சில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லை

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

rajid1

 

அது ஒரு முக்கியமான இரவு. மணி 11.15. பெருமழை நின்று தூறல் தொடர்ந்துகொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் மழைநீர் பாம்பாக நெளிந்து இறங்கிக் கொண்டிருந்தது. கழுவப்பட்ட காற்று அறைக்குள் வியாபித்து விழித்துக்கொண்டே படுத்திருந்த மதியழகனின் உடம்புஉஷ்ணத்தை திருடிச் சென்றதில் அவருக்கு லேசாக குளிர் தட்டியது. கம்ப்யூட்டர், டிவி, மோடம் இத்யாதிகளின் பச்சை மஞ்சள் ஒளிப் பொட்டுக்கள் அசையாத மினுக்கட்டான் பூச்சிகளாய் மின்னின. பக்கத்தில் மனைவி வடிவு என்கிற வடிவுக்கரசி ‘தூங்ஙிவிடக்கூடாது’ என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போய் விட்டதை சன்னமான குறட்டை உறுதி செய்தது. எதையும் பார்க்காதவராய் நினைவுகளை மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்க ஆசைப்பட்டவராய் இமைச் சாளரத்தை மூடிவைத்து மனதைத் திறந்து வைத்தார் மதி. தவிட்டுப்பூச்சிகளாய்ப் புறப்பட்ட பலப்பல நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி சிநேகமானதும் குரோதமானதுமான டயனாசர்களாக வளர்ந்து அவரைச் சுற்றி நின்று  பார்த்துக் கொண்டிருப்பதுபோல் உணர்ந்தார். சிலவைகள் அப்படி அப்படியே பறந்து பறந்து கலைந்தன. கலையக் கலைய புதிய புதிய பூச்சிகள்  உருமாறி உருமாறி பெருத்தன.

இதோ பக்கத்தில் 37 ஆண்டுகளாகிப்போன மனைவி வடிவுக்கரசி. அடித்து அடித்துத் துவைக்கும் வாழ்க்கையில் செம்பராங்கல்லாகவும் துணியாகவும் மதியும் வடிவும் மாறி மாறி இருந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 37 ஆண்டுகளுக்கு முன் வடிவைப் பெண்பார்க்க போன ஆண்டில்தான் லட்சுமி அறிமுகமான ஜீவனாம்சம் ரிலீஸ். மதியின் அக்கா வந்து சொன்னார். ‘அப்புடியே லட்சுமி மாரி இருக்குதுடா தம்பீ. உனக்காகவே செஞ்சமாதிரி’ என்றார். 60 கிலோ எடையில் மெழுகுச் சிற்பமாக வந்தவர்தான் வடிவு. இன்று 90 கிலோவாகி குடும்பத்தின் ஆணிவேராகி, கொஞ்சம் ரத்தஅழுத்தம் அவ்வப்போது எட்டிப்பார்க்க மாசுமருவற்ற அதே நிர்மலமான முகத்துடன் இதோ அருகில் தூங்கிக் கொண்டிருக்கிறார். விடிந்தால் 29-11-2013. மதியின் பிறந்தநாள். அந்த நாள் பிறக்கப் போகும் இரவு 12 மணிக்கு அழைத்து எல்லாரும் வாழ்த்துச் சொல்வது பல ஆண்டுகளாய்த் தொடரும் குடும்பப் பழக்கம். குடும்பத்தில் யாருடைய பிறந்தநாளைக் கேட்டாலும் ஏதோ காற்றில் எழுதியிருப்பதைப் படிப்பதுபோல் ஒப்புவிப்பார் மதி. பிள்ளைகளின் வாழ்த்துக்களை அவர் எதிர்பார்த்திருந்தார். வாழ்த்துவதற்காகவே தூங்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டே பாவம் தூங்கிப்போய்விட்டார் வடிவு. நாளை மதிக்கு 65வது பிறந்தநாள். மூத்த மகன் கருணா. ஒரு தனியார் கம்பெனியில் மூத்த விற்பனை அதிகாரி. 3,7,10 வயதுகளில் மூன்று மகன்கள். மனைவி பிள்ளைகளோடு மாமியாரையும் அழைத்துக் கொண்டு மெல்பர்ன் போய்விட்டு இன்றுதான் வந்திருக்கிறான்.  ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறை செல்ல அவன் ஏபி டிராவல்ஸில் டிக்கட்டுகள் புக் செய்த அடுத்த நிமிடமே அங்கிருந்து சலீம் மதிக்கு போன் செய்துவிட்டார். ‘என்ன சார், உங்க பையன் மெல்பர்னுக்கு டிக்கட் போட்டிருக்கிறார். நீங்க போகலியா?’ என்றார். ‘அவன் மெய்டை இங்கு விட்டுவிட்டுத்தான் போகவேண்டும். அவன் வந்ததும் நாங்கள் போவோம்’ என்று பூசி மொழுகிப் பேசிவிட்டு போனை வைத்தார் மதி. கருணா அந்த விஷயத்தை மதியிடம் சொன்னபோது ‘இவன் ஏன் ஒரு சிறுகதை எழுதக்கூடாது’ என்று மதி நினைத்தார். அவன் மாமியார் அலுவலகத்தின் மிக மலிவாக  டிக்கட்டுகள் கொடுத்தார்களாம். தன்னைக் கேட்காமலேயே எல்லாருக்கும் டிக்கட் போட்டுவிட்டாராம். அப்பாவுக்கு 29ந் தேதி பிறந்தநாள் என்பதால் வருகிற தேதியை 28 என்று முடிவு செய்தது மட்டும்தான் இவனாம். இதில் தனக்கு எந்தச் செலவும் இல்லையாம். தன்னைக் கேட்காமல் செய்தது மரியாதைக்குறைவு என்று அவன் உணர்ந்ததால்தான் அவன் செய்யாததுபோல் சொல்கிறான் என்ற நினைப்பில் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தார் மதி. அவன்  திருமணத்தில் 1000 பேர் கலந்துகொண்டனர் ஆர்கிட் கன்ட்ரி கிளப்பில் நடந்தது ஊரில் இருந்த தன் வயக்காட்டுச்சொத்தை விற்று அதை நடத்திவைத்தார் மதி. இன்னும் காற்று லேசாக வருடிக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் இமைகள் மூடிக்

2

கொண்டுதான் இருக்கின்றன. இந்த நினைவில் எழுந்த விரக்தியான புன்சிரிப்பு கொஞ்சநேரம் தொடர்ந்தது. ‘பாவம் பயணக் களைப்பு. தூங்கிப்போயிருப்பான். என் பிறந்தநாளை மறந்துபோயிருப்பான். நாளை அழைப்பான்’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டார். அவன் ஆஸ்திரேலியா செல்லுமுன் அவன் வீட்டுக்குச் சென்றபோதுதான் அவனின் சம்பளவிபரங்கள் அடங்கிய அந்த தாளை அவர் பார்க்க நேர்ந்தது. அம்மாடியோவ்! கிட்டத்தட்ட 9 கே வாங்குகிறான். அதுவரை அவன் சம்பளம் பற்றி எதுவுமே மதிக்குத் தெரியாது.

அடுத்தவன் பிரசாந்த். ஊரிலிருந்த சில மனைக்கட்டுகள் அவன் திருமணத்திற்கு உதவின.அவன் மனைவி மாலா இரண்டு பையன்கள். டம்பனீஸில் இருக்கிறான். அவனோடு வேலை செய்பவர்களும் குடும்பம் குடும்பமாய் இப்போது பாசிர்ரிஸ்ஸில் இருக்கும் ஒரு ஷேலேயில் பாபிகியூவில் இவன் கோழி சுட்டுக்கொண்டிருக்கிறான். எல்லாரும் ‘நல்லா சுடுவான்’ என்று தலப்பா கட்ட, அந்த வெக்கையை புன்னகையோடு உள்வாங்கிக் கொண்டு மசாலா தடவிய கோழித்துண்டுகளை சுட்டுக் கொண்டிருக்கிறான். அந்த ஷேலே இவனே ஏற்பாடு செய்ததுதான். அவன் மனைவி ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருந்ததால் இவனே ஏற்பாடு செய்துவிட்டு நன்பர்கள் ஏற்பாடு செய்ததாகவும் அதில் தானும் கலந்துகொண்டதாகவும் அப்பாவிடம் அவன் சொல்லும்போதே மதிக்குத் தெரிந்திருந்தது. அவன் கண் திறக்காத நாளிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறார் மதி.  அவருக்குத் தெரியாதா? ‘மறந்திருப்பான். நாளை போன் செய்வான்’ என்று வேறுவழியின்றி சமாதானப்படுத்திக் கொண்டார். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. அவனோடு  வேலை செய்யும் சக நன்பனின் கம்ப்யூட்டர் திறக்கமுடியாதபடி பூட்டிக்கொண்டது. கோப்புகள் எல்லாம் குப்பைத் தொட்டிக்குள் விழுந்துவிட்டன. மீட்டுத்தர மதியழகனை அழைத்தான். மதியழகன் கணினிக் கலையில் கில்லாடி. அதுதான் அவரின் சொத்து. இத்தனையும் அவர் சாதித்தது அந்த தனித்திறமையால்தான். யாரும் அவருக்கு முதலாளியில்லை. யாருக்கும் அவர் பதில் சொல்லவேண்டியதில்லை. மூலதனமில்லை. யாரும் அவரிடம் வேலை செய்யவுமில்லை. சுதந்திரமாக வாழ்கிறார். அந்தக் கணினி வேலையாக அவர் அங்கு சென்றபோதுதான் பிரசாந்தின் சம்பளம் 7 கே என்பது தெரிந்தது. மூன்றாவதும் கடைசி மகனும் சசி. அவன் சிங்கப்பூரில் பிறந்தவன். நீஆனில் மாஸ்காம் படிக்கிறான். இது மூன்றாம் ஆண்டு. மணி 12.15. இன்னும் வீட்டுக்கு வரவில்லை. எங்கோ இருக்கிறான். ஒரு செய்தித்தாளை வடிவமைக்க வேண்டுமாம். கற்பனையாகவோ உண்மையாகவோ செய்திகள் புனைந்து பொய்யான விளம்பரங்களைக் கோர்த்து அவைகளுக்கு லோகோக்களையும் வடிவமைத்து செய்தித்தாளுக்கு பெயரும் சூட்டி நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டுமாம். ‘குரூப்போடு சேர்ந்து இந்த புராஜெக்டை முடித்தாக வேண்டும் லேட்டாத்தான் வருவேன்’ என்று சொல்லிவிட்டுத்தான் சென்றான். இதோ கதவு திறக்கும் சப்தம் கேட்கிறது. அவன்தான் வருகிறான். இமைகளை இன்னும் கொஞ்சம் இறுக்கிக்கொண்டார் மதி. அவன் வந்து எழுப்பி வாழ்த்துவான் என்ற ஒரு பிஞ்சு  ஆசை கொஞ்சம் கொஞ்சமாக முற்றி பின் வெம்பிவிட்டது. அவன் போய் படுத்துக்கொண்டான். கொஞ்ச நேரத்தில் எல்லா உருவங்களும் மேகங்களாய்க் கரைய தவிட்டுப்பூச்சிகள் மட்டுமே அங்கு மேய்ந்துகொண்டிருக்க சிறிது நேரத்தில் அவைகளும் மறைந்து சூனியமானது. மதி தூங்கிவிட்டார்.

மறுநாள் காலை 6 மணி. 29-11-2013. எழுந்து கூடத்துக்கு வந்தார். ஏற்கனவே எழுந்திருந்த வடிவு முகம் கழுவி புதிய பூவாக வந்தார். அப்படியே முகம் புதைத்து கைகளை தோளிலிம் இடுப்பிலுமாக வளைத்து மதியின் முதுகில் கட்டிக்கொண்டு ‘ஹாப்பி பர்த்டேங்க’ என்றபோது மதியின் கண்கள் ஈரமாயின. ‘நீ மட்டும்தான் என்னோடு இருக்கப்போகிறாய்’ என்று அவர் மனம் அவருக்குச் சொல்ல அந்த ஈரம் கசிந்தது. கொஞ்ச நேரத்தில் கைகளைப் பிரித்து கண்களைத் துடைத்துக்கொண்டு அறைக்குச் சென்றார் வடிவு. மதி கழிவறை சென்றுவிட்டு திரும்பினார். மழை நின்றிருந்தது. கீழே தேக்கா மார்க்கெட்டின் ஆரவாரங்கள் ஆரம்பித்திருந்தன. ஐஸ் கட்டி அரைக்கும் சப்தம் கேட்கிறது. தூரத்தில் எங்கோ ஒற்றைக்குயில் கூவுகிறது. சுவற்றுக்கு

3

வெளியே ஏர்கோன் பெட்டியில் இரண்டு மைனாக்கள் கூடுகட்டும் இடத்தை ஆராய்ந்துகொண்டு தலையைச் சாய்த்து பார்த்துக்கொண்டிருந்தன.

அறைக்குச் சென்ற வடிவு ஒரு அட்டைப்பெட்டியுடன் வந்தார். மதி ‘வாக்கிங்’ செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த அட்டைப்பெட்டியை மதியிடம் நீட்டினார்.  அது ஒரு ‘நைக்கீ வாக்கிங் ஷூ.’ ஒரு மாதமாகவே அப்படி ஒரு ஷூ வாங்கவேண்டுமென்று நினைத்திருந்தார். வடிவு வாங்குவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் வாங்கிவிட்டதில் அவர் ஆச்சரியப்படவுமில்லை. மூன்று நாட்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்தான் அதற்குக் காரணம். வழக்கம்போல் மதி அன்று வாக்கிங் புறப்படும்போது ‘நானும் வர்றேன்’ என்று சேர்ந்துகொண்டார் வடிவு. கீழே இறங்கி உடற்பயிற்சி தளத்தில் சேலையுடன் நகராத சைக்கிளை வேகமாக சுற்றும் அந்தப் பாட்டியைக் கடந்து லிட்டில் இந்தியா எம்மார்ட்டியைத் தாண்டி, புக்கிட் தீமா பேருந்து நிறுத்தம் கடந்து போனபோது டவுன்டவுன் எம்மார்ட்டி கட்டுமானத்தின் ஊழியர் ‘ஸ்டாப்’ என்ற அறிவிப்பைக் காட்டி நிற்கவைத்து ஒரு கான்கிரீட் வண்டி உருமிக்கொண்டு பின்பக்கமாய் உருண்டு புக்கிட்தீமா சாலையின் போக்குவரத்தோடு சங்கமித்தபின் ‘கோ’ என்ற அறிவிப்பைக் காட்டி போகச் சொன்னார். நாலைந்து அடிகள் தாண்டியதும் வடிவுதான் கவனித்தார். மதியின் ஒரு காலில் கேன்வாஸ் ஷூவைக் காணோம். சாக்ஸ் மட்டும்தான் இருந்தது. ஷூ கழன்ற சுரணையே மதிக்கு இல்லை. அப்படியே பின்பக்கமாய் நடந்து பார்த்ததில் அது விட்ட இடத்திலேயே அனாதையாகக் கிடந்தது. அந்த கேன்வாஸ் லூசாகி ரொம்பநாள் ஆகியிருந்தது. பெருவிரலை அழுத்திக்கொண்டுதான் மதி நடப்பார். எப்படியோ நழுவிவிட்டது. மதிக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய். மெட்போமின் நாள் ஒன்றுக்கு 1800 மில்லி உள்ளே தள்ளியாக வேண்டும். காலில் சுரணை கொஞ்சம் மட்டுத்தான். வடிவு அந்த ஷூவை எடுத்துவந்து கொடுத்துவிட்டு முடிவுசெய்தார். இந்தப்  பிறந்தநாளில் நைக்கீ ஷூ வாங்கிக் கொடுக்கவேண்டுமென்று. அப்போதுதான் அவர் முடிவு செய்திருக்கவேண்டுமென்று அந்த ஷூவை பார்த்த மாத்திரத்தில் விளங்கிக்கொண்டார் மதி.

இன்று நடந்து கொண்டிருக்கும்போதே சசி போன் செய்தான். ‘ஹாப்பி பர்த்டேப்பா. நான் ஸ்கூல் போறேன். மறந்துடாதீங்க. என் புட்மசாஜுக்கு காசு  தாரேன்னு சொன்னீங்க. இன்னிக்கு ரூஃப் கார்டன் ஹோட்டலில் டின்னர். மறந்துடாதீங்க’ என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.

மதியின் நிர்வாகம் இரு துவாரங்களுள்ள ஒரு கண்ணாடிக் குடுவை. எதுவுமே அவரால் மறைக்கமுடியாது. வருமானம் ஒரு துவாரத்தில் ஊற்றப்பட செலவுகள் மறு துவாரத்தில்  வழிந்தோட பல சமயங்களில் மட்டம் ஒரே மாதிரி இருக்கும். பலசமயம் அது காலியாவதும் உண்டு. சில சமயங்களில் அது தளும்புவதும் உண்டு.. தளும்பும்போதுதான் தனக்குத் தேவையானதை வாங்க மதி யோசிப்பார். தனக்கு ஒரு ஷூ வாங்கவேண்டுமென்பது ஒருமாதத் திட்டம். தளும்பும் தருணத்திற்காக காத்திருந்தபோதுதான் வடிவு அந்த ஷூவைத் தந்து ஆச்சரியப்படுத்தினார்.

வாக்கிங் முடிந்து வீடு வந்ததும் வராததுமாய் கருணாவுக்கு போன் செய்தார். பத்து ரிங்குக்குப் பிறகு சாவகாசமாய் அவன் போனை எடுத்தான். ‘இன்னிக்கு நாம எல்லாம் ரூஃப் கார்டன் ஹோட்டல்லே மீட் பண்றோம்பா. அங்குதான் டின்னர். மறக்காம வந்துடுப்பா. மருமகள்ட்டேயும் சொல்லிடு. நான் அழைச்சேன்னு’. ‘ அட ஆமா. உங்களுக்கு பர்த்டேல்ல. இது என்ன 65 ஆ. அடேங்கப்பா நீங்க ரொம்ப ஓல்டாயிட்டீங்கப்பா வயசால’ என்று சொல்லிச் சிரித்தான். ‘8 மணிக்கெல்லாம் அங்கே இருப்பேம்ப்பா’ என்றான். பிறகு பிரசாந்தை அழைத்தார். அதே வசனத்தை ஒப்புவித்தார். அவனும் கருணா பேசியதையே ஒப்புவித்தான். ஏதோ பேசிக்கொண்டு பேசுவதுபோல. சசி ஏற்கனவே ஃபுட்மசாஜ் போய்விட்டு 8 மணிக்கு வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டான். அப்பாவுக்குத்தான் இப்போது ஃபுட்மசாஜ் தேவையென்று வடிவு

4

சொல்லியிருக்கிறார். அது அவனுக்கும் தெரியும். அது இல்லாமல் சமாளித்துக் கொள்ளவும் அப்பாவுக்குத் தெரியும் என்றும் அவனுக்குத் தெரியும். சட்டையை உரித்துப்போட்டுவிட்டு பளபளப்பாக வெளியேறும் பாம்புபோல அப்பாவை உரித்துப்போட்டுவிட்டு பளபளப்பான வாழ்க்கையில் பயணம் தொடங்கிவிட்டார்கள் பிள்ளைகள். சசி இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. வந்துவிடுவான். இப்போது அவன் குஞ்சுப்பாம்பு.

ரூஃப் கார்டன் ஹோட்டல். இரவு மணி 8. மதியும் வடிவும் வந்துவிட்டனர் 12பேர் என்று சொல்லி டேபிளை ஒதுக்கச்சொல்லிவிட்டார். கொஞ்சம் வெந்நீர் கேட்டார். உணவுப்பட்டியல் மேசையில் கிடந்தன. அருகில் சலசலவென்று தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. விழும் நீரை ஒரு மோட்டர் மேலேற்றிவிட மீண்டும் விழுந்து ஒலிக்கிறது. அந்த மோட்டர் செத்துவிட்டால் இயக்கம் இருக்காதல்லவா? அந்த மோட்டரோடு தன்னை ஒப்பிட்டுப்பார்த்து ஓர் ஆழமான புன்னகையைப் படரவிட்டார் மதி. ‘ஏன் சிரிக்கிறீர்கள்’ என்று கேட்ட வடிவிடம் ‘ஒன்றுமில்லை’ என்றார். எல்லா மேசையிலும் கோழியும் பிரியாணியும் ஜூஸுமாக வழிந்தது. ஒன்றிரண்டு மேசைகள் கழித்துப்போட்ட எலும்புகளோடும் சிந்திய பருக்கைகளோடும் ஆங்காங்கே ஊற்றிய ஜூஸ்களோடும் கிடந்தன. மிக சன்னமாக வயலினோ கிடாரோ இசைத்துக்கொண்டிருந்தது. பூக்கொத்துகளாய் வண்ணவிளக்குகள் தொங்கிச் சிரித்தன.அடிக்கடி வண்ணங்களை அவைகள் மாற்றிக்கொண்டன. பச்சை என்று நினைக்கும்போதே அது சிவப்பாய் மாறிவிடுகிறது. கருணாவை நினைத்துக்கொண்டு மீண்டும் புன்னகைத்தார் மதி. ‘மீண்டும் சிரிக்கிறீர்கள். சொல்லுங்கள்.  நானும் சிரிப்பேனல்லவா’ என்றார் வடிவு. ‘ஒன்றுமில்லை’ என்று மீண்டும் மழுப்பினார் மதி. இதோ கருணா வருகிறான். கூடவே வந்த பவானி ‘வணக்கம். ஹாப்பி பர்த்டே மாமா‘ என்றாள். மூத்த பேரன்  ஓடிவந்தான். ‘தாத்தா. உனக்கு பர்த்டேன்னு அப்பா சொன்னார். ஹாப்பி பர்த்டே தாத்தா’ என்றான். ‘தேங்க்யூ. அட அழகா இருக்கே சட்டே.’ என்றார் மதி. ஏதாவது பேசவேண்டும்  என்பதற்காக.

‘அப்பா ஆஸ்திரேலியாவில் வாங்கினாரு தாத்தா.’

‘வேற என்னென்ன ஒனக்கு வாங்கித்தந்தாரு?’

‘என்னென்னமோ வாங்கினாரு’

‘எனக்கு ஒன்னுமில்லியா’

‘இந்தா தாத்தா சாக்லெட்’ என்று சட்டைப்பையைத் துலாவிவிட்டு ‘சாரி தாத்தா தின்னுட்டேன். நாளைக்கு வாங்கித்தாரேன்’ என்றான்

வேறு சேதிகள் ஏதும் கசிந்துவிடுமோ என்று பயந்தவனாய் கருணா வந்து அவனை அழைத்துப்போய் தனக்கு அருகில் உட்காரவைத்துக்கொண்டான்.

இதோ பிரசாந்த் வருகிறான். மனைவி மாலா  கைகூப்பி ‘வணக்கம். பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்றாள். ‘நன்றிம்மா’ என்றார் மதி. பிள்ளைகள் பிரசாந்த் எல்லாரும் இயந்திரமாய் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டபின் பிள்ளைகள் மனைவியோடு சேர்ந்து உட்கார்ந்துகொண்டான். சசியும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்துகொண்டான். கொஞ்ச நேரம் அமைதி. தண்ணீர் ஓடுவது சப்தமாகக் கேட்டது. இசை இன்னும் முறுக்காக இரைந்துகொண்டிருந்தது. எல்லாருமே உணவுப்பட்டியலை மேய்ந்தனர். எந்த உணவு என்பதில் மதிக்கு அக்கரையே இல்லை. தனக்கென்று ஒரு பிரியத்தை அவர் வளர்த்துக்கொண்டதே இல்லை. அந்த வயதுகளையெல்லாம் தாண்டிவிட்டதால் பிள்ளைகளின் போக்கில் ஏமாற்றம் அடையவில்லை அவர். ஆனால் வடிவு? பாவம் எல்லாத் தாய்மார்களுமே  பாவம்தான். இரண்டு பிள்ளைகள் ஆனதும் பெற்றதாயே வளர்ப்புநாயாக ஆகிவிடுகிறார்கள். மகன் விரட்டினாலும் ‘ஏதோ

5

கோபத்தில் சொல்லிவிட்டான்’ என்று இல்லாத வாலை ஆட்டிக்கொண்டு மகனிடமே மீள்கிறார்கள். வடிவு உண்மையிலேயே பாவம். 40 இஞ்ச் 4கே ஹெச்டி டிவி  வாங்கி சுவற்றோடு பொருத்தியபின் பழைய பொட்டி டிவியை ஒதுக்கி ஸ்டோர்ரூமில் போடுவதுபோல் வடிவைப் போட்டுவிட்டார்கள் பிள்ளைகள். மதிகூட வடிவுக்குத்  துணையாய் ஸ்டோர் ரூமில்தான் இருக்கிறார் அவர்களைப் பொருத்தவரை. இனிமேல் புதிதுபுதிதாக என்னென்னவோ நடக்கலாம். மதி  அவர்களை நம்பி இல்லை. ‘கடவுளே அவர்களை நம்பி வாழ நேர்ந்தால் என்னைக் கொன்றுவிடு ‘ என்று வடிவுக்கே தெரியாமல் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறார் அவர். அவரால்  எல்லாவற்றையும் எந்த அதிர்ச்சியும் இல்லாமல் உள்வாங்க  முடிகிறது. பாவம்  வடிவு. செரிக்கவும் முடியவில்லை. துப்பவும்  முடியவில்லை.

உணவுப்பட்டியலிலிந்து ஒருவழியாக விடுபட்டார்கள்

ஆர்டர்கள் பறந்தன

‘எனக்கு ரொட்டி பரோட்டா. மட்டன் கறி’

‘எனக்கு கார்லிக் நாண், கோழி பெரட்டல்’

‘அப்பா எனக்கு சிக்கன் 65 பரோட்டா’

‘எனக்கு பட்டர் நாண், ப்ரான் ஃப்ரை.’

‘எனக்கு ஹாங்காங் மீ மட்டன் மைசூர்’

‘எனக்கு மட்டன் பிரியாணி’ என்றான் ஒரு வாண்டு

‘எனக்கு சிக்கன் பிரியாணி’ என்றது இன்னொரு வாண்டு

‘எனக்கு நாண் தந்தூரி சிக்கன் ‘ என்று சசியும் சேர்ந்துகொண்டான். ஆர்டர்கள் எடுக்கும்போதே ‘அட அப்பிடைசர் மறந்துவிட்டோமே. எங்களுக்கு சால்ட் லஸ்ஸி. அவங்கவங்க சொல்லுங்க’ என்றான் கருணா. ஆரஞ்சு ஆப்பிள் ஜூஸ் ஐஸ்மைலோ என்று  சில பானங்களோடு இறுதியில்  பிரியாணிக்குப் பிறகு மசாலா டீ ஜோரா இருக்குமென்று ‘3 மசாலா டீ’ என்றான் பிரசாந்த்.  சிலர் காபி என்றனர். ‘அப்பா நீங்க  ஒன்னுமே சொல்லலியே’ என்றான் சசி. எல்லாம் வரட்டும்பா. எல்லாத்துலேயும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கறேன். நீங்க சாப்பிடமுடியாட்டி வேஸ்ட்தானே’ என்றார் மதி. ‘அப்பா உங்களுக்கு தாளிக்கறி சொல்றேன். அது வெறும் பருப்புதான். உங்களுக்கு நல்லது. ராத்திரிலே சிக்கன் மட்டன்லாம் வேணாம். நாங்க ஆர்டர் செஞ்ச சிக்கன் மட்டன்லே குழம்ப மட்டும் எடுத்துக்கங்க’ என்றான் பிரசாந்த். ‘ஆமா மாமா. ஒங்களுக்கு ஒத்துக்காது’ என்றாள் மாலா.

தட்டுத்தட்டுகளாக ஆர்டர்கள் வந்தன. பல கைகள் நீண்டன. சில சிலவற்றை எடுத்தன. மென்றன.  மீண்டும் எடுத்தன. மென்றன. சில முள்ளுகள் விழுந்தன. சில துண்டுகள் ஒதுக்கப்பட்டன. சில ஜூஸ்கள் மீதிவைக்கப்பட்டன. சில நாண்கள் பாதியாக விட்டுவைக்கப்பட்டன. ஒரு பட்டர் நாணை தாளியில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டார் மதி. சிக்கன்65 ஒரு  துண்டு இருந்தது. அதை எடுக்கப்போனார்.  கருணா அதற்குள் அதை எடுத்து பிய்த்து பிள்ளைகளுக்கு ஊட்டினான். அவர்கள் வேண்டாம் என்றபின் அதை தானே தின்றுவிட்டான்.  மசாலா டீ  காப்பிகளும் வந்தன. ஒருவழியாக  டின்னர் முடிந்தது. பில் வந்தது. ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கைகழுவப் போய்விட்டான் கருணா. தொடர்ந்தான் பிரசாந்த். பில் கொடுக்கப்பட்டதை  உறுதிசெய்துகொண்டு இருவரும்  வந்தார்கள். ‘ அப்பா பிள்ளைகள் 7 மணிக்கு ரெடியாக வேண்டும். நானும் 8 மணிக்கு  ஆபீஸ் போகவேண்டும் நா வர்றேம்பா.’

6

என்றான் கருணா. ‘அட மறந்துட்டேம்பா. நாளக்கி ரெனவேசன்காரன் வர்றான் அவனை முடிச்சுட்டு நா ஆபீஸ் போகணும். நானும் வர்றேம்பா’ என்று பிரசாந்தும் தொடர்ந்தான். ‘இன்னிக்கு ஃப்ரண்ட்ஸோட அடுத்த ப்ராஜெக்ட் டிஸ்கசன்பா. அவங்கல்லாம் அராப் ஸ்ட்ரீட் வர்றாங்க. நானும் போறேம்பா.’ என்று சசியும் புறப்பட்டுவிட்டான். எல்லாரும் ‘ஹாப்பி பர்த்டே அண்ட் லாங்லிவ் டாட் என்று ஒருசேர கைகுலுக்கிவிட்டு சென்றார்கள். உரித்துப்போட்ட ஆரஞ்சுத்தோல் மாதிரி மதியும் வடிவும் மட்டுமே  இருந்தனர். 315 வெள்ளி பில்லைக் கொடுத்துவிட்டு கொஞ்சம் வெந்நீர் கேட்டுக் குடித்துவிட்து  மதியும் வடிவும்  இறங்கினார்கள். கார்களில் காத்திருந்த கருணாவும் பிரசாந்தும்  ‘குட்நைட்’ சொல்லிவிட்டுப் பறந்தனர்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

  1. Avatar
    ameethaammaal says:

    குடும்ப வரவுசெலவை ஒரு கண்ணாடிப் பாத்திரத்திற்கு ஒப்பிட்டிருப்பது சிறப்பு. பல ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லை என்றுதான் தோன்றுகிறது

Leave a Reply to ameethaammaal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *