உளவும் தொழிலும்

0 minutes, 0 seconds Read
This entry is part 18 of 28 in the series 22 மார்ச் 2015

ரட்டா  எனப்படும் சிறிய கைத்துப்பாக்கி அது. கறுப்பு சைத்தான். எளிதில் எங்கும் மறைத்து எடுத்துச் செல்லலாம். உளவாளிகளுக்கும், கட்டணக் கொலைகாரர்களுக்குமென பிரத்யேகமாக வெளிநாட்டவனால் தயாரிக்கப்பட்டது.
ஆசீம் என்கிற அழகம்பெருமாள் பஞ்சக்கச்சம் கட்டியிருந்தான். இயல்பான சிகப்பு தோல்காரன். நெற்றியை அடைத்த திருமண் அவனை ஒரு வைணவ குருகுலவாசனாகவே காட்டியது.
மதுரையில் தமிழகத்தின் ஜனத்தொகை யில் பத்து விழுக்காடாவது குவிந்திருக்கும் என்பது போன்ற கூட்டம். அன்று அழகர் ஆற்றில் இறங்கும் நாள். மதுரை மண்ணில் உதித்தவர்களும் மிதித்தவர்களும், வந்தவர்களும் வாழ்ந்தவர்களும் தவற விட எண்ணாத ஒரு பிரத்யேக நாள்.
லெபனானில் மையம் கொண்டிருந்த சர்வதேச தீவிரவாத அமைப்பு ஒன்றின் அம்பாக இருப்பவன் ஆசீம். அவனுக்கு அனைத்து பயிற்சிகளும் பாகிஸ்தானின் மலைப்பகுதிகளில் தரப் பட்டிருந்தது. சிறு வயதிலிருந்தே மூளைச் சலவை செய்யப்பட்டிருந்த அவன், இந்துக்களின் குறிப்பாக இந்தியர்களின் விரோதியாகவே வளர்க்கப்பட்டவன்.
தன்னை ஒரு நாத்தீகவாதியாக அடையாளம் காட்டிக் கொள்ள பெரும்பாடு பட்டுவரும் முதலமைச்சர் தன் முதிய காலத்தில் ஆறாவது முறையாக பதவி ஏற்ற பிறகு மதுரைக்கு வருகிறார். தமுக்கம் மைதானத்தில் பொதுக்கூட்டம் என்றாலும், காலையிலேயே விமானம் மூலம் மதுரை வந்தடைவார் என்று அதிகாரப் பூர்வமான செய்திகள் சொல்கின்றன.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும்முன் கரையோரம் நடைபெறும் பூசைக்காலத்தில் அவரது மகிழுந்து அப்பகுதியைக் கடக்கும் என்றும், அப்போது சற்றே கண்ணாடியை இறக்கி தரிசனம் செய்வார் என்றும், நாத்தீகம் என்கிற மேல் பூச்சு மறைந்து அப்போது ஆத்தீகம் எட்டிப் பார்க்கும் என்றும் விசயமறிந்த விஷமிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அவர் கார் கண்ணாடியை இறக்கும்போது, அவர் இறக்க  வேண்டும் என்பதே ஆசிமுக்கு அவன் அமைப்பு இட்ட கட்டளை. வயதானவர். தானாகவே இன்னும் கொஞ்ச நாட்களில் இறக்கக்கூடும் என்கிற போது இப்போதே தீர்த்துக் கட்ட வேண்டிய கட்டாயம் என்ன என்று கூட ஆசீம் யோசித்தான்.
இதில் பெரும் அரசியல் இருக்கிறது என்பதை அவன் அறியமாட்டான். முதலமைச்சரின் இறப்பை இலங்கைப் போராளிகளுடன் தொடர்புபடுத்தி பிரதான எதிர்கட்சி பேசும். மைய அரசு அதை நம்பும் பட்சத்த்தில் இறந்த இளம் தலைவரின் ஆன்மா  சாந்தியடைய வேண்டி இவர் கட்சியுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளும். நாட்டில் குழப்பம் மேலோங்கும்.
திலி புதிதாக வாங்கிய சுங்கிடிப் புடவையை மடிசாராகக் கட்டியிருந்தாள். அவள் கையில் பூசைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன. தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு என அடுக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டு சூரிய ஒளி பட்டு மின்னியது.
மைதிலி திருவல்லிபுத்தூரைத் சேர்ந்தவள். வழக்கமாக அவள் வயதை ஒத்த பெண்கள் ஒட்டு பொட்டு வைத்து வலய வரும்போது அவள் நேர்க்கோடாக சிகப்பு சாந்து வைத்திருப்பாள். ஆண்டாள் அம்சம் அவளிடம் பொருந்தி இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.
மாதவா ! கேசவா ஶ்ரீதரா ! ரிஷிகேசா ! பத்மநாபா ! தாமோதரா !
மூடிய கண்கள். உச்சரிக்கும் ஸ்லோகம். நிமிர்ந்த நடை. திருத்தமில்லா அழகு. அப்பழுக்கற்ற உடை. அழகரை விட்டு விட்டு ஆண்டாளை ரசிக்கும் கூட்டம் பெருகிவிட்டது மைதிலி பிரவேசத்தால்.
“ என்னடி மைது சந்தடி சாக்குல என் பேரைச் சொல்லிட்ட “
“ எப்போன்னா “
“ இப்போதான். பத்மநாபான்னியே “
“ அய்யே அது பகவான் பேரு. பெருமாள் பேரு. ஆண்டவனை நெனைக்கற நேரத்தில யாராவது ஆம்படையான நெனைப்பாளோ. அபிஷ்டு அபிஷ்டு. “
பத்து சுற்றுமுற்றும் பார்த்தான். யாராவது கவனிக்கிறார்களா. நல்ல வேளை யாரும் கவனிக்கவில்லை. பத்து மைதிலியின் பர்த்தா. போன வருடம் தான் கல்யாணம் ஆகியிருந்தது. பத்து ராணுவ அதிகாரி. வருடத்திற்கொருமுறை விடுப்பு கிடைக்கும். அப்போதுதான் தமிழக எல்லையை மிதிக்க முடியும். இம்முறை வந்த போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்  யதேச்சையாக அமைந்தது அவனுக்கு திருப்தியைக் கொடுத்தது. இம்முறை மைதிலியைக் கூட்டிக் கொண்டு ஜப்பல்பூர் போகப்போகிறான். இனிமேல்தான் தாம்பத்தியமே!
மயில் பீலியுடனும் பித்தளைக் கிண்ணத்துடனும் தோளில் தொங்கிய சாம்பிராணிப் பையுடனும் அலைந்து கொண்டிருந்தார் மஸ்தான் பாய். லேசான தாடி, முன் வழுக்கை, முழங்கை வரை நீண்டிருக்கும் தொள தொளா சட்டை, அழுக்கேறிய கைலி, முன் வழுக்கை என்று ஏகப்பட்ட அடையாளங்களுடன் அதே சமயம் அடையாளங்கற்றும் அவர் இருந்தார். பாரதத் திருநாட்டில் அனேக இஸ்லாமியக் கிழவர்கள் இதே தோற்றத்துடன்தான் காட்சியளிக்கிறார்கள். திருக்குரானில் போதிக்கப்படும் எளிமை அவர்களை வந்தடைய இந்த வயசாகி விடுகிறது.
மஸ்தான் பாய் வழக்கமாக வரும் பகுதிதான் இது. வார நாட்கள்¢ல் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பகுதி என்று பிரித்து வைத்திருக்கிறார். அதன் படி இன்று இந்த வைகை ஆற்றுக்கரையிலிருக்கும் கடைகள் தான் அவரது வாடிக்கை. ஆனால் அவர் கொஞ்சம் பிந்தி வந்ததால் கரை கொள்ளாக் கூட்டம் அலை மோதியது. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்பதைக் கவனத்தில் கொள்ளாதது தனது தவறே என்று தலையில் லேசாக அடித்துக் கொண்டார். கடைக்காரர்கள் எல்லாம் வியாபார மும்முரத்தில் இருப்பார்கள். தன்னை யாரும் சட்டை செய்வார்களா என்பது சந்தேகமே! பேசாமல் தணலை நீர் ஊற்றி அணைத்து விடலாமா என்று யோசித்தார். கரிக் காசாவது மிஞ்சும்.
“ பாய் இங்கிட்டு வாங்க “ என்ற குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார் மஸ்தான் பாய். நாட்டு மருந்துக் கடை கோவிந்தப்ப நாயக்கர்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். சாம்பிராணி வாங்குவது அவர் கடையில் தான் எப்போதும். ஆனால் இன்றுதான் சாம்பிராணிக்கே வேலை இருக்காது போலிருக்கிறதே!
ஜென்னி என்கிற ஜெனி•பர் பரபரத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இன்று எல்லாமே தடம் புரண்டிருந்தது. அவள் காதலித்துக் கொண்டிருந்த அழகம்பெருமாள் வீர வைஷ்ணவன். பதினாறு திருமண் இட்டுக் கொண்டு பிரபந்தம் பாடிக் கொண்டிருப்பவன். அவனைக் காதலிப்பது ஒரு சங்கடமான விசயம்தான். ஆனாலும் காதல் இதையெல்லாம் பார்த்துக் கொண்டா வருகிறது! ஒரு மழையிருட்டு நேரத்தில் மாதாகோயிலுக்கு மெழுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யப் போய்க் கொண்டிருந்த இவளது ஒரு அடி உயரக் குதிகால் செருப்பு வாரியப் பள்ளத்தால் சிதைக்கப்பட்ட தார்ச்சாலையில் வழுக்க, கட்டுக்குடுமி அவிழ சாம்சன் என்னும் மாவீரனைப் போல இவளைத் தாங்கிக் கொண்ட சுந்தர புருசன் அவன். நிலைகுலைந்த இவளது குட்டைப்பாவாடை மேலெழும்ப ஒரு கையால் அதை நீவி விட்டபடியே முகத்தைத் திருப்பிக் கொண்ட அவனது நாகரீகத்தை அவள் ரசித்தாள். மனதைப் பறிகொடுத்தாள். வெற்றுடம்பில் மேல் துண்டுடன் இருந்த அவனது புஜங்களின் வ்லிமை அவளுள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கண்களை இறுக்க மூடிக்கொண்டு “ பிதாவே “ என்று அவன் மார்பில் சிலுவையிட்டாள் ஜென்னி.
ஜெபக்கூட்டத்திற்கு போகுமுன்பாக அவனைச் சந்திக்கும்  நிகழ்வு ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. ஆனால் கிளம்பும் நேரம் பார்த்து சித்தி கான்ஸ்டன்ஸ் “ என்னையும் இட்டுக்கினு போயேன் ‘ என்று ஆரம்பித்தாள். சித்தி புருசன் ஜெ•ப்ரி அண்டக் குடிகாரன். அதனால் அவள் அடிக்கடி இங்கே ஓடி வந்து விடுகிறாள். வந்தமா சாப்டமா என்றில்லாமல் ஜென்னிக்கு அறிவுரைகள் வழங்க ஆரம்பித்து விடுவாள்.
“ டி வி, சினிமால்லாம் சைத்தானுங்க. அதையெல்லாம் பாத்து மனசை கெடுத்துக்காத. சாமுவேல் ஜெபதுரை என்னா சொல்றாரு தெரியுமா. இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டுல சைத்தான் கொம்பு வச்சுகிட்டு, பல்லை துருத்திகிட்டு கோரமா கண்ணுக்குத் தெரியாதாம். கண்ணுக்கு தெரியாம வேற ரூபத்தில வரும்.  டிவி,  சினிமான்னு நம்ம கெடுக்கும். என்னா புரிஞ்சுதா “
சித்தி வந்தால் காரியம் கெட்டுப் போகும். ஜெபக்கூட்டத்திலும் சும்மா இருக்க மாட்டாள். இவள் பிரசங்கத்தை ஆரம்பித்து விடுவாள். அழகனை இவள் பார்த்துவிட்டாலோ அவ்வளவுதான். ஜென்னிக்கு சிலுவைதான்.
சினேகிதி ஒருத்தி வீட்டிற்கு போய்விட்டு அப்புறம் செல்வதாக போக்கு காட்டிவிட்டு தப்பித்தாள் ஜென்னி. வெளியில் அவளது ஸ்கூட்டி கிளம்பமாட்டேன் என்று அடம் பிடித்தது. அடிக்கடி அவளைப் பார்த்து ஜொள்ளு விடும் ஆட்டோக்காரன் ஒருத்தன் உதை உதை என்று உதைத்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தான்.
வழக்கமாக சந்திக்கும் இடத்தில் அழகன் இல்லை. கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் சொன்ன நேரம் கடந்து அரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அவளுக்கு அழுகையாக வந்தது. இவன் எப்பவுமே இப்படித்தான். வினாடி முள் நகரக்கூடாது. இவன் நகர்ந்து விடுவான். அப்படி என்ன தலை போகிற வேலையோ?
கூட்டம் ஏகத்துக்கு பெருகி இருந்தது. சாலையில் சவுக்கு கம்புகளால் தடுப்பு போட்டிருந்தார்கள். முதலமைச்சர் தமுக்கம் மைதானத்தில் பேச வரப்போவதாக பேசிக்கொண்டார்கள். கூட்டத்தை தன் பூனைக் கண்களால் துழாவினாள் ஜென்னி. ஆறரை அடி அழகன் நிச்சயம் இந்தக் கூட்டத்தில் தன் கண்ணில் படுவான்.. படவேண்டும்.. “ஏசப்பா எனக்கு வழி காட்டு” என்று வேண்டிக்கொண்டாள். சவுக்கு தடுப்பு ஓரமாக சாலையை ஒட்டியபடி நகரும் கூட்டத்தின் நடுவே கையில் பெரிய பூக்கூடையுடன் அழகன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது அவள் கண்களில் பட்டது. உடனே தன் செல்பேசியைக் கொண்டு அவனுடன் தொடர்பு கொள்ள எண்ணினாள். ஆனால் அவன் ஒருமுறை அவளைக் கடிந்து கொண்டது நினைவுக்கு வந்து அவள் கைகளைக் கட்டிப் போட்டது.
“ பெருமாளுக்கு முன்னால வெட்டி அரட்டையெல்லாம் கூடாது. செல்லில பேசற நேரத்துல ரெண்டு ஸ்லோகம் சொல்லு; போற வழிக்கு புண்ணியம் கெடைக்கும். அது பிரபந்தமா இருக்கணும்னு அவசியமில்ல. ஒங்க பைபிளாக்கூட இருக்கலாம். புரியறதோ! “
அழகர் ஆற்றில் இறங்கும் அந்த வினாடிகளில் கூட்டம் பரபரத்து அரற்றியது. மைதிலி தன்னை மறந்து கண்களை மூடிக்கொண்டு வைணவ ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். கால்கள் தன்னிச்சையாக முன் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு தருணத்தில் பத்மநாபன் அவளிடமிருந்து பிரிக்கப் பட்டான். கட்டுக் குடுமியுடன் நெற்றி நிறைய திருமண்ணுடன் ஆசிம் அவள் பின்னால் நடந்து கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு பெரிய பூக்கூடையில் சாமந்திப் பூக்கள் மாலையாக சுருண்டு கிடந்தன. அதனடியில் ஒரு கருவண்டைப் போல் பெரட்டா பதுங்கிக் கிடந்தது. அதன் உடல் முழுவதும் சாமந்திப்பூக்களால் சுற்றப்பட்டு மறைக்கப்பட்டு அதன் முனை மட்டும் வெளியே தெரியும்படியாக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. போலீஸ் சைரனுடன் ஜீப்புகளும் கார்களும் தலைகளில் சிகப்பு விளக்குகளெரிய வேகமாக அந்தப் பகுதியைக் கடந்தன. அரசு முத்திரை முகப்பில் பதித்த வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஆற்றங்கரைக்கு அருகே வரும்போது கொஞ்சம் வேகத்தைக் குறைத்தது மாதிரி இருந்தது. லேசாக சாளரத்தின் கறுப்பு கண்ணாடி இறக்கப்பட்டு ஒரு ஜோடிக் கண்கள் எட்டிப் பார்த்தன.
எண்ணி பத்து வினாடிகளே அவனுக்கு கொடுக்கப்பட்ட நேரம். அதற்குள் அவன் பூப்பந்தை எடுத்து துப்பாக்கியை பிடித்து குறி பார்த்து சுட வேண்டும். நகரும் காரின் வேகத்தையும் சீறிப்பாயும் தோட்டாவின் வேகத்தையும் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். அசையும் இலக்கினைச் சுடும் பயிற்சியில் அவன் தேர்ந்தவன். அதனால் அதெல்லாம் அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆசிம் செயல்பட்டான். கண்கள் நகரும் வாகனத்தைக் குறி வைக்க, கைகள் தன்னிச்சையாக பெரட்டாவை பற்றின. ஆள்காட்டி விரல் இயக்கும் விசையை சுற்றிச் சுருண்டது. துப்பாக்கி முனை மெல்ல உயர்ந்து சாலையில் நகரும் வாகனத்தின் சாளரத்தைக் குறி வைத்தது.
மஸ்தான் பாய் தடுப்போரம் நின்று கொண்டிருந்தார். அவர் கை இடையில் இருக்கும் துணிப்பையிலிருந்து ஒரு கொத்து சாம்பிராணித் தூளை எடுத்து சிவந்து எரிந்து கொண்டிருக்கும் தணலின் மேல் போட்டது. குபு குபுவென்று புகை கிளம்பி சூழ்ந்து கொண்டது.
கோவிந்தப்ப நாயக்கரின் நாட்டு மருந்துக் கடையில் சீருடையில் தொலைநோக்கி பொருத்திய ஸ்நைப்பர் துப்பாக்கிகளுடன் இரண்டு கமேண்டோக்கள் தயார் நிலையில் ஆசிமைக் குறி பார்த்தபடி ஓளிந்திருந்தனர்.
அவன் துப்பாக்கியை எடுத்த இரண்டாவது வினாடி மைதிலி தலை சுற்றி அவன் மேல் சாய்ந்தாள். காலையில் வெறும் வயிற்றோடு வெய்யிலில் நடந்ததும், கூட்டத்தின் இறுக்கமும் அவளை அந்த நிலைக்குத் தள்ளி விட்டிருந்தது. ஆசிம் நிலைகுலைந்தான். சாமாளித்து நிமிருவதற்குள் காரின் கண்ணாடி ஏற்றப்பட்டு அவனிடமிருந்து விலகிக் கொண்டிருந்தது. தன் மேல் விழுந்த பெண்ணை திரும்பவும் ஏறிட்டான். அவள் அவன் கைகளில் மயங்கிக் கிடந்தாள். இது அவன் எதிர்பார்க்காத திருப்பம். தப்பிக்கும் வழி தேடி அவன் கண்கள் அலைந்த போது அவனருகில் பத்மநாபன் நின்று கொண்டிருந்தான்.
“ ரொம்ப நன்றிங்க “ என்று சொல்லியபடியே அவன் கைகளைப் பிடித்து குலுக்கி அப்படியே பின்னால் இழுத்து இறுக்கினான் பத்மநாபன். அந்தப்பக்கத்திலிருந்து இன்னொரு கரம் அவனது இன்னொரு கையைப் பிடித்து முறுக்கி பின்னால் இழுத்தது. மயில் பீலியின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட கைவிலங்கோடு மஸ்தான் பாய் நின்றிருந்தார்.
நிலைகுலைந்து போனாள் ஜென்னி. அகிலமே இருண்டு விட்டதுபோல் உணர்ந்தாள். எளிதில் உணர்ச்சி வசப்படும் அவளது உள்ளம் பரபரத்தது. அவளுடைய எல்லா எதிர்பார்ப்புகளும் நொறுங்கிப் போனதை உணர்ந்த அவளுக்கு வாழ்வின் மேல் திடீரென வெறுப்பு வந்தது. வாழ்வதற்கான அர்த்தம் அனர்த்தமாகிப் போனதை நொடியில் உணர்ந்த அவளது மனம் தவறான முடிவொன்றை எடுத்தது.
கையிலிருந்த வேதாகம நூலில் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்த புதிய சவர ப்ளேடை அவள் கைகள் தன்னிச்சையாக எடுத்தன. அதை அப்புத்தகத்தில் வைத்த நாளின் நிகழ்வினை நோக்கி அவள் மனம் போனது.
“ மிஸ்டர் அழகன் நான் ஏதோ விளையாட்டுக்குச் சொல்றேன்னிட்டு நெனைக்காதீங்க. இது ஆழமான காதல். இனக்கவர்ச்சியினால வர்ற மேலோட்டமான ஈர்ப்பு இல்ல. அதப் புரிஞ்சுக்கோங்க. நீங்க இல்லைன்னா நான் உசிரை மாய்ச்சுக்குவேன். அதுக்குத் தயாரா எப்பவும் இந்த புனித பைபிள்ல ஒரு புது ப்ளேடு இருக்கும். எந்த நொடியிலேயும் அதுக்கு வேல கொடுக்க நான் தயாரா இருக்கேன். “
புது ப்ளேடைக் கையில் எடுத்து மணிக்கட்டு நரம்பினை அறுத்துக் கொள்ளப் போனபோது ஜென்னியின் காதுகளில் கான்ஸ்டன்ஸ் சித்தியின் வார்த்தைகள் ஒலித்தன.
“ இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டுல சைத்தான் கொம்பு வச்சுகிட்டு, பல்லை துருத்திகிட்டு கோரமா கண்ணுக்குத் தெரியாதாம். கண்ணுக்கு தெரியாம வேற ரூபத்தில வரும்.”
‘ உண்மைதான்! வேறு ரூபத்தில்தான் சைத்தான் வந்திருக்கிறது. தலையில் கொம்புக்கு பதிலாகக் குடுமி! கோரைப் பற்களுக்கு பதிலாக பட்டை நாமம். தேவனே இந்தச் சைத்தானிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர். உமக்கு தோத்திரம் ‘ என்று மனதில் ஜெபித்தபடியே தன் பரந்த மார்பில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் கையிலிருந்த புது ப்ளேடு கீழே நழுவி விழுந்தது.
நெஞ்சில் ஏதோ பாரம் குறைந்து விட்டதை போல் உணர்ந்தான் ஆசீம். விலாவில் ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டிருந்தது. நிமிர்ந்த அவன் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன.
மைதிலி தெளிவான விழிகளுடனும், மிடுக்குடனும் நின்று கொண்டிருந்தாள். அவள் கைகளில் அவனுடைய பெரட்டா இருந்தது. அது அவனது விலாவினை அழுத்திக் கொண்டிருந்தது.
மாலைச் செய்தித்தாள்கள் அலறின.

Series Navigationஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவைவைரமணிக் கதைகள் -8 எதிரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *