கட்டங்களுக்கு வெளியே நான்

author
0 minutes, 29 seconds Read
This entry is part 3 of 11 in the series 12 ஜூலை 2020

க. அசோகன்

அன்புள்ள அப்பா,

இந்தப் பதிவை என்னவென்று வகைப்படுத்த முடியாத இந்த முயற்சியை நீங்களே முதலில் அறிய வேண்டும் என்ற ஆவலில் இதை எழுதுகிறேன். இதனை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு முதலில் இருந்தது. ஆனால் நியாயமான அல்லது தேவையான சில காரணங்கள் கிடைக்காததால் இதை எழுதுகிறேன். எல்லா பொதுக்காரணங்களுக்கும் பின்னால் சில காரணிகள் இருக்கும் என நான் தீர்க்கமாகவே நம்புகிறேன். சில புத்தகங்களின் தீவிரத்தன்மை நம்மை முழுமையாக ஆட்கொண்டு அதன் கருத்துக்களினாலோ நம்மை ஒன்றச் செய்துவிடும். பின் அதுவே நம் கருத்தாக மாறி நாம் அதை எப்பொழுதும் பின்பற்றுபவராகவும் அதன் குறைகளை விடுத்து நிறைகளை மட்டுமே கொள்ளும், “வாதிகள்”, ஆங்கிலத்தில், “ist,-கள் என குறிப்பிடும் நிலையை நாம் எட்டிவிடுவோம். ஆனால் நான் முதலில் இருந்து இந்த விஷயத்தில் மாறுபடுகிறேன். என்னை ஒரு வட்டத்திற்குள் வகைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இதனை ஏன் நான் முன்னெச்சரிக்கையாகச் சொல்கிறேன் என்றால் ஒருவன் என்னுடைய கருத்தினைப் படித்து என்னை எந்த ஒரு “வாதியாகவும்”, முத்திரை குத்திவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே.

இதனை எழுத எனக்கு தூண்டுகோலாயிருந்த ஒரு விஷயம், “ஃபிரான்ஸிஸ் காஃப்கா”, உலக வாசிப்பாளர்கள் மத்தியில் பிரமிக்கக் கூடியவராய் இருக்கும் “காஃப்கா” தனக்கு என்ன வேண்டும் என தன் தந்தையிடம் ஒளிவு மறைவின்றி தெரிவிக்க முடியாமல் இருந்தது. இததைப் பற்றிய தனிக் கட்டுரை ஒன்று “உயிர்மை”யில் வந்ததாக ஞாபகம். கட்டுரையின் தலைப்பு இதுதான் “காஃப்கா, எழுதாத கடிதங்கள்”. தன் கருத்தினைச் சொல்லமுடியாமல் தன் தந்தையின் கடும் கோபத்தினால் மிகவும் துயருற்று குறைந்த வயதிலேயே இறந்து போனவர் காஃப்கா. ஆனால் அவர் தந்தையை ஒரு போதும் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தாமல் தன் இயலாமையை பொருட்டாகக் கொண்டு தன்னைத்தானே அழித்துக் கொண்டவர்.

இரண்டாவது காரணம் சில புத்தகங்களோடு தன் வாழ்வினை தொடர்புபடுத்தி பகுப்பாய்வு செய்யமுடியும் நான் கீழே சொல்லப்போகும் அந்தப் புத்தகங்கள் எனக்கு அப்படியாய்த் தோன்றின. அந்தப் புத்தகங்கள் தான் என் வாழ்வின் இடையீட்டு உருவகமாகக் கொண்டு என் கருத்தினை உங்களிடம் இயன்ற அளவில் சொல்லவிழைகிறேன்.

மிக முக்கியமாக நான் இதை எடுக்கக் காரணம் வறட்சியாகிக் கொண்டிருக்கும் என் மொழியறிவு. நான் வேலைக்குச் சேர்ந்தபின் தமிழில் எழுதுவது என்பது இயலாத காரியமாகி விட்டது. இது என் தாய் மொழியை என்னில் கரைத்து விடும் அபாயநிலையை அடைந்துள்ளது. மொழிப் பரவலாக்கம் குறைந்து அது பெரிய வீழ்ச்சியை அடையும் நிலைக்கு இன்று என் தமிழ் அறிவு வீழ்ச்சியடைந்து வருகிறது.

சமீப காலங்களில் நம் நாட்டின் எதேச்சதிகார போக்கிற்கு நம்முடைய மக்களே ஆதரவு அளிக்கும் அபாயம் என்னை விழித்தெனச் செய்தது. நான் என்னுடைய கருத்தினை இங்கு பதிவு செய்யவும் அதுவே என்னைத்தூண்டியது.

II

இது இரு புத்தகங்களின் மதிப்புரையோ அல்லது விமர்சனமோ அல்ல. மாறாக அவை நம்மை நோக்கி எழுப்பும் குரல்களுக்கு நாம் உண்மையோடு என்ன பதில் சொல்ல வேண்டும் அல்லது சொல்லப் போகிறோம் என்பதுதான்.

1. ரிச்சர்டு டௌகின்ஸ் எழுதிய,

“The God Delusion,” இன்னொன்று அருண் ஷோரி எழுதிய

“Does he know a Mother‟s heart? How suffering Refutes Religion,”

 இந்த இரு புத்தகங்களும் வெகு நாட்களுக்கு முன்பே வந்து விமர்சனங்குள்ளான மிகப் பிரபலமான புத்தகங்கள். இவ்விரண்டு புத்தகங்களும் முறையே 2006, 2011-ல் வெளிவந்தவை. இவ்விரு எழுத்தாளர்களும் நான் முன்னரே வெளிப் படுத்திய “வாதிகள்”. அதாவது தான் கொண்ட கொள்கையில் விடாப் பிடியாகக் கொண்டு எதிர்த்தரப்பு வாதத்தினைக்

கேட்க விரும்பாதவர்கள். இந்த இரு நூல்களிலும் வந்த செய்திகள் பல எழுத்தாளர்களால் கொண்டாடப் பட்டவை. இவை பாராட்டப் பெற்று விமர்சனப் படுத்தப்பட்ட பின்னரே இதை நான் படிக்க நேர்ந்தது. நான் படித்த விமர்சனத்தை பொது வகைமையில் சொல்ல விரும்பினால் இப்படிச் சொல்லலாம். முதல் நூல் கிட்டத்தட்ட நம் திராவிடர் கழக நாத்திகக் கொள்கையை முன்னெடுத்துச் செல்கிறது. செயல்முறை அறிவியல் கொண்டு கடவுளை அடைய முடியும் என்கிற வாதத்தை வைத்து, நம்பிக்கை கொண்டவர்களை பகடி செய்வதாக உள்ளது.

2. இரண்டாவது நூல் கடவுளிடம் நேரடியாக என் பிரச்னைக்கு என்ன தீர்வு? என வெகுண்டெழுந்து கேட்பதாகவும். சில சமயங்களில் இரந்து கேட்பதாகவும் கொள்ளலாம் என்பதே பொதுவாக இந்த நூல்களைப் பற்றி என் விமர்சனம் அல்லது மதிப்புரை எழுதியோரின் கருத்து. நானும் இதை சற்று வித்தியாசமாக ஏற்கிறேன்.

““The God Delusion” -புத்தகத்தில் டௌகின்ஸ் நேரடியாக தன் வாதத்தினை முன்வைக்கிறார் :     அதாவது தமிழகத்தில் திராவிட கழகங்களின் பகுத்தறிவுப் போராட்டத்தில் கடவுளின் மீதான நம்பிக்கைகளை நேரடியாக அல்லது வெளிப்படையாக பகடி செய்வதன் மூலமாக. ஆனால் டௌகின்ஸ் இவர்களைவிட ஒருபடி மேலே சென்று கடவுள் நம்பிக்கையை விவாதம் செய்யாமல் நம்பிக்கை என்ற வகையில் மனிதனின் அற்பத்தனங்களை கேள்வி கேட்டு எழச் செய்கிறது.

„மதம்‟ எந்தவொரு சமூகத்திலும் நல்விளைவு என்ற பெயரில் நடத்தியவை எல்லாம் அடிமைப் படுத்துதலின் அல்லது பாகுபாட்டியலின் தன்மையை சமூகத்தில் பரவச் செய்கிறது. தன்னம்பிக்கையின் தீவிரத் தன்மையால் மற்றவற்றை வெறுக்கும் அல்லது அதனை அழிக்கும் முனைப்பில் மனிதன் இறங்குகிறான். மதம் அல்லது கடவுள் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். முன்னதாக மதம் என்னும் நீரோடை அதன் பாதையை முழுவதுமாக அறிந்து பரவி தன் நிலப்

பரப்பினை ஆக்கிரமித்த பின் அதில் கடவுள் என்னும் ஓர் உருவகத்தை அதில் உலாவவிட்டு மனிதனின் முழு நம்பிக்கையைப் பெறுகின்றது.

மேலே சொன்ன இவ்விஷயங்கள் சாதாரணமாக எல்லா நாத்திகனாலும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் டௌகின்ஸ் அவர்களிடத்தில் இருந்து வேறுபடுவது, இந்த அடிப்படைத்தன்மை எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு இவர்களின் மூளையை மழுங்கச் செய்கிறது என்பதனைக் குறித்த கவலையாகும்.

டௌகின்ஸ் சில கூறுகளை முன்வைக்கிறார். எந்த மதமும் தனி மனிதனின் மூளை சக்தியை பயன்படுத்தவில்லை, மாறாக அது அவனைக் கட்டுப்படுத்துகிறது. அவன் சிந்தனையைப் பறித்து கேள்வி கேட்க விடாமல் மூளை முடக்கத்திற்குக் காரணமாகிறது.

அவரின் ஆகச்சிறந்த வாதங்களில், இது முக்கியமானது என நினைக்கிறேன். “ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறக்கும் பொழுது பெற்றோர் கிறிஸ்துவராக இருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தை கிறிஸ்துவன் இல்லை என்பதை இவ்வுலகம் உணர மறுக்கிறது. பிறப்பிலேயே குழந்தையின் மதத்தினை நிறுவுவதன் மூலம் அதன் சுயத்தினை அழித்து ஒரு பொதுவான தனிமையில் வளரச் செய்வதாகும்.”

டௌகின்ஸ் தான் முன்வைக்கும் வாதங்களில் முதன்மையானது தன் விருப்பத்தைத் துறந்து மனிதர்கள் கடவுளிடம் விசுவாசமாக இருப்பதற்காக ஓர் அற்பத்தனமான அல்லது போலியான வாழ்க்கை வாழ்கிறார்கள். இந்த அபத்தம் இவர்களுடன் நிறைவு பெறப் போவதில்லை. அடுத்த தலைமுறைக்கும் இதைக் கடத்திவிடுகிறாhகள்.

மதம் இதை தனியாக ஏற்காது. மாறாக அது தன் அலகுகளாக உள்ளிருந்து பிரிக்கும். எ.கா. எல்லா மதத்திலும் இருபிரிவுகளோ அல்லது பல பிரிவுகளோ இருக்கும். பின் அது சாதி எனும் நூலைப் பிடித்து யாரெல்லாம் மேலானோர், யார், யார் கீழானோர் என வகைமைப் படுத்தி வானளாவிய அதிகாரத்தை அடையும்.

நேரிடையான இவ்விவாதங்கள் வழியே டௌகின்ஸ் என்னை மிரளச் செய்கிறார். ஆனால் அவருடைய சில கருத்துக்களை என்னால் முழுமையாக ஏற்கமுடியவில்லை. அதற்கான விளக்கத்தை அவரே ஒரு

நேர்காணலில் கூறுகிறார். இதை உங்கள் வாழ்வில் பயன்படுத்தி பின் அதை உற்று நோக்கி அறிய முயலுங்கள் என்கிறார்.

இரண்டாவது புத்தகம் அருண் ஷோரியுடையது. பொதுவாக இவர் புத்தகத்தைப் படிக்க நான் விரும்பியதில்லை. ஏனெனில் இவர் ஒரு பா.ஜ.க. அனுதாபி. அமைச்சரவையில் இடம்பிடித்தவர். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் மேலும் இவருடைய முந்தைய புத்தகமான “False God” என்கிற புத்தகம் அம்பேத்காரைப் பற்றிய முழுமையான குற்றச்சாட்டு ஆவணம். எனக்கு அதில் துளிகூட உடன்பாடில்லை. ஆனால் இந்தப் புத்தக்தைப் பற்றி பல தகவல்கள், கட்டுரைகள் வந்ததால் வாசித்தேன்.

அருண் ஷோரியினுடைய இந்தப்புத்தகம் கடவுள் நம்பிக்கையை எதிர்த்தோ அல்லது அதன் நம்பகத்தன்மை பற்றியோ அல்லாமல் தன் வாழ்வின் கடினமான தருணத்தை மற்றவர்கள் கடவுளின் கண்கொண்டு பார்க்கும் அவலத்தைக் கேள்விக் குறியாக்குகிறது.

அவருடைய 35வயதான மகனுக்கு நடக்க முடியாது. உணர முடியாது. ஒருகண் பார்வை கொண்டவன். வயதிற்கேற்ற தோற்றமின்மை என பல குறைபாடுகளுடைய மகன்பற்றி ஆதங்கங்களின் வழி கடவுளின் இருப்பையும், சக மனிதரின் நேரத்தையும் கேள்விகள் கேட்கிறார்.

இப்படி ஒரு மகனை அடைந்ததற்காக அவர் வருத்தப்படவில்லை. மாறாக அளவுக்குஅதிகமாக அன்பின்வழி அவனை ஆற்றுப் படுத்துகிறார். இவ்வுலக மனிதர்களின் அன்பை விட கடவுளின் அருளோ, ஆசீர்வாதமோ பெரிதில்லை என அவர்களை நியாயமான முறையில் எழச் செய்கிறார். ஒன்றுமறியாத அக்குழந்தையை “அவனின் முற்பிறவி, கர்மா” என்ற பிதற்றலை கடுமையாக சாடுகிறார். அவரின் குடும்பம் அவரின் தியாகத்தை உணர்கிறது. கடுமையான நெருக்கடிகளில் அழ அவருக்கு துணையாக அந்த குடும்பத்தின் ஆதரவு இருக்கிறது.

கடவுளை நம்பாதவர்க்கு வழங்கப்படும் தண்டனை இது எனவும், முன்ஜென்ம பலன்களை அனுபவிக்கிறாhகள் எனவும் பிறர் கூறுவதைக் கேட்டு மதத்தினை நம்பி நீங்கள் அடையும் ஏமாற்றத்தினை விட நம்பாமல் நாம் அடைந்த துன்பம் இலகுவானது என பகடி செய்கிறார்.

புத்தகத்தின் ஒவ்வொரு இடத்திலும் கடவுளின் நிலையாமையை அல்லது இல்லாமையை நேரிடையாக விமர்சனம் செய்யாமல் நடந்த அல்லது சொல்லப்பட்டு வந்த கதைகளின் அறம் சார்ந்த வழியே நின்று தன் கருத்தினைப் பதிவு செய்கிறார்.

வாழ்வை துன்பத்தில் உலவ விட்டு அதில் உழன்றபடியே வாழ்வை ஓட்டியாக வேண்டும் என்ற நெருக்கடியை அளிப்பதன் வழியே கடவுளை உணரமுடியும், உணரவேண்டும் என முன்வைப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என சுட்டிக்காட்டுகிறார்.

வெள்ளைமனம் கொண்ட தன் மகனுக்கு ஒருவேளை மதம் சார்ந்த நம்பிக்கையினால் தான் இப்படி ஏற்பட்டு விட்டது என பிறர் சொல்லி கேட்கையில் தந்தையாக உருகுகிறார். ஒருவேளை அவன் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டால் அவனிடம் கூறவிரும்புவது ஒன்றுதான். இவ்வுலகில் அன்பே மூலதனம் அதைத்தாண்டி எந்தக் கடவுளிடமும் எந்த சக்தியும் இல்லை. உன் தாயின் நிகரற்ற அன்பும் உன் குடும்பத்தின் ஒப்பிலா அரவணைப்பும் இவ்வுலகின் எந்த சக்தியோடும் ஒப்பிடமுடியாது.

நான் இந்தப் புத்தக்தின் வழிகண்டடைவது என்னவெனில் தண்டிக்கும் உரிமை கடவுளுக்குரியதெனில் அவரிடம் நமக்கும் உரிமை உள்ளது. கடவுள், மதம் அதன் சார்புடைய நம்பிக்கையால் நம் சிறகை அல்லது சுய விருப்பினை ஒடுக்கும் அல்லது முறிக்கும் நிலை ஏற்பட்டால் அதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.

III

கடந்த ஒருமாத காலமாக இந்த புத்தகங்கள் பற்றி நான் எழுதவேண்டும் என நினைத்து வந்தேன். ஆனால் சோம்பேறித்தனம் என்னை நிறைய ஆட்கொண்டுவிட்டது. மேலும் என்னுடைய மனவோட்டத்திற்கு நிகராக பேனாவால் இயங்க முடியவில்லை. இப்பொழுது கூட என்னுடைய மனவோட்டத்திற்கு ஓர் அணை போட்டவாறே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை எழுதும்போது எனக்கு கடும் உடல் உபாதை இருக்கிறது. ஆனாலும் என்னுடைய கருத்து தங்களை நேரடியாக சென்று சேரவேண்டும் என்று நம்பியே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நான் முன்னர் எழுதிய பகுதிக்கும் இப்பொழுது எழுதும் இந்தப் பகுதிக்கும் நேரிடையாக எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் புத்தகங்கள் சில அதிர்வலைகளை உருவாக்கி அதனால் ஏற்படும் சில தர்க்கபூர்வமான கேள்விகளை நம்மை நோக்கி எழுப்புகின்றன. நாளை என் வாழ்வினை அதன் கேள்விகளுக்கு விடை சொல்லாமல், நான் சொல்லாதவற்றை அல்லது உங்களிடம் சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டும் என நினைத்தே இதை எழுதுகிறேன்.

நான் கடைசியாக எழுதிய கதையை ஒருமுறை உங்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன். எனக்கே அது மறந்து விட்டாலும் அதன் மையக் கருத்து என்னுள் என்றும் இருக்கும். அந்தக் கதையில் தன் தந்தையைப் பற்றி ஆவேசமான எண்ணத்துடன் இருக்கும் ஒருவர், அதாவது அவரின் இறப்பை பெரிதாக பொருட்படுத்தாமல் அவரின் இல்லாமையை உணராமல், அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கும் மனநிலை கொண்டவன். ஒருநாள் தன் அப்பாவின் பழைய நண்பர் ஒருவரை அவன் சந்திக்கிறான். அவர் தன்னுடைய பிள்ளையைப் பற்றி அங்கலாய்ப்புடன் தொடங்கி, பின் மெல்ல அவர் குற்றவாளிக்கூண்டில் நின்று தன் மகனுக்கு என்ன தொல்லை கொடுத்தேன் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க அவன் மெல்லிய புன்னகையுடன் நீதிபதியின் இருக்கையில் இருப்பதாகக் காட்சிகள் அவன் மனக்கண்ணில் விரியும்.

ஒரு கணத்தில் அவர் உடைந்து போய் தன்னுடைய மகன் இவ்வுலகைவிட்டு நிரந்தரமாக பிரிந்து விட்டான் எனும்போது, அவன் தான் ஒரு நீதிபதியாக அவர் மீது கோபமும், கதை கேட்பவனாக அவர்மீது பரிதாபமும் கொள்கிறான். இருவேறு நிலைகளில் இருக்கின்ற அவன் அவரின் ஒப்புதல் வாக்குமூலம் விரிய விரிய தன்னுடைய நிலையினை மறக்கிறான். அதன் உச்சமாக அந்த முதியவர் அவனின் கரம் பற்றி, “எம்புள்ள என்ன இருந்தாலும் அவனை அப்படி சொல்லியிருக்கக் கூடாது அல்லவா. அவன் இப்ப மட்டும் இருந்தா உன்னை மாதிரியில இருப்பான். அவன்கிட்டே இந்த அப்பா நடந்துகிட்டது தப்புதான்! என்று ஓ‟ன்னு அழுதிருப்பேன்”.

அவன் கரம் பற்றி அந்த பெரியவர் சொன்னதும் அவன் நீதிபதியின் இருக்கையில் இருந்து குற்றவாளிக்கூண்டில் அருகே நிற்பதாய்த் தோன்றும். கதையின் முடிவு இவ்வாறாக இருக்கும்.

அந்தப் பெரியவர் போய்விட கடைக்கு வெளியே மழை பெய்யும் சூழலில் அவனுள் ஓர் எண்ணம் அந்த மழையினுடாக வெளியில் செல்ல வேண்டும் என தோன்றும். ஏனெனில் மழையில் நனையும் போது நம் கண்ணீர் தெரியாது. என கூறி மழையில் செல்வான்.

இங்கு யாரும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியது இல்லை. இதன் காரணம் அப்பா-மகன் இடையே வீழும் திரைச்சீலையே ஏனோ நமக்குள் அது பெரிதாகவோ அல்லது வெளிப்படையாகவோ விழவில்லை. இருப்பினும் நான் சொல்ல வேண்டியவற்றை உங்களிடம் சொல்லித்தான் ஆக வேண்டும் என நினைக்கிறேன்.

என்னுடைய திருமண விஷயத்தில் நீங்கள் எடுக்கின்ற எல்லா காரியங்களும் எனக்கு திருப்தியைத் தருகிறது. என்னுடைய விருப்பத்திற்கு இணங்க நீங்கள சாதியை மறுத்து எனக்காக வரன் தேடுகிறீர்கள். உதாரணமாக நான் சொன்னதற்காக அந்த பெண்ணையே சென்று பார்த்தீர்கள். ஆனால் உண்மையில் நான் இதையெல்லாம் பற்றி கவலைப்பட்டதே இல்லை. ஏனெனில் அதற்கு சம்சாரத்திற்கு தேவையான அதீத பொறுமையும் பொறுப்பும் எனக்கு உள்ளதா? என என்னை பலமுறை நானே கேட்டுக் கொண்டதுண்டு.

உங்களின் விருப்பம் எதுவோ அதையே நான் இதுநாள் வரை செய்து வந்துள்ளேன். எனக்கு எல்லா வகையிலும் முழு சுதந்திரம் கொடுத்து என் முடிவினையே என் வாழ்வில் எடுக்க எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளீர்கள். இதுநாள் வரையிலும் இனிமேலும் நான் பார்த்ததிலேயே நீங்கள் தான் சிறந்த அப்பா.

அதன் காரணமாகவே இதை நான் சொல்ல விழைகிறேன். இல்லையென்றால் கண்டிப்பாக உங்களிடம் இதைப்பற்றி சொல்லியிருக்கமாட்டேன். சில நாட்களுக்கு முன்னால் உங்கள் கைப்பேசியில் யதேச்சையாக ஒரு பெண்ணை நான் பார்த்தேன். எனக்கும் அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது. எனக்கு அந்தப் பெண்ணின் மீது ஒரு விருப்பம் இயல்பாகவே உண்டானது. அந்தப் பெண் யார்? அவள் பேர் என்ன? என்பது எல்லாம் கூட எனக்கு தெரியாது. என்னுடைய கணிப்பு சரியாக இருப்பின் நம் உறவினர் திரு. மோகனசுந்தரம் அவரின் உறவுக்காரப்பெண் என நினைக்கிறேன்.

பின் ஒருநாளில் நீங்களே அதைப்பற்றி சொன்னீர்கள். எனக்கும் அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது. அவர்கள் வீட்டில் சரி என சொல்லிவிட்டார்கள். ஆனால் நம் சோதிடர்தான் மறுக்கச் சொல்லிவிட்டார். உண்மையில் அதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் ஒருவேளை நான் அதை உங்களிடம் சொல்ல மறுப்பதன்மூலம் என்னையும், உங்களையும் நான் ஏமாற்றிக் கொண்டே இருந்தவனாக எனக்குப் பட்டது. மேலும் கடந்த ஒரு மாத காலமாக இருந்த இந்த புத்தகங்களின் மீதான தாக்கம் என்னை அதன் உச்சநிலையை அடைந்து என்னை இன்று எழுதவைத்து விட்டதாய்த் தோன்றுகிறது.

என்னுடைய நிலையைத் தெளிவாக வரையறுத்தபின் உங்களின் நம்பிக்கையோடு நான் உங்களோடு விளையாடுவதாகவோ அல்லது அதனை மறுதலிப்பதாகவோ நீங்கள் எண்ணவில்லையெனில் இதை நீங்கள் மேற்கொண்டு படிக்கலாம்.

IV

என் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே நான் என் முடிவுகளின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன். நீங்கள் எனக்காகவே அதிக சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளீர்கள். ஏனெனில் மற்ற இரு சகோதரிகளும் என்னைவிட படிப்பில் கெட்டிக்காரிகள். எந்தவொரு கோட்பாட்டுடனோ அல்லது சித்தாத்தங்களுடனோ நான் உறவு கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறேன். ஏனெனில் அது மற்றொரு கோட்பாட்டை வெறுக்கச் செய்யும். நான் எல்லோருக்கும் பொதுவாய் இருக்கவிரும்புபவன். மனிதரின் அன்பைவிட எந்த செல்வமும் நம் மதிப்பை உயர்த்தப் போவதில்லை என்கிற நம்பிக்கை உடையவன் நான். அதை நான் கண்டடைய காரணம் நீங்களே. எத்தனை மனிதரின் அன்பையும் நட்பையும் பெற்றுள்ளவர். நீங்கள் எவ்வளவு மரியாதை அடைந்தவர்கள். அதைவிட நம் செல்வம் குறைவானதே.

இதை விதண்டாவாதம் அல்லது வீம்பு என நீங்கள் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இரு நிகழ்வுகளை தங்களுக்கு ஞாபகப் படுத்த விழைகிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கக்கூட தங்களிடம் பணம் இல்லை. ஆகையால் கடன் வாங்கினீர்கள். இதே நீங்கள் என்னுடைய முதுகலைப் படிப்பிற்கு கடன் வாங்காமல் பணத்தைக் கட்டினீர்கள்.

அக்கா கஸ்தூரியின் திருமணத்தின் போது ஒரு சாதாரண மனிதராக முதலில் சிந்தித்து அதை வேண்டாம் என்றவர் பின்னர் ஓர் அப்பாவாக அந்தத் திருமணத்தை நடத்திக் காட்டியவர் நீங்கள்.

இந்த இரண்டும் நிகழ்வுகளையும் ஒப்பீட்டளவில் பார்த்தால் அவை வெறும் நிகழ்வுகள் தான். ஆனால் அதனை உங்களுடன் பயணித்தவன் என்கிற வகையில் அதன் தாக்கம் பெரியது. நான் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்ததில் நாங்கள் மூன்று பேரும் ஓரளவு இந்த நிலையை அடையக் காரணம் எதுவென யோசிக்கையில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் ஒரு நாள் போசம்பட்டி பேரூந்து நிலையத்தில் மழைக்கு ஒதுங்கி நின்ற போது ஒரு நடுத்தர வயது பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் என் நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கையில் உங்களைப்பற்றி சொல்ல, அந்த அம்மா என் அருகில் வந்து கண்ணீர் மல்க, “ஐயாவோட புள்ளையா நீ? நல்ல மனுஷன் அவர். இன்னிக்கு நான் கஷ்டப்படாம நிக்க உங்க ஐயா தான் காரணம்,” என என் கைகளைப் பற்றிக் கொண்டு சாப்பிட அழைத்தார். அவருடைய கணவன் இறந்தபின் வரவேண்டிய நிலுவைத் தொகை சரியாக பெற்றுத் தந்ததற்கு நீங்களே காரணம் எனக் கூறினார்.

காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த அம்மாவின் அன்பும் அவரைப் போன்ற எத்தனை பேரின் அன்பும் ஆசீரும் வாழ்த்தும் பெற்றிருந்தமையால்தான் எங்களின் உயர்வு சாத்தியமானது என்று முழுமையாக நான் நம்புகிறேன்.

எங்களின் பெயர்களையே எவ்வித சாஸ்திரத்துக்கும் உட்படுத்தாமல் எழுத்துக்கள் மேல் கவலைப்படாமல் உங்களின் ஞான ஆசிரியர் ஆல்பர்ட் சார் அவர்களுடைய பொறுப்பில் விட்டவர்கள் நீங்கள். எங்களின் பெயர்கள் ஜாதகத்தைப் பார்ப்பவர்கள் எங்களின் பெயர்கள் தப்பாக அமைந்துவிட்டது எனச் சொன்னாலும் மாற்றுகிறவரா நீங்கள்? ஏனெனில் ஆல்பர்ட் அவரின் அன்பு உங்களை அன்று அதுபற்றியெல்லாம் கவலைப்படவைக்கவில்லை.

இன்றும் அது அப்படியாகவே இருக்க வேண்டும் என நம்புகிறேன். என் வாழ்வினை 28 வருடம் பார்த்து வளர்த்த உங்களிடம் கூற விழைகிறேன். ஆனால் எனக்குத் தெரியாத ஒரு சோதிடக்காரரை நம்பி

நான் என்னுடைய மீதம் இருக்கின்ற என்னுடைய வாழ்வை ஒப்படைப்பதா என்பது என்னுடைய சந்தேகம்.

என்னுடைய வாழ்வில் ஏற்ற இரக்கங்களைப் பார்த்த நீங்கள் சொல்லுங்கள் நான் கட்டங்களின் படித்தான் நடந்தேன் என்று. என்னுடைய கோட்பாட்டினை அல்லது என்னுடைய நிலைப்பாட்டை என்றும் தங்கள் முன் ஒளிவு மறைவின்றி உங்கள் முன் சமர்ப்பித்து விடுவேன் என்று அதனைத்தான் நமக்குள் திரைச்சீலை போன்று ஏதோ ஒரு இடைக்காரணி வரப் போவதில்லை வந்துவிடவும் கூடாது.

எனக்காக எப்பொழுதுமே துணிந்து முடிவு எடுத்த நீங்கள் வேலையை விட்டு நீங்குகிறேன் என்று நான் சொன்னபோது என்னுடன் இருந்தவர் நீங்கள். இப்போது சாஸ்திரங்களை சோதிடங்களை விட என்மேல் உள்ள நம்பிக்கை பெரிதென நான் நம்புகிறென். அந்த நம்பிக்கையை இன்றளவும் எந்த குந்தகமும் இல்லாமல் காப்பாற்றியிருக்கிறேன் என நம்புகிறேன்.

ஒருவேளை நான் சொல்வது இளமை வேகத்தில் இருக்கலாம். ஒரு அப்பாவாக பக்குவப்பட்டு பேசும்போது என் நிலைமை மாறலாம். மனிதர்கள் எல்லோரும் மாறக்கூடியவர்கள்தான். ஆனால் என் இந்த பக்குவம் கடந்த காலத்தைக் கண்டு நோகாது எதிர்காலத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும்.

இன்றைக்கு நான் எழுதவேண்டிய காரணம் என் நிலைப்பாட்டில் ஓர் ஊசியின் இடைஞ்சலாய் இதை நான் உணர்கிறேன். என்னை தெளிவான ஓர் இளைஞனாகவே உங்களிடம் காண்பிக்க விரும்புகிறேன்! உங்கள் ஜோசியக்காரர் சொன்னாரென்று கேட்டீர்கள். ஏதாவது உனக்குத் தெரிந்த பெண்ணை நேசிக்கிறாயா? என்று. அன்று எனக்கு அப்படியாரும் இல்லை. என்னை நோக்கி வந்த பெண்களை திருப்பி அனுப்பியவன் நான். இன்று உங்களிடம் இதை சொல்ல விழைகிறேன்.

காந்தியின் வாக்கியம் ஒன்று, “நான் இருக்கும் மேடையிலேயே நான் பேசிமுடித்தபின் என் குரலை விட காத்திரமாக என் கருத்தை மறுத்து ஒருவர் பேச வேண்டும். அதுவே உண்மையான கருத்து சுதந்திரம்!” எனக்கு தெரிந்து இதை முழுமையாக பின்பற்றுபவர் நீங்கள் என்பதால்தான் இதை எழுதுகிறேன்.

நாம் கண்ட அந்த ஒப்பில்லாத அன்புக்கு முன் இந்த சாஸ்திரங்களுக்குள் இருந்து கொண்டு அதனை ஒத்த சிந்தனைக்கு இடமளித்து தன் விருப்பத்தினை தெரிவிக்காமல் போவது அபத்தம் என நான் நினைக்கிறேன். இத்தனை அன்பைப் பெற்றுக் கொண்டபின் என்ன நடந்தாலும் அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு பயணிப்பதே வாழ்க்கை. அதை விடுத்து அதனை இன்னொருவர் கையில் என் எதிhகாலத்தைக் கொடுத்து எனக்கு என்ன நடக்கும் என இப்போதே தெரிந்து கொள்ள விழைவதில் எனக்கு உடன்பாடில்லை.

என்றும் உங்கள் அன்பு மகன்,

க. அசோகன்.

Series Navigationஅவளா சொன்னாள்..?வெகுண்ட உள்ளங்கள் – 7

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *