தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
பாட்டு கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும் –
பாரதியின் கவிதைக்கு ஓர் பத்தினி[ப் பெண் வேண்டுமாம்.
அச்சம் மடம் நாணம் இவைகளைத் தூக்கி எறியச் சொன்னவன்தான் இதையும் சொல்கின்றான்
பத்தினிப் பெண்ணிற்கு நம்மிடையே ஓர் காப்பியமே இருக்கின்றது. அதைப் பார்ப்போம்.
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூ உம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாக
சிலப்பதிகார மென்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்
மக்கள் காப்பியம் பாடும் கவிஞர் இளங்கோ அடிகள் போற்றும் பத்தினிப் பெண்
கண்ணகியைப் புகழ்வது கூட கோவலன் வாயிலாகத்தான். கணவன்தான் அவளை ரசிக்கலாம். கணவன் மனைவியை விட்டுப் பிரிந்து பல ஆண்டுகள் சென்றாலும் பிறந்த வீட்டிலோ புகுந்த வீட்டிலோ புகார் செய்ய மாட்டாள் செய்தல் கூடாது. அந்த புகார்ப் பத்தினி. தெய்வத்திடம் கூட கணவனைப்பற்றி குறைவாகப் பேசமாட்டாள். பல ஆண்டுகள் பிரிந்திருந்தவன் நள்ளிரவில் வந்து இதுவரை தான் சேர்ந்து வாழ்ந்திருந்த நாட்டியக்காரியைத் தூற்றும் பொழுது கூட அவனுக்கிசைந்து பேசாமல்” பொருள் வேண்டி இந்த தவிப்போ” என்று எண்ணி எஞ்சியிருக்கும் தன் கால் சிலமபைக் கொடுப்பதாகக் கூறுகின்றாள். அவனோ உடனே அவளைத் தன்னுடன் வரச் சொல்கின்றான். வீட்டிலே விட்டுச் சென்றவன் நாளைக்கு வீதியிலும் விட்டுச் செல்லலாம் என நினைக்காமல் கணவனுடன் புறப்படுகின்றாள். பத்தினிப் பெண்.
அவளும் பேசலாம். எப்பொழுது என்றும் கவிஞன் அக்காட்சியைக் காட்டுகின்றான். மாதரி விட்டில் அறுசுவை அன்னம் சமைத்து இலையில் படைத்து அவனைப் பசியாற உண்ண வைத்து, பின்னர் தாம்பூலம் மடித்துக் கொடுக்கின்றாள். அப்பொழுது கணவனாகவே தன் தவறுகளைக் கூறிப் புலம்புகின்றான். அப்பொழுது பத்தினிப் பெண் பேசுகின்றாள். அதுவும் தன் ஏக்கத்தைப் பற்றியல்ல. பெரியவர்கள் மனம் வருந்த வேண்டி வந்துவிட்டதே என்றும் இல்லறத்தில் நல்லறமான விருந்தோம்புதல் செய்ய முடியாமல் போன கடமைகளைத்தான் பரிவுடன் பேசுகின்றாள். அவள் கொதித்து எழுவது எப்பொழுது.? அவள் கணவன் மேல் வீண்பழி சுமத்தப்பட்டு விட்டது. தனை மறந்தாள். பொங்கி எழுந்தாள். அவள் சீற்றத்தில் தீக்கனல் பிறந்தது. . கற்புக் கனலால் பலர் மாண்டனர். மதுரை அழிந்தது. விதியின் விதி அது. வளைந்த செங்கோல் வளைத்தவனைக் கொன்றது.
இது ஓர் மக்கள் காப்பியம். நடந்ததா கற்பனையா என்ற வாதத்தில் நான் இறங்கவில்லை. அக்காலத்தில் ஓர் பத்தினி எப்படி இருக்க வேண்டுமென்பதை கண்ணகியைக் காட்டி அக்கால விதிமுறைகளை உணர்த்துகின்றான்
இந்த காப்பியம் எழுதப்பட்டு சில ஆயிரம் ஆண்டுகளாகிவிட்டன. இருப்பினும் கண்ணகியைப் பற்றி இன்னும் எத்தனை அலசல்கள்!. ஒன்றை நாம் நினைக்க முயலவில்லை. சென்னை மாநகரத்தில் அண்ணா சாலையில் மாலை ஐந்து மணிக்கு ஒருவன் கட்டை வண்டியுடன் செல்வானா அல்லது செல்லத்தான் முடியுமா ? மாட்டு வண்டியில் போவது எங்கள் தமிழ்க் கலாச்சாரம் என்று சொன்னாலும் ஒத்துக் கொள்ள முடியுமா? காலச் சக்கரம் சுழல்வது போல் வாழ்வியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதை ஏன் நினைப்பதில்லை?
ஆதிகாலத்தில் மனிதன் ஆடையின்றி அலைந்தான் உடல்பசிக்கு கிடைத்த பெண்ணுடலை உபயோக்கப்படுத்திக் கொண்டான். அம்மா, அக்கா உறவென்று அப்பொழுது இருந்ததா? அதைக் குற்றமாகக் கூற முடியுமா?
மனிதன் தான் சமுதாயத்தை ஏற்படுத்தினான். கட்டமைப்புக்கு விதிகள் வகுத்தவனும் அவனே. காலத்திற்கேற்ப விதிகளும் அமைந்தன. தான் ஈட்டும் பொருளுக்கு வாரிசு வேண்டித்தான் குடும்பத்தை அமைத்தான். குடும்பம் என்று இல்லாமலேயே அவனால் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அப்படியும் குடும்பத்தை ஏற்படுத்தினான் என்றால் தன் வாரிசுதான் என்பதற்கு உத்திரவாதம் வேண்டும். பிள்ளையைச் சுமக்கும் பெண் சுதந்திரமாக வெளியில் உலாவ முடியாது (இப்பொழுதும் நிலைமை சீரடைந்து விடவில்லை). குடும்பம் அமைத்த பின், அன்பின் அர்த்தத்தை உணர ஆரம்பித்தான். அந்த அரவணைப்பும், அமைதியான மகிழ்ச்சியும் நிலைக்க பெண் வீட்டுக்குள் சிலையாக நிலைத்திட வேண்டும். விதிகள் பிறந்தன. அக்காலத்தில் என்னவெல்லாம் நினைத்தானோ அவைகளை சமுதாய விதிகளாக்கினான். ஓர் ஆண்மகன் எப்படி பெண்ணிற்கு கட்டுப்பாட்டு விதிகளைக் கொணரலாம் என்று இக்காலத்தில் பேசலாம். அன்று முடியாது. தாய் வழிச் சமுதாயம் அங்கும் இங்கும் இருப்பினும் ஆணின் தலைமையே ஓங்கியிருந்த காலம்.
இப்பொழுது மேடையில் கூச்சலிடலாம். கை வலிக்க எழுதலாம். பாரளு மன்றத்தில் பெண்களுக்கு அதிக எண்ணிக்கை வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்ற முடிகின்றாதா?
இன்னொரு தகவல் சொல்ல விரும்புகின்றேன். தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னால் வைத்துவிட்டு எழுதுகின்றேன்.
ஓர் ஆய்வாளர். அறிஞர். அவரிடம் எனக்குள் இருந்த ஓர் சந்தேகம் கேட்டேன். இராமாயணம் கற்பனைக் கதையா அல்லது நடந்த சரித்திரமா ?அவர் என் முகத்தைப் பார்த்தார். நாத்திக உணர்வில் என் கேள்வி இல்லை என்பதை முதலில் புரிந்து கொண்டார். அதற்குப் பிறகு அவர் பேசியவைகள் பதியப்பட வேண்டிய மாணிக்க வரிகள்
அக்காலத்தில் ஓர் ஆண்மகன் என்ன விரும்பினான்?. தன் மேல் அன்பும் மரியாதையு முள்ள ஓர் மகன் வேண்டும். அவனுடைய வாரிசு அவன் சொல்லைத் தட்டக் கூடாது.
“நீ நாடாள வேண்டாம் பதினான்கு ஆண்டுகள் கானகம் சென்று வாழ வேண்டும்”
இது தந்தையின் கட்டளை. அரியாசனத்தில் அமரும் நேரம் ஆசி வாங்க வந்தவனுக்கு கிடைக்கும் செய்தி இது. இதனைக் கேட்டும் சித்திரத்தில் அன்றலர்ந்த செந்தாமரை முகத்தினை ஒத்த நிலையில் முக மலர்ச்சியுடன் அந்த மகன் தந்தையின் கட்டளையைச் சிரமேற்கோண்டான்
இத்தகைய மகன் கிடைப்பானா? ஒவ்வொரு தகப்பனுக்கும் இராமன் போல் பிள்ளை வேண்டும் என்ற ஆசையை விதைத்தவன் இராமன் இதுவரை இராமனைப் போன்ற ஓர் பாத்திரப் படைப்பைப் பாத்திருக்க முடியுமா?
ஒரு பெண்ணிற்கு என்ன ஆசை. தன் கணவன் தன்னைத் தவிர வேறு பெண்ணிடம் ஆசை கொள்ளக் கூடாது
இராமனின் சிறப்பை சீதை வாயிலாகச் சொல்லவில்லை. அவனுடைய எதிரி இராவணன் கூறுகின்றான். இராமன் வேடத்தில் இராவணன் சீதை அருகில் சென்ற பொழுது அவள் மாற்றான் மனைவி என்ற உணர்வில் மரியாதைதான் தோன்றுகின்றது என்று சொல்கின்றான். சிந்தையாலும் பிற மாதரை நினைக்காதவன் இராமன்.
இராவணன் போர்க்களத்தில் மாண்டு கிடக்கின்றான். மண்டோதரி அங்கு வருகின்றாள். இராமனின் அம்புகள் இராவணனின் உடம்பு முழுதவதும் அரித்திருப்பதைக் காண்கின்றாள். உடனே அவள் வாயிலாக இராமனின் இன்னொரு சிறப்பு வெளிப்படுகின்றது. சீதையை அசோக வனத்திலிருந்து சிறை மீட்டால் மட்டும் போதாது. இதை மண்டோதரி கூறவில்லை. ஆனால் அடுத்துவரும் வாசகத்திற்கு முன்னோடி இவை. சீதையின் எண்ணம் இராவணனின் உடலில் எப்பகுதியிலும் இருக்கக் கூடாது என்று துளைத்து துடைத்து எடுத்துவிடுகின்றான் அந்த காதல் கணவன்.
அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி இராமனைப் போன்ற கணவன் வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைப்பாள்.
உதாரண புருஷன் இராமன்.
பெண்ணுக்கு மட்டுமா? ஆணின் பலஹீனம் பெண் சபலம். அவனும் ஒருத்தியுடன் மட்டும் வாழ்வதில் உள்ள சிறப்பை மறுக்க வில்லை. கட்டுப்படுத்த முடிந்தவன் கட்டுப்பாட்டுடன் இருக்கின்றான். தடுமாறுகின்றவன் தவறு செய்கின்றான். அந்தக் குறையை ஆணும் அறிவான். இராமனைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வியப்பு. இப்படி ஓர் ஆண்மகனால் இருக்க முடியுமா என்று. ஆணையும் நினைக்க வைப்பதற்கும் இராமன் ஓர் உதாரண புருஷன்.
எனக்கு விளக்கமளித்தவர் கடைசியாகச் சொன்னது. இராமாயணம் அன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம்,
இராமன். நமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுக்கின்றார். இராமனின் கதை கற்பனையா நடந்ததா என்ற ஆராய்ச்சி எதற்கு என்று கேட்டார். நான் சிலையானேன். அதன் பிறகு யாரிடமும் இந்தக் கேள்வியை நான் கேட்டதில்லை.
இதுதான் நம் வாழ்வியல். பத்தினி, கற்பு என்று அதிகமக வலியுறுத்தப்பட வேண்டிய காலக் கட்டம். அதனை இப்பொழுது நாம் குறையாகச் சொல்வதும் சரியல்ல. வாழ்வியலுக்கு பாட்டுக்கள் எழுதிய வள்ளுவரும் பெண்ணின் கற்பைப் பற்றிப் பேசியிருப்பது காலத்தின் கட்டாயம்
அதுசரி. இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கணவன் செத்தால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும் என்று சொல்வதை சகித்துக் கொள்ள முடியவில்லையே!
உடன்கட்டை ஏறுதல்
இதன் வரலாறு நான் அலசப்போவதில்லை. மதங்களைப் பற்றிய விவாத மேடையாக்க விரும்பவில்லை. ஒரு சாரார் இதனை மத சார்பாக சமுதாயத்தில் கொண்டுவந்தனர்
கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறியாக வேண்டும். அதுதான் பதிக்குச் செய்ய வேண்டிய சதியின் தலையாய கடமை.
ஶ்ரீராமபிரானின் தாயார் கோசலை தசரதனுடன் உடன்கட்டை ஏறவில்லை. அப்படியென்றால் இராமாயண காலத்தில் இது வலியுறுத்தப்படவில்லை.
சங்ககாலத்தில் கூட இவ்விதி வலியுறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சமய காலத்திலும் அங்கும் இங்கும் ஏதோ நடந்திருக்கின்றது . மன்னர் சுந்தர சோழரின் மனைவி மலையமான் மகள் உடன்கட்டை ஏறியது பற்றி கல்வெட்டுச் சான்று இருக்கின்றது. அதே காலத்து சோழர் குல அரசி செம்பியன்மாதேவி கணவர் கண்டராதித்தர் இறந்த பொழுது உடன்கட்டை ஏறவில்லை. செம்பியன்மாதேவி சிறந்த சிவ பக்தர். ஆலயப் பணிகள் நிறைய செய்தவர். கொல்லிமலைக்கு நான் சென்றிருந்த பொழுது அங்கிருந்த அறப்பளீஸ்வரர் ஆலயம் சங்க காலத்தில் கட்டப்பட்டது என்றும் அது சிதிலமடந்த காலத்தில் செம்பியன்மாதேவி அதனைச் சீராக்கினார் என்றும் அறிந்தேன். அத்தகைய சிவ பக்தை கூட உடன்கட்டை ஏறாததைப் பார்க்கு மிடத்து உடன்கட்டை ஏறுவது அப்பொழுது வலியுறுத்தப்பட வில்லை என்று தெரிகின்றது.
போர்க் காலங்களில் மன்னன் மடியும் பொழுது அரண்மனைப் பெண்டிர் தீக்குளிப்பர். அவர்கள் சாகாவிட்டால் வேளங்களில் அடைக்கப்பட்டு பல ஆண்களுக்கு விளையாட்டுப் பொருளாக வேண்டிவரும். எனவே அவர்களே விரும்பி மரணத்தை ஏற்றுக் கொண்டனர்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரே காரணத்தால் கலிப்பகையார் இறந்தவுடன் திலகவதி அம்மையாரே மணம் வெறுத்து தனி வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். அது அவர் விருப்பம்.
சமுதாயத்தில் புரையோடிப் போன பல சீர் கேடுகளில் உடன்கட்டை ஏறுதல் கொடுமையானது. 1825 ஆண்டு முதல் பத்து ஆண்டுகளில் 8000 பெண்கள் உடன்கட்டை ஏறியதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ஒழிக்க்க் கடுமையாகப் போரடியவர் ராஜாராம் மோகன்ராய் ஆவார். பெண் இனம் வணங்க வேண்டிய ஓர் மாமனிதர்.
சமுதாயத்தில பல தீமைகளுக்கு எதிராகப் போராடினார்.
1 பெண் சிசுக் கொலை
2 பலதார மணம்
3 பால்ய விவாகம்
4 உடன்கட்டை ஏறுதல்
5 விதவாவிவாகம் மறுப்பு
6 பெண்களுக்குக் கல்வி மறுப்பு
7 பெண்களுக்குச் சொத்துரிமை மறுப்பு
8 தீண்டாமை
9 மூட நம்பிக்கைகள்
சமுதாயத்தில் பெண்களைச் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
1829 ஆம் வருடம் உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இக்கொடுமைக்குத் துணை போவோர்க்கும் தண்டனையுண்டு என்பதும் சேர்க்கப்பட்டது. பெண் விடுதலைக்காப் போராடியதால் இவரை அறிஞர்களால்
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண் நிலை வாதியான ஆண் “
என்று மோகன்ராய் அவர்கள் போற்றப்பட்டார்.
உடன்கட்டை ஏறுதல் வட நாட்டில் அதிகம் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. வாணிபம், மதம் போன்று பல காரணங்களால் வடபுலம் அதிகம் பாதிக்கப்பட்டது. தெற்கே அப்பொழுது தமிழ் மன்னர்கள் பேரசு காலத்திலும் சரி, சிற்றரசாக ஆன பொழுதிலும் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருப்பினும் தங்கள் கலாச்சாரத்தைக் காக்க வீரத்துடன் நின்றனர்.
எங்கள் காலத்தில் வை.மு. கோதைநாயகி முதல் டாக்டர் லட்சுமி வரை எழுதிய குடும்பக் கதைகளை நாங்கள் விரும்பிப் படிப்போம். குடும்பத்தில் வரும் பிரச்சனைகளைப் பற்றி வருவதால் அவைகளைப் படிப்பதற்கு ஆர்வம். இப்பொழுது தொலைக் காட்சிப் பெட்டி வீட்டுக்குள் வந்த காலத்திலும் ரமணி சந்திரனின் கதைகளைப் பெண்கள் விரும்பிப்படிக்கின்றனர். எங்கள் காலத்தில் காண்டேகர், சரத்சந்தர் கதைகளின் மொழிபெயர்ப்புகள் தொடர்கதைகளாக வரும். சில புத்தகங்களாகவும் வரும். தென்னாட்டை விட வட நாட்டில் மத்தியதரக் குடும்பங்கத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகமாகக் கஷ்டத்தை அனுபவிப்பதாக உணர்ந்தோம். எனவே உடன்கட்டை செயல்களும் வட நாட்டில் அதிகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரியான நிலை. கணவனை இழந்த கைம்பெண்ணின் நிலை. ஓர் பெண் விதவையாகி விட்டால் அவளுக்கிருக்கும் கட்டுப்பாடுகள் கொடுமை. அதனால்தான் ஒரு பெரியவர் சொன்னார்
“புருஷன் செத்து வாழ்றதைவிட ஐந்து நிமிஷம் சுட்டுப் பொசுங்கினாலும் செத்துத் தொலையலாம்.”
இப்படி சொன்னவர் யார்? அடுத்து நாம் பார்க்கலாம்
“வாழ்க்கையின் சோதனைக் காலங்களிலும், துன்பங்களிலும் , கஷ்டங்களிலும் அமைதியுடனிரு. எல்லா ஜீவராசிகளிடத்தும் உண்மையான இரக்கம், அன்பு இவைகளைக் காண்பி. வித்தியாச மனப்பான்மை கொள்ளாதே”
சுவாமி சிவானந்தா
(படங்களுக்கு நன்றி)
(தொடரும்)
- ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
- சயந்தனின் ‘ஆறாவடு’
- ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
- குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
- தங்கம் 5- விநோதங்கள்
- பில்லா 2 இசை விமர்சனம்
- மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
- தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
- முள்வெளி – அத்தியாயம் -7
- “பெண் ” ஒரு மாதிரி……………!
- அகஸ்டோவின் “ அச்சு அசல் “
- பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
- ’சாலையோரத்து மரம்’
- புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
- சித்திரைத் தேரோட்டம்…!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- கொத்துக்கொத்தாய்….
- பங்கு
- ஈரக் கனாக்கள்
- பாரதிதாசனின் குடும்பவிளக்கு
- விதை நெல்
- கால இயந்திரம்
- மகன்
- புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
- இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
- சாயப்பட்டறை
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
- ரௌத்திரம் பழகு!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
- ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
- “என்ன சொல்லி என்ன செய்ய…!”
- இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
- “பேசாதவன்”
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
- மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்