பெற்றால்தான் தந்தையா

This entry is part 2 of 10 in the series 17 செப்டம்பர் 2017

 

அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ் கோவிலிருந்து  என் மகள் குடும்பத்துடன் சிங்கைக்கு வருகிறார். கணவர், மகள், மகன் எல்லாரும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு மாதம் தங்கும் முடிவுடன் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து இப்படி வர ஒரு வீடு வாங்க காசு சேர்ப்பது போல் சேர்த்தால் தான் முடியும். அப்படிச் சேர்த்துத்தான் அவர் வரப்போகிறார். இப்படி வரும் மகளை வீட்டிலேயே வைத்துக்கொண்டு திரும்ப அமெரிக்காவுக்கு அனுப்புவதா?  எனக்கு மனசு ஒப்பவில்லை. அவர்களை எங்காவது அழைத்துச் செல்ல வேண்டும். பல ஊர்களை  சிந்தனைக்குள் குலுக்கிப் போட்டு பிரித்துப் பிரித்துப் பார்த்த்தில் ‘என்னை வந்து பார், என்னை வந்து பார்’ என்றது ஓர் ஊர். அதுதான் ‘பாலி’ மகளிடம் சொன்னேன். ‘ஆ, பாலி. கூகுலில் நிறையப் படித்திருக்கிறேன். நல்ல தேர்வு அத்தா’ என்றார். உடனே என் வழக்கமான பயண முகவரிடம் சென்றேன். ‘பாலிக்கு மூன்று இரவுகள், நான்கு பகல்கள். மொத்தம் 6 பேர்.  ஜூன் மாதம் 15 முதல் 19 வரை. ஒரே பொட்டலமாக பயணத்தை ஏற்பாடு செய்ய முடியுமா?’ உடனே கணினியில் எங்கெங்கோ தட்டினார். ‘உங்கள் விருப்பப்படியே இருக்கிறது. ஆறு கடவுச் சீட்டுகளின் முதல் பக்கத்தை வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள். இன்று இரவே பயணச்சீட்டுக்களை வாங்கிக் கொள்ளுங்கள். தலைக்கு 500 வெள்ளி.’ என்றார். எப்போதும் நடக்கக் கூடாததையே நினைத்து நசுங்கியே பழக்கப்பட்டவன் நான். உடனே கேட்டேன். ‘அங்கே எங்களை சந்திக்க யாரும் வராவிட்டால்?’ உடனே சொன்னார். ‘இதுவரை அப்படி நடந்ததே இல்லை. என்னை பயமுறுத்தாதீர்கள்.’ நல்ல வேளை. இடையில் மேசை இருந்தது. இல்லாவிட்டால் காலில் கூட விழுந்திருப்பாரோ? ‘நீங்கள் சொன்னால் சரி. உடனே அனுப்புகிறேன்.’ என்று சொல்லி நகர்ந்தேன். உடனே வாட்ஸ் அப்பில் தகவல்கள் பறந்தன. அன்று இரவே பயணச் சீட்டையும் வாங்கி வந்து விட்டேன்.

ஒரு புதன்கிழமை. எல்லாரும் புறப்படுகிறோம். விமானத்தில் ஒரே வரிசையில் அமர்ந்தோம். புள்ளியாகிப்போன கட்டடங்கள், கடல், மேகங்கள் எதிலுமே என் கவனம் செல்லவில்லை. ‘ அங்கே வரவேண்டிய அந்த பயண வழிகாட்டி வராவிட்டால்?’  என்னையே நான் பயமுறுத்திக் கொண்டு எவருக்கும் சொல்லாமல் மறைத்துக் கொண்டும் புளுங்குகிறேன். எல்லாரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்.? எனக்குமட்டும் ஏன் இப்படி? இது முதுமைக்கோளாறா? பக்குவமா? பயமா? இல்லை பொறுப்புணர்ச்சியா? ஏதோ ஒன்று. பாலி வந்து சேர்ந்துவிட்டோம். இறங்கினோம்.

பாலி நேரமும் சிங்கப்பூர் நேரம்தான். இரண்டரை மணி நேரப் பயணம். இறங்கி நடக்கிறோம். ஒரு மொகலாய மன்னரின் அரண்மனைக்குள் நடப்பதுபோல் உணர்கிறேன். பெரிய பெரிய தூண்கள், உயரமான மாடம். வித்தியாசமான விமான நிலையம். சுங்க அதிகாரிகளிடம் 6 கடவுச்சீட்டையும் விரித்த மாத்திரத்தில் ‘சப்’ என்று முத்திரை குத்தி கடவுச்சீட்டுக்கள் கைக்கு வந்தன. பெற்றுக்கொண்டு நகர்ந்தோம். வாசலில் வரிசையாக பல பெயர்களைத் தாங்கிக் கொண்டு பல முகவர்கள். என் பெயர் எங்கே? எல்லா இடமும் நான் தேடுகிறேன். ’அத்தா இங்கே இருக்குத்தா ஒங்க பேரு’ என் எட்டு வயது பேத்தி சொல்லித்தான் தெரிகிறது. அவநம்பிக்கையோடு தேடினால் கண்ணெதிரே இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாதாம். எங்கோ படித்த ஞாபகம். உண்மைதான். எங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு தன் வாகனத்துக்குச் சென்றார் வழிகாட்டி. 8 பேர் அமரும் வாகனம்.  எல்லாரும் ஏறுகிறார்கள். அதுவரை சுமந்து வந்த ஒரு பெரிய சந்தேக மூட்டையை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு நானும் ஏறிக் கொள்கிறேன். அப்பாடா  இனிக் கவலையில்லை. இனி எல்லாவற்றையும் இந்த மனிதர் பார்த்துக் கொள்வார். ஒரு பொறுப்பு விலகுவதில் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி.

வாகனம் விரைந்தது. சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை ஓட்டிக் கொண்டு போவதுபோல் ஒரு சிலை. அவ்வளவு அழகு. எல்லாரும் ஒரு பெட்டிக்கடையைக் கடந்து செல்வதுபோல் கடக்கிறார்கள். அந்தச் சிலையைப் பார்க்க ஆசை. அங்கே கொஞ்சம் நிறுத்தமுடியுமா? என்றேன். ‘அங்கே நிறுத்துமிடம் கிடைக்காதய்யா. வரும்போது விமான நிலையத்தில் வாகனத்தைப் போட்டுவிட்டு வந்து காட்டுகிறேன்’ என்றார் அந்த வழிகாட்டி. ‘இதைப் பார்க்கவே இவ்வளவு ஆசைப்படுகிறீர்கள். இன்னும் எவ்வளவோ இடங்கள் இருக்கிறதய்யா. இதைவிட அழகான இடங்கள். சிலைகள்.’ என்றார். ஒரு ஒலிவாங்கியை வாயருகே வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார். அட! இதை ஒரு தொழிலாக, முறையாக எவ்வளவு அழகாகச் செய்கிறார்கள். நான் வியந்தேன். அவர் பேசத் தொடங்கினார். ‘எங்கள் பாலி உங்களை வரவேற்கிறது. இது மலேசியா மாதிரி ஒரு ஊர் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். இங்கே 85 சதவீதம் இந்துக்கள். இந்தியாவின் வடக்கு மாநிலங்களிலிருந்து குறிப்பாக குஜராத்திலிருந்து வந்தவர்கள். இவர்களின் கடவுள்கள் பெரும்பாலும் இந்துக் கடவுள்கள்தான். விநாயகர், சிவன், முருகன், ராமபிரான். விநாயகரிலேயே இங்கு இரண்டு வகை. ஒன்று இடப்பக்கம் வளைந்த தும்பிக்கை, இன்னொன்று வலப்பக்கம் வளைந்த தும்பிக்கை. எல்லாவற்றிற்கும் இங்கு ஓர் அர்த்தம் இருக்கிறது. இங்குள்ள பலரின் பெயர்கள் கூட இந்துப் பெயர்கள்தான். ‘உங்கள் பெயரென்ன அய்யா’  40 வயது பங்களா தேஷியரைப் போல் இருந்த அந்த வழிகாட்டியைக் கேட்டேன். ‘மதி. முழுப் பெயர் மதியழகன்’ என்றார். அதைக் கேட்க சுகமாக இருந்தது. அழகான தமிழ்ப் பெயர், தமிழரல்லாத ஒருவர் வாயிலிருந்து தமிழே பேசாத ஒரு நாட்டில் கேட்டது சுகமாக இருந்தது. இதோ நாங்கள் தங்கப் போகும் தங்குமிடம் வந்துவிட்டது. எல்லாரும் இறங்கினோம். மணி காலை 11.30. விமானப் பணிப்பெண்கள் போல் அலங்கரித்த பொம்மை மாதிரி இரண்டு பெண்கள் அந்த வரவேற்புக் கூடத்தில் இருந்தார்கள். எங்கள் வழிகாட்டி எங்களின் விபரங்களை ஏற்கனவே சொல்லியிருக்க வேண்டும். கணினியைத் தட்டிவிட்டு அந்தப் பெண்களில் ஒருவர் என்னிடன் சொன்னார். ‘நீங்கள் 2 மணிக்குத்தான் அறைக்குச் செல்ல முடியும். உங்கள் பதிவும் அப்படித்தான் இருக்கிறது. தயவுசெய்து காத்திருங்கள். இதோ சாய்வு நாற்காலிகள். பின்னால் கழிவறை இருக்கிறது. திண்டுகள் இருக்கின்றன சாய்ந்து கொள்ளுங்கள். கொஞ்சம் தூங்கவும் முடியும். இந்தச் சாலை முழுவதும் உணவகங்கள்தான். தயவுசெய்து 2 மணிவரைக் காத்திருங்கள். முன்னதாகவே அவர்கள் சென்றுவிட்டால் உங்களுக்குத் தெரியப் படுத்திகிறேன்’  என்றார். ‘உங்கள் பெயரென்ன பெண்ணே’. அந்தப் பெண்ணிடம் கேட்டேன். ‘என் பெயர் சாவித்திரி. இதோ இந்தப் பெண்ணின் பெயர் மரகதம். அழகான தமிழ்ப் பெயர்கள். உச்சரிப்புச் சுத்தமாக அந்த பாலிப் பெண் பேசியதில் பால் பொங்கும் அழகு இருந்தது. சாய்வு நாற்காலியில் மகளும் மருமகரும் அமர்ந்துவிட்டார்கள். விட்டுப்போன அமெரிக்க வேலைகளை அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். போய் எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பது என்ற பிரச்சினை கூட இருக்கலாம். அதற்குள் நான் நுழையவில்லை. பேரப்பிள்ளைகளோடு என் மனைவி சங்கமமாகிவிட்டார். நான் எதிலுமே ஒட்டாமல் நிற்கிறேன். சாலையில் இறங்கி நடந்தேன். சுட்ட சோளம் மணத்தது.  அட! சோளம் சுட்டு விற்கப்படுகிறது. விலை கேட்டேன்.10000 ரூபாய் என்றார். சிங்கப்பூரில் அது 1 வெள்ளி. நியாயமான விலைதான். 10 வெள்ளி ஒரு லட்சம். 100 வெள்ளி ஒரு மில்லியன். இங்கு எல்லாருமே கோடீசுவரர்ள்தான். சாலையின் அடுத்த கரையில் நீண்ட சுவர். இது என்ன சிறைச்சாலை சுவர்கள் மாதிரி. அதற்கு அப்பால் என்ன? நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த சுவற்றின் வழியாக சிலர் வெளியே வருகிறார்கள். சிலர் உள்ளே கோகிறார்கள். அட! வழி இருக்கிறது. போய்ப் பார்க்கலாமே. உள்ளே பார்த்தேன். அங்கேதான் இன்னொரு ஊர் விரிகிறது. அதுதான் பாலியின் உயிர். கடற்கரை. கப்பல்களே கண்ணுக்குத் தெரியாத நீலத்தண்ணீர் வெளி. வெள்ளை மணல். சிக்கன உடைகளில் புற்றீசல்களாய் வெளிநாட்டுப் பெண்கள். பாசிமணி விற்கும் இந்தோனேஷியப் பெண்கள். நீர்ச்சறுக்கு விளையாடும் இளையர்கள் என்று விரிகிறது வெளி. அடேங்கப்பா! எனக்கு காரணம் புரிந்தது. உண்மையிலேயே இன்றுதான் இவ்வளவு அழகான கடற்கரையை நான் பார்க்கிறேன். மணி 1.30 திரும்பிப் போனால் அறைக்குச் செல்வதற்கு சரியாக இருக்கும். எல்லாரும் வந்து இந்த அழகைப் பார்க்கலாம். அந்த வழிகாட்டி போகும்போதே சொன்னார். ‘இன்றைய பொழுதை நீங்கள் விரும்பியபடி கழித்துக் கொள்ளுங்கள். நாளைக்காலை தான் நம் சுற்றுப் பயணத் திட்டம் தொடங்குகிறது. ‘ வரவேற்புக் கூடத்தில் சாவித்திரியும் மரகதமும் கைகளைக் கூப்பி தமிழ் வணக்கம் சொன்னார்கள். உங்கள் அறைகள் தயார். ஆறாவது மாடி அறை எண்கள் 20,21. சென்றோம். மூட்டை முடிச்சுகளை இறக்கினோம். வசதியான உடைகளுக்குள் எங்களை நுழைத்துக் கொண்டோம். கீழே இறங்குகிறோம். நேராக நாங்கள் சென்றது கடற்கரைக்குத்தான்.

பார்த்த மாத்திரத்தில் பேரப் பிள்ளைகள் கன்றுக் குட்டிகளாகிவிட்டார்கள். என் மனைவியும் மகளும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். மருமகர் ஒரு சறுக்குப் பலகையை வாங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பயிற்சியாளரையும் ஏற்பாடு செய்துகொண்டு கடற்கரைக்கு விரைகிறார். நான் தனியாக நிக்கிறேன். இதற்குப் பெயர் முதுமையா? இயலாமையா? பக்குவமா? அல்லது இதைவிட வேறெதிலோ ஆர்வமா? என்று புரியவில்லை. எனக்கு இப்போதெல்லாம் தனிமைதான் பிடிக்கிறது. அது வலிக்கவில்லை. வல்லமை தருகிறது. அந்தக் கடற்கரையில் மணலின் மையப் பகுதியில் சிம்மாசனம் மாதிரி ஒரு சாய்வு நாற்காலி. அப்படியே படுத்திருந்தால் ஒரு கதைக்கான கருவோடுதான் எழுந்திருப்பேன். அந்த நாற்காலி ஏன் காலியாக இருக்கிறது. பக்கத்தில் கூட யாரையுமே காணோம். அந்த நாற்காலியில் நான் போய் அமர்ந்தேன். பூமிப்பந்தின் வெளியே நின்று பூமியைப் பார்ப்பதுபோன்று உணர்கிறேன். வெயிலே தெரியாத கடற்காற்று. கண்களுக்கு  ஒத்தடம் தரும் காட்சிகள். ஒரு 70 வயது இந்தோனேஷியப் பெண் ஓடி வந்தார் .நெற்றி தரையைத் தொடும் அளவுக்கு வளைந்து வணக்கம் சொன்னார். அந்த நாற்காலியில் அமர ஒரு மணிநேரத்துக்கு 70000 என்றார். நமக்கு 7 வெள்ளி. நியாயமான விலைதான். சரி என்றேன் ஒரு லட்சம் கொடுத்தேன். மீண்டும் நெற்றியால் மண்ணைத் தொட்டுவிட்டு அந்தப் பெண் சென்றுவிட்டார்.  ஒரு மணிநேரம் கழித்துத்தான் அந்தப் பெண்ணை இனிமேல் பார்க்கமுடியும். என்னைக் கடந்து சென்ற சிக்கன உடைப் பெண்களை நானும்தான் கவனிக்கிறேன். சிக்கனத்திலும் சிக்கனத்தை ஏற்படுத்திக்கொண்டு சிலர் சூரியக் குளியல் செய்து கொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கும் பார்க்கப்படுவதற்குமே அவர்கள் வருகிறார்களா? தெரியவில்லை. ஆனால் யாரும் யாரையும் உற்றுப் பார்க்காத நாகரிகம். நீலவானத்தை ஒரு நோக்கமின்றி பார்ப்பதுபோல் தான் பார்க்கிறார்கள். பார்த்துக் கொண்டே நகர்கிறார்கள். அதுவே அங்கு எழுதப்படாத சட்டமாகத் தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு பேரை இந்த ஊர் கவர்ந்திருக்குமா? அந்த ஒழுக்கத்தை அந்த மக்கள் போற்றுகிறார்கள். மணி ஓடிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்துகொண்டே இருப்பது? 40 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்திருந்தால் அதோ அந்த ஆழத்தில் நீந்துகிறாரே அவரையும் தாண்டி நான் நீந்திக் கொண்டிருப்பேன். இப்போது அப்படி இல்லாதது வலிக்கவில்லை. அந்த நாட்களை நினைத்துப் பார்ப்பது சுகமாக இருக்கிறது. அது போதும். இப்போது எனக்கு அதெல்லாம் தேடவில்லை. கால்களை நனைக்க, அந்த அலைகள் கக்கும் நுரைகளை கையால் அள்ள எழுந்தேன். நடக்கிறேன். எங்கே நிற்கலாம் என்ற நோக்கமே இல்லாமல் நடக்கிறேன். ஓரிடத்தில் நிற்கிறேன்.

எனக்குப் பின்னால் 20 அடி தூரத்தில் 2 வயதுக் குழந்தை  நீச்சல் உடையில் தனியாக மண்ணில் ஏதோ பந்தை உருட்டி விளையாடுகிறது. தாளம் போடுகிறது. எனக்கு முன்னால் இருபது அடி தூரத்தில் முழங்கால் ஆழத்தில் ஒரு பெண் உட்கார்ந்தும் எழுந்தும் உடம்பை நனைக்கிறார். அந்தப் பெண்ணின் பார்வை அந்தக் குழந்தை மீதே இருக்கிறது. இடுப்புப் பகுதியை மறைத்து கௌரவமான நீச்சல் உடையில் இருந்தார் அந்தப் பெண். இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று அங்கேயே வசித்துக் கொண்டிருக்க வேண்டும். இவர்களை இப்படி விட்டுவிட்டு கணவர் எங்கே போயிருப்பார்? சம்மந்தமே இல்லாத சங்கதிகளை நினைத்தும் பேசியுமே பழக்கப்பட்டு விட்டோம். வலுக்கட்டாயமாக அந்த எண்ணங்களை உதறிவிட்டு நான் நானாக நிற்கிறேன். அந்தப் பெண்ணின் மீது என் பார்வை தாவினாலும் அந்தப் பெண் தவறாக நினைக்க என் தோற்றம் இடம் கொடுக்காது என்று எனக்குத் தெரியும். எந்த அலையும் என் கால்களைத் தொடவே இல்லை. ஒரு அலை என் கால் விரல்களைத் தொட்டுவிட்டுத் திரும்பியது. அடுத்த அலையை நான் கவனிப்பதற்குள் என்னை நெருங்கி முழங்கால் வரை நனைத்துவிட்டு என்னைத் தாண்டி விரைந்து அந்தக் குழந்தையையும் தாண்டி திரும்பும்போது அந்தக் குழந்தையையும் உருட்டிக் கொண்டே திரும்பியது.  உருண்ட குழந்தை என் கால்களில் தேங்கிக் கொள்ள அடுத்த விநாடி அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டேன். விழிகளை அகல விரித்து மலங்க மலங்க என்னைப் பார்த்த அதே நொடியில் அந்தப் பெண் வந்து அந்தக் குழந்தையை என் கைகளிலிருந்து அள்ளிக்கொண்டு அணைத்து மீண்டும் முகத்தைப் பார்த்து மீண்டும் அணைத்து என்னை அன்னாந்து பார்த்தார். தண்ணீரில் அழுதாலும் கண்ணீர் தெரிந்தது. ‘ரொம்ப நன்றியய்யா. இந்தக் குழந்தைக்கு ஒன்றெனறால் நானும் இங்கேயே செத்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை அய்யா.’ என்றார். ‘ஏனம்மா அப்படிச் சொல்கிறீர்கள்? அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது’ என்றேன். அந்தப் பெண் அதோடு போய்விடுவார் என்று நினைத்தேன்.

அவர் தொடர்ந்தார். ‘அய்யா. என் கணவர் ஒரு கார் விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார். என் கணவரின் தூரத்து உறவினர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். என் உறவினர்களும் அதையே சொல்கிறார்கள். ஏற்றுக் கொண்டால் என் குழந்தையின் எதிர்காலம்? என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அய்யா.ஒரு மாற்றத்திற்காக தீடீரென்று தனியாகப் புறப்பட்டு வந்துவிட்டேன்.’ பல பழைய தமிழ்ப் படங்களில் கேட்ட வசனங்கள். என் கண்முன்னே உண்மையாகவே நடந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் இந்தப் பெண் என்னிடம் ஏன் சொல்ல வேண்டும். எனக்குக் காரணம் விளங்கியது. வெளியே கொட்டும் அளவுக்கு துக்கம் கழுத்துவரை இருக்கிறது. சொல்ல ஒரு ஆள் வேண்டும். நான் ஏதாவது சமாதானம் சொல்லலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்தது நான்தான் என்ற நன்றியில் என்னை அவர் குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர் சொல்கிறார் என்று நான் நினைக்கவேண்டும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் ஏதாவது சொல்ல வேண்டும். அந்தப் பெண் ஒர் வட இந்தியப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் பேசும் ஆங்கிலத்தில் ஹிந்தி கசிந்த்து. நான் சொன்னேன். ‘உங்கள் குழந்தை உங்கள் மூலமாக இந்த உலகத்துக்கு வந்திருக்கிறதம்மா. உங்கள் குழந்தையே ஆனாலும் அது உங்கள் சொத்தல்ல. இறைவனின் சொத்து அம்மா. இந்தக் குழந்தையைப் பாதுகாப்பது இறைவனின் பொறுப்பம்மா. எந்த நாட்டிலிருந்தோ வந்திருக்கும் உங்கள் குழந்தையை சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும் என்னால் பாலியில் காப்பாற்றப்டுகிறது என்றால், இந்த முடிச்சு யார் போட்டது? எப்போது போட்டது? ஏன் போடப்பட்டது.? திருமணத்தை ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் பாதுகாப்பு உங்களுக்கு முக்கியம். உங்கள் குழந்தை. அது கடவுளின் சொத்து. அதைப் பாதுகாக்க அவருக்குத் தெரியும். இப்போது பாதுகாக்கவில்லையா? எதிர்காலத்தில் மிகப் பெரிய நிலைக்கு உங்கள் குழந்தை வருவாரம்மா’ என்றேன். 5 மாதங்களுக்குப் பிறகு முகம் தெரியாத ஒரு மனிதர் வாயிலிருந்து வரும் நல்ல செய்தி எனக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறதய்யா. தயவுசெய்து உங்கள் மின்னஞ்சல் தாருங்களய்யா. உங்கள் வார்த்தைகள் என் வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறதய்யா.’ நல்ல வேளை. என் பெயர் அட்டைகளில் சில என்னிடம் இருந்த்து. அவரிடம் கொடுத்தேன். ஈரம் படாமல் அந்த அட்டையை மிக மரியாதையுடன் வாங்கிக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறார். அதே சமயம் தூரத்தில் என் மனைவியும் மகளும் பேரப்பிள்ளைகளும் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணிடம் நான் பேசிக் கொண்டிருந்த்தை அவர்கள் கவனிக்கவில்லை என்றே நினைக்கிறேன். கவனித்திருந்தால் என் மனைவி இந்நேரம் என்னைக் குடைந்திருப்பார். அவர் ஒன்றுமே கேட்கவில்லை. நானும் அவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை.

எங்கள் பாலி பயணம் முடிந்தது. நாங்கள் சிங்கை திரும்பிவிட்டோம். என் மகளும் அமெரிக்கா திரும்பிவிட்டார். எங்களின் நடப்பு வாழ்க்கை ஒரு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது. இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. என் கைப்பேசியில் ஒரு மின்னஞ்சல் வந்து ‘என்னைப் படி’ என்றது. உடனே திறந்தேன். தலைப்பாக எழுதியிருந்தது. ‘பாலியின் நினைவில்’ மறந்தே போய்விட்ட அந்த பாலி சம்பவம் யாரிடமும் சொல்லாத அந்த சம்பவம். ஆம் அந்தப் பெண்ணிடமிருந்துதான். ஆச்சரியமாக இருந்தது. பயணத்தில் ஏற்பட்ட நட்புபோல் அது முடிந்துவிட்டது என்று எண்ணியிருந்த எனக்கு லேசான மின்னதிர்ச்சி. எழுத்துக்களைப் பெரிதாக்கி படிக்கத் தொடங்குகிறேன். ‘என் குழந்தை என் மூலம் வந்ததுதான். ஆனால் என்னுடையதல்ல. அது கடவுளின் குழந்தை. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். என்னை விரும்பிய என் கணவரின் தூரத்து உறவினரோடு  எனக்கு திருமணம் நடந்துவிட்டதய்யா. இன்று காலை அவர் எனக்குச் சொன்ன வார்த்தைகளை உங்களுக்கு உடனே சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். அவர் சொன்னார். ‘இந்தக் குழந்தை மட்டும்தான் நம் குழந்தை. நாம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். இதில் நாம் உறுதியாக இருப்போம்.’ உங்களின் வார்த்தைகளைச் சுமந்தபடி வந்திருக்கும் இந்த வார்த்தைகள் மட்டுமே போதுமய்யா. என் வாழ்க்கையைச் சுமக்க. அய்யா நான் வணங்கும் கடவுள் உங்களுக்கு  நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும் தர பிரார்த்திக்கிறேன் அய்யா. தங்களின் உண்மையுள்ள, சர்மிளா தேவ்.

 

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationநாணம்கவிதைகள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *