பாவேந்தரின் கவிதைகளில் உயிரி நேயம்

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 7 of 19 in the series 1 நவம்பர் 2020

முனைவர் த. அமுதா
கௌரவ விரிவுரையாளர்
தமிழ்த்துறை
முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி)
வேலூர் – 2

damudha1976@gmail.com

முன்னுரை
சமூகத்தில் நிலவும் அவலங்களை அப்படியே படம்பிடித்துப் பாடுவதும் கவிதைதான். இருக்கும் இழிநிலை இல்லாமல் போவதற்குச் சரியான தீர்வுரைத்தும் மக்களைத் தட்;டியெழுப்பிப் பாடுவதும் கவிதைதான். கவிதை கவிஞனின் உள்ளத்திலிருந்து தன்னுணர்ச்சி வெளிப்பாடாக வரலாம். அவன் சார்ந்த சூழலின் தாக்கத்தால் வரலாம். நல்லன போற்றியும் அல்லன தூற்றியும் சமுதாயச் சிக்கல்களின் படப்பிடிப்பாகவும் மலரலாம். பொதுமக்களுடைய உள்ளங்களைக் கவர்ந்து அவர்களுடைய உணர்வுகளைத் தட்டி எழுப்பி அநீதிகளை இனங்கண்டு அவற்றை நீக்கும் வழிகளைக் காட்டிப் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லதாக இருப்பது கவிதை.
மானுடத்தின் பெருமையையும் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடும் கருத்துக்களையும் மொழி நலம், இன நலம், பெண்மை நலம், உழைப்பாளர் நலம், உலக நலம், அனைவருடைய வாழ்க்கை நலன்களையும்; இம்மண் மீது மலர்ந்திட ஓயாமல் பாடிய புதுவைக் குயில் பாவேந்தர் ஆவார்.


வல்லமை மானிடத் தன்மை
மானிடத்தைப் போற்ற மறுப்பவன் தனக்கே பகைவன் ஆகிவிடுகிறான். வாழ்க்கையில் மானுடநேயத்தோடு இருப்பதுதான் வலிமையிலும் சிறந்த வலிமை என்கிறார் பாவேந்தர்.
‘மானிடம் போற்ற மறுக்கும் – ஒரு
மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்” என்றும்
‘…………………………………… வாழ்வின்
வல்லமை மானிடத்தன்மை என்றே தேர்”1
என்றும் அறிவுறுத்துகிறார் புரட்சிப் பாவலர்.
குட்டக் குட்டக் குனிந்தே பழக்கப்பட்ட மனிதர்களுக்கு விழிப்பூட்டி அறிவுகொழுத்த எண்ணுகிறார் கவிஞர். பிறருக்கு அடிமைப்பட்டு மீள வழி அறியாமல் நெஞ்சம் குமையும் மாந்தர்களைப் பற்றியே ஓயாது சிந்திக்கும் கவிஞர், அழகின் சிரிப்பில் குன்றத்தைப் பாடும் போது,
‘ஆனைகள் முதலைக் கூட்டம்
ஆயிரம் கருங்கு ரங்கு
வானிலே காட்டி வந்த
வண்முகில் ஒன்று கூடிப்
பானையில் ஊற்று கின்ற
பதநீர்போல் குன்றில் மொய்க்கப்
போனது அடிமை நெஞ்சம்
புகைதல்போல் தோன்றும் குன்றம்”2
எனப் பாடுகிறார். குன்றைத் தழுவும் மேகங்களின் கூட்டம் அடிமை நெஞ்சு புகைவதாகத் தெரிகிறது அவருக்கு. கூட்டினிலிருந்து விடுவிக்கப்பட்ட புறாக்கள் எங்கு சுற்றினாலும் மீண்டும் அதே கூட்டுக்கே திரும்புவது கவிஞருக்குக் கொத்தடிமைகளை நினைவூட்டுகிறது.
‘கூட்டமாய்ப் பறந்து போகும்
சுழற்றிய கூர்வாள் போலே
கூட்டினில் அடையும் வந்தே
கொத்தடி மைகள் போலே”3
எனப் பாடுகிறார்.
மானிட சமுத்திரம்
இனத்தால் வேறுபட்டு மனிதர்கள் மேல்கீழ் என மடமையால் பிரிவுபட்டு நிற்பது பாவேந்தருக்கு உடன்பாடில்லாத ஒன்று. அப்படிப் பேதங்களைப் பேணிக் கொண்டிருந்தால் மானுடம், மனிதன் என்ற சொற்களே பொருளிழந்து போகாதா என வினவுகிறார்.


‘வேற்றுமைக்குக் காரணங்கள் இனங்கள் தாமா?
வேற்றுமைக்குக் காரணங்கள் இவைதாம் என்றால்
போற்றுகிற மானுடமும் மனிதன் என்னும்
பொருள்மொழிகள் பொருளற்றுப் போய்விடாதா?”4
வீதிகள் இடையில் உள்ள திரைகளை விலக்கி, வீடுகளுக்கு இடையே உள்ள சுவர்களை இடித்து, நாடுகளை இணைத்து மேலே மேலே வானை இடிக்கும் மலை மேல் ஏறித் தன் உடன்வாழ் மானிடப் பரப்பைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளச் சொல்கிறார் பாவேந்தர். அந்த மானுட சமுத்திரத்தில் கலந்து கரைந்துவிட்டால் உடைமை பொதுவாகும்;; உலகம் ஒன்றாகும்;; நன்றாகும் எனக் கனவு காணும் பாவேந்தர்,
‘அறிவை விரிவு செய் அகண்டம் ஆக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்துகொள் உன்னைச் சங்கமம் ஆக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு”5
என மானுடநேயம் ஆடிப் பெருக்காய்ப் பெருகிவரப் பாடித் திளைக்கிறார். உள்ளதைப் பேசு; ஒற்றுமை வெல்லும்; சமமே அனைவரும் என இளையோர் ஆத்திச்சூடியிலும் இன்பம் முகிழ்க்க இசைக்கிறார்.


உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேசுபவர்கள் அறிவின் நினைவை இழந்தவர்கள்; எப்பொருளும் அறியாமலும் உணராமலும் உளறிக் கொண்டிருக்கும் பித்தர்கள் அவர்கள் என இகழ்கிறார்.


பொதுமைச் சமுதாய விழைவு
பாவேந்தர் காண விரும்பிய பொதுமைச் சமுதாயத்தில் போர் இல்லை; தனியுடைமைக் கொடுமைகள் இல்லை; சாதிமதச் சழக்குகள் இல்லை; ஆணும் பெண்ணும் சமம்; பெண்டிரும் கல்வியில் மேம்பட்டவர்களாகத் திகழ்வர்; தாய்மொழி தமிழ் ஏற்றம் பெற்றிருக்கும்; எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையிருக்கும்.
‘பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்”6
எனச் சூளுரைக்கிறார்.
பாவேந்தர் ஏழை, பணக்காரர் இருவருக்கும் இலக்கணம் வரையறை செய்து
‘தன்பொருட்டு வாழ்வானோர் ஏழை – மக்கள்
தம்பொருட்டு வாழ்வானோர் செல்வன்”7
எனத் திட்டவட்டமாகப் பகுக்கிறார்.
‘பிறருக்காக வாழ்பவர்களே உயிர் உள்ள மனிதர்கள். மற்றவர்கள் எல்லாம் செத்தவரே” என்று விவேகானந்தர் கூறியது இங்கு நோக்கத்தக்கது.
‘எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நாள்எனக்குத் திருநாள் ஆகும்
பனையளவு நலமேனும் தன்ன லத்தைப்
பார்ப்பானோர் மக்களிலே பதடி என்பான்”8
என்ற பாடலில் தன்னலம் கொண்டவரைப் பதடி எனச் சாடுவதிலிருந்து பாவேந்தரின் அறச்சினம் தெளிவாகத் தெரிகிறது. பாண்டியன் பரிசு எனும் காப்பியத்தில் வீரப்பன் எனும் கதைமாந்தன் வழியாகத், தான் கட்டமைக்க விரும்பும் பொதுமைச் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.


பெண்மையை உயர்வு செய்தல்
புதுமைப் பெண்ணுக்கு இலக்கணம் காட்டிய பாரதியாருக்குப் பின் மிக வலுவாகப் பெண்ணடிமையை எதிர்த்தும் பெண் கல்வியைச் சிறப்பித்தும் பாடியவர் பாவேந்தர். ஆதிகாலச் சமூகத்தில் தாய்தான் முதன்மை பெற்றிருந்தாள். கூட்டுக் கணங்களாகச் சேர்ந்து உணவுக்கும் உறையுளுக்கும் உடைக்கும் போராடி வாழ்ந்த போது தாயே வழிகாட்டியாக இருந்தாள். வேட்டைக்குச் செல்லும் போதும் தாயே தலைமை தாங்கிச் சென்றாள்.


ஆளுமைக்கான போட்டியில் ஆண் வென்றதிலிருந்து பெண் ஓர் உடைமைப் பொருளாகவும் அடிமையாகவும் ஆக்கப்பட்டாள் என்பர். குடும்ப அமைப்பு தோன்றியபின் அக்கருத்து வலுப்பெற்றது. கணவன் என்ன சொன்னாலும் மறுதலிக்காமல் கேட்டுப் பணியவும், என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு செல்லவும் பெண் பணிக்கப்பட்டாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு வேலிகள் பாடவேறுபாடாக மாறிப் பாவையரை அடிமை கொள்ளத் தொடங்கியது. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் எனப் பலமொழிகள் பழமொழி வடிவத்தில் அவளுடைய சிறைக் கூடத்தை வலுப்படுத்தின. உண்பதற்குக் கூடக் கட்டுப்பாடு வைத்துப் பெண்டிர்க்கழகு உண்டி சுருக்குதல் என அறிவுறுத்தப்பட்டாள். பெண்ணுரிமைக்காகப் பாரதியார், பெரியார், பாரதிதாசன், திரு.வி.க எனப் பெரிய பட்டாளமே குரல் கொடுக்கத் தொடங்கியது.
பெண்ணடிமை தீராவிட்டால் மண்ணடிமை தீராது. பெண்ணடிமை நிலவும் சமூத்தில் ஆணுக்கும் உயர்வில்லை. மண்ணை விட இழிவாகப் பெண்ணை எண்ணுவது நயன்மையாகுமா எனக் கேட்கின்றார் பாரதிதாசன் ‘சஞ்சீவிபர்வதத்தின் சாரல்’ நாயகி வஞ்சியின் மூலமாக.


‘பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?
மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு”9
என்கிறார்.
காலங்காலமாகப் பெண்களுக்குக் கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. சங்க காலத்தில் 47 பெண்பாற் புலவர்கள் இருந்ததாக அறிகிறோம். காலத்தின் கோலத்தால் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற ஆண் ஆளுமைச் சிந்தனை வலுப்பெற்றது. பெண்கள் கல்வி கற்றால்தான் வாழையடி வாழையாக வரும் சமுதாயம் வளமாக இருக்கும் என்பதனை வலியுறுத்த வந்த பாவேந்தர்,
‘கல்வி யில்லாத பெண்கள்
களர்நிலம் அங்கே புல் விளைந்திடலாம் – நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை”10
எனத் தெளிவாக்கினார்.

‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாட   
 சாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை”11

எனப் பெண் குழந்தையைப் பள்ளிக்குச் செல்லப் பாடும் கவிஞர்
பெண் கல்வியில்தான் உலக முன்னேற்றமே அடங்கியிருக்கிறது என்பதை உறுதி செய்கிறார் பாவேந்தர்.
‘கலையினில் வளர்ந்தும் நாட்டுக்
கவிதை யில்மி குந்தும்
நிலவிடும் நிலாமு கத்து
நீலப்பூ விழிமங் கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்தே
தம்வீடு போதல் கண்டேன்
உலவிடு மடமைப் பேயின்
உடம்பின்தோல் உரிதல் கண்டேன்”12
பெண்கள் கற்றால்தான் மடைமைப் பேய் ஒழியும் எனத் திட்டவட்டமாகப் பாடுகிறார்.


சாதிமத எதிர்ப்பு
மூடத்தனத்தின் முடைநாற்றத்தை எல்லாக் கவிஞர்களும் காலங்காலமாகச் சாடிக் கொண்டிருக்கிறார்கள். வேதங்களும் சாத்திரங்களும் நான்கு வருண அமைப்பைச் சொல்லி மக்களுக்குள் ஏற்றத்தாழ்வை விதைத்திருந்தன.
‘சாதியின் தோற்றமானது வருண அமைப்பிற்குட்பட்டது. அதன்படி பிரமனின் வாய், கை, தொடை, காலடி ஆகிய பகுதிகளிலிருந்து முறையே பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் தோன்றினர் என ரிக் வேதம் கூறுகிறது. மனுதர்மமும் அதையே கூறுகிறது. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் வருணம் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறுகிறது”13 என்று பக்தவச்சல பாரதி கூறுவது நோக்கத் தக்கது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என வள்ளுவர் பிறப்பிலே வேறுபாடுகள் இல்லை என்பதை நிறுவினார்.
‘தீண்டும் மக்களின் அன்னை
தீண்டாரையும் பெற்றாளோ?
ஈண்டிதை யார் நம்புவார்?”14
எனச் சாதிமதங்களுக்குச் சாட்டையடி கொடுத்துத் துரத்தப் பாடுகிறார் கவிஞர்.
‘அறம் பொருள் இன்பம் எய்துதல் வாழ்க்கை
அடிமைமதம் சாதி ஏற்பதுன் தாழ்க்கை”15
எனச் சாதிமத நம்பிக்கை தாழ்ச்சிக்கே இட்டுச் செல்லும் என எச்சரிக்கிறார்.


முடிவுரை
பாவேந்தரின் மொழியுணர்வு, உழைப்பாளர்க்கு இரங்கும் உள்ளம், கைம்பெண் துயர் களையப் பாடும் கவிதைகள் முதலியன விளக்கப்பட்டுள்ளன. பாரதிதாசனின் பொதுவுடைமைச் சிந்தனை, இயற்கையைப் பாடும் போதும் வெளிப்படும் மனிதம்சார் நேயம் முதலியன பாவேந்தர் பாடல்களில் காணப்படுகிறது. இந்த உலகம் உழைப்பவர்க்கே உரியது; மாந்தர்தம் அனைவரும் ஒற்றுமையாய் வாழவேண்டும்; மேல்கீழ் என்ற பேதங்கள் கூடாது; பெண்கள் கல்வியில் சிறந்து மேம்படவேண்டும்; கைம்பெண் துயர் ஒழிய வேண்டும்; அவர்களுக்கு மறுமணம் செய்யப்பட வேண்டும் போன்ற மனிதநேயக் கருத்துகள் வலியுறுத்துகிறார் பாவேந்தார்.
அடிக்குறிப்புகள்

  1. பாரதிதாசன் கவிதைகள், ப.106
  2. பாரதிதாசன் அழகின் சிரிப்பு, பக் 12- 13
  3. மேலது, ப.30
  4. பாரதிதாசன் வேங்கையே எழுக, ப. 99
  5. பாரதிதாசன் கவிதைகள், ப. 108
  6. மேலது, ப.112
  7. மேலது,ப. 61
  8. பாரதிதாசன், பாண்டியன் பரிசு, ப. 54
  9. பாரதிதாசன், கவிதைகள் ப. 18
  10. பாரதிதாசன், குடும்ப விளக்கு, ப. 69
  11. பாரதிதாசன் இசையமுது, ப.28
  12. பாரதிதாசன், அழகின் சிரிப்பு, ப.40
  13. பக்தவத்சல பாரதி, மனுடவியல் கோட்டுபாடுகள், ப. 326
  14. பாரதிதாசன், கவிதைகள், ப. 308
  15. பாரதிதாசன், தேனருவி, ப. 25

பயன்பட்ட நூல்கள்

டாக்டர் தொ.பரமசிவன் பாரதிதாசன் கவிதைகள்
நியூ செஞ்சுரி புக் பிரைவேட் விமிடெட்
41– பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
ஆம்பத்தூர், சென்னை – 600 098
ஏழாம் பதிப்பு ஆகஸ்ட் 2006

தமிழண்ணல் தமிழ் இலக்கிய வரலாறு
மீனாட்சி புத்தகம் நிலையம்
மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு,
மதுரை – 625 001
இருபத்து இரண்டாம் பதிப்பு மே, 2006

Series Navigationபயணக் குறிப்புகள் – காசி , சாரநாத்திருமாலை இயற்கையாய் கண்ட கோதையார்
author

Similar Posts

Comments

Leave a Reply to Dr P.K. Govindaraj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *