பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)

This entry is part 21 of 35 in the series 29 ஜூலை 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

கவிஞர்களும் பறவைகளும்

மனித வாழவியலில் வேரூன்றி, சமுதாயச் சூழலில் செல்வாக்குக் கொண்டு, பயனுடைய பாடல்கள் பலவற்றை மகா கவியும், மக்கள் கவியும் படைத்தார்கள். தனக்காக மட்டுமே எழுதிக் கொண்ட தன்மைக் கவிஞர்களாகாது, தம் கவிதைகள் அனைத்தையும் பிறருக்காகப் படைத்தவர்கள் இக்கவிஞர்கள். வோழும் உயிர் அனைததையும் தானாகக் கருதிய உயிரொருமைப்பாட்டு உணர்வினர் கவிஞர்கள் என்பர். இத்தகைய உணர்வால் பாரதியும் பட்டுக்கோட்டையும், மனித வாழ்வின் ஏற்றங்களைப் பற்றி சிந்தித்த பலவிடங்களிலும் ஆறறிவுடைய மனிதர்களுக்கு ஐயறிவினதான பறவைகளைக் கொண்டு பல்வேறுவிதமான பண்பாட்டு நெறிகளையும், வாழ்வியல் குறிக்கோள்களையும் புலப்படுத்துகின்றனர்.

மகாகவி பாரதி தன் படைப்பு எல்லாம் உணவாகி, ஒளியாகி, கற்போர் கேட்போர்க்கு உயிராகி ஊட்டமும் ஊக்கமும் தந்து அமையச் செய்தவர். தமிழன் வீறுகொண்டு எழுந்து உழைத்து முன்னேற வாயிலாக அமைந்தவர். அகத்திலும் புறத்திலும் உள்ளத்திலும் அரசியலிலும் விடுதலை இல்லாது ஒடுங்கிக்கிடந்த மனித வாழ்வியலின் சூழல், சின்னஞ்சிறு சிறகுகள் இரண்டால் வானெங்கும் கட்டுப்பாடின்றி பறந்து இன்புறும் பறவையினத்தைக் குறிக்கோட் குறியீடாகக் கொள்ளச் செய்கின்றது. மனிதனிடம் அடங்கி அடிமைப்படும் விலஙக்காக அன்றி எளிய இனிய பிறர்க்குத் துன்பம் இழைிக்காத தூய்மை வாழ்வாய் உயர்ந்து செல்லும் பறவை பாங்குடைய வழிகாட்டியாகின்றது. உயரப் பறக்கும் பறவை, உயர்ந்த எண்ணங்களை விரும்பி உயரும் மனித மனத்தினை ஒத்து விளங்குகின்றது.

‘‘வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்’’(பாரதியார் கவிதைகள், ப., 188) என அத்வைத உணர்வினை வெளிப்படுத்திய மகாகவி பாரதியாரின் இறை விண்ணப்பம் குருவியின் இன்ப வாழ்வியலை வேண்டுவதாக அமைகின்றது.

‘ஞான ரதத்தில்’ ஏறிப் பல உலகும் கண்டு அனுபவித்துப் பவனிவரும் மகா கவியின் உள்ளம் உலக மக்களின் மனமும் கீழான மிருகத்தனமான எண்ணங்களில் ஊறி உழலாது உயர் எண்ணங்களே காற்றாக, உயிர் மூச்சாகக் கொண்டு முன்னேறுதலை விரும்புகின்றது. காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடும் ஆற்றல் தருகின்றது மனம். மனமாகிய புள்ளைப் பயன்கொள்ள உணர்ந்தவன், மனம்போல் பெருவாழ்வு பெறுதல் எளிதும் இயல்பும் ஆகும். இதனை,

‘‘உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம் . . . .

நன்று திரியும் விமானததைப் போலொரு

நல்ல மனம் படைத்தோம்’’(பாரதியார் கவிதைகள், ப., 221)

என்று பாரதியார் எடுத்தியம்புகிறார்.

விடுதலையை உணர்த்த வந்த பாரதி,

‘‘விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்

சிட்டுக் குருவியைப் போலே’’ (ப.,181)

என்று சிட்டுக்குருவியை உதராணமாக்குகின்றார்.

மனித வாழ்க்கையைவிடக் குருவியின் வாழ்க்கை சிறந்ததாக அமையக் காரணங்கள் பல உள்ளன. வானில் பறக்கும் ஆற்றல் மட்டுமல். குருவியின் வாழும் முறையில் ஏற்ற தாழ்வுகளும் கீழோர், மேலோர் எனும் வேறுபாடுகளும் இல்லை. ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்துதல், வருத்துதல் ஆகியவை இல்லை. பொய் இல்லை, பொறாமை இல்லை. கள்ளம், கபடம், கர்வம், சிறுமை ஆகியவை இல்லை. இவற்றையெல்லாம் மனிதர்களுக்கு மகாகவி,

‘‘கட்டுக்கள் ஒன்றுமில்லை – பொய்க் கறைகளும் ஒன்றுமில்லை

திட்டுகள் தீதங்கள் – முதற் சிறுமைகள் ஒன்றுமில்லை

குடும்பக் கவலையில்லை – சிறு கும்பித் துயருமில்லை

இடும்பைகள் ஒன்றுமில்லை – எங்கட் கின்பமே என்றுமடா

துன்பமொன் றில்லையடா – ஒரு துயரமும் இல்லையடா

இன்பமே எம் வாழ்க்கை – இதற்கு ஏற்றமொன் றில்லையடா

என்று குருவிப் பாட்டில் உணர்த்துகிறார். பறவைகளே இவ்வாறிருக்கும்போது மனிதர்கள் ஏன் தீய எண்ணங்களுடன் இருக்கின்றீர்கள்? என்று குருவிகளை வைத்துப் பாரதி வினாத் தொடுத்து அத்தீய எண்ணங்களை யெல்லாம் கைவிட்டு நல்லெண்ண மனிதர்களாக விளங்குகள் என்று கூறுகிறார்.

சிறிய உடம்புடன் விரைவாகப் பறந்து திரியும் சிட்டுக்குருவியை மட்டுமன்றி இன்னும் பல பறவைகளையும் கவிஞரின் வாழ்வியல் கண்ணோட்டம் காட்சிப்படுத்துகின்றது. மனமகிழ்வு, உயிரெழுச்சி, உடலியக்கம் என்பனவற்றில் மனிதனை விடவும் விலங்குகளைவிடவும் சிறப்பா அமையும் புள்ளினம் கவிஞரின் ஆய்வுக்கு உட்படுகின்றது. அதன் வழியாக அத்தகு வாழ்வை விரும்பும் மனிதனுக்கும் நெறி சுட்டப்படுகிறன்றது. குறியீடுகளும், குறிப்புப் பொருளுமாக அமையும் கவிஞரின் வசன கவிதைப் பகுதியின் ்ஜகத் சித்திரம் எனும் சிறு நாடகம், உருமை மாடு, நாகணவாய்ப் புள் உரையாடலில் இதனைக் காணலாம். அப்பகுதி பின்வருமாறு.

எருமை மாடு

‘பட்சஷி ஜாதிகளுக்குள்ள ஸந்தோஷமும், ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே? இதன் காரணம் யாது?’

நாகணவாய்ப் புள்

‘‘டுபுக்! வெயில், காற்று, ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக் காட்டிலும் எங்களுக்கதிகம். எங்களுக்கு உடம்பு சிறிது. ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காடடிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக ஸந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்சு மொழிகளுமாகக் காலங் கழிக்கிறோம்’’

இயற்கையோடு இயைந்த வாழ்வு, பெபருந்தீனி யின்மை, உணவின்பம், காதல் என்பன அடிப்படையாகின்றன. விளைவுகளில் ஒன்றாகப் ‘பாட்டு’ குறிக்கப்படுதல் சிந்திக்கத்தக்கது. விலங்குக்கு இல்லாத பாட்டு பறவையிடம் காட்டப்படுகின்றது. மனிதனுக்கு இயலும் ஆற்றலாகப் பாட்டும் அமைதல் குறிப்பிடத்தக்கது. மகிழ்வு வெளிப்பாடாகவும் மகிழ்வூட்டுவதுமாக அமையும் பறவையின் பாடல், மனிதனிடம் பயனுடைய கவிதையாக ஆகின்றது. ‘பாட்டைக் காட்டிலும் சரமான தொழில் வேறில்லை’ என்பது நோகணாவய்ப் பறவையின் முடிவு.

‘‘இங்குள்ள ஜந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக்குந்தான் பாடத் தெரியும். மற்ற மிருககங்களுக்குப் பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்கும் வழக்கமிருப்பதால், அவற்றின் மனநிலை சங்கீதத்திற்கு இசைகின்றது. மனிதன் உடலினாலே பறக்காவிட்டாலும் உள்ளத்தைத் திசைவெளியிலே பறக்கும்படி செய்கிறான். அப்போது இயற்கையில் அவனுக்குப் பாட்டுத் தோன்றுகிறது’’(தமிழருக்கு, ப.,89)

என்று மற்றொரு சூழலில் மகாகவிஞர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

இதனுடன் பாரதியாரின் குயில் பாட்டையும் இணைத்துக் காணலாம். கவிஞனையும் கவர்கின்ற இசையினிமையுடைய பொருள் பொதிந்த பாடலைப் பாடுவதாகக் குறில் காட்டப்படுகின்றது. காதற் பாடலால் கேட்ட உயிரினங்களனைத்தையும் பரவசமூட்டி, நெஞ்சில் அனல் பெருக்கி, உடல் புளகாங்கிதமுறச் செய்கின்றது. கவிஞனையும் குயிலாக மாறும் குயிலைப் பெறும் விருப்பமுடையவனாக்ககின்றது.

மகாகவி,

‘‘மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ

இனிதிக் குயிற்பேட்டை என்றும் பரியாமல்

காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ

நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ’’

(பாரதியார் கவிதைகள், ப.,396)

என்று பாடுகின்றார். இங்கு குயில். குறிக்கோள் கவிஞனாகக் குறிப்புப் பெறுகின்றது எனலாம். ஆண்குயில் நெஞ்சில் அனல் பெருக்கும் அதன் இசைபோன்று, கவிஞனின் கவிதையும் கனலாகக் கற்றவர் நெஞ்சில் இயக்கம் பிறப்பிக்க வேண்டும். மின்னற் கலை எனவும் நெருப்புச் சுவை எனவும் குயிலின் பாடல் அமைதல், ஆற்றலுடைய செயற்பாட்டைக் கருக்கொள்கின்றது. ஒளியுடைமையையும் அதனால் நெறிப் புலப்பாட்டையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

இளவேனிற் காலத்தை வரவேற்று மகிழ்ந்து பாடும் குயில்போன்று, விடுதலை பெறும் இந்தியாவை விரும்பிப் பாடியவர் பாரதி. சொல்லாற்றலுடைய கிளியை மகாகவி படைக்குமிடம் பறவை வாயிலாக வாழ்வியலை உணர்த்தும் மறறொரு சூழலாகும். பேச்சு வன்மையுடைமையால் மனிதனால் கூண்டுக்குள் அடைபட்டுப் பால்பழம் உண்டு சுதந்திரம் இழந்தும் அவரை மகிழ்விக்கும் வாழ்வில் உழலும் பச்சைக்கிளி மனித அடிமைத்தனக் குறியீடாகின்றது. செல்வத்தைக் குறிப்பாகக் காட்டும் பொன் கூண்டும், பால் பழமும் மனிதக் கிளையை அடிமைப்படுத்துகின்றன. பொருளுக்காகவும் உணவுக்காகவும் பிறரிடம் அடிமைப்படுகின்றான் மனிதன். சாதராண மனிதன் மட்டுமன்றி வறுமையால் இழிவுற்று, வாழ்வில் முன்னேற வழியின்றித் தன் கவியாற்றலைக் கீழான செல்வந்தனுக்குக் காணிக்கையாக்கும் கவிஞனும் இதில் உட்படுகின்றான். மழலை மொழி பேசும் கிளியை முன்னிலைப்படுத்தி விளித்து பாரதி பேசுவது, அடிமைப்பட்ட பாரத சமுதாயத்தை நோக்கிக் குறிப்பிடுவதாக அமைகின்றது. நடிப்புச் சுதேசிகளின் பண்பினைப் பற்றி மகா கவி,

‘‘ நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி

வஞ்சனை சொல்வாரடீ – கிளியே

வாய்ச் சொல்லில் வீரரடீ’’ (பா.கவிதைகள், ப.,68)

என்று கிளியை வைத்து எடுத்துரைக்கின்றார்.

சொன்னதையே சொல்லி சுய சிந்தனை இல்லாத கூண்டுக்கிளியாகவன்றிச் சுதந்திரமாக வாழ வேண்டியவன் மனிதன். தன் இச்சையாகக் கட்டற்று அமையும் கிளியின் பேச்சில் தொனிக்கும் பொருளாழம் இதனை உணர்த்துகின்றது. மேலும் மனிதன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை பாரதியார்,

‘‘தன்மனப் பகையைக் கொன்று

தமோ குணத்தை வென்று

உள்ளக் கவலை யறுத்து

ஊக்கந் தோளிற் பொறுத்து

மனதில் மகிழ்ச்சி கொண்டு

மயக்க மெலாம் விண்டு

ஸந்தோஷத்தைப் பூண்டு

தைர்யா, ஹுக்கும், ஹுக்கும்’’(பா.கவிதைகள், ப.,452)

என்று சோலைக் கிளியின் பாடல் வழிப் புலப்படுத்துகின்றார்.

இசையாற்றலும் பேச்சாற்றுலுமுள்ள இப்பறவைகளின் வேறாகக் கவிஞர் அவ்வியல்புகள் இல்லாக் காகத்தையும் மனித வாழ்வியலுடன் இணைத்து நினைக்கின்றார். கூடிவாழும் இயல்பும், பகுத்துண்ணும் பாங்கும், சோம்பலில்லா வாழ்வும், விடியலில் விழிக்கும் பண்பும் இவற்றிடமிருந்து கற்றுக்கொண்டு மனிதன் வாழற்குரியவன் என்பதை,

‘‘காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்குந் திசையெலாம் நாமன்றிவேறில்லை

நோக்கக் நோக்கக் களியாட்டம்’’ (பா.கவிதைகள், ப.,181)

என மனிதர்களை ஒத்ததாக அதனை ஏற்கச் செய்து அதனிடமிருந்து பல பண்புகளை ஏற்கத் தக்கதாக்குகின்றார்.

பிரிந்து நிற்கும் பாரதம், அதன் மக்கள் காகக் கூட்டமாக ஒன்று சேர்ந்தால், சரியான நேரத்தில் பகலில் கூகையைக் கொல்லும் காகம் போன்று முனைந்தெழுந்து பகையை வெல்ல முடியும் எனப் பாரதியார் கருதுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காலைப்பொழுது’, ‘அந்திப்பொழுது’ எனும் தலைப்பின் பாடல்களின் காகக் காட்சியும் பிற பறவைகளின் காட்சியும் மக்களின் ஒருமிப்பைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. கற்றறிந்த காகத்தின் கூற்றாக,

‘‘சில நாளாக் காக்கை யுள்ளே

நேர்ந்த புதுமைகளை நீர் கேட்டறியிரோ

சார்ந்து நின்ற கூட்டமங்கு சாலையின் மேற் கண்டீரே?

மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே? . . .

வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கி விட்டான்

சோற்றுக்குப் பஞ்சமில்லை போரில்லை துன்பமில்லை’’

(பா.கவிதைகள், ப.,219)

என்று வரும் பகுதி மக்கள் துன்பமின்றி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற மக்கள் கவியின் எண்ணத்தைப் பகர்வதாக உள்ளது.

கவிஞரின் படைப்புப் புலப்படுத்தும் பிற பறவைகளும் இந்நிலையில் அணுகி ஆழ்ந்த பொருள் காண்பதற்கு இடமளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒளி வரக் கூவுகின்ற சேவல்’ விடுதலைச் சங்கு ஊதும் முயற்சியாளனைக் குறிப்பதாக அமையலாம். மோனத்தில் இருக்கும், பின்னர் விண் உச்சிக்குப் பறந்து செல்லும் மன்னப் பருந்துகள் மேன்மையான வாழ்வினரை உணர்த்துவதாக அமையும். வெண்ணிற அன்னம் நன்மை தீமை பிரித்தறியும் அறிஞனுக்குக் குறியீடாக அமைய முடியும். மேலும்,

‘‘சின்னஞ் சிறுகுருவி போலே – நீ

திரிந்து பறந்து வா பாப்பா

வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா’’ (பா.கவிதைகள், ப.,202)

எனப் பாரதியார் குழந்தைகளுக்குக் கூறிய அறிவுரை மனித குலம் அனைத்திற்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. பறவைகளை வைத்து மனிதர்களின் வாழ்விற்கு வழிகாட்டும் நெறிகளை மகா கவி அறிவுத்துகிறார்.

மகாகவி பாரதியாரைப் போன்றே மக்கள் கவிஞரும் பல பறவைகளை வைத்து மனித குலத்திற்குரிய வாழ்க்கை நெறிகளை எடுத்துரைக்கின்றார். பட்டுக்கோட்டையாரின் பாடல்களில் சேவல், காகம், மயில், சிட்டுக்குருவி, குயில் ஆகிய பறவைகள் இடம்பெறுகின்றன.

பறவைகளின் வாழ்க்கையைக் கூறி அதன் வழி மக்கள் வாழ வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளைப் பாரதியார் எடுத்துரைக்கின்றார். பறவைகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கின்றன. அவற்றின் வாழ்வில் பகையோ, கெடுதலான செயல்பாடுகளோ இல்லை. இப்பறவைகள் மாலை நேரத்தில் தங்களின் கூடுகளுக்குத் திரும்பி வரும்போது மகிழ்வுடன் வரும். இப்பறவைகளின் வாழ்வில் பிறரை வெறுக்கும் பகைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. தம்மினத்தோடு மகிழ்ந்து வாழும் பழக்கமுடையனவாகப் பறவைகளின் வாழ்க்கை அமைந்துள்ளன. இப்பறவைகளின் ஒலி கேட்பதற்கு இனிமையாக இருக்கும் மனிதனின் கவலைகள் அனைத்தும் போகும் என்பதை,

‘‘மாலை நேரம் வந்தது பாரு!

மகிழும் பறவை கானம் கேளு!

இன்னும் கொஞ்சம் இருந்து பாரு!

இருட்டும் விடியும் இதுதான் வாழ்வு’’ (ப.கோ.பாடல்கள், ப.,276)

என்ற பாடல்வழி மக்கள் கவிஞர் எடுத்துரைக்கின்றார். வாய்ப்புகள் வரும்வரை மனிதனே நீ காத்திருந்தால் உனது துன்பமாகிய இருள் விலகி ஓடி வாழ்வில் வெளிச்சம் என்ற இன்பம் வந்து சேரும் என்று பறவைகளை வைத்து மனிதனுக்கு நம்பிக்கையூட்டுகின்றார் கவிஞர்.

மனிதனின் இல்லற வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், கணவனும் மனைவியும் எங்ஙனம் இல்லறத்தை நல்லறமாக ஆக்கி வளமான வாழ்க்கை வாழ வேண்டும என்பதை,

‘‘பெண் பாக்குமரச் சோலையிலே பளபளக்கும் பாளையிலே

பறந்து பறந்து குருவியெல்லாம் என்ன பின்னுது?

ஆண் அது – வாழ்க்கைதனை உணர்ந்துகிட்டு

மனசும் மனசும் கலந்துகிட்டு

மூக்கினாலே கொத்திக் கொத்திக் கூடு பின்னுது!’’

(ப.கோ.பாடல்கள், ப.,139)

என்று கணவன் மனைவி பாடுவதாகப் பறவைகள் வாழ்க்கையைக் குறிப்பிட்டு கவிஞர் உணர்த்துகிறார். கணவன் மனைவி இருவரும் மனமொத்துக் குடும்பத்தை நடத்துதல் வேண்டும். அப்போதுதான் இல்லறம் இனிக்கும். வாழ்வு பரிமளிக்கும் என்ற அறநெறியை பறவைகளின் வாழ்வை வைத்து மக்கள் கவிஞர் விளக்கி இருப்பது பாரதியின் வாழ்க்கை விளக்கத்தைப் போன்று உள்ளது.

பாரதி அக்கினிக் குஞ்சைக் குறிப்பிட்டு வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கியதைப் போன்று பாரதி வழியினைப் பின்பற்றிய மக்கள் கவிஞர் பறவைக் குஞ்சினை வைத்து மனித வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகின்றார். உலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. அனைவரும் எவ்வாறு வந்தோமோ அவ்வாறே இவ்வுலகைவிட்டுப் போவோம். இதனைப் புரிந்து கொண்டால் மனிதகுலம் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் பகைமை கொண்டு, ஆசைவலைப்பட்டு ஆடாத செயல்களில் ஈடுபடாது. எதுவும் இவ்வுலகில் நிலையில்லாதது என்ற வாழ்வியல் உண்மையை உணர்ந்து மக்கள் வாழ வேண்டும் என்ற தத்துவத்தை,

‘‘உன்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்?

உலகத்துக்கெதுதான் சொந்தமடா!’’

‘‘கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்

குருவியின் சொந்தம் தீருமடா!’’ (ப.கோ.பா.ப.,192)

என்று பறவைக் குஞ்சினை வைத்து விளக்குகின்றார்.

இறகுகள் முளைக்கின்ற வரைக்கும் தான் குருவியின் குஞ்சு கூட்டிலே தங்கி இருக்கும். இறகுகள் முளைத்த பின்னர் கூட்டினை விட்டுவிட்டுப் பறந்து போய்விடும். இறகுகள் முளைக்கின்ற வரைதான் கூட்டிற்கும் குஞ்சிற்கும் தொடர்பும் உறவும் உண்டு. அதுபோன்றுதான் உயிர் இருக்கின்ற வரைதான் அனைவருக்கும் உறவும் தொடர்பும் உண்டு. கூட்டிற்கும் குஞ்சிற்கும் உள்ள தொடர்பைப் போன்றதே நமது வாழ்க்கை. இதனை உணர்ந்து மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேசித்து அன்புபாராட்டி வாழ வேண்டும் என்ற உயரிய உண்மையை மக்கள் கவிஞர் காலத்திற்கேற்றவாறு எடுத்துரைக்கின்றார்.

பறவைகளில் வைகறையில் எழுந்து உலகத்தைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் பறவை சேவலாகும். இச்சேவல் எங்ஙனம் காலம் அறிந்து கூவுகின்றதோ அதுபோன்று மனிதர்கள் காலமறிந்து நடந்து கொள்ள வேண்டும். சேவலைப் போன்று மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து உண்மை அன்பையும், நட்பையும் வளர்த்து வாழ வேண்டும் என்பதை,

‘‘பெண் கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!

கொந்தளிக்கும் நெஞ்சிலே

கொண்டிருக்கும்அன்பிலே

அக்கறை காட்டினாத் தேவலே!

ஆண் குப்பையைக் கிளறிவிடும் கோழிறே!

கொண்டிருக்கும் அன்விலே

ரெண்டும் உண்டு என்று நீ

கண்டதும் இலலையோ வாழ்விலே!

கொக்கரக்கோ கொக்கரக்கோ

கொக்கரக்கோ..கோ…!

…………………. ………………….. ……………………….

நம்பி இருப்பதும் நட்பை வளர்ப்பதும்

அன்பு! யெ் அன்பு! – அந்த

அன்பின் கருத்தை விதவிதமாக

அர்த்தம் செய்வது வம்பு!’’ (ப.கோ.பா.ப., 27)

என்று சேவலையும் கோழியையும் குறியீடாக வைத்துக் கவிஞர் தெளிவுறுத்துகின்றார். பிறர் மீது நம்பிக்கை வைப்பதும் நம்பிக்கையை வளர்ப்பதும் உண்மையான அன்பே என்பதை இச்சேவல், கோழி வாயிலாக மக்கள் கவிஞர் எடுத்துரைப்பது சிறப்பான ஒன்றாகும்.

நெருப்பை மூடி மறைக்க முடியுமா? முடியாது. அவ்வாறு மறைத்தாலும் மறைத்த பொருளையும், மறைத்தவரையும் எரித்து அழித்துத் தன்னை வெளிப்படுத்திக் காட்டிவிடும். அதுபோன்றே உண்மைகளை என்றும், எப்போதும் மூடி மறைக்க முடியாது. என்றாவது ஒருநாள் சரியான சமயம் வாய்க்கும்போது உண்மை வெளிப்பட்டுவிடும். இதனை,

‘‘காலம் தெரிந்து கூவும் சேவலைக்

கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது!

கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும்

கணக்காய்க் கூவும் தவறாது’’ (ப.கோ.பா.ப.,313)

என்று மக்கள் கவிஞர் தெளிவுறுத்துகின்றார். பாரதியின் சேவல் விடுதலைச் சங்கு ஊதுவது போன்று மக்கள் கவியின் சேவல் உண்மையை உலகிற்கு உணர்த்துகிறது. இது காலத்திற்கேற்ற நியதியாக விளங்குகின்றது.

மகா கவி பாரதியார் குயில் பாட்டு பாடியதைப் போன்று மக்கள் கவிஞர் பாடவில்லை எனினும் குயிலையும் மயிலையும் இணைத்து வாழ்க்கைத் தத்துவத்தை சித்தர்களின் பாடல்களைப் போன்று விளக்கியுள்ளார். பாரதி குயில் பாட்டில் வேதாந்த விஷயங்களைப் பற்றி பேசியது போல் மக்கள் கவிஞர் உலக மக்களுக்கு உன்னத தத்துவத்தை,

‘‘ஆடுமயிலே நீ – ஆடு மயிலே!

ஆனந்த நடனம் ஆடு மயிலே!

பாடு கயிலே! இசை – பாடு குயிலே!

அன்பு வாழ – இன்பம் சூழ – அகமதில்

அமைதி பெருகி நிலைபெறவே!’’ (ப.கோ.பா.ப..29)

என்று விளக்குகின்றார். மயிலும் குயிலும் இன்பமாகவும், அமைதியாகவும் இருந்தால் மட்டுமே ஆடவும், பாடவும் செய்யும். அச்சத்துடனும், குழப்பத்துடனும் அமைதியின்றி இருந்தால் அவை இயல்பாக இருக்காது. அதுபோன்று மனிதனும் இயல்பாக இல்லையெனில் அவனால் எந்தச் செயலையும் செய்ய முடியாது. அன்பாகவும் இன்பமாகவும் இருக்க முடியாது என்று மக்கள் கவிஞர் குறிப்பிடுகின்றார். மனிதன் சுதந்திரமாகவும், அமைதியாகவும் இருந்து இன்பமாக வாழ வேண்டும் என்று மயிலையும், குயிலையும் குறியீடாக வைத்துக் கவிஞர் வாழ்வியல் உண்மையினைத் தெளிவுறுத்துகின்றார்.

அனைத்துப் பறவைகளையும் அழைத்து அவற்றிடம் பேசுவது போன்று மனிதர்களுக்கு அறிவுரை வழங்குகின்றார் மக்கள் கவிஞர். சிட்டுக்குருவியை வைத்து பாரதியார் விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டியதைப் போன்று, மக்கள் கவிஞர் சிட்டுக்குருவி, குயில்கள், கிளிகள் என அனைத்துப் பறவைகளையும் தன்னருகே அழைத்து அவைகளிடம் அறிவுத்துவது போன்று ஒற்றுமை உணர்வை மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். சுதந்திர இந்தியாவில் மக்கள் ஒற்றுமையுடன் நடந்து கொண்டால்தான் இந்தியா முன்னேறும் என்று உணர்ந்த மக்கள் கவிஞர் அவ்வொற்றுமை உணர்வை,

‘‘சின்னஞ்சிறு சிட்டுக்களே! சிங்காரப் பறவைகளே!

தெம்மாங்குக் குயில்களே! சிவந்த மூக்குக் கிளிகளே!

தேனெடுக்கும் வண்டுகளே ஓடி வாங்க! – நான்

சேதி ஒண்ணு சொல்லப் போறேன்

சீக்கிரம் வந்திடுங்க!

ஓ . . . .ஓ . . . ஓ . . .ஓ

ஓங்கி வளரும் மூங்கில் மரம் ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு

ஒழுங்காக் குருத்துவிட்டுக் கெளைகெளையா வெடிச்சிருக்கு

ஒட்டாமெ ஒதுங்கி நின்னா உயர முடியுமா? – எதிலும்

ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?’’(ப.கோ.பா.ப., 68)

என்று மக்களிடையே வளர்க்க முற்படுகின்றார். இங்கு பறவைகள் என்பது மனிதர்களைக் குறிக்கும் குறியீடு ஆகும். பறவைகளை அழைத்துக் கூறுவது போன்று மனிதர்களை அழைத்து அறிவுரை கூறுகின்றார்.

காக்கை வைத்து மனிதர்களுக்கு பல நீதிகளைக் கூறிய பாரதியைப் போன்று மக்கள் கவிஞர் பகட்டான வாழ்வை ஒதுக்கிவிட்டு எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற வாழ்வியல் நெறியைக் காக்கையின் வாழ்க்கையை மையமாக வைத்துக் குறிப்பிடுகின்றார். இன்றைய மக்கள் திருமணம் உள்ளிட்ட இல்ல விழாக்களை பணத்தை விரயம் செய்து நடத்துகின்றனர். இது தவறான ஒன்றாகும். எளிமையான முறையில் விழாக்களை நடத்துதல் வேண்டும் என்பதை,

‘‘பெண்கள் காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம்

கானக் கருங்குயிலு கச்சேரியாம்!

ஆண்கள் கண்ட கண்ட பக்கமெல்லாம் அழைப்புகளாம்

காலம் தெரிஞ்சுக்கிட குறிப்புகளாம்!

பெண்கள் வீட்டுக்கு வீடு விருந்துகளாம்

வில்லுவண்டிக் கூண்டுமேலே ஊர்வலமாம்!

எல்லோரும் காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம்

கானக்கருங்குயிலு கச்சேரியாம்!

பெண்கள் ஒற்றுமையில்லாத மனிதரைப்போல் – அது

ஒண்ணை ஒண்ணு கொத்திக்கிட்டு ஓடலையாம்!

ஆண்கள் உயர்வுதாழ்வு என்று பேதம் பேசிக்கிட்டு

ஒதுங்கி வாழ இடம் தேடலையாம்!

ஒதுங்கி வாழ இடம் தேடலையாம்!

பெண்கள் அதிகமாகச் சேத்துக்கிட்டு

அல்லும் பகல் பாத்துக்கிட்டு

இருப்பவங்க போலே நடக்கலையாம்

ஆண்கள் நல்ல இதயத்தை மாத்திக்கிட்டு

ஈயாதவன் போலக் கதவைத்தான்

சாத்திக்கிட்டுச் சாப்பிடலையாம்!

பெண்கள் வரிசை தவறாமே குந்திக்கிட்டுதாம்!

வந்ததுக்கெல்லாம் இடம் தந்திக்கிட்டுதாம்!

ஆண்கள் மனிதனைக் கேலி பண்ணிக்கிட்டுதாம்! – அவன்

வாழ்க்கையின் கோணலை எண்ணிக்கிட்டுதாம்!

எல்லோரும் காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம்!

கானக்கருங் குயிலு கச்சேரியாம்!’’ (ப.கோ.பா.ப.,28)

என்று காகங்களை வைத்து எடுத்தியம்புகின்றார். காகங்கள் எவ்வாறு ஒற்றுமையுடனும், அன்புடனும் இணைந்து உண்டு உறைந்து வாழ்கின்றதோ அதனைப் போன்று மனிதர்களும் வாழ வேண்டும் என்று மக்கள் கவிஞர் மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

இங்ஙனம் இருபெருங் கவிஞர்களும் பறவைகளின் செயல்பாடுகளை முன்னிறுத்தி மனிதகுலம் மேன்மையடைய பல்வேறு விதமான வாழ்வியல் உண்மைகளை எடுத்துரைக்கின்றனர். பாரத நாடும் பாரத சமுதாய மக்களும் உலகில் உயர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே இக்கவிஞர்கள் பறவைகளை முன்னிருத்தி பல்வேறுவிதமான நீதிகளை எடுத்துரைக்கின்றனர் என்பது நோக்கத்தக்கது.

———————————

Series Navigationநித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *