கைப்பேசி பேசினால்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 35 of 44 in the series 30 அக்டோபர் 2011

”கவியன்பன்” கலாம்

நான் செய்த புரட்சிகள்:
தத்திச் சென்ற
தந்தியை வென்றேன்

குறுஞ்செய்தியால்
குவலயம் ஆள்கின்றேன்

ஆறாம் விரலாய்
ஆட்கொண்டே
ஆட்டுவிக்கின்றேன்

கைக்குள் அடக்கமாய்
ஹைக்கூ கவிதையாய்
“நச்”சென்று பேச வைத்தேன்

ஏபிசிடி தெரியாமலே
ஏடேதும் படிக்காமலே
மிஸ்டு கால்
மெஸேஜ் எல்லாம்
புரிய வைத்தேன்

ஆடம்பரமாய்
ஆரம்பமானேன்
தேவைக்குரியோனாய்த்
தேர்ந்தெடுக்கப்பட்டேன்

உயர்ந்த விலையில்
உடலாம் எனக்கு
குறைந்த விலையில்
உயிராம் “சிம்” அதற்கு

பல்லுப் போனால்
சொல்லுப் போச்சு
சில்லு(சிம்)ப் போனால்
செல்லுப் போச்சு

கையில் வைத்தேன்
உலகை
கைவிரல் பட்டதும்
திறந்து காட்டுவேன்
உலகை

மின்னஞ்சல் கணிப்பொறி
என்னெஞ்சில் அடக்கம்
கணிதப்பொறியின்
வணிகம் எல்லாம்
என்னால் முடக்கம்

நாட்காட்டி கூட
ஆட்காட்டி விரலில்

கைக்கடிகாரம் வாங்காமல்
கைப்பேசியேக் கடிகாரமாய்க்
கைக்குள் அட்க்கினேன்

வானொலியின்
தேனோலியாய்
நானொலிப்பதையே
நானிலமும் நாடும்

இசைகேட்டு
அசைய வைத்தேன்
திசையெட்டும் என்றன்
விசைக்குள்ளே

நான் செய்த வீழ்ச்சிகள்:

புரட்சிகள் வெடிக்கும் அன்று
வெடிக்கும் புரட்சிகள் இன்று
வெடிகுண்டுத் தீவிரவாதிகளின்
மடிகொண்டுத் தங்கினேன்

படிக்கும் மாணவர்களை
பாழாக்கினேன்

இறைதரிசன தளங்களில்
இடையூறு செய்ப்வனானேன்

குறுஞ்செய்திகளால்
குடும்பங்களைப் பிரித்தேன்

அருவருக்கத்தக்க
அனாச்சாரங்களை
விதைத்தேன்
விபச்சாரத்தை
அறுவடை செய்தேன்

மணவிலக்கும் என்னால்
மண்டி விட்டது தன்னால்

மன்னிப்பே இல்லாத
மகா பாவியானேன்

அலைக்கற்றை ஊழல்மீனுக்கு
வலைவீசி ஆசையை நாட்டினேன்
நிலைப்பெற்ற ஆட்சியை ஓட்டினேன்
நிலைகுலைய வைத்துக் காட்டினேன்

காதலர்கட்கு நண்பனானேன்
பெற்றோர்கட்கு எதிரியானேன்
ஆதலினால் என்னை
ஆதரிப்போரும் உண்டு;
ஆத்திரம் கொள்வோரும் உண்டு

Series Navigationபறவைகளின் தீபாவளிஜயமுண்டு பயமில்லை
author

Similar Posts

Comments

  1. Avatar
    சபீர் says:

    நல்லவேளை அலைப்பேசி பேசவில்லை. இனி பேசவேண்டுமெனில் நீங்கள் சொல்லிக்கொடுத்ததையெல்லாம் சேர்த்தே பேசும். முழுமையான குறிப்புகளைக் கவிதை வடிவில் தந்ததோடு, பார்த்துப் பிரயோகிப்பதுதான் அறிவுடைமை எனும் செய்தியையும் தொக்கி வைத்திருப்பது உண்மையிலேயேப் பாராட்டத்தக்கது.

Leave a Reply to சபீர் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *