வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16

This entry is part 21 of 41 in the series 10 ஜூன் 2012

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்

நினைவலைகள் 60 ஆண்டுகளுக்குமுன் செல்கின்றது.

சுதந்திரம் பெற்றவுடன் என்ன மகிழ்ச்சி ! என்ன பெருமை. திருவிழாக்களின் உற்சாகம். புதிய ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதுபோல் புதிது புதிதாக திட்டங்கள் வகுத்து, செயலாற்றத் தொடங்கினோம். கட்டப்பட்ட அணைக்கட்டுக்களின் காலத்தைப் பாருங்கள். ஆட்சிகள் மாற்றத்தில் அணைகள் இடிக்கப்படவில்லை. பராமரிப்பும் நிற்கவில்லை. மின்வசதியில்லா கிராமங்களைப் பார்த்துப் பார்த்து இணைப்புகள் கொடுக்கப்பட்டன (இன்று இணைப்பு இருந்தும் கரண்ட் வரவில்லையே என்று இருக்கின்றதா? இதற்கு அரசியல் மட்டும் காரணமல்ல. பயன்பாடு அதிகரித்து விட்டது. யார் இருந்தாலும் இந்தப் பிரச்சனை வரத்தான் செய்யும் அவ்வப்பொழுது இதனை நிர்வாகம் கண்காணித்துச் செயல்பட வேண்டும்) பாதைகள் போடப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலையங்களும் திறக்கப்பட்டன , வளர்ச்சித் திட்டங்கள் ஆரம்ப காலங்களில் வேகமாகத் தொடங்கப்பட்டன. தொழில் அமைச்சர் ஒன்று சொல்லி நாங்கள் கேள்விப் பட்டிருக்கின்றோம். “தினமும் ஓர் தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும்”. ஆர்வத்துடனும் வேகத்துடனும் செயல்பாடுகள் இருந்தன.

பல துறைகளில் ஒன்றாகப் பிறந்த மகளிர் நலத்துறை பணிகளை ஆரம்ப காலத்தில் பார்ப்போம். அப்பொழுது பிரிக்கப்படாத மாகாணமாக இருந்தது. திருமதி பாரிஜாத நாயுடு அவர்கள் விரிவாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் .மகளிர் நலத்துறையில் பணிகள் திட்டமிடப்பட்டு ஓர் இலக்கை நோக்கி மையங்கள் அமைக்கப்பட்டன.

மகளிர் நலக் கிளைகள் ( womens welfare branch )

தமிழ் நாட்டில் ஆரம்பகாலத்தில் 48 இடங்களில் மகளிர் நலக் கிளைகள் தொடங்கப்பட்டன. தமிழ் நாட்டின் பரப்பளவுக்கு இது மிக மிகக் குறைந்த எண்ணிக்கை. இந்த மையத்தின் பணிக்களமும் குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிவிடும். வெளியூர் செல்வது கிடையாது. பள்ளிக்கூடம் போல் இயங்கியது.

காலையில் குழந்தைகள் கல்வி நடக்கும். (அக்காலத்தில் இப்பொழுது பார்க்கும் நகர்ப்புரத்து குழந்தைகள் பள்ளிகள் கிடையாது. LKG, UKG, PRE SCHOOL, PLAY SCHOOL) இந்த மையத்தில் வேலை பார்த்த பெண்ணின் பதவிப் பெயர் “அமைப்பாளர்” என்று மட்டுமே. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இவருக்குப் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும். முழு நேரப் பணியாளர். குழந்தைகள் பள்ளியில் கற்றுக் கொடுத்தது வாழ்க்கைக் கல்வி என்று கூடக் கூறலாம். விளையாட்டு என்பது பொழுது போக்கிற்காக அல்ல. அதன் மூலம் ஓர் குழந்தையின் திறனை வளர்க்கலாம். ஒழுங்கினை வளர்க்கலாம். குறைகளைப் போக்கி தன்னம்பிக்கையை வளர்க்கலாம். இதில் எனக்கு சிறப்பு பயிற்சி உண்டு. அக்காலத்தில் இந்த மையத்தில் நடந்த பள்ளிகள் அர்த்தமுள்ளவையாக அமைந்திருந்தன. ஒரு உதாரணம் கூறுகின்றேன்.

விளையாட்டு சாதனங்கள் மாதிரிக்கு ஒன்று என்று பல வகைகள் இருக்கும். ஒரு குழந்தை ஒன்றை வைத்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு பொருள்மேல் ஆர்வம் கிளம்பும். தனக்கு அது வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கும். அமைப்பாளர் சமாதனப்படுத்துவாள். அதன் முறை வரும் வரை காத்திருக்கும் தன்மையைப் பழக்கிக் கொள்ளும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வரும். இது சாதாரணமாகப் படலாம். மனிதனின் அடிப்படை குணங்களில் அவசரமும் அடுத்தவரை வீழ்த்தி ஒன்றைத் தனதாக்கிக் கொள்ளும் சுயநலம் நம்மிடையே இருப்பதை உணர்ந்து பார்க்கவும். வந்தவுடன் விளையாட்டுக் கல்வியும் பின்னர் கதைகள் கூறுதல் இருக்கும். மிருகங்கள் , பறவைகள் பேசுமா என்று பகுத்தறிவு கேள்விகள் வேண்டாம். அநதக் காலத்தில் விட்டலாச்சாரியார் சினிமா முதல் இன்று அவதார் வரை பார்த்து ரசிக்கின்றோம். வாழ்வியல் அடிப்படைகளைக் கதைகள் மூலம் விளக்கப்படும். நான் பள்ளியில் படிக்கும் பொழுது மாரல் கிளாஸ் (moral class) என்று இருக்கும். இப்பொழுது கிடையாது. நாம் எல்லோரும் குணக் குன்றுகளாகி விட்டோம் போல் இருக்கின்றது. பகுத்தறிவுப் பாசறையில் மறைந்து போனவைகளில் அதுவும் ஒன்று. வகுப்பறை கல்வியை முடித்து சிறிது நேரம் குழந்தைகளை தூங்க விடுவார்கள். பின்னர் எழுந்திருக்கவும் பாட்டு, கதை சொல்லுதல் என்று குழந்தைகளைச் சொல்ல வைப்பார்கள். அவரவர் திறமைகளை வளர்க்க உதவும் .

காலையில் மட்டும் வகுப்புகள் நடக்கும். மாலையில் மகளிர் மன்றங்களாகி விடும்.

வீட்டிலும் குழந்தைகளுக்கு நாமே சில விளையாட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். வேண்டாம் என்று தூரப் போட நினைப்பவைகள் கூட இதற்கு மூலப் பொருளாகலாம். தாய்மார்களுக்கு வழிவகைகள் கற்றுத் தரப்பட்டன. காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டு மென்பதில்லை. ஆனால் தாயார் தன்னுடைய நேரத்தில் கொஞ்சம் குழந்தைக்காகச் செலவழிக்க வேண்டும். இக்காலத்தில் இது முடியுமா? தொலைக் காட்சிப் பெட்டி மோகத்தில் இருக்கும் தாய்மார்கள் சிறு குழைந்தைகள் வீட்டில் இருந்தால் சீரியல் பார்க்க முடியாது என நினைத்து இரண்டு வயது குழந்தைகளைக் கூட ட்யூஷனுக்கு அனுப்பும் தாய்மார்கள் எத்தனை பேர்கள்? குழந்தைகளைப் பெற்றதுடன் சரி. அக்காலக் கவனிப்பு இக்காலத்தில் இல்லையென்பது வருத்தத்திற்குரியது. வேலைபார்க்கும் பெண்களுக்கு இரட்டைச் சுமை. இருப்பினும் வீட்டு வேலைகளில் இப்பொழுது உதவிக்குப் பல பொருட்கள் வந்துவிட்டன. கொஞ்ச நேரம் செலவழித்தால் போதும். பின்னர் குழந்தைகள் அவர்களாகவே விளையாடுவர். எப்பொழுதும் கண்காணிக்க வேண்டியதில்லை.

கணினியில் எனக்கு அதிகம் தெரியாது. படங்கள் போட்டு விளக்க வேண்டும். ஒவ்வொன்றும் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதையும் அவைகள் வைத்து எப்படி விளையாடுவர் என்பதும் எதற்காக என்பதும் எழுதலாம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும். குழந்தைக் கல்வியைப் புரிந்து கொள்ளவும் முடியும்

மகளிர் மன்றங்களும் இங்கு சிறப்பாக நடைபெறும். பிரச்சனைகளை கலந்துரையாடல் மூலம் அலசப்படும். சில சமயங்களில் சம்பந்தப்பட்ட நிபுணர்களை வரவழைத்து வகுப்புகள் நடக்க ஏற்பாடு செய்யப்படும். செயல்முறை விளக்கங்களும் இருக்கும்.

இன்னொரு முக்கிய பயனும் உண்டு. இந்தக் கிளைக்கு ஓர் சுழல் மூலதனம் கொடுக்கப்பட்டிருக்கும். கைத்தொழில்களுக்குப் பயிற்சி தரப்படும். இந்த மூல தனத்தை வைத்து மூலப் பொருட்கள் வாங்கி பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். அவைகள் விற்கும் பொறுப்பும் அமைப்பாளருடையது. விற்றுவரும் பணத்திலிருந்து மூலதனப் பணத்தை மீண்டும் சுழல் மூலதனமாக்கிவிடுவர். இதற்குத் தனிக் கணக்கு வைத்திருப்பர். இதுவன்றி, அப்பளம், வத்தல், ஊறுகாய், பொடிகள் என்று செய்து கொண்டு வந்தால் அதுவும் விற்பனை செய்யப்பட்டு பணம் பெறுவர். கடைகள், ஹோட்டல்கள் இவைகளுடன் அமைப்பாளர் தொடர்பு வைத்துக் கொண்டு பெண்களுக்கு வருவாய் கிடைக்கும் தொழில்களை அமைப்பாளர் கவனித்துக் கொள்வர். கிளை அலுவலகம் இருக்கும் இடத்தில் மூன்று நாட்களும் மீதி யிருக்கும் நாட்களில் அந்த ஊரில் மூன்று இடங்கள் தேர்வு செய்து மகளிர் மன்றங்கள் நடத்தப்படும்.

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருப்பதால் பெண்கள் ஆவலுடன் வருவர். தொழில் செய்து வருவாயும் கிடைப்பதால் ஆர்வத்துடன் வருவர். அறிமுகங்களால் பல புதிய நட்பு வட்டம் தோன்றும். கவலைகளுக்கும் வடிகால் கிடைக்கும்.

தமிழ் நாட்டில் 48 இடங்களில்தான் இத்திட்டம் நிறைவேறும் எனப்படும் பொழுது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். இதில் ஓர் அமைப்பாளார், ஓர் அடிப்படை ஊழியர் என்று முழுநேரப் பணிக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். கட்டட வாடகை போன்று பல செலவினங்களும் சேரும். துறைக்குக் கிடைத்த நிதி ஆதாரத்தில் இந்த அளவுதான் நடை பெற்றன . எல்லா மாவட்டங்களிலும் ஒன்றாவது நிச்சயம் இருக்கும்.

சேவை இல்லம்

தாம்பரத்தில் சேவை இல்லம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களின் துணைவியார் திருமதி பத்மாவதி ஜீவானந்தம் அவர்கள்தான் கண்காணிப்பாளராக அதிக நாட்கள் பணியாற்றி வந்தார். அவர்கள் வீட்டிற்குச் சென்ற பொழுது ஜீவா அவர்களைப் பார்த்து ஓரளவு பேசியிருக்கின்றேன். அவ்வளவு பழக்கம் கிடையாது.

ஏதோ ஒருவகையில் ஆதரவற்றுப் போன பெண்களில் ஐந்தாவது வகுப்புவரை படித்திருந்தாலும் இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டு கல்வி கற்று தரப்படும். குறுகியகாலக் கல்வி என்று பெயர். அக்காலத்தில் ஈ.எஸ். எல். சி, மற்றும் எஸ்.எஸ் எல். சி பரீட்சைக்குத் தயார் செய்து தேர்வுகளுக்கு அனுப்பப்படுவர். இங்கு தங்குவதும், கல்வி கற்பதும் இலவசம். குழந்தைகள் இருந்தால் அவர்களையும் கூட்டிவரலாம். இதே இல்லத்தில் சிறுவர் இல்லமும் உண்டு. அவர்களுக்குப் பள்ளியும் உண்டு. பெண்களுக்குக் கைத்தொழிலும் கற்றுக் கொடுக்கப்படும். உயர்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி கண்டவர்களுக்கு ஆசிரியைப் பயிற்சி கொடுக்க அதற்கும் பயிற்சி நிலையம் உண்டு. இந்த இல்லம் தொடங்கிய நாள் முதல் அனுமத்திக்கப்பட்ட எண்ணிக்கைக்கு குறைவாக இருந்ததே இல்லை. தமிழ் நாட்டில் அக்காலத்தில் இருந்த சேவை இல்லம் இது ஒன்றுதான். தாம்பரத்தில் இந்த சேவை இல்லம் இயங்கி வருகின்றது. தற்போது தமிழகத்தில் நிறைய சேவை இல்லங்கள் இருக்கின்றன. அனாதரவான பெண்களுக்கு இவைகள் புனர் வாழ்வு இல்லங்கள். மகளிர் நலத்துறை வந்தவுடன் தாம்பரத்தில் சேவை இல்லம் தொடங்கப்பட்டது. (இதனை வாசிப்பவர்களிடம் ஓர் வேண்டுகோள். இனி உங்கள் கவனித்தில் யாரவது அனாதரவான நிலையில் இது போன்ற பெண்கள் வரின் சேவை இல்லங்களைப் பரிந்துரை செய்து அவர்களுக்குப் புனர் வாழ்வு அளியுங்கள்)

வழிகாட்டி

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் மகளிர் நல அதிகாரி இருப்பர். அவர்களுக்கு மனுக்கள் வரும். வாழ்க்கையில் ஆதரவற்ற நிலை வரும் பொழுது பெண்கள் இந்த அலுவரிடம் வந்து குறைகளைக் கூறுவர். அவர்களுக்கு வழிகாட்டிகளாக அலுவலர்கள் இருப்பர். சேவை இல்லத்தின் மனுக்களை பெற்றுக் கொண்டு பரிசீலித்து இல்லத்திற்கு அனுப்புவர். மற்றவர்களை அவர்களுக்கேற்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்புவர்.

உழைக்கும் மகளிர் தங்கும் விடுதி

வெளியூரிலிருந்து வேலைக்கு வரும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்க, தங்கும் விடுதியொன்று சென்னையில் அமைக்கப்பட்ட்து.

தொழிற்பயிற்சி மையங்கள்

இத்திட்டம் தமிழகத்தில் பரவலாக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. எல்லா மாவட்டங்களிலும் தையல் பயிற்சி நிலையம் ஒன்றாவது இருக்கும். பயிற்சி காலம் ஒருவருடம். ஒரு குழுவிற்கு பயிற்சி முடியவும் அடுத்த குழுவிற்கு பயிற்சி ஆரம்பமாகிவிடும். இப்பயிற்சிக்குப் பின்னர் அவரவர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் உடைகள் தைத்துக் கொள்ளலாம். அவரவர் சாமர்த்தியத்தில் பிறருக்கும் தைத்துக் கொடுக்கலாம். 1967 ஆண்டுக்குப் பின்னர் புதிய வழி ஒன்று ஏற்பட்டது. பள்ளிச் சிறுவர்களுக்கு இலவசமாக் கொடுக்கும் சீருடைகளை மகளிர் மன்ற உறுப்பினர்கள் தைத்துக் கொடுக்க ஆரம்பித்தனர். தைக்கத் தெரிந்தவர்களை இணத்துக் கூட்டுறவு சங்கம் தொடங்கினோம். மாவட்ட அளவில் மகளிர் நல அதிகாரிதான் பொறுப்பாளர்.

தையல் மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் சில கைத்தொழில்கள் வழக்கில் உண்டு. கூடைகள் பின்னுதல், பாய்முடைதல், மூங்கிலில் கூடைகள் செய்தல், கம்பிளி நெய்தல் போன்றவற்றிலும் பயிற்சி கொடுத்து அங்கு உற்பத்தி நிலையங்கள் ஆரம்பித்துவிடுவோம். பயிற்சி காலங்களில் உதவித் தொகை கிடைக்கும். உற்பத்தில் நிலையங்களில் செய் கூலி கிடைக்கும். நிலைய ஊழியர்கள் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதுண்டு. அக்காலத்தில் திருமதி பட்டம்மாள் என்று ஒருவர் அதிகாரியாக இருந்தார். துறை ஆரம்பித்த காலம் முதல் பணியாற்றியவர். ஊழியர்களுடன் அவரும் சந்தைக்குப் போயுள்ளார்

ஊட்டியில் தோடர்கள் என்ற ஓர் இனம் உண்டு. அவர்களின் எம்பிராய்டரி வேலை மிக மிகச் சிறப்பானது. நுணுக்கமானது. ஒரு பொருளில் வேலை முடிக்க அதிக நாட்களாகும். அந்த வேலையை அவர்களால்தான் செய்ய முடியும். வெளி நாட்டினர் விருப்பத்துடன் வாங்குவர்.

கோத்தர்கள் என்ற இன்னொரு இனமுண்டு. அவர்கள் கலைஞர்கள். அருமையாக ஆடுவர். திருச்சிகடியில் மரப் பொம்மை செய்யும் ஓர் உற்பத்தி நிலையம் உண்டு. முதலில் பயிற்சி கொடுத்தோம். இரண்டாண்டுகள் கழித்து அவர்களில் தேர்ந்தெடுத்து உற்பத்தி நிலையம் ஆரம்பித்தோம். அவர்களில் அதே இனத்தைச் சேர்ந்த ராஜம்மாள் ஓரளவு படித்தவள். அவளுக்குக் கணக்கு வைக்கச் சொல்லிக் கொடுத்து அவளையே அந்த நிலையத்திற்குப் பொறுப்பாளராய் ஆக்கினோம். வர்ணங்கள் தீட்டிய அந்த பொம்மைகளை குறளகம், காதிஸ்டோர்கள் போன்ற இடங்களுக்கு அனுப்புவோம்.

நீலகிரி மாவட்டத்தில் படகர் இனம் அதிகம். விவசாயத்தில் அதிகமாக வேலை செய்கின்றவர்கள் பெண்கள்தான். உற்பத்தியானவைகளை விற்பனைக்குக் கொண்டு செல்ல ஆண்கள் பொறுப்பேற்பர்.

பனியர் என்று இன்னொரு இனமுண்டு. மசினங்குடி காட்டில் வாழும் காட்டு வாசிகள். அவர்களுக்குத் தொழில் கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தைவிட உலகின் மாறுதல்கள், வாழ்க்கை முறைகளில் பழக்க எண்ணியது போல் கூடலூரில் தையல் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டது. கல்வியின் அவசியம், நாட்டுப்புற மக்களைப் போல் கூந்தல் முடிக்கவும், சேலை கட்டவும் இன்னும் பல வாழ்வியல் முறைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. என்னவானாலும் பயிற்சி காலத்தில் ஓராண்டு வரை ஆசிரியை சொன்னபடி இருப்பார்கள். பின்னர் பயிற்சி முடிந்து போன பின்னர் பழைய வழக்கங்களில் தான் நடப்பார்கள்.

கோத்தகிரி அருகில் மலையடி வாரத்தில் ஒரு கிராமத்தில் ஓர் வினோத பழக்கம் இருந்தது. பெண்ணுக்குப் பிரசவ வலி எடுத்தால் அந்தப் பெண்ணை வெட்ட வெளிக்குக் கூட்டிவந்து படுக்க வைத்து கணவன் வானத்தைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு உதைப்பான். இடுப்பு வலியுடன் இதுவும் சேர்ந்து பெண் கூச்சலிடுவாள். பின்னர் பிரசவம் ஆகிவிடும். இப்படி ஓர் மூட நம்பிக்கை. கோத்தகிரியில் டாக்டர் நரசிம்மன் என்று ஒருவர் இருந்தார். அவர்தான் கடும் முயற்சி எடுத்து இப்பழக்கத்தை நிறுத்தினார். அதற்கு அவருக்கு அரசு விருது அளித்தது.

தோடர்களிடமும் ஓர் பழக்கம் இருந்தது. ஒரு பெண்ணிற்கு ஐந்து கணவர்கள். திரௌபதி வம்சம் என்று கூறிக் கொள்வர். அந்தப் பழக்கமும் நின்றுவிட்டது. தோடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபாட்டவர்களில் திருமதி பில்ஜின் என்ற பெண்மணியும் ஒருவர்.

இன்னொரு இனத்திலும் ஓர் வழக்கம் உண்டு. திருமணத்தன்று மணமகன் இருக்க வேண்டுமென்பதில்லை. மணப் பெண்ணை அவர் பெற்றோர்களும் உறவினர்களும் குடும்பத்திற்கு வேண்டிய சீர்களோடு மணமகன் வீட்டிற்குக் கொண்டு விடுவர். பெண் கர்ப்பவதியான பிறகு ஒரு நாள் சடங்கு போல் வைத்து ஒரு நிகழ்வு நடக்கும் அதுதான் திருமணம் என்று சொல்வர். இப்பழக்கமும் இப்பொழுது கிடையாது

படகர் இனத்தில் படித்து, அரசியலில் முன்னுக்கு வந்தவர் திருமதி அக்கம்மா தேவி அவர்கள். இவர் பாராளுமன்ற உறுப்பினராயிருக்கும் பொழுது நானும் அவரும் சேர்ந்துதான் மாவட்டம் முழுவதும் சுற்றுவோம். எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

எல்லா மாவட்டங்களிலும் மலைவாழ் மக்களுடன் நெருங்கிப் பழகி யிருக்கின்றேன். நட்பின் காரணமாக்க் குடும்ப விஷயங்களை மனம் விட்டுப் பேசுவர். பேசுவதில் தீரும் பிரச்சனைகளும் உண்டு. சமுதாய நலப் பணியில் இருக்கின்றவர்களுக்கு பேச்சு சாமர்த்தியம் அவசியம் இருக்க வேண்டும். உலக நடப்பும், பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளும் தெரிந்திருக்க வேண்டும். மேடையில் இசைக் கச்சேரி செய்ய்பவர்களுக்கு முதலில் குரல்வளம் இருக்க வேண்டும். பின்னர் சங்கீத ஞானமும் இருக்க வேண்டும். சமூக நலப் பணிக்கு சம்பளத்திற்காக வந்தவர்கள் எல்லோருக்கும் இந்த தகுதிகள் இருக்கும் என்று கூற முடியாது. அதன் காரணமாகவும் பல இடங்களில் பணிகள் சிறக்காமல் போனதற்கும் காரணங்களாகும். எங்கு சென்றாலும் பெண்களைச் சந்தித்து முதலில் அவர்கள் வாழும் சூழல் முதல் வாழ்க்கைப் பிரச்சனைகள் வரை புரிந்து கொள்ள வேண்டும்.

அக்காலம் தொட்டு சில நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு இதுபோன்று வலிய துன்பத்தை வரவழைத்துக் கொள்பவர்கள் பற்றி அறியும் பொழுது மகளிர் நல அதிகாரி சம்பந்தப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைத் திருத்த முயல்வதுண்டு.

நாமும் காட்டு வாசிகளாகத்தான் வாழ்ந்தவர்கள். இன்று நாகரீகம் மிக்க வர்களாக இருக்கின்றோம். தோற்றத்தில் மாற்றங்கள் இருக்கின்றன. குணத்தில் அவர்களின் எளிமையும் இனிமையும் நமக்குக் குறைந்து விட்டது. அக்காலத்து கிராம மக்கள், மலைவாழ் மக்கள் அவர்களுக்கென்ற கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டு வாழ்ந்தனர். அவர்களிடையே இருந்த அமைதி இப்பொழுது நமக்கிருக்கின்றதா? எதையோ தொலைத்து விட்டோம்.

1967 ஆண்டுக்கு முன் இருந்த மகளிர் நலத்துறை பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன். இத்துடன் இணைந்த இன்னொரு திட்டத்தையும் பார்க்கலாம். திருமதி பாரிஜாத நாயுடுவின் ஆய்வறிக்கையால் ஒருங்கிணப்புப் பணிகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தன.

ஆலமரம் என்றல்லவா சொல்லியிருகின்றேன். தமிழகம் முழுவதும் எப்படி பரவலாக்கப் பட்டது என்பதனை அடுத்து பார்க்கலாம்

“உறுதியான தீர்மானம், மனோ சக்தி, இவற்றைக் கைக்கொள் .அறிவைப் பயன்படுத்தி உன்னுள்ளிருக்கும் சக்தியைத் தட்டி எழுப்பு. விடாமுயற்சியுடன் முன்னேறு. இலட்சியத்தை அடை.”

சுவாமி சிவானந்தா

(தொடரும்)

Series Navigationதுருக்கி பயணம்-52012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
author

சீதாலட்சுமி

Similar Posts

2 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    அன்புள்ள சீதாம்மா..,

    அறுபது ஆண்டுகளுக்கு பின்னே தங்களின்
    நினைவலைகள் சென்று அங்கு அந்த நிகழ்வுகளை
    மனக்கண் முன் காட்டிய விதம் பிரமிப்பாகிறது.

    சம்பவங்களோடு பெயர்களும் நினைவில் வைத்து
    எழுதுவது பெருத்த ஈடுபாட்டினை ஏற்படுத்தும்
    விதமாக இருக்கிறது. கட்டுரையில் பல தெரியாத
    விஷயங்களை கற்க முடிகிறது.

    நீங்கள் குறிபிட்ட தாம்பரம் சேவை இல்லம் ஆரம்பித்ததும் தன்
    பச்சிளம் மகன்களை வைத்துக் கொண்டு அபலையாய்ச்
    சேர்ந்து தையல் கற்றுக் கொண்டு டிப்ளோமோ பெற்று
    வெளிவந்தார். அதைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டே
    இருப்பார்.

    இது போன்ற சேவை அமைப்பும், சேவை செய்யும்
    மனப்பாங்கும் உலகில் இருப்பதால் எத்தனையோ குடும்பங்கள்
    சின்னாபின்னபாகாமல் இருக்கிறது.
    மிக்க நன்றி அம்மா..
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    Madam, Your observation, concern, dedication on our tribal folks are amazing. Your memory power is commendable. We are privileged to read your memoirs in THINNAI…Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *