ஜென் ஒரு புரிதல் 11

This entry is part 8 of 37 in the series 18 செப்டம்பர் 2011

மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது கட்டுரைகளுள் ஒன்றில் சாவு வீட்டில் அழுகிறவர்கள் எல்லோருமே தமது மரணத்தை எண்ணியே அழுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சென்னையில் மின்சார மயானத்தில் ஒரு உறவினரின் ஈமைக் கிரியைகளுக்கெனச் சென்றிருந்த போது எரிக்கும் மின் எந்திரத்தின் முன் உடல்கள் வரிசையில் இருப்பதைக் காண நேர்ந்தது. நாம் ஒருவரின் வாழ்நாட்களில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ளுபவற்றில் பலவற்றின் முழு விவரங்களைக் கேட்டு அறிவதில்லை. அவர் நம்மிடம் உதவி கேட்கப் போவதில்லை என்று தெரிந்த பிறகே நிம்மதியாகப் பேசத் துவங்குகிறோம். அவரின் மரணத்தின் போது துக்கம் பாராட்டுவது பண்பு தான் எனினும் அது செயற்கையான ஒரு சம்பிரதாயத்துக்கென செய்வதாகவே அமைகிறது. எனவே ஜெயகாந்தன் சொன்னது சரியே.

பௌத்தம் சம்பந்தப்பட்ட ஒரு கதை உண்டு. புத்தரின் புகழ் பரவிக் கொண்டிருந்த காலத்தில் அவர் பல ஊர்களுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு ஊரில் ஒரு தாயின் சிறு வயது மகன் மரணமடைந்து விட்டான். புத்தர் அவனை உயிர் பிழைப்பிக்கக் கூடும் என்று ஒருவர் குறிப்பிட அந்தத் தாயும் புத்தரை அணுகினாள். புத்தரிடம் அந்தத் தாய் தனது துக்கத்தில் நீண்ட நேரம் அழுது புலம்பி இறைஞ்சிய படியே இருந்தாள். புத்தர் ஆழ்ந்த இரக்கத்துடன் அவளைப் பார்த்தபடி மௌனமாகவே இருந்தார். அவளுக்கு பதில் சொல்ல அவர் விரும்பவில்லை என எண்ணிய சீடர்கள் அவளை வெளியே போகும் படி சொல்ல அவர்களைக் கையமர்த்திய புத்தர் “ஒரு பிடி எள் வேண்டும்” என்றார். “ஐயா. உடனே கொண்டு வருகிறேன்” என்றாள். “நீ அந்த எள்ளை மரணமே நிகழாத குடும்பத்திலிருந்து வாங்கி வர வேண்டும்” என்றார். பல மணி நேரம் அலைந்து திரிந்த அந்தப் பெண் அப்படி ஒரு குடும்பமே இல்லை என்றே அறிந்தாள். புத்தரின் எதிரே வந்து அமைதியாக அமர்ந்தவள் எதுவும் பேசவே இல்லை. ” இது தாங்க இயலாத துக்கமே எனக்குப் புரிகிறது. ஆனால் இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதே. உன் கடமைகளைத் தொடர்ந்து செய்” என்று அனுப்பி வைத்தார்.

மரணம் நமக்கு இரண்டு விஷயங்களை சற்று வலிக்கும் படி புரிய வைக்கிறது. ஒன்று மனித வாழ்க்கையின் நிலையின்மை. மற்றொன்று நம் பற்றுகள் தற்காலிகமானவை. மாறிக்கொண்டே இருப்பவை. இடையறாத ஒரு மாயைக்குள் நம்மை ஆழ்த்துபவை. ஆனால் சற்று நேரத்திலேயே மரணம் தந்த பாடம் நமக்கு மறந்து விடுகிறது.

பற்றுகள் நமது பார்வையைக் குறுக்கி விடுகின்றன. பற்றுகளின் எண்ணிக்கையும் இறுக்கமும் அதிகரிக்க அதிகரிக்க நம்
சமநிலை கெடுகிறது. நாம் பற்றியது நம் கை நழுவிப் போய்விடக் கூடாதே என்னும் பதட்டம் அதிகரிக்கிறது. அந்தப் பதட்டமே நாம் பற்றிய உறவுகளுக்கோ சொத்து அல்லது புகழுக்கோ காவலாகத் தாறுமாறாக ஏதேதோ செய்ய வைக்கிறது. இது என்னுடையது என்னும் இறுமாப்பின் இருளிலேயே இருக்க நேரிடுகிறது. உறவுகள் நம்மை நிராகரிக்கும் போது, பொருளை நாம் இழக்கும் போது, புகழ் காலப் போக்கில் மறையும் போது இவை நிலையற்றவை என்னும் விவேகம் மிகுவதில்லை. ஒரு வலியும் துக்கமுமே மிகுகிறது.

அவ்வாறெனில் பந்த பாசங்களே கூடாதா? பொருளிலாருக்கு இவ்வுகில்லை என்றதும் தோன்றிற் புகழொடு தோன்றுக என்றதும் பொய்யா? இல்லை. இது என்னுடையது என்னும் பற்றும் இது நிலைக்கும் என்னும் மயக்கமுமே நம்மை முடக்கிப் போடுகின்றன. பற்றில்லாத பாசம், பற்றில்லாத பொருள், புகழ் நமது காலுக்கு விலங்காக அமையாமல் நம்மை விவேகம் நோக்கி நகர அனுமதிக்கின்றன. ஜென் பதிவுகளில் பற்று விடல் குறித்த தீர்க்கமான செய்தியைக் காண இயலும்.

ஒன்பதாம் நூற்றாண்டின் “பொ சூ ஐ” கவிதைகளை வாசிக்கும் போது அவர் புத்த பிட்சு அல்லர் குடும்ப வாழ்க்கையில் இருந்தவர் என்று தெரிகிறது:

வசந்தகாலப் பனி
——————-

ஒரு பனிக் கிரீடத்தை நான் அணிந்திருக்கிறேன்
காலத்தின் பரிகாசத்துக்குரிய சரிவாய்

முற்றத்தில் படலமாய் பனி
வசந்தத்தின் பளபளக்கும் சுவாசம்

நலங்குன்றிப் படுத்துவிட்டேன்
என் மனைவி மூலிகைத் தேடலில்

குளிரில் உறைந்த என் தலையைச் சீவ
பணிப்பெண்ணுக்காகக் காத்திருக்கிறேன்

உடலே இல்லையேல் புகழால் பயனுண்டா?
உலக வாழ்வுக்கான பொருட்களை
நான் ஒதுக்கி விட்டேன்

சலனமற்ற என் மனதின் முனைப்பு
யாருமற்ற படகிடமிருந்து கற்றுக் கொள்வது

லியூட் (வயலினை விட சற்றே பெரிய இசைக் கருவி)
———————————————————–

எனது ‘லியூட்’ டை சிறிய மேசை மீது
வைத்து விட்டேன்

உணர்வுகளை அசை போட்டு
நான் தியானத்திலிருக்கிறேன்

நான் அதை மீட்டி சுண்டி
இசைக்காத காரணம்?

தென்றல் அதன் தந்திகள்
மீது
லியூட் தானே தன்னை
வாசித்துக் கொள்கிறது

மூங்கில் விடுதியில்
———————-
ஒரு மாலையில் பைன் மரங்களின்
அரவணைப்பில்
இரவில் மூங்கில் விடுதியில்

போதை தரும்
தெள்ளத் தெளிவான வானம்
ஆழ்ந்த தியானத்தில்
மலைப்புரத்து வீட்டிற்குப் போனது போல்

புத்திசாலிகள் அசடுகளை விஞ்ச இயலாது
விரைபவர் மௌனிகளுடன் பொருந்தார்
மெய்வருத்தாமை! (உன்னால் பாதை அமைக்க இயலாது)
அதுவேதான்!
விந்தையின் தலைவாயில்!

யாருமற்ற படகிலிருந்து கற்றுக் கொள்வது என்னும் பதிவு மிகவும் ஆழ்ந்த பொருளுள்ளது. வாழ்க்கைப் பயணத்தில் மனம் பல பயணிகளை ஏற்றிக் கொள்கிறது. இறக்கி விடுகிறது. காற்றின் திசையில் கரை சேருகிறது. அல்லது படகோட்டியின் நோக்கப்படி. யாருமற்று அது காலியாக நிற்கும் போது தான் பயணிகளும் பயணங்களும் இல்லாத ஒரு இருப்பு அதற்கு உண்டு என்பது தெளிவாகிறது. பயணிகள் மீதோ திசைகள் மீதோ இலக்குகள் மீதோ எந்தத் தேர்வும் படகுக்குச் சாத்தியமில்லை. எனவே காலியாய் கரையிலிருப்பதும் நகர்வதும் சுமப்பதும் இவை எல்லாமே ஒன்று தான். பயணிகள் மீதோ திசைகள் மீதோ இலக்குகள் மீதோ பற்றுக்கொள்ள் என்ன இருக்கிறது?

ஜென் பற்றிய புரிதலுக்கு இன்னும் நிறையவே இருக்கிறது. மேலும் வாசிப்போம்.

Series Navigationபேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்அகஒட்டு( நாவல்)விமர்சனம்
author

சத்யானந்தன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    Kavya says:

    //அது செயற்கையான ஒரு சம்பிரதாயத்துக்கென செய்வதாகவே அமைகிறது. எனவே ஜெயகாந்தன் சொன்னது சரியே//

    மேலோட்டமான பார்வை. உங்கள் சிறுவயது மகளையோ, மகனையோ இழந்துவிட்டீர்கள். நீங்கள் என்ன சம்பிராதயத்துக்கு அழுவீர்களா ? உங்கள் மனைவி தீடீரென மரணிக்க நீங்களும் உங்கள் குழந்தைகளும் சம்பிரதாயத்துக்கு அழுவீர்களா ? தாய் குழந்தைகளைத் தவிக்க விட்டு காலமாகும்போது அக்குழந்தைகள் சம்பிராதயத்துக்கு அழுவார்களா ?

    எழுத்தாளன் முற்றும் தெரிந்த ஞானி. அவனை நம்பி உங்கள் வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்களாகவே நேரில் பார்த்து எடுத்துக்கொள்ளவும். ஜெயகாந்தன் மனித உணர்வுகளை சிறுமைப்படுத்தும் எழுத்தாளர் என்பதற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் உண்டு.

  2. Avatar
    vivek says:

    காவ்யா,
    //அது செயற்கையான ஒரு சம்பிரதாயத்துக்கென செய்வதாகவே அமைகிறது. எனவே ஜெயகாந்தன் சொன்னது சரியே//
    ஜெயகாந்தன் மீதான விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் இந்த வரிகளின் உள்ளார்ந்த பொருளினைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். வேறு ஒருவருடைய மரண வீட்டில் துக்கம் விசாரிக்கச் செல்லும் இடத்தில், எம்மையறியாது எமக்கு நிகழ்ந்த இழப்பின் துயரம் நம்மை அழவைக்கிறது.

  3. Avatar
    vivek says:

    சத்யானந்தனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள், பலகாலமாக ஜென் தத்துவம் குறித்து அடிமனதில் உறைந்துபோயிருந்த தேடலை மீள உசுப்பி விட்டமைக்காக மற்றும் தமிழில் ஜென் குறித்து எளிமையான விளக்கம் தரும் ஆக்கத்திற்காக

  4. Avatar
    Sathyanandhan says:

    The irony is our indifference to all the aspirations, rights and living conditions of people when they are alive. Only someone’s death upsets us! If I have the maturity to console someone when he or she loses such a close relative what do i mean? Instead should i tell him you dont accept this? If anything is due from one human to another it is all during when they live only. Not disproportionately when he is no more. regards. sathyanandhan

  5. Avatar
    sathyanandhan says:

    Thanks Vivek . After searching for over a decade I found there are not many books on Zen and the few lacked depth. So I looked for original works and found them in web. i am actually besides translating reading them along with others in Thinnai. I am only writing the thoughts provoked in me when I read them. I am not assuming any pedestal while doing so. We all are seekers. Regards

  6. Avatar
    காவ்யா says:

    துக்கம் யார் வீட்டில்? மரணித்தவர் யார் ? என்பதைப் பொறுத்தே துக்கனிகழ்வில் கலந்து கொண்டவர் உணர்வுகள் ஆராயப்படும். ஜெயகாந்தன் – யாரோ ஒருவர், அதாவது நம் அலுவலகத்தில் உடன் பணிபுரிந்தோரின் உறவு, அல்லது நம் வீதியில் ஒருவர் வீட்டில் – என்றிருந்தால் மட்டுமே நம் உணர்வுகள் ஜெயகாந்தன் சொல்லியபடி அமையும். மற்றபடி நம் உடன் பிறந்தோரின் அகால மரணம், தாய், தந்தையர் என்று பல வகை மரணங்கள் நம்மை தாக்கும்போது, அதில் நாம் வெறும் சடங்காக கலந்து கொள்வதில்லை. அந்த இழப்பு ஒரு பேரிடியாக அமைந்து அதிலிருந்து மீள நாட்களாகும்; அல்லது ஆண்டுகளாகலாம். பலர் மீள்வதேயில்லை. வாணாள் முழக்க அச்சுமையுடனே வாழ்வார்கள். இவர்களின் துக்கங்களை “அது செயற்கையான ஒரு சம்பிரதாயத்துக்கென செய்வதாகவே அமைகிறது” என்று சிறுமைப்படுத்தல் பண்பாடற்றச்செயல். ஜெயகாந்தனின் சொற்கள் அதைச்செய்கின்றன. அதேவேளையில் அவை, எவரோ நம்முடன் நேரடியாக வாழ்வில் பங்குபெறாதவர் மரணமெனில் அங்கு நான் போய்த்தான் ஆகவேண்டுமென வரின், சரியே.

    சத்தியானந்தனின் ஆங்கிலம் எனக்குப்புரியவில்லை. தமிழில் எழுதினால் தெளிவாக இருக்கும்.

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *