வாழ்த்துகள் ஜெயமோகன்

This entry is part 21 of 31 in the series 11 ஜனவரி 2015

jeyamohanஜெயமோகனின் பெயரை நான் முதன்முதலாக தீபம் இதழில் பார்த்தேன். அதில் எலிகள் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை அவர் எழுதியிருந்தார். ஓர் இருண்ட அறை. அதில் சுதந்திரமாக உலவும் ஏராளமான எலிகள். புத்தக அடுக்குகள், படுக்கை, சமையல் மேடை என எல்லா இடங்களுக்கும் அவை வருகின்றன. படுத்திருப்பவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொள்வதிலோ, அல்லது படுத்திருப்பவன் மேலேயே ஏறி ஓடுவதிலோ அவற்றுக்கு கொஞ்சம்கூட தயக்கமே வரவில்லை. அந்த அளவுக்கு சுதந்திரமான எலிகள். கதையில் முழுக்கமுழுக்க அந்த எலிகளின் நடமாட்டத்தைப்பற்றிய சித்தரிப்புகளே இடம்பெற்றிருந்தன. உயிரோட்டம் மிகுந்த அந்த விவரணைப்பகுதிகளை நான் மிகவும் விரும்பிப் படித்தேன். கதையைப் படித்துமுடித்த பிறகுதான் அந்த எலிகள் அக்கதையில் இடம்பெற்றிருந்த ஒரு பாத்திரத்தின் அலைமோதும் நினைவுகளின் குறியீடாக இருப்பதை அறிந்தேன். இருட்டு அறையில் சுதந்திரமாகத் திரிந்தலையும் எலிகள் ஒருபுறம். குழம்பிய மனத்தில் திக்குதிசை தெரியாமல் அலைகிற நினைவுகள் மறுபுறம். அந்த எழுத்துமுறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ரஷ்யக்கதையைப் படித்ததுபோல சந்தோஷமாக இருந்தது.
முதல் ஆச்சரியம் விலகுவதற்குள் கணையாழியில் அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. அந்தச் சிறுகதையில் இடிந்துபோன ஹம்பியைப்பற்றிய சித்தரிப்புகள் இடம்பெற்றிருந்தன. அந்தச் சரிவையும் இடிபாடுகளையும் அவர் வழக்கம்போல இன்னொன்றின் குறியீடாகவே வடித்திருந்தார். இது என்ன ஆச்சரியம், பார்க்கும் ஒவ்வொன்றையும் இன்னொன்றின் குறியீடாக இவரால் எப்படி மாற்றமுடிகிறது என்று ஒவ்வொரு நிமிடமும் நினைத்துக்கொண்டே இருந்தேன். யார் இவர், எந்த ஊர்க்காரர் என்று தெரிந்துகொள்ள ஆவல் எழுந்தது.
ஒருமுறை சென்னைக்கு வந்திருந்தபோது, தீபம் அலுவலகத்தில் நண்பர் திருமலையைச் சந்தித்து ஜெயமோகனைப்பற்றிய விவரம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, “என்னங்க, ஒங்க டிப்பார்ட்மெண்ட்காரர்தான். ஒங்களுக்கு தெரியாதா? ஒரு காலத்துல எழுத்தாளர்கள்ளாம் பேங்க்ல வேல செய்றவங்களா இருந்தாங்க. இப்ப எல்லாரும் பிஅண்ட்டி டிபார்ட்மெண்ட்காரங்களா மாறிட்டாங்க” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். அதைக் கேட்டு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே “எந்த ஊர்?” என்று கேட்டேன். “தமிழ்நாடு இல்ல. கேரளா பார்டர். காசர்கோடுன்னு ஒரு ஊரு. ஆப்பரேட்டரா இருக்காராம். மலையாளம் கலந்த தமிழ்ல பேசனார்” என்றார். நான் அவருடைய முகவரியைக் கேட்டு வாங்கி எழுதிக்கொண்டு ஊருக்குத் திரும்பிவிட்டேன்.
நான் அப்போது கர்நாடகத்தில் கதக் என்கிற ஊரில் இருந்தேன். அவருடைய கதைகளைப் படித்ததைப்பற்றி அவருக்கு எழுதினேன். அடுத்த வாரமே அவரிடமிருந்து எனக்கு பதில் வந்தது. அப்போது அவர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப்பற்றியும் படித்துமுடித்த புத்தகங்களைப்பற்றியும் விரிவாக எழுதியிருந்தார். அன்றுமுதல் நாங்கள் வாரம் ஒருமுறை கடிதம் எழுதிக்கொள்வது வழக்கமாக இருந்தது. அப்போது கணையாழியில் என்னுடைய முள் என்னும் சிறுகதை வெளிவந்திருந்தது. அதைப்பற்றி அவர் எழுதினார். எங்களுடைய படைப்புகள் மட்டுமன்றி, பொதுவாக அந்த வாரத்தில் படித்த கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நூல்கள் பற்றியே பெரும்பாலும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம். ஒரு படைப்பில் மறைந்திருக்கும் கருத்துருவத்தை உய்த்தறிவதில் அவருக்கென ஒரு சிறப்பான திறமையும் பார்வையும் இருந்தன. அதுபோலவே கருத்துருவத்தின் சட்டகத்தினுடைய அடையாளமே வெளிபட்டுவிடாதபடி அற்புதமான முறையில் ஒரு படைப்பை எழுதக்கூடிய ஆற்றலும் அவருக்கு கைவந்த கலையாக இருந்தது. அவற்றையே அவர் நாளுக்குநாள் கூர்மைப்படுத்தி தம் அடையாளமாக மாற்றிக்கொண்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு கணையாழியில் அவருடைய நதி என்கிற சிறுகதை வெளிவந்தது. மறைந்துபோன தன் தாயின் சாம்பலை நதியில் கரைத்துவிட்டு திரும்பும் ஒருவனுடைய சித்திரம் உணர்ச்சிகரமான, சிக்கனமான சொற்களால் தீட்டப்பட்டிருந்தது. நான் அவருக்கு அதைப்பற்றி எழுதியிருந்தேன். சாம்பலைக் கரைக்க ஒரு நதி இருக்கிறது. நினைவுகளை எந்த நதியின் கரைத்துவிடமுடியும்? ஒரு தாய் தன் பிள்ளைகளை நெருக்கமாக அறிந்துகொள்ளும் அளவுக்கு, ஒரு பிள்ளை தன் தாயை ஒருபோதும் அறிந்துகொள்வதே இல்லை. அறிந்துகொள்ளும் பக்குவமும் ஞானமும் கைகூடி வரும் நேரத்தில், அவன் பெரும்பாலும் தன் தாயைவிட்டு விலகி எங்கோ தொலைவில் வாழும்படி சூழல் அமைந்துவிடுகிறது. ஒரு பிள்ளையிடம் நிறைந்திருப்பது, தன் தாயைப்பற்றிய ஒருசில பழைய நினைப்புகளே தவிர, அது ஒரு முழுமையான சித்திரமல்ல. தனிப்பட்ட வகையில் எனக்கு அந்தச் சிறுகதை மிகவும் பிடித்திருந்தது.
கதக் என்னும் ஊரைத் தொடர்ந்து நான் திருப்பதியில் ஒரு ஆண்டு வேலை செய்தேன். அதற்குப் பிறகு கொப்பல் சென்றேன். அங்கிருந்து ஷிமோகா சென்றேன். நான் எங்கே சென்றாலும், எங்களுடைய கடிதத்தொடர்பு நீடித்தபடியே இருந்தது. ஊரூராக அலையும் வாழ்க்கையாகப் போய்விட்டதால், அவருடைய எல்லாக் கடிதங்களையும் நான் சேர்த்துவைக்கவில்லை. ஒரு சில கடிதக்கோப்புகளையும் புத்தகங்களையும் மட்டும் ஓர் அட்டைப்பெட்டியில் வைத்து எனக்குரிய கூடாரத்தில் என் கட்டிலுக்குக் கீழே தள்ளிவைத்திருந்தேன். எப்படியோ ஈரம் பட்டு, செல்லரித்து எல்லாமே மண்ணாகிவிட்டன.
ஷிமோகாவில் இருந்த சமயத்தில் ஒருமுறை அலுவல் நிமித்தமாக மங்களூர் செல்லும் வேலை வந்தது. அங்கிருந்து காசர்கோடு ஒரு இரண்டுமணி நேரப் பயணமுள்ள இடம் என்பதால், அவரை வந்து சந்திப்பதாக நான் கடிதம் போட்டுவிட்டு கிளம்பினேன். என் திட்டப்படி மங்களூர் வேலையை ஐந்து நாட்களில் வேகமாக முடித்துவிட்டு, ஆறாவது நாள் அவரைச் சென்று பார்த்துவிடவேண்டும் என்று யோசித்துவைத்திருந்தேன். ஆனால் என் திட்டம் நடக்கவில்லை. ஐந்தாம் நாள் இரவே என்னுடைய மேல் அதிகாரி தொலைபேசியில் அழைத்து அங்கே இயங்கிக்கொண்டிருந்த ஒரு இணைப்பு பழுதாகிவிட்டதென்றும் உடனடியாக வந்து சரிப்படுத்தவேண்டும் என்று சொல்லிவிட்டார். ஜெயமோகனைச் சந்திப்பது என்பது எனக்குள் ஒரு நீண்டநாள் கனவு. அது இப்படி சட்டென கலைந்துபோவதை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது. எனக்கு வேறு வழி தெரியவில்லை,. அங்கிருந்தபடியே அவருக்கு வேகமாக ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட்டு, ஷிமோகா திரும்பிவிட்டேன். அடுத்த வாரம் அவரிடமிருந்து பதில் வந்தது. காசர்கோட்டுக்கு அருகில் பேக்கல் என்னும் இடத்தில் கடலையொட்டி ஒரு பெரிய கோட்டை இருக்கிறது என்றும், அங்கு சென்று நாள்முழுக்க பேசிக்கொண்டிருக்க விடுப்பெல்லாம் எடுத்துவிட்டு, காத்திருந்து ஏமாற்றமடைந்ததாகவும் தான் எழுதிவைத்திருக்கும் நாவலைப் படித்துக் காட்ட விரும்பியதாகவும் எழுதியிருந்தார். நான் மீண்டும் விரிவாக அவருக்கு எழுதி என் வருத்தத்தையும் இயலாமையையும் தெரிவித்தேன்.
ஷிமோகாவிலிருந்து நான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்தேன். அவரும் பாலக்கோட்டுக்கு மாற்றலாகி வந்து சேர்ந்தார். அங்கிருந்துதான் படுகை, போதி ஆகிய கதைகளை அவர் எழுதினார். அவை நிகழ் என்னும் சிற்றிதழில் வெளிவந்திருந்தன. மூன்று நாள் தங்கி பேசிக்கொண்டிருக்கும் வகையில் விடுப்பெடுத்துக்கொண்டு நானும் நண்பர் மகாலிங்கமும் அவரைச் சந்திக்கச் சென்றோம். மூன்றாண்டுகளுக்கும் மேலான கடிதத்தொடர்புக்குப் பிறகு முதன்முறையாக நாங்கள் அன்று சந்தித்துக்கொண்டோம். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டே இருந்தோம். சிறிதுநேரம் ரஷ்யப்படைப்புகள் பற்றி அவர் பேசுவார். பிறகு பேச்சு எப்படியோ ஐரோப்பிய நாவல்கள்பற்றியதாக மாறிவிடும். அப்புறம் ஏதோ ஒரு கணத்தில் புதுமைப்பித்தன், க.நா.சு., தி.ஜானகிராமன், அசோகமித்திரன் என்று தடம் மாறிவிடும். அங்கிருந்து நாங்கள் மூன்று பேரும் ஒக்கேனக்கல் அருவிக்குச் சென்று குளித்துவிட்டுத் திரும்பினோம். அது ஓர் இனிமையான பயணம்.
அந்த முதல் சந்திப்பைத் தொடர்ந்து, இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பலமுறை நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு சந்திப்பும் இனிமையான சந்திப்பே. அவரைவிட்டுப் பிரியும் கணத்தில் என்னை நானே புதுப்பித்துக்கொண்ட உணர்வையே அடைந்திருக்கிறேன்.
அவருடைய முதல் சிறுகதைத்தொகுதியான ‘திசைகளின் நடுவே’ என்னும் தொகுப்பு திருவண்ணாமலையில் கலை இரவு நாள் அன்று வெளியிடப்பட்டது. அதை எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். அருகில் நான் நின்றிருந்தேன். அடுத்த பத்தாண்டுகளில் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஆற்றல் மகத்தானது. சிறுகதைகளில் புதியபுதிய களங்களை அறிமுகப்படுத்துவதையும் புதிய சொல்முறைகளை உருவாக்குவதையும் பார்த்தேன். காலச்சுவடு, சுபமங்களா, இந்தியா டுடே ஆகிய எல்லா இதழ்களிலும் அவருடைய படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அவை பரவலான வாசககவனத்தைப் பெற்றன. அவர் எழுதிய விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் ஆகிய நாவல்கள் தமிழ்ப்படைப்புலகில் அவருக்கு ஒரு முக்கியமான இடத்தை அமைத்துக் கொடுத்தன. இவ்விரண்டு நாவல்களுமே முன்னுதாரணம் இல்லாத படைப்புகள். அதனாலேயே இவற்றை எதிர்கொண்ட வாசகர்கள் முதலில் திகைப்படைந்தார்கள். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக தாமே தம் முயற்சியால் அந்த நாவல்களின் உலகத்தைக் கண்டடைந்து மகிழ்ந்தார்கள்.
அவருடைய படைப்புவேகம் கற்பனைக்கெட்டாததாகவும் மலைப்பூட்டக் கூடியதாகவும் இருக்கிறது. காடு, ஏழாம் உலகம், கொற்றவை அனைத்தும் அவருடை மிகமுக்கியமான படைப்புகள். மகாபாரதக்கதையை பின்புலமாகக் கொண்டு, அவர் எழுதத் தொடங்கியிருக்கும் நாவல் வரிசை தமிழுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய முயற்சி. கிருஷ்ணன், ராதை இருவரையும் முன்வைத்து அவர் எழுதிய நீலம் நாவலை ஒரு நவீன காவியம் என்றே சொல்லலாம்.
படைப்பாளியாக மட்டுமன்றி, கருத்துப் பரிமாற்ற அமர்வுகளை ஒழுங்கு செய்து, புதிய வாசகர்களை அவற்றில் பங்கேற்கவைத்து, விவாதங்களை நிகழ்த்துவதற்கான களங்களை அமைத்துக்கொடுப்பதிலும் அவர் முன்னுதாரணமற்ற ஆளுமையாக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். முன்னோடிப் படைப்பாளிகளைப்பற்றி அவர் எழுதிய விரிவான அறிமுக நூல்கள் இலக்கியத்துக்குள் வரும் புதிய வாசகர்களுக்கு நல்ல கையேடாக விளங்குகின்றன.
உலக அளவில் கெளரவத்தைத் தரக்கூடிய இயல் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியைத் தெரிந்துகொண்ட வேளையில், அவருடன் பேசிய, பழகிய பழைய நினைவுகள் நெஞ்சில் அலைமோதுகின்றன. நான் அவருக்கு முதல் கடிதம் எழுதிய நாள் என்னமோ நேற்றுப்போல இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இயல் விருது மட்டுமல்ல, இதைவிட பெரிய விருதுகள் அனைத்துக்கும் அவர் தகுதியானவர். கோணங்கிக்கு விளக்கு விருது அறிவிக்கப்பட்ட ஒருசில மாதங்களுக்குள் வெளிவந்திருக்கும் இயல் விருது அறிவிப்பு என் மகிழ்ச்சியை பல மடங்காக்குகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜெயமோகன்.

Series Navigation“பேனாவைக்கொல்ல முடியாது”தமிழுக்கு விடுதலை தா
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    jeyakumar says:

    ஜெயமோகனுடனான தனது அனுபவங்களை பாவண்ணன் அழகாக எழுதி இருக்கிறார். நானும் விஷ்ணுபுரம் படித்துவிட்டு அதை மீண்டும் மீண்டும் இருமுறை முழுதாக வாசித்தேன். பின்னர் தோன்றும்போதெல்லாம் நடு நடுவே எடுத்துப்படிபேன். ஜெயமோகனை ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்ற எனது ஆவல் 2010ல் நிறைவேறியது. அவரைக்காணவும், அரவிந்தன் நீலகண்டன் அவர்களை சந்திக்கவுமே நாக்ர்கோவில் சென்று சந்தித்தேன். அரைமணி நேரம் மட்டுமே நீண்ட அந்த சந்திப்பில் தெரிந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் அனுபவமெ கிடைத்தது. விஷ்ணுபுரம், காந்தியடிகள், அவரது இதர படைப்புகள் குறித்து எனக்கு பட்டதை சொல்லிக்கொண்டிருந்தேன். இன்றுவரை மனதுக்கு நெருக்கமான எழுத்தாளராக ஜெயமோகனே நிற்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் இயல் விருதுக்கு எனது வாழ்த்துகளும்.

Leave a Reply to dr.rangarajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *