பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)

This entry is part 9 of 43 in the series 24 ஜூன் 2012


இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

பெண்மையைப் போற்றிய கவிஞர்கள்

     பெண்மையைப் போற்றாத கவிஞர்கள் இல்லை. ஆனாலும் பெண்விடுதலைக்குக் குரல் கொடுத்த உன்னதக் கவிஞராகப் பாரதியார் விளங்குகிறார். தாம் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த பழக்க வழக்கங்களைக் கண்டித்துப் பாடல்கள் பாடினார். பெண்கள் அடிமைகள்  அல்லர். அவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவர்கள் மனிதரில் ஒரு கூறு. அவர்கள் உயர்ந்தால் தான் நாடு உயரும் என்று உணர்ந்து அதனைச் சமுதாயத்திற்கு உணர்த்தியவர் பாரதியார் ஆவார். பெண்மையை இழிவு செய்த அக்காலத்தில் பாரதி,

‘‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!’’(பக்.,215-216)

என்று வெற்றி முழக்கமிடுகின்றார்.

பட்டுக்கோட்டையாரும் பாரதியின் கருத்தை மனதில் ஏற்றி,

‘‘பெண்மையில்லாத வாழ்வில் செம்மையில்லை – அதைப்

பேணி வளர்க்காமல் நன்மையில்லை’’ (ப.,312)

என்று பெண்மையைப் போற்றுக அப்போதுதான் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் நன்மை என்று பிரகடனப்படுத்துகின்றார்.

ஆண் பெண் சமத்துவம் பாடிய கவிஞர்கள்

சமுதாயம் ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் தாழ்ந்தவள் என்றும் கூறி பேதப்படுத்துகிறது. இந்நிலை தொன்றுதொட்டு மனித இனத்தில் நிகழ்ந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாகும். ஆண் பெண் இருவரும் சம உரிமை உடையவர்கள். ஆண் என்பதற்காக அவனுக்குக் கூடுதல் உரிமை கொடுத்தல் கூடாது. அதுபோன்று பெண் மென்மையானவள் என்று அவளுக்கு உரிமைகள் மறுக்கப்படவும் கூடாது. இத்தகைய இழிநிலை மாறவேண்டும் என்று இரு கவிஞர்களும் குரல் கொடுத்துள்ளனர். பாரதி,

‘‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்’’ (ப.,213)

‘‘பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்

பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை

கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே

காதலின்பத்தைக் காத்திடுவோமடா!’’ (ப.,214)

என்று ஆண் பெண் இருவரும் நிகர் என்று பாடுகின்றார்.

இந்த வையம் சிறக்க வேண்டுமெனில் கண்ணிமைகள் போன்று ஆண்பெண் இருவரும் சமம் என்று உணர்தல் வேண்டும். பெண்ணை ஆணுக்கு நிகராகக் கொண்டு போற்றுதல் வேண்டும் என்ற பாரதி,

‘‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’’ (ப.,214)

என்று புதுமைப் பெண்ணைப் படைத்துக் காட்டுகிறார்.

பாரதியின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட மக்கள் கவிஞர் காலத்திற்கேற்ப பெண் வலிமை உடையவளாக இருக்கவேண்டும். பெண்ணைப் பெண்ணே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பாடுகின்றார். தன்னைத் தாக்க வருவோரிடமிருந்து தற்காத்துக் கொள்ள பெண் வலிமையானவளாக இருத்தல் வேண்டும். பிறரின் உதவியை நாடுதல் கூடாது என்பதனை,

‘‘சீவி முடித்துத் திருமணக்கும் பொட்டுவைத்து

கோவிலைச் சுற்றிவரும் குலமகளே – பாவியரின்

கண்ணி லகப்பட்டுக் களங்கப்படா வண்ணம்

உன்னை நீ காப்பாற்றிக் கொள்!’’ (ப.237)

என்று தெளிவுறுத்துகிறார். மேலும் கயமைத் தன்மை உள்ளவர் பெண்மையைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுவர். அவர்களிடமிருந்து பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை,

‘‘காலம் கடந்து விட்டது பொழுது ஓய்வாகப் போகிறது

காலத்தோடு வீடு செல்லு காலிப்பயல் சுத்துமுன்

ஞாலத்திலே நம்ம மனம் தமிழினத்தின்

குலத்தைக் காக்க வேண்டும்!

காலத்திலே செல்லு மகளே!’’ (ப.,236)

என்று அறிவுறுத்துகிறார். சுதந்திரம் பெற்றும் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் பெண்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என்ற மனவலிமையை இப்பாடல் வாயிலாக மக்கள் கவிஞர் பெண்களுக்கு எடுத்துரைத்திருப்பது நோக்கத்தக்கது ஆகும். பாரதியின் கருத்து கவிஞரின் வரிகளில் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்ணுரிமை பாடிய கவிஞர்கள்

இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. ஆண்கள் என்பதற்காக கூடுதல் உரிமை அவர்களுக்குக் கிடையாது. மனிதர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு சட்டத்தில் உள்ள உரிமைகள் யாவும் உண்டு. ஒருவரை ஒருவர் யாரும் அடிமைப்படுத்தாது வாழ வேண்டும். ஆனால் சமுதாயத்தில் ஆணுக்கு மட்டுமே அனைத்து உரிமைகளும் உண்டு. பெண்ணுக்குக் கிடையாது. அவர்கள் அடிமைப்பட்டே வாழ வேண்டும் என்று கருதுகின்றனர். அது தவறான ஒன்றாகும்.

எந்த வகையிலும் பாரதியாரும், பட்டுக்கோட்டையாரும் பெண்ணடிமைத் தனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்களுக்கு, ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் உண்டு. குரல் கொடுத்தனர். பாரதி,

‘‘பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்

பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?’’ (ப.,277)

‘‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி

பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல

மாத ரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டில் ஒன்றைக் – குத்தி

காட்சி கெடுத்திட லாமோ?

பெண்களறிவை வளர்த்தால் – வையம்

பேதைமை யற்றிடுங் காணீர்’’ (ப., 210)

என்று பெண்ணை அடிமை கொள்ளக் கூடாது. அது பேதைமையாகும். கண்களிரண்டில் ஒன்று பெண்களாவர். அக்கண்களில் ஒன்றைக் குத்திக் குருடாக்கலாமா? என்று இயல்பாக எடுத்துரைத்துப் பெண்ணடிமைக்கு எதிராக, அவர்களின் உரிமை வாழ்விற்காகக் குரல் கொடுக்கின்றார்.

பாரதியின் மீது பற்றும் நாட்டமும் கொண்ட மக்கள் கவிஞர் பாரதியைவிடச் சற்று கோபமுற்று,

‘‘ஆம்பளைக் கூட்டம் – ஆடுற ஆட்டம்

அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் –அதை

ஆரம்பிச்சாத் தெரியும் திண்டாட்டம்’’

என்று பாடுகின்றார். தனது மனைவியை அடிமைப் படுத்த நினைத்த ஆண்கள் பெண்குலத்தையே அடிமைப் படுத்தினர். அதன் விளைவுதான் பெண்ணடிமைத்தனமாகும் என்று பாரதி தன்கூற்றாகக் கூற, பட்டுக்கோட்டையாரோ, பெண்ணே ஆணை எதிர்த்து வீராவேசத்துடன் பாடுவதாகப் பாடியிருப்பது காலம் தந்த மாற்றமாகக் கவிதையில் அமைந்திலங்குகின்றது. ஆண்களைப் போன்று பெண்களும் நடக்கத் தொடங்கினால் ஆண்களின் பாடு திண்டாட்டமாகிவிடும். இதனை உணர்ந்து பெண்களின் உரிமைக்கு மதிப்பளித்து ஆண்கள் நடத்தல் வேண்டும் என்று மக்கள் கவிஞர் இப்பாடலில் தெளிவுபடுத்துகின்றார். மேலும் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் இடம்பெறும் பாஞ்சாலியின் கூற்று இதில் பிரதிபலிப்பது நோக்கத்தக்கது.

பெண்ணுக்குரிய உரிமைகளை மற்றொரு ஆண் கேட்கக் கூடாது. அவ்வுரிமைக்கு உரிய பெண்களே கேட்டுப் போராட வேண்டும் என்று மக்கள் கவிஞர் கூறுவது பாடலில் புதிய சிந்தனையாக மிளிர்கின்றது. பெண்களுக்கு உரிய உரிமைகள் என்னென்னவென்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களது உரிமைகளை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். ஒரு ஆண் நிர்ணயித்தால் அதில் முழுமையான பெண்ணுரிமை வெளிப்படாது. இதனை உணர்ந்த மக்கள் கவிஞர் பாரதி கூற்றை மனதில் வைத்துக் கொண்டு புதுநெறியை வகுக்கின்றார்.

ஆணுக்குப் பெண் அடிமையானது எப்படி? சிந்திக்கின்றார் மக்கள் கவிஞர். பெண்ணை ஏமாற்ற ஆண்கள் எழுதிவைத்த புரட்டு என்று அறிந்து அதற்கெதிராக உரிமைக்குரல் எழுப்புகின்றார் மக்கள் கவிஞர். அத்தகையோரைப் பாரதியார் மூடர்கள் எனக் குறிக்கின்றார். பாரதியின் வழியில் செல்லும் மக்கள் கவிஞர்,

‘‘ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று

யாரோ எழுதி வைச்சாங்க – அன்று

யாரோ எழுதி வைச்சாங்க – அதை

அமுக்கிப் பிடிச்சுக்கிட்டு விடமாட்டேன்னு

ஆண்கள் ஒசந்துக் கிட்டாங்க – பெண்கள்

ஆமைபோல ஒடுங்கிப் போனாங்க’’

என்று பாடுகின்றார். பெண்கள் அடிமையானதற்கான காரணத்தை விளக்குகின்ற மக்கள் கவிஞர், ஆணொடு பெண் சரிநிகர் சமானமாக வாழவேண்டும்; ஆணுக்கு அளிக்கப்படும் உரிமைகள் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

 

 

பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வலியுறுத்தல்

பெண்கள் இறந்து விட்டால் ஆண்கள் உடன் திருமணம் செய்து கொள்கின்றனர். அதற்கு ஆண்களோ, சமுதாயமோ எவ்விதத் தடையும் விதிப்பதில்லை. ஆனால் ஆண்கள் இறந்து பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கருதினால் அது தவறு என்று கண்டித்து அவளை மூலையில் தள்ளிவிடுகிறது. மறுமணம் செய்து கொள்ளக் கூடிய உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இளம் வயதுப் பெண்ணாக இருப்பினும் அவள் இறுதியில் இறக்க மட்டுமே உரிமை உண்டு. இத்தகைய நிலை சமுதாயத்தில் நிலவி வருகிறது. இதனை எதிர்த்து இருகவிஞர்களும் குரல் கொடுத்தனர்.

பெண்கள் விடுதலை குறித்துப் பாடிய பாரதியார் பெண்கள் விடுதலைக்கான ஆரம்பப் படிகளைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.

‘‘பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப் படிகள் எவை யென்றால்

1.   பெண்களை ருதுவாகுமுன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.

2.   அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.

3.   விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.

4.   பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸம பாகம் கொடுக்க வேண்டும்.

5.   புருஷன் இறந்த பின்பு ஸ்திரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.

6.   விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.

7.   பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.

8.   பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.

9.   தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.

10. தமிழ் நாட்டில் ஆண் மக்களுக்கே ராஜரிக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும், சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்’’

(மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் -1982, ப.,209)

என்று பாரதி பெண்களுக்கு மறுமண உரிமை வேண்டும் என்பது உள்பட பல்வேறு உரிமைகளையும் கொடுத்தல் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மகாகவி கட்டுரைகளில் மட்டுமல்லாது தாம் எழுதிய கதைகளிலும் விதவையரின் மறுமணத்தை ஆதரித்து எழுதினார். சமுதாயத்தில் காலம் காலமாக பெண்களுக்கு இழைத்து வரும் இத்தகைய கொடுமையை பாரதியார் சந்திரிகையின் கதையில்,

‘‘கோமதி என்ற பிராம்மணப் பெண் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு கிராமத்துப் பெண். விசாலாட்சி என்ற மற்றொரு இளம் விதவையைப் பார்த்து இவ்வாறு சொல்கிறாள்

‘‘விதவா விவாகம் செய்யத் தக்கது. நீ மறு விவாகம் செய்து கொள். ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய் அஞ்சி மடிய வேண்டியதில்லை. நீ ஆண்மக்ள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநலங்கொண்ட சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிடு. சென்னைக்குப் போ. கைம்பெண்ணுக்கு உதவி செய்யும் சபையார் வழியாக விதவா விவாகம் செய்து கொள்’’

    (மேலது, ப., 198)    

என்று கதைமாந்தர் வழி எடுத்துரைக்கின்றார்.

பாரதி வழியில் நடந்த மக்கள் கவிஞர் அவரது கருத்துக்களையே முழுமையாக எடுத்துரைக்கின்றார். கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை,

‘‘மனைவி மறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு – இளம்
மங்கையை முடிப்பதுண்டு மண்டை வரண்டு – தன்
கணவனை இழந்தவள் கட்டழகி யானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு’’

என்று வலியுறுத்திப் பாடுகின்றார். மேலும் மறுமணம் செய்யாது  தனியாகப் பெண் வாழ்ந்தால் சமுதாயம் பல்வேறு விதமான கட்டுக் கதைகளைக் கட்டி அவர்களை இழிவுபடுத்தும். அத்தகைய கொடுமைகள் நடைபெறாது தடுக்க வேண்டும் என்று மக்கள் கவிஞர் எடுத்துரைப்பது நோக்கத்தக்கது. இங்ஙனம் பெண்விடுதலையில் மகாகவியின் போக்கிலேயே மக்கள் கவியும் பயணிப்பது இருவருக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையாகும்.

கற்புநிலை வலியுறுத்திய கவிஞர்கள்

கற்புநிலை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதாகும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் இக்கற்பு நிலை என்பது பெண்ணுக்கு மட்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். பெண் ஒழுக்கமாக இருக்க விரும்பினாலும் இவ்வாணாதிக்க சமுதாயம் அவர்களை அப்படியே இருக்க விட்டுவிடுகிறதா? எனில் இல்லை எனலாம். அதனால்தான் பாரதியார்,

‘‘கற்பு நிலையென்று சொல்ல வந்தார்-இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’’ (ப.,217)

 

என்று வலியுறுத்துகின்றார். பட்டுக்கோட்டையார்,

 

‘‘போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்

சேர்ந்து போட்டுக்கணும் – ஒலகம்

புதுசா மாறும் போது பழைய

மொறையை மாத்திக்கணும் – தாலி போட்டுக்கிட்டா’’ (ப.,189)

 

என்று கற்பின் அடையாளமான தாலி இருவரும் அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார். இங்கு பாரதியின் கொள்கையை தாலி என்று கற்பின் அடையாளமாக்குகிறார் மக்கள் கவிஞர். இருவருக்கும் தாலிஅணிவதால்,

 

‘‘கழுத்திலே தாலி கெடந்தா

காலிகூட மதிப்பான் – கொஞ்சம்

கண்ணியமா நடப்பான் – அந்தக்

கயிறு மட்டும் இல்லையின்னா

கழுதைபோல இடிப்பான்

ஆம்புளைக்கும் தாலி கெடந்தா

அடுத்த பொண்ணு மதிப்பா – கொஞ்சம்

அடங்கி ஒடுங்கி நடப்பா – இந்த

அடையாளம் இல்லையின்னா

அசட்டுத் தனமா மொறைப்பா’’(ப.,189)

 

என இருவரும் தாலி போட்டுக் கொண்டால் மட்டுமே ஆணும் பெண்ணும் கற்புநிலை பிறழாது இருப்பர் என்று பட்டுக்கோட்டையார் வலியுறுத்துகின்றார். இங்கு தாலி என்பது கற்பு நிலையைப் பற்றிய அடையாளமாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

மேலும் பெண்கள் கற்புநிலையிலிருந்து பிறழ்வதற்கு ஆண்களே காரணமாக உள்ளனர் என்பதை,

‘‘கற்பின் பலம் என்றும் கண்ணகி குலம் என்றும்

கச்சிதமாகத் தீட்டுவாங்க – அதை

அச்சடிச்சும் காட்டுவாங்க – சொன்ன

கருத்துக்கு மாறாகக் கற்பைக் களவாடக்

கன்னக் கோலைத் தீட்டுவாங்க! – அவுங்க

கணக்கைப் புரட்டிப் பாருங்க’’ (ப.,189)

என மக்கள் கவிஞர் பாரதியைப் போன்றே சுட்டுகின்றார். பெண்களை ஆண்கள் கரவு உள்ளத்தோடு பார்ப்பதும், தனித்து வரும் பெண்களிடம் வம்பு செய்வதுமாக உள்ளனர். ஆதலால்ஆண்கள் கரவிலா மனத்தராக இருப்பின் பெண்கள் கற்பிழக்க மாட்டார்கள் என்று இன்றையச் சூழலை உணர்ந்து ஆணாதிக்க சமுதாயத்திற்கு மனதில் பதியும் வண்ணம் மக்கள் கவிஞர் பாடுகின்றார். இங்ஙனம் மகாகவியும் மக்கள் கவியும் பெண்மையைப் போற்றிய பெருமைமிகு கவிஞர்களாக விளங்குகின்றனர்.

 

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்மனநல மருத்துவர்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *