ராதிகா எதுவுமே சொல்லாமல் முகததைத் திருப்பிக்கொண்டு விருட்டென்று நகர்ந்ததும், விடுவிடுவென்று தன்னறையை நோக்கி நகர்ந்ததும் தனலட்சுமிக்கும் தீனதயாளனுக்கும் அளவற்ற திகைப்பை அளித்தன. இருவரும் ஒருவரை யொருவர் விழி மலர்த்திப் பார்த்துக்கொண்டார்கள். இவளுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு?’என்கிற கேள்விதான் இருவர் பார்வைகளிலும் குதித்துக்கொண்டிருந்தது.
அடுத்து ராதிகா செய்தது இருவருள்ளும் சற்றே திகிலைக் கிளர்த்தியது. அறைக் கதவைப் படீரென்று அறைந்து சாத்தியதும், சாத்தியதில் காட்டிய விரைவும், உடனே தாழ்ப்பாளையும் போட்டுக்கொண்டதும் இருவர் புருவங்களையும் உயர்த்தின.
”ஏங்க? இவளுக்கு என்ன ஆச்சு இன்னைகி? பரீட்சையில கம்மியா மார்க்கு வாங்கினதுனால வந்த முக வாட்டம்கிறதெல்லாம் சுத்தப் பொய்யோன்னு தோணுது எனக்கு.”
”எனக்கும் அப்படித்தான் தோணுது,” என்று தீனதயாளன் மனைவியின் கூற்றை அங்கீகரித்து முனகினாலும், அவளுக்கு ஏற்படாத ஒரு நெருடல் காரணம் இன்னதென்று புரியாமலே அவருள் விளைந்தது. ராதிகாவின் மனத்தில் வேறு ஏதோ கவலை அல்லது அதிருப்தி உட்கார்ந்து கொண்டிருந்ததாய் அவருக்குத் தோன்றியது.
’அம்மா! கல்யாணம்கிறது சுத்த ஏமாத்து வேலைம்மா. நான் நிறையப் பேர் விஷயத்துல பாத்தாச்சு’ என்று ஒரு வித வெறுப்புடன் அவள் ஒரு வெடிப்பாய்ச் சொன்ன சொற்கள் ஒருசேர அவர்கள் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தன.
”ஆமா? நேத்தெல்லாம் அவ எப்படித் தெரிஞ்சா? மொகம் இன்னைக்கி இருக்கிற மாதிரி வாட்டமா இருந்திச்சா?”
”நேத்தெல்லாம் சாதாரணமாத்தான் இருந்தா. ஏன்? நீங்களும்தானே அவளைப் பாத்தீங்க? என்னைக் கேட்டா?”
”அவ சாயங்காலமே காலேஜ்லேருந்து வந்துடறாளே? எங்க ஆஃபீஸ் மீட்டிங்கெல்லாம் முடிஞ்சு நேத்து ராத்திரி பத்து மணிக்குத்தானே வந்தேன்? அதான் கேக்கறேன்.”
”நேத்து எப்பவும் போலத்தாங்க இருந்தா. இன்னைக்கிக் காலேஜ் விட்டு வந்ததுலேர்ந்துதான் ஒரு மாதிரி இருக்கா. ஏதோ இருக்குது விஷயம். மறைக்கிறா- மார்க்குக் குறைச்சல், அது இதுன்னு!”
”நீ எதுக்கும் மறுபடியும் கொஞ்ச நேரம் கழிச்சு அவகிட்ட பேசிப்பாரு, தனலட்சுமி. நீயும் அவளும் மட்டும் இருக்கிறப்போ பேசு. நான் பக்கத்துல இல்லாட்டி ஒருக்கா உங்கிட்ட மனசு விட்டுப் பேசினாலும் பேசுவா.”
”நானே அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். நாளை காலையில பேசலாம். சனிக்கெழ்மைதானே? காலேஜ் அநேகமா இருக்காது.”
”காலையில அவ காப்பி கீப்பி சாப்பிட்டதும் நீ பண்ண வேண்டிய மொத வேலை அதான். கேட்டுட்டு, அவ ஏதாச்சும் சொன்னா, அதை எனக்குச் சொல்லு.”
”ரொம்ப நல்லாருக்கே நீங்க பேசுறது! உங்ககிட்ட சொல்லாம இருப்பேனா என்ன? கொழந்தைங்களோட பிரச்னை எதுவாயிருந்தாலும், தாயும் தகப்பனும் சேர்ந்து பேசித்தாங்க முடிவு எடுத்து அவங்களுக்கு நல்லது செய்யணும். ”
”அது சரி, அவளுக்கு என்ன பிரச்னைன்னு நீ நினைக்கிறே? உன்னால ஏதாச்சும் ஊகிக்க முடியுதா?”
” ….. ‘கல்யாணம்கிறது சுத்த ஏமாத்து வேலைம்மா. நான் நிறையப் பேர் விஷயத்துல பாத்தாச்சு’ அப்ப்டின்னு ஒரு மாதிரி வெறுப்பா அவ சொன்னதை நினைச்சா, அவளோட கல்யாணம் சம்பந்தப்பட்ட பிரச்னையா இருக்க்லாம்னுதான் தோணுது. ஆனா இன்ன விஷயமா யிருக்கும்னு ஒண்ணும் ஊகிக்கத் தோணலியேங்க? உங்களுக்கு ஏதாச்சும் தோணுதா?”
”…. எனக்கு எதுவும் தோணல்லே, தனலட்சுமி. ஒருக்கா, அவளோட சிநேகிதிங்கள்ள யாராசுசும் கல்யாணம் பண்ணிகிட்டு, வாழ்க்கை சரியா அமையாம, ஏமாந்து போயிருப்பாங்களோ?”
”அப்படியும் இருக்கலாம், இல்லாட்டி, எவனாச்சும் இவளையே கல்யாணம் கட்டுறதாச் சொல்லிட்டு ஏமாத்திட்டானோ என்னவோ!”
”அதுக்கு அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமென்ன – கல்யாணம்கிறது ஏமாத்து வேலை அப்படின்னு?”
”எனக்கும் எதுவும் புரியல்லீங்க. இன்னைக்கி நம்ம ரெண்டு பேத்துக்கும் சிவராத்திரிதான்.. தூக்கம் எங்கிட்டு வரப் போகுது?”
அப்போது அழைப்புமணி வீறிட, “யாருங்க இந்த வேளையில பெல் அடிக்கிறது? ஜன்னல் வழியா எட்டிப் பாத்து, யாரு என்னன்னு கேட்டுட்டு அப்பால கதவைத் தொறங்க. நீங்க பாட்டுக்கு அவசரப்பட்டுத் தொறந்துடாதீங்க. காலம் கெட்டுக் கெடக்கு!” என்றவாறு தனலட்சுமி வாசல் பக்கம் பார்த்தாள்.
சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்துகொண்ட தீனதயாளன், விரைவாகச் சென்று, வாயிற்கதவை ஒட்டினாற்போல் சன்னல் திரைச்சீலையைச் சற்றே ஒதுக்கிவிட்டுப் பார்த்தார்.
”அடடே! வாங்க, வாங்க!” என்றவாறு கணவர் உற்சாகத்துடன் கதவு திறக்க ந்கர்ந்ததும், தனலட்சுமி நாற்காலியை விட்டு எழுந்து நின்றாள்.
தீனதயாளன் திறந்த கதவைத் தள்ளிக்கொண்டு தனலட்சுமியின் ஒன்றுவிட்ட அக்காள் நாகம்மாளும், அவள் கணவர் பூரங்கமும் உள்ளே நுழைந்து வழிநடையில் காலணிகளை உதறினார்கள்.
”வா, நாகம்மா. வா, வா. எத்தனை நாளாச்சு பாத்து! … வாங்க, அத்தான்!”
”என்னம்மா. தனம்,. எப்படி இருக்கே? இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தோம். அப்படியே, இங்க ராத்தங்கிட்டு, காலையில போலாம்னு வந்துட்டோம், உன்னையும் மச்சானையும் பாத்து நாளாயிடிச்சுன்னு இது தொணப்பிக்கிட்டே இருந்திச்சு. அதான்….”
”என்ன, தனம்? எப்படி இருக்கே? ராதிகா எங்கே? அதுக்குள்ளாற ஒறங்கிடிச்சா?”
”உக்காருங்க ரெண்டு பேரும். ராதிகா இப்பத்தான் தன் ரூமுக்குள்ள போய்க் கதவைச் சாத்திக்கிடிச்சு. அதுக்குள்ள தூங்கியிருக்காது. படிச்சுக்கிட்டு இருப்பா. … ராதிகா ராதிகா! வா. வா. வந்து யாரு வந்திருக்குறாங்கன்னு பாரு….”
”கதவு சாத்தி யிருக்குறப்ப நீ கூப்பிடுறது அவ காதுல விழுமா என்ன?” என்ற தீனதயாளன் ராதிகாவின் அறையை நோக்கிச் சென்று கதவருக்நே ஒரு கணம் தயங்கிய பிறகு, “ராதிகா உன்னோட நாகுப் பெரியம்மாவும், பூரங்கம் பெரியப்பாவும் வந்திருக்காங்கம்மா! வர்றியா, கொஞ்சம்?” என்று கதவை ஒற்றை விரலால் இரண்டு முறை தட்டிவிட்டுக் கூப்பிட்டார்.
”இதோ வந்துட்டேம்ப்பா!” என்ற ராதிகாவின் இரைந்த குரல் கதவுக்கு வெளியே கேட்டத்ம், தீனதயாளன் தமது சாய்வு நாற்காலிக்குத் திரும்பினார்.
”எந்த எடத்துல கல்யாணம் நடந்திச்சு?” என்று தனலட்சுமி விசாரித்துக் கொண்டிருந்தாள்.
”அடுத்த தெரு மண்டபத்துல. சின்னராஜ்னு இவரோட ஆபீசர். அவரோட பொண்ணுக்குத்தான் கல்யாணம். தாம்பரம் எங்கே, அமிஞ்சிக்கரை எங்கே? வரவா முடியுது? அதுக்குன்னு திட்டம் போட்டுக்கிட்டுல்ல கெளம்ப வேண்டியிருக்குது? இன்னைக்கி வசதியா இங்க பக்கத்துலேயே கல்யாணமா? அதான் பாத்துட்டுப் போலாம்னு வந்தோம்…”
”ஏம்மா, தனம்! நீங்கதான் ஒரு நடை வரக்கூடாதா? உங்கள மாதிரி என்னாண்ட காரா இருக்குது?”
”கேளுங்க!”
”எங்க வர்றது, அத்தான்? போதுக்கும் பாட்டுக்கும் சரியா யிருக்குது!”
”ஏம்மா, தனம்? ஒரு சமையல்காரி வச்சுக்க வேண்டியதுதானே? உனக்கு ஓய்வு கிடைக்குமில்லே? … ஏன், மச்சான்? சமையலுக்கு ஒரு ஆளைப் போட்டு தனத்துக்குக் கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கிறது!”
”நானென்ன வச்சுக்க வாணாம்னா சொல்றேன்? அவ கேக்க மாட்டாப்பா.”
”நீ சொன்னா அவ வாணாம்னுவாளா?”
”அவரு சொல்லுவாருங்க, அடிக்கடி, சமையலுக்கு ஆள் வச்சுக்க, ஆள் வச்சுக்கன்னு, நான் தான் வாணாம்னுட்டேன். இருக்குறது மூணே பேரு. அதுக்கு எதுக்குங்க சமையல்காரியும் இன்னொண்ணும்?”
””பத்துப் பாத்திரம் வெளக்க ஒரு வேலைக்காரியாச்சும் இருக்காளா, இல்லாட்டி அதுவும் வாணாம்னுட்டியா?”
”இருக்கா, இருக்கா. அது கூட இல்லாட்டி எப்படி? சமைய்ல்காரி வச்சுக்க, வச்சுக்கன்னு அவரு சொல்லிக்கிட்டேதான் இருக்காரு.”
”அத்தான் கம்னு இருக்காரு…. என்ன இருந்தாலும் நீ புருஷனை விட்டுக் குடுக்க மாட்டியே!”
”இல்லாட்டி ஒன்னைப் போலவா – எங்க போனாலும், யாரண்ட பேசினாலுகம் என்னயப் பத்திப் புகார் சொல்லி அழுவுறதுக்கு?”
”ஆ…மா! நான் புகார் சொல்லி அழுவுறத நீங்க பாத்தீங்களாக்கும்!”
காலடியோசை கேட்டு எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள்.
”வாம்மா, வாம்மா, ராதிகா. வா, வா. இப்படி வந்து உக்காரு. உன்னயப் பாத்து எம்புட்டு நாளாச்சு? பெரியப்பாவை மறந்தே போயிட்டியில்ல?”
”அதெல்லாம் இல்லே, பெரியப்பா. உங்களை எப்படி மறக்குறது? டி.வி. நரசூஸ் காப்பி விளம்பரத்துல வர்ற் உசிலைமணியைப் பாக்கறப்பல்லாம் உங்க நெனப்பு வருதே, பெரியப்பா?”
”ஏய், வாயடிக் கழுதை! பெரியப்பான்ற மரியாதை கொஞ்சமாச்சும் இருக்குதா, பாரு.”
”சொல்லட்டும், சொல்லட்டும்! நீ சும்மாரு, தனம்…. ராதிகா! இது உனக்குக் கடைசி வருசம் இல்லே?”
”ஆமாம் பெரியப்பா.”
”படிச்சு முடிச்ச கையோட கல்யாணம்தானே?” என்ற பூரங்கம் சிரிப்புடன் தீனதயாளனைப் பார்த்தார்.
”ஆமாம. பண்ணிட வேண்டீதுதான். உங்களுக்குத் தெரிஞ்ச மாப்பிள்ளைப் பையன் யாராச்சும் இருந்தாச் சொல்லுங்க.”
”ஏங்க! உங்களோட ஒண்ணுவிட்ட அக்கா மகன் கானடாவில ஏதோ அணுசக்தி ஆராய்ச்சி மையத்துல சைண்டிஸ்டா யிருக்கானே, அவனைப் பாக்காலாமே நம்ம ராதிகாவுக்கு?”
”ஆமாம. அவானைப் பாக்கலாமே ராதிகாவுக்கு? எனக்குத் தோணவே இல்லே பாரேன். … பையன் எம்.எஸ்சி, எம்.டெக்., எம்.பி.ஏன்னு இன்னும் ஏதேதோ எக்கச்சக்கமான் டிகிரி வாங்கியிருக்குறான். அவன் அப்பாவும் அம்மாவும் இங்கதான் செங்கல்பட்டுல இருக்காங்க. மொதல்ல நாம போய்ப் பாக்கலாம், நாகம்மா. என்ன, ஏதுன்னு வெசாரிக்கலாம். அதுக்கு அப்பால், மேக்கொண்டு ஆக வேண்டியதைப் பாக்கலாம்.”
”ஆனா, ராதிகாவோட படிப்பு முடிய இன்னும் ஒரு வருசம் இருக்குதே?”
”இருக்கட்டுமேங்க. ஒரு நடை போய்ப் பாத்துக் கேட்டுய வெச்சுக்கிட்டா நல்லதுதானே? இந்த எடம் தோதுபடுமா படாதான்னு பாக்குறது. நாம என்ன இப்பமேவா பாகு-வெத்தலை மாத்திக்கப் போறோம்? எல்லாம் தோதுப்பட்டுப் பொருந்தி வந்திச்சுன்னா, எங்க அக்கா கிட்டவும் அத்தான் கிட்டவும் இன்னும் ஒரு வருசம் கழிச்சுத்தான்னு சொல்லிட்டாப் போச்சுது. நாம என்ன இப்பமேவா நிச்சியம் பண்ணப் போறோம்? என்னம்மா சொல்றே நீ, ராதிகா?”
”இங்க யாரும் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லே, பெரியப்பா.”
”என்னது! கல்யாணம்? பண்ணிக்க? போறதில்லியா! இதென்ன குண்டு போடுறே?”
”ஆமா, பெரியப்பா. நெசமாத்தான் சொல்றேன். கல்யாணம் பண்ணிக்கிட்டவனங்கள்ல ரொம்பப் பேரு சந்தோஷமா யில்லே. சந்தோஷ்கமா யிருக்கிறதா நெனைச்சு அவங்க தங்களைத் தாங்களே ஏமாத்திக்கிட்டு இருக்காங்க.”
ராதிகாவின் வாயிலிருந்து கிளம்பிய சொற்கள் வந்து. விழுந்து, தெறித்துச் சிதறிய வேகம் பெரியவர்கள் எல்லாரையுமே அயர்த்தித் திகைப்புறச் செய்தது. மூவருமே ஒருவரை மற்றவர் கேள்விக்குறியோடு பார்த்துக் கொண்டார்கள்.
”இன்னைக்கி சாயந்தரம் கூட கல்யாணப் பேச்சு வந்தப்பவும் இதையேதான் சொன்னா. யாரு ஏமாந்து போனதைப் பாத்துட்டு மனசில இப்படி ஒரு அபிப்பிராயத்துக்கு எடம் குடுத்தாளோ, தெரியல்லே. ராத்திரி வேளையில வாணாம், காலையில கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு கொஞ்ச நேரத்துக்கு முந்தித்தான் நானும் இவரும் பேசிக்கிட்டு இருந்தோம். அப்பதான் நீங்க பெனல் அடிச்சீங்க்.”
”வாம்மா இப்படி. வந்து என் பக்கத்துல உக்காரு. யாரு இப்படி ஒரு தப்பான அபிப்பிராயத்தை உன் மனசில விதைச்சது? கல்யாணம்னு பண்ணிக்கிட்டாலும் சரி, பண்ணிக்காட்டியும் சரி, அவங்கவங்க சந்தோஷம் அவங்கவங்க சாமரித்தியம், மனா முதிர்ச்சி ரெண்டையும் பொறுத்த விசயம்மா! இந்த உலகத்துல சந்தோச்ம்னு தனியா ஒண்ணும் கெரையாதும்மா, ராதிகா! வருத்தமும் கவலையும் இல்லாத நேரமெல்லாமே சந்தோசமான நேரம்தாம்மா. இதை நாம் புரிஞ்சுக்கிட்டோம்னா, இந்த உலகத்துல சந்தோசமான நேரங்களும் சந்தர்ப்பங்களும்தான் அதிகம்கிறதையும் புரிஞ்சுக்கிடுவோம்…. அது சர், எத்தை வெச்சு கல்யாணம் பன்னிக்கிட்டவங்கள்ல ரொம்பப் பேரு சந்தோசமா யில்லேன்னும் அப்படி இருக்கிறதா நெனைச்சுத் தங்களைத் தாங்களே ஏமாத்திக்கிறாங்கன்னும் சொன்னே?”
”எத்தனையோ பேரைப் பாத்தாச்சு, பெரியப்பா. சந்தோஷமா யில்லைன்றதைப் புரிஞ்சுக்கிட்டு மனக்கஷ்டப்பட்றவங்களை விட, ‘நாம சந்தொஷமா யில்லே, கல்யாணம்கிற உறவு நம்மை ஏமாத்திட்ட ஒரு வெவகார்ம்’ கிறதைப் புரிஞ்சுக்கக்கூடச் செய்யாத வெவஸ்தை கெட்ட பல பொண்ணுகள், அவங்க ஏமாந்ததே தெரியாம முட்டாளுங்களா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. அதுதான் ரொம்பக் கொடுமை!”
”ஏண்டி, தனம்! உம்மக என்ன புதிர் போடுற மாதிரி என்னென்னவோ சொல்றாளே!”
”என்ன, மச்சான்? ஒண்ணுமே சொல்லாம உக்காந்துக்கிட்டு இருக்கீங்க?”
”காலேஜ்ல கடைசி வருசம் படிச்சுக்க்கிட்டு இருக்கிற பொண்ணு. நான் என்னத்தை அதுக்கு எதிராப் பேசுறது?”
”அப்ப? அது கல்யாணம் காட்சியெல்லாம் வாணாம்னா விட்டுடுவியா?”
”அதெப்படி மச்சான் அப்படி விட்டுட முடியும்? சமயம் வர்றப்ப பேசுவேன். இப்ப அது ஏதோ அனுபவக் குறைச்சல்ல யோசிக்காம வாய்க்கு வந்ததைப் பேசுது. படிச்ச பொண்ணில்ல? கொஞ்சம் விட்டுத்தான் புடிக்கணும். இப்போதிலிருந்தே எதுக்கு அதோட வாக்குவாதம் பண்ணணும் நாம? படிப்பு முடியட்டும் மொதல்ல. யாரு விடப் போறாங்க இங்கே அவளை?”
”சரி, அது போகட்டும். அந்தக் கானடாப் பையனுக்கு என்ன வயசு? ஆளு எப்படி இருப்பான்? நம்ம ராதிகாவுக்கு ஏத்த ஜோடிதானா?”
”சரியான ஜோடின்னே சொல்லலாம். இருபத்தாறு வயசு ஆகுது.”
` “ஆமா, மச்சான். நம்ம எம்ஜிஆரோட கலரு; ஜெமினி கணேசன் மாதிரி க்ராப்பு, சத்யராஜ் மாதிரி ஒசரம், கமல் மாதிரி கண்ணு, சிவாஜி மாதிரி கொரலு…”
“சரி, சரி. நிறுத்துங்க. சரியான சினிமாப் பித்து!”
”இதையே நான் ஒரு பொன்ணு விசயத்துல, வைஜயந்திமாலா மாதிரி ஒசர்ம், பத்மினி மாதிரி அழகு, தமன்னா மாதிரி கலரு, ஸ்ரீ வித்யா மாதிரி கண்ணுன்னெல்லாம் வர்ணிச்சேன்னு வய்யி, இவ எனக்கு விவாகரத்து நோட்டீசே அனுப்பிறுவா…”
”நீங்க மட்டுமென்ன? நான் ஒரு ஆம்பளையை எம்ஜிஆர், ஜெமினி, கமலுன்னெல்லம் வர்ணிச்சா அந்த நிமிசமே என் கொரவளையை நெருக்கிப் பிடிச்சிருக்க மாட்டீங்க?”
ராதிகாவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு புறப்பட்டது. அவள் சிரித்த சிரிப்பில் தனலட்சுமியும் தீனதயாளனும் தங்களை அதுகாறும் அழுத்திக்கொண்டிருந்த மன இறுக்கத்தினின்று விடுபட்டார்கள்.
”அட! இப்பதான் புரியுது பெரியம்மா என்னென்ன சாயல்கள்ள இருக்காங்கன்னு.!”
”அட! என்னென்ன சாயல்னு இன்னும் தெளிவாத்தான் சொல்றது. ஆனா நிச்சயமா சினிமா ஸ்டர்ருங்க சாயல்ல இருக்க முடியாது. ராமாயணத்துல வர்ற் தாடகை, சூர்ப்பனகை, கூனிப் பொம்பளை … அப்புறம்….”
”இருங்க, இருங்க, பெரியப்பா! பெரியம்மா என்னமோ சொல்றதுக்கு வாயை வாயைத் தொறக்குறாங்க. … நீங்க சொல்லுங்க, பெரியம்மா.”
”நான் வேற என்னத்தைச் சொல்லப் போறேன்? உங்க பெரியப்பா யாராரோட சாயல்ல இருக்காருன்னுதான். அதே ராமாயணத்துல் வர்ற வாலி, சுக்ரீவன், அனுமாரு இவங்க மாதிரின்னுச் வச்சுக்கயேன்!”
ராதிகா வாய்விட்டு மறுபடியும் சிரித்தாள்.
”எப்படியோ! எங்க ராதிகாவைச் சிரிக்க வச்சுட்டீங்க. சாயங்காலத்துலேர்ந்து உம்னு மூஞ்சியத் தூக்கி வெச்சுக்கிட்டிருந்தா. என்ன காரணம்னு சொல்லவும் மாட்டேன்றா.”
”அதான் சொன்னேனேம்மா – காலேஜ்ல இந்த வாட்டி எனக்கு ஃப்ர்ஸ்ட் ரேங்க் கிடைக்கல்லேன்னு?”
”அதுக்காகவா ரூம்ல போய்க் கதவைச் சாத்திக்கிட்டு உக்காந்தே? நல்ல பொண்ணும்மா நீ! போனாப் போகுதுன்னு விடுவியா? அடுத்த வாட்டி வாங்கிடலாம்.”
”ஏண்டி ராதிகா! நீதானாகட்டும், கொழந்தை குட்டி இல்லாத உங்க பெரியம்மாவையும் பெரியப்பாவையும் ஒரு நடை வந்து பாக்கக் கூடாது?
”படிக்கிறதுக்கே நேரம் பத்தலை, பெரியம்மா. மன்னிச்சுக்குங்க. இனிமே வர்றதுக்கு ட்ரை பண்றேன்.”
”என்ன, மச்சான்? அப்ப என் ஒண்ணுவிட்ட அக்கா மகன் பத்தின வெவரங்களை யெல்லாம் சேகரிக்கட்டுமா, வாணாமா? என்ன சொல்றீங்க?”
”அது பாட்டுக்கு நடக்கட்டும், மச்சான். என்ன, ஏதுன்னு எல்லா வெவரமும் கேட்டு வையுங்க. ரெண்டு பக்கமும் பிடிச்சுப் போயிறுச்சுன்னா, இவ் படிப்பு முடியிற வரையில அவங்க காத்திருக்கவும் தயாரா யிருந்தாங்கன்னா, இந்த எடத்தையே முடிச்சிறலாம்.”
”அய்யோ! அப்ப, ராதிகா கானடவுக்கு இல்லே போக வேண்டியிருக்கும்?”
”ஃபாரீன் மாப்பிள்ளைன்னா பின்னே சும்மாத்தானா?”
”பெரியப்பா! நான் கல்யாணம் பண்ணிக்கிறதாவே இல்லே. அப்படியே மனசு மாறிக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும், அந்தாளு நிச்சியமா அயல் நாட்டு மாப்பிள்ளையா இருக்கவே முடியாது. உள்ளூர்ல இருந்துக்கிட்டே பொண்டாட்டியை ஏமாத்துறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாயிக்கிட்டே இருக்கு. ஃபாரீன் மாப்பிள்ளை யெல்லாம் எனக்கு வேணவே வேணாம்ப்பா, எனக்கு. அங்கேயே எவளையானும் வச்சிருப்பான் அவன்!” என்று சீற்றத்தோடு கொட்டித் தீர்த்துவிட்டு ராதிகா எழுந்து நின்று அங்கிருந்து கிளம்பத் தயாரானாள்.
(தொடரும்)
jothigirija@live.com
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 21 இரா.முருகன் – ‘மூன்றுவிரல்’
- திருக்குறளில் மனித உரிமைகள்!
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12
- கரிகாலன் விருது தேவையில்லை
- காலம்
- நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்
- எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
- மூன்று அரிய பொக்கிஷங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -1
- சுத்தம் தந்த சொத்து..!
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1
- மெல்ல நடக்கும் இந்தியா
- மஞ்சள் விழிகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு (6)
- வாலிகையும் நுரையும் – (15)
- யாதுமாகி நின்றாய்….. !
- மூக்கு
- தாகூரின் கீதப் பாமாலை – 56 புல்லாங்குழல் பொழியும் இனிமை !
- விட்டில் பூச்சிகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -15 என்னைப் பற்றிய பாடல் – 8 (Song of Myself)
- “தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்” )
- புதுத் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பூதச் செர்ன் விரைவாக்கியில் உறுதியானது.
- அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48
- நடு வலதுசாரி திட்டத்தை முன்வைக்கிறார் நரேந்திர மோடி