தீயினும் அஞ்சப் படும்.
இப்பகுதி எரிமலையில் தீக்குழம்பைக் கொட்டுவது போல் இருக்கலாம்.
நம்முடன் இருந்து பேசுகின்றவர் தந்தை பெரியார். பாரதி போல் கவிஞன் அல்ல. குடும்பத்தில் அவர் ஓர் “தந்தை”. .(தயவு செய்து எங்கள் உணர்வுகளை அரசியல் குட்டையில் கலந்து விடாதீர்கள். இது குடும்ப விஷயம் ..வாழ்க்கையில் பெண்ணின் நிலை, குடும்ப நலன்பற்றி எழுதுகின்றேன். அது சம்பந்தமாக மற்றவர்களின் கருத்துக்களையும், சில விளைவுகளையும் பதிய முயற்சிக்கின்றேன். எனக்கு அரசியல் வர்ணம் வேண்டாம்.)
கவிஞன் தன் எண்ணங்களை,, விருப்பங்களைத் தமிழமுதத்தில் குழைத்துக் கொடுக்கலாம். ஆனல் அப்பா தன் குடும்பத்தின் சரிவைப் பார்க்கும் பொழுது பாட்டு எழுதிக் கொண்டிருக்க முடியாது. வார்த்தைகளைக் கொட்டத்தான் முடியும். நெஞ்சுக் குமுறல்களின் வெளிப்பாடு. சாகாத ஒருத்தியைச் செத்தவனுடன் வைத்துக் கொளுத்துவது கொடுமையிலும் கொடுமை. ஆனால் நம் அய்யா என்ன சொல்கின்றார் தெரியுமா?
“ராஜாராம் பெண்களுக்கு ஒரு துரோகம் இழைத்துவிட்டார். செத்த புருஷனோடே பொண்டாட்டியையும் கொளுத்திட்டா அப்புறம் இந்த சமுதாயம் அவளை வதைக்க முடியாதே. தாலி அறுத்த பொண்ணுக்கு சுகம் ஏது? எங்கேயோ சொர்க்கம் இருக்காமே, அங்கேயே இருந்து தொலைக்கட்டும். ஐந்து நிமிட வலியுடன் கஷ்டம் முடியும்.”
பத்தினிப் பெண்ணைப் பற்றி நினைத்தான் பாரதி
கோரிக்கையற்று கிடக்கும் வேரில் பழுத்த பலாவை நினைத்தான் அவன் தாசன், பாரதிதாசன்.
அய்யாதான் மகளின் வேதனையைப் புரிந்து குமுறி யிருக்கின்றார். நான் பார்த்த காட்சிகள் கொஞ்சமில்லை. என் குடும்பத்தில், என் நண்பர்கள் குடும்பத்தில், பணிக்களத்தில் பழகிய, பார்த்த குடும்பங்களில் விதவைகள், வாழாவெட்டிகள், மலடிகள், வழுக்கி விழுந்தவர்கள், ஆதரவற்றவர்கள் இவர்களிடையேதான் நான் வாழ்ந்தவள். என் பெண்ணியத்திற்கு பாரதி வித்திட்டவன் என்றால் நீரூற்றி, உரமிட்டு வளர்த்தவர்கள் பலர்..அவர்களீல் முதல் இடத்தில் இருப்பவர் தந்தை பெரியார். ஒரு காலத்தில் அண்ணாவின் மேடைப் பேச்சால் ஈர்க்கப்பட்டு அடுக்கு மொழி பேசியவள் நான். ஆனால் கிராமப் பணிக்கு வந்த பிறகு அய்யாவின் பாணியில் பேச்சு வந்துவிட்டது. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவள் என்னாலும் இலக்கியத்தமிழ் எழுத முடியும். ஆனால் நான் எழுதுவது சாமான்ய மானவர்களுக்காக.. என்னைப்போல் ஒருத்தியுடன் பேசுகின்றேன். அவள் மீது பரிவு கொண்ட அண்ணன் தம்பியுடன் பேசுகின்றேன். என் படைப்புகள் அனைத்தும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு.
நான் கண்ட இரு காட்சிகளைக் கூறுகின்றேன்
ஜானகி என் தோழி. அவள் பெரியம்மாவின் பெயர் மீனாட்சி. சிவந்த நிறம் அழகு மங்கை.. நீண்ட கூந்தல் ஐந்து வயதில் ஐந்து நாட்கள் திருமணம். அந்த நாட்களில் ஐந்து நாட்களில் திருமணம் நடக்கும். மீனாட்சியம்மாளின் புகுந்த வீடு நாகப்பட்டினம். மூத்த மருமகளாய்ப் போனாள். கூட்டுக் குடும்பம். வசதியானவர்களும் கூட. ஆச்சாரமான பிராமணர்கள். மீனாட்சி தன் இருபத்தோரு வயதில் விதவையானாள். நீண்ட கூந்தல் மழிக்கப்பட்டது. மொட்டையடித்து முக்காடு போட்டுக் கொண்டாள். இப்பொழுது திருமண வயது 21. மீனாட்சி விதவையானது அவள் 21.வயதில். .சாப்பிடும் உணவிலிருந்து எல்லாம் கட்டுப்பாடுகள். பிறந்த வீட்டுக்கு அவளை அனுப்பவில்லை. . புருஷன் போனாலும் இருப்பது அவன் வீட்டில் என்று சமாதானப்படுத்திக் கொண்டு விட்டாள் சம்பளமில்லா வேலைக்காரி. ஆனால் அப்படி அவர்கள் நினைக்கவில்லை. மரியாதையுடன்தான் வைத்திருந்தார்கள்
காலம் உருண்டோடியது. பிள்ளைகள் பெரியவர்களாகி, படித்த பின் ஊரைவிட்டு ஒவ்வொருவராகச் செல்ல ஆரம்பித்தனர். முதியவர்கள் ஒவ்வொருவராகச் சாக ஆரம்பித்தனர். மீனாட்சிக்கு 81 வயதாகிவிட்டது. மரணம் அவளருகில் வரவில்லை. வீட்டில் எஞ்சியிருந்தவன் பாலு. அவள் வளர்த்த பிள்ளை. அவனுக்கும். வயதாகிவிட்டது. தன் மனைவியுடன் ஏதாவது ஒரு பிள்ளை வீட்டிற்குச் செல்ல நினைத்தான். மீனாட்சியைத் திடீரென்று அழைத்துக் கொண்டு ஜானகியிடம் விட்டுச் சென்றுவிட்டான்.
ஜானகியின் தாயாரின் உடன்பிறந்தவள் மீனாட்சி. இப்பொழுது ஜானகிக்கு தர்ம சங்கடம். அவள் மகன் கலப்புத் திருமணம் செய்திருந்தான். பிரசவத்திற்காகச் சென்ற மருமகள் குழந்தையுடன் ஒரு வாரத்தில் வர இருக்கின்றாள். அவள் மாமிசம் சாப்பிடுகின்றவள். ஜானகியே திணறிக் கொண்டிருந்தாள். அவள் முழு சைவம். தனித்தனி சமையல் என்றாலும் சமையல் அறைக்குச் சென்றால் நறுக்கி வைத்த மாமிச துண்டுகள், சில மீன்கள், இவைகளைக் காண நேரும். தன் அறைக்கு வந்து அழுவாள் ஜானகி. இந்த நிலையில் ஆச்சாரமான தன் பெரியம்மாவை எப்படி வைத்துக் கொள்ள முடியும்? ஜானகி என்னிடம் வந்தாள். விசாரித்துப் பார்த்து ஓர் மடத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டோம். அங்கே சிறுவர்கள் இல்லமும் இருந்தது.. மறுநாளே எங்களை உடனே வரச் சொல்லி தந்தி வந்தது.
அப்பப்பா எத்தனை பிரச்சனைகள்! வாழ்க்கையில் ஏதோ சில காரணங்களைக் காட்டி சில நடை முறைப் பழக்கங்களைக் கூறி விடுகின்றோம். நாமும் அந்தப் பழக்கங்களூக்கு மாறி அதுவே வாழ்க்கையின் வழக்கமாகி விடுகின்றன. பின்னர் அதனின்றும் மாறுவது என்பது இயலாதாகி விடுகின்றது.
மீனாட்சியம்மாள் சாப்பிட மறுத்துவிட்டார். அவர் ஒர் விதவை. அவரை இப்படித்தான் வாழ வேண்டுமென்று பெரியவர்கள் சொல்லி யிருக்கின்றார்கள். ஆச்சாரத்தை விடுவதைவிட . சாப்பிடாமல் செத்துப் போக விரும்புவதாகக் கூறியிருக்கின்றார்
சமையலறையில் சமைப்பவர் ஒரு பிராமணத்தி அம்மாள். ஆனால் உதவி செய்பவர் வேறு ஜாதியைச் சேர்ந்த்தவர். எனவே மற்ற சாதியினர் தொட்டதைச் சாப்பிடுவது ஆச்சாரமில்லை.
அங்கே நடைபெறுகின்ற சிறுவர் இல்லம் அரசு மான்யம் பெற்று நடைபெற்று இயங்குகின்ற ஓர் அமைப்பு.. எல்லா சாதியினரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஒரே சமையல். அங்கிருந்த முதியோர் இல்லத்தில் மீனாட்சியம்மாள் வயதில் யாரும் இல்லை. ஓரளவு நகர்ப்புர வாழ்க்கைக்குப் பழக்க மானவர்கள். மீனாட்சியம்மாள்தான் கூண்டுக் கிளியாய், வாழ்ந்தவர்கள். அதனால் பிரச்சனை. மற்ற ஜாதியினர் சாப்பிட்ட பிறகு சா[ப்பிடுவதும் ஆச்சாரமில்லை. சாப்பாட்டில் வெங்காயம் பூண்டு சேர்க்கின்றார்கள். அது ஆச்சாரமில்லை. எனவே அந்த அம்மாள் சாப்பிட மறுத்து விட்டார். அவர்களை வைத்திருக்க முடியாது என்று இல்லம் கூறியது.
ஆச்சாரம் வகுத்தவர்கள் இது போன்ற நிலைக்கு வருகின்ற வர்களைப் பாதுகாப்பது கடினம் என்று நினைத்துத்தான் உடன்கட்டை ஏறுதலை தீர்வாக நினைத்தார்களா ?! என் ஆத்திரம். நான் கத்தினேன். பரிகாரம் செய்துவிட்டால் தவறில்லை என்றார்கள்
ஒரு காலத்தில் அதாவது நான் சிறு பெண்ணாக இருந்த பொழுது சமுதாய நிலை.
ஒரு பெண் வீட்டுக்கு விலக்கமானால் கொல்லைப் புரத்தில் தள்ளி இருக்க வேண்டும். கொஞ்சம் பக்கத்தில் சென்றாலும் தீட்டு. காலம் மாறியது. தீட்டு கண்டவுடன் குளித்துவிட்டு வீட்டுக்குள் ஒரு பக்கம் உட்கார்ந்து கொள்ளலாம். சமையலறை, சாமி படங்கள் இருக்கும் இடம் வரக் கூடாது. யாரையும் தொடக் கூடாது. அதுவும் மாறியது. குளித்துவிட்டு சமைக்கலாம் என்று வந்தது. இது போன்ற விஷயங்களில் மாற்றிக் கொள்ள முடியும்.
மீனாட்சி அம்மாள் ஒரு விதவை. அவருக்கு இதுதான் சாஸ்திரம் என்று கூறிப் பழக்கமாகி விட்டது. அதை 81 வயதில் மாற்றிக் கொள்ள முடியுமா? வயதான கிழவி அழுத பொழுது நான் திகைத்தேன். அங்கே வேலை பார்த்தவர்களில் ஒருவர் முன் வந்து ஓர் ஆலோசனை சொன்னார். அவர் ஒரு பிராமணன். அவர் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்புவதாகக் கூறினார்.
காலை, மாலை, காப்பி, இரவில் பாலும் பழமும், ஒரு வேளை சாப்பாடு. பேசி முடித்தேன். தேவையான பணம் கொடுக்க ஒப்புக் கொண்டேன். மீனாட்சியம்மாளூம் சமாதானம் ஆனார்கள்.
ஒரு மாதம் கூடக் கழிந்திருக்காது. மீனாட்சியம்மாள் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. நாங்கள் இருவரும் சென்றோம். சாப்பாடு விஷயத்தில் ஏற்பாடு செய்திருந்தாலும் ஏனோ தன் நிலை நினைத்து வருந்த ஆரம்பித்திருக்கின்றார் மீனாட்சியம்மாள். புருஷன் இறந்து அனாதையானதை இப்பொழுதுதான் புதிதாக உணர்ந்தது போல் புலம்ப ஆரம்பித்திருக்கின்றார். கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது குறைந்திருக்கின்றது. சரியாகிவிடும் என்று நிர்வாகத்தினர் நினைத்திருக்கின்றார்கள். ஒரு நாள் தூங்கச் சென்றவர் மறுநாள் விழிக்கவில்லை. உள்ளுக்குள் நினைத்து நினைத்து துக்கத்தில் உடல் தளர்ந்து, தூக்கத்தில் உயிரும் போய்விட்டது. அவர் இறந்தது நிம்மதி கொடுத்தாலும் அவர் கடைசிக் காலத்தைக் கழித்த விதம், இந்த சமுதாயத்தின் விதிகள் அவரைக் கொலை செய்ததைப் போல் உணர்வு. இதை இயற்கையான சாவாக நினைக்க முடியவில்லை. நாம் வகுத்த சில விதிகள் அந்தக் கிழவியைக் கொலை செய்துவிட்டது. போல் உணர்ந்தேன்.
தந்தை பெரியார் சொன்னது சரிதானே ? இந்த பெண்ணையும் அன்றே உடன்கட்டை ஏற வைத்திருந்தால் இப்படி கடைசி நிமிடங்களை வலியுடன் கழித்திருக்க வேண்டாமே !
அடுத்து இன்னொரு நிகழ்ச்சி. அது என் குடும்பத்தில் நடந்தது. என் மாமாவின் மூன்றாவது மகன் ரவி. அவன் மனைவியின் பெயர் சுமதி. ஒரு மகன். 37 வயதில் ரவி செத்துவிட்டான். ஒரே வருடத்தில் சுமதியின் அப்பா, அம்மா, அண்ணன், புருஷன் நால்வரும் இறந்தனர். அவள் எட்டாவது வரைதான் படித்திருந்தாள். ரவி அப்பள வியாபாரம் செய்து வந்தான். அப்பொழுது அவன் வசித்த பகுதியின் அடுக்கு மாடிக் கட்டடங்கள் வளர்ந்து வந்த காலம். கூட்டுறவு முறையில் ஓர் வீடு கடனில் வாங்கி இருந்தான். கீழே முன் பகுதியில் அவன் வீடு. அவர்களுக்கு அடுத்து இருந்தவர்கள் வீட்டில் கணவனும் மனைவியும் அரசுப் பணியில் இருந்தனர். ஒரு மகள் அவளும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்
ரவி இறந்த பிறகு பக்கத்து வீட்டுக்காரருக்கு சபலம் ஆரம்பித்துவிட்டது.. விதவை சுமதியைப் பயமுறுத்தி வசப்படுத்தலாம் என நினைத்திருக்க வேண்டும். சுமதி வீட்டில் இருந்து கொண்டே சமைத்து சாப்பாடு அனுப்பும் தொழிலை மேற்கொண்டிருந்தாள் . அவளைப்பற்றி எனக்கு அமெரிக்காவிற்கு மெயில் அனுப்பினார். அவள் செய்யும் தொழில் பிடிக்க வில்லையாம். நானும் சென்னைக்குப் போக வேண்டி வந்தது. போன பிறகு சுமதி மூலம் இன்னும் பல விஷயங்கள் அறிந்தேன். அங்கே குடியிருப்பவர்கள் வெளியில் போகும் பொழுது அவள் வீட்டிற்குள் இருக்க வேண்டும். விதவைப் பெண் முன் வருவது சகுனம் சரியில்லையாம். காலையில் எழுந்து வரும் பொழுதும் முதலில் அவள் முகத்தைப் பார்க்கக் கூடாதாம் சகுனம் சரியில்லையாம். தாலி அறுத்தவள் முன் வரக் கூடாது. எந்த சுப நிகழ்ச்சிகளிலும் ஒதுங்கி இருக்க வேண்டும். குழந்தையைத் தூக்கினாலும் ஆவிவராதாம். அதாவது உருப்படாதாம். இதைவிட உடன்கட்டை ஏறி நெருப்பில் வெந்திருக்கலாம்.
எனக்குத் தெரிந்த போலீஸ் ஆபீசர் ஒருவரை யூனிபார்முடன் வரச் சொன்னேன். இது போன்று இனி யாரவாது விதவை, வெளிவரக் கூடாது என்று பேசினாலோ, தொல்லை கொடுத்தாலோ, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும். என்றார். பக்கத்துவிட்டுக் காரரை வைத்துக் கொண்டு பொதுவாகச் சொன்னார். நான் வருத்தப் பட்டதாகக் கூறினார். அடுத்த வீட்டுக்காரர் முகம் சுண்டியது. பின்னர் நானும் பேசினேன். இனிமேல் சுமதிக்கு எவனாவது தொல்லை கொடுத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய முறையில் எடுப்பேன் என்றேன். இனிமேல் புகார் வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்றார். ஒரே வாரத்தில் வேறு இடம் பார்த்துப் போய்விட்டார். இந்த வீட்டை வாடகைக்குவிட்டு விட்டார்.
புருஷன் செத்தால் விதவை. அவன் விட்டு ஓடிப்போனால் அவள் வாழாவெட்டி. குழந்தை இல்லையென்றால் மலடி. எவனோ கெடுத்துவிட்டிருந்தால் வழுக்கிவிழுந்தவள் ,ஆதரிப்பார் இல்லையென்றால் அனாதை.. பெண்ணுக்கு எத்தனை பட்டங்கள்?! எத்தனை பாடுகள்?!
பூவும் பொட்டும் புருஷன் வரும் முன்னாலேயே எங்களுக்கு உண்டு. மலட்டுத்தனமுள்ள ஆண்கள் கிடையாதா? பெரிய மனிதப் போர்வையில் சின்னப் புத்தியை வைத்துக் கொண்டு தட்டிக் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு அழுத்திப்பிடிக்கும் அவலமான ஆண்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்?. எங்கள் புகார்களைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கு எல்லையே கிடையாது. சீர்திருத்தம் என்று கூறி சின்னப் புத்தியைக் காட்டுகின்றான். பெண்ணியத்திற்கு வக்காலத்து வாங்குவதுபோல்பேசுவதும் உதவிசெய்ய வருவதுபோல் காட்டிக் கொண்டு பெண்களைச் சீர்குலைப்பவரகளை என்ன செய்யலாம்.
அன்பு காட்ட வந்தவள் பெண். சுகம் கொடுக்க வந்தவள் பெண். சொந்தப் பிள்ளையைச் சுமந்து, பெற்று வளர்த்து குடும்பத்தைக் காப்பவள் பெண். ஏன் அவளுக்கு இந்தக் கொடுமைகள்?
இந்த சமுதாயத்தில் எதிர்நீச்சல் போட்டுப் பணியாற்றியவள் நான். என் உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் குரல் அய்யாவுடையது. அவர் பேசியது போல் கடுமையாகச் சாடியவர் கிடையாது அவரைப் பார்க்க விரும்பினேன். பேச விரும்பினேன். என் ஆசைகள் நிறைவேறியது. தொடரின் ஆரம்பத்தில் பாரதி என்னை ” துணிச்சல்காரி ” என்று கூறுவதாக எழுதியிருந்தேனே. அந்தப் பட்டம் எனக்குக் கொடுத்தது. தந்தை பெரியார் அவர்கள். பல்கலைக் கழகப் பட்டத்தைவிட அதனைப் பெரிதாக மதிக்கின்றேன்.
நான் இறைவழிபாடு செய்கின்றவள். ஆனால் எந்த மதங்களுக்குள்ளும் என்னை அடக்கி வைக்கவில்லை.. என் நம்பிக்கைகள், நடைமுறைகள்பற்றிய முழுவிபரமும் அய்யாவிடம் முதலில் கூறவிட்டே அவரைப் பார்த்தேன். அவரிடம் போலித்தனமாகப் பேசவில்லை. கேட்ட கேள்விகளுக்குத் தயங்காது பதில் சொன்னேன். அதைத்தான் துணிச்சல் என்றார். யாருக்கும் பயப்படக் கூடாதாம். துணிந்து மனத்தில் நினைப்பதைச் சொல்ல வேண்டுமாம். அய்யாவின் மீது மதிப்புண்டு. கருத்துக்கள்பற்றி சொல்ல வேண்டுமென்றால் எனக்கு மாற்றுக் கருத்துக்களும் உண்டு. என்னிடம் கோபம் கொள்ளாமல் பாராட்டிய அந்த பெருந்தகை மீது மதிப்புவராமல் இருக்குமா?
பெண்களுக்காக அவர் பேசிய சில கருத்துக்களை மேலும் பதிய வேண்டும்.
“புருஷன் கள்ளத்தனமா ஒருத்தியை வச்சுக்கிடா பெண்ணும் மூணு பேரை வச்சுக்கட்டும். அப்பொத்தான் இவனுக்கு புத்திவரும் ”
என்ன ஆத்திரம்?! குடும்பத்தில் கூட வயதானவர்கள் கோபத்தில் பிள்ளைகளைக் கண்டபடி திட்டுவோம். அது ஆற்றாமை, கோபம். இத்தனைக்கும் அடிப்படை பாசம்.
மனம் ஓர் கற்பனைத் தேரில் பறக்க ஆரம்பித்தது. எனக்கு ஒரு ஆசை.
ஓர் இருக்கை தயார் செய்து கொள்ள வேண்டும். அங்கே உட்காருகின்றவர்களைப் பேசச் சொல்ல வேண்டும். பொய் பேசினால் தீப்பிழம்பு தோன்றி பொய் பேசுகின்றவர்களை எரித்துவிடும் சக்தி அதற்கு இருக்க வேண்டும். .
ஆன்மீகம் முதல் அரசியல்வரை வேடமிட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றோம். இதில் ஒருவர் மட்டும் குற்றவாளியல்ல. மனித சமுதாயமே இந்த விஷயத்தில் மட்டும் கூட்டணியாக சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த சத்தியக் கல்லில் உட்கார அழைக்க வேண்டும். பேசச் சொல்ல வேண்டும். உடனே எல்லோரும் சரி என்பார்கள். கல்தானே, அதற்கு சுடும் சக்தி ஏது? மூடப்பழக்கம், மூட நம்பிக்கைகளில் ஒன்று அதனால் துணிவுடன் உட்கார எல்லோரும் வருவார்கள். அதுவே உண்மையாக இருந்தால் ஒருவரும் வரமாட்டார்கள்..இப்பொழுது வாழ்வியலே ஓர் கூத்து மேடையாகி விட்டது.
அன்னிபெசண்ட் அம்மையார், ராஜாராம் மோகன்ராய் போன்றாவர்கள் உறுதி மொழி கேட்டுத்தானே தங்கள் அமைப்புகளில் சேர்த்தார்கள். திருமணச் சடங்குகளில் கூட உறுதி மொழிகள் உண்டு. ஆனால் தாம்பத்தியத்திலும் இப்பொழுது பொய்மை நுழைந்து விட்டது. அகவாழ்வு இப்படியென்றால் புறவாழ்வில் பொய்மொழிகள். தேர்தலில் வென்ற பிறகும் பதவி ஏற்கும் முன் உறுதி மொழி கொடுக்கின்றோம். உதடுகளீல் உச்சரிப்பதுடன் சரி பின்னர் அந்த உறுதிகள் உதிர்ந்துவிடும்.
. நம்மிடையே ஒரு புராணக் கதையுணடு. பஸ்மாசுரன் ஒரு வரம் வாங்குகின்றான். அவன் யார்தலை மீது கை வைத்தாலும் அவன் எரிந்து சாம்பலாகிவிடுவான். வரம் வாங்கியவனோ வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைக்க முயற்சி செய்கின்றான். ஒரே ஓட்டப் பந்தயம். இறுதியில் அவன் தன் தலையிலேயே தன் கையை வைத்து அழிந்து போகின்றான்.
உலகில் தோன்றிய உயிரினங்களில் மனிதனின் பகுத்தறிவு வியக்கத் தக்கது. ஆனால் பகுத்தறிவுக்கும் தனி உரை எழுதப்பட்டு பண்பட்ட வாழ்க்கையையும் மயக்க நிலைக்குள் தள்ளி விட்டோம். “தென்னகத்தில் பகுத்தறிவும் பாமரனும்” ஆய்வு செய்து கொண்டிருந்தேன். வரலாற்றுச் செய்திகள், சான்றுகள் சேகரித்துக் கொண்டிருக்கும் பொழுது. உடல்நிலை காரணமாக முடிக்க முடிய வில்லை. காலம் கருணை காட்டினால் ஆய்வு முடித்து எழுதுவேன். .
நல்லவர்கள் சிந்திக்கட்டும். வல்லவர்களிடம் மறைந்து கொண்டிருக்கும் நல்ல சிந்தனையைத் தட்டி எழுப்புங்கள். உலகம் மூழ்கி அழிந்துவிடும் முன் காப்பதற்கு ஒவ்வொருவரும் அவர்களால் ஆன முயற்சி செய்து வருங்கால சந்ததிகளுக்கு நல்வாழ்வைக் கொடுப்போம்.
காழ்ப்புணர்ச்சி விடுத்து மனித நேயம் காப்போம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.
இந்த அம்மாள் எப்பொழுதும் ஆணினத்தையே குறை கூறூகின்றார்களே, பெண்களிடம் குறை கிடையாதா? ஆண் சிறந்தவனா, பெண் சிறந்தவளா என்பதல்ல பிரச்சனை. மனிதன் அமைத்த குடும்பம் அமைதியுடன் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதுதான் என் இலக்கு
அடுத்து விரிவாகப் பேசுவோம்
தொடரும்
“அன்பான சுபாவம் கொள் .பிறர்க்குத் தக்கபடியும், சூழ்நிலக்குத் தக்கபடியும் நடக்க முயற்சி செய். மனோ திடத்துடனிரு. ஒரு பொழுதும் நம்பிக்கை இழக்காதே ”
சுவாமி சிவானந்தா
படத்திற்கு நன்றி
- குந்தி
- தொலைந்துபோன கோடை
- கைலி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12
- பாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9
- சௌந்தரசுகன் 300 / 25
- எஞ்சினியரும் சித்தனும்
- துருக்கி பயணம்-1
- முள்வெளி அத்தியாயம் -8
- 6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.
- 1.பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-1)
- பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு
- அசோக மித்ரனும் – என்டிஆர் இலக்கிய விருதும்.
- குகைமனிதனும் கோடிரூபாயும் நூல்
- வஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’
- வைதீஸ்வரன் வலைப்பூ
- வசந்தமே வருக!
- நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..
- யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.
- An evening with P.A.Krishnan
- இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்
- சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1
- வளர்ச்சி…
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- படிமை திரைப்பட பயிற்சி இயக்கம்
- நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளி
- தாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது !
- தோல்வியில் முறியும் மனங்கள்..!
- நன்றி நவிலல்
- முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?
- நேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா
- வேழ விரிபூ!
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது
- ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25
- வலைத் தளத்தில்
- ”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது
- இந்நிமிடம் ..
- வெயில் விளையாடும் களம்