ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

 jeyalalitha1

எழுத்தாளர் வாசந்தி அவர்களின் ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ தடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தச் செய்தி தான். இதற்குப் பின்னால் என்ன கதைகள் இருக்கிறது என்பதும் ஜெ குறித்து வாசந்தி எழுதியிருந்தது என்ன என்பதும் ஊகிக்க முடியுமே தவிர எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. ஆனால் வாசந்தி தன் நேர்காணலில் ஜெ பற்றி சொல்லும் போது

She wants to project herself as the Immaculate Virgin. She is Amma.

என்று சொல்லுகிறார்.

ஜெ வுக்கு என்ன காரணம் கொண்டும் தன்னை மாசற்ற ஒரு கன்னியாக காட்ட வேண்டிய அவசியமே இல்லை.

அவர் அப்படி காட்டியதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆரின் ஆள், அரசியல் வாரிசு, அவர் விரும்பிய பெண், அவரின் காதலி, ரகசிய மனைவி(இந்த சொற்பிரயோகமே சரியில்லைதான்!!) சின்னவீடு ..

 

இப்படியான ஏதோ ஒன்றாகத்தான் அவரைத் தமிழ்நாட்டின் பெண்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

எம்ஜிஆரின் வாரிசாக இப்படித்தான் ஜெ , பெண்கள் உள்ளத்தில் இடம் பிடித்தார்.

எம்ஜிஆர் மீது இந்தப் பெண்கள் கொண்டிருந்த அதீத ஆசையும் விருப்பமும் எம்ஜிஆர் என்ற ஆண்மீது குற்றம் காணாது, அவர் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பிடித்த ஜெ என்ற பெண்ணை அப்படியே சுவீகரித்துக்கொண்டது. அந்தப் பெண்கள் கூட்டத்தை தன் ஓட்டு வங்கிக்காக ஜெ அப்படியே தக்க வைத்துக்கொண்டார், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக..

 

உண்மை இப்படி இருக்க, ஜெ தன்னை ஒரு மாசற்ற கன்னிப்பெண்ணாக காட்டுவதையே விரும்பினார் என்று அவர் எப்போதும் சொல்லாத ஒரு செய்தியை வாசந்தி இட்டுக்கட்டி சொல்வதன் காரணம் என்ன?

 

ஆண் – பெண் உறவில் திருமணம் என்ற சமூகம் அங்கீகரித்த ஓர் உறவிலிருந்து விலகி / விலக்கப்பட்ட ஒரு பெண் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவள் கட்டாயம் மாசற்ற கன்னிப்பெண்ணாக மட்டுமே இருந்தாக வேண்டும் என்ற ஆணாதிக்க மரபு சிந்தனையை ஏன் வாசந்தி அவர்கள் ஜெ மீது வலிய சுமத்துகிறார்?

 

ஜெ வின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாக இணைத்துப் பேசப்பட்ட எம்ஜிஆரின் மரணத்தில், அந்த இறுதி ஊர்வலத்தின் போது

கூட்டத்திலிருந்த அனைவரும் பார்க்க அவர் பலவந்தமாக இறுதியாத்திரைக்குப் புறப்பட்ட ஊர்தியிலிருந்து இறக்கப்பட்டார்.

அவர் திரைப்படங்களில் நடித்த எந்த ஒரு காட்சியையும் விட மிகவும் உருக்கமாக இருந்த ஒரு காட்சி அதுதான்.

அப்போது ஜெவுக்காக பரிந்துப் பேசவோ ஆதரிக்கவோ அக்கூட்டத்தில் யாருமில்லை. ஜெ என்ற ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணுடன் இருந்தஉறவு / நட்பு கீழ்த்தரமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாட்டின் காங்கிரசு தலைவராக இருந்த மூப்பனார் போன்றவர்கள் ஜெ வை ஓர் அரசியல் தலைவராகக் கூட வேண்டாம், ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவராகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மூப்பனாரைப் பொறுத்தவரை ஜெ என்றுமே ஒரு சினிமா நடிகை, அவ்வளவுதான்.

ஒரு சினிமா நடிகரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான உறுத்தல்களும் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதுவே ஒரு நடிகை என்று வந்துவிட்டால், நடிகை எல்லாம் அரசியல் தலைவராக வரலாமா? என்ற ஆதிக்க மனப்பான்மை அரசியல் கூடாரங்கள் எங்கும் இருக்கிறது. இன்றும் கூட ஓட்டு வாங்குவதற்கு , மிஞ்சிப் போனால் பாராளுமன்றத்தில் எதுவுமே பேசாமல் இருக்கிறமாதிரி ஒன்றிரண்டு திரைப்பட நடிகைகள், குறிப்பாக ரிடையர்ட் நடிகைகள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் தலைவராக அல்ல! என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் குஷ்புவின் அரசியல் நுழைவும் திடீர் விலகலும் கூட இந்த வகைப்பட்டதுதான்.

 

அரசியலின் இச்சூழலில் தான் ஜெ நம் சமூகத்தில் விலக்கப்பட்ட அனைத்து அடையாளங்களுடனும் ஓர் அரசியல் தலைவராக்

நுழைகிறார். அரசியலின் இந்த அகம் அறியாதவர் அல்ல ஜெ. மிகவும் நன்றாக அறிந்தவர்தான்.

 

 

புரட்சித்தலைவி என்ற அடையாளத்துடன் நுழைந்த ஜெ அதே தொடர முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அம்மா என்ற சொல்லை விட புரட்சித்தலைவி என்ற சொல் உலக அரசியலின் அடையாளத்துடன் ஒத்துப்போகும் சொல். கலகக்குரலின் அடையாளம். ஆனால்..அதைத் தொடர்வதில் அல்லது அந்த அடையாளத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்வதில் ஜெ வுக்கு சிக்கல்கள் பல இருந்தன. அதற்கும் இந்த சமூகத்தின் ஆண்-பெண் உறவுச்சிக்கலே முதன்மையான காரணமாக இருந்தது.

 

எம்ஜிஆர் அவர்கள் இன்றும் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படுகிறார்.

புரட்சித்தலைவர் என்ற ஆண்பாலின் பெண்பால் சொல் புரட்சித்தலைவி. இந்தச் சொல் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் என்ற ஆண்மகனுடன் ஜெ என்ற பெண்ணுக்கிருந்த இச்சமூகம் அங்கீகாரம் தாராத ஒரு அடையாளத்தை மட்டுமே சுமந்து நிற்கும்.

அதில் பெருமை கொள்ள எதுவுமில்லை.

இக்காலக்கட்டத்தில் தான் ரொம்பவும் தற்செயலாக வந்துசேர்கிறது “அம்மா” என்ற அடையாளம்.

புரட்சித்தலைவி”அம்மா” என்ற அடையாள வட்டத்தில் வந்ததன் உளவியல் இப்படித்தான் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் அம்மா என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.

அந்த வழக்கம் ஜெ விசயத்தில் மரியாதைக்குரிய மேடம் என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்பாட்டுக்கு வந்தது. அதையே ஜெ தன் வசதிக்காக தொடர்ந்தார். ஏன் என்றால் எம்ஜிஆர் என்ற ஆணுடனான உறவு வெளிப்படையாக தெரிந்த உறவாக இருந்தாலும் அதில் ஒரு நவயுக பாஞ்சாலியாகக்கூட அவரால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.

பாஞ்சாலியைக் கூட மகாகவி பாரதி வழியாக கொண்டாடிய இந்த தமிழ்ச்சமூகம் ஜெ வைக் கொண்டாடுவது என்பது அரிது என்பதை அவர் அறிவார். என் மகளின் தாயார் இவர் என்று தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை அடையாளம் காட்டுபவரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்ச்சமூகம் ஜெ என்ற பெண்ணை அப்படி ஏற்றுக்கொள்ளாது. இந்த ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் அதிகார மையத்தில் ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் “அம்மா” என்ற சொல் அவருக்கு ஒரு கவசமாக இருந்தது. அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.

 

 

தந்தை பெரியாரை விட்டு விலகி வந்த திமுகவும் சரி, திமுகவிலிருந்து பிரிந்து வந்த அதிமுகவும் சரி, தங்களுக்கு என்று எந்த அரசியல் சித்தாந்தத்தை தனியாக வளர்த்தெடுத்தார்கள் என்பது இன்றுவரை கேள்விக்குறி தான். ஆனால் அடையாள  அரசியலை வளர்த்தெடுத்ததில் திமுகவின் வழியையே அதிமுக வும் பின்பற்றியது. இரு கட்சிகளும் சித்தாந்த ரீதியாக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக உணர்ச்சி அரசியல் உத்திகளைப் பயன்படுத்தினார்கள்.

திமுகவின் தலைவர் “அண்ணா” என்றானப் பின் அவர் தொண்டர்கள் அனைவரும் அவர்மீது கேள்விக்கு அப்பாற்பட்ட பாசங்கொண்ட தம்பியராக மாறினார்கள். அரசியல் பாடங்களை “தம்பிக்கு” எழுதிய கடிதங்கள் மூலம் நடத்தினார் அண்ணா அவர்கள். அவருக்குப் பின் திமுக அரசியலில் தலைமைப் பொறுப்புக்கு வந்த கருணாநிதி அவர்கள் “கலைஞர்” ஆனார். அவர் தன் தொண்டர்களை “உடன்பிறப்பே” என்று விழித்தார். அவரிடமிருந்துப் பிரிந்த எம்ஜிஆரும் உடன்பிறப்பின் இன்னொரு நாடக வசனமான ” என் ரத்தத்தின் ரத்தமே” என்று ஆரம்பித்தார். இந்த வழியில் வந்த ஜெ அவர்கள் இவர்கள் அனைவரையும் மிஞ்சிய இடம் தான் இந்த ” அம்மா” என்ற அவதாரம்!

 

திராவிட சமுதாய வரலாற்றில் இந்த “அம்மா” என்ற உறவுக்கு நீண்ட நெடிய மரியாதைக்குரிய இடம் உண்டு.

 

திராவிட சமூகம் தாய்வழிச் சமூகம். தாயைக் கொண்டாடிய சமூகம்.

தமிழர்களின் கடவுளான குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் குமரன்.

இந்தக் குமரனின் தாய் குமரி. கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் அம்மன் குமரி தான். குமரன் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் குமரி, குமரனின் காதலியோ மனைவியோ அல்ல. அவன் தாய், குமரனின் அம்மா… இப்படிப் போகிறது தமிழ்ச் சமூகத்தின் தொல்லியல் கதை. தமிழ்ச்சமூகத்தின் தாய்வழி உறவை, அந்த உறவின் அடையாளமான “அம்மா” என்ற சொல்லை ஜெ தன் அடையாளமாகக் காட்டும் போது, இதுவரை ஜெ என்ற பெண்ணின் மீது வீசப்பட்ட கறைகள் தானாகவே மறைந்துவிடுகின்றன. ஆண் பெண் உறவில் பாலியல் தொடர்பை விலக்கிய ஒரே சொல் “அம்மா” என்ற சொல் தான்.

அடையாள அரசியலையும் தன் தொண்டர்களை வெறும் உணர்ச்சி விலங்குகளாக மட்டுமே வைத்திருப்பதையும் வளர்த்தெடுத்த திராவிட அரசியலில் காலம் ஜெ வின் மடியில் போட்ட “அம்மா” என்ற சொல் அவருக்கு கிடைத்த வரம். ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் அந்தச் சொல் தாங்கள் வளர்த்தெடுத்த உணர்ச்சி அரசியலின் உச்சம் என்பதையும் அச்சொல்லின் கனத்தையும் வீரியத்தையும் திராவிட அரசியல் நன்கு உணர்ந்தது. அதை உடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதையும் ஜெ வின் அரசியல் எதிரிகள் உணர்ந்தார்கள்.

இம்முறை பதவிக்கு வந்தப் பின் ஜெ அடுக்கடுக்காக கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் “அம்மா ஜெ”வின் பிம்பத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை தமிழகம் உணர்ந்தது. நிழல் அம்மா, அரசியல் அம்மா , வறிய மக்களின் வாழ்க்கையில் நிஜ அம்மாவாக மாறிக்கொண்டு வந்தார். ஜெ வின் அரசியல் எதிரிகளை ரொம்பவும் பயமுறுத்திய இடம் இதுதான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான ஓர் உணர்ச்சி உத்திகளின் அரசியல் காட்சிகள் அரங்கேறியதே இல்லை.

இக்காட்சிகள் தமிழகத்திற்கான சிறப்பு காட்சிகளாகவே இருக்கின்றன.

இந்த உணர்ச்சி உத்திகளைக் கையாளாத எந்த ஓர் அரசியல் கட்சியும் இந்த தமிழ் மண்ணில் கடை விரித்தால் வியாபாரம் செய்ய முடியாது என்கிற நிலைக்கு இன்று வந்துவிட்டது. இதனால் தானோ என்னவோ களப்பணியில் இன்றுவரை தங்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை வைத்திருக்கும் இடதுசாரிகளாலும் தமிழ்நாட்டில் அரசியல் தேர்தல் தேர்வுகளில் பாஸ் பண்ணக்கூட முடியவில்லை.

ஒவ்வொரு ஆணும் தன் காலடியில் விழுந்து வண்ங்கும் போது ஜெ முகத்தை கூர்ந்து கவனியுங்கள். அதில் அந்தப் பெண் கடந்து வந்தப் பாதை தெரியும். ஆண் சமூகம் அவளை வஞ்சித்தது தெரியும். ஒரு சாதாரண பெண்ணுக்குரிய அபிலாஷைகளுடன் அவளை வாழவிடாமல் தங்கக்கூண்டில் சிறைவைத்தக் கதையின் பக்கங்கள் பளிச்சிடும்.

 

ஜெ குறித்த இந்தப் பார்வை பேசப்பட்டிருக்க வேண்டும். அதுவும் வாசந்தி போன்ற ஒரு எழுத்தாளரால். ஆனால் அதை   விட்டுவிட்டு

 

 

She wants to project herself as the Immaculate Virgin. She is Amma.

 

என்று   வாசந்தி புதுக்கதை சொல்வது தான் புதிராக இருக்கிறது.

 

(ஜெ வின் சொத்துக்குவிப்பு வழக்கு, சிறைத் தண்டனை செய்திகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!)

 

Series Navigation
author

புதிய மாதவி

Similar Posts

4 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    கீதாஞ்சலி (31)
    சிறைக் கைதி!

    மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    “சிறைக் கைதியே!
    என்னிடம் சொல்லிடு,
    உன்னைத் தண்டித்து
    சிறையில் தள்ளியவன் யார்?”
    “எனது மேலதிகாரி”
    என்று பதிலுரைத்தான் கைதி.
    “பணம் திரட்டி ஆளும் திறத்திலும்
    உலகை மிஞ்சி
    மேலோங்கி
    அனைவரையும் அமுக்கலாம் என்று
    நினைத்தேன்!

    மன்னவன் துணையால்
    ஏராளமாய்
    செல்வக் குவியலைத்
    திரட்டி என்
    புதையல் களஞ்சியத்தை
    நிரப்பினேன்!
    மரணம் கொண்டு போனபின் எனது
    பிரபுவின்
    படுக்கையில் கிடந்தேன்!
    விழித்ததும் கண்டது என்ன
    வென்றால் நான் கட்டிய
    புதையல் களஞ்சிய மாளிகை
    என்னும்
    சிறைச் சாலையிலே கைதியாய்
    நானே
    சிக்கிக் கொண்டதை!”

    “சிறைக் கைதியே!
    என்னிடம் சொல்லிடு,
    உன் கைவிலங்கின் உடைக்க முடியாத
    இந்த இரும்புச் சங்கிலியை
    மெய்வருந்தி
    உருவாக்கியவன் யார்?”
    “மிகக் கவனமாய்
    இரும்பு விலங்கை
    உருக்கக் காய்ச்சி
    பட்டறையில்
    வார்த் தடித்தவன் நானேதான்!
    சேர்த்த செல்வாக்கும்
    தோற்காத என் தீரமும்
    தரணியை
    எனக்குக் கீழாக்கி
    தங்கு தடையின்றி தனியாக
    என்னை
    விடுதலை மனிதனாய் விட்டுவிடும் என்று
    பெருமிதம் கொண்டேன்!
    கடும் சூட்டுக் கனலில்
    இரவு பகலாய்
    காய்ச்சி
    இரும்புச் சங்கிலியை
    கடியதாய் ஓங்கி அடித்து
    வடித்தேன்!
    இறுதியில்
    என் வேலை முடிந்து,
    முறியாத கைவிலங்கு முழுதாய் ஆனதும்,
    நான் கண்டதென்ன,
    சங்கிலி
    பற்றிக் கொண்டது
    கெட்டியாய்
    முற்றிலும் என்னை!

    *****************

  2. Avatar
    ஷாலி says:

    //ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் அதிகார மையத்தில் ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் “அம்மா” என்ற சொல் அவருக்கு ஒரு கவசமாக இருந்தது. அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.//

    அம்மா என்ற சொல்லுக்கு “அம்மா” குரல் கொடுக்கும் வாலியின் விளக்கம். படம்.அடிமைப்பெண்.

    அம்மா என்றால் அன்பு
    அப்பா என்றால் அறிவு
    ஆசான் என்றால் கல்வி
    அவரே உலகில் தெய்வம்

    அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
    அம்மா என்றே அழைப்பதுண்டு

    அன்பின் விளக்கம் பண்பின் முழக்கம்
    அம்மா என்றொரு சொல்லில் உண்டு

    பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை
    பெற்றதும் துன்பத்தை மறப்பாள்

    பத்தியமிருந்துக் காப்பாள் தன்
    ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள்

    இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம்
    பொதுவாய் வைத்திட வேண்டும்

    இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
    பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்

    ஒருவருக்காக மழையில்லை
    ஒருவருக்காக நிலவில்லை

    வருவதெல்லாம் அனைவருக்கும்
    வகுத்தே வைத்தால் வழக்கில்லை

    அம்மா என்றால் அன்பு
    அப்பா என்றால் அறிவு
    ஆசான் என்றால் கல்வி
    அவரே உலகில் தெய்வம்

    மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு
    விழிகள் ஆகும் என்று

    உணரும் போது உனக்கும் எனக்கும்
    நன்மை என்றும் உண்டு

    வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும்
    வகுத்து வைப்பது பாவம்

    கருணை கொண்ட மனிதரெல்லாம்
    கடவுள் வடிவம் ஆகும்

    அம்மா என்றால் அன்பு
    அப்பா என்றால் அறிவு
    ஆசான் என்றால் கல்வி
    அவரே உலகில் தெய்வம்…

  3. Avatar
    ram says:

    ஒவ்வொரு ஆணும் தன் காலடியில் விழுந்து வண்ங்கும் போது ஜெ முகத்தை கூர்ந்து கவனியுங்கள். அதில் அந்தப் பெண் கடந்து வந்தப் பாதை தெரியும். ஆண் சமூகம் அவளை வஞ்சித்தது தெரியும். ஒரு சாதாரண பெண்ணுக்குரிய அபிலாஷைகளுடன் அவளை வாழவிடாமல் தங்கக்கூண்டில் சிறைவைத்தக் கதையின் பக்கங்கள் பளிச்சிடும்

  4. Avatar
    புனைபெயரில் says:

    ஜெ இதில் இருந்து மீண்டு வர வேண்டும். அவர் மீது தவறு உள்ளது ஆனால் அவர் சூழ்ச்சி வலையில் பழிவாங்கப்படுகிறார் என்பதும் உண்மை. திமுக இதில் முத்துக்குளிக்கலாம் என்பது கானல்நீர்.

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *