வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9

This entry is part 10 of 44 in the series 22 ஏப்ரல் 2012

புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை

வாய்மையால் காணப் படும்

சென்னை வாழ்க்கை ஆறு மாதங்கள்தான். ஆனால் கிடைத்த அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகளைச் சுமந்து வருகின்றன.. 1962 வரை, அதாவது பிள்ளைப் பிராயத்தி லிருந்து கிடைத்த பயிற்சிகள், அனுபவங்கள் எல்லாம் என் வாழ்க்கைப் பயணத்திற்கு அஸ்திவாரம். சென்னையில் வரலாற்று நாயகிகளை நேரில் பார்க்கவும் மகிழ்ந்தேன். பெண்ணின் முன்னேற்றத்திற்குப் பெண்ணின் உழைப்பை நேரில் கண்ட பொழுது வியந்தேன். அவைகளை விளக்கமாகப் பின்னர் கூறுகின்றேன். இப்பொழுது நான் சென்ற பயிற்சி முடியவும் நடந்த ஓர் நிகழ்வுக்கு உங்களை அழைத்துச் செல்லப் போகின்றேன்

பயிற்சி முடிந்தவுடன் நாங்கள் சென்று பணியாற்ற வேண்டிய இடங்கள் உறுதி செய்யப்பட்டு உத்திரவு வடிவில் தயாராகிக் கொண்டிருந்தன.. அப்பொழுது கசிந்த வதந்திகள்தான் எங்களை அச்சத்தில் உலுப்பியது. ஒரு வட்டாரத்தில் பெண்கள் பணியாற்றுவது கடினம். அங்கே பெண்கள் கடத்தப்படுகின்றார்கள், கெடுக்கப்படுகின்றார்கள் என்பதே. இது தெரிந்த பின் யாருக்கு அங்கு போகத் துணிவு வரும். வதந்திக்குத் தீயைவிட பரவும் சக்தி அதிகம்.. எங்களைக் காண எங்கள் இயக்குனர் அவர்கள் வந்தார்கள். அவர்கள் பேசிக் கொண்டு வரும் பொழுதே விமலா எழுந்திருந்தாள். அவளைத்தான் அந்த வட்டரத்திற்கு முக்கிய சேவிக்காவாக உத்திரவாகி யிருந்தது. எழுந்து நின்று தன்னால் அந்த ஊருக்குப் போக முடியாது என்று தைரியமாகச் சொன்னாள். காரணம் கேட்ட பொழுதும் கேள்விப்பட்ட செய்திகளைக் கூறினள். உடனே இயக்குனர் எங்களைக் கண்டித்தார். எங்கோ ஒன்று, இரண்டு இடங்களில் நடக்கும் தவறுகளுக்கு ஒட்டு மொத்தமாகப் பழி கூறுவது குற்றம் என்றார்கள். ஆனாலும் விமலா அந்த ஊருக்குப் போக மறுத்தாள். செய்தி தந்த பயம் அதிகாரியிடம் பேசும் பொழுது துணிவைக் கொடுத்து விட்டது. எங்கள் இயக்குனர் சுற்றிலும் பார்த்து பின்னர் சரோஜாவைக் கேட்டார்கள். அவள் உடனே அழ ஆரம்பித்து விட்டாள். எங்கள் அதிகாரிக்கு தர்ம சங்கடமாகி விட்டது

உங்களீல் அங்கே யாரும் போக மாட்டீர்களா?

நான் உடனே எழுந்து நின்று “ நான் போகின்றேன் ” என்றேன். எங்கள் அதிகாரி என்னை வியப்புடன் பார்த்தார்கள்

உங்களுக்குப் பயமாக இல்லையா?

“மேடம் ,, இது வதந்தி. இப்படி எல்லா இடங்களிலும் தப்பு நடக்காது. என்னால் அங்கே வேலை பார்க்க முடியும்” என்றேன்.

அன்றைய நாட்களில் வாழ்க்கை எப்படி அமைந்திருந்த போதிலும் இப்பொழுது கல்வியும் வசதிகளூம் பெற்றவுடன் பழைய கலாச்சாரம் மாறி சமுதாயத்தின் கவுரவ உறுப்பினர்களாகி விட்டனர். எனவே ஊர் பெயர்களைச் சொல்லுதல் சரியல்ல.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இருக்கும் ஊருக்குச் சென்றேன். லைன் வீடுகள் இருந்தன. ஒரு வீடு எனக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே செல்லவும் அந்த ஊரில் கிராம சேவிக்காவாக வேலை பார்த்த பாப்பாத்தி என்னைப் பார்க்க வந்தாள். அவள் கணவர் செல்வராஜுவும் அதே வட்டாரத்தில் கிராம சேவிக்காகப் பணியாற்றி வந்தார். பாப்பாத்தி அந்த வட்டாரத்தில் இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வருகின்றவள். அவளிடம் வதந்தி பற்றி விசாரித்தேன்.

இந்த வட்டாரத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அங்கே பெரும்பாலான குடும்பங்கள் விபச்சாரத் தொழில் செய்து வருவது உண்மை. இந்த வட்டாரத்தில் வேலைபார்க்க வரும் பெண்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார்கள். மரியாதையாக நடத்துவார்கள்

செய்தி கேட்டு நான் மிரள வில்லை. இப்பொழுதும் என்னைப்பற்றி சில தகவல்கள் கொடுக்க வேண்டும். சிறுவயது முதல் தேடல் குணம் எனக்குண்டு. எந்த விஷயத்திலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வரும். எனவே வரலாற்றைப் படிப்பதில் மிகுந்த அக்கறை வளர்ந்தது. ஆசிரியர் துரைராஜ் அவர்களால் இலக்கிய ஆர்வமும், என் தந்தையால் நாட்டு வரலாறும் படித்தேன். கல்கியின் கதைகளால் தமிழக வரலாற்றை கொஞ்சம் ஆழமாகவே படிக்க ஆரம்பித்தவள் நான். சின்னப் பெண்ணாக இருக்கும் பொழுது அட்லஸ் எடுத்து வைத்துக் கொண்டு உலகம் வலம் வருவேன். அந்த நாட்டுக் கொடிமுதல் தெரிந்து கொண்டு, அதன் வரலாற்றுச் செய்திகளைச் சேகரிப்பேன். சுதந்திரம் வாங்கும் முன்னரே எனக்கு அந்தப் பழக்கங்கள் வந்து விட்டன. எனவே பாப்பாத்தி சொன்ன செய்தி என்னை வரலாற்று காலத்திற்கு இட்டுச் சென்றது.

மனிதன் சமுதாயக் கட்டமைப்பு வகுக்கும் பொழுதே தன் உல்லாசங்களுக்கும் வழி வகை செய்து கொண்டது வரலாறு. மாதவி வீட்டிற்குப் போன கோவலன் செல்வந்தன். அப்படி இருந்தும் அவளால் இந்திர விழாவில் மக்கள் முன் நாட்டிய மாடுவதை மறுக்க முடிய வில்லை.

இந்திரவிழாவும், பின்னர் கானல்வரிப் பாட்டும் கோவலனின் சாவிற்கும் மதுரைமா நகரம் எரியுண்டதற்கும் காரணிகளாக அமைந்தன. . கோவலன் இறந்த பிறகு மாதவி அவள் வீட்டில் இருந்திருந்தால் அவளுடைய வாழ்க்கை மட்டுமல்ல, மகள் வாழ்க்கையும் பாழாகியிருக்கும். இது அன்றைய சமுதாயம். அவள் துறவியாகப் போனதால் இத்தொழிலிலிருந்து தப்பித்தாள்.

உயர் குடும்பங்களிலிருந்து இறைவனுக்குத் தொண்டு செய்ய என்று வந்த பெண்களையும் இந்த இழிவான வாழ்க்கைக்கு ஆட்படுத்தியதும் வரலாறே. போருக்குச் சென்று திரும்பிய நம்மவர்களால் ஏற்படுத்திய வேளங்கள் தொடர்ந்து இயங்கிவந்தன. பேரரசு போனாலும் சிற்றரசு, பின்னர், ஜமீன்கள், பின்னர், பாளையப்பட்டுகள் இப்படி அதிகாரப் பீடங்கள் தொடர்ந்து வந்தன, வேளங்களும் அந்தந்த கிராமங்களில் இருந்துவிட்டன. இது புது பிரச்சனை அல்ல. மனிதனின் வாழ்வியலில் ஒரு பக்கம். அந்த கிராமங்களுக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பகலில் சத்தமன்றி இருக்கும். மாலையாகி விட்டால் ஹோட்டல்களும் கடைகளும் விளக்கு அலங்காரங் களில் ஜொலிக்கும். வியாபாரத்தில் சுறுசுறுப்பையும் காணலாம். ஊருக்குள் கார்கள், வில்வண்டிகள் வந்து போகும். அதிகாலையில் மீண்டும் அமைதி தோன்றிவிடும். பல குடும்பங்களுடன் பழகினேன். அவர்களும் நேசிக்கத் தகுந்த மனிதர்கள். சொல்லப்போனால் சமுதயத்தால் உபயோகிக்கப்பட்ட ஓர் கூட்டம். கல்வியின் சிறப்பை அங்கு அதிகம் எடுத்துரைத்தேன்.

இந்த சமுதாயம் தோன்றியதே, இது, யார் குற்றம் ?. ஒரு புடவைக்கும் சில ரூபாய்களுக்கும் பெண்குழந்தை விற்கப்பட்டது. இது யார் குற்றம்? அதுதானே மூவலூர் இராமாமிர்த அம்மையாரைச் சீறி எழச் செய்து தேவதாசித் தொழிலுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்க வைத்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை மறக்க முடியுமா? சட்டம் கொண்டு வந்த பொழுது தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அந்த அம்மையாரின் முயற்சிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய பொழுது வெடுக்கென்று பதில் கூறி அவரைப் பேச விடாமல் ஆக்கி சட்டமாக்கிய அந்த வீரப் பெண்மணிக்கு வரலாற்றில் முக்கிய இடம் கொடுத்ததில் வியப்பு இல்லை. ஆனால் இதனை எழுதி வரும் பொழுது இக்காலத்தில் நடந்த ஓர் சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன்

சில வருடங்களுக்குள் நடந்த கொடுமை .வேறு எங்கும் இல்லை. நம் தமிழ் மண்ணில்தான். பதின்மூன்று வயது சிறுமி. பெயர் கிருஷ்ணவேணி. அவள் பெற்றோர்க்கு கனவு வந்ததாம் அவளை ஊருக்குப் பொதுமகளாக்கினால்தான் அவள் சகோதரிகள் வாழ முடியுமாம். திரு திருவென்று விழிக்கும் அக்குழந்தைப் பெண்ணுக்கு ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம். அந்தப் பெண்தான் அவர்களுக்கு விருந்தாகப் போகின்றாளே. இந்த சம்பவம் பற்றி போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டு. அவர்களூம் அங்கு வந்து பெண்ணின் பெற்றோர்களையும் அங்கு சாட்சிகளாக அமர்ந்திருந்த சில பெரியவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். குழந்தை கிருஷ்ணவேணியைச் சென்னையில் ஓர் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர். செய்தித்தாள்களில் பெரிதாக இது பற்றிய செய்திகள் வந்தன. நானும் படித்தேன். அப்பொழுது நான் அமெரிக்காவில் இருந்தேன்.

என் சிந்தனை வேலை செய்தது. சில நாட்களில் பெரியவர்கள் ஜாமீனில் வெளிவந்து விடுவார்கள். கிருஷ்ணவேணியும் குழந்தைப் பெண். பெற்றோரைப் பார்க்க வேண்டுமென்று சொல்லலாம். இரண்டு நாட்கள் விடுப்பு கொடுத்து அனுப்பிவிடுவார்கள் அந்த கிராமத்தில் என்ன நடக்கும்?

வேணி, அப்பா, அம்மா சொல்றதைக் கேளு. சாமிக் குத்தம் நம் குடும்பத்துக்கு வரக் கூடாது. எல்லாரும் நல்லா இருக்கணூம். அதனாலே அப்பா சொல்றதைக் கேளும்மா

காவல்காக்க வேண்டியவன் கொள்ளைக்குத் துணை போகின்றான்

அது என்ன என்று கூடப் புரியாத சின்னஞ்சிறு மலர். தகப்பனுக்குத் தலையாட்டும். ஒரு கிழவனுடன் சேர்த்துவைத்து கொண்டாடி விடுவார்கள். கிருஷ்ணவேணி பொதுமகளாகி விடுவாள். இனி அவள் ஊருக்குச் சொந்தம். எவனும் அவள் வீட்டுக் கதவைத் தட்டலாம்.

மூவலூர் இராமிர்த அம்மையாரின் நினைவாகப் பரிசு அறிவித்த அரசுதான் ஆட்சியில் இருந்தது. அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் துறையும் பல பெண் அமைப்புகளும்தான் இருந்தன. அடைக்கலம் கொடுக்கப்பட்டதுடன் திருப்தி அடைந்துவிட்டன. இந்தப் பிரச்சனையில் பார்வையின் ஆழம் போதாமையால் சின்னப் பெண்ணின் வாழ்க்கை பரிதாபகரமாக முடிந்தது. ஆம், நான் சென்னைக்குச் சென்ற பொழுது தகவல் சேகரித்தேன். கிருஷ்ணவேணி அந்தக் கிராமத்தின் பொதுமகளாகி விட்டதை அறிந்தேன். மனம் பதைத்தது.

சில பிரச்சனைகளை காலத்தில் சரியாகக் கவனிக்காமல் விட்டால் தோல்வியைத் தழுவுவோம். தொடர் கவனிப்பின்றி பல திட்டங்கள் தோல்வி யடைவதுண்டு. சில பிரச்சனைகள் தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. திட்டங்களைத் தொடங்கினால் மட்டும் போதாது. தொடர் கவனம் மிக மிக முக்கியம்

இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய காலத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. ஒன்றியத் தலைவரின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது. பயிற்சி முடிந்தது. நான் அங்கு வேலைக்குச் சென்ற அறுபது நாட்களில் எனக்கு ஓர் உத்திரவு வந்தது. பதவி உயர்வு உத்திரவு. வட ஆற்காடு மாவட்டத்திற்கு மாவட்ட மகளிர் நல அதிகாரியாகப் பணியாற்ற உத்திரவு.

சென்னைக்குச் சென்று என் இயக்குனர் அவர்களைப் பார்த்தேன். அப்பொழுது எங்கள் இயக்குனராக இருந்தவரின் பெயர் திருமதி அஞ்சனி தயானந்த் ஐ. ஏ. எஸ் அவர்கள்.

நேர்காணல், தேர்வு என்று எதுவும் பார்க்காமல் எனக்கு இந்த பதவி உயர்வு கிடைத்தது. அதற்கு எங்கள் இயக்குனர் சொன்னதை நான் பதிவு செய்ய வேண்டும்

இது உன் தன்னம்பிக்கைக்கும் துணிவிற்கும் கிடைத்த பதவி உயர்வு. யாரும் போக மாட்டேன் என்று சொன்ன பொழுது நீயாக அங்கு செல்ல ஒப்புக் கொண்டாய். இந்த வேலைக்கு இந்த இரண்டு தன்மைகளூம் அவசியம்.

சமுதாயப் பணிக்கு வருகின்றவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள துணிவும் தன்னம்பிக்கையும்.

எங்கள் துறையில் பல புதிய இணைப்புகள் மாறுதல் தோன்றிய காலம். விதிமுறைகள் இன்னும் முழுமையாக எழுதப்பட வில்லை. மாவட்ட அளவில் பதவிக்கு பட்டதாரிகளைத் தேர்ந்துடுத்து வந்தனர். நானும் ஓர் பட்டதாரி. எனவே எங்கள் இயக்குனர் அவர்களுக்கு என்னைத் தேர்வு செய்து அரசு ஒப்புதல் பெற முடிந்தது

வட ஆற்காடு மாவட்டத்தில் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினேன்.பின்னர் சில மாதங்கள் கோவை மாவட்டத்தில் பணியாற்றிவிட்டு 1966 ஏப்ரலில் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டேன்.

பிரச்சனைக்குள் நுழையும் முன்னர் ஒரு தகவலைத் தர விரும்புகின்றேன். உலக வங்கி ஊட்டச் சத்துத் திட்டம் மதுரை மாவட்டத்தில் முதலில் ஆரம்பிக்கப் பட்டது. செயல்படுத்த சுகாதாரநல துறையும் சமூகநலத் துறையும் இணந்து பணீயாற்றின. அத்திட்டத்தில் ஓர் சிறப்பு அம்சம் ஆரம்பத்திலிருந்தே திட்டத்தைக் கவனிக்க ஓர் பிரிவும் அமைந்ததுதான். ( monetering and evaluation ). சிசுக்களின் மரண விகிதத்தையும் பிரசவ காலத்தில் இறக்கும் பெண்களின் மரண விகிதத்தையும் குறைத்திட வந்த திட்டம். ( to reduce infant mortality rate and maternal mortality rate )

உசிலம்பட்டி பகுதியில் சிசுக்களின் மரணம், குறிப்பாக பெண்குழந்தைகளீன் மரணம் அதிகமாகக் காணப்பட்டது. உடனே விரைந்து சென்று ஆய்வு செய்ததில்தான் பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுவதைக் கண்டனர். வெகுகாலமாக இது நடைபெற்றாலும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்கள் இவர்கள்தான் இது நடந்தது 1981.. இப்பொழுது தொட்டில் குழந்தை திட்டம் நம்மிடையே இருக்கின்றது. இருப்பினும் இக்கொடிய வழக்கத்தைக் குறைப்பது கடினமான காரியமாக இருக்கின்றது. ஊனமுற்ற குழந்தையா என்று பார்க்க வந்த ஸ்கேன் முறையிலும் பெண் குழந்தை என்று தெரிந்தால் கருவிலேயே அழிக்கப்படுகின்றது. கருவில் உருவாகும் பொழுதே பெண் பிறவிக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை.?

இன்னொரு தகவலும் சொல்ல விரும்புகின்றேன். குழந்தைகளின் வளர்ச்சியைக் காண ஓர் வரைபட அட்டை உண்டு. அதனை ஆராயும் பொழுது பெண்குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. பெற்றவளை நானே போய்ப் பார்த்துப் பேசினேன். இந்தத்திட்டத்தில் ஆரம்பத்திலிருந்து பணியாற்றியவள் நான்.

பெற்றவளே தன் பெண் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதில் கூட பாரபட்சமாக நடந்து கொள்ளும் தாய் சொன்ன பதில்

இதுங்க அடுத்த வீட்டுக்குப் போறதுங்க. ஆம்புள்ளப் புள்ளங்கதான் கடைசி காலத்துலே கஞ்சி ஊத்தப் போறவங்க. அவங்க தான் கொள்ளி போடணும். பொட்டைப் புள்ளங்களுக்கு இது போதும்

பிள்ளை பெறுபவளும் பெண்.

கொடுக்கும் ஆகாரத்தைக் கூட குறைக்கும் குணம், மனம் பெற்றவளுக்கு இருப்பதைக் கண்டு எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவளூம் பெண்தானே. நம் சமுதாயத்தில் அவலங்கள் எங்கெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

காலச் சுழற்சியில் பிள்ளைகளைவிட பெண்கள் பெற்றோரிடம் காட்டும் ஆதரவு காணவும், இந்த பிரச்சனைமட்டும் குறைந்து விட்டது. பெண் கல்விக்கும் வழி வகுத்தது

சட்டங்கள் இருந்தும் சிறுவயதில் நடக்கும் திருமணங்கள் இன்றும் தொடர்கின்றன.

கட்டடங்கள் போல் வெளிப்படையாகப் பெண்களின் பிரச்சனைகள் தெரிவதில்லை. வாழ்க்கையில் ஊடுருவிச் செல்லும் தீயசக்தி இந்தப் பிரச்சனை.

ஆதரவற்றவர்கள், விதவைகள், வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்கள் என்று பல நிலைகளில் பெண்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் புனர் வாழ்வு கொடுக்க அரசு மட்டுமல்ல பல தொண்டு நிறுவனங்களூம் இயங்கி வருகின்றன. இதில் ஓர் கசப்பான உண்மை காப்பாளர்களாகச் சென்றவர்கள் பலரின் வாழ்க்கையும் சோதனைக்காளானதே.

படிக்கக் கூட வெளி வர முடியாத காலம். படித்தபின் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்யாமல் பலர் பார்வை முன் ஊர் சுற்றி வேலையாற்ற வேண்டிய நிலை. ஆண்களும் பெண்களும் பழகுவதை விரும்பாத காலத்தில் ஆண்களுடன் சேர்ந்து வேலை பார்க்க வேண்டி வந்ததால் வீண் பழிகளைச் சுமக்க வேண்டிய பரிதாப நிலை. புதிய உலகம். புதிய பழக்கம். சிலர் மனத்தைப் பறிகொடுத்தனர். ஒரு சிலர் காதல் என்று நினைத்து தங்களையும் இழந்தனர். சாதிக் கட்டுப்பாட்டில் சேர்ந்தவன் விட்டுச் செல்ல கைக் குழந்தையுடன் பழிச்சொல்லையும் சுமந்து கொண்டு தினமும் போராடி வாழ வேண்டிய நிலையில் சிலர். இப்படி பணியாளர்கள் பலருக்கும் பணிகள்தான் புகலிடம். வேலை மட்டும் இல்லையென்றால் அவளும் நல்லதங்காளாய் கிணற்றுக்குள் போயிருப்பாள்.

1967 இல் வந்த ஆட்சி மாற்றம் ஆரம்பத்திலேயே ஓர் அறிவிப்பு செய்தது. முதல்வருக்கு ஓர் ஆலோசகர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் திரு . முருகேச முதலியார் அவர்கள். அரசுப் பணியில் உச்ச நிலைப்பதவி தலைமைச் செயலகத்தில் இருக்கும் தலைமைச் செயலாளர் பதவி. இந்தப் பதவியும் அது போன்று உச்ச நிலைப் பதவி.. இவரின் பரிந்துரைகளின் பேரில் முதலமைச்சர் தீர்மானங்கள் எடுப்பார்

நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறி முதலில் மூடுவிழா செய்ய இருந்த துறை மகளிர் நலத்துறை. பத்திரிகைச் செய்திகளில் பக்கம் பக்கமாக விபரங்கள் இருந்தன.

“ மகளிர் நலத்துறையில் எந்தப்பணிகளும் கிடையாது. அதில் பணியாற்றும் பெண்கள் அலங்கார பொம்மைகள் அவ்வளவுதான். எனவே இத்துறையை மூடும் முடிவிற்கு புதிய அரசு தீர்மானம் செய்துள்ளது ”

செய்தியா இது? இதைப்படிக்கவும் துடித்துப் போனேன். இந்த உத்திரவு செயல் வடிவமாகும் முன் நிறுத்தப்பட வேண்டும். எப்படிச் செய்வது? என்ன செய்வது? ஆலோசகரின் நிலை உச்சம். நானோ மிக மிக சாதாரணமான ஓர் பணியாளர். பார்க்கக் கூட அனுமதி கிடைக்காது. இந்தச் செய்தி படித்தவுடன் எத்தனை பெண்கள் பதறிப் போயிருப்பார்கள் யாரும் அவசர முடிவிற்கு வந்துவிடக் கூடாதே என்று மனம் பதறியது. . அப்பொழுது நான் எந்தத் தொழிற் சங்கத்திலும் கிடையாது.

எப்படி இந்த முடிவிற்கு வந்திருக்க முடியும்? இந்திய நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒருங்கிணைப்பு பணிகள் தமிழகத்தில் மட்டுமே ! இதை ஏன் எடுத்துச் சொல்லப்பட வில்லை? தவறு எங்கே நிகழ்ந்தது? இந்த முடிவின் விபரீதம் யாருக்கும் தோன்றவில்லையா? என் சிந்தையில் நினைவலைகள் சுனாமியாகத் துரத்த ஆரம்பித்தன.

முதலில் நாம் அந்த துறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்., இந்தியாவி லேயே தனித்துவமாக அமைந்திருந்த தமிழகத்தின் பெண்கள், குழந்தைகள் நலப்பணிகளின் அமைப்புகளை நாம் புரிந்து கொள்வோம்.

மகளிர் நலனில் பெண்களின் உழைப்பையும் அவர்களின் சாதனைகளையும், நிறுவியுள்ள அமைப்புகளை முதலில் நாம் பார்க்கலாம். எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் வேர்களை அடையாளம் காட்ட வேண்டும். இதன் விழுதுகளையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

பிழை ஏற்படாமல் இருக்க சரித்திரம் எழுதப்படவேண்டும். . எதிர்காலத்தில் இந்த வரலாறு பல நன்மைகளுக்கு வழிகாட்டும். என்னுடன் இந்த முயற்சி முடிந்துவிடக் கூடாது. பயிற்சி கொடுப்பதில் சிறந்தவரான ருக்மணி சோமசுந்திரம் அவ்வப்பொழுது ஏற்படும் மாறுதல்களை அறிந்து அதற்கேற்ப இதனை ஆவணப்படுத்துவார். எந்த பயிற்சியாயினும் இந்த வரலாற்றின் முக்கிய பகுதிகள் தெரிவிக்கப்படவேண்டும். தேவை வரின் அரசுக்குக் கூற இத்தொடரை. ஆவணமாகக் காட்ட ருக்மணியால் முடியும். எனவே ருக்மணி இப்பொறுப்பிற்குப் பொருத்தமானவர். இத்துறையில் பல ஆண்டுகள் பணீயாற்றி ஓய்வு பெற்றவர். அதன்பின்னரும் பல திட்டங்களில் ஆலோசக ராக இருந்து வருகின்றார்.

எந்த முயற்ச்சியும் தொடக்கத்துடன் நின்றுவிடக் கூடாது. கண்காணிப்பு வேண்டும். சமுதாய வாழ்க்கை தொடர்ந்து இயங்கி வருகின்றது .பொழுது போக்கிற்காக இத்தொடர் எழுதப்படவில்லை. 77 ஆண்டுகளின் அனுபவத் தொகுப்பு. பெண்கள் , குழந்தைகள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட பல பிரிவுகல் பணியாற்றியவள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாட்டில் பல மாநிலங்களில் சென்று பணிகளைப் பார்த்தவள், பயிற்சி பெற்றவள், அதுமட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் சென்று மகளிர் நலத்திற்காகப் பல ஆய்வுகள் செய்தவள். இவைகளைப் பெருமைக்காகக் கூறவில்லை. என் எழுத்துக்கள் அர்த்தமற்றவையல்ல.மேலும் இம்மண்ணில் எழுச்சி ஆரம்பமான காலத்திலேயே பல வரலாற்று நாயகிகளின் வழிகாட்டலில் பயின்றவள். அவர்கள் எந்த நோக்கத்தில் இந்தப்பணியைத் தொடங்கினார்கள் என்பதை , அவர்களிடம் பணீயாற்றியவள் என்ற முறையில் பதிவு செய்ய விரும்புகின்றேன். என்னுடைய முயற்சி ஓர் தொடக்கமே. அதனால்தான் இப்பணியில் அக்கறையுள்ள சிலரிடம் தொடர் நடவடிக்கை எடுக்க்க் கூறியுள்ளேன். பொதுப்படையாகக் கூறிவிட்டுச் சென்றால் “ அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் “ என்ற மன நிலை உருவாகி எடுத்த முயற்சியும் தேய்ந்துவிடும். எனவே தான் ருக்மணீயிடம் இப்பொறுப்பைக் கொடுத்துள்ளேன்.

இந்த வாழ்வியல் தொடரும முற்றுப் புள்ளியில்லாமல் தொடரப்படும்.

“வெட்டிப் பேச்சில் பயன் கிடையாது. மக்களுக்குத் தொண்டு செய்வதில் தனித்திறமையும் பற்றும் கொண்டு விளக்குங்கள். உங்கள் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் சேவை எண்ணம் மிளிரட்டும் “

சுவாமி சிவான்ந்தார்

பயணம் தொடரும்

படத்திற்கு நன்றி

Series Navigationஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “புரட்சி
author

சீதாலட்சுமி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *