தங்கராசும் தமிழ்சினிமாவும்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 19 in the series 24 மே 2015

மாதவன் ஸ்ரீரங்கம்

நிஜமாகவே ராசுவின் ரத்தத்தில் சினிமா கலந்திருக்கின்றது. அவன் தாத்தா ஆரம்பகால எம்ஜியார் படங்களில், கூட்டத்தில் ஒருவராய் தலைகாட்டியிருக்கிறார்.

அவன் அப்பா ஒரு படி முன்னேறி பாரதிராஜாகாலப் படங்கள் சிலவற்றில், கிராமத்து முக்கியஸ்தர்களில் ஒருவராய் வந்துபோயிருக்கிறார்.

ராசுவின் அண்ணன்னும் சளைத்தவரல்ல. அவரும் தன் பங்கிற்கு நாயகனின் நண்பனாக நடித்து, ஒரு நாளிதழில் நாலுவரி எழுதப்பட்ட துணிச்சலில், கதாநாயகனாக நடித்த படம் வெளியே வராமல் சினிமா எனும் கனவுலகில் எங்கோ காணாமல் போயிற்று.

மனம் நொந்துபோய் கதாநாயகக்கனவை எல்லாம் கடாசிவிட்டு, கல்யாணம் செய்துகொண்டு ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்த பிண்ணனியில்தான் ராசுவின் சினிமாக்கனவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.

ராசுவிற்கு சொந்த ஊர் ஜெயங்கொண்டம் அருகில் ஒரு விவசாய கிராமம். அவன் தாத்தாவின் அப்பா பர்மாவில் நிறைய சம்பாதித்து ஜப்பான்காரனின் குண்டுகளுக்கு பயந்து இந்தியா வந்து செட்டிலானவர். அவர் விட்டுப்போன சொத்துக்கள் இன்னும் நாலு தலைமுறைக்கு தேறும்.

எனவே பணம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.
“எப்போ பணம் வேனும்னாலும் போன் பண்ணு ராசு. பெரியவனைவிட்டு அக்கவுன்டுல போட்டுவிடுறேன்” என்று அப்பா சொல்லிவிட்டார்.

“தம்பி நான் பார்த்தவரைக்கும் அங்க யாருமே உண்மையா இல்லடா. உன்னை உசுப்பேத்தியே பள்ளத்துல தள்ளிவிட்ருவானுங்க பார்த்துக்க, “என்னும் அண்ணனின் அறிவுரையோடு,

“ஏன் மாப்ள, அப்போ திரிஷா நயன்தாராகூடல்லாம் டூயட் பாடப்போறேன்னு சொல்லு” என்னும் ஊர் பசங்களின் கிண்டல்களோடு,

மனசு நிறைய தான் எடுக்கப்போகும் சினிமா பற்றிய கனவுகளோடு,
ஒரு நல்ல நாளில் சென்னைக்கு பைக்கில் கிளம்பினான்.

அவன் பார்த்த உலக சினிமா வரிசையில் தன் படமும் இருக்குமென்று அவனுக்கு மிகப்பெரிய நம்பிக்கையிருந்தது

கைவசம் மிகநல்லதொரு கதையும் அவனிடம் இருந்தது.

கோடம்பாக்கத்தில் இவனைப்போல கனவுகளோடு ஒரு கோடிபேர் சுற்றிக்கொண்டிருந்தார்கள். அதில் சிலர் இவனோடு ஒட்டிக்கொண்டார்கள்.

அவர்கள் சினிமா பற்றியே பேசினார்கள். சினிமாவையே புகைத்தார்கள், சினிமாவையே குடித்தார்கள், சினிமாவின் நிழலாகவே அலைந்தார்கள்.

ராசுவிடம் கதைகேட்ட எல்லா இளம் ஹீரோக்களுக்கும் கதை பிடித்திருந்தது ஆனால் கால்ஷீட் பிரச்சனை. ஒரு வருடம் காத்திருக்கச்சொன்னார்கள். வேறுவழியின்றி ரொம்பகாலமாக சினிமாவில் போராடிக்கொண்டிருக்கும் தனது நன்பனொருவனை ஹீரோவாக வைத்து எடுத்துவிடலாமென்று முடிவு செய்தபோது வேறு பிரச்சனை முளைத்தது.

ஒரு அறிமுக நடிகனுடன் நடிக்க எந்த நடிகையும் முன்வரவில்லை. வந்த ஒரு நடிகையும் இவன் பாட்டன் சொத்து முழுவதும் எழுதிக்கேட்டாள். முதல் படத்தில் எல்லோருமே அறிமுகப்பட்டாளமாக இருந்தால் அது படத்தின் வியாபாரத்தை பாதிக்குமே என்ற பயம் உள்ளூர இருந்தாலும், புதுமுக நாயகிக்கு விளம்பரம் செய்தான்.

ஆனால் வந்திருந்த புகைப்படங்களில் ஒன்றுகூட தேறவில்லை.

அவன் எடுக்கப்போவது கிராமத்தை களமாகக் கொண்டது. அதற்கேற்ற முகவாகோடு அமையவேயில்லை என்று நொந்திருந்தபோதுதான், நண்பனின் திருமணத்திற்காக தாராபுரம் சென்றான்.

அங்கேதான் அருக்காணியை பார்த்தான்.கிராமத்துக்கேயுரிய முகவெட்டு உடல்கட்டு. அவள் கண்களைமட்டும் வைத்தே ஒரு குறும்படம் எடுத்துவிடலாம்.

தன் கதைக்கு இவளைத்தவிர வேறுயாரும் பொருத்தமாக இருக்கமுடியாதென்று பார்த்தமாத்திரத்தில் முடிவுசெய்தான்.

நண்பன் மூலம் விசாரித்ததில் தாயில்லை, தந்தை குடிகாரர், ஒரு திருமணமான அக்காள் அவளது கணவனும் குழந்தையும் என்று அருக்காணியின் குடும்பம் வழக்கமான தமிழ்சினிமாவின் அத்தனை கிளிஷேக்களோடும் இருந்தது.

நண்பனைவிட்டு பேசியதில் தனக்கு நடிக்கத்தெரியாதே என்று வெட்கப்பட்டாள். அவள் தந்தை சம்பந்தமின்றி தன் மாடு இறந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அக்காள் புருஷன் மட்டும் கொஞ்சம் சினிமாவினால் அடையக்கூடிய வசதிவாய்ப்புகள் பற்றி தெரிந்துவைதிருந்தான். அவன் பேச்சுதான் எடுபடுமென்று புரிந்து ராசு அவனுடன் பேச அடுத்தவாரத்திலேயே அவர்களை சென்னைக்கு வரவழைத்தான்.

மேக்கப்மேன் மற்றும் தனது கேமரா நண்பனைவைத்து ஸ்கிரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்து எல்லாம் சரியாக பொருந்திப்போனது. ஆனால் அருக்காணியின் குரலும் இழுத்து இழுத்து பேசும் கொங்குபாஷையும் தான் பெரிய இடைஞ்சலாக இருந்தது. சரி டப்பிங் வைத்து சமாளித்துக்கொள்வோமென்று புரொடக்ஷனுக்கான வேலைகளில் இறங்கினான். படத்துவக்கவிழாவை சற்றே எளிமையாக ஆனால் விளம்பரம் கிடைக்கும் வகையில் செய்தான். ஷூட்டிங் முழுக்க ஈரோடு கோபி தஞ்சை என்று பிளான் செய்திருந்தான். மிகச்சரியாக அந்த வாரத்தில் வெளிவந்த ஒரு முன்னனி நாயகனின் படத்தை பார்த்தபோதுதான் ராசுவின் தலையில் இடிவிழுந்தது.

ராசுவின் ஸ்கிரிப்டில் என்ன இருந்ததோ அதில் வரிபிசகாமல் வசனம் பிசகாமல் அப்படியே இருந்தது. சகித்துக்கொள்ள முடியாத ஏமாற்றங்களுடன் பட வேலைகளியெல்லாம் நிறுத்திவிட்டு அந்த நடிகரை பார்த்து பேச்சுவார்த்தை நடத்த, இவன் யூனிட்டிலிருந்து வெளியேறிய மூத்த அஸிஸ்டண்ட் டையரக்டரின் வேலைதான் எல்லாமென்று தெரிந்துகொண்டான். ராசுவின் ஸ்கிரிப்டை சற்றே பட்டி டிங்கரிங் செய்து அவரை வைத்து படமெடுத்து அது சக்கைபோடு போட்டு ஓடிக்கொண்டிருந்தது.

நடிகர் தெளிவாக ஒப்பனாக சொல்லிவிட்டார். “தம்பி உனக்கு வயசு இருக்கு. அவரு பாவம் இருவத்தஞ்சு வருஷமா சினிமால இருக்காரு. நீ சூப்பரா ஒன்னு ரெடிபண்னுப்பா, அதுல நா நடிச்சிக்குடுத்து உன்ன கைதூக்கிவிடறேன்” என்றார். சேம்பரிலெல்லாம் பதிவுசெய்யாததால் சங்கத்திடமோ சட்டப்படியோ எதுவும் செய்யமுடியவில்லை ராசுவால். நொந்துபோய் அறைக்கு வர ஹீரோ நண்பன் காத்திருந்தான்.

“சாரி மச்சி. பர்ஸ்ட் படமே கிராமத்து படமா இருந்தா நானும் இன்னொரு ராமராஜனாத்தான் ஆகவேண்டியிருக்கும். ஆரம்பத்துலயே எனக்கு இஷ்டமில்ல. உனக்காகத்தான் ஒத்துக்கிட்டேன். பட் இப்ப நல்லதா ஒரு சான்ஸ் கெடைச்சிருக்கு மச்சி. செகண்ட் ஹீரோதான். பட் வெயிட்டான கேரக்டர். மிஷ்கின் கூப்டிருக்காரு. சாரி மச்சி” சொல்லிவிட்டு ராசுவின் ரியாக்ஷனுக்கு காத்திராமல் சென்றுவிட்டான்.

ராசுவிற்கு அழவேண்டுபோலிருந்தது. சம்பந்தமின்றி கொஞ்சம் சிரிப்பும்கூட வந்தது. அவன் யூனிட்டிலிருந்து ஆட்களெல்லாம் மெல்லமெல்ல சத்தமின்றி வெளியேறினார்கள். புரொடக்ஷன் மேனேஜர் மேற்கொண்டு என்ன என்பதுபோல போன்செய்து கேட்டுக்கொண்டிருந்தார். அருக்காணியின் அக்காள் புருஷன் கம்பீரமாக தங்களுக்கு செட்டில் செய்துவிடுங்கள். அருக்காணிக்கு திருமணம் முடிக்கவேண்டும் என்றான். கையில் கதையும் தயாராக இல்லை. மிகுந்த மன உளைச்சலுடன், எல்லோருக்கும் அடுத்தவாரம் ஷூட்டிங். தயாரா இருங்க என்று சொல்லிவிட்டு ஊருக்கு கிளும்பினான்.

அப்பாவிற்கு எல்லாமே தெரிந்திருந்தது. அண்ணன் சொல்லியிருக்கக்கூடும். ஒன்றுமே கேட்கவில்லை. நாள்முழுக்க கதைபற்றியெல்லாம் யோசித்தும் ஒன்றுமே தேறவில்லை. எங்கெங்கோ அலைந்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது அண்ணனின் நண்பனொருவர் கதையுடன் காத்திருந்தார். சற்றே நம்பிக்கை வந்தது. ஆர்வத்துடன் கதைகேட்டான்.

“தம்பி ஓப்பன் பண்ணா பச்சைபசேல்னு ஒரு வில்லேஜ்” என்றதுமே ராசுவிற்கு ச்சீயென்றானது. பொறுமைகாத்து கேட்டான்.

“டவுன் பஸ்லயிருந்து கொடையோட ஒரு அழகான பொண்ணு எறங்கறா. அதான் ஹீரோயின். ஊருக்கு புதுசா வந்திருக்கிற டீச்சர்” ராசுவிற்கு கொட்டாவி வந்ததை அடக்கிக்கொண்டான்.

“அடுத்த சீன்லயே வில்லன் எண்டர். அவ என் மொறப்பொண்ணு அனுப்பிவைங்கன்னு பஞ்சாயத்து”

இந்த இடத்தில் ராசு இடைமறித்துவிட்டு அவரிடம் கேட்டான்,
“இந்த கதைல அவ புருஷன் மிலிட்ரி ஆபீஸரா”?

“எப்டிப்பா கண்டுபுடிச்ச”?

ராசுவிற்கு ஆயாசமாக இருந்தது.
“பரவால்லணே. இதெல்லாம் ரொம்ப பழசு. நா பாத்துக்கிறேன்ணே. சாரி. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று அவரை அனுப்பிவிட்டு மொட்டை மாடிக்கு சென்று காதில் ஹெட்போனுடன் உட்கார்ந்துகொண்டான். அப்பா வந்தார்.

“என்ன தம்பி எதும் கெடச்சுதா கதை”?

“இல்லப்பா. கெடைச்சுரும்பா”

“என்ன கதை வச்சிருந்த ராசு”?

“வில்லேஜ் லவ் சப்ஜல்டுப்பா”

ராசுவின் அப்பா களைப்பாக இருந்தார். “இந்த தோள்பட்டைய கொஞ்சம் பிடிச்சிவிடுறியா ராசு. கடப்பாரை புடிச்சி குத்துனதுல கொஞ்சம்போல வலிக்கிதுய்யா”

பிடித்துவிடும்போது ராசு கேட்டான்.

“நீங்க ஏம்பா சிரமப்படுறீங்க? அதான் வேலையாளுங்கல்லாம் இருக்காங்கல்ல”?

அவர் சிரித்தார். “ஒழச்சி பழகுன ஒடம்புய்யா. சும்மா இருக்க ஆவுமா? சரி அதைவிடு. நா ஒன்னு சொல்றேன் தம்பி. தப்பா நெனைச்சுக்காத. எனக்கு சினிமா பத்தியெல்லாம் பெரிசா தெரியாது, ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். தமிழ் சினிமால ஒரு விவாசாயியோட உண்மையான வலியையோ பிரச்சனைகளையோ பேசுறமாதிரி இதுவரை ஒரு படங்கூட வரலை ராசு”

ராசு அப்பாவையே பார்த்துக்கொண்டிருக்க அவர் தொடர்ந்தார்.

“நம்ம ஊரையே எடுத்துக்க. இங்க எவ்ளோ பிரச்சனைங்க. கடங்கட்டமுடியாம எத்தனை குப்புசாமியும் ராமசாமியும் பூச்சிமருந்துகுடிச்சி செத்துகிட்ருக்காங்கன்னு தெரியுமா”?

ராசு அமைதியாக இருந்தான்.
“நீ நம்ம ஊரை, இங்க உள்ள விவசாயியோட கஷ்டத்தையெல்லாம் வச்சு ஒரு கதை பண்ணு தம்பி. எல்லாத்தையும் சரிபண்ண என்ன வழியிருக்குன்னு கொஞ்சம் யோசனை பண்ணுய்யா. அதுல உண்மையிருக்கும். முயற்சி பண்ணு ராசு. உன்னால கண்டிசனா முடியும்”

ராசுவிற்கு செருப்பாலடித்ததுபோல இருந்தது. அப்பா எழுந்து கீழே செல்லும்போது சொன்னார்.

“வயித்துல சோறு இருந்தாத்தான் ராசு காதல் கத்திரிக்கா திருவிழா எல்லாமுமே”

ராசுவிற்கு கொஞ்சம் தெளிந்தது. அடுத்த இரண்டுநாளில் பக்காவாக ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்தான். சென்னைக்கு போன் செய்து எல்லாவற்றையும் தயார்படுத்தினான். சென்னைக்கு சென்று யூனிட்டை பலப்படுத்தினான். ஹீரோ பற்றி கேள்விவர தானே ஹீரோவாக நடிப்பதான முடிவை சொன்னான். யூனிட்டே உற்சாகமானது. அருக்காணியின் அக்காள் புருஷனை போலீஸ் நண்பன் ஒருவனை வைத்து லைட்டாக மிரட்ட, அவன் படத்தை முடித்துக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டான். படம் நன்றாக வள்ர்ந்தது. பொங்கல் சமயத்தில் வெளியிடுவதாக ஏற்பாடு. முன்னனி நடிகர்களின் படமும் வருமே என்று பயமுறுத்தினார்கள். ராசு அசரவேயில்லை. பாடல்வெளியீட்டை நல்ல விளம்பரங்களுடன் தெளிவாக செய்தான்.

பாடல்களெல்லாம் பேய்த்தனமாக ஹிட்டாயின. இண்டஸ்ட்ரியில் அங்கங்கே இவன் படத்தைப்பற்றி பேசிக்கொண்டார்கள். டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்கு படம் பிடித்திருந்ததை உண்ர்ந்தான், ஆனாலும் அடிமாட்டு ரேட் பேசினார்கள். முடிந்தவரை பேரம் பேசிப்பார்த்து ஒத்துவராமல் சொந்தமாக வினியோகிப்பதாக முடிவுசெய்தான். அது மிகப்பெரிய ரிஸ்க் என்று ராசுவிற்கு தெரியும். படம் தோற்றால் பாட்டன் சொத்தில் முக்கால்பங்க காலி. ஆனால் செலுத்தப்பட்டவன்போல நம்பிக்கையுடன் வேலைசெய்துகொண்டிருந்தான். பொங்கல் வந்து பட ரிலீஸின்போது ஊருக்கு சென்றுவிட்டான்.

எல்லா செண்டர்களிலிருந்து வந்த ரிசல் படம் படுதோல்வியென்றது. அண்ணன் இவனை பாவமாக பார்த்தான். அம்மா அவனுக்கு மாமன் மகளை கட்டிக்கொண்டு பேசாமல் விவசாயத்தை கவனியென்றாள். நிரம்ப விரக்தியுடன் அப்பாவை கட்டிக்கொண்டு அழுதான். வெறிக்கவெறிக்க எங்கோ பார்த்தபடியிருந்தான். இரண்டாவது வாரத்தொடக்கத்தில் எல்லாம் தலைகீழாக மாறியது. மிக உச்சத்திலிருந்த நடிகரொருவர் இவன் படத்தைப்பற்றி பாராட்டி நாலுவார்த்தைகள் சொல்லியது நாளிதழ்களில் செய்தியாக வந்தது. மீடியாக்களின் கவனம் இவன் படத்தின்மீது பட்டு வெளிச்சமானது. ஏறக்குறைய எல்லோருமே படத்தை கன்னாப்பின்னாவென்று புகழ்ந்துதள்ளினார்கள்.

முறுக்கிவிட்ட குதிரைபோல படம் பிய்த்துக்கொண்டு ஓடத்துவங்கியது. மாஸ் ஹிட்டென்று சொன்னார்கள். யார் யாரோ போன் செய்து வாழ்த்தினார்கள் வாய்ப்புகேட்டார்கள் வாய்ப்புகொடுத்தார்கள். தான் கண்ட கனவின் வெற்றிக்களிப்பில் மிதந்தான். அப்பா ஊரையே அழைத்து நெற்களத்தில் கறிவிருந்து கொடுத்தார்.

அன்றிரவு மெல்ல அப்பவிடம் சொன்னான் ராசு. “ரொம்ப தேங்ஸ்பா. இதெல்லாமே உங்களால கெடச்சதுப்பா”

அவருக்கு பெருமை தாங்கவில்லை.

“சரி விடுய்யா. கெளம்பிப்போ. கையோட அடுத்த வேலைய பாரு. சூடு அடங்கிருச்சின்னா வாய்ப்புகள் தட்டிப்போயிரும்”

“இல்லப்பா. இனிமே இங்க தான். விவசாயந்தான். எனக்கு இந்த ஒரு சக்ஸஸ் போதும்பா”

“என்னய்யா சொல்ற? இதுக்கா இத்தனை கஷ்டப்பட்ட? மனசப்போட்டு ஒழப்பாம போயி அடுத்த படத்தை ஆரம்பி ராசு”

“இல்லப்பா நா தெளிவாத்தான் இருக்கேன். கிராமத்து கஷ்டத்தையெல்லாம் வச்சு படமெடுத்தா மட்டும் போதுமாப்பா. யதார்த்தத்துல அதுக்கு ஏதாச்சும் செய்யனும்னு தோனுதுப்பா. சினிமா கெடக்கட்டும்பா. உண்மையா எடுத்தா ஜெயிச்சிடலாம்னு நீங்க சொன்னது பலிச்சிருச்சிப்பா. எனக்கு இதுபோதும். நாளலேருந்து நானும் அண்ணாங்கூட நெலத்துக்கு போறேம்பா”

கம்பீரமாக முதுகுகாட்டி நடந்த அப்பாவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ராசு.

Series Navigationவடுதிருக்குறள் உணர்த்தும் ​பொருளியல்ச் சிந்த​னைகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    karthik says:

    கிளைமேக்ஸ் நடைமுறைக்கு ஒத்து வராத மாதிரி இருக்கே.!ஆனால் உங்களின் எழுத்து நடை சூப்பர்.!இந்த கதைக்குள் அருக்காணிய கொண்டு வந்து ஒரு லவ் மூடை கிரியேட் பண்ணி கவனத்தை டைவர்ட் பண்றீங்க.!

Leave a Reply to karthik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *