வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 14

This entry is part 2 of 33 in the series 27 மே 2012

 

அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்

 

சென்னைக்கருகில் ஓர் மகளிர்மன்றம்

அன்னை கஸ்தூரிபாய் மகளிர்மன்றம்

 

தலைவி பங்கஜம்.  செயளாளர் பேபி. ஏறத்தாழ 600 உறுப்பினர்களைக் கொண்டு 45 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. சுறுசுறுப்பான உறுப்பினர்கள் இருப்பினும் பேபியின் கடும் உழைப்பில் பங்கஜம் ஒத்துழைப்புடன் வளர்ந்த ஓர் மன்றம். அந்தக் காலத்தில் சங்கீதம், இந்தி முதலியன கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் இருந்தன. ஆனந்த விகடன் திரு வாசன் அவர்களின் புதல்வர் திரு பாலா அளித்த நிதி உதவியால் ஓர் சிறு கட்டடமும் கட்டிக் கொண்டனர். குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு லேடி டாக்டர் வந்து மன்ற உறுப்பினர்கள்,, அவர்கள் குழந்தைகள் இவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வார். தடுப்பூசி போடுவதிலிருந்து குழந்தைகளுக்குத் தேவையான உடல்நலமும் கவனிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டடத்தை ஒட்டி ஓர் ஏரி உண்டு. அங்கு தண்ணீர் கிடையாது. ஏழைகளின் குடிசைகள் இருக்கும். பேபி அவர்களிடம் அக்கறை கொண்டு அவர்களின் நலனையும் கவனிப்பாள். மழைக்காலங்களில் அவர்கள் தவிக்கும் பொழுது இவள் வீட்டு வாயிலில் சமையல் நடக்கும். உணவு வாங்கிப் போக வருவார்கள். பேபியுடன் சில உறுப்பினர்களும் நகர்ப்புரம் சென்று நன்கொடை வசூலித்து துணிமணிகள், போர்வைகள் வாங்கிக் கொடுப்பார்கள்.

அவர்கள் குடும்பங்களில் பிரச்சனையென்றால் உடனே பேபியின் வீட்டுக் கதவு தட்டப்படும். பல ஏழைகளை வீட்டில் வைத்துக் காப்பாற்றியிருக்கின்றாள். படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பி யிருக்கின்றாள். பெண்களுக்குத் திருமணம் செய்தும் வைத்திருக் கின்றாள். அனாதைக் குழந்தை வந்தால் இல்லங்களுக்கு அனுப்பி வளர்க்கச் சொல்லிவிடுவாள். பேபி கிறிஸ்துவப் பெண்ணாக இருந்தாலும் மற்ற மதங்களிலும் சம நோக்கு உள்ளவள். இவள் பெரிதும் போற்றி வந்தவர் மையிலாப்பூர் குருஜி அவர்கள். அவள் நடத்திய பள்ளிக்கும் அவர் பெயர்தான். அவள் வீட்டிலே மாதாவின் படத்துடனுன் காமாட்சி படமும் வைத்திருந்தாள்

இந்த மகளிர் மன்றம் மக்கள் திலகம் உயர்திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தொகுதியில் அமைந்திருந்தது. பல உறுப்பினர்கள் சத்தியா ஸ்டுயோவிற்குப் போய்ப் பார்ப்பதுண்டு. பேபிக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர்கள் எம்.எல்.ஏ அல்லவா? ஆர்வம் அத்துடன் நிற்க வில்லை. திரு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று பல நடிகர்கள், பல நடிகைகளையும் அவள் மகளிர் மன்றத்திற்கு அழைத்து வந்திருக் கின்றாள். சென்னையிலுள்ள பல பெரும் தனக்காரர்களை அறிமுகம் செய்து கொண்டு மன்றத்து உறுப்பினர்களுக்குப் பல நன்மைகள் செய்திருக்கின்றாள். இந்த மன்றத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் பெண்கள் கூட்டுறவு நுகர்வோர்க் கடைகள் இரண்டுதான் இருந்தன. ஒன்று இவர்கள் மன்றம் நடத்திக் கொண்டுவருகின்றது..

பேபியின் முயற்சியும் கடும் உழைப்பும் சாதாரணமானதல்ல. 72ல் நான் செங்கை மாவட்டமகளிர்நல அதிகாரியாகப் பதவி ஏற்றேன். சில நாட்களில் நான் பேபியைச் சந்திக்க வேண்டி வந்தது. அன்று முதல் இன்று வரை எங்கள் நட்பு தொடர்ந்து வருகின்றது.

அந்த ஊருக்கு போலீஸ் நிலையம், வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வர்களைப் போய்ப்ப்பார்த்து வெற்றியும் பெற்றாள். அப்பகுதிக்கு பஸ் வரவேண்டும் என்றும் முயற்சி செய்து வெற்றியும் பெற்றாள். ஒரு சமயம் ஏரிக்குள் குடிசைகளை நீக்க அதிகாரிகள் வந்து வேலையையும் ஆரம்பித்து விட்டனர். இவள் பதறினாள். பலரைச் சந்தித்தாள். மதிப்பிற்குரிய ஜெயலலிதா அம்மா வீட்டிற்கும் சென்று ஓர் மனுவைக் கொடுத்தனர். எப்படியோ குடிசைகள் காப்பாற்றப்பட்டன. பின்னர் அதன் கரையில் அரசு அவர்களுக்கு வீடுகளும் கட்டித் தந்தன. பேபி தன் பணிகளை அங்கும் தொடர்ந்து செய்தாள். அருகில் இருக்கும் கம்பெனிகளில் அவர்களுக்கு வேலைவாங்கிக் கொடுப்பாள். தினமும் தன் வீட்டிலிருந்து அங்கு நடந்து போவாள். பேபியின் சேவை ஆத்ம பூர்வமானது. ஆனால் அவளுக்கு நல்ல பெயர் கிடையாது . ஏன் ?

அவளிடன் ஓர் பெரும் குறை. அலங்காரப் பிரியை. இயற்கையான அழகி. செதுக்கிவைத்த சிற்பம் போல் இருப்பாள். தங்க நிற மேனியாள். சுருட்டைமுடி. சாதாரணமாக உடுத்தினாலும் பேரழகியாகத் தெரிவாள். ஆனால் அவளோ அளவுக்கு அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்வாள். உதட்டுச் சாயம் போடாமல் வெளியில் வரமாட்டாள். எங்கோ நாடக மேடைக்கு நடிக்கப் போவது போன்ற முகத்தில் அரிதாரப் பூச்சு. பொது வாழ்வில் இருப்பவர்கள், அதிலும் சேவை செய்கின்றவர்களுக்கு இத்தனை சிங்காரமா? இது என் விருப்பம் என்பாள்.

தந்தை பெரியாரின் கூற்றுப்படி பிற ஆண்கள் இவளை நல்லவளாக நினைக்கவில்லை.. என்றாவது ஒருநாள் கிடைப்பாள் என்று பழக வருவார்கள். கிடைக்கமாட்டாள் என்று தெரியவும் தூற்றிவிட்டுச் செல்வார்கள். சிலருக்கு தொடர்பு இருந்ததைப் போன்று பொய் மொழி கூறி பெருமைபட்டுக் கொள்வார்கள். அப்படிப் பேசுகின்றார்களே என்று வருந்துவாள். ஆனாலும் மேக்கப்பைக் குறைக்கவில்லை. தன் சுதந்திரம் என்று வாதிடுவாள். மயிலாப்பூர் குருஜியிடம் ஓர் வேண்டுகோளையே வைத்தாள். அன்று நானும் உடன் இருந்தேன். தன்னைப்பார்த்தால் “ஆண்களுக்குத் தவறான எண்ணம் வரக் கூடாது.” இதற்கு எதற்கு மந்திரித்த எலுமிச்சம்பழம்? குருஜிக்கும் அவள் பலஹீனம் தெரியும். என்னிடம் பேசச் சொல்லிவிட்டார். நான் என்ன அறிவுரை கூறியும் அவள் மாறவில்லை

கடைசியில் ஓர் வழி கண்டுபிடித்தேன். . அவளிடம் ஓர் வழக்கம் உண்டு. எங்கும் தனியாகப் போக மாட்டாள். சில மன்ற உறுப்பினர்களை உடன் அழைத்துச் செல்வாள். சில அதிகாரிகளிடம், முக்கியமான வர்களிடம் செல்ல வேண்டி வரும் பொழுது அந்தக் கூட்டத்துடன் என்னையும் சேர்ந்து வரச் சொல்வாள். அவள் மேக்கப்பை விடா விட்டால் இனி உடன் வரமாட்டேன்,  வெறுப்பாக இருக்கின்றது என்று சொல்லி விட்டேன். அவள் கூப்பிட்டால் உடன் செல்வதில்லை. பார்க்கப் போவதில்லை. எவ்வளவோ முயன்றாள். இந்த முயற்சியை நான் முன்னதாகவே கையாண்டிருக்க வேண்டும் என்று என்னையே நான் கடிந்து கொண்டேன். பொது நலப் பணி என்பதால் விலகியிருக்க முடியவில்லை. எந்த கெட்ட நோக்கத்திலும் தன்னைச் சிங்காரித்துக் கொள்ளவில்லை யென்று தெரியும். ஆனாலும் அவளின் தோற்றம் அவளுக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தன. ஆண்களைக் குறை சொல்ல முடியாது.  அழகைக் காட்டிக் காரியத்தைச் சாதித்துக் கொள்வது போன்றுதான் நினைக்கத் தொன்றும்.

கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டாள். மேக்கப் இல்லாவிட்டாலும் அவள் அழகை மறைக்க முடியாது. எளிய உடையிலும் அவள் அழகாய்த் தெரிந்தாள். மாறியதில் தொல்லைகள் வருவது நின்றது. ஆனால் கெட்ட பெயர் மாறவில்லை.. அழிக்க முடியாத கரும் புள்ளியாக அவப்பெயர் நின்றுவிட்டது. நானும் ஒய்வு பெற்ற பின் சென்னையில் வேறுபக்கம் குடிபோய் விட்டேன். அவள் பொதுப் பணிகளும் குறைந்துவிட்டன. அந்தப் புதிய நகருக்கு மட்டும் செல்வாள். மற்றப் பணிகளை மற்றவர் களிடம் கொடுத்துவிட்டாள். அவள் ஒரே மகனும் அமெரிக்கா  சென்று விட்டான். இவளும் என்னைப் போல் சென்னை, அமெரிக்கா என்று வாழ ஆரம்பித்துவிட்டாள்.

இவள் வளர்த்து ஆளாக்கிய ஒருத்தியே ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தனியாகப் படுத்திருந்த இவள் கணவரை அடித்துப் போட்டு திருட்டு வேலையும் செய்தாள். பேபிக்கு மனம் கலங்கியது.. ஆனாலும் வளர்த்தவளை போலீசிடம் காட்டிக் கொடுக்க வில்லை. நேரில் போய்த் திட்டிவிட்டு வந்தாள் அவ்வளவுதான். அமெரிக்காவில் அவள் இருக்கும் ஊரில்தான் நானும் இருக்கின்றேன். என் மகனும் இங்கே தான் வேலை பார்க்கின்றான். விதி எங்களைப் பிரிக்கவிலை. ஒரே இடத்தில் தோழிகளைச் சேர்ந்து வாழ வைத்துவிட்டது. இங்கும், இந்த வயதிலும் அவள் வேலைக்குப் போகின்றாள். கிடைக்கும் பணத்தினை முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுகின்றாள். இடம் மாறலாம். மனம் ஒன்றுதானே.

பொது நல வாழ்க்கையில் குறிப்பாக எளியவர்க்குச் சேவை செய்ய நினைப்பவர்கள் முதலில் தங்களை எளிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். கனிவான பேச்சும் எளிய தோற்றமும்தான் நம்பிக்கையை ஏற்படுத்தும். அந்த நம்பிக்கையில்தான் நலிந்தவர்களை நெருங்க முடியும்.

இன்னொருவரைக் காட்ட விரும்புகின்றேன். அது ஓர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம். ஓர் அன்புக்குடில்.

அதை நடத்துபவர் செண்பகத்தம்மாள்..காலையில் பள்ளிக்குப் போகும் முன்னர் கூடி நின்று தேவாரம் சொல்லிவிட்டுப் புறப்படுவார். வெளியில் போகும் முன் அம்மாள் ஒவ்வொரு குழந்தையையும் பார்ப்பார்கள். வரிசையாக வந்து வணக்கம் சொல்லி விட்டுப் போவார்கள். அம்மாவும் அவர்கள் தலையைச் சரியாக வாரியிருக்கின் றார்களா, உடை சரியாக போட்டிருக்கின்றார்களா என்று பார்த்து அனுப்புவார்கள். மாலையில் குழந்தைகள் வந்த பிறகும் பள்ளியில் நடந்தவைகளைக் கேட்பார்கள். இரவுப் பாடம் படிக்கும் பொழுதும் அடிக்கடி சென்று பார்வையிடுவார்கள். உறங்கும் முன்னரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ளும் அந்த அம்மாள் சிவகாசியில் பெரும் பணக்காரி..

சிவகாசி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது பட்டாசும் தீப்பெட்டியும்தான். குழந்தைத் தொழிளாளர்கள் அதிகம். அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சட்டம் வந்தும் இது தொடர்ந்தது. கண்காணிப்பு அதிகமாகவும்தான் குறைந்தது. இப்பொழுது உள்ள நிலையை நான் பார்க்கவில்லை.

தீப்பெட்டித் தொழில் ஓர் குடிசைத் தொழில். வீட்டில் இருந்து கொண்டே, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டே செய்ய முடிந்த தொழில். சிவகாசிமட்டுமல்ல, சுற்றியிருக்கும் கரிசல்மண் பூமியைச் சேர்ந்த கிராமங்களில் சோறு போட்ட தொழில்.. வானம் பார்த்த பூமி. மழை பொய்த்து விட்டால் வேறு வேலைகள் கிடையாது. எட்டயபுரத்திலும் வேறு வீடுகளூக்குச் செல்லும் பொழுது நானும் தீக்குச்சி அடுக்கி இருக்கின்றேன்.

சிவகாசிக்கு இன்னொரு பெருமை உண்டு.. சிவகாசியில் அச்சாகும் காலண்டர்களுக்கு உலகளவு புகழ் உண்டு. கடவுள் படங்கள்  வருவதைக் கண்ணாடி போட்டு பூஜைக்கு வைப்பவர்கள் அதிகம். புகழ் வாய்ந்த அச்சகமான லித்தோ காரனேஷன் அச்சகத்தின் உரிமை யாளர்களில் ஒருவர்தான் சண்பகத்தம்மாள். அவர்கள் மகன் தர்மர். சிவகாசி நகராட்சிக்குத் தலவைராகவும் இருந்திருக்கின்றார். தர்மர் அவர்களின் துணைவியாரின் பெயர் லீலாவதி அம்மையார். பிரிக்கப்படாத இராமனதபுர மாவட்டத்தில் சமூக நலவாரிய உறுப்பினரவார் திருமதி லீலாவதி தர்மர். எனவே எங்களூக்குள் பழக்கம் ஏற்பட்டது. இலக்கியத்தில் புலமைபெற்றவர்.  சிவகாசி சென்றால் அவர்கள் வீட்டில் தான் தங்குவேன். நாங்கள் இருவரும் இலக்கிய உலகில் உலாவுவோம்.

திருமதி சண்பகத்தம்மாள் வீட்டில் தங்காமல் விடுதியில் தங்கினார்கள். ஆடம்பரம்தவிர்த்து எளிய வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார்கள். இல்லத்திலேயே தங்குவதால் அதனை நன்கு கவனித்துக் கொள்ள முடியும் என்றார்கள் அதுமட்டுமல்ல குழந்தைகளுக்குச் சமைக்கும் உணவைத்தான் குழந்தைகளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவார்கள். எல்லோருக்கும் தரமான உணவு கிடைக்கத் தானே உடன் இருப்பார். அவர்கள் எதுவும் பேச வேண்டாம் எதையும் விளக்க வேண்டாம். ஆனால் அவர்களின் எளிய தோற்றத்தில் ஓர் கம்பீரம். தொழவேண்டும் என்ற உணர்வைத் தூண்டும் அன்பின் வடிவம்.

பெண்கள் அலங்காரம் செய்வதைக் குற்றமாகக் கூறுவில்லை. திருமணத்திற்குப் போகும் பொழுது விருந்திற்குப் போகும் பொழுது அலங்காரம் செய்துகொள்வது சரி. அப்பொழுதும் நாடக மேடைக்குச் செல்வதுபோல் அரிதாரப்பூச்சும் அளவுக்கு மீறிய அலங்காரமும் மதிப்பைக் கொடுப்பதைவிட அவர்கள் தரத்தைக் குறைக்கும். காட்சிப் பொருளாகிவிடுவர். நேரில் கேலி பேச மாட்டார்கள். ஆனால் அவர்களின் நற்பெயரில் கரும் புள்ளிகள் தோன்றிவிடும்.

நாகரீகம் என்பது நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்வது. பொது வாழ்வில் இருப்பவர்கள் நிச்சயம் தங்கள் தோற்றத்திலும் கவனம் வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் தோற்றம் தான் மதிப்பையும் நம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றது. பின்னர் கனிந்த பார்வையும் இனிய பேச்சும் பிறரை நம்மிடம் கொண்டுவரும்.

பெண்ணிய அமைப்புகள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பெண்களின் நன்மைக்காகப் பல ஆண்டுகள் களத்தில் இருந்தவள். பல ஆண்கள் மடல்கள் மூலமாக அவர்கள் இன்னல்களைக் கூறி என்னுடன் வாதிட்டு வருகின்றார்கள். இப்பொழுது சமூக நலத்துறையில் ஒரு பிரிவில்தான் குடும்ப நல சர்ச்சைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுதும் சமுதாயத்தில் 95 சதவிகிதம் பெண்கள் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டிருப்பதை அறிவேன். தேனீக்களைப் போல் சுற்றிவரும் பெண்களைப் பார்த்து அவர்களுக்குப் பிரச்சனைகள் இல்லையென்ற முடிவிற்கு வர முடியாது. வேலை பார்க்கும் இடங்களிலும் உண்டு வீட்டிலும் உண்டு. மனைவிக்கும் உண்டு தாய்க்கும் உண்டு.

பெண்  இவளின் பன் முகங்கள் … தாய், மனைவி, மகள், மருமகள், சகோதரி, அண்ணி, உடன்பிறந்தவர்களின் மனைவிகள், நாத்தனார்கள், மற்றும் உறவுப் பெண்கள், நண்பர்களின் மனைவிகள்,  வேலைக்காரி, உடன் வேலை பார்ப்பவர்கள் இப்படி இன்னும் பல நிலைகளில் பெண்கள்.

ஆண்களிலும் வரிசையுண்டு. கணவன், மகன், மருமகன், தந்தை, சகோதரன், மாமன், சிற்றப்பா, மாமனார், நாத்தனார், சகோதரிகளின் கணவர்கள், மற்றும் உறவினர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள்

அன்றாடம் பல பிரச்சனைகள். உரிமையால் சண்டை, உணர்ச்சிகளின் வேகத்தால் கொதிப்பு, வகைவகையாக நம்மை ஆட்டிப்படைக்கும் மனம் வாழ்வியலில் முக்கியபங்கு வகிக்கின்றது. இத்தனைக்கும் ஒவ்வொரு வரும் ஈடுகொடுத்து வாழ வேண்டியிருக்கின்றது. அகவாழ்வு, புறவாழ்வு இரண்டிலும் பிரச்சனைகள் வரும் .காலச் சுழற்சியில் ஏற்படும் மாறுதல்கள், ஊடகங்களால் ஏற்படும் உள்ளத் தவிப்புகள் இவைகளும் மனத்தைத் தன்பக்கம் வயப்படுத்தி வழிநடத்தும். எனக்குப் பிரச்சனை யில்லை என்று ஒரு மனிதன் சொன்னால் அது பொய். மனத்தைப் போன்று விசித்திரமானது ஒன்று கிடையாது. முன்பின் அறியாதவர்களிடம் கூட விருப்பு வெறுப்பை உணரும். அப்படியிருக்க ஓரளவு தெரிந்தவர்களாயினும் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகளை மறக்க முடிவதில்லை. மனக்குரங்கு ஆட்டி வைக்கும் பொழுது மனிதனின் அறிவு ஒதுங்கி விடுகின்றது. நமது புலம்பலைக் கேட்க பிடிக்கவில்லை போலும் !

மற்ற உயிரினங்கள்கூட தங்கள் குடும்பத்துடன் எத்தகைய பாசத்துடன் வாழ்கின்றன! உயிரினங்களில் மிக உயர்ந்தவன் மனிதன் ! நாம் எப்படி வாழ வேண்டும் ? உணர்ந்து நடக்க முயல்வோம்.

குடும்பத்தை அமைக்கும் பொழுது மனிதன் பிரச்சனைகளைச் சிந்திக்க வில்லை. இவைகள் பின்னால் வரும் அனுபவங்கள். பிள்ளை வேண்டும். வாழ்க்கைத் துணையும் கிடைத்தாள். அங்கே அவனுக்கு அமைதியும் கிடைத்தது. காலம் செல்லச் செல்ல சூழ்நிலைத் தாக்கத்தில் சுகம் வருவது போல் இருந்தாலும் கூடவே பிரச்சனைகளூம் ஒட்டிக் கொண்டு வருவதை ஆரம்பத்தில் உணரவில்லை. சுகம் அனுபவித்த பின்னர் உதறிடவும் முடியவில்லை. இப்பொழுது மனிதன் பல பிரச்சனைகளில் உழன்று கொண்டிருக்கின்றான். அதில் பெண் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிட்ருக்கின்றாள். அதுதான் உண்மை. நாட்டு விடுதலைக்கு வெளி வந்தவர்கள், வீட்டுப் பெண்ணின் நிலையையும் உணர்ந்து அதனையும் சீரமைக்கும் முயற்சியைத் தொடங்கினார்கள்.. சில சட்டங்கள் வந்தன. முதலில் முடங்கிக் கிடப்பவர்களைத் தட்டி எழுப்ப வேண்டும். எனவேதான் விழிப்புணர்வு முயற்சிகளைக் கையாள ஆரம்பித்தார்கள். அங்கும் இங்கும்  இந்த முயற்சி பலராலும் நடந்தாலும் அன்னிபெசண்ட் அம்மையார், , ராஜாராம் மோகன்ராய், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் தீவிரமாக முன்னேற்றப் பாதைக்கு அடிக்கோல் நாட்டினர் என்பதை மறத்தல் கூடாது

இலக்கை அடைய எண்ணங்கள் மட்டும் போதாது. செயல்வடிவம் பெற வேண்டும் என நினைக்க ஆரம்பித்தனர். பெண் சமுதாயத்தில் அவர்களுக்காக ஆக்க பூர்வமான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும் என்றும் உணர்ந்தனர். மகளிர்நலத்துறை தோன்றியது.தோற்றுவித்த பல பிரிவுகளை ஒருங்கிணத்தனர். அனுபவன்கள் பெற பெற செப்பனிட்டனர். மகளிர் நலத்துறை ஆலமரமானது. இனி வரும் பகுதிகளில் அரசு, தொண்டு நிறுவனங்கள் மூலம் நடக்கும் பணிகளைப் பார்க்க இருக்கின்றோம்.

அடுத்து பார்க்கலாம்

“எளிய வாழ்க்கை நடத்து.உன் எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்கட்டும். உண்மையே பேசு. எல்லோரையும் நேசி. எல்லாவற்றிலும் உன்னையே காண். உன் காரியங்களிலெல்லாம் நேர்மையாக இரு. எதைப்பற்றியும் கவலைப்படாதே. எப்பொழுதும் முகமலர்ந்திரு. எப்பொழுதும் ஒரு நிலைப்பட்ட சமான மனோ நிலையுடனிரு.”

சுவாமி சிவானந்தா

(தொடரும்)

 

Series Navigationதங்கம் 8 – சீனாவில் தங்க நிலவரம்தொல்கலைகளை மீட்டெடுக்க
author

சீதாலட்சுமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *