பைய பைய

author
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 4 in the series 25 ஆகஸ்ட் 2019

சுரேஷ்மணியன் MA

அடியேன்  இரண்டொரு நாட்களுக்கு முன்னர்  ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலை மறுபடியும் படிக்க நேரிட்டது. அலைபேசியில்  வெற்றிலையில்  சுண்ணாம்பு தடவுவது போன்று  படிப்பதை விட,  இடது கையில் நூலைத் தாங்கி, வலக்கை நடுவிரலை நாவினில் தோய்த்து பக்கத் தாள்களை புரட்டியவாறு படிக்கிற  நூல் வாசிப்பு என்பதே ஒரு வித தனி சுகானுபவம்தான், அதிலும் இலக்கிய நூல் என்றால் மகிழ்ச்சி இன்னும் பன்மடங்கு பெருகத்தானே செய்யும்.எல்லா காலத்திற்கும் பொருந்தி வரக்கூடிய கருத்துக்களை தாங்கிய நீதி நூல்கள் இன்றும் சற்றே நம்மை மிரள வைக்கின்றன,  விடயத்திற்கு வருகிறேன்.தத்தனூர் எம்.ஆர் கல்லூரியில் தமிழிலக்கியம் படித்த காலத்தில்  கனகராஜ் என்கிற வயதில் எம்மைவிட மூத்த,  நெல்லைச்சீமையை சேர்ந்த நண்பர் எங்களோடு படித்து வந்தார் . அவரோடு நாங்கள் நட்பு கொள்கிற காலத்தில் அவரின் பேச்சு வழக்கு குறித்து அவரை நாங்கள் நையாண்டி செய்வோம். 
ஏளா!சுரேசு  நீ எப்ப காலேஸி வருத?
மாப்ளே  இங்கனக்குள்ள வாலே  !சுரேசு என்னடே பண்ணுத!அந்த வாத்திமாரு கிளாசு கடுப்பா இருக்குலே! கோட்டிப்பய கணக்கா  பொலம்புதான். படிச்ச பொறவு என்ன சோலி  பண்றதுலே ?  இப்படியாக அவரின் பேச்சு வழக்குகள் இருக்கும்.  மதுரை, நெல்லை வட்டாரமொழி  வழக்குகள் அப்படித்தான் இருக்கும் என்பதை நாங்கள் தெரிந்திடாத பருவம் அது. வட்டார வழக்குகள் மாவட்டத்திற்கு  வேறொன்றாக மாறியிருக்கிறது.  தஞ்சை மாவட்டத்தின் சிலர் சில பகுதிகளில் இன்றும் வாழைப்பழம் என்பதை  வாலப்பலம் என்றும், குழம்பு என்பதை குலம்பு என்றுதான் சொல்லி வருகிறார்கள்.கொங்கு நாட்டு வட்டார இன்னும் சுவையானதுஏனூங் என்ன பண்றீங்க.?இப்படியாக பல சொற்கள் வழக்கு  இருக்கும் . நிற்க!தத்தனூரில்  மேலூரில் உள்ள மாவட்ட கிளை நூலகத்திற்கு நானும் அவரும் அடிக்கடி நடந்து போய் படித்து  வருகின்ற ஓர் நாளில், நான் தார்சாலையில் கொஞ்சம் வேகமாக நடப்பதை பார்த்து , அவர் என்னை நோக்கி ” சுரேசு மாப்புளே கொஞ்சம் பைய போலாம்லே  “என்றார்அது என்ன மாமா பைய ? என்றேன் .கொஞ்சம் மெதுவா போலாம்லே அதான்,  என்றார்.அன்றுதான் பைய என்ற அவரின் நெல்லை  மாவட்ட சொற்பதத்தை கேட்டு, மாம்ஸ் மெதுவா போகலாம்னு சொல்லுய்யா , அது என்ன பைய, இதுலாம் ஒரு தமிழ்  வார்த்தை என்று அவரை நையாண்டி செய்திருக்கிறேன்.நான் இரண்டோர் நாட்களுக்கு முன் படித்த ஔவ்வை பாட்டியின்  கொன்றை வேந்தனில் ” பையச் சென்றால் வையந் தாங்கும் “என்கிற வரியின் முதல் வார்த்தை நான் மேற்சொன்ன பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வை என்னை எண்ணிப்பார்க்க அல்லது பதிவிட  வைத்திருக்கிறது.     எந்த வார்த்தையை கேட்டு இதெல்லாம் ஒரு தமிழா?  என்று அந்த நண்பரை நக்கல் செய்தேனோ , அந்த வார்த்தையை ஔவ்வை பாட்டியும் பயன்படுத்தியிருக்கிறாள் என்றாள்  அதுதான் தூய்மையான தமிழ் சொல் ஆகும்.  ‘ பையச் சென்றால் வையந் தாங்கும் ” இதில் பைய என்பதற்கு என்பதற்கு மெள்ள என்று பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது . பைய – மெல்ல  சென்றால் – (ஒருவன்தகுதியான வழியிலே) நடந்தால், வையம் – பூமியிலுள்ளோர், தாங்கும் – (அவனை) மேலாகக் கொள்வர்.அதாவது ஒருவன் தகுதியான வழியில் பொறுமையுடன் மெதுவாக நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர், என்கிறன்றனர் உரையாசிரியர்கள்.எனக்கு இன்னும் கொஞ்சம் “பைய” என்கிற சொல் குறித்து வேறு ஏதேனும் தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதா ?  என்கிற எண்ணத்தின் காரணமாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான  திருக்குறளை ஆய்ந்து துழாவிய போது, அங்கேயும் ஒரு இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன். வள்ளுவப் பாட்டன் ஓரிடத்தில்அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்(குறள்.: 1098) என்கிற குறளில் பைய என்கிற சொல்லானது மெல்ல என்கிற பொருளைத் தருகிறது மணக்குடவர், பரிமேலழகர் உள்ளிட்ட மூத்த உரையாசிரியர்கள் முதல் இக்கால உரையாசிரியர்கள் வரை மெல்ல அல்லது ஓசைப்படாமல் என்கிற விளக்கத்தைத்தான்  தருகிறார்கள் .மேற்சொன்ன குறளுக்கான பொருளைப் பாருங்கள், ” யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது “என்பதாகும் .ஆக பைய என்கிற வார்த்தை வட்டார வழக்கு சொல் அல்ல அது தமிழின் தொன்மையான சொல் ஆகும்.  மேலும்கலித்தொகையிலும் இந்த பைய என்கிற சொல் கையாளப்பட்டுள்ளதை நேற்று கலித்தொகையை  மேம்போக்காக மேய்ந்த போது அறிந்தேன்  பாலைத்திணையில்  பாலைக்கலி பாடிய பெருங்கொடுங்கோ ஒரு பாடலில்செவ்விய தீவிய சொல்லி,அவற்றொடுபைய முயங்கிய அஞ்ஞான்று அவை எல்லாம்பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!அகல் நகர் கொள்ளா அலர்தலைத் தந்து,பகல் முனி வெஞ் சுரம்உள்ளல் அறிந்தேன்;     என்கிற பாடலில்,பைய என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.”  நல்லதும் தீயதும் சொல்லி அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே மெதுவாக, இளைப்பாறுதலாக, மென்மையாகஅணைத்து மகிழ்ந்திருந்த அந்தப் பொழுதில்,  என உரையெழுதும் ஆசிரியர்கள் பைய என்பதற்கு மெதுவாக என்ற பொருளையே எழுதியிருக்கின்றனர். எனவே பைய என்கிற சொல் நேற்றோ இன்றோ உருவானதல்ல அது சங்க இக்கிய காலத்தில் நம் மூதாதையர்களும், புலவர்களும் பயன்படுத்திய முதன்மையான இலக்கிய வழக்கான பழந்தமிழ் சொல் என்பதை மேற்கண்ட இலக்கிய பாடல்களை படிக்கிற போது சற்றே வியப்பாக இருக்கிறது. இந்த “பைய பைய” என்ற சொல் தொடர்பாக ஒரு நகைச்சுவையான சம்பவம் ஒன்றையும்  சொல்வார்கள்.இது போல் தென் மாவட்டம் ஒன்றிலிருந்து வந்திருந்த பயணி ஒருவர் சென்னை பேருந்தில் பயணச்சீட்டு பெற நடத்துனரிடம் பணத்தைக் கொடுக்கிறார். பயணச்சீடைக் கொடுத்த நடத்துனர் “சில்லறை இல்லை, அப்புறம் தருகிறேன்” என்று சொல்ல பயணியும் அதை ஒப்புக் கொள்ளும் விதமாக “அதனாலென்ன பைய கொடுங்க” என்று கூறுகிறார்.உடனே நடத்துனரோ “நான் சொல்றேனில்ல சில்லறை இல்லைன்னு, நம்பிக்கை இல்லாம பைய குடுக்கச் சொன்னா எப்படி?” ன்னு கேட்டாராம்.பைய பைய சிரிப்பு வருகின்றதுதானே  ! பை பை பை பைஅன்போடு  சுரேஷ்மணியன் MA,

Series Navigationகவிதையின் உயிர்த்தெழல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *