குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14

This entry is part 7 of 23 in the series 16 ஜூன் 2013

‘காலேஜ்ல இன்னிக்கு என்ன விசேஷம்’ எனும் கேள்வியை அதற்கு முன்னால் தீனதயாளன் ராதிகாவிடம் கேட்டதே இல்லை.  கேட்டிருந்திருப்பின், இப்போது கேட்ட கேள்வியைச் சாதாரணமாக அவளால் எடுத்துக் கொண்டிருந்திருக்க முடியும்.  அப்படி இல்லாததால், தான் அன்று கல்லூரிக்குப் போகவில்லை என்பது அவருக்கு எப்படியோ தெரிந்து போய்விட்டது என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

‘அப்பாவுக்கு அது எப்படித் தெரிந்திருக்க முடியும்?  அவர்தான் காலையில் தம் அலுவலகத்திலிருந்து அந்தச் சிறுக்கியின் வீட்டுக்குப் போய்விட்டாரே?  … ஒரு வேளை தம் காரைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்துகொண்டிருந்தது நான் தான் என்பதைக் கண்டுபிடித்திருப்பாரோ? அதெப்படி? அவர் என்னை சல்வார்-கமீஸில் பார்த்ததே இல்லையே!  அந்த உடை மாற்றம் மட்டுமின்றி, தலை வாரலில் மாற்றம், கன்னத்தில் ஸ்டிக்கர் பொட்டு, முகத்தையும் தலையையும் முக்காடிட்டு மூடிய துப்பட்டா, கன்னங்களில் பாதிவரை இறங்கிய ‘கோ-கோ’ மூக்குக் கண்ணாடி என்று எக்கச்சக்கமான மாற்றங்களுக்கும் வேறு உட்படுத்திக்கொண்டிருந்த என்னை அருகில் பார்த்தாலே கண்டுபிடிப்பது கஷ்டம். அப்படி இருக்கும் போது சற்று இடைவெளி விட்டே கவனத்துடன் காருக்குப் பின்னால் சென்ற என்னை அவரால் எவ்வாறு கண்டுபிடித்திருக்க முடியும்? எனவே நான் இன்று கல்லூரிக்குப் போகாதது வேறு எப்படியோதான் அப்பாவுக்குத் தெரிந்திருக்கிறது.  … ஆனால், எப்படி?  எப்படி? … அதைத்தான் ஊகிக்க முடியவில்லை.  ஒருவேளை லெக்சரர் யாராவது தற்செயலாக அப்பாவை சந்தித்து, ‘என்ன, சார்? ராதிகா ஏன் இன்று காலேஜுக்கு வரலை?’ என்று கேட்டிருக்கக் கூடுமோ?… இருக்கும்… அப்படித்தான் இருக்கும்…’ – இத்தனை எண்ணங்களும் கணத்துள் அவள் மனத்தில் ஓடின.

“என்னப்பா, புதுசாக் கேக்கறீங்க், காலேஜ்ல என்ன விசேஷம்னு?”

“ஏம்மா? கேக்கக் கூடாதா?”

“கேக்கலாம்.  ஆனா இதுக்கு முன்னால என்னிக்குமே இப்படிக் கேக்காத நீங்க இன்னிக்கு இப்படிக் கேக்குறதுல என்ன விசேஷம்னு எனக்குத்தான் கேக்கணும் போல இருக்கு!”

மகளின் சாமர்த்தியமான பதில் கேள்வி தீனதயாளனை அயர்த்தியது.

சிந்தியாவின் வீட்டில் பிற்பகல் மூன்று மணி வரை இருந்த பின் அவர் புறப்பட்டார்.  வழியில் தமக்கு வேண்டிய சில பொருள்களை வாங்கிய பிறகு, அப்படியே கல்லூரிக்குப் போய் மகளைக் காரில் அழைத்துக்கொண்டு வர அவர் எண்ணினார்.  அவளுக்கு அவர் பைக் வாங்கிக்கொடுத்திருந்த போதிலும், அதில் அவள் தினமும் கல்லூரிக்குச் செல்லக்கூடாது, பேருந்தில்தான் பயணிக்க வேண்டும் என்பது அவரது கண்டிப்பான உத்தரவு.  போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில், நெருக்கடி இல்லாத சாலைகளில் மட்டும், அதிலும், அவசியமான போது மட்டுமே அதை அவள் ஓட்டிச் செல்லலாம் என்று அவர் படித்துப் படித்து அவளுக்குச் சொல்லியிருந்தார்.  அவளும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தாள்.  எனவே அவள் அன்று பைக்கில் கிளம்பிப் போனது அவளுக்கும் முன்னதாய்ப் புறப்பட்டுப் போய்விட்டிருந்த அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

கல்லூரி வாசலில், காருடன் நின்றிருந்த அவர் கண்களுக்கு ராதிகா தென்படவில்லை.  அவளுடைய தோழிகளில் பத்மஜாவைத் தவிர வேறு யாரையும் அவர்க்குத் தெரியாது.  எனவே, பத்மஜா அவரது பார்வையில் பட்டதும், அவசார நடையில் அவளை அணுகி, ‘ராதிகா கிளம்பிப் போயிட்டாளா?’ என்று கேட்டார்.

பத்மஜா உடனே பதில் சொல்லவிலை. அவரது பார்வையை அவள் தவிர்த்தாய் அவருக்குத் தோன்றியது.  ஆயினும், கணத்துள் சுதாரித்துக் கொண்டதாயும் அவர் எண்ணினார்.  ‘ராதிகாவா?’ என்று தேவை இல்லாமல் திருப்பிக் கேட்டது பதில் சொல்ல நேரம் எடுத்துக்கொள்ளத்தான் என்பது அவருக்குப் புரிந்து விட்டது.

‘ஆமாம்மா. ராதிகாதான். வேற யாரைப் பத்தி நான் கேக்கப்போறேன்?’ என்றார் அவர்.

‘ராதிகா காலேஜ்லேருந்து சீக்கிரமே கிளம்பிப் போய்ட்டா, அங்க்கிள் – லேசாத் தலை வலிக்குதுன்னு. ஆண்ட்டியை நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க, அங்க்கிள்!’ என்று அவசரக் குரலில் பதில் சொல்லிவிட்டு  அவள் விரைவாக நகர்ந்தது பொருள் பொதிந்த செய்கையாக அவருக்குப் பட்டது. அவள் தம்மைத் தவிர்த்ததும் அவருக்குப் புரிந்தது. அவர் வியப்படைந்தார்.

“ஒரு நாலுமணி வாக்கில உங்க காலேஜுக்கு நான் போயிருந்தேம்மா…”

ராதிகாவுக்குத் திக்கென்றிருந்தாலும், முகத்தில் தனது திடுக்கீட்டைக் காட்டாமல் அவரைப் பார்த்தபடியே பதில் சொல்லாதிருந்தாள்.

“தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு நீ சீக்கிரமே கெளம்பிப் போயிட்டதா உன் சிநேகிதி பத்மஜா சொல்லிச்சு….”  என்று அவர் தொடர்ந்ததும் ஒரு வகையில் அவளுக்கு அப்பாடா என்று இருந்தது.

“ஆமாம்ப்பா.  தலை வலிச்சுது. கெளம்பிட்டேன்.”

‘சீக்கிரமே கெளம்பிட்டா, ஏண்டி வழக்கம் போல அஞ்சு மணிக்கு வந்தே?’ என்று அம்மாவின் பார்வை கேட்டதாய் அவளுக்குத் தோன்ற, “பெர்மிஷன் போட்டுட்டு எங்க காலேஜ் ரெஸ்ட் ரூம்ல போய்ப் படுத்துட்டேம்ப்பா. காலேஜ் விடுறதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் இருந்தப்ப. கெளம்பினேன். அதான் நீங்க போனப்ப நான் இருக்கல்லே,” என்று ஒரு வழியாயச் சமாளித்தாள்.

அவள் சொன்ன பதில் பொருத்தமாக இருந்ததால், தீனதயாளனுக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது. “நான் ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேம்மா, ராதிகா – உனக்கு ஏதாச்சும் பிரச்னையோ, ஏங்கிட்ட சொல்லாம தவிக்கிறியோன்னு!”

“அப்பா! அப்படி யெல்லம் நான் எந்தப் பிரச்னையிலயும் சிக்கிக்க மாட்டேன்.  அப்படியே சிக்கிக்கிட்டாலும், அது உங்க ரேண்டு பேர் கிட்டயும் சொல்லக் கூடாத சிக்கலா ஒரு நாளும் இருக்காது. யாருக்கும் தெரியக் கூடாத சிக்கலா யிருந்தாத்தானேப்பா உங்க விசாரணைக் கெல்லாம் நான் பயப்படணும்?”

தீனதயாளனுக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது.  ஒரு சாசாரணக் கேள்விக்கு மகள் ஒரு தினுசான குத்தலோடு பதில் சொன்னதாக அவர் உணர்ந்தார். தமது குற்றமுள்ள நெஞ்சு அப்படி நினைக்க வைக்கிறதோ எனும் எண்ணமும் அவருள் எழுந்தது.

“என்னம்மா இது – விசாரணை, அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தை யெல்லம் சொல்றே? எதேச்சையா அந்தப் பக்கம் போனேன்.   அப்படியே உன்னையும் கார்ல கூட்டிட்டு வரலாமேன்னு காலேஜுக்குப் போனேன். தலைவலின்னு நீ சீக்கிரமே கெள்ம்பிப் போயிட்டேன்னு பத்மஜா சொல்லிச்சு.  ஒரு தகப்பன் கவலைப்பட்டுக் கேக்க மாட்டானா?”

“கேளுங்கப்பா, தாராளமாக் கேளுங்கப்பா.  என்னோட மடியில கனம் இருந்தாத்தானெ வழியில பயம்?”

“என்ன ராதிகா, இது? உங்கப்பா இப்ப என்ன கேட்டுட்டாரு உன்னை?  எதுக்கு இப்படி வெடுக்னு பதில் சொல்றே? ரெண்டு நாளாவே நீ சரியா யில்லே! நானும் கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன்!”

ராதிகா பதில் சொல்லாமல் சோற்றை அளைந்து கொண்டிருந்தாள். கண்ணசைப்பின் வாயிலாக, தீனதயாளன், ‘சும்மா இரு’ என்பது போல் தனலட்சுமியை நோக்கிச் சைகை செய்தது தலையை உயர்த்தாமலே அவளுக்குத் தெரிந்தது.

“என்னடி பதில் சொல்லாம இருக்கே? மனசு விட்டுப் பேசுடி.”

அதற்கு மேலும் முகத்தில் கடுங்குறிப்புக் காட்டி அவர்களைக் கவலையில் ஆழ்த்த விரும்பாத ராதிகா,  “மனசு விட்டுப் பேசுறதுக்கெல்லாம் எதுவுமே இல்லேம்மா. நீங்களா எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிடாதீங்க. எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லே.  நான் எதையும் மறைக்கவும் இல்லே.  தப்பான வழியில் போறவங்கதானேம்மா மறைக்கணும்? நான் அப்படிப்பட்டவ இல்லேம்மா.” – இப்ப்டிச் சொல்லிவிட்டு அவள் சத்தமாய்ச் சிரித்தாள். அவளது பார்வை நீட்சியாகத் தீனதயாளனின் மீது பதிந்தது.

கடைசி இரண்டு வாக்கியங்களும் தீனதயாளனின் நெஞ்சுக்குள் ஊசிகளாய் இறங்கிக் குத்தின. அவளது பார்வை வேறு நெடுமையாகத் தம் மீது பதிந்திருந்தது கண்டு அவருக்கு வியர்த்தது. தமது குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பே அது என்று அவர் மறுபடியும் நினைத்தார். ராதிகா பொடி வைத்து எதுவும் பேசவில்லை என்று நம்பி அவர் சற்றே மனம் தேறினார்.

அதன் பிறகு, மூவரும் தேவையான சொற்பரிமாற்றங்களுட்ன் உணவு வகைகளைபயும் பரிமாறிக்கொண்டு சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள்….

…. தன்னறையை யடைந்து பாடப் புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்ட ராதிகாவுக்குப் படிப்பு ஓடவே இல்லை.  வழக்கம் போல் தனலட்சுமி கூடத்துக்கு வந்து தீனதயாளனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தபடி அவரது காலடியில் உட்கார்ந்துகொண்டதைப் பார்த்து அவளுள் சகிக்க முடியாத சினம் கிளர்ந்துகொண்டது.

‘அந்த சிந்தியாவும் இப்படித்தான் அப்பாவுக்குப் பணிவிடை செய்வாளோ? இருக்காது. அவர்தான் அவளுக்குப் பணிவிடை செய்வாரா யிருக்கும். மணமானவர்களின் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கும் பெண் படு மோசமானவள். ஒருவேளை அவளும் மணமானவளா யிருப்பாளோ? புருஷன் வேறு இடத்தில் இருக்கிறானோ? அவனுக்கு இவள் துரோகம் செய்து கொண்டிருக்கிறாளோ! அவளுக்கு எத்தனை வயசு இருக்கும்? ஒரு நாற்பது இருக்குமா? கிட்டத்தில் பார்த்தால்தான் சரியான வயசைச் சொல்ல முடியும்.  ரொம்பவும் சின்னப் பெண்ணக இருக்க மாட்டாள்…. அவள் வயசு என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.  ஐம்பது வயசு தாண்டிய பின் இந்த அப்பாவுக்கு ஏன் இப்ப்டி ஒரு வக்கிரபுத்தி? மகாத்மா காந்தி மாதிரி பிரும்மசரியம் காக்கிறாராமே, பிரும்மசரியம்! ஒரு துப்பறியும் நிறுவனம் மூலம் அந்தப் பெண்பிள்ளையைப் பற்றிய விவரங்களை யெல்லாம் எளிதாய்க் கண்டுபிடித்துவிடலாம்தான். ஆனால் அதற்கு நிறையப் பணம் செலவாகுமே?…..’

நினைக்க நினைக்க அவளுக்கு ஆறவே இல்லை. ‘அந்தப் பெண்ணுடனான அப்பாவின் உறவு பற்றிய முழு விவரங்களையும் ஆதாரத்தோடு சேகரித்த பின் அப்பாவிடமே சொல்லிவிட வேண்டும் – உன்னோட யோக்கியதை எனக்குத் தெரியும் என்று.

இப்படி யெல்லாம் பலவாறாய்க் குருட்டு யோசனை செய்துகொண்டிருந்த ராதிகா அப்பாவும் அம்மாவும் எதற்காகவோ பெருங்குரல் எடுத்துச் சிரிததது காதில் விழ, எழுந்து போய்ப் படீரென்று தன்னறைக் கதவைச் சாத்தினாள்.

ராதிகாவின் அறைக்கு முதுகு காட்டி உட்கார்ந்திருந்தார் தீனதாயாளன். தனலட்சுமி அவரது  காலடியில் அவருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள். ராதிகா எழுந்து வந்து தன்னறைக் கதவைச் சாத்தியதை இருவருமே பார்க்கவில்லை.

ஆனால். கதவு படீரென்று தேவைக்கு மீறிய – அல்லது தேவையற்ற –ஓசையுடன் அறைந்து சாத்தப்பட்ட தினுசை மட்டும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.  இருவர் முகங்களும் உடனே மாறின.

“என்ன, தனலட்சுமி? அவ ரூம் கதவைப் படீர்னு சாத்தின மாதிரி தெரியல்லே?”

“ஆமாங்க. எனக்கும் அப்படித்தான் தோணிசசு. எதுக்கு அப்படிப் படீர்னு சாத்தணும்? அவ போக்கே எனக்குப் புரியல்லே.  போய்க் கேக்கட்டுமா?”

ஒரு நொடி போல் யோசித்த தீனதயாளன், “சரி. போய்க் கேளு. என்னதான் சொல்றான்னு பாப்போமே!” என்றார்.

தனலட்சுமி எழுந்து சென்றாள்.  ராதிகாவின் அறைக்கதவு மூடியிருந்ததே தவிர, தாழிடப்பட்டிருக்கவில்லை. அவள் கதவை மெதுவாகத் தள்ளினாள்.

“என்னம்மா?”

“கதவைப் படீர்னு அடிச்சுச் சாத்தின மாதிரி இருந்திச்சு.  நாங்க சத்தமாச் சிரிச்சது உனக்குத் தொந்தரவா இருந்திச்சோன்னு கேக்குறதுக்குத்தான் வந்தேன்.”

“சேச்சே! என்னம்மா இது! அப்படியே தொந்தரவா யிருந்தாலும், அதுக்காக யாராச்சும் கதவை அடிச்சுச் சாத்துவாங்களா!  அது மொகத்துல அடிக்கிற மாதிரி இருக்காதோ!  ஜன்னல் வழியா வந்த திடீர்க் காத்துல கதவு தானாச் சாத்திக்கிடிச்சு…. ‘போய் என்னன்னு கேளு’ன்னு அப்பா உன்னை அனுப்பினாராக்கும்!”  – கடைசி வாக்கியத்தை எகத்தாளமாக வேண்டுமென்றே இரைந்த குரலில் சொன்னாள்.

தீனதயாளனின் நெஞ்சில் கத்தி இறங்கியது.  மகள் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்துக்கொண்டிருந்தது அவருக்குத் தெற்றெனப் புரிந்து போயிற்று. ‘இவளுக்கு என்ன பிரச்னை? கண்டுபிடிக்க வேண்டும்!’

“அப்பா என்னடி அனுப்புறது! நானேதான் வந்தேன். என்னமோ ஆத்திரத்தோட அடிச்சுச் சாத்தின மாதிரி இருந்திச்சு. அதான் காத்துக்குச் சாத்திக்கிடிச்சுன்னுட்டியே!…சரி….”

மீதமிருந்த வெற்றிலை மடித்துக்கொடுக்கும் பணியைத் தொடர, தனலட்சுமி கூடத்துக்குத் திரும்பிப்போனாள்.

… மறு நாள் தீனதயாளன் அலுவலகத்துக்குப் போகவில்லை. எப்போதும் ராதிகா கிளம்பிப் போனதன் பிறகுதான் அவர் புறப்படுவார் என்பதால், தான் அன்று அலுவலகம் செல்லப் போவதில்லை என்பதை ராதிகா தெரிந்து கொள்ளுவதை விரும்பாத அவர் அது பற்றித் தனலட்சுமிக்கும் சொல்லவில்லை.

வழக்கமான நேரம் கடந்தும் அவர் கிளம்பாதிருந்ததைக் கண்டு தனலட்சுமி அவரை விசாரித்த போது, தமக்கு உடம்பு கொஞ்சம் ஓய்ச்சலாக இருப்பதாகவும் எனவே அன்று அலுவலகம் செல்லப் போவதில்லை என்றும் அவளிடம் தெரிவித்தார். அவள் அது பற்றிச் சற்றே கவலைப்பட்டாலும், கணவர் அன்று வீட்டில் தங்கப் போவது பற்றி மகிழ்ச்சி யடைந்தாள்.

… தனலட்சுமிக்குத் தெரியாமல் ராதிகாவின் அறையைச் சோதனை போட்டுப் பார்க்க விரும்பிய தீனதயாளன் முந்திய நாள் தான் கேட்க நேர்ந்த தொலைப்பேசி உரையாடலை மீண்டும் ஞாபகப் படுததிக்கொண்டார்.  அவர்கள் வீட்டில் இருந்த தொலைப்பேசி அரசாங்கம் அவருக்குக் கொடுத்திருந்தது. அத்தோடு செருகு பாணியில் (plug and socket)  தமது அறையிலும் ஓர் இணைப்பைத் தனிப்பட்ட முறையில் அவர் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். மற்றது கூடத்தில் எல்லாரது பயன்பாட்டுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருந்தது.

இரவு பத்து மணிக்கு மேல் ராதிகா யாருக்கோ தொலைப்பேசியைச் சுழற்றியது அவரது அறைத் தொலைப்பேசியின் இலேசான சிணுங்கலிலிருந்து அவருக்குத் தெரிந்தது. அவர் வியப்புடன் எழுந்து தம் படுக்கையில் உட்கார்ந்தார்.  தமது அறைக் கருவியின் ஒலிவாங்கியை எடுத்து ஓசைப்படாமல் தம் காதில் வைத்துக்கொண்டார்.  தனலட்சுமி அப்போது கழிவறைக்குப் போயிருந்தாள்.

‘ஹல்லோ! பத்மஜா. நாந்தாண்டி, ராதிகா பேசறேன். எங்கப்பா காலேஜுக்கு வந்திருந்தாராமே? … நல்ல வேளை! தலைவலின்னு சொல்லிட்டு நான் சீக்கிரமே கெளம்பிப் போயிட்டதா நீ சொல்லிச் சமாளிச்சது நல்லதாப் போச்சு.  …நான் உங்கிட்ட எதுவும் முன்கூட்டிச் சொல்லி வைக்காட்டியும் நீயே புத்திசாலித்தனமா ஒரு பொய்யைச் சொல்லிச் சமாளிச்சிருக்குறே! தாங்க்ஸ்டி!’

‘நீ காலையில் எங்க வீட்டுக்கு வந்தப்பவே எனக்கு என்னமோ நெரடிச்சு. தவிர நீ காலேஜுக்கு மட்டம் போட இருந்தது உங்க வீட்டுக்குத் தெரியாதுன்னு வேற சொல்லி யிருந்தியா, அதான் சட்னு ஒரு பொய்யைச் சொன்னேன். அது சரி, எதுக்கு இந்த மூடு மந்திரமெல்லாம்? ஏங்கிட்ட கூடச் சொல்ல மாட்டியாக்கும்!’

‘எனக்கு மூடு வரும்போது அந்த மூடு மந்திரத்தை யெல்லாம் நானே சொல்லுவேண்டி….’

‘அந்த சினிமா எப்படி இருந்திச்சு? என்னை விட்டுட்டு நீங்க மூணு பேரும் போனீங்கல்ல? இருக்கட்டும், இருக்கட்டும்.’

‘நீ அன்னைக்குப் பாத்து திடீர்னு லீவ் போட்டா நான் என்னடி செய்யிறது?… சினிமா சூப்பர்டி. பிரமாதம். மறு படியும் ஒரு தரம் உன்னோட பாத்துட்டாப் போச்சு. கோவிக்காதடி.’

‘சரி. வேற என்ன?’

‘வேற ஒண்ணுமில்லேடி. உனக்கு தாங்க்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன். குட் நைட்.’

‘குட் நைட்!’

… தீனதயாளனுக்குக் கவலையும் வியப்பும் ஏற்பட்டன.  மகள் மறைத்தது இன்னதென்பதைக் கண்டுபிடித்த பிறகு, அது தனலட்சுமியை ரொம்பவும் பாதிக்காத விஷயமாக இருந்தால் மட்டும் அவளிடம் அதைச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தார்.

மனைவி குளியலறையில் இருந்த நேரத்தில், அவர் ராதிகாவின் அறையை – அவள் வைத்திருந்த பொருள்களில் எதையும் இடம் மாற்றவோ, கலைக்கவோ செய்யாமல் – சோதனை செய்தது அதற்காகத்தான். ஏதோ காதல் விவகாரம்தான் அவளை ஆட்டி வைத்துக் கொண்டிருப்பதாக அவர் உறுதியாக எண்ணினார். அவ்வாறு எண்ணித் தேடியவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மிகவும் துப்புரவாய் வைக்கப்பட்டிருந்த அலமாரி, மேசையறை, டிரங்க் பெட்டி ஆகியவற்றில் எதிலிருந்தும் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.  ஐந்து நிமிட அவகாசமே அவருக்குக் கிடைத்திருந்ததால், தனலட்சுமி பகல் தூக்கம் தூங்கும் நேரத்தில் மீண்டும் அவற்றை மேலும் கவனத்துடன் குடைந்து பாரக்க எண்ணினார்.

ஆனால், மறுபடியும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தேடிய பின்னரும் அவருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

-தொடரும்

jothigirija@live.com

Series Navigationசெங்குருவிமனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *