பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-10)

This entry is part 29 of 32 in the series 15 ஜூலை 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

 

புதுநெறி காட்டிய கவிஞர்கள்

 

நல்ல சிந்தனையிலிருந்துதான் நல்ல கவிதைகள் பிறக்கும் சிறந்த குறிக்கோளை உடையவர்கள்தான் சிறந்த கவிஞராகத் திகழ முடியும். சிறந்த கவிஞன் தன்னுடைய உயிர்-மூச்சு-உழைப்பு-தொழில் எல்லாம் கவிதைதான் என்று எண்ணுவான். கருத்துக்கள் செறிந்த கற்பனை வானில் எவரும் எட்டிப்பிடிக்க முடியாத மிக உயர்ந்த நிலையில் சிறகடித்து வட்டமிட்டுத் திரிவான். அவன் பழைமைகளைப் பார்ப்பான். இருக்கின்ற உண்மைகளை உணர்வான். எதிர்காலததில் எழவேண்டிய புதுமைகளை உணர்த்துவான். செய்ய வேண்டியவை எவை என்பதை அறிவுறுத்துவான். செய்யக் கூடாதவை எவை என்பதைச் சுட்டிக் காட்டுவான். உலகத்தின் இழுப்புக்கு அவன் செல்வான். உலகோர்க்குத் தான் கட்டுப்பட மாட்டான். ஆனால் உலகோரைத் தன் அறிவுக் கட்டுப்பாட்டுக்குளட் கொண்டுவர விழைவான். அவனுடைய உள்ளத்திலிருந்து கவிதைகள் ஊற்றெடுக்கும் அவன் சொல்லுக்குச் சொல் சுவை ஊட்டுவான். பொருளுக்கு ஒளி கூட்டுவான். இந்தப் பண்புகளெல்லாம் ஒருங்கே நிறையப் பெற்று விளங்குபவர்கள் மகா கவி பாரதியும், மக்கள் கவி பட்டுக்கோட்டையாரும் ஆவர்.

மகா கவி பாரதியாரே தமது வாழ்க்கையின் குறிக்கோளை,

‘‘ எமக்குத் தொழில் கவிதை

நாட்டிற்கு உழைத்தல்

இமைப் பொழுதும் சோரா திருத்தல்’’

எனத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் திட்பமாகவும் எடுத்துரைக்கின்றார்.

பாரதியார் நமது நாட்டு மக்களின் அறிவை வளர்க்க விரும்பினார். அறியாமையை அகற்றப் பாடுபட்டார். மக்களின் ஆற்றலைப் பெருக்க முயன்றார். வாய் இருந்தும் ஊமையராய்க் காது இருந்தும் செவிடர்களாய்க், கண் இருந்தும் குருடர்களாய் வாழும் மக்களை வெறுத்தார். தமிழ் மக்களைப் பார்த்து,

‘‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

கலைச்செல்வங்கள் யாவும்

கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’’

என்று கூறுகின்றார். தமிழகத்தில் நீர் வளம், நிலவளம், கடல் வளம், காட்டு வளம், கனிம வளம் போன்ற பல்வேறு வளங்கள் செழித்தோங்கினாலும் மக்கள் வறுமையில் வாடுவதைக் கண்டார். இதற்குக் காரணம் மக்களிடையே நிரம்பிக் கிடக்கும் அறியாமைதான் என்பதைப் பாரதியார் நன்கு உணர்ந்தார். அறியாமை இருளை அகற்றி அறிவு ஒளியை ஏற்றினால் ஒழிய தமிழ்ச் சமுதாயம் வாழ வழி பிறக்காது என்பதை அறிந்த பாரதியார், அறிவுடைமைக்கு மதிப்பு அளித்து, எல்லோரிடத்திலும், எல்லா இடங்களிலும் எப்பொழுதும் வளர்க்க தம்மால் இயன்ற வழியிலெல்லாம் முயன்றார்.

ஒருமுறை பாரதியார் அர்வள் தம்முடைய மாமனார் ஊராகிய கடயத்திற்குச் சென்றிருந்தாராம். அப்பொழுது அங்கு நண்பர் ஒருவர் வீட்டில் திருமணம் நடைபெற்றதாம். திருமணத்தையொட்டி மாலை வேளையில் தேவகோட்டை வித்துவான் ஒருவர் வள்ளித் திருமணம் பற்றிய கதை சொல்லும் கலைநிகழ்ச்சி ஒன்றினை நடத்தினாராம். பாரதியார் தம்முடைய நெருங்கிய நண்பர்களுடன் கலை நிகழ்ச்சியைக் கேட்டுக் களிக்கச் சென்றிருந்தாராம். பாகவதர் கதையில் வேடர்கள் காளிக்குப் பூசை போடுகிற கட்டம் ஒன்றினை விவரித்துக் கூறினாராம். வேடன் ஒருவனுக்கு ஆவேசம் வந்து பாடுவதாக நிகழ்ச்சி, சாமியாடும் வேடன் பாடுவதாக,

‘‘பாக்கு வைச்சான்,

பழமும் வைச்சான்,

வெற்றிலை வைச்சான்

புகையிலை வைச்சான்

ஒன்று வைக்க மறந்திட்டான்,

ஒன்று வைக்க மறந்திட்டான்,

அதுதான்,

சுண்ணாம்பில்லை! சுண்ணாம்பில்லை!’’

என்று பாகவதர் பாடிக்காட்டினாராம்.

அந்தப் பாட்டைக் கேட்டவுடனே பாரதியார் கொல்லென்று சிரித்து, எழுந்துநின்று குதித்தாராம். அவர் உடன் வந்த நண்பர்கள், ‘‘ஏன் சிரிக்கிறீர்கள்?’’ ஏன் குதிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்களாம். ‘‘எனக்கு ஒன்று நினைவு வந்தது. அதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்! குதிக்கிறேன்!’’ என்றாராம். ‘‘என்ன அப்படியொன்று நினைவுக்கு வந்தது’’ என்று அவர்கள் கேட்டார்களாம். உடனே பாரதியார் கீழ்க்கண்டவாறு பாடத் துவங்கிவிட்டாராம்

‘‘தமிழ் மக்களுக்கு இயற்கைக் கடவுள்

நிலமும்ட வச்சான்,

பலமும் வச்சான்

நிகரில்லாத செல்வமும் வச்சான்,

ஒன்று வைக்க மறந்திட்டான்,

ஒன்று வைக்க மறந்திட்டான்

அதுதான்,

புத்தியில்லை! புத்தியில்லை!’’

பாரதியாரின் இந்தப் பாட்டைக் கேட்டு எல்லோரும் சிரிப்பும் வியப்பும் கொண்டார்களாம்.

நமது நாட்டு மக்கள் அறிவற்றவர்களாகத் திகழ்கிறார்களே என்பதை எண்ணிப் பாரதி மனவேதனையுற்றதற்கு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியே சான்றாக அமைந்துள்ளது. மனித வாழ்வில் ஆக்கவினைகள் அனைத்திற்கும் அறிவே அடிப்படையாக விளங்குகின்றனது. இதனை மகாகவி வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் வலியுறுத்தத் தவறவில்லை. அறிவைத் தவிர மனிதனை ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் வேறான்று இருக்க முடியாது என்பதை ஆங்காங்கு சுட்டிக் காட்டுகிறார்.

அறிவைத் தேடாமல் பல ஆயிரக்கணக்கான தெய்வங்களைத் தேடித்தேடி அலைந்து அலைந்து திரியும் மக்களைப் பாரதியார் அறிவிலிகள் என்று அழைக்கின்றார்.

‘‘ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள் – பல்

லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

டானெல் கேளீரோ’’

என்பது மகாகவியின் நன்மொழியாகும்.

மாடன், காடன், வேடன் போன்ற பெயர்களைச் சொல்லி அவயற்றைக் கடவுள்களாய்ப் போற்றி வழிபடுபவர்களைப் பாரதியார் ‘மதியிலிகள்’ என்று குறிப்பிடுகிறார். எந்த ஒரு உயிரினத்திலும் பொருந்தியிருந்து வளர்ந்தோங்கும் அறிவு ஒன்றேதான் தெய்வமாகும் என்று வலியுறுத்திதக் கூறுகிறார். சுதிகளெல்லாம் சுத்த அறிவுதான் சிவமென்று கூறுகின்றன என்றும் மக்கள் பல பித்த மதங்களிலே மயங்கித் தடுமாறிப் பெருமையிழக்கக் கூடாது என்றும் மொழிகிறார். மூட மக்கள் வெறுங்கதைகள் பலவற்றைக் கட்டிப் பல தெய்வங்களைக் கட்டி வளர்த்து வருகின்றனர் என்றும், கள்ள மதங்கள் பலவற்றைப் பரப்புவதற்கு, மறைகள் பல காட்டவும் குருட்டு நம்பிக்கை கொண்ட மக்கள் தவறுவதில்லை என்றும் உரைக்கின்றார்.

‘‘மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயங்கும் மதியிலிகாள் – எதன்

ஊடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்(று)

ஓதி யறியீரோ’’

‘‘சுத்த அறிவே சிவமென்று கூறும்

சுருதிகள் கேளீரோ – பல

பித்த மதங்களி லேதடுமாறிப்

பெருமை யழிவீரோ?’’

‘‘மெள்ளப் பலதெய்வம் கூட்டிவளர்த்து

வெறும் கதைகள் சேர்த்துப் – பல

கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை

காட்டவும் வல்லீரோ?’’

என்று பாரதி தெளிவுறுத்துகிறார்.

அறிவே தெய்வம் என்று புதுநெறி வகுக்கின்றார் மகாகவி. அறிவு பலமே நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் என்று பாரதி உணர்ந்ததால்தான் நாட்டு மக்கள் அறிவுள்ளவர்களாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புதுமை நெறி வகுத்த பாரதியாரோடு உடனிருந்து நெருங்கிப் பழகி அவரால் பெரிதும் பாராட்டப்பட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், பாரதியார் எப்படி வாழ்ந்தார்? அவரது கொள்கை என்ன? அவரது போக்கு எத்தன்மையது? என்பது போன்றவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார். மகாகவியைப் பற்றிய பாவேந்தரின் கூற்று பின்வருமாறு.

‘‘நான் இன்று எப்படி இருக்கிறேனோ என்ன கொள்கைகைளைக் கொண்டிருக்கிறேனோ அப்படித்தான் பாரதியார் அப்பொழுது இருந்தார். அவர் கொண்டிருந்த கொள்கைளைத்தான் நான் இப்பொழுது என் கவிகள் வாயிலாக மக்களிடையே பரவச் செய்து வருகிறேன்.

பாரதியாருக்குச் சாதி சமயப்பற்றே கிடையாது.

மக்கள் ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரும் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர் கருத்து.

அவர் தம்மை பிராமணர், பிராமண சமூகத்தில் பிறந்தவர் என்று எண்ணுவது கிடையாது.

அவர் கோயில் குளங்களுக்குப் போவது கிடையாது. ஆண்டவனை எப்படி வணங்குவது என்றே அவருக்குத் தெரியாது.

விபூதி நாமங்களைப் போட்டுக் கொண்டு பஜனை மடங்களில் பாடியும், ஆடியும் அவலமாகக் காலம் போக்கிக் கொண்டிருந்த என்னை இன்றுள்ள நிலைக்குக் கொண்டுவந்தவர் பாரதியார்தான்.

பாரதியாருக்குப் பூணூல் போட்டு நாமம் இட்டு, அவரைப் பற்றி இல்லாத பொல்லாத கதையெல்லாம் இன்று அளிப்பவர்கள் அவரை நன்கு அறியாதவர்களேயாவர்.

அன்பர் வ.ரா. போன்று பாரதியாருடன் பழகிய இரண்டொருவர்தான் உண்மையான சில விஷயங்களைக் கூறியிருக்கின்றனர். பாரதியார் அன்றுள்ள நிலையில் தேச விடுதலையை முதன்மையாகக் கருதினார். இன்று அவர் இருந்திருப்பாரேயானால் என்னைப் போலவே முழுக்க முழுக்க சமூகச் சீர்திருத்தங்குறித்த கவிதைகளையே இயற்றியிருப்பார்’’ (பாரதியார் நூற்றாண்டு விழா மலர், ப., 100)

பாரதியார் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும், பெண்ணுரிமைக்கு வழிவகுத்தும், சமதர்ம நெறியைப் புகுத்திப் பாடியும், அதன் வழி நடந்தும் எனப் பல்வேறு புதிய நெறிகளை வகுத்த பாவலராகக் காட்சியளிக்கின்றார். பாவேந்தரின் கூற்றுப்படி பார்த்தால் மகாகவி பாரதியார் முற்போக்குக் கருத்துக்களின் முழு உருவமாக விளங்கி வந்திருக்கிறார் என்பது புலனாகும்.

மகாகவி, புரட்சிக் கவிகளின் பாதையில் பயணித்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் அவர்களின் கூற்றை வலியுறுத்துவதோடு அதனைச் செயல்முறைப்படுத்தும் வழிவகைகளை எடுத்துரைக்கின்றார். சுதந்திரத்திற்கு முன்னர் அனைத்தும் ஆங்கிலேயர் வசமிருந்த சூழலில் மக்கள் அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர். சுதந்திரம் பெற்ற பின்னர் இந்நிலையில் வேறுவிதமான மாற்றம் ஏற்பட்டது. பணம் படைத்தோரே கல்வி பெறமுடியும் என்ற நிலை உருவானது. வறியோர் கல்வி பெறுவதற்குரிய வழிகள் அடைக்கப்பட்டன. பணத்திற்கேற்ற கல்வி வழங்கும் நிலை மக்களை வாட்டி வதைத்தது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று பலரும் சிந்தித்த வேளையில்,

‘‘அறிவுக்கதவைச் சரியாய்த் திறந்தால்

பிறவிக் குருடனும் கண்பெறுவான்’’(313)

என்று மக்கள் கவிஞர் ஒரு புதிய நெறியை வகுத்துரைக்கின்றார். பாரதியாரின்,

‘‘பயிற்றிய பல கல்வி தந்து

இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்’’

‘‘வெள்ளம் போல் கவிப்பெருக்கும்

கலைப் பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

விழிப்பெற்றுப் பதவி கொள்வார்’’

என்ற கவிதையின் தொடர்ச்சியாக மக்கள் கவிஞரின் கவிதை வரிகள் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

நமக்குக் கல்வி என்பது கிடையாது. கல்வி கற்பது என்பது  தலைஎழுத்துப்படி தான் அமையும் என்று அறியாமையில் பிறவிக் குருடாகத் தம்மைத் தாழ்த்திக் கொண்டு கீழே வீழ்ந்து கிடக்கும் மக்களும் அறிவு பெற வேண்டும். கல்வி கற்பது ஒன்றே அறிவு பெறுவதற்குரிய வழியாகும். இதனை உணர்ந்து அதற்கேற்ற வண்ணம் கல்வியறிவு பெறுவதற்கான எளிய வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இன்று பல்வேறு விதமான தடைகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பணமே அனைத்தையும் நிர்ணயிப்பதாக உள்ளது. பணம் படைத்தவனே நினைத்தபடி நினைத்த படிப்பினைப் படிக்க இயலும் என்ற நிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டே மக்கள் கவிஞர் அறிவு பெறும் வழிகளைச் சரியாகத் திறத்தல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

மகாகவி அறிவைத் தெய்வமாகக் கருதினார். மக்கள் கவிஞர் இவ்வறிவுத் தெய்வத்தை அடையும் வழிகள் எளிமையாக்கப் படவேண்டும் என்று அதற்குரிய வழிமுறைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார்.

மகாகவியைப் போன்றே மக்கள் கவிஞரும் கோவிலுக்குச் செல்வது கிடையாது. தெய்வத்தின் பெயரால் மனிதர்களை அடிமைப்படுத்துவதையும், சுரண்டுவதையும் மக்கள் கவிஞரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. உண்மையான இறைபக்தி, மனிதனைச் சுரண்டாத, அடிமைப்படுத்தாத, வஞ்சிக்காத பக்தி வளரவேண்டும் என்ற எண்ணமே மக்கள் கவிஞரின் கொள்கையாக இருந்தது என்பது நோக்கத்தக்கது.

பல தெய்வங்களின் பெயர்களைக்கூறி மக்களை ஏமாற்றும் நிலை மாறவேண்டும். மக்கள் அத்தகைய அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் என்று கருதிய மக்கள் கவிஞர் மகாகவியின் வழியிலேயே,

‘‘ஊருக்கெல்லாம் ஒரே சாமி!

ஒரே சாமி! ஒரே நீதி!

ஓரே நீதி! ஒரே சாதி!

கேளடி கண்ணாத்தா!’’ (ப.,20)

என்று பாடுகின்றார். அனைவருக்கும் காற்று, நீர் உள்ளிட்டவை ஒன்றே. அதுபோல் தெய்வமும் ஒன்றே என்பதை அறிந்து மக்கள் வாழ வேண்டும் என்று பாரதியின் கருத்தினை விளக்கமாகவும் தெளிவாகவும் மக்கள் மனதில் பதிகின்ற வண்ணம் மக்கள் கவிஞர் பாடுகின்றார்.

‘‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’’ என்றெல்லாம் மகாகவி பாடி நமது நாடு எவ்வாறு செல்ல வேண்டும் என்று புதிய பாதை அமைத்துக் கொடுத்தார் மகாகவி. ஆனால் மக்கள் கவியோ, ‘‘கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்’’ என்று பாடிய பாவலனைக் குருவாகக் கொண்டதால் போருக்கு உதவும் ஆயுதங்களைச் செய்து மனித குல அழிவுக்கு அறிவியல் பயன்படக் கூடாது என்று புதிய அமைதி நெறியை சுதந்திர இந்தியாவிற்குப் படைத்தளிக்கின்றார்.

உலகப்போரில் அணுகுண்டு வீசப்பட்டு ஜப்பானின் நகரங்கள் அழிந்ததை நன்கு அறிந்திருந்த காரணத்தால் அறிவியல் ஆக்கத்திற்கே பயன்பட வேண்டும். அழிவிற்குப் பயன்படக் கூடாது என்று திரை இசைப் பாடலில் வலியுறுத்திப் பாடுகின்றார்.  மனித நேயத்துடன் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருத்தல் வேண்டும் என்பதை,

‘‘அன்பில்லாத அறிவாலே நேரும்

அழிவைக் கேளுங்கோ

அமைதியா ஒரு நிமிஷமிருந்து

ஆராய்ந்து நல்லாப் பாருங்கோ

வேட்டுவச்சுப் பல நாட்டை அழிக்கவே

விஞ்ஞான ஆராய்ச்சி செய்து

ஆட்டிப் படைப்பதும் அன்பில்லாத

அறிவாலே உருவாச்சு’’(கே.ஜீவபாரதி, பட்டுக்கோட்டையார், ப.5-6)

என்று காலத்திற்கு ஏற்ற புதுமையான நெறியை மானிட சமுதாயம் வாழப் படைத்தளிக்கின்றார்.

மனித நேயம் குறைந்ததால்தான் அமெரிக்கா ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டினை வீசி மாபெரும் அழிவுக்கு வித்திட்டது. மனிதர்களின் மீது உண்மையான அன்பு இருந்தால் இத்தகைய பேரழிவுக் கருவிகளைக் கண்டுபிடித்து அதை மனித குல அழிவுக்குப் பயன்படுத்தி இருக்க முடியுமா? மனிதநேயம் இல்லாததுதான் இதற்குக் காரணம் ஆகும். பேரழிவு ஆயுதங்களை அறிவியல் உதவியுடன் செய்து பிற நாட்டின் மீது போட்டு அந்நாட்டை ஆட்டிப் படைக்க நினைக்கும் அநாகரிகச்செயல்.

இனி உலகத்தில் நிகழக் கூடாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித நேய அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற உலகப் புது நெறியை மக்கள் கவிஞர் அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைக்கின்றார். இஃது காலத்திற்கேற்ற புது நெறியாகும்.

சிலர் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் ஏதேனும் குறைகளிருப்பின் அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். யாரேனும் அவரிடம் அத்துறை பற்றிய குறைகளை எடுத்துரைத்தாலும் அவரிடம் சண்டைக்குச் செல்வர். ஆனால் மக்கள் கவிஞர் தம்மிடம் காணப்படும் குறைகளை யாரேனும் எடுத்துக் கூறினால் அதனைப் பொறுமையுடன் கேட்டு பின் அத் தவறு நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வதாகக் கூறித் தன் வருத்தத்தையும் தெரிவிக்கும் பண்பாளராக விளங்கினார். இதற்குப் பின்வரும் நிகழ்வு சான்று பகர்வதாக அமைந்துள்ளது.

‘குலதெய்வம்’ என்கிற திரைப்படத்தில் அகங்காரம் பிடித்த ஒரு பெண் பாத்திரம் அவளால் பாதிக்கப்பட்ட அவளது கணவன் பாடுவதாக,

‘‘வஞ்சகம் மூணு அவுன்சு, வம்புத்தனம் ஏழு அவுன்சு,

வரட்டுக் கவுரவமும் அரட்டைகளும் பத்து அவுன்சு,

எஞ்சியுள்ள தங்கம் வைரம் புஷ்பம்

தளுக்கும் மினுக்கும் எண்ணாயிரம் அவுன்சு கலந்தது

ஒரு பெண்மையடா! அதை நம்பிக் கெட்டவர் பல

பேரடா! அந்த ஸ்டோரி ரொம்ப நீளமடா

உள்ளிருந்து கொடுமை செய்யும் பெயர்பெற்ற

பெண்களை…’’

முடியாது…! நம்ப முடியாதது ………… பெண்கள்,

பிடிவாதம் தீர்க்க முடியாதது………………….’’(ப.,217)

என்ற பாடலைத் திரைப்படத்தில் வரும் காட்சிக்காக மக்கள் கவிஞர் எழுதினார்.

இப்பாடலைக் கேட்ட பாப்பா உமாநாத் அவர்கள் உடனே பட்டுக்கோட்டையாருக்கு,

‘‘ஒரு கம்யூனிஸ்ட் கவிஞர் ஆன நீங்க பெண்களைக் கேவலப்படுத்தும் இது போன்ற பாடலை எழுதலாமா? அதுமட்டுமில்லை. பல இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் பண்ண இந்தப் பாடலைத்தான் பயன்படுத்துகின்றனர்’’

என்று குறிப்பிட்டுக் கடிதம் ஒன்று எழுதினார்.

இதனைப் படித்த மக்கள் கவிஞர் பாப்பா உமாநாத்துக்கு, ‘‘உங்களது கடிதம் கிடைத்தது.. நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை மீளப் படித்துப் பார்த்தேன். அப்பொழுதுதான் தங்களுடைய நியாயமான கோபம் எனக்குப் புரிந்தது. ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட மனநிலையிலுள்ள இளைஞனின் கோணத்திலிருந்துதான் அப்பாடலை எழுதிவிட்டேன். பொதுவாகப் பெண்களைக் கிண்டல் பண்ண பல இளைஞர்கள் இப்பாடலைப் பாடுவதாகத் தாங்கள் கூறியதிலிருந்து தெரிந்து கொண்டேன். இனி வருங்காலத்தில் இது போன்ற திரைப்படப் பாடலை எழுதும்போது கவனத்துடனிருப்பேன். உங்கள் கடிதத்தில் வெப்பக் கனலாக வீசிய விமர்சனத்தை என்றும் நினைவில் வைத்திருப்பேன். இலட்சியத்திலிருந்து வழுவமாட்டேன்’’ என்று எழுதினார் (கார்த்திகேயன், பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை, ப.,55-56). இது மக்கள் கவிஞரின் மனப்பக்குவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வருமானத்தினைக் குறிவைத்தும் மக்களின் மனதைக் கெடுக்கும் வண்ணம் திரைப்படம் எடுத்தல் கூடாது. மக்களின் வாழ்க்கையை உயர்த்துகின்ற வண்ணம் திரைப்படம் எடுத்தல் வேண்டும். ஏனெனில் திரைப்படமே மக்களிடம் பல்வேறு வாழ்க்கைக் கருத்துக்களை உடனடியாக எடுத்துச் செல்கின்றது என்ற அடிப்படையில் மக்கள் கவிஞர் தரமான திரைப்படங்கள் வெளிவர புதுமையான பாதையை வகுத்துக் கொடுக்கின்றார்.

திரைத்துறையில் புகழ்பெற்ற கவிஞர்கள் செய்யாத செய்யமுடியாத புதுமையினை மக்கள் கவிஞர் படைத்தார் என்பது நோக்கத்தக்கது. ஒரு திரைப்படம் எங்ஙனம் எடுத்தல் வேண்டும் என்பதை பாண்டித்தேவன் என்ற திரைப்படத்தினைப் பாராட்டி எழுதிய பாடலில்,

‘‘பசிக்குறி முகங்களைப் பாட்டாளி வர்க்கத்தை

நசுக்கிப் பிழிந்திடும் அராஜகச் செயலை

மாற்றிடும் கருத்தைத் தமிழ்ப்பட உலகம்

வன்மையாய் உரைக்க அஞ்சும் நடுங்கும்!

சிக்கல் நிறைந்த வர்க்கங்கள் திருந்த

மக்கள் கலைதான் மலர்ந்திட வேண்டும்

என்னும் பொருள்கள் பாண்டித்தேவனில்

பின்னிக் கிடப்பதைப் பார்ப்போர் அறிவர்!

நாட்டை உயர்த்தும் நற்படம் இதுபோல்

நாளும் வளர்த்தல் வேண்டும் பணத்தின்

வேட்டையைக் குறிப்பாய்ப் படம் எடுப்போர்

பாட்டையே பாடாமல் காலத்தை நோக்குக!

பாண்டித் தேவைனப் பார்த்துத் தெளிக! என்

சொந்த விருப்பம் இது! மக்கள் தம் விருப்பமும்

இவ்விருப்பத்தோடு இணைய மறுக்காது

என்று நினைக்கிறேன்! நன்றி! வணக்கம்!’’ (ப.கோ.பா.,பக்.,229-230)

என்று குறிப்பிடுகின்றார். மக்கள் கலை வளர்வதற்குத் தேவையான காலத்திற்கேற்ற புதுமையான நெறியைப் படைத்தளிக்கின்றார் பட்டுக்கோட்டையார்.

திரைப்படம் எடுப்பவருக்கு மட்டும் கவிஞர் அறிவுரை கூறவில்லை. பாட்டெழுதுவோர், ஆடற்கலைஞர்கள், கதை எழுதுபவர், நடிப்பவர் உள்ளிட்ட கலைஞர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் மக்கள் கவிஞர் வகுத்துக் கொடுக்கின்றார். இன்று இளைஞர்களையம் சமுதாயத்தையும் சீரழிக்கின்ற வண்ணம் மிகத் தரந்தாழ்ந்த பாடல்களைத் திரைப்படத்திற்குப் பாட்டெழுதுவோர் எழுதுகின்றனர். அதற்குக் காரணம் கேட்டால் மக்கள் விரும்புகிறார்கள் அதனால் நாங்கள் எழுதுகின்றோம் என்று கவிஞர்கள் கூறுகின்றனர். அது தவறான ஒன்றாகும். இது போன்றே திரைத்துறையைச் சார்ந்த அத்தனைபேரும் கூறித் தப்பித்துக் கொள்கின்றனர். இத்தகையோர் திருந்துவதற்காகவே மக்கள் கவிஞர்,

‘‘பாடுமிடம் தெரிந்து பாட வேண்டும் – ஆடுவோர்

பாட்டின் பொருள் உணர்ந்து ஆட வேண்டும்! – கவிஞன் (பாடும்)

பாடும் படக் கலைக்கும் பாடுபட்டோர் தமக்கும்

பலருக்கும் பலனளிக்கும் பக்குவம் இருக்கும்படி!(பாடும்)

கலைஞர்களைக் குழுவாய்க் கூட்ட வேண்டும்! – முதலில்

கதையமைப்பை விளக்கிக் காட்ட வேண்டும்! – அந்தக்

கருத்தோடு இணைந்து கவி தீட்ட வேண்டும்! – அதில்

காலத்திற்கேற்ற சுவையூட்ட வேண்டும்! – கவிஞன் (பாடும்)

ஆடற்கலை யழகு உடலமைப்பு! – இன்னும்

அகத்தின் நிலை விளக்கும் முகக் குறிப்பு!

பாடற்கலைக் கழகு இசையமைப்பு! – கலை

பலருழைப்பால் வளரும் பொதுப்படைப்பு! – என்பதால் (பாடும்)

ரசிக்கத் தெரிந்தவேர நடிக்கத் துணிய வேண்டும்

நம்பிக்கை கொண்டோர் படம் எடுக்கத் துணிய வேண்டும்

படிக்கத் தெரியாதாரும் பார்த்துத் தெளிய வேண்டும்

படத் தொழில் வளம் சிறக்கப் பண்பட்ட திறன் வேண்டும்’’(ப.,232)

என்று புதுநெறி வகுத்து அறிவுரை வழங்குகின்றார்.

பணத்திற்காக ஆசைப்பட்டு சமுதாயத்தைக் கெடுக்கின்ற வகையில் பாடலோ, படமோ, ஆடலோ, இசையோ, கதையோ திரைப்படத்தில் இருத்தல் கூடாது. அது நச்சுத் தன்மை வாய்ந்த படமாக இருக்கும் இன்றைய நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு திரைப்படத்தையும், பாடல் உள்ளிட்டவற்றையும் செய்தல் வேண்டும். அதுவே சிறந்த படம் உருவாக வழியாகும். அதுவே சமுதாயத்தைச் சீர்திருத்தும் என்று திரைப்படம் வளர உலக அளவில் சிறப்படைய உரிய புதிய நெறியைப் பட்டுக்கோட்டையார் பாடல் வழி எடுத்துரைக்கின்றார்.

இங்ஙனம் மகா கவியும் மக்கள் கவியும் காலத்திற்கேற்ற புதுமையான நெறிகளை வகுத்துரைத்து நாடும், சமுதாயமும் முன்னேற வழிகாட்டுகின்றனர். இக்கவிஞர்கள் எதற்கும் யாருக்காகவும் தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. தங்கள் தங்கள் நிலையிலிருந்து நாட்டினையும், இந்நாட்டு மக்களையும் முன்னேற்றும் புதுமையான சிந்தனைகளைச் சிந்தித்து அதனைத் தங்களது பாடலில் பவனிவரச் செய்தனர். இக்கவிஞர்களின் கருத்துக்கள் என்றும் புதுமைப் பொலிவுடன் விளங்குவது சிறப்பிற்குரியதாகும். இவர்களின் எண்ணம், செயல், சிந்தனை ஆகியவற்றில் நாடும் நாட்டு மக்களும் நிறைந்திருந்ததால்தான் அவர்கள் மக்கள் பயனுறும் வகையில் புதுமைநெறிகளை எடுத்துரைத்துப் புதுநெறிகாட்டிய கவிஞர்களாகத் திகழ்கின்றனர்.

Series Navigationஉய்குர் இனக்கதைகள் (2)பஞ்சதந்திரம் தொடர் 52 சமயோசித புத்தியற்ற குயவன்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *