வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18

This entry is part 23 of 43 in the series 24 ஜூன் 2012

 

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு

 

 

முதுமை  ஒரு சுமையா?

ஒடுங்கியிருக்கும் உள்ளத்திற்கு உயிர்ச் சத்து கொடுக்க கடந்த கால நினைவு களுக்கு வலிமை உண்டு. பயனுள்ள பயணமாக இருத்தல் வேண்டும். உடல் வலி மறக்க வாசிப்பு, எழுத்து, தியானம் உதவிக்கரம் நீட்டும்.

வாடிப்பட்டியில் இருந்த ஐந்தாண்டு காலம் ஓர் பல்கலைக் கழகத்தில் படித்த உணர்வும் நிறைவும் இப்பொழுதும் இருக்கின்றது.

எத்தனை மாறுதல்கள்?!

அரசியல் பாடம் நேரடியாகப் பெற்றதும் இங்கேதான்.

ஏ.எஸ் பொன்னம்மாள் குடும்பம் அறிமுகமானது. அவர் தந்தையால் அவர் அரசியலில் நுழைந்தார். காங்கிரஸ் கட்சி.  அப்பொழுது அவர் அமைதியான பெண் அதிகம் பேச மாட்டார். ஆனால் பின்னர் பேச்சிலும் செயலிலும் சுறு சுறுப்பானவர் என்ற பெயர் கிடைத்தது. ஆரம்ப காலத்தில் ஒரு நாள் அவருடன் ஓரிடம் செல்ல வேண்டி வந்தது. அங்கே அவர் பிரச்சாரக் கூட்டத்தில் பேச வேண்டும். அங்கு போனவுடன் பல குறிப்புகள் குறித்து வைத்திருந்த தாள்களைக் கொடுத்தனர். ஒருவாரம் முன்னர் திராவிட முன்னேற்றக் கட்சியினர் வந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து விட்டுப் போயிருக்கின்றனர். இப்பொழுது இவர்கள் அவர்களுக்குப் பதில்கள் கொடுப்பதுடன் அந்தக் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டும். நாங்கள் இருவரும் அறைக்குள் சென்று கேள்விகளுக்கு என்னென்ன பதில்கள் கொடுப்பது என்பதனையும் விமர்சனத்திற்குக் குறிப்புகளையும் தயார் செய்து கொண்டோம். அன்று மேடையில் அவர்கள் பேசும் பொழுது கைதட்டு நிறைய கிடைத்தது. இது அக்கால பிரச்சார முறை.

திராவிடக் கழகத்தினர் பேச்சிலே வல்லவர்கள். தீரர் சத்திய மூர்த்தி அவர்களுக்குப் பின்னர் திருமதி அனந்த நாயகியின் பேச்சு பெரிதும் பேசப்பட்டது. இப்பொழுது அரசியல் மேடையில் கோலோச்சுகின்றவர்கள் திராவிடக் கண்மணிகள் தான். தமிழால் மட்டுமல்ல, கைதட்டு வாங்க ஊருக்கு ஏற்றபடி எதையும் பேசுவார்கள். அரசியல் மேடையாக இருக்காது. ஓர் நாடக மேடையாக இருக்கும். அரசியல் மேடையில் ஜெயகாந்தன் பேச்சிலே அனல் பிறக்கும்.

அன்றைய தினம்தான் முதல் முதலாக மட்டுமல்ல கடைசியாகவும் கட்சிப் பிரச்சாரக் கூட்டத்தின் அருகில் இருந்து பார்த்தவள்.

அடுத்து 57ல் தேர்தல் திருவிழா. பொய்களின் வேஷங்கள் உறுத்தின. சுதந்திரப் போராட்ட காலத்தில் எழுந்த எழுச்சி இப்பொழுது வரவில்லை. ஏன் ?  அந்த சமயத்தில் நான் வெறும் பார்வையாளர்தான். விமர்சனம் செய்யும் திறன் வரவில்லை.

அடுத்து பஞ்சாயத்து தேர்தல் வந்தது. போட்டிகள். அதிகாரத்திற்கு ஆசை. எத்தனை பிரிவுகள் இருந்தாலும் இதுவரை சமுதாயத்தில் இருந்த ஒற்றுமையிலும் அமைதியிலும் விரிசல் காண ஆரம்பித்தது. நான் ஜன நாயகத்தைக் குறை கூறவில்லை. அப்பொழுது ஏற்பட்ட உணர்வுகளைப்பற்றி வாழ்வியல் பற்றி எழுதும் பொழுது குறிப்பிட்டே ஆக வேண்டும். அவரவர் ஊர்களுக்கு எத்தகைய வளர்ச்சிப் பணிகள் தேவை என்பதில் அந்த இடத்தைச் சேர்ந்த பிரதிநிதி இருப்பதுதான் சாலச் சிறந்தது.  உயரிய நோக்கத்தில் நாம் குடியரசு ஆட்சி அமைத்தோம். மக்கள் ஆட்சிக்குப் பொருளே மக்கள் அதிகப் பொறுப்புடன் நடத்தல் வேண்டும். கொஞ்சம் அயர்ந்தாலும் சுயநலப் பேய் நம்மைப் பிடித்து விடும். எல்லோரையும் குறை கூற முடியாது. சிறிது சிறிதாக நிழல் அன்றே படிய ஆரம்பித்ததை உணர முடிந்தது.

பஞ்சாயத்து தலைவர்களால் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேலும் போட்டிகள். விரிசல் இன்னும் கொஞ்சம் அதிகமாகியது. ஒன்றிய அளவில் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டம் நடை பெறும். வளர்ச்சிக்குப் பொறுப்பான அரசு ஊழியர்கள் அவர்கள் கேள்விகளுக்குப் பதில் கூறியாக வேண்டும். மாவட்ட அளவிலும் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடை பெறும். தட்டிக் கேட்க இந்த நிர்வாக முறை சரிதான். அரசு ஊழியர்கள் தங்கள் பகுதி பிரமுகர்களுடன் சமரசமாக இருக்கவேண்டும். அல்லது அவர்களுக்குப் பிரச்சனைகள் வந்துவிடும். அக்காலத்தில் ஒரு சிலரால் மட்டுமே பிரச்சனைகள் வரும். ஏற்கனவே கிராமங்களில் இருந்த சமுதாயச் சங்கங்களைப் பார்த்தவர்கள் ஆகையால் இந்த சிறு மாற்றம் அன்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த சமரசம் இப்பொழுது ஊழலில் கைகுலுக்கிக் கொள்ளும் பொழுது இந்த ஒற்றுமை மனத்தை உறுத்துகின்றது. எல்லோரையும் குறை கூறவில்லை. ஆனால் விகிதாச்சரம் மாறிக் கொண்டு வருகின்றது.

வாடிப்பட்டியில் எல்லாத் தலைவர்களும்  அரசு ஊழியர்களும் ஒருமித்து பணி புரிந்தார்கள். எங்களுடைய சேர்மன் திரு பாலகுருவாரெட்டியார் அவர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் அன்பு காட்டினார். வட்டார வளர்ச்சி அலுவராக இருந்தர் திரு முத்துசாமி பிள்ளை. அவர்களும் மிக மிக நல்லவர். உயர்திரு எம். ஜி. ஆர் அவர்கள் முதல்வராக இருக்கும் பொழுது சுற்றுலா துறைக்குத் தலைவராக இருந்தார் திரு பாலகுருவாரெட்டியார். மக்கள் திலகத்திற்கு இவரை மிகவும் பிடிக்கும்.

டில்லியில் திருமதி பாரிஜாத நாயுடு அவர்கள் திட்டக் கமிஷனில் சமூக நலப் பொறுப்பில் இருந்தார். ஏற்கனவே மகளிர் நலன்களை எப்படி பாதுகாப்பது என்பதனை ஆய்வு செய்தவர்கள். இப்பொழுது நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தார்.

அப்பொழுது தமிழக முதல்வராக இருந்தவர் உயர்திரு காமராஜ் அவர்கள். பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த அக்கறை கொண்டவர். வீட்டில் மாற்றங்கள் வர வேண்டுமென்றால் வீட்டுப் பெண்களும் விழித்தெழ வேண்டும். எனவே மகளிர் நலத்துறையில் நடந்த ஒருங்கிணைப்பிற்கு முதல்வரின் முழு ஆதரவு இருந்தது.

சிறப்பாகப் பணியாற்றப் பணியாளர்களுக்கு அவ்வப்பொழுது சிறப்புப் பயிற்சி கொடுத்தல் வேண்டும் என்பதில் திருமதி பாரிஜாத நாயுடு அவர்கள் குறியாக இருந்தார். கோவையில் உள்ள அவினாசலிங்கம் ஹோம்சயன்ஸ் கல்லூரியில் முக்கிய சேவிக்காக்களுக்குச் சிறப்பு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார். எஸ்.வி நகரத்திலும் ஓர் பயிற்சி மையம் கிராம சேவிக்காக்களுக்குத் தொடங்கப்பட்டது. ஊரக வளர்ச்சியில் இருந்த மகளிர் நலப் பணிகளை மகளிர் நலத்துறையுடன் இணைத்த பின் சமூக நல விஸ்தரிப்பு அலுவலரை முக்கிய சேவிக்கா என்று அழைக்கும்படி செய்தார். ஏற்கனவே துறையில் இருந்த திட்டங்களுடன் இவர்களையும் இணைக்கவும் எல்லா ஒன்றியங்களிலும் மகளிர் நலப் பணிகள் பரவலாக்கப் பட்டது. முதலில் எல்லா பஞ்சாத்துக் களிலும் மகளிர் மன்றங்கள் ஆரம்பிக்க அறிவுரை வழங்கப்பட்டது. பின்னர்  ஒன்றியத்தில் எத்தனை பஞ்சாயத்துக்கள் இருப்பினும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 30 மகளிர் மன்றங்கள் என்று உறுதி செய்யப்பட்டது. இந்தப் பணிகளுக்கு ஒரு குறைந்த பட்சத் திட்டம் (minimum programme ) வரையப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மகளிர் மன்றத்திற்கும் ஒரு கன்வீனர் பொறுப்பாளராக இருப்பார். அதே ஊரைச் சேர்ந்த பெண்மணியாகவும் ஓரளவு எழதப் படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கு மதிப்பூதியம் மூன்று மாதங்களுக்கு 15 ரூபாய் தரப் பட்டது  (என்ன சிரிப்பு வருகின்றதா ? மாதம் ஐந்து ரூபாய். 60 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள திட்டம்). பணத்தைவிட ஓர் பொறுப்பு என்றவுடன் அந்தப் பெண்ணிற்குப் பெருமை. வாரந்தோறும் மகளிர் மன்றங்கள் சிறப்பாக நடத்தினார் என்று கூறவில்லை. ஆனால் அந்த கிராமத்தில் குடும்பங்களில் பிரச்சனைகள் வரும் பொழுது விடிவு கிடைக்க ஓர் வழிகாட்டி இப்பொழுது கிடைத்துவிட்டது. . இந்தத் துறை சம்பந்தப்பட்ட்து என்று மட்டும் அல்ல., வேறு எந்த பிரச்சனைகளஐயினும் ஊர் பஞ்சாயத்து தலைவர் முதல், சேர்மன் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரி வரை இவள் வழிகாட்டுவதுடன் சில இடங்களில் உதவி கிடைக்கும்வரை பாடுபடுவார்கள். . இப்பொழுது வெறும் பேச்சுடன் இல்லாமல் உதவிகள் செயல்வடிவம் பெற ஆரம்பித்தது.

அரசின் திட்டப்படி மகளிர் மன்றங்களுக்கு செயல்முறை விளக்கங்களுக்கும், பத்திரிகைகள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டிலும் ஒன்றிய அளவில் மகளிரைச் சேர்த்து கல்விச் சுற்றுலா செல்ல வேண்டும். கொடுக்கும் நிதி உதவி குறைவாக இருப்பினும் சுற்றுலா என வருவதால் செலவினங்களைப் பங்கு போட்டுக் கொண்டு செலவழிப்பர். முக்கிய சேவிக்கா, கிராம சேவிக்காக்கள் இப்பொறுப்பினைக் கவனிக்க வேண்டும். திருமதி பாரிஜாத நாயுடு அவர்கள் எல்லாவற்றிற்கும் ஓர் வழிகாட்டி நூலும் தயார் செய்து கொடுத்திருந்தார். அனாதரவாக பெண்களோ குழந்தைகளோ கண்டால் அவர்களின் விபரங்களை மகளிர் மன்றக் கன்வீனர்கள் தெரிவிப்பார்கள். அரசு இல்லங்களிலோ தொண்டு நிறுவனங்கள் நட்ததும் இல்லங்களிலோ தங்க வைத்து ஆவன செய்வார்கள்.

வளர்ச்சிப் பணிகள் அரசு மட்டும் கவனிப்பதைவிட பொது மக்களின் பங்கும் இணைய வேண்டும் என்ற கருத்தில்  ஏற்கனவே இருந்த சமூக நல வாரியத்தையும் மகளிர் நலத்துறையுடன் இணைத்தனர்..

இப்பொழுது மகளிர் நலத்துறையில் ஏற்கனவே நடைபெற்று வந்த பணிகளுடன் ஊரக வளர்ச்சித் திட்டத்தில் நடந்த பணிகள், தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் பணிகள் எல்லாம் ஒருங்கிணைக்கப் பட்டன.. இந்த அமைப்பு இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமே நடந்தது. இவைகள் எல்லாம் 1967 ஆண்டுக்குமுன் நடந்தவைகள். சமூக நல வாரியம் பற்றி அடுத்து விரிவாக எழுதப்படும். அக்காலத்தில் இதில் சேர்ந்து தொண்டு ஆற்றியவர்களில் பெரும்பாலானோர் காந்திஜியின் வழிகாட்டலில் சேவை செய்தவர்கள். விருது வேண்டி வந்தவர்களல்ல. காந்திஜியிடம் விரும்பிச் சேர்ந்தவர்கள். அந்த வரலாற்று நாயகிகளைப் பற்றி அடுத்து பார்க்க இருக்கின்றோம். அதற்கு முன் இன்னொரு தகவலையும் கூற வேண்டும்.

1962 ல் மகளிர் நலத்துறையில் ஒரு புதிய திட்டம் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் 32 ஊராட்சி ஒன்றியங்களில் எல்லா பஞ்சாயத்துகளிலும் குழந்தைகள் கல்வி நிலையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. உள்ளுரில் இருக்கும் படித்த பெண்களுக்குப் பயிற்சி தரப்பட்டு பள்ளிகளை நட்தத வேண்டும். ஏற்கனவே இத்துறையில் மகளிர் நலக்கிளையில் இத்தகைய பள்ளிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தன. பயிற்சி தர பயிற்றுனர்கள் தேவை. ஏற்கனவே பணியாற்றிவரும் முக்கிய சேவிக்காகளில் 32 பேர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருத்தியாய் சென்னைக்குச் சென்றேன். ஆறுமாத காலம் சென்னை வாழ்க்கை.

அப்பப்பா, அந்த சில மாதங்கள் வாழ்க்கை எனக்குக் கொடுத்த ஊக்கம் கொஞ்சமல்ல. அரசுப் பணிக்காகப் பயிற்சி பெறச் சென்றவள்தான். அரசே எங்களுக்கு அமைத்துக் கொடுத்த வாய்ப்புகள் பின்னால் வந்தவர்களுக்குக் கிடையாது. இது புதுத்திட்டம். குழந்தைகள் கல்வி என்றாலும் ஒட்டு மொத்தமாக மகளிர் குழந்தைகள் நலனுக்குத் தேவையானவைகள் தெளிவு படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு முதல் மாதம் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் பொறுப்பில் பயிற்சி. ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் வரும் நோயாளிக் குழந்தைகளைப் பார்ப்பர்கள் முக்கியமானவற்றை எங்களுக்கு விளக்கிச் சொல்வார்கள்.

இரண்டு வயது குழந்தைக்கு ஓர் நோய். ரோட்டோர தேவதைகளிடம் சுகம் கொண்ட புருஷன் தன் மனைவிக்குக் கொடுத்த பரிசு பால்வினை நோய். அவளோ அதிகம் சுத்தம் பார்க்காதவள் உள்ளாடைகளைத் துவைத்து உடுத்தவில்லை. இடுப்பில் வைத்துக் கொண்ட குழந்தைக்கு நோய் பரவிவிட்டது. இதில் பல தகவல்கள் உண்டு. ஓர் தாயின் சுத்தம் முதல் ஒருவனின் ஒழுக்கக் குறைவு வரை குழந்தையைப் பாதிப்பதைக் காட்டினார்கள். தாய்மார்களிடம் நாங்கள் பேச வேண்டியதை விளக்கினார்கள். இப்பொழுது கூட கணவனின் ஒழுக்கக் கேட்டால் மனைவிக்கு வரும் எயிட்ஸ் நோய் பற்றி பணியாளர்களுக்கு வகுப்பு எடுக்கப் பட்டு தாய்மார்களை வழி நட்த்தும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒரு பிரசவமாவது நேரிலே பார்க்க வேண்டும். மருத்துவரும் மற்ற பணியாளர்களும் செய்வதை உடன் இருந்து பார்ப்போம்.

தொண்டு நிறுவனங்கள் வகைக்கு ஒன்றாக எல்லாம் பார்த்தோம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பலருடன் கலந்துரை யாடல். வரலாற்று நாயகிகளைப் பார்த்தோம். அடுத்து அவர்கள் நிறுவனங்கள்பற்றி விளக்கமாக எழுத இருப்பதால் இங்கே அதிகம் விளக்க விரும்பவில்லை. இதெல்லாம் அரிய வாய்ப்புகள். என் பொது வாழ்க்கையில் இறைவனாகக் கொடுத்த வாய்ப்புகள் கொஞ்சமல்ல.

சென்னையில் ஆறுமாத காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல அரிய சந்தர்ப்பங்கள், நட்புகள் கிடைத்தன. வாடிப்பட்டியில் இருக்கும் பொழுதே பத்திரிகை உலகுடன் பழக்கம் ஏற்பட்டாலும் சென்னையிலேயே தங்கி இருக்கும் பொழுது குடும்பங்களுடன் பழகக் காலம் கிடைத்தது. எப்பொழுதும் என் மாமா வீட்டில் தான் தங்குவேன். சென்னை வாழ்க்கையால் தங்கும் இல்லம் மாறியது. திரு மா.ரா. இளங்கோவன் குடும்பத்தில் நானும் ஒருத்தியானேன். அவர் சுதேசமித்ரன் வார இதழுக்கு உதவி ஆசிரியராக இருந்தார். அவர் தந்தை டாக்டர் ராஜமாணிக்கனார். அவர் உடன் பிறந்தவர்கள் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கலைக்கோவன், பேராசிரியர் அரசு இன்னும் பலர். அவருடைய துணைவியார்தான் திருமதி புனிதவதி இளங்கோவன். சென்னையில் நான் இருக்கும் பொழுது அவர்கள் வேலைக்குச் செல்ல வில்லை. ஆனால் பின்னால் வானொலி நிலையத்திற்குப் பணியாற்றச் சென்றார்கள். அவர்களின் இனிய குரலை யாரும் மறக்க முடியாது. இப்பொழுதும் அவர்கள் மீது மதிப்பு கொண்டிருப்பவர்கள் நிறைய இருக்கின்றனர். அந்த அன்புக் குடுபத்தில் ஒருத்தியானேன். எனக்கு ஓர் அண்ணன் கிடைத்தார். 1967 இல் சோதனையில் திணரிக் கொண்டிருந்த பொழுது எனக்குக் கிடைத்த உதவிக்கரம் என் அண்ணன் மா.ரா இளங்கோவனுடையதுதான்.

என் அண்ணனால் இலக்கிய உலகத்தில் பழக்கமானவர்கள் நிறைய. மு.வ முதல் பல இலக்கிய மேதைகளைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மா. பொ. சிக்குப் பிடித்தமானவர். சிலப்பதிகார விவாதங்களுக்கு அய்யா சிலம்புச் செல்வரே எனக்குக் கிடைத்தார். நாங்கள் சில கூட்டங்களில்  ஒரே மேடையில் பேசி இருக்கின்றோம். சொற்பொழிவுகளுக்கும் சென்றிருக்கின்றேன். நான் ஓர் பட்டி மன்றாப் பேச்சாளரும் கூட. அடிகளார் தலைமையில் நிறைய பேசி இருக்கின்றேன். ஏனோ பத்திரிகைகளில் எழுதுவதை சட்டென்று நிறுத்தியது போல் இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டேன். எனக்குப் பதிலாக என் தங்கை மணிமகள் பாரதியை அனுப்பிவிட்டேன். தென் பகுதியில் அவள் நிறைய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றாள்.

நான் இத்தொடரை எழுதத் தீர்மானித்தவுடன் ஓர் லட்சுமணன் கோடு போல் என்னைச் சுற்றி ஓரு கோடு வரைந்து கொண்டுவிட்டேன். சமுக நலத்துறைதான் மையப் புள்ளி எனவே மகளிர் குழந்தைகள் நலப் பணிகளைப் பற்றியும் அதற்கு உதவியாக இருந்தவைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுத விரும்புகின்றேன். இதில் வரும் தகவல்கள் எல்லோருக்கும் பயன்படும். நமக்குப் பிரச்சனை வராவிட்டாலும் நமக்குத் தெரிந்த யாருக்கு துன்பம் வந்த பொழுது அவர்களுக்கு உதவிசெய்ய இது ஓர் வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஓர் பிரச்சனையை நோக்கிப் புறப்பட்டாலும் நலத் திட்டங்களையும் பற்றி உடன் எழுதிக் கொண்டு வருவதற்கு அதுவே காரணம்.

அரசில் பணியாற்றுபவர்களுக்கு எக்கட்சி ஆட்சிக்கு வரினும் அவர்கள் போடும் திட்டங்களை நிறைவேற்றுவது எங்கள் கடமை.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், கலைத்துறையில் இருப்பவர்கள்பற்றி நிறைய விமர்சனங்கள் வரத்தான் செய்யும். மனிதனுக்கு அறுசுவை உணவைவிட சுடச்சுடச் செய்திகள் சுவையாக இருக்கின்றதே. ஒவ்வொருவரும் அடிக்கடி தங்களைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தூத்துக்குடி கிறிஸ்துவக் கல்லூரியில் படித்த காலம் முதல் எனக்குள் ஏற்பட்ட பழக்கம். .குறையில்லாதவர்கள் யார் ? தவறுகளும் செய்கின்றோம். அது மனித இயல்பு. ஆனால் தவறு செய்து கொண்டே இருப்பது மன்னிக்க முடியாதது.

குணக்கேடன், கொள்ளைக்காரன், குடிகாரன், கொலைகாரன் யாராயினும் ஒதுங்கிச் செல்ல மாட்டேன். என்னால் அவர்களைத் திருத்த முடியாது. ஆனால் ஒரு கணமேனும் அவர்களுக்குள் உறைந்திருக்கும் மனிதத்தை விழிப்படையச் செய்வேன் அப்பொழுது அவர்கள் விட்ட ஒரு சொட்டுக் கண்ணீரை அவர்களால் மறக்க முடியாது. நானும் மறக்கவில்லை. இது கதை போல் இருக்கலாம். இது சத்தியமான வார்த்தை

குழந்தைப் பருவத்தில் தந்தையின் பிரிவும் அதன் காரணமும் எனக்குள் ஓர் தாகத்தை, தேடலை உருவாக்கி விட்டது. ஏழு வயதில் பாரதி எனக்குள் கலந்து துணிச்சலைக் கொடுத்தான். பிள்ளைப் பருவ அனுபவங்கள் மிரட்டின. மன்னர் ஆட்சி, மக்கள் ஆட்சி, பக்தி உலகம், இன்னொருபக்கம் பகுத்தறிவு முழக்கம், சேற்றிலே மூழ்கிக் கொண்டிருப்பவனைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக அந்த நாற்றத்தைச் சகித்துக் கொள்ள போதையூட்டும் மனிதர்கள்.. மிரண்டு கொண்டிருந்தேன். அப்பொழுது கல்லூரி வாழ்க்கை தொடங்கியது. கிறிஸ்தவக் கல்லூரி. துறவற வாழ்க்கைக்குத் தூண்டுகோல். அப்பொழுது எனக்கு சுவாமி சிவான்ந்த மகரிஷியிட மிருந்து கடிதமும் புத்தகங்களும் வந்தன. அது ஒரு தனிக் கதை. ரிஷிகேசம் சென்று விட விரும்பினேன். ஆனால் சுவாமிஜி என்னைப் படிக்கச் சொன்னார்கள். படித்த பின்னர் பிறருக்கு சேவை புரியும்படி அறிவுரை கூறினார். அவர் எழுதிய கடிதங்கள் இப்பொழுதும் சில என்னிடம் இருக்கின்றன.. அமைதியான ஆசிரியப் பணிக்குச் சென்றேன். அங்கும் என்னை இருக்கவிடாமல் கிராமத்தில் போய் தொண்டு செய் என்று ஒரு பெரியவர் கட்டளையிட்டார். எனக்குப் பயிற்சி கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் காந்திஜியிடம் தொண்டு செய்தவர்கள். தொண்டு என்பது துன்பத்தில் உழல்பவனுக்கு உதவி செய்வது. குஷ்டரோகியாக இருந்தாலும் வைத்தியன் வெறுக்க முடியாது. எப்படி நெருங்க வேண்டுமோ அப்படி தன்னைத் தயார் படுத்திக் கொண்டு அணுகுவார்கள். அங்கே நடப்பது சிகிச்சை. தூத்துக்குடியில் கல்லூரியில் படிக்கும் பொழுது ஓர் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அங்கே வெளிநாட்டு கன்னியாஸ்த்ரீகள் குஷ்ட ரோகிகளுக்கு முகம் சுளிக்காமல் சேவை செய்வதைப் பார்த்திருக்கின்றேன்

எனக்குக் கிடைத்த வாய்ப்புகள், என்னைச் செதுக்கின. என்னால் யாரையும் வெறுக்க முடியாது. கோபம் வரும். கண்டிப்பேன். தோல்விகளைக் கண்டு துவண்டதில்லை. புலம்பி இருக்கின்றேன். என்னிடமும் குறைகள் உண்டு. முடிந்த மட்டும் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வேன். தற்காலச் சூழல் பயமுறுத்துகின்றது. பிள்ளைப் பருவத்தில் நான் பார்த்த சமுதாயம் இப்பொழுது எந்த அளவு மாறி இருகின்றது என்பதனைக் காணும் பொழுது மனம் வலிக்கின்றது. யாரும் மனத்தில் கசப்பைப் பெருக்காதீர்கள். குருஷேத்திர யுத்தத்திலும் முதலில் கட்டுப்பாடான முறையில் சண்டை நடந்தது. பின்னர் அது சங்குல யுத்தமாக மாறியது. இதுதான் வாழ்க்கை. இதுதான் வரலாறு. தீமைகள் பெருகும் பொழுது இயற்கையே வெடிக்கும். தரம் கெட்டு போகும் மனிதர்களைக் காணும் பொழுது கோபம் வரத்தான் செய்யும். கசப்பை நாம் நமக்குள் பெருகச் செய்தால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. முடிந்தவரை நாம் நல்லதைச் செய்வோம். நல்லதை எண்ணுவோம்.

தற்பெருமைக்காக சொல்லவில்லை. இது உளவியல். ஒரு மனிதனின் வளர்ச்சி தாயின் கருவில் உதயமாகும் பொழுது ஆரம்பித்து குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம், காளைப்பருவம் ஆகிய காலங்களில் வளர்ப்பு முறை, வாழும் சூழலையொட்டி ஒருவன் குணம் அமைகின்றது. அறியாத வயதில் அவமானப் பட்டிருந்தால் அவனுக்குள்ளே கோபம் நெருப்பாகத் தங்கிவிடும். ஏமாற்றங்கள், இயலாமை இவைகளால் மனிதன் தன் மனிதம் இழக்கின்றான். இப்பொழுது மாறிவரும் உலகச் சூழலும் ஊடகங்கள் மூலமும் வேறு பல வழிகளிலும் மனிதம் தேய ஆரம்பித்து விட்டது. இருக்கும் நல்லவர்கள் சிந்தித்து வழி கண்டு மாறுதலைக் கொணர வேண்டும். இன்றைய இளைஞர்கள் கற்பூர புத்தி கொண்டவர்கள். சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் சந்ததியைக் காப்பாற்ற அவர்கள் பொங்கி எழுவார்கள். நம்பிக்கையுடன் இருப்போம். நம்பிக்கையுடன் முயற்சியும் செய்வோம். நம்பிக்கைதானே வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணி.

இனி சமூக நல வாரியத்தின் வரலாற்றைப் பார்ப்போம். அது ஓர் ஆழ்கடல். இந்த மண்ணின் பெண்ணுக்குப் பெருமை தரும் ஓர் அமைப்பு.

“மனிதனின் இன்றைய நிலையை நிர்ணயிப்பது அவனது கடந்த கால செயல்கள்.  அவனுடைய பிறப்பிலிருந்து இந்த வினாடிவரையிலான அனுபவங்கள் தூய்மையாகவும், புனிதமாகவும் இருப்பின், அவன் இன்று ஓர் தூய்மையான பெருந்தன்மையான மனிதன்.”

சுவாமி சின்மயானந்தர்.

(தொடரும்)

படத்திற்கு நன்றி

Series Navigationமஞ்சள் கயிறு…….!நினைவுகள் மிதந்து வழிவதானது
author

சீதாலட்சுமி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    This section in THINNAI has a historical backgroung on the efforts by the Government and Voluntary agencies for the uoliftment of our women in the villages of Tamil Nadu. It needs such selfless sacrifice as illustrated by the writer Madam SEETHALAXMI. Unfortunately politics have penetrated into our villages and has hindered the co-operative efforts of our people. It is my sincere hope that these series of articles will inspire our present educated young men and women to do something to our society….Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *