீண்டு வரதுன்னு சொன்னேன்…உங்க நெனப்புல சுள்ளிய வெய்க்க, போர்வையை உதறி  மடித்தபடி, நீங்க எப்போ ஆபீசுக்குப் போகணம்..?

என்னிய என்னைக்கு நீ சரியான நேரத்துக்கு ஆபீசுக்குக் கிளம்ப விட்டிருக்கே…. கெளம்பற  நேரம் தான் உனக்கு எலெக்ட்ரிசிட்டி பில் கட்ட கடைசி தேதின்னே நியாபகத்துக்கு வரும். அதுவும் இல்லையானா ஏதோ ஒரு காரியத்தை நீயே உருவாக்கி சொல்லுவே…? அப்படி இன்னிக்கி ஏதாவது உருவாகியிருக்கா உன் மூளைல.

போறுமே ….இன்னைக்கு கொலு வைக்கணம், கொலுப் பெட்டிய பரண் லேர்ந்து அள்ளிப் போட்டேள்னா போதும். நான் பார்த்துக்கறேன்.

என்னடி… ஏதோ தக்காளிக் கூருலேர்ந்து அள்ளிஎடுக்கறாப்பல சொல்றே…? ஜாதிக்காப் பொட்டிடீ…..சாதிக்கப் பொட்டி…போன வருஷமே தலையால அடிச்சுண்டேன், அதைப் பரண்ல ஏத்தாதேன்னு. கேட்டியோ..? சொல்லச் சொல்லக் கேட்காமே எவனோ வாசலோட போற மரம் ஏற்றவனைக் கூப்டு  உள்ள தள்ளினே. இப்பப் பாரு அவஸ்தையை. இன்னைக்குன்னு நான் சீக்கிரமாப் போகணம். என்னால ஆகுமா தெரியலை.

இந்த கொலு வைக்கிறது கூட செம ஈஸி. ஆனால் இந்தக் கொலுப் பெட்டியை ஏறக்கறது இருக்கே…பிராணன் போய்டும். நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்…வெறும் இந்த ஸ்டூலை கொஞ்ச நேரம் பிடிச்சிண்டாப் போதும்…நான் கூட அதும் மேல ஏறி…

நீ டிரெஸ் பண்ணீண்டு  வருஷக் கணக்காச்சோடி ?

ஏன் இப்பப் போய் அதைக் கேட்கறேள் ?

இல்ல….கண்ணாடியை ரீசெண்டா நீ பார்த்தியோ இல்லியோன்னு தான்.

இந்த அசட்டுப் பிசட்டு ஜோக்குக்கு உங்களை நான் கூப்டேனா?

அந்தச் சின்ன ஸ்டூல் பாவம்டி…நீ ஏறி மிதிச்சா அது தீக்குச்சியா போயிடும்டி…கோமதி.

ம்கும்…நான் அவ்வளவு குண்டுன்னு குத்திக் காட்றேளாக்கும். உங்க பரம்பரைச் சின்னத்தை விட இதொண்ணும் பெரிசில்லை.

என் தொப்பையைச் சொல்றியா..?

வழுக்கையையும் சேர்த்துத் தான்….! சரி…..சரி…அப்போ நீங்க ஏறுங்கோ…..புல் தடுக்கி பைல்வான் அவர்களே….!

நான் ஸ்டூலை பிடிச்சுக்கறேன்.

ஸ்டூல் மேல் அனந்தராமன் ஏறியதும்…ஐயோ…..அம்மா….என் ..விரல்.என் விரல்….என்று கோமதி கத்தவும்……என்னாச்சு என்று அங்கிருந்து அப்படியே கீழே அவர் ஒரு ஜம்ப்…….! அவ்ளோ தான், ஏண்டி….உன்னோட ஒரு கைவிரலுக்கு என்னோட ஒரு கால் விரல் அடி வாங்கினாத்தான் விடுவேன்னு வேண்டீண்டியா ? கால் கட்டைவிரல் சுளுக்கிண்டுடுத்து.

பாக்கத் தான் ஒட்டடைக் கம்பாட்டமா  இருக்கேள். மிதிக்கிற மிதியில அப்படியே அம்மிக் கல்லுல  மாட்டீண்ட இஞ்சித் துண்டு மாதிரின்னா நசுங்கித்து..என்னோட சுண்டுவிரல்….என்று சுண்டுவிரலை வாயருகில் வைத்து ஊஃப்….ஊஃப்…. ஊஃப் என்று ஊதிக் கொண்டே அனந்தராமனைப் பார்த்து பொய்க்கோபத்துடன்   முறைத்தவள்….

இப்ப நான் ஸ்டூலைப் பிடிக்க மாட்டேன்…நீங்களே ஏறி எடுங்கோ…! என்றதும்.

ஊஊஊய் ய் ய் ய் ய் ய் …என்று பால் குக்கர் தன் பங்குக்கு சங்கூதிக் கொண்டிருந்தது.

அந்தச் சனியனைக் கொஞ்சம் அணச்சுத்தொலை  ….இன்னும் காப்பி சாப்பிடாத எரிச்சல் அனந்தராமனுக்கு.

இருங்கோ….காப்பி போட்டுத் தரேன்..நம்ப அவசரத்துக்கு டிக்காக்ஷன் இறங்குமா?..என்ற கோமதி, இன்னைக்கு ஆபீஸ் போறதுக்கு முன்னாடி வெளிலேர்ந்து ரெண்டு பக்கெட் மண்ணு கூட வேணும்…பார்க் வேற வைக்கணம் . அப்போ தான் கொலு பார்க்கவே நன்னாயிருக்கும்.

அந்தக் கூத்தெல்லாம் இந்தவாட்டி வேண்டாம்….பேசாம மூணு படி கொலு வெய்யி போதும்…..முந்தி மாதிரி யாரும் இப்போ இதுக்கு அவ்வளவு இம்பார்டன்ஸ் கொடுக்கறது இல்லை. வீணா இழுத்துப் போட்டுக்காதே..சொல்றதைக் கேளு…காசுக்குப் பிடிச்ச கேடு. இதெல்லாம் இப்போ பணக்காரப் பண்டிகையில சேர்ந்துடுத்து. சக்கரை வியாதி மாதிரி.

நீங்க சும்மா இருங்கோ…உங்களுக்கு ஒண்ணும் தெரியாது.வருஷா வருஷம் வைக்கிற கொலுவை முடக்கி பொம்மையை தூங்க வைக்கப் படாதாக்கும். இந்த ஒன்பது நாளும் நம்மாத்து பொம்மைகள் நின்னு தான் ஆகணம். கொலுங்கறது வெறும் பொம்மையை அடுக்கி நிக்க வைக்கறது மட்டுமில்லை.

உங்களுக்கே தெரியும் ஆண்டாண்டு காலமா வழி வழியா நமாத்துல கொலு வெச்சுண்டு வரோம்…எத்தனை சுமங்கலிகள் வந்து மனம் நெறைஞ்சு பாடிட்டு தாம்பூலம் வாங்கீண்டு போவா….எத்தனை குழந்தைகள், சுத்துப் பட்டுத் தெருவிலேர்ந்து கூட மாமியாத்து கொலு…சூப்பர்டா ன்னு சொல்லிண்டு ஆசையாசையா ஒவ்வொரு பொம்மையாப் ரசிச்சுப் பார்த்து, இதை நீங்க செஞ்சதான்னு கேட்டு சந்தோஷமா சுண்டலை வாங்கிண்டு போவாளே…இதெல்லாம் வருஷத்துல இந்தப் ஒன்பது நாள் தான் இவ்வளவு கோலாகலம். இதை என்னால நிறுத்த முடியாது.

நான் ஒண்ணும் உன்னை ஒரேயடியா கொலுவே வேண்டாம்…வைக்காதேன்னு சொல்லலையே…ஒரு மூணு படி மட்டும் உபாயமா போதும்னேன்….அப்படி குறைச்சுக்கோ.

பிரம்மாண்டமா ஒன்பது படிக்கு பொம்மைகள் இருக்கும் போது எதுக்கு மூணு படியா குறைக்கணம்…நான் படியை குறைக்க மாட்டேன். நான் தான் இப்போ குறைப்பேன்…..முறைப்பேன்…...உங்களைப் பார்த்து…இதெல்லாம் சம்பிரதாயம்…..இதுக்கெல்லாம் உபாயம் தேடப்படாது.

போடி…நீயும் உன்னோட சம்பரதாயமும், தனக்கு மிஞ்சித் தான் தான தர்மம்,,,,உன் உடம்பு இருக்கற இருப்பில் இதெல்லாம் தேவையே இல்லாத ஒண்ணு.

உடம்பு எப்பவும் தான் இருக்கு….நடந்தாக் கூடக் கூடத்தான்  வரது. அதுக்கு என்ன .பண்றது.?

நீங்க முதல்ல பொம்மைகளை எடுத்துக் கீழ வையுங்கோ சொல்றேன்.

எல்லாம் அரதரப் பழசு…எங்க பாட்டி காலத்து பொம்மைகள்,,,பாதி பொம்மைக்கு மூக்கே இருக்காது.கலரெல்லாம் போயி, களிமண் எட்டிப்பார்க்கும்….போன தடவை பெட்டிக்குள்ள போடும்போதே சில பொம்மைகள் உடைஞ்ச சத்தம் வேற கேட்டது. இப்ப அந்த பொம்மை யையெல்லாம் நீ பார்த்துட்டு உடனே காதி கிராஃப்ட்டுக்கு ஓடுவே….உடைஞ்சதுக்கெல்லாம் புதுசு வேணும்னு. இதுக்கெல்லாம் தண்டம் அழ என்னால முடியாது. இப்பவே சொல்லிட்டேன். நான் புதுசா இந்த வாட்டி ஒரு பொம்மை கூட வாங்க மாட்டேன், கேட்டுக்கோ.

நீங்க ஒண்ணும் வாங்க வேண்டாம்….அதென்னவோ நானே பார்த்துக்கறேன்…இந்த வாட்டி பொம்மை கொலு தத்துவங்கள் ன்னு புது தீம்ல கொலு வைக்கலாம்னு ப்ளான் போட்ருக்கேன்.நீங்க ஆபீஸ் போனதுக்கப்பறம் நானே கொலு வெச்சுடுவேன்.நம்ம கந்தன் இருந்த வரைக்கும் எடுத்துக் கட்டிண்டு கொலு வைப்பான்..அவன் துபாய் போனானோ இல்லியோ…மூணு வருஷமா நானே இந்த வேலைக்கெல்லாம் தனியா மாரடிக்கறேன்.உதவிக்குத் தான் வர யோசிப்பேள் . உபத்ரவத்துக்கு டாண்னு ரெடியா நின்னா எப்படி…?

கந்தன் கஷ்டப்பட்டு கட்டுக்கட்டாப் பணம் அனுப்பறானா ..வெஸ்டெர்ன் யூனியன்ல ? எல்லாத்தையும் கொலு பொம்மைல கொட்டி அழிச்சுடாதே….

நான் எங்க வாங்கப் போறேன்னு சொன்னேன்….நீங்க தான் வாங்கித் தருவேள்….வழக்கம் போல. கடைக்குப் போகலாம், புதுசா என்ன வந்திருக்குன்னு பார்க்கலாம்….காசு கொடுத்து வாங்கறது நீங்க தானே எப்பவும்.

என் தலையில கையை வைக்காதே சொல்லிட்டேன்….எந்தப் பண்டிகை வந்தாலும் பயம்மா இருக்குடி….விலைவாசி விஷம் போல..ஏறி நிக்கறது. வீணாக் குப்பைக்குப் போற பூவுக்கும், நாருக்கும் , காய்ஞ்சு போற வெத்தலைக்கும் உழைச்ச காசை அள்ளியள்ளிக் வீச  முடியாது.

சரி…சரி…நீங்க பெட்டியை இன்னுமா  நகர்த்தலை…..!

ஒரு வழியா ‘தம்’ கட்டி பெட்டியை நகர்த்தித் திறந்து ஐயோ பாச்சை….அய்யய்யோ பல்லி….ம்கும்…இதென்ன .கரப்பான்பூச்சி நாத்தம் என்று மூக்கைப் பிடித்துக் கொண்டே பரணிலிருந்து தொபுக்கடீர்ன்னு விழுந்து ஜிம்னாஸ்டிக் எல்லாம் செய்து ஒருவழியா ‘கொஞ்சம் சுமாரா’  இருக்கும் எல்லா பொம்மைகளையும் டேபிள் மேலே நிறுத்தி அழகு பார்த்து…

ஏன்னா இந்த மீனாக்ஷி பொம்மையை ஞாபகம் இருக்கோ..முதல் முதலா நாம மதுரை போயிருந்த போது உங்கம்மா கேட்டாளேன்னு நீங்க வாங்கிக் கொடுத்தது…! அழுத்தம் திருத்தமாக சொன்னதும்..

ஆமாமாம்….அப்போ நீ நம்ம கந்தனை பிள்ளையாண்ட்ருந்தே…..  என்றபடி அந்த மீனாக்ஷி பொம்மையை கையிலேந்தி பழைய காலத்துக்கு நினைவுகளோடு ஓடுகிறார் அனந்தராமன்.

முகமெல்லாம் குங்குமமாய்ச் சிவக்க, கூடவே கண்கள் ததும்பி வழிய…முப்பது வருஷம் ஓடிப்போச்சு. அன்னிக்கி இருந்தவா யாரும் இப்போ நம்ம கூட இல்லை…இல்லையான்னா..?

அமாம்….அதுக்கேன் இப்போ நீ மூக்கை சிந்தறே? அம்மா கூட இருந்தப்போ நடந்த கோலாகலமெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன..?

ஆமாம்….ரொம்பக் கண்டுட்டேள்….உங்கம்மா  மட்டும் என்னவாம்…? இதே…கொலுவுக்கு என் தங்கை ரேவதி குழந்தைகளோட வந்தால், என்ன செய்வாள்னு தெரியுமோன்னோ..? யாரோ தனக்குப் பிடிக்காத  கர்சீப் மாதிரி இருக்கற கிளிப்பச்சை ப்ளௌஸ் பிட்டை வேணும்னே வெத்தல சீவல்ல வெச்சு ரேவதியண்ட தருவா…?  நான் சுடச் சுட சுண்டல் பண்ணியிருந்தாலும் குழந்தைகளுக்குத் தர மனசு வராது.. அழுகப் போற வாழைப் பழத்தை கையில கொடுத்துட்டு ‘தோலை அங்க .போடாதே….தோலை இங்கே போடாதேன்னு தொண்டை கிழிய தோ …தோ …ன்னு கத்துவா..’ அதெல்லாம்  எனக்கும் மறந்து போகலை.

ஏண்டி…இப்பப் போயி பழங்காலக் கதையைப் பத்திப்  பேசி செத்துப் போன அம்மாவோட ஆத்மாவை வம்புக்கு இழுக்கற..?அம்மா…அந்தக்காலத்து மனிஷி….அவ மாமியார்ட்ட பட்டத் துவேஷம் வேற….இப்போ அம்மா போயே பத்து வருஷமாறது…..உங்காத்து ரேவதிக்கோ, குழந்தைகளும் பெருசாகி அமெரிக்காவில் வேலைக்கும் போயாச்சு. இப்போ அவாளே அமெரிக்காவுல கொலு வெச்சு குழந்தைகளுக்கு கால்குலேட்டர்  தந்துண்டு இருப்பா. நீ  தான் பழைய பஞ்சாங்கம்.

சொல்ல மாட்டேள்….?.எனக்கு இதுவும் வேணம் இன்னமும் வேணம். உங்களுக்கு கழுத்தை நீட்டி எனக்கு ஒரு  அமேரிக்க உண்டா….ஆப்ரிக்கா உண்டா…இதே காரை போன வீடு..! இன்னும் எத்தனை வருஷம் இந்த கூட்டுக்குள் குப்பை கொட்டணமோ, பகவானே.

அமேரிக்கா…ஆப்ரிக்கா தான் நான் வாங்கிண்டு வரலை….உனக்குப் பிடிக்குமேன்னு பேரிக்காய் எத்தனை வாங்கித் தந்திருப்பேன்…அதை மறந்துட்டியா கோமதி.

ஆமா…ஒண்ணரையணா பேரிக்காயை நான் ஞாபகத்துல வேற வெச்சுக்கணமாக்கும் ? ஆசை தான்..ஏன்னா..இதோ இந்த பொம்மையைப் பார்த்தால் உங்களுக்கு என்ன ஞாபகம் வரது…?

அந்தப் பொம்மையை கையில் வாங்கியவர்…அதைத் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டு, இது நான் ஆந்திராவுக்கு டெபுடேஷன்ல வாரங்கல் போனப்போ  கொண்டபள்ளி போயி வாங்கீண்டு வந்தேன்…இன்னும் அப்படியே இருக்கு பாரேன் . அந்தத் திருப்பதி மரப்பாச்சி பொம்மையை எடேன்….இந்த வாட்டி நானே அலங்காரம் பண்றேன்.

டண்…..டண்….டண் ….என்று மணி ஒன்பது தரம் அடித்து ஓய்ந்தது.

அச்சச்சோ……ஏன்னா….உங்களுக்கு ஆபீசுக்கு நாழியாச்சே……! ஐம் சாரி…..நீங்க சீக்கிரம் குளிச்சுட்டு தர்ப்பணம் பண்ணீட்டு கெளம்புங்கோ…..வழுக்கைத் தலையில் அப்படியே ஒட்டடை படிஞ்சிருக்கு…..நன்னாத் தேய்ச்சுக் குளியுங்கோ…..இல்லாட்டா உங்க ஆபீஸ்ல பார்க்கறவா…ஏதோ நான் தான் ஓட்டடைக்குச்சிக்கு பதிலா உங்களை யூஸ் பண்ணிட்டேனோன்னு நெனைச்சுப்பா.
ஆனாலும்….கோமதி, உனக்கு வாய் காது வரைக்கும் நீளன்டி ….குசும்பைப் பாரு….நான் ஒட்டடைக்குச்சி…..நீ அரிசிப்பானை ….! என்னோடது எக்சர்சைஸ் பாடிடி…..!

என்னோடது எக்ஸாமின் பாடி…! அதான் ஹெல்ப் கேக்கறேன்…!

அந்த நேரம் பார்த்து, அவரது கைபேசி அழைத்தது.

டிஸ்ப்ளேயில் மின்னிய பெயரைப் பார்த்ததும், முகத்தில் சிறிது இறுக்கம் தெரிய, ஹலோ…அனந்தராமன் தான் பேசறேன்….!

அனந்தராமன் சார், நான் ஜோ…பேசறேன்…இன்னிக்கு நீங்க லீவா சார்..?

ம்ம்….ஆமாம்பா ஜோ….லேட்டாயிடுச்சு..அவாவாசை தர்ப்பணம்….அது இதுன்னு…இன்னைக்கு தான் கொலு ஆரம்பம். அதான் வரலை.  ஏதாவது இருந்தா நீயே அட்ஜஸ்ட் பண்ணிடு.

அப்படியா…அப்ப ..சரி….உங்க வீட்டு கொலுவுக்கு வந்தால் எங்களுக்கும் சுண்டல் கிடைக்கும்னு சொல்லுங்க.

அவசியம்…குழந்தைகளையும் அழைச்சிண்டு வாப்பா…ஜோ..!

கண்டிப்பா…..வரேன் சார்….எங்க வீட்டு ஜூடிக்கும் , பெலினாவுக்கும் இதெல்லாம் ரொம்பப்  பிடிக்கும் ஸர்.

வெரி நைஸ்..கிட்ஸ் .எனக்கும் எங்காத்து மாமிக்கும் கொலு வைக்கறதுன்னா கொள்ளை பிரியம். தலைமுறை தலைமுறையா கொலு வெச்சுண்டு வரோம்…ஒவ்வொரு வருஷமும் புதுமையா இருக்கும். நீங்க இந்த வருஷம் தானே இந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர்ல வந்திருக்கே .அவசியம்  எல்லாரும் குடும்பத்தோட வாங்க ஜோ.எங்கத் தெருவிலயே  கோமதி மாமியாத்து கொலுன்னா ஃபேமஸ்…ஓரக் கண்களால்  கோமதியைப் பார்த்துக் கொண்டே அவள் முகத்தில் ததும்பி  வழியும் பெருமையை அளந்து  கொண்டிருந்தார் அனந்தராமன்.

கண்டிப்பா எல்லாரும் சேர்ந்து வரோம்  சார். என் குழந்தைகள் ரெண்டு பேரும் கொலுவைப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியப்படுவாங்க.

அப்படியா? இதுவரைக்கும் பார்த்ததில்லையா?

பொம்மை கொலு பார்க்கணும்ன்னு சொல்லுவாங்க. நாங்க தான் இன்னும் எங்கியும் அழைச்சிட்டுப் போகலை.

குழந்தைகளுக்கு நிறைய நல்ல விஷயங்களை இந்த கொலு சொல்லிக்கொடுத்துடும்….அப்ப சரி, நீங்க அவசியம் வாங்க
நாங்க காத்திட்டிருப்போம். எப்பவும் என்  பையன் கந்தன் தான்   கொலு வைப்பான். இந்த வருஷம் வேலை கிடைச்சு அவன் துபாயில் இருக்கான். அதனால நான் மாட்டீண்டேன்…அப்ப நான் வெச்சுடட்டுமா? சாயந்தரமாப் பார்க்கலாம். ஃபோனை வைத்துவிட்டு,

கோமதி…..இன்னைக்கு எங்காஃபீஸ்லேர்ந்து ஜோசஃப் குடும்பத்தோட நம்மாத்து கொலுவுக்கு வராராம். புதுசா இந்த ப்ராஞ்சுக்கு வந்திருக்கார். அதான் அவர்ட்ட உன்னோட கொலு பிரதாபத்தை அளந்துண்டு இருந்தேன்.

கோமதி, குளித்துவிட்டு மாம்பழக் கலர் மடிசாரில் மங்களகரமாக காப்பியை ஆற்றிக் கொண்டே ‘அதான் கேட்டுண்டு இருந்தேனே…’ இந்தாங்கோ காப்பி…..குடிச்சுட்டுக் குளிக்கப் போங்கோ…நாழியாச்சு……சொல்லிக் கொண்டே லலிதா சஹஸ்ர நாமத்தை முணுமுணுத்துக் கொண்டே அடுக்களைக்குள் நுழைகிறாள் கோமதி.

கொடியில் கிடந்த துண்டால் தலையைத் தட்டித் தூசியைத்  துடைத்துக் கொண்டவர், ..குளிக்கக் கிளம்பினார்.

அடுத்த ஆறு மணி நேரம் போனதே தெரியாமல் அனந்தராமனும் கோமதியும் ஒன்பது படிகள் வைக்கிறார்கள் . ஓரறிவு உயிர்ப்பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகளில் ஆரம்பித்து படிப் படியாக பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளையும் அவர்களின் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் ஆதிபராசக்தியை நடு நாயகமாக .வைத்து விட்டு கொலுவின் அழகை அவர்களே பார்த்து ரசித்து ‘இந்த தடவையும் நம்பாத்து கொலு சூப்பரா அமைஞ்சுடுத்துன்னா’ என்று பெருமை பட்டுக் கொண்டு, இனி நைவேத்யம்…தாம்பூலம்….இதெல்லாம் தான் பாக்கி……ம்ம்ம்ம் நீங்க சொன்னது சரி தான்….நேக்கு வயசாயிண்டே வரதொன்னோ…..இடுப்பு வலி….முன்ன மாதிரியில்லை…என்று பிடித்துக் கொண்டே நடக்கும் மனைவியைப் பார்த்து….

‘நான் தான் சொன்னேனே….கேட்டியா…..இதெல்லாம் நாம் தான் மொள்ள நிறுத்தியாகணம்….சொல்லுவோம்….ஆனால் நிறுத்தமாட்டோம்…என்ன செய்ய..?  அதுவும் கொலுவைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் குழந்தை உள்ளம்
விருட்டென்று எழுந்து நின்று..ஹையா என்று குதூகலித்தது.

கோமதி சுடச் சுட சுண்டல் செய்து…இறக்கி வைத்தவள்..இன்னைக்கு யாரெல்லாம் வருவாளோ…? தாம்பூலத்தோட குழந்தைகளுக்கு மருதாணிக் கோன் கொடுக்கலாம்…..அப்பறம் ஸ்டிக்கர் பொட்டு….ஹேர்பாண்ட்..என்று மனசுக்குள்
லிஸ்ட் போட்டபடியே கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கோமதி.

ஆமாமாம்..கோமதி நீ சொல்லறது நிஜம் தான்…ஒவ்வொரு வருஷமும் புதுசா கொலு வெச்சாக் கூட ஒவ்வொரு பொம்மையையும் பார்க்கும்போது பழைய கால நினைவுகளோட, பல நல்ல நிகழ்வுகளை நியாபகப் படுத்திக் கொள்ளவும், மனசுக்கு ஒரு தெம்பும் , புத்துணர்ச்சியும்  வருது. அதே சமயம் நம்ம கற்பனை வளம் குன்றாமல்….குழந்தை மனம் மாறாமல்…மொத்தத்தில் கொலு ஒரு எனெர்ஜி டானிக் மாதிரி தான் என்ற கணவனின் தற்போதைய மனமாற்றத்திற்கு காரணம் தெரியாமல் சந்தோஷப் பட்டாள் கோமதி.

வீட்டுக்குள் நுழைந்ததும் “டாடி இன்னிக்கு உங்க எல்லாரையும் கொலு பார்க்க கூட்டீட்டு போகப் போறேனே…கிளம்புங்க….கிளம்புங்க…..ஜோசப்

ஷூவைக் கழற்றியபடியே மனைவி கேத்தரினிடம் சொல்லும்போதே….

ஹையா…டாடி….நாம எங்க போறோம் டாடி..? கொலு பார்க்கவா? யார் வீட்டுக்கு டாடி….? ஜூடியும் பெலினாவும் ஓடி வந்து இடுப்பைக் கட்டிக் கொண்டு கேட்டதும், ஜோவின் மனம் மகிழ்ந்தது..

கோமதி மாமியாத்து  கொலுவுக்குப் போகாமலா…..?

கொலு பார்த்துட்டு வரும்போது அவங்க வீட்டுல நமக்கு சுண்டல் தருவாங்க இல்லியா டாடி…..நாம அவங்க வீட்டுக்குப் போகும்போது பொம்மை வாங்கிட்டு போகலாமா டாடி…?

கண்டிப்பா…வாங்கலாம்….என்ன பொம்மை வாங்கலாம்….கிளம்பும்போதே யோசிங்க…பார்க்கலாம்..!

என்ன பொம்மைன்னு நான் தான் சொல்லுவேன்……மூத்த மகள் ஜூடி. கொஞ்ச….

இல்லை…. நான் தான்…!இரண்டாவது மகள் பெலினா கெஞ்ச…..

ரெண்டு பேருமே கிடையாது….நான் தான் டிசைட் பண்ணி வாங்குவேன்….இது கேத்தரின்.

நீங்க யாருமேயில்லை…..நான் முன்னாடியே வாங்கி கார்ல வெச்சிட்டேன்….வீட்டுக்குப் போய் அந்த ஆன்ட்டிட்ட கொடுத்தபிறகு பார்த்துக்கிடலாம்.

ஒ கே டாடி….!

அப்ப இன்னும் சீக்கிரமா கூட்டீட்டுப் போங்க டாடி.

ம்ம்ம்ம்ம்ம்….போகலாம் வாங்க…!

இவர்களின் வருகைக்காக வாசலிலேயே காத்து நின்று வரவேற்ற கோமதியும், அனந்தராமனும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை.

ஜோசஃப் குடும்பத்திற்க்கும் ஒரு நல்ல குடும்பம் கொலுவால் நட்பானது

கோமதி மாமியாத்து கொலுவில் அழகாகச் சிரித்தபடியே தவழும் கிருஷ்ணன் பொம்மை ஜோசஃப் குடும்பத்தின் அன்புப் பரிசாக கொலுவேறினார்.

இனி வரும் ஒவ்வொரு கொலுவிலும் இந்த கிருஷ்ணன் பொம்மை இன்றைய நாளின் நல்ல நினைவுகளாக ஜோசஃப்பையும் அவரது குடும்பத்தையும் கோமதிக்கும் அனந்தராமனுக்கும் மனத்துள் கொண்டு வரும்.
——————————————————————————————————————————–

Series Navigationநீண்டதொரு பயணம்தேடுகிறேன் உன்னை…!
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *