கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன
குத்தக்க சீர்த்த இடத்து.
நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் பெண்ணின் நிலை சோதனைக் களத்தில் வெந்து கொண்டிருந்தது. பெண் கற்கச் செல்வது கூடப் பிரச்சனை. அவள் பேச்சு, நடை உடை பாவனை எல்லாம் மற்றவர் பரிசோதனைப் பார்வையில் இருந்தன. பணிகளில் இருவிதங்கள்.. ஓரிடத்தில் இருந்து பணி யாற்றுவது ( sedantary ) இன்னொன்று பல இடங்களுக்குச் சென்று பணியாற்றுவது. அதாவது களப்பணி. அதிலும் ஆடவர்களுடன் சேர்ந்து செய்யும் பணி.
முதலில் வம்புக் கணைகள். ஓர் ஆடவன் உதவி செய்தால் அது கரும் புள்ளிக்கு ஆரம்பம். பஸ்கள் இல்லாத கிராமங்கள் தான் நிறைய இருந்தன. தனியாகச் செல்ல முடியாது. வயல் வரப்புகள், தோப்புகள் என்று பல கடந்து செல்ல வேண்டும். உடன் பணியாற்றும் பெண்கள் இருவர். அவர்களுக்கும் ஏதாவது பணிகள் இருக்கும். அது போன்ற தருணங்களில் உடன் வேலை பார்க்கும் ஓர் ஆடவனைத்தான் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். உடனே வம்பு வெடித்துவிடும்
பாருடி, இவன் தான் அவளை வச்சுக்கிட்டிருக்கான்
காதல் கெட்ட வார்த்தை ஆனால் வச்சிக்கிட்டிருக்கான், வப்பாட்டி என்பது வழக்குச் சொற்கள்.
அந்தக் காலத்தில் மட்டுமா இந்த வம்புக் கணைகள் ? !. அரசியலில் இருக்கும் பெண்களை எப்படியெல்லாம் மேடைகளில் அசிங்கப் படுத்தி பேசுகின்றார்கள் ! அதைக் கேட்டு சிரிக்கும் ஆண்களிடம் ஓர் கேள்வி. அவர்களில் எத்தனை பேர்கள் தங்கள் மனைவியைத் தவிர வேறு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்று நினைத்துப் பார்க்கட்டும். . ஒரு பெண் அரசியல் பேசும் பொழுது யாருடைய தனி வாழ்க்கையை விமர்சிக்கின்றார்களா? ஆண்களுக்கு அதிலும் சுவை. ஆண் சகோதரகள் என்னை மன்னிக்கவும். பெறும்பாலானவர்கள் இந்தக் கூட்டத்தில் இருப்பதால் நல்லவர்கள் சிறுபான்மையினராகி விட்டனர்
அந்தக் காலம் செல்வோம்.
பெண் வீடுகள் பார்வையிட வேண்டும். இராட்டை கற்றுக் கொடுக்கச் சென்ற லட்சுமி அந்த வீட்டில் கெடுக்கப்பட்டாள். உடன் வேலை பார்ப்பவனால் கெடுக்கப்பட்டாள் கமலா. தொடர்ந்து பயமுறுத்தப் பட்டாள். ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றுவது இருவருக்கும் புதிய அனுபவம். பழகப் பழக ஈர்ப்பில் தங்களை இழந்தவர்களும் நிறைய. அந்தக் காதல் வாழ முடியவில்லை. காரணம் சாதியும் ஊர் கட்டுப்பாடுகளும். வாடிப்பட்டியில் என்னுடன் வேலை பார்த்த இரு கிராம சேவிக்காக்களுக்கும் காதல் வந்துவிட்டது. வெவ்வேறு சாதிகள். அதிலும் ஒரு பெண் கிறிஸ்தவப் பெண். அவள் காதலில் கலவியும் சேர்ந்தது. அடிக்கடி இருவருக்குள்ளும் சண்டை. அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதாக்க் கூறுவாள்
அக்காலத்தில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் விகிதாச் சாரம் அதிகம். இப்பொழுது ஆண்களும் அந்த பட்டியில் சேர்ந்து விட்டனர்
ஒரு முறை அந்தப் பெண் கோபத்துடன் எழுதித்தந்த கடிதத்தை எங்கோ நழுவ விட்டுவிட்டான். அது இன்னொருவரிடம் கிடைத்து எங்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிடயிடம் கொடுக்கப் பட்டது. அவர் பதறிப் போய் என்னைக் கூப்பிட்டனுப்பினார். அவர் பெயர் முத்துசாமி பிள்ளை. மிகவும் நல்லவர். மிக மிக நல்லவர். என்னைக் கோப்புகள் கொண்டு வரச் சொல்லிக் கூப்பிடும் பொழுது கூட முன்னதாக ஒரு ஆண் குமாஸ்தாவைக் கூட்டி உடன் வைத்துக் கொள்வார். அந்த அளவு ஊர் வம்புக்கு அஞ்சியவர். கிடைத்த கடிதத்தைக் கொடுத்து ஆவன செய்யச் சொன்னார். நான்தான் எல்லாம் சரியாகிவிடும் என்று தைரியம் சொன்னேன். எப்படி அப்படி என்னால் சொல்ல முடிந்தது. கதைகள் படித்துப் படித்து யதார்த்த வாழ்க்கையையும் புரிந்து வைத்திருந்தேன். ஆனால் சோதனை வேறு வடிவில் என் வீட்டு வாசலைத் தட்டியது
காதலர்கள் இருவரும் என் வீட்டிற்கு வந்தனர். வந்தவுடன் வாயில் கதவை மூடினான் பிறகு கோபமாய் என்னைத் திட்ட ஆரம்பித்தான். அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டேனாம். கேவலப் படுத்தி விட்டேனாம். பேசிக் கொண்டு வரும் பொழுதே இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த நெருங்கி விட்டான். ஆனால் உடனே அவன் காதலி குறுக்கே புகுந்து தடுத்துவிட்டாள். இருவரையும் உட்கார வைத்து முதலில் காப்பி குடிக்க வைத்தேன். மனம் விட்டுப் பேசினோம். அவன் வசதி படைத்தவன். அவர்கள் சமுதாயத்தை மீறி எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கேட்டேன். “ஓடிப் போவோம்” என்றான் உடனே அதற்கும் பதில் சொன்னேன். அவளுக்கு இருப்பது அரசு வேலை. ஓடிப்போனால் வாழ்க்கை நடத்த முடியும் எனபதற்கு உத்திரவாதம் கிடையாது. இருக்கும் வேலை போனால் அவள் சாவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடும் என்று சொல்லி அவர்களையே சிந்தித்துப் பார்க்கச் சொன்னேன். காதல் நிறைவேறாது என்று நினைத்து இருவரும் சாகும் முடிவிற்கு வரக் கூடாது என்றேன். ஒரு வேளை தோல்வி கண்டால் காதல் வாழ்க்கைதான் பாதிக்கும், காதல் வாழும் என்று சொல்லி சமாதானப் படுத்தி அனுப்பினேன். ஒரு மாதத்திலேயே அவன் அவன் சாதியில் வேறு பெண்ணை மணந்து கொண்டான். இவள் என்னிடம் ஓடி வந்து அழுதாள் சில நாட்கள் அவளை என்னுடன் வைத்து தேற்றினேன். அவளுக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தேன். அந்த இரு கிராம சேவிக்காகளுக்கும் மணமே ஆகாமல் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர்.
ஊட்டியில் மாவட்ட மகளிர் நல அதிகாரியாகப் பணியாற்றிய பொழுது அங்கும் எங்கள் பணியாளர்களில் ஒருத்தி காதல் வசப்பட்டாள். இருவரும் வேறு சாதிகள். ஒரு நாள் சண்டையில் எதையோ சாப்பிட்டு உடல் நிலை மோசமாகி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். நான் அங்கே சென்று அது போலிஸ் கேசாகி விடாமல் காப்பாற்றினேன். பிழைத்து எழுந்தாள். அவள் பெற்றவனுக்கு என் மேல் கோபம். என் அலுவலகம் வந்தார். வேலை பார்ப்பவர்களைக் கண்டிப்பாக இருந்து நான் கண்காணிக்கவில்லையாம் அவன் பெண்ணின் நிலைக்கு நான்தான் காரணமாம். தொடர்ந்து அவள் யாரையும் காதலிக்காமல் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அவரும் எடுத்து வந்த கத்தியைக் காட்டி பயமுறுத்தினார். பெற்றவர் அவர். அவர்தான் அவளுடன் சேர்ந்து வாழ்கின்றவர். ஆனால் பழி என் மீது போட்டு பயமுறுத்தினார். நிர்வாகத்தில் இது போன்ற சிக்கல்களும் எங்களுக்கு வரும். மேலதிகாரிகளுக்குச் சொல்லி அவளை அவள் சொந்த ஊருக்கு அதாவது வேறு மாவட்டத்திற்கு மாற்றிவிட்டேன்.
எனக்கு மட்டுமlல்ல. பெரும் தலைவர் காமராஜ் அவர்களுக்கும் ஓர் கடமை தேடி வந்தது.
மிக மிகப் பெரிய செல்வந்தர் வீட்டு செல்லப் பெண். அவளுக்கு வெளி உலகமே அவ்வளவாகத் தெரியாது. அந்தக் காலத்திலேயே அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைக்க எண்ணி சென்னையில் ஓர் கல்லூரியில் சேர்த்தார்கள். அவள் தங்க ஓர் வீடும் அமைத்து அங்கும் வேலையாட்கள் இருந்தனர். காதல் நுழையாத இடமுண்டா? அவளும் காதல் வலையில் சிக்கினாள். அவனோ ஓர் கயவன் . அவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் வெளியூருக்கு ஓடிப் போகலாம் என்று சொல்லவும் இந்த அப்பாவிப் பெண்ணும் பின்னால் சென்றது. போனவுடன் தொழில் தொடங்க பணம் வேண்டும் என்று அவன் சொல்லியதால் தன்னிடம் இருக்கும் நகைகள் அத்தனையும் எடுத்துக் கொண்டு சென்றாள். மூன்று நாள் வாழ்க்கை. அவளைக் கெடுத்தான். மூன்றவது நாள் வெளியில் சென்றவன் திரும்பி வரவில்லை. அவள் நகைகளும் காணாமல் போயிருந்தது. எப்படியோ மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.. ஓர் பெண் இப்படி நடுத்தெருவிற்கு வர நேரிட்டால் அவளை அள்ளிக் கொண்டு போக விபச்சார விடுதிகள் தயாராக இருக்கும். இவள் எப்படியோ தப்பி சென்னைக்கு வந்து நேராக காமராஜ் அவர்களிடம் சென்றாள். அவர் அவளுடைய குடும்ப நண்பர். தலைவர் அவளுடைய பெற்றோர்களிடம் பேசிப் பார்த்தார். குலப் பெருமையைக் கெடுத்தவள் அந்த ஊர்ப்பக்கமே வரக் கூடாது என்றும் வந்தால் கொலை செய்யப் படுவாள் என்றும் கூறிவிட்டார் பெற்றவர். தலைவர்தான் பெண்ணுக்குத் தைரியம் கூறி அவளை மகளிர் நலத்துறையில் பணியில் சேர்த்துவிட்டார். அந்தக் காலத்தில் அந்த துறையில் வேலையில் சேர்வது எளிது.
காதலில் பலியாடு பெண்கள்தான். குலப் பெருமை, சாதிக் கட்டுப்பாடு கிராமத்து கட்டுப் பாடுகள்தான் மிகவும் முக்கியம். அங்கு பாசம், பிணைப்பு தோற்றுவிடும்.. இதுதான் அந்தக் கால நிலைமை. சமீபத்தில் கூட பெற்றோரே காதல் திருமணம் செய்து கொண்டவர்களைக் கொல்ல முயன்ற செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. நகர்ப்புரத்தை விட இன்னும் கிராமங்களில் அங்கும் இங்கும் இப்பிரச்சனை இருந்து வருகின்றது.
எனக்கு வந்த சோதனைகளைப் பார்க்கலாம்.
எங்கள் வட்டாரத்தில் நடந்த ஓர் பணியைத் தணிக்கை செய்ய ஓர் பெரிய அதிகாரி சென்னையிலிருந்து வந்திருந்தார். அவர் மதுரையில் தங்கியிருந்தார். பல அலுவல்களுடன் வந்திருந்ததால் அவர் மதுரையில் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். எங்கள் வட்டார அதிகாரியையும் சம்பந்தப்பட்ட அலுவலராகிய என்னையும் மதுரைக்கு கோப்பினை எடுத்து வரச் சொன்னார். நாங்களும் சென்றோம். பெரிய அதிகாரி ஏதேதோ வேலைகளில் மும்முரமாக இருந்தார். எங்களைப் பார்க்க தாமதமாகியது. மதிய உணவு நேரம் வந்துவிட்து. என்னுடைய வட்டார அதிகாரிக்கு வேறு வேலை இருந்ததால் பெரிய அதிகாரியின் உதவியாளரிடம் கூறிவிட்டு என்னை விட்டுச் சென்று விட்டார். மாலை நான்கு மணிக்கு ஒருவர் வந்து எங்கள் கோப்பினைப் பார்த்து குறிப்புகள் எடுத்தார். மணி ஐந்தாகியது. அப்பொழுதும் பெரியவர் வரவில்லை. வேறு ஓரிடத்திற்குச் சென்ற பொழுது அவர் கார் முன் செல்ல பின் காரில் நான் கோப்புடன் சென்றேன். இரவு ஒன்பது மணிக்குத்தான் வேலை முடிந்து விருந்தினர் மாளிகைக்குத் திரும்ப ஆரம்பித்தார். இடையில் நான் போக அனுமதி கேட்டும் அனுமதி கொடுக்கவில்லை. இப்பொழுது கோப்புடன் அவருடன் காரில் ஏறினேன். அவர் “சாரி” என்று மட்டும் சொன்னார். ஒருவழியாக அவர் தங்கும் இடம் வரவும் உடனே என் கோப்பினை வாங்கிப் பார்த்தார். உதவியாளர் எடுத்திருந்த குறிப்புகளையும் படித்தார். ஏதோ எழுதிக் கொண்டார். நான் போகலாமா என்று கேட்ட பொழுது அவர் பார்வையும் சிரிப்பும் சரியில்லை. அப்பொழுதுதான் என் நிலைமை புரிந்தது. அடுத்து நின்று கொண்டிருந்த என் கையைப் பிடித்தார்
இப்பொழுது என்ன செய்வது? கத்துவதா அல்லது ஓங்கி அடிப்பதா? ஒன்றும் புரியவில்லை. அச்சூழ்நிலையில் அறிவு வேலை செய்ய வில்லை. அவர் உருவத்தைப் பார்த்தேன். ஆறு அடி உயரம். உடல் அமைப்பும் முரட்டுத் தோற்றம். அவருடன் போராடினால் தப்பிக்க முடியும் என்று தோன்ற வில்லை. கத்தினால் யாராவது வருவார்கள் என்றும் தெரியவில்லை. அதற்குள் அவர் அடித்தால் மயங்கிவிடுவேன். என்னை அவர் அழித்துவிடுவார். என் வாழ்க்கையில் முதல் முறையாக அச்ச உணர்வு வந்தது. அதுவே கடைசியும் கூட.
சார்
எதிர்பாராத அழைப்பு. அறையின் வாசலில் ஓர் பெண் நின்று கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் முன் அனுமதியின்றி வந்ததைப் பார்த்தால் அது முதல் முறையாகத் தெரியவில்லை. என் அறிவு இப்பொழுது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இவர் ஏற்கனவே ஒருத்தியை வரச் சொல்லி இருக்கின்றார். அதை மறந்து இன்னொருத்தியுடன் உறவாட நினைத்துவிட்டார். வந்தவள் முகத்தில் கோபம். கள்ள உறவிலும் உரிமை யுணர்வு வருமா? அவள் முகத்தைப் பார்த்துவிட்டு இவர் முகம் பார்த்தேன். பெரிய அதிகாரியின் முகத்தில் அசடுவழிந்தது. சீ, இவ்வளவுதானா ஆண்பிள்ளை?! அவள் உரிமையுள்ள பொண்டாட்டியில்லை. சில சமயங்களில் அவளைவிட கள்ள உறவில் பெண்ணுக்கு அதிகாரம் கூடிவிடும் போல இந்த செக்ஸ் உணர்வில் ஆண் மிகுந்த பலத்தை அடைவது போல அடிமட்டத்தில் இறங்குவதும் இயல்பா?
வாழ்வியலில் புதியபக்கம் பார்த்தேன். தவறன உறுவுகளுக்குப் பெண் தயாராக இருப்பதுவும், பெண்ணுக்கு முன் ஆண் கோழையாகி நிற்பதுவும் எனக்குப் புதிய காட்சிகள். சிறு வயது சிந்தனைகள் செம்மைப்பட வைத்த அனுபவம். அச்சத்தை உணர வைத்த அனுபவமும் கூட.
லட்சுமியின் குரல் காதுகளில் ஒலித்தது.
எல்லாரும் கெட்டவங்க இல்லே. ஆனா கெட்டது எப்போ வரும்னு சொல்ல முடியாது. நாம்தான் எப்பவும் ஜாக்கிரதையாக இருக்கணும்.
இன்னொரு அனுபவம்.
வாடிப்பட்டியில் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்தது. ஓர் மைனரின் பார்வை என் மேல் விழுந்தது. ஓர் தோப்பைத் தாண்டி தனியாக வந்து கொண்டிருந்தேன். அந்தத் தோப்பிலேதான் அந்த மைனர் ஓர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருக்கருகில் மூன்று பேர்கள் நின்று கொண்டிருந்தனர். செல்வாக்கு மனிதனின் கொத்தடிமைகள். ஏனோ பெரிய கருப்பன் நினைவு வந்தது.
எஸ்சிவோ அம்மா
ஆம் அது நான் தான் social education organiser இந்த ஆங்கிலத்தின் சுருக்கம் SEO
எல்லோரும் இந்தப் பணிப் பெயரைச் சுருக்கி அத்துடன் அம்மா, அல்லது அக்கா என்று கூப்பிடுவார்கள்.
நான் சென்று வணங்கினேன். அவர் யாரென்று தெரியும் பல முறை பார்த்திருக்கின்றேன். முதலில் வேலை பற்றிப் பேசினார் பின்னால் நடந்த உரையாடல்களை அப்படியே தர விரும்புகின்றேன்
உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு
சந்தோஷம்
என்னக் கல்யாணம் கட்டிக்குங்க
அவரை முறைத்துப் பார்த்தேன்.
ஏன் என்னைப் பிடிக்கல்லியா
எனக்கு யாரையும் பிடிக்காது. முதல்லே கல்யாணமே பிடிக்காது
உங்களைக் கடத்திட்டுப் போய் தாலி கட்டினா என்ன செய்வீங்க
தாலியை அறுத்துப் போடுவேன்.
அவர் முகத்தில் அதிர்ச்சி. பிறகு கோபம்
.அடப்பாவி. கற்புன்னு ஒண்ணு தெரியுமா
கற்பு ஆம்புள்ளங்க உண்டாக்கினது. எனக்கு அதைபத்தி கவலை கிடையாது
அவருக்கு என்ன பேசறதுன்னு தெரியல்லே
நான் போறேன்னு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்
அப்பொழுது என் வயது 23
வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருகின்றதா?அந்தக் காலத்தில் ஒரு பெண் இப்படி பேசியது?
நான் முரட்டுத்தனமாகப் பேசியது சரியல்ல. ஓர் விரோதியைச் சம்பாதித்து விட்டேன். அவனால் எனக்கு எப்பொழுதும் ஆபத்து நேரிடலாம். பேசும் பொழுதும் செயல்படும் பொழுதும் சாமர்த்தியமாக லாகவமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆரம்ப காலங்களில் என்னால் முடியாது. பிடிக்கவில்லை யென்றால் பொங்கி எழுந்துவிடுவேன். 15 வயதில் ஓர் சம்பவம். என் பாட்டியுடன் ஒர் கோயிலுக்குச் சென்றிருந்த நேரம் நவராத்திரி காலம். கூட்டம் அதிகம். அப்பொழுது கூட்டத்தில் வந்த ஒருவன் என்னைக் கட்டிப் பிடித்தான். கூட்டத்தில் இடிப்பதும் உரசுவதும் நடக்கக் கூடியது. இவனோ அப்படியே கையை வளைத்து என்னை அணைத்துவிட்டான். அவ்வளவுதான் நானும் கையை வளைத்து அவனை இறுகப் பிடித்து முதுகில் பல முறை குத்தினேன். அவனோ நழுவி குனிந்து கூட்டத்தில் கலந்து மறைந்து விட்டான். அன்று யாரும் என்னை வீராங்கனையாகப் பார்க்கவில்லை. ஓர் ஆண் பிள்ளையைத் தொட்டு அடித்தது குற்றம். அடக்க மில்லாதவள் என்று கூட்டம் கத்தியது. பாட்டி அழுது கொண்டே என்னை அங்கிருந்து கூட்டி வந்தார்கள்.
இன்னொரு முறை சினிமா பார்க்கச் சென்றிருந்தேன். பின்னால் உட்கார்ந்தவன் என் நாற்காலியில் கால்வைத்து சீண்ட ஆரம்பித்தான் . காலை எடுக்கச் சொல்லி முதலில் சாதாரணமாகச் சொன்னேன். அவன் மீண்டும் காலை வைத்து விளையாடினான். சேப்டி பின் வைத்து குத்தினேன். அப்பொழுது மட்டும் எடுத்தான். பிறகும் காலை வைத்தான். பொறுக்க முடியவில்லை. எழுந்திருந்து பளார் என்று அடித்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து விட்டார்கள். பின்னால் இருந்தவன் எழுந்து போய்விட்டான். இதெல்லாம் என் இளமைக் காலத்தில் நடந்தவைகள்.
மாநில அளவு பெரிய அதிகாரியாக வேலை. சென்னையில் பொருட் காட்சியில் எங்கள் அரங்கு இருந்தது. உலக வங்கித் திட்டத்தால் பல பெண்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கவும் வேலைக்கு வந்திருந்தனர். எங்கள் மந்திரியின் அறிவுரைப்படி அவர்களைப் பொறுப்பில் போட்டிருந்தோம். எல்லோரையும் விட அவர்களின் பாதுகாப்பில் என் கவனம் இருந்தது. அன்று காணும் பொங்கல்.. கூட்டம் நிறைய இருந்தது.
ஒவ்வொரு மாநில வாழ்க்கையை எடுத்துக்காட்ட ஒரு பக்கம் அரங்கம் அமைத்திருந்தோம். அதிலே இரு பொம்மைகள் ஜவுளிக் கடையி லிருந்து வாங்கி வந்து ஒவ்வொரு வாரமும் அந்த மாநிலங்களின் உடை அமைப்பில் அலங்காரம் செய்தோம். அதன் ஒரு பக்கத்தில் ஓர் பெண் ஊழியர் உட்கார்ந்திருந்தார். அந்த இடம் போகும் பாதையின் வளைவில் இருந்தது. சென்றவர்கள் வேண்டுமென்றே இந்தப் பெண்ணை இடித்துக் கொண்டு சென்றனர். அம்மா என்று முணங்கினாள்.. அவளை எழுப்பி விட்டு நான் உட்கார்ந்தேன். என்னை யாரும் இடிக்கவில்லை. மேலே பட்டாலும் பொருட்படுத்த வில்லை
கொஞ்ச நேரத்தில் கூட்டம் அதிகமாகியது 16 வயது பையன் ஒருவன் . கையை நீட்டி பொம்மையின் மார்பகத்தைப் பிடித்தான். அவ்வளவுதான் அவனை ஓங்கி அடித்துவிட்டேன். அவன் அம்மா என்னுடன் சண்டைக்கு வந்தாள்.
உன் புள்ளே பொம்மையைக் கூட விடாமப் புடிக்கிறான். பாத்து வள. .நீ அடிச்சு வளத்திருக்கணும் அப்படி செய்யல்லெ. இப்போ பொம்மைனு கூடப் பாக்காம கெட்டதா நடந்துக்கறான்
நானும் கத்தினேன். உடனே போலிசை வரவழைத்தேன். இனி அவர்கள் இருந்து கூட்டத்தைச் சமாளிக்க வேண்டும் என்றேன். நானும் போக வில்லை. அங்கே இருந்த இளம் பெண்கள் என் பிள்ளைகள். நான் அவர்களின் அம்மா. அவர்களைக் காக்கும் பொறுப்பு என்னுடைய்து. இதுதான் என் குணம.
வாடிப்பட்டியை விட்டு வந்துவிட்டோம். பின்னர் அந்த மைனரால் எனக்குத் தொல்லை ஏற்பட்டதா? “கற்பு” என்ற சொல் இன்னொரு சமயத்தில் என்னுடன் மோதியது. அது என்ன? அவைகளை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.. நான் எழுதிக் கொண்டு வருபவை எதுவும் கதை யல்ல. எல்லாம் நிஜம். களப்பணியில் நான் கடந்து வந்த பொழுது பல சமயங்களீல் தீமிதி சோதனைக்குட்பட்டேன். அடுத்த சந்திப்பில் பேசுவோம்.
“பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும். தக்க காலம் வரும் பொழுதுகொக்கு மீனைக் குத்துவதைப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். எனவே திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறப்பாக உழைக்கவும் தயாராக இருங்கள். ஆனால் காலம் அறிந்து செயல்படுங்கள். அப்படி செயல்படும் பொழுது சந்தேகங்களோ தயக்கமோ வைத்துக் கொள்ளாதீர்கள். உண்மையாக நீங்கள் காலம் அறிந்தவராக இருந்தால் சந்தேகமோ தயக்கமோ வரும் வாய்ப்பில்லை.. காலத்தைத் துணையாகக் கொண்டு செயல்படு பவனுக்கு திருவள்ளுவர் கூறியது போல் முடியாத செயல் என்று ஒன்றுமில்லை? —
“வாழும்கலை”
என் கணேசன்
(பயணம் தொடரும்)
- அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
- முள்வெளி – அத்தியாயம் -3
- சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
- ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்
- தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்
- தங்கம்
- தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு
- கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
- கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்
- சுணக்கம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
- ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
- சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
- பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
- Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து
- சோபனம்
- குதிரை வீரன்
- கடைசித் திருத்தம்
- தூக்கணாங் குருவிகள்…!
- யானைமலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
- அரிமா விருதுகள் 2012
- விளையாட்டு
- புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
- மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
- “சூ ழ ல்”
- வார்த்தைகள்
- ஓ… (TIN Oo) ………….!
- உங்களில் யார் அடுத்த பிரபுதேவா
- அதுவே… போதிமரம்….!
- சவக்குழி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு
- தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
- பழமொழிகளில் கிழவனும் கிழவியும்
- “சமரசம் உலாவும்……..”
- எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7
- Ku.Cinnappa Bharathy Award 2011