This entry is part 6 of 8 in the series 24 மே 2026

பாலமுருகன்.லோ

இருண்ட அறையில் ஹரி நின்றிருந்தான். அறை முழுவதும் கருமை படர்ந்திருந்தது; அதே கருமை அவன் மனதிலும் பரவியிருந்தது. கண்கள் இருந்தும், மனக்கண் மட்டும் இருண்டுபோயிருந்தது.

அந்த அறையில் அவன் மட்டும் இல்லை. அவனது மனைவியும் குழந்தைகளும் அவனுடன் அதே இருளில் தவித்துக்கொண்டிருந்தனர். பூனை தன் குட்டிகளை இருளில் காத்துக்கொள்வது போல, அவளும் தன் குழந்தைகளைத் தழுவிக்கொண்டு வாழ்க்கையைத் தாங்கி வந்தாள்.

யார் யாரைத் தற்காத்துக்கொள்வது? யார் யாரை இருளிலிருந்து வெளியே கொண்டுவருவது? பூனையும் குட்டிகளும் அந்த அறையில் மாட்டிக்கொண்டது போல, ஹரியும் தன் எண்ணங்களுக்குள் மாட்டிக்கொண்டிருந்தான். வாழ்க்கை என்னும் படகில் துடுப்பு சரியாக விழாதவன் போல, அவன் குடும்பத்தோடு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தான். அவன் வெளிச்சத்தை அடைவானா?

பழக்கமான பத்து அடி × பத்து அடி அறையேயானாலும், இருள் சூழ்ந்தவுடன் அதே அறை அவனைப் பீதியடையச் செய்தது.

“இதிலிருந்து எப்போது மீள்வேன்?” என்ற ஒரே சிந்தனை அவனைப் பிடித்துக்கொண்டது.

எல்லாம் நல்லபடியே போய்க்கொண்டிருந்த வாழ்க்கை. யார் கண் பட்டதோ தெரியவில்லை. நாளுக்கு நாள் சண்டையும் சச்சரவும் பெருகினால், இந்த வீட்டில் எப்படி வாழ்வது? பேசாமல் இந்த வீட்டையும் இந்த வாழ்க்கையையும் விட்டுவிட்டு, கண்ணுக்குத் தெரியாத இடத்திற்குப் போய்விட்டால் நிம்மதி கிடைக்குமா? ஒரு சாமியார் போல, அல்லது ஒரு பரதேசி போல—“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்று இருந்துவிட்டால் என்ன?

மௌனம் கனக்க, அவன் எண்ணங்கள் திசை தெரியாத காட்டில் ஓடும் காலடிகளைப் போலச் சுழன்றன. அறையின் ஓர் மூலையில் தட்டுத்தடுமாறி அமர்ந்தவன், தலையை முழங்கால்களில் சாய்த்துக் கொண்டு கண்களை மூடினான்.

“நாம்தான் தவறு செய்துவிட்டோமோ?” என்ற குற்ற உணர்வு அவன் உள்ளத்தை நசுக்கியது. மைத்திலியை அவள் விருப்பப்படி படிக்க வைத்தது குற்றமா?

“வீட்டிலேயே உட்கார்ந்திருக்காதே; ஏதாவதொரு வேலை தேடிக்கொள். பெண் என்பவள் தன் காலில் நிற்க வேண்டும்” என்று அடிக்கடி சொல்லி, அவளுக்குள் ஒரு உந்துதலைத் தந்தது தவறா? சரிதானே செய்திருக்கிறேன்.

அன்றொரு நாள் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, கண்கள் இரண்டுமே ஒரு கணம் இருண்டன—திறந்த நிலையிலேயே. எண்ணம் எங்கோ நிலைக்குத்தி நின்றது. செய்துகொண்டிருந்த வேலை அப்படியே நின்றுபோனது.

ஒருபக்கம் “நான் இப்படி இருக்கக்கூடாது” என்று உணரும் தருணம்; மறுகணமே மனச் சஞ்சலத்தில் மூழ்கும். இந்த இரண்டிற்கிடையில் சிக்கி, ஒரு அழுத்தம் அவனைப் பற்றிக்கொண்டது.

நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டே இருந்தது சண்டையும் சச்சரவும். பல நாள் இருளில் தவிக்கும் ஒருவன் வெளிச்சத்திற்குத் துடிப்பானே—அப்படியே அவன் மனமும் துடித்தது. இந்த நிலை ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்ல; பல வருடங்களாக அவன் மனதில் எழுந்து மறைந்து கொண்டே இருந்தது.

அன்றொரு நாள் மாலை, ஹரி தன் அறையில் அமர்ந்திருந்த சமயம், அறையில் மட்டும் ஒரு வித அமைதி. தொலைக்காட்சி ஓடுகிறதென்றால் அங்குப் பெரியவள் இருப்பாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஏதோ பாடல் நிகழ்ச்சி இருக்கலாம்; ஆனாலும் அந்தத் திசையை நோக்கவோ, அதை ரசிக்கவோ அவன் மனம் விரும்பவில்லை.

அறைக்குள் ஹரி மடிக்கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்—கண்கள் திரையில், விரல்கள் விசைப்பலகையில். அதே மேசையின் இன்னொரு முனையில், அப்பாவிடமிருந்து வாங்கிய மடிக்கணினியுடன் சின்னவள் அமர்ந்திருந்தாள். அவள் “சும்மா ஒரு ரவுண்டு” என்று தொடங்கிய விளையாட்டு அரைமணிநேரமாக நீண்டுகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் மைத்திலி ஹரியின் அறைக்குள் வந்தாள்.

“இங்கதானே இவ்வளவு நேரமா இருந்தீங்க… இவ என்ன பண்றான்னு பார்க்கத் தோணுச்சா?”

“அவ வீடியோ கேம்ஸ்தான் விளையாடுறா. அதுக்கு முன்னாடி படிப்பு சம்பந்தமா பார்த்துட்டிருந்தா. இப்ப அரைமணி நேரமாத்தான். இப்ப என்ன?”

சின்னவள் கண் இமைக்காம—அப்பா, அம்மாவின் முகங்களை மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தாள்.

மைத்திலியின் குரல் உயர்ந்தது.

“நீங்க கொடுக்கிற செல்லம்தான் அவளை அப்படி பண்ண வைக்குது. படிக்கிறாளா, விளையாடுறாளான்னுக்கூட உங்களால கவனிக்க முடியல.”

“கொஞ்ச நேரம் ஃபிரியாக இருக்கட்டும். சும்மா அவ பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்க முடியுமா? இதுல என்னை ஏன் இழுக்கிற?”

“இப்படியே விட்டா சரிப்படாது. முதல்ல உங்க கம்ப்யூட்டரை அவகிட்ட கொடுக்கிறதை நிறுத்துங்க.”

சின்னவள் திடுக்கிட்டு கண்களைத் தரையை நோக்கினாள். விசைப்பலகையில் இருந்த விரல்கள் உறைந்துவிட்டன. திரையில் ஓடிக்கொண்டிருந்த விளையாட்டு ஒரு கணத்தில் நின்றது. அவள் பேசவில்லை; ஆனால் முகத்தில் சிறு குற்ற உணர்வு தெரிந்தது. மெதுவாக மடிக்கணினியை மூட முயன்றாள்.

அவள் மூட முயன்றபோது, ஹரிக்கு அதை “பார்க்க” முடியவில்லை. பார்த்துக்கொண்டிருந்தும் அவன் கவனம் எங்கோ விழுந்து கிடந்தது.

“நான் பாட்டுக்கு சிவனேன்னுதான் இந்த அறையில இருக்கேன். என் வேலை உண்டு; நான் உண்டு.”

“அப்புறம் இவ ஏன் உங்க பக்கத்துல வந்து உட்காருறா?”

“ஏன், அவ என் பக்கத்துல உட்காரக் கூடாதா?”

மைத்திலி சற்றுத் தள்ளி நின்று சொன்னாள்:

“இப்படியே விட்டா அவளும் உங்க மாதிரி தனி அறைக்குள்ள அடைஞ்சுக்கிட்டா என்ன பண்ணுவீங்க? டிவி சத்தத்தை நீங்க எப்பவும் அதிகமாவே வைக்கிறீங்க. குறைக்கச் சொன்னாலும் கேக்கறதில்லை. அதான் நான் டிவி பார்க்கிறதையே குறைச்சுக்கிட்டேன்.”

“அப்ப நீங்க பெரியவள்கிட்ட பேச வேண்டியதுதானே.”

“என்ன சொன்ன? பெரியவள்கிட்ட பேசணுமா? நான் அவகிட்ட ஏதாவது கேட்டா போதும்—நீ வரிந்துகட்டி வந்துடுவ. அப்புறம் நான் என்ன பேசுறது?”

ஹரி சற்றுப் பொறுமையிழந்தான்.

“நான் ஒண்ணு கேட்கிறேன். எப்பவும் அவ பண்றது எல்லாமே நியாயம்னு சொல்லறியே… இந்தச் சின்னவ பண்றதை மட்டும் ஏன் குற்றமா பார்க்கிற?”

மைத்திலி கண்களை இறுக்கினாள்.

“உனக்குத் தெரியுதா? வீட்டுல பாதி நாள் சண்டை இவங்கள வச்சுத்தான். நாந்தான் ஒதுங்கி, அமைதியா, பேசாம இருக்கேன். ஆனா நீ தினம் என்னை வம்புக்கு இழுக்கிற.”

“சரி, இதுக்கு பதில் சொல்லுங்க. எதுக்கு என்னைக் கட்டினீங்க… அப்புறம் இந்த ரெண்டையும் பெத்தீங்க? இப்படி தினமும் பேசாம—நீங்க ஒரு பக்கம், அவங்க ஒரு பக்கம்—இருக்கறதுக்கு எதுக்கு இந்த வாழ்க்கை?”

“உங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன்… உங்க மனசுல என்ன இருக்கோ தெரியல. என் மனசுல இந்த ரெண்டு இல்லன்னா நான் எப்பவோ தனியா போயிருப்பேன். இதுங்க மூஞ்சியைப் பார்த்ததுமே அந்தக் கோபம் காணாமப் போயிடுது.”

ஹரி மெதுவாகச் சொன்னான்:

“யார் மேல கோபம்? என்மேலதானே! என்னைக்காவது நினைச்சுப் பார்த்தியா, ஏன் நாம் கோபப்படறோம்னு? பழசை நினைவுபடுத்தவா? நான் உன்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தப்ப, எவ்வளவு சம்பளம் இருந்ததுன்னு உனக்குத் தெரியும். ஒரே ஒருத்தர் சம்பாத்தியம்தான். சமூகம் கொடுக்கும் அழுத்தம், மற்றவங்களை மாதிரி நாமளும் வாழணும்னு நமக்கு நாமே போட்டுக்கிற சூடு, இதெல்லாம் சேர்ந்து என்னை அவ்வப்போது ஒரு கோபக்காரனா மாத்தியதுன்னு சொல்லலாம். தவறு என்மேல்தான், எனக்குப் புரியுது. ஆனா, என்ன செய்யச் சொல்ற? நம்ம கையில காசு இல்லாதப்ப, நம்மையும் அறியாமல் வெளிப்படுற கோபம்தான் அது. இதையேதான், நீ ‘இந்த ஆளு இப்படித்தான்’ என்று முழுவதுமா உன் மனசுல யூகம் செஞ்சு வச்சிருக்க.

அப்ப நீ வேலைக்குப் போகல. ஆனா, இப்ப நீ வேலைக்குப் போற. உன் உள்மனம் என்ன சொல்லுது? ‘நீ உன் கால்ல நிக்கிற, நீ யாரையும் நம்பி இல்லை’ என்ற உள்ளுணர்வு உன்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பதால், ஒரு தற்காப்புக்காக நான் எதைச் சொன்னாலும் தப்பா அர்த்தம் செஞ்சுகிட்டு, அதுக்கு வாக்குவாதம் செய்யுற. நான் செஞ்ச அதே தப்பைத்தான் நீ இப்ப செய்யுற, அது புரியுதா உனக்கு?

நான் பேசாமல் போனதற்குக் காரணம் கோபம் அல்ல; பயம். வீட்டில் இருப்பதற்கான ஒவ்வொரு மணிநேரமும் என்னை நானே கட்டுப்படுத்த வேண்டிய பதற்றம். ‘எங்க எதாவது சண்டை சச்சரவு வந்துடுமோ’ என்ற எண்ணம். அதனால்தான் நான் தனிமையைத் தேர்ந்தெடுத்தேன்.

இன்னும் பிள்ளைகள் நம்முடன் இருக்கப் போவது பத்து ஆண்டுகள் மட்டுமே. அதற்குப் பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தேடிப் போவார்கள். அதற்குள் அவர்களின் மனதில் ‘இவங்க இப்படித்தான்’ என்ற காயமான முடிவு ஏன் உருவாக வேண்டும்? நாம் சண்டை போட்டால் பாதிக்கப்படுவது பிள்ளைகள்தான். அவர்கள் நம்மை பார்த்துத்தான் வளர்கிறார்கள்.”

அவன் குரல் மெதுவாகக் குறைந்தது. இருளில் மாட்டிக்கொண்டு “வெளிச்சத்துக்கு எப்ப வரப்போறோம்?” என்று திணறும் தருணத்தில், சன்னல் பொந்தின் வழியாக புகுந்த ஒரு மெல்லிய ஒளிக்கீற்றைப் போல, ஹரிக்குள் ஒரு சிறிய புரிதல் முளைத்தது.

அதே நேரம், மேசையின் மூலையில் இருந்த சின்னவளின் முகத்தில் தெரிந்த அந்தப் பயம் மைத்திலியின் கண்களில் பட்டது. மைத்திலி பேச வர, வார்த்தைகள் தொண்டையில் சிக்கியது போல நின்றாள்; எச்சிலை விழுங்கிக்கொண்டாள். சொல்ல வந்த வார்த்தைகள் அப்படியே உள்ளே தங்கி விட்டன. அறையைச் சுற்றி ஒரு தடிமனான மௌனம் படர்ந்தது.

மைத்திலி மெதுவாக சின்னவளிடம் சென்றாள். குனிந்து, குரல் மெலிந்து சொன்னாள்:

“வா கண்ணா… நாங்க இருவரும் ஒருத்தரைக் ஒருத்தர் விளையாட்டுக்குத் திட்டிக்கிட்டோம். பயப்படாதே. வா, வெளிய போகலாம்.”

இருளுக்குள் பூனை தன் குட்டிகளை அணைத்துக்கொண்டது போல, மைத்திலியின் அந்த மென்மை சின்னவளைக் காத்தது.

சின்னவள் தயங்கி ஹரியைப் பார்த்தாள்.

ஹரி மெதுவாகச் சிரித்தான்.

சன்னல் வழியே நுழையும் காலை வெளிச்சம்போல், அந்தச் சிரிப்பு அவள் மனதில் ஒரு மெல்லிய ஒளியாய் அமைதியாகப் பரவியது.

Series Navigationபோர்களும் மன்னர்களும் சாமான்ய மக்களும்மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: எட்டு [தொடர்ச்சி]