தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில

1
0 minutes, 3 seconds Read
This entry is part 20 of 40 in the series 26 மே 2013

தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை.

உலகம் முழுவதும் தமிழ் பரவியிருந்தாலும், தமிழர் பரவியிருந்தாலும் தமிழுக்கு எங்கும் இரண்டாம் இடம் என்பதே தற்கால நிலைப்பாடாகும். பொருள் சார்ந்து இயங்கும் இந்த உலகத்தில் படிப்பை முடித்தவுடன்நாளும் பொருளை அள்ளித்தரும் கல்விகளுககு மட்டுமே மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தச் சூழலில் தமிழைப் படித்தவர்களின் தமிழ்வழியில் படித்தவர்களின் எதிர்காலம் என்பது வரவேற்புமிக்கதாக இல்லை என்பதே உண்மை. மக்களால் விரும்பப்படுகின்ற அளவிற்குத் தமிழ்க் கல்வி அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக இல்லை. இதனை மாற்ற சமுக மாற்றங்கள் கல்வித்திட்டமாற்றங்கள் சிலவற்றைச் செய்யவேண்டியுள்ளது. இக்கட்டுரை தமிழகத்தில் உள்ள தமிழ்க்கல்வி முறை சார்ந்து எழுதப்பெற்று இக்கல்வி முறையில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்துச் சில பரிந்துரைகளைமுன்வைக்கின்றது.

தமிழகச் சூழலில் தமிழ்வழியில் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர் எதுவரை அவரின் தமிழ்வழிக் கல்வியைத் தொடர முடியும் என்பது அடிப்படைக் கேள்வி. பி.ஏ(முதண்மைப் பாடம் தமிழ் தவிர) பி.எஸ். ஸி, பி.காம் போன்ற பட்டப் படிப்புகளைப் படிக்கும் மாணவர் இளநிலைப் பட்டங்களைத் தமிழ்வழியிலும் எழுதலாம். ஆங்கில வழியிலும் எழுதலாம் என்ற நிலை உள்ளது. இதில் பள்ளிக் கல்வியைத் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் தமிழ்வழிக்கல்வியை விரும்பிக் கற்று தமிழ்வழியிலேயே தங்களின் பட்டப்படிப்பினை முடிக்கின்றனர். ஆனால் இவர்கள் எம்.ஏ., எம்எஸ். ஸி ஆகிய மேற்படிப்புகளுக்குச்செல்லுகையில் கட்டாயம் ஆங்கில வழியில் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலைக்கு வரும் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பினைக் கற்ற மாணவர்கள் அதிக அளவில் பயிற்று மொழிச் சிக்கலுக்குஆளாகின்றனர்.

தொடர்ந்து பணிக்குச் செல்லும்போது. தமிழ் வழியில் கற்ற ஒருவர் தான் பணிக்குப் போகும் கல்வி நிறுவனத்தில் ஆங்கில வழிக்கல்வி இருக்கும்போது அவரின் தமிழால் பெற்ற பாட அறிவு போதுமானதாகஇருப்பதில்லை. மேலும் வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போதும் வேறு நாடுகளுக்குச் செல்லும்போதும் தமிழ் பயிற்று மொழிக்கல்வி அவர்களுக்குப் பயன்படாமல் போய்விடுகின்றது. அங்கே கைகொடுப்பதுதக்கித் தடுமாறிக் கற்ற முதுகலைப் பட்டப் படிப்பின் ஆங்கில வழிக்கல்வியே ஆகும். இக்குறையைப் போக்க முதுநிலைப் படிப்புகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்று கொண்டுவரலாம்.இதனைத் தொடர்ந்து முனைவர் பட்டப்படிப்பு வரை தமிழ் வழிக் கல்வியைத் தொடரவேண்டும். அதே நேரத்தில் ஆங்கில அறிவையும் தமிழ்வழிக்கல்வி கற்போர் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் வழியில் படிக்கும் ஒரு மாணவர் பொறியியல் படிப்பில் சேர்ந்தால் சேர்ந்த அன்று முதல் அவர் ஆங்கில வழிக்கல்விக்குத் தன்னை வடிவமைத்துக் கொள்ள வேண்டியவராகின்றார். இப்பொறியியல்படிப்பில் ஆங்கிலத் தாள் இரு பருவங்களுக்கு மொழி சார்ந்து வைக்கப் பெற்றுள்ளது.. இந்தத் தாளுடன் தமிழையும் ஒரு தாளாக இணைத்தால் பொறியியல் மாணவரகளிடத்தில் தமிழ் ஆர்வத்தை வளர்க்கஇயலும். ஆங்கில வழி கற்கும் ஒரு சில மாணவர்களையாவது தமிழார்;வம் கொண்டவர்களாக மாற்ற இயலும். தற்காலத்தில் அதிக அளவில் பொறியியல் துறைக்கு நுழையும் மாணவர்களைத் தமிழின்பால் ஈரக்கமுடியும்.

இதேநிலையில் மருத்துவப்படிப்பும் மருத்துவம் சார்ந்த மற்ற படிப்புகளின் நிலையும் உள்ளது. மதிப்பு மிக்கக் கல்வி என்றழைக்கப்படும் இக்கல்விகளில் மொழிப்பாடம் என்ற நிலையில் தமிழுக்கு ஒரு தாளைவழங்கிட ஆவன செய்வது தற்காலத்தில மிக முக்கியமாக அரசிடம் வற்புறுத்தப்படவேண்டிய ஒன்றாகும்.

பள்ளிக் கல்வியில் இந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி படிக்கும் வகுப்புகளைத் தொடங்கலாம் என்ற முடிவு பள்ளிக்கல்வியில் தமிழ்வழிக் கல்விக்கு தரப்படும் மற்றொரு சவால். தமிழைமட்டுமே தமிழில் படிக்கும் நிலையில் தமிழ் ஒரு மொழி சார்ந்த படமாக மட்டும் அமைந்துவிடும் போக்கு எதிர்கால தமிழ் சந்ததிக்கு நேர்;ந்து விடும் வாய்ப்பிற்கு இம்மாற்றம் வழிவகுக்கும்.

சில பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நான்கு பருவங்களுக்குப் பகுதி 1 தமிழ் படிக்கும் வாய்ப்பினைத் தந்துள்ளன. சில பல்கலைக்கழகங்களில் பகுதி 1 தமிழ் இருபருவங்களுக்கு மட்டுமே உள்ளது. சில பல்கலைக்கழகங்களில் பகுதி 1 தமிழ் என்ற பகுதியே இருப்பதில்லை. குறிப்பாக வணிகவியல் பட்டப்படிப்பு சார்ந்த மாணவர்கள் பகுதி 1 தமிழுக்குப் பதிலாக வணிகத் தமிழ்என்ற ஒன்றைக் கற்கின்றனர். இந்த முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழின்பால் பற்றுக் கொண்ட எந்த அரசாவது அனைத்துத் தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் நான்கு பருவங்களிலும் பகுதி 1 தமிழ்இருந்தாக வேண்டும் என்ற நடைமுறையை உருவாக்கவேண்டும். இன்னும் பட்ட படிப்புக்கு உரிய ஆறு பருவங்களுக்கும் பகுதி 1 தமிழ் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். மேலும் இயன்றால் அனைத்துமுதுகலைப் படிப்பிற்கும் தமிழ் தாள் இருக்க ஆவன செய்ய வேண்டும்.

தமிழ் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு சதவீதம் என்பதும் தமிழ் படிக்கும் மாணவர்களைத் துவண்டு போகச் செய்வதாகவே உள்ளது. பள்ளி இறுதி படித்த ஒரு மாணவர் உடன் ஆசிரியப் பயிற்சிப்பாடப்பிரிவி;;ல் சேருகிறார். இவர் படித்துமுடித்தவுடன் ஆசிரியராக அரசாங்கப் பணி கிடைத்துவிட்டது என்ற சூழலில் இவர் மேலும் படிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் தேர்ந்;தெடுக்கும்கல்வி வாய்ப்பு என்பது அஞ்சல்வழிக்கல்வி அல்லது தொலைதூரக்கல்வி என்பதாக இருக்கும். இதி;ல் இவர் விருப்பப்பட்டுப் படித்துத் தமிழில் பி.ஏ, பி.எட், எம்.ஏ என்ற படிநிலைகளைக்கடந்தால் இவர்தமிழாசிரியராக பதவி உயர்வு பெறலாம்.

தமிழகத்தில் இன்றைய நிலையில் கொண்டுவரப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வுகள் போன்றன எவ்வடிப்படையில் காலியிடங்களைக் கணக்கிடுகின்றன என்றால் பதவிஉயர்வுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுவிழுக்காடும் நேரடி நியமனத்திற்குக் குறிப்பிட்ட அளவு விழுக்காடும் தரப்பெறுகின்றன. இதி;ல் தொடக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் போன்றவற்றின் பரிந்துரையால் பதவி உயர்வுக்கானவிழுக்காடு கூட்டப் பெற்றுள்ளது. அதாவது காலியாகும் இடங்களில் தோராயமாக 60 விழுக்காடு பதவி உயர்வாகவும் 40 விழுக்காடு நேரடி நியமனம் என்ற நிலையிலும் நிரப்பப்பட வேண்டும் என்ற நிலைஇருப்பதாகக் கொள்வோம். அப்படியானால் நேரடியாகத் தமிழைக் கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் வாங்குகின்ற மாணவர்களின் பணிவாய்ப்பு குறைவதை இது தெற்றென விளக்குகிறது. ஏற்கனவேவேலையில் இருக்கும் ஆசிரியப் பயிற்சி முடித்தவர் தான் சேர்ந்த ஆரம்பப் பணியையும் காலியாக்குகிறார். அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து பள்ளி கல்லூரி என்று தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கினைத்தாண்டும் தமிழ் மாணவரின் பங்கிலும் கை வைக்கின்றார். இந்தச் சூழல் மாறவேண்டுமானல் பதவி உயர்வு வழி அளிக்கப்படும் தமிழாசிரியர் தகுதியின் விழுக்காட்டு அளவை மிகக் குறைவாக ஆக்க வேண்டும்.இதன் காரணமாக இருபது ஆண்டுகளாகப் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் தமிழ் மாணவர்கள் வேலை பெற இயலும்.

தற்போது வந்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகள் வரவேற்கத்தக்கன என்றாலும் அவை பெறும் காலிப்பணியிடங்கள் பற்றிச் சேகரிக்கும் தகவல்களில் தமிழை நம்பிப் படித்த மாணவர்களின் முன்னேற்றும்போக்கு தேவை என்பதை அரசு கவனிக்க வேண்டும்.

தமிழ்க்கல்வி – இன்றைக்குத் தமிழகத்தி;ல் தமிழ்ப்பட்டப் படிப்பு என்பது இரு நிலையில் செயல்பட்டு வருகின்றது. பி.லிட், பி. ஏ என்ற இரு பட்டப் படிப்புகள் வழங்கப் பெற்று வருகின்றன. இவை இரண்டுக்கும்அடிப்படையில் எவ்வித வேறுபாடும் கிடையாது. ஒரே வேறுபாடு பி.லிட் படிப்பவர்கள் தொல்காப்பியத்தைப் படிப்பார்கள். பி.ஏ படிப்பவர்கள் தொல்காப்பியத்தினை விடுத்து அதற்கு ஈடான நிலையில் வேறுஇலக்கணங்களைப் படிப்பர். இந்த இரண்டு பட்டப் படிப்புகளையும் ஒன்றாக ஆக்கிவிடவேண்டும். அவ்வாறு ஒன்றாக ஆக்கும்போது பி.லிட் என்ற தனித்த அடையாளம் கெடாமல் அந்தப் பட்டப் படிப்பைநிலைநிறுத்த வேண்டும். பி.லிட் படிக்கும் மாணவர்கள் புலவர் பயிற்சிப் பட்டயம் (டி.பி.டி) என்ற ஒன்றைப் பெற இயலும். பி.ஏ படிக்கும் மாணவர்களில் பத்துவிழுக்காட்டினர் மட்டும் இந்தக் கல்வியைப் பெறஇயலும். இந்தப் படிப்பினைப் படித்தால் தமிழாசிரியராக ஒருவர் பதவி பெற இயலும். ஆறுமாத கால இந்தப் பயிற்சி வகுப்பு படித்தவர்கள் பி.எட் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த கட்ட பணிஉயர்விற்கு அவர் பி. எட் படிக்கவேண்டும் என்பது தேவை. எனவே தமிழ்ப்பட்டம் ஒன்றாக ஆக்கப்படும் சூழலில் அனைத்துத் தமிழ்மாணவர்களும் டிபிடி படிப்பினை முடிக்கும் தரம் பெறுவர். இது சிறு மாற்றம்என்றாலும் இதன் விளைவு பெரிது என்பதை உணரவேண்டும்.

அடுத்துத் தமிழ்க்கல்வி பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் முதன்மைப்பாடம், துணைமைப்பாடம் என்ற நிலையில் தமிழ்ப்பட்டப்படிப்புகள் பிரிக்கப்படுகின்றன. முதன்மைப்பாடத்திற்கு உரிய தாள்கள் ஓரளவிற்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே தரநிலை நிலவுகின்றது. துணைப் பாடத்தில் இந்நிலை இல்லை. அவரவர்களுக்குத் தோன்றிய நிலையில் துணைப்பாடங்கள்வைக்கப்படுகின்றன. அதனைச் சரி செய்ய வேண்டும். அக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் தமிழோடு இசை. கலை சிற்பம் சித்த மருத்துவம் வானவியல் போன்ற பல துறைகள் அறிந்தவர்களாக இருந்தனர். காரணம்அவர்கள் கற்ற தமிழ்க்கல்வி வெறும் பாடம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல் வாழ்வு பண்பாடு சார்ந்ததாக உள்ளது. தற்காலத்தில் வெறும் புத்தகக்கல்வியாக மட்டும் தமிழ் ஆக்கப் பெற்றுள்ளது. இசைத்தமிழ், சித்தமருத்துவம் போன்றனவற்றை மாணவர்களுக்கு பாடமாக்கலாம் என்றால் அதனைப் படித்த ஆசிரியர்கள் எவரும் இல்லை. இந்தச் சூழலில் தமிழ்க்கல்வியை வெறும் புத்தகத்தை மனப்பாடம் செய்யும் கல்வியாகஇத்தலைமுறை மாற்றியிருக்கிறது. இன்னும் தேய்வாக அம்மனப்பாட அறிவு கூட தற்போது அளவில் குறைந்து வருகிறது என்ற நிலையில் தமிழ்ப்படித்தவர்களுக்கு தமிழ் .இலக்கண இலக்கியம் தவிர வேறுஒன்றும் தெரியாது என்பதே கிடைக்கப் பெறும் முடிவாக உள்ளது.

எனவே தமிழ் பட்டப்படிப்பினைத் தரப்படுத்த வேண்டும். தமிழ் மாணவர்களுக்கு இசையறிவினை ஊட்ட மாவட்ட இசைப்பள்ளிகளுடன் இணைந்து சில செயல்பாடுகளில் இறங்கலாம். யோகா நிறுவனங்களுடன் இணைந்து யோகக்கலை கற்றுத்தரலாம். சித்த மருத்துவர்களுடன் இணைந்து சித்த மருத்துவம் கற்றுத்தரலாம். இவையெல்லாம் தற்போது கூடுதல் பணிப்பளுக்கள். இவற்றை உட்புகுத்தி ஒருதமிழ்க்கல்வியை உருவாக்கினால் தமிழ் மறுமலர்ச்சி பெறும்.

தமிழ்ப் பட்டப் படிப்பினை நேரடியாகப் படிக்கின்ற மாணவர்கள் எழுதும் தாள்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அதே பட்டப்படிப்பினை அஞ்சல் வழி படிக்கும் மாணவர்கள் எழுதும் தாள்களின்எண்ணிக்கை குறைவு இதற்குக் காரணம் பருவத்தேர்வு முறையில் நேரடிப் படிப்பு முறை அமைகிறது. பருவமல்லாத்தேர்வுமுறையில் அஞ்சல்வழி அமைகிறது. இந்த வேறுபாட்டையும் களைந்து ஒரே தரத்தில்அஞ்சல்வழிக் கல்விப் பாடத்திட்டமும் அமைக்கப்படவேண்டும்.

தமிழ் உயராய்வு நிறுவனங்களில் தமிழ், அதனோடு ஒரு திராவிட மொழி அறிந்திருக்கவேண்டும் என்ற நிலையில் தற்போது பணிவாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்ப+ர் தேசியப் பல்கலைக்கழகம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதிச் சமர்ப்பித்திருக்கவும் ஆங்கிலத்தில் தமிழ் நடத்தவும் வாய்ப்புகள் கேட்கப்படுகின்றன. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்உள்ள பல துறைகளில் தமிழ் தவிர்ந்து பிறமொழி பிற துறை அறிவு பணிவாய்ப்பிற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தமிழ்க் கற்போர் தமிழை மட்டும் கற்காமல் அதனோடு தொடர்புடைய மற்றொருபட்டவாய்ப்பினையும் மற்றுமொரு மொழி அறிவினையும் பெற வேண்டியிருக்கிறது. இந்த வழிகாட்டுதலைத் தமிழ் படிக்கும் மாணவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்பரிந்துரைகளைக் கவனத்தில் வைத்துச் செயல்பட்டால் மட்டுமே தமிழ் தற்போது இருக்கும் இரண்டாம் நிலை இடத்தையாவது தக்கவைத்துக் கொள்ள இயலும்.


M.Palaniappan
muppalam2006@gmail.com
manidal.blogspot.com

Series Navigationபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -3

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய செல்லப்பா says:

    மொழிக் கல்வி பற்றிய வழக்கமான, முடிவு பெறாத சிந்தனை தான் வெளிப்படுகிறது இக் கட்டுரையில் என்றாலும், தமிழ் கற்கும் மாணவர்களின் எதிர்காலம் பற்றி ஆசிரியர் கொண்டுள்ள கவலை நியாயமானதே. இதைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, பட்டப் படிப்பில் விரும்பிய பாடப் பகுதிகளை எடுத்துக்கொண்டு மதிப்பெண் பெறும் ‘கிரெடிட் சிஸ்டம்’ கொண்டு வருவது தான். அது வந்தால், தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள், தமிழில் மூன்று அல்லது நான்கும், வேலை வாய்ப்பை முன்னிட்டு பொருளாதாரத்தில் இரண்டும், கணக்கில் இரண்டும், வேதியியலில் ஒன்றும் எனப் பல்வேறு கிரெடிட் பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெறலாம். (உதாரணம் தான் இது). ஆனால் இதைக் கல்லூரி ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களே! தமிழில் பி.ஏ. என்றால், மூன்று வருடமும் தமிழையே படிப்பது என்று விதிப்பது தான் தமிழ் படிப்பவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது. To start with, (1) முதல் ஒரு வருடம் மட்டுமே தமிழ், மற்ற வருடங்கள் வேலை வாய்ப்புக்கான பாடப்பகுதிகள் என்று ஆரம்பிக்கலாம். தேர்ச்சி பெறுபவருக்கு B.Sc (Tamil & Maths) அல்லது B.Sc (Tamil & Chemistry) என்று பட்டம் வழங்கலாம். (2) மைசூரில் Regional Coillege of Education என்று இருக்கிறது. இங்கு B.Sc + M.Sc + B.Ed மூன்றையும் சேர்த்து 7 வருடப் படிப்பை 4 வருடத்திலேயே முடித்து “M.Sc.Ed” என்று பட்டம் தருகிறார்கள். மத்திய அரசு நிறுவனம் இது. இம்மாதிரியான படிப்புகள் தான் தமிழையும் காக்கும். அறிஞர்கள் இதைச் சிந்திக்க வேண்டும். (3) வழக்கமான கிணற்றுக்குள்ளேயே சுழல்வதால் பிரச்சினைகள் தீராது. – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *