மாலை – குறும்கதை

This entry is part 3 of 6 in the series 20 அக்டோபர் 2019

மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் மல்லிகாவும் முதன்முறை தரிசனத்திற்காக வருகின்றார்கள். அம்மனுக்கு எத்தனை கோபுரங்கள். அவர்களை வசதியாக கோபுர வாசலுக்கு அண்மையில் இறக்கிவிட்டு, “நீங்கள் உள்ளே போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான் காரை எங்காவது ஓரிடத்தில் நிற்பாட்டிவிட்டு இந்த இடத்தில் வந்து நிற்கின்றேன்” சாரதி சொல்லிக்கொண்டே காரை வசதியாக நிறுத்துவதற்கான இடம் தேடிப் புறப்பட்டான்.

ஒரே சனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ஆரவாரமாகத் தெரிந்தார்கள். கோவிலுக்கு எந்தப் பக்கத்தால் போவது? கோபுரம் இருந்த திசை நோக்கி ஆனந்தனும் மல்லிகாவும் நடந்தார்கள்

”அம்மா… ஒரு முழம் பூ வாங்கிக்கோம்மா… உங்களுக்கு நல்ல அழகாக இருக்கும்” சொல்லிய திசை நோக்கித் திரும்பிப் பார்த்தாள் மல்லிகா. பத்து வயது மதிக்கக்கூடிய சிறுபெண்.

அப்படியே உருக்கி வார்த்த அம்மன் விக்கிரகம் போல அழகாக இருந்தாள். மல்லிகாவின் மனம் ஏக்கம் கொண்டது. ஒரு பிள்ளைக்காக எத்தனை வருடங்கள் காத்திருக்கின்றாள். எத்தனை கோவில்கள் ஏறி இறங்கிவிட்டாள். தமக்கான குறையினை அம்மனிடம் முறையிட வந்தவர்களல்லவா அவர்கள்.

பள்ளிக்குப் போகாமல் மாலை விற்பதற்கு அவளின் வறுமை தான் காரணம் என்பதை அவள் தோற்றம் சொல்லியது. கோவில் சூழல் என்பதால், குளித்து மங்களகரமாக கந்தையானாலும் கசக்கிக் கட்டி நிற்கும் அவளின் நெற்றியில் விபூதி சந்தணம். மனதில் அவளுக்கு ஆபரணங்கள் அணிந்து அழகு பார்த்தாள் மல்லிகா. தேவதைதான் அவள். அவளை நெருங்கினாள்.

”ஒரு முழம் என்ன விலை?”

“நூறு ரூபா தாங்க”

அவளிடமிருந்து ஒரு மாலையை வாங்கிச் செருகியவாறு கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அவள் மல்லிகாவை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் ஏதோ தொக்கி நின்றது.

“அம்மா…. இன்னும் ஒரு மாலைதான் இருக்கு. அம்மனுக்குப் போட வாங்கிக்கோம்மா… இதையும் வித்துப்புட்டேன்னா நான் பள்ளிக்குப் போயிடுவேன்”

மல்லிகா அவளைச் சுற்றி வட்டமிட்டாள். ஆனந்தன் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தான். மாலையை வாங்கியபடியே, “பிள்ளைக்கு என்ன பெயர்?” மல்லிகா கேட்டாள்.

“அஞ்சலி”

அஞ்சலி – அம்மனின் பெயரல்லவா! மல்லிகா வியந்தாள்.

“சரி… பின்புறம் திரும்பிக்கோ..”

அஞ்சலி தயங்கியபடியே இருவரையும் பேந்தப் பேந்த முழித்தாள். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“திரும்பிக்கோம்மா…” திரும்பவும் மல்லிகா சொன்னாள்.

அவள் மெதுவாகத் திரும்பி மல்லிகாவுடன் ஒட்டி நின்றாள். ஒரு பிள்ளையின் நெருக்கத்தை மல்லிகா உணர்ந்தாள். அவளின் தலையில், ஒரு அம்மாவின் கரிசனையுடன் அந்த மாலையைச் சூட்டினாள்.

“அப்ப சாமிக்கு?” சிறுபெண் கேட்டாள்.

“நீதானடி என்ரை அம்மன்” மல்லிகாவின் கண்களில் இருந்து தாரையாக நீர் வழிந்தது. அஞ்சலியின் கண்களில் இருந்தும்.

Series Navigationமீப்புனைவாளன்ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்-இலக்கிய இலக்கணங்கள்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

3 Comments

Leave a Reply to நலவேந்தன் அருச்சுணன் வேலு Cancel reply

Your email address will not be published. Required fields are marked *