மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் இலக்கியகம் ஏற்பாட்டில் சிறுவர்/இளையோர் சிறுகதைகள் பரிசளிப்பு விழா

author
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

 

(செய்தி: கே.எஸ்.செண்பகவள்ளி

துணைச்செயலாளர்)

“இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோம்; இளைஞர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம்; தமிழை எப்படி நாம் உறுதியாகவும், நிலையாகவும் வைத்துப் பாதுகாக்கப் போகிறோம்? என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கக் கூடிய காலம்தான் இது. காரணம் தமிழ்ப்பள்ளியை மூட வேண்டும் என்றும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழை அழிப்பதற்கு இன்னொரு தமிழர் மூலமாகத்தான் முயற்சிகள் நடக்கின்றன.” என்று கூறினார் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன்.

 

கடந்த ஜூலை 29ஆம் தேதி மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், ‘இலக்கியகம்’ எனப்படும் மலேசியத் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி இலக்கிய ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில், “சிறுவர்/இளையோர் சிறுகதைகள் பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக தலைநகர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார் டத்தோ ஜி.சங்கரன். மேலும் அவர்தம் உரையில், “தமிழ் இந்த நாட்டிலே நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அரிய முயற்சி எடுத்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது”என்றும் கூறினார்.

 

    சிறுவர்/இளையோர் சிறுகதைகள் போட்டியை நடத்தியதற்கான நோக்கத்தை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் விளக்கினார். “நமது ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் வாசிப்பிற்கு மிகவும் குறைவான நூல்களே உள்ளன என்ற குறையைப் போக்கவும், மாணவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்தப் போட்டியினை ஏற்பாடு செய்தோம். மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு இந்தப் போட்டி ஒரு மைல்கல்லாக அமையும். மலேசியத் தேர்வு வாரியம் சிறுவர்/இளைஞர்களை கதாநாயகர்களாக வைத்து இலக்கியப் படைப்புகள் வரவேண்டும் என்று முடிவு செய்து அதனைப் பள்ளியில் அமலாக்கம் செய்த காலகட்டத்திலே, இப்படி ஒரு போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டு இன்று அதன் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. அடுத்த தலைமுறை இலக்கியவாதிகளை, படைப்பாளர்களை உருவாக்க வேண்டும். அதற்கான தளம் ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகள்தான் என்பதை கருத்திற் கொண்டு இத்தகைய போட்டியினை முன் வைத்துள்ளோம்” என்று தமது உரையில் குறிப்பிட்டார் திரு.பெ,இராஜேந்திரன்.

 

    இந்தப் பரிசளிப்பு விழாவில், தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த பிரபல நாவலாசிரியர் சுப்ரபாரதிமணியன் அவர்களும், இலக்கியகம் சார்பாக அதன் தலைவர் திரு.இராஜனும் சிறப்புரையாற்றினார்.  ‘சிறுவர்/இளையோர் சிறுகதைகள் ஒரு கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் போட்டியின் நடுவராக இருந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் துணைத்தலைவர் முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் அதனைக் குறித்து விளக்கமளித்தார். செயலாளர் திரு.ஆ.குணநாதன் வரவேற்புரையாற்றினார். துணைச்செயலாளர் கே.எஸ்.செண்பகவள்ளி நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார்.

 

சிறுவர்/இளையோர் சிறுகதைகள் போட்டியில் கலந்து பரிசுப்பெற்றவர்களின் விவரங்கள் பின்வருமாறு.

 

சிறுவர் பிரிவில் தேர்வு பெற்ற பத்து கதைகள் விவரம் பின்வருமாறு:-

 

  • பனிக்கூழ் (ச.விஸ்வநாதன்)

  • அம்மா மிகவும் அழகானவள் (வாணி ஜெயம்)

  • ஒரு மாணவன் வேலைக்குச் செல்கிறான் (கார்த்திகேஸ் பொன்னையா)

  • ஊனமே ஓடிடு (வே.மா.அர்ச்சுனன்)

  • வேண்டாம்மா ! (சபா.கணேசு)

  • விடியல் (டாக்டர் சரவணன்)

  • கிளாஸ் தம்பாஹான் (முனியம்மா முனியாண்டி)

  • பார்க்க நினைத்த மிருகம் (முருகையா முத்துவீரன்)

  • அண்ணே பசிக்குதண்ணே (பெ.மு.இளம்வழுதி)

  • சார்…ர்! (ஏ.ஆர்.சுப்பிரமணியம்).

இளையோர் பிரிவில் தேர்வு பெற்ற பத்து கதைகள் விவரம் பின்வருமாறு:-

 

  • நிலா (க.உதயகுமார்)

  • எனக்குள் ஒருவன் வல்லமையுடன் (விஜயலட்சுமி பக்கிரி)

  • தெளிவு (ஏ.தேவராஜன்)

  • நன்றிங்க டீச்சர் ( ஓ.சரஸ்வதி)

  • தடைக்கல்லும் படிக்கல்லாகும் (பாவை)

  • என் அன்பு டைரியே (இளம்பூரணன்)

  • கைப்பேசியும், கலைந்த கனவுகளும் (இளம்பூரணன்)

  • தீராத விளையாட்டுப் பிள்ளை (எஸ்.ஜீவனமணி)

  • உறைக்க நேரமாச்சி ( கார்த்திகேஸ் பொன்னையா)

  • வேண்டாத நாள் (கங்காதுரை கணேசன்)

தேர்வுப் பெற்ற இருபது கதைகளும் சங்கம் நியமித்துள்ள பதிப்புக் குழுவினரால் சீர் செய்யப்பட்டு நூல் வடிவம் காணும். அதற்கான பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இச்சிறுகதைத் தொகுப்பு வெளியீடு காணும்.

 

    தேர்வு பெற்ற சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகளையும், இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியையும் பதிவு செய்வதாகச் சங்கத் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் குறிப்பிட்டார்.

 


 

Series Navigationமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மு.வ. நூற்றாண்டு விழாதமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *