அரசனுக்காக ஆடுதல்

author
5
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 7 in the series 17 ஜூன் 2018

ஜானகி ஸிங்ரோ


சந்தூர் கிராமத்து மக்கள் அவர்களது முஸல் என்னும் இசை நடனத்தை பார்க்க, எங்களை அழைத்திருந்தார்கள். நாங்கள் வரலாற்றாய்வாளர்கள், நாடோடிக்கதைகளை சேகரிப்பவர்கள், மானுடவியலாய்வாளர்கள் என்று சிறு குழுமம். சந்தூர் கிராமத்தின் மக்கள் அறுவடையன்று இந்த முஸல் நடனத்தை ஆடுகிறார்கள். முஸல் என்பது கதிரடிக்கும் குச்சி. சந்தூர் என்பது கோவாவின் புராதனமான தலைநகரம்.

மேற்குதொடர்ச்சி மலைகளுக்கும் அரபுக்கடலுக்கும் இடையே இருக்கும் சிறு கோவா மாநிலத்துக்கு என்று தனி வரலாறு உண்டு. 1500 வருடங்கள் தொடர்ச்சியாக போஜர்கள், மௌரியர்கள், சாலுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், சிலஹராக்கள், கடம்பர்கள், யாதவர்கள், பாஹாமானிகள், விஜயநகர அரசு, ஆதில்ஷா போன்றவர்களுக்கு கப்பம் கட்டிவந்த சிறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த இந்த கோவா நிலம், போர்ச்சுகீஸியர்களால், 1510இல் காலனியாக்கப்பட்டது. இந்த மாநிலமும், மக்களும் உலகத்தின் பல்வேறு பாகத்திலிருந்து வந்தவர்களால் பாதிக்கப்பட்டு தனி ஒரு அடையாளத்தை கொண்டிருக்கிறது. இதன் அனைத்து ஆட்சியாளர்களும், இதன் மீது தனது சமூக, கலாச்சார அடையாளத்தை செலுத்தியிருக்கிறார்கள். சந்தூரின் மக்கள் தங்களது இறந்து போன அரசருக்காக, வரலாறும் தொன்மமும் கலந்த ஒரு நினைவை இந்த நடனத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள்.

இரவு இருட்டாக இருட்டாக, வயதான கிராமத்தலைவர் (காவோங்கர் என்று அழைக்கப்படுகிறார்) போர்ச்சுகீஸிய ஹசியண்டாவிலிருந்து இறங்கி வந்து அந்த கூட்டத்திடம் பேசினார். அவர் கூறியதை கூறுகிறேன்.
இந்த முஸல் நடன பாரம்பரியம் சுமார் 11ஆம் நூற்றாண்டில் துவங்கியது. இந்த கிராமம் 7ஆவது 8ஆவது நூற்றாண்டிலிருந்து சந்திரபூர் என்று அழைக்கப்பட்டு வந்தது. சந்திரேஸ்வர் பூத்நாத் என்பதே இந்த நகரத்தின் தலையாய தெய்வம். இந்த கிராமத்தின் மக்களே இந்த நடனத்தை ஆட தகுதி பெற்றவர்கள். ஆனால், நாளாக நாளாக இந்த நடனத்தை ஆடக்கூடிய , நடனம் தெரிந்த ஆட்கள் வெகுவாக குறைந்துவிட்டார்கள். தற்போது வெறும் 10 ஆண்களே இருக்கிறார்கள். “வெகுவிரைவில் இந்த நடனம் ஆடப்படாமலேயே போய்விடும்” என்று கனத்த குரலில் கூறினார்.

முஸ்லீம் ஆக்கிரமிப்பின்பொது, இந்த சந்திரநாத் கோவில் இடிக்கப்பட்டது. ஒரு சில தூண்கள் தவிர ஒன்றையும் ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுவைக்கவில்லை. போர்ச்சுகீஸியர்கள் இங்கே ஆக்கிரமிக்க வந்தபோது அதே கோவிலை முழுக்க முழுக்க இடித்து அதே இடத்தில் ஒரு சர்ச்சை கட்டினார்கள். அதன் மூலம் அந்த இடத்தில் எந்த விதமான இந்து அடையாளமும் கலாச்சாரமும் இல்லாமல் துடைத்தெறிந்தார்கள். சந்திரபூர் என்ற பெயரை சந்தோர் என்று மாற்றி, அங்கேயிருந்த அனைத்து இந்துக்களையும் கிறிஸ்துவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்தார்கள். மதம் மாற்றத்திலிருந்து தப்பிக்க பல இந்துக்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். போர்ச்சுகீஸியர்கள் முஸல் நடனம் உட்பட எல்லா இந்து கலாச்சார முறைகளையும் தடைசெய்தார்கள். இந்த நடனத்தை ஆடும் இந்துவையோ அல்லது வேறு எந்த இந்து சடங்குகளை செய்யும் இந்துவையோ பார்த்தால், அந்த இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இருப்பினும் இந்த பாரம்பரியம் ரகசியமாக காப்பாற்றப்பட்டது.

போர்ச்சுகீஸியர்கள் சந்திரபூரை ஆக்கிரமித்தபோது கடம்ப வமிசத்தின் அரசரே அந்த நாட்டின் அரசராக இருந்தார். சந்திரபூரின் மக்கள் தங்கள் அரசரை போர்ச்சுகீஸியருடனான போரில் காப்பாற்றவில்லை. அதனால் போர்ச்சுகீஸியர்களால் அரசர் கொல்லப்பட்டார். தங்கள் நிலத்தையும் அரசரையும் காப்பாற்றாத குடிமக்கள் மீது கடும் கோபம் கொண்ட அரசி தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அதற்கு முன்னால், அந்த கிராமத்தினரையும் சபித்துவிட்டே தற்கொலை செய்துகொண்டார். “இந்த கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும் விதவையாக ஆவாள்” என்று தன்னுடைய காலால் கோவிலுக்கு எதிரே இருந்த கல்லை உதைத்து சபித்தார். அவரது கால் பதிந்த அந்த கல் இன்னும் இருக்கிறது. அரசியின் சாபம் தெரிந்த பக்கத்து ஊர் மக்கள் சந்திரபூரில் வாழும் ஆண்களுக்கு பெண் கொடுக்க விரும்பவில்லை. அந்த சந்திரபூரின் மக்களும் கஷ்டப்பட்டார்கள்.

இந்த கதையை அந்த கிராமத்து தலைவர் சொல்லி முடித்ததும், பத்து ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி, குர்த்தா, பட்கா (தலை அணி) அணிந்து, தங்கள் கைகளில் முஸலை எடுத்துகொண்டு தங்களது மொழியான கொங்கணியில் பாட ஆரம்பித்தார்கள்.

ஹரி ஹரோச்சோ, கேல் கெலாய்டா
கேல் துர்காபயர் ஷிவோ தித்தா

இந்த ஆரம்ப வரிகள் விஜயநகரின் அரசர் ஹரிஹர் அவர்களது பொற்காலத்தை விதந்தோதியும், அவரது பிரம்மாண்டமான கோட்டையை புகழ்ந்தும், எவ்வாறு இறுதியில் அந்த கோட்டை கைப்பற்றப்பட்டது என்பதையும் பாடலாக விவரித்தார்கள். இறுதியில் சந்திரபூர் முற்றுமாக அழிக்கப்பட்டதையும், அதன் மக்கள் கொல்லப்பட்டதையும் விவரித்தார்கள். பல நூற்றாண்டுகளாக சந்திரபூரின் மக்கள் இந்த துக்கமான வரலாற்றை மறக்கக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு அறுவடைக்காலத்தின்போதும், இந்த துக்கவரலாற்றை நினைவு கூர்ந்து, தாங்கள் காப்பாற்றாத மன்னருக்காக நடனம் ஆடுகிறார்கள்

Story collected by : Janaki Sincro
Location : Goa
Image courtesy and copyright: Sharvani
http://talkingmyths.com/dancing-for-the-king/

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 10- கோஹட்டோ(Taboo)
author

Similar Posts

5 Comments

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *