பாகிஸ்தானில் விலைவாசி

0 minutes, 1 second Read
This entry is part 1 of 11 in the series 26 ஜனவரி 2020

பாகிஸ்தானில் விலைவாசி கண்டபடி உயர்ந்து போயிருக்கிறது. ஒரு கிலோ கோதுமை மாவு ஏறக்குறைய நூற்றைம்பது ரூபாய்க்கு (பாகிஸ்தானிய ரூபாய்) விற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல கடந்த ஒருவாரத்தில் மட்டும் சர்க்கரையின் விலை ஏறக்குறைய பத்து மடங்கு உயர்ந்து ஏழைப் பாகிஸ்தானிகளை பாதித்திருக்கிறது. பதுக்கல்காரர்கள் கோதுமையையும், சர்க்கரையையும் பதுக்கி வைத்துக் கொண்டு தாறுமாறாக விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல பிரதம மந்திரி இம்ரான்கான் அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல் காஷ்மீர் பிலாக்கனம் பாடிக் கொண்டிருக்கிறார்.

இம்மாதிரியான பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் பல துண்டுகளாக உடைந்துவிடுமா என்றால் ‘இல்லை’ என்பதே என்னுடைய பதிலாக இருக்கும். அப்படி உடைந்து போகவும் கூடும் என்பதனை நான் மறுக்கவில்லை. உடையாது என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். அதற்கான காரணங்கள இங்கு சுருக்கமாகச் சொல்கிறேன்.

பாகிஸ்தானின் தலைவிதியை மூன்று நாடுகள் தீர்மானிக்கின்றன.

அதில் முதலாவது சவூதி அரேபியா. சவூதி அரசர்கள் தங்கள் நாட்டுக்குள் உள்நாட்டுப் பிரச்சினையோ அல்லது ஈரான் மூலமாக தாக்குதல் நடந்தாலோ தங்களைக் காப்பாற்ற வல்லவர்கள் பாகிஸ்தானிய ராணுவத்தினர் மட்டுமே என இன்றைக்கும் நம்புகிறார்கள். அதெற்கென பல பில்லியன் டாலர்களை சவூதி அரசாங்கம் பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுக்கிறது. அதற்கும் மேலாக பாகிஸ்தான் உபயோகிக்கும் பெட்ரோலிய எண்ணெயின் பெரும்பகுதியை இலவசமாகக் கொடுக்கிறது சவூதி அரேபியா.

இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கிலான பாகிஸ்தானிய ராணுவத்தினர் சவூதி அரண்மனைகளையும், பல முக்கிய இடங்களையும் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அத்தனை எளிதாக சவூதியிலிருந்து வெளியேற்றவும் இயலாது. எனவே சவூதி அரசிற்கு பாகிஸ்தானின் தொல்லைளைக் கண்டும் காணாமலும் இருந்தே ஆகவேண்டிய நிலை. சமீபத்திய அமெரிக்க-ஈரான் தகராறு நிச்சயமாக அரச குடும்பத்தினை சிறிதளவேனும் அச்சப்பட வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலகில் ஷியா-சுன்னி சகோதரக் கொலைச் சண்டைக்கு ஈடாக வேறெந்த சண்டையும் இல்லை. ஒருத்தன் கழுத்தை மற்றவன் அறுக்கக் காலம்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். எனவே சவூதி அத்தனை எழுதில் பாகிஸ்தானைத் தலைமுழுக வாய்ப்பே இல்லை.

இரண்டாவது நாடு அமெரிக்கா. ஆப்கானிஸ்தானத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் படைகளை சேதாரமில்லாமல் வெளியேற்ற பாகிஸ்தானின் அனுமதியில்லாமல் முடியவே முடியாது என்கிற நிலை. ஈரானுடன் தகராறு இல்லாமலிருந்தால் இந்தியா கட்டியிருக்கும் ச்சாபஹார் துறைமுகம் வழியாக அமெரிக்கா கவுரவமாக வெளியேற ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் ஜெனரல் சுலைமானியைக் கொன்றதன் மூலம் அந்த வழி நிரந்தரமாக அடைக்கப்பட்டுவிட்டது.

ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் அத்தனை தாலிபான்களும் பாகிஸ்தானினால் உருவாக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, ஆயுதமளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். அது அமெரிக்காவுக்கும் தெரியும் என்றாலும் அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க இயாலாத சிக்கலில் மாட்டி விழிக்கிறது அமெரிக்கா. எனவே அமெரிக்காவின் குடுமி பாகிஸ்தானின் கையில். என்னதான் உலக வல்லரசாக இருந்தாலும், வீராவேசமாகப் பேசினாலும் இந்த விஷயத்தில் பாகிஸ்தானை மீறி அமெரிக்காவால் “எதுவுமே” செய்ய இயலாது என்பதே உண்மை.

சமிபத்திய ஈரான் தகராறின்போது ஈரானுக்கு எதிராக தங்களி விமான தளங்களையும், துறைமுகங்களையும் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற பாகிஸ்தானின் அறிவுப்பு அமெரிக்க ராணுவத்தையும் அதன் தலைமையையும் நிச்சயம் குஷிப்படுத்தியிருக்கும். எனவே இடியாப்பச் சிக்கலில் இருந்து மீள்வதற்காக இன்னும் சிறிது நாளில் பாகிஸ்தானுக்கு எதை வேண்டுமானாலும் கொடுக்க அமெரிக்கா தயாராக இருக்கும் என்பதே என் கணிப்பு. அமெரிக்க ராணுவமும், பாகிஸ்தானிய ராணுவமும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். இந்திய எதிர்ப்பினையும் அமெரிக்கா உதாசீனம் செய்யும். ஏனென்றால் அமெரிக்கா ஈரானுடனான உறவைத் துண்டிக்கச் சொல்லியும் இந்தியா கேட்கவில்லை போன்ற காரணங்கள் இருக்கின்றன.

மூன்றாவது முக்கிய நாடு அஃப்கோர்ஸ் சீனாதான்.

“சீன-பாகிஸ்தானிய உறவு ஆகாயத்தை விடவும் உயரமானது, ஆழ்கடலைவிடவும் ஆழமானது” என்பது மாதிரியான ஒரு கருத்து முத்து முன்னள் பிரதமரான நவாஸ் ஷெரிஃபிடமிருந்து உதிர்ந்தது. அது உண்மையும் கூட. பணத்தை எண்ணியெண்ணி, நான்குமுறை யோசித்து செலவிடுகிற சீனா, பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து பணத்தை அள்ளி இறைக்கிறது. அதற்கு பதிலாக பாகிஸ்தானின் மிக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாகிஸ்தான் சீனாவுக்குக் கொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் என்கிற வகையில் சீனா அங்கு தனது ராணுவத்தினரையும், ஆயுதங்களையும் கொண்டுவந்து குவித்துக் கொண்டிருக்கிறது.

எல்லோரும் நினைப்பது போல CPEC ஒரு தோல்வியடைந்த் புராஜெக்ட் அல்ல என்பது என் எண்ணம். எதிர்காலத்தை மனதில் கொண்டு மிகுந்த முன்யோசனையுடன் அமைந்த புராஜெக்ட் அது. சீனா இன்றைக்கு குவாதர் துறைமுகத்தை தன்வசம் கொண்டுவந்துவிட்டது. அங்கிருந்து பாகிஸ்தானின் பல பகுதிகளைச் சுற்றி பல நல்ல சாலைகள் சீனா வரைக்கு அமைக்கப்பட்டுவிட்டன. இருந்தாலும் இந்தியா பங்கெடுக்காத சீபெக் வெற்றியடையாது என்பது பாகிஸ்தானிகளுக்கும், சீனர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

பின்னர் எதற்காக சீனா இத்தனை பணத்தை பாகிஸ்தானி கொட்டுகிறது?

அதற்கான பதில் ஆப்கானிஸ்தான் என்பதாகத்தான் இருக்கும். இன்றைய ஆப்கானிஸ்தான் உலகிலேயே கனிம வளங்கள் மிகுந்த நாடுகளில் ஒன்று. மின்சாரத்தால் இயக்கும் எலெக்ட் ரிக்கார்களின் பேட்டரிக்குத் தேவையான லித்தியம் ஆப்கானிஸ்தானில் குவிந்து கிடக்கிறது. உலகில் வேறெந்த நாட்டிலும் இந்த அளவிற்கு லித்தியம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கவில்லை. அதற்கும் மேலாக பல கோடி மெட்ரிக் டன் இயற்கை வாயு ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. தங்கமும், வெள்ளியும், விலையுயர்ந்த ரத்தினங்களும் ஆப்கானிஸ்தானிய மலைப்பகுதிகளில் இருக்கின்றன. இந்த கனிமவளத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று எவருக்கும் தெரியவில்லை. தோராயமாக 1 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான கனிமங்கள் அங்கு இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதற்கும் மேலான அளவுதான் இருக்கும்.

வெறும் லித்தியம் மட்டுமே சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் பணமழையை வரவழைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா எப்போது வெளியேறும் என்று இருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் அமெரிக்காவிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறப்பதற்காக பாகிஸ்தான் காத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கர்கள் வெளியேறியவுடன் தாலிபான் அங்கு ஆட்சியைப் பிடிக்கும். ஏற்கனவே சொன்னபடி தாலிபான்கள் பாகிஸ்தானிய அடிமைகள். அவர்களுக்கு எலும்புத் துண்டை வீசியெறிந்துவிட்டு சீனர்களும், பாகிஸ்தானிகளும் ஆப்கானிய வளத்தைப் பங்கிட்டுக் கொள்வார்கள்.

அதன் காரணமாகவே பாகிஸ்தான் கேட்கிற பணத்தையெல்லாம் அள்ளிக் கொடுக்கிறது சீனா. இனிமேலும் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இதில் இந்தியா செய்வதற்கு, செய்ய முடிவதற்கு எதுவுமில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நிற்கிற தலைவர்கள் எவரும் இன்றைக்கு இல்லை. அவர்களெல்லாம் ஒன்று கொல்லப்பட்டுவிட்டாரகள், அல்லத் உயிருக்கும் பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள். அங்கு ஓடியவர்களும் அல்டாஃப் ஹுசைனைப்போல உயிருக்குப் பயந்து ஒடுங்கிக் கிடக்கிறார்கள். அல்லது இந்தியா அடைக்கலம் கொடுக்கவேண்டும் எனக் கண்ணீரும் கம்பலையுமாக வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

எனவே பாகிஸ்தான் உடைந்து சிதைந்துவிடும் எனக் கனவு காண்பதை இந்தியர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் வலிமையாக இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை. சவூதி அரேபியாவும், அமெரிக்காவும், சீனர்களும் அப்படி நடக்க விடமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பாகிஸ்தான ராணுவத்தைப் போன்றதொரு விசுவாசமான அடிமைகள் தேவைப்படுகிறார்கள்

Series Navigationதமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *