ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்று

0 minutes, 17 seconds Read
This entry is part 11 of 20 in the series 19 ஜூலை 2020

குமரி எஸ். நீலகண்டன்

                        நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை சேர்க்கிற உலகம் வியக்கும் ஆளுமைகளையும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவராவது இந்த நொடியில் பேசிக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருப்பர். காற்று போல உலகில் பரவி புகழுடன் வியாபித்து நிற்பவர்கள் இந்த ஆளுமைகள். அப்படி என்றால் இந்த ஆளுமைகளின் பெயர்கள் அவர்கள் பிறந்ததிலிருந்து உலகில் எத்தனை தடவை உச்சரிக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கும் பூமிக்குமிடையேயான தூரம் போல்தான் அதனுடைய எண்ணிக்கை நீளமாய் இருக்கும். அவர்கள்தான் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்கள்.

 ஆனால் நூற்றாண்டுகள், ஆயிரமாண்டுகளை கடந்த இந்த ஆளுமைகளின் பெயரை உச்சரித்த எண்ணிக்கைகளை விட நான்கு மாதங்களில் உலகினில் அதிகமாய் உச்சரிக்கப் பட்ட ஒரு பிரபலமான கொடுங்கோல ஆளுமைதான் கொரோனா. உலகின் ஒவ்வொரு மனிதனும்  கொரோனா கொரோனா என்றே சுவாசித்துக் கொண்டிருக்கிறான். இப்படி அகமும் புறமுமாய் மனிதர்களைச் சுற்றி ஒரு மாபெரும் இடியாப்பமாய் மனிதர்களுக்குள் சுருண்டும் பரந்தும் பறந்தும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது மாபெரும் கொரோனா.

            மாதங்கள் பல கடந்தும் நம் நாட்டில் இறப்பு விகிதம் உலக அளவில் ஒப்பு நோக்கும் போது குறைவாக இருந்தாலும் கொழுந்து விட்டு எரிகிறது கொரோனா என்ற தீ. ஒழுங்கிற்கும் ஒழுங்கீனத்திற்குமிடையே உள்ள உரசலில்தான் இந்த கொடியத் தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.

ஒரு சுய ஊரடங்கில் தொடங்கி ஐந்தாவது ஊரடங்கையும் நாம் கடக்கப் போகிறோம். நமக்கு ஊரடங்கைப் பற்றி என்ன தெரியும்? கொரோனாவிற்கு முன் ஊரடங்கு என்றால் என்னவென்று நினைத்தோம்? நாம் எல்லோருமே காஷ்மீரில் ஊரடங்கு என அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். அப்போது நமக்கு ஊரடங்கு என்றாலே ஒரு கடுமையான பிம்பம் இருந்தது. வீட்டை விட்டு அவ்வளவு எளிதாய் வெளியே வர இயலாது. வந்தால் பாதுகாப்பு படையினர் சுட்டு விடுவார்கள். ஆளரவமில்லாத தெருக்களும் அச்சம் நிறைந்த வெளியுடனான நகரமும்தான் நமக்கு ஊரடங்கின் சித்திரமாக மனதில் தெரிந்தன.

நாம் 144 தடை உத்தரவை மட்டுமே பார்த்தவர்கள். நமது பிரதமர் ஜனதா ஊரடங்கை அறிவித்ததுமே ஓரளவு நாமும் ஊரடங்கிற்கு தயாரானோம். அதன்பின் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பலர் ஊரடங்கை மிக பிரமாண்டமாய் எதிர்பார்த்தார்கள்.

தொடரும் ஊரடங்கு என்ற அச்சத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்காக அவசரப்பட்டு வெளியே வந்தவர்கள் சிறிது சிறிதாய் சட்டத்தை வலுவிழக்கச் செய்து பின் சந்தையில் கூடினார்கள். கேளிக்கைகளுக்கான கோரிக்கைகள் கூட வைத்தார்கள். ஊரடங்கு இருந்தும் அதை ஒரு அடங்காத ஊர் போல் மாற்றி விட்டார்கள்.

கடவுள் நம்மிடம் நேரில் காட்சி தந்து அன்புடன் அறிவுரை கூறினால் கூட நாம் கடவுளையும் நம் தரத்திற்கு மாற்ற முயற்சிப்பவர்கள். அதனால்தான் தற்போது பலரும் கொரோனா என்ற சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் காவல்துறையினர் பதமாய் எச்சரிக்கை செய்தார்கள். அபராதம் விதித்தார்கள். வண்டியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்தார்கள். மக்களை மனிதாபிமானத்தோடு நடத்தினார்கள். மக்களிடம் கெஞ்சினார்கள். ஆடல், பாடலென பலவித உத்திகளில் மக்களுக்கு விழிப்புணர்வெல்லாம் நடத்தினார்கள். என்ன ஆனது? மக்கள் ஊரடங்கின் பொருளையே மாற்றி விட்டார்கள்.

பொது இடங்களில் எச்சில் துப்புவதிலிருந்து சிறுநீர் கழிப்பது வரை எதையும் மக்கள் மாற்றிக் கொள்ளவில்லை. முகக் கவசமணியாமலேயே பெரும்பாலான மக்கள் வாகனங்களில் சுற்றித் திரிந்தார்கள். பொது இடங்களில் குறிப்பாக சந்தைகளில் நெருக்கமாக மக்கள் குவிந்தனர். தும்மல், இருமல், மூக்கை சிந்தி, பொது இடத்தில் துப்பி தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றை ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் இலவசமாய் விநியோகித்தார்கள். இந்த விஷயத்தில் சாதி, மத, இனப் பொருளாதார பேதமின்றி பெரும்பாலான மக்கள் சுய நலத்துடன் இந்த ஊரடங்கை ஒரு விடுமுறைக் கால பொழுது போக்காகவே கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முகக் கவசத்தை முறையாக அணிகிறவர்கள் வெகு சிலர். சிலருக்கு மூக்கிற்கு கீழே வாயை மட்டும் மூடி இருக்கிறது முகக் கவசம். பலரும் கைத் துண்டை முகத்தில் கட்டிக் கொண்டு வெளியே திரிகிறார்கள். சிறிது நேரத்தில் அந்த கைத் துண்டை அவிழ்த்து முகத்தை துடைத்து விட்டு மீண்டும் அதே துண்டால் முகக் கவசமாய் கெட்டிக் கொள்கிறார்கள். முதலில் வெளியே இருந்த துண்டின் பகுதி இப்போது மூக்கையும் வாயையும் அரவணைத்திருக்கும். பலரும் முகக் கவசம் அணியாமலிருப்பதை பார்த்து மற்றவர்களுக்கும் தவறான தைரியம் வந்து விடுகிறது.

சமீபத்தில் சென்னையில் ஊரடங்கு நாட்களில் வெளியே வந்த போது ஒரு தேநீர் கடையில் எல்லோரும் கூட்டமாய் தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த ஒருவர் ஒற்றைக் காலில் நின்று கொண்டே இன்னொரு காலணியின் அடிப்பாகத்தை கைகளால் தடவி ஏதாவது முள் குத்தி இருக்கிறதா என்பது போல் பார்க்கிறார். பக்கத்தில் ஒரு பழக் கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த போது பக்கத்தில் நின்ற மனிதர் முகக் கவசம் அணிந்திருக்கிறார். கையில் இரண்டு மூன்று வயதில் ஒரு குழந்தையை இடுப்பில் சுமந்து கொண்டு வந்திருக்கிறார். குழந்தைக்கும் முகக் கவசம் அணிவித்திருக்கிறார். கடையில் வெளியே வைத்திருந்த திராட்சை பழக் கொத்திலிருந்து ஒரு பழத்தை எடுத்து அவர் குழந்தையின் முக கவசத்தை உயர்த்தி அப்படியே அதன் வாயில் ஊட்டி விட்டார். நான் அவரை எச்சரிப்பதற்குள் எதிர்பாராமல் எல்லாமும் முடிந்து விட்டது. அவரைப் பார்த்த போது படித்தவர் மாதிரிதான் இருந்தது. ஆனால் பலரும் படிக்காதவர்களை விட மோசமாகவே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மளிகைக் கடைக்கு சென்ற போது நான்கைந்து பேர் சமூக இடைவெளியை சிறிதும் கடைபிடிக்காது கூட்டமாகத்தான் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாங்கிப் போகட்டுமென்று பொறுமையாக காத்திருந்தேன். என் பின்னால் வந்தவர்களிடம் கண்டிப்பாக  சமூக இடைவெளியுடன் நிற்கும் அளவிற்கு என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். என் முறை வந்ததும் வாங்க வேண்டியப் பொருட்களை கடைக்காரரிடம் கூறிக் கொண்டிருந்தேன். அப்போது என் பின்னால் நின்ற ஒருவர் முகக் கவசத்தை கழற்றிக் கொண்டு எச்சில் தெறிக்கிற அளவிற்கு சப்தமாய் அவரிடம் சத்து மாவு இருக்கிறதா எனக் கேட்டார். நான் உடனடியாக ‘’ஏங்க! முகக் கவசத்தோடு பேச வேண்டியதுதானே. ஏன் முகக் கவசத்தை கழற்றறீங்க’’ என்றேன். உடனே அந்த ஆசாமி அதற்கு கூறிய பதில் ‘’ஓஹோ! நாட்டிலே எல்லாம் ஒழுங்காத்தான் போய் கிட்டிருக்கு‘’ என்று. இனி நான் அவரிடம் விவாதித்தால் இன்னும் அவருடைய உள் எச்சில்கள் அவரது அகங்கார பதில்களோடு என்னைச் சுற்றி பீய்ச்சப்படும். அதனால் மிகுந்த மரியாதையுடன் அவரை கைகளால் கும்பிட்டு விட்டு விடைபெற்றேன்.

பல இடங்களிலும் நடைபாதைகளில் பலரும் தாயக் கட்டம், சீட்டு விளையாடும் காட்சிகளும் நான் காண இயன்றது துர்பாக்கியமான அனுபவங்கள். ஊரடங்கை நமது இளந்தலைமுறையும் இப்படிதான் பார்த்து கொண்டிருக்கிறது. இனியொரு காலத்தில் ஏதாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் தமிழகத்தில் இப்போது கடைபிடிக்கும் நடைமுறையைத்தான்  வளரும் தலைமுறை ஊரடங்காய் புரிந்திருக்கும்.

பொது இடத்தில் புகைபிடிக்கக் கூடாதென்பது சட்டம். பொது இடத்தில் பயமின்றி புகை பிடிக்கிறார்கள். பான் பராக் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாதென்பது சட்டம். சாலைகளில் பான்பராக்  துப்பல்கள்தான் அதிகம். சாலைகளில் பொது இடங்களில் பெரிய பேனர்கள் வைக்கக் கூடாது என நீதிமன்றம் எச்சரித்தும் நம் அரசியல் கட்சிகள் அதை மதித்ததாய் சரித்திரமில்லை. இவைதான் மிகவும் மோசமான ஒழுங்கீனமென்ற மோசமான சமூகத் தொற்று. தனது சுயநலத்திற்காக சட்டத்தை மீறுதலையே தனது பயிற்சியாய் கொண்டிருக்கிறார்கள். அந்த ஒழுங்கீனமென்ற சமூகத்தொற்றுதான் நம்மை கொரோனாவிலிருந்து விடுபடாமல் பிணைத்து வைத்திருக்கிறது.

இதற்கிடையில் சமூக வலைத்ததளங்களில் இன்னொரு வைரலாய் கொரோனாவைப் பற்றிய செய்திகள் வித விதமாய் வலம் வருகின்றன.  சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமாகவும், இன்னொரு பக்கம் கொரோனா குறித்த அச்சத்தையே ஏதோ ஒரு மூட நம்பிக்கை போல்  எதிர்மறையாகவும் சித்தரிக்கின்றன அவை.

ஓய்வின்றி தன்னுயிரை பணயம் வைத்து  மாதக் கணக்கில் கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் ஒரு பக்கம். ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு கொரோனாவிற்கு செய்யும் பரிசோதனைகளை தேவையற்றது போலவும், ஊரடங்கே அவசியமற்றது போலவும், அநாவசியமான அச்சத்தால் மக்களை அதிரவைப்பது போலவும் விமர்சித்து வாட்ஸ்அப் வீடியோக்களில் வைரலாகிற அரைகுறை மருத்துவர்கள் இன்னொரு பக்கம். இதையெல்லாம் பார்த்து பகிர்ந்து நல்லது எது, கெட்டது எது, உண்மை பொய் எதனையும் பகுத்தறியத் தெரியாமல் குழம்பி வலம்வரும் மக்கள் இன்னொரு புறம். இதுவும் ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்றின் விளைவுதான்.

கொரோனா  நமது சமூகத்தின் போக்கை எப்படி மாற்றி விட்டது பாருங்கள். கொரோனாவால் கல்யாணங்களெல்லாம் பத்து இருபது பேர் சூழ முடிந்து விடுகிறது. எளிமையான கல்யாணம் ஆரோக்கியமானதுதான். ஆனால் கல்யாணங்கள் முடங்கியதால். சமையல் வேலை செய்பவர்களின் தொழில் முடங்கியது. கல்யாண புகைப்படம், வீடியோ எடுப்பவர்கள் வேறு எந்த தொழில் செய்யலாமென சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். கல்யாண மேடை அலங்காரம் செய்து பிழைத்தவரின் வாழ்க்கை அலங்கோலமாகி விட்டது. கூடி இருந்து சாப்பிட்ட ஹோட்டல்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. துணிவோடு துணிக்கடையைத் திறந்தாலும் அதற்குள் நுழைய மக்களுக்கு துணிவில்லை. காரணம் கொரோனாத் தொற்று மட்டுமல்ல. கையில் பணமில்லை. சுற்றுலாத் துறையும் அதைச் சார்ந்த தொழில் செய்தவர்களும் செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும். நான் கூறுவது ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே.

ஒழுங்கீனமென்ற சமுகத்தொற்று உண்மையில் கொரோனாவை விடக் கொடியது. சமூகத்தில் ஒழுங்கை கடைபிடிக்கிற பெரும்பான்மை மனிதர்களையும் சிதைக்கும் வல்லமை கொண்டது. நமது நாட்டின் எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பனியில் உறைந்து எல்லையைக் காக்கும் பணியில் தன்னுயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள் பலர். நாட்டின் உள்ளே சாமான்ய மக்களின் உயிருக்காக தன்னுயிரையும் பொருட்படுத்தாது இரவு பகல் தூங்காது மருத்துவ சேவைசெய்து வருகிற சுகாதாரத் துறை பணியாளர்கள் பலர். அவர்களையெல்லாம் நாமனைவரும் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒழுங்கீனமென்ற சமூகத் தொற்றை மக்கள் ஒருங்கிணைந்து நினைத்தால் ஒரே நிமிடத்தில் கூட ஒழித்து விட முடியும். இதை கட்டுப்பாடோடு கடைபிடித்தால் நாமிருக்கும் பகுதி கொரோனாவிலிருந்து ஒரே மாதத்திற்குள் முழுதாய் விடுபட்டு விடும். நாடே கடைபிடித்தால் கொரோனாவிலிருந்து பாரதம் மீண்டு விடும். ஒழுங்கீனமென்ற இந்த சமூகத் தொற்றை ஒழித்தால் கொரோனா தானாகவே ஒழிந்து விடும். அதற்கான மருந்து நம் எல்லோரிடமும் இருக்கிறது. அதற்கு நாம் கடைபிடிக்க வேண்டியது சுயக் கட்டுப்பாடு. கட்டுப்பாடில்லாமல் உலகில் எதுவுமே இயங்க இயலாது. பூமியே கூட இயல்பாகவே ஒரு கட்டுப்பாடில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. இயற்கை தனது கட்டுப்பாட்டிலிருந்து விலகினால் உலகம் என்ன ஆகும்.

வைரஸ் தொற்றின் சங்கிலியை உடைக்க வேண்டுமென்று பிரதமரிலிருந்து மருத்துவர்கள் வரை ஊடகங்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த சங்கிலியென்ன ஆயிரம் டன் இரும்பை உருக்கி செய்யப்பட்ட சங்கிலியா என்ன?

நம் மக்கள் ஒவ்வொருவரும் தேசப் பற்றோடு உறுதியாக நம் அரசு சொல்லும் விதிகளை கடைபிடித்தால் 15 நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் வைரஸ் சங்கிலியை உடைத்து கொரோனாவையே நம்மால் பூரணமாக அழித்து விட இயலும். அதற்கான விதிமுறைகள் அவ்வளவு கடினமா என்ன?

            வாயையும் மூக்கையும் முழுதாய் மூடுகிற அளவில் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. மனிதர்களிடையே உரிய அளவில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது. குடும்பத்தோடு இருங்கள். இதற்கு மேல் என்ன?

தமிழர்களென்றாலே, வந்தாரை வாழ வைக்கும் உயர்ந்த இயல்புள்ள தமிழ் சமூகம், விருந்தோம்பலுக்கு பெயர் போன தமிழ் சமூகம், உலகின் மூத்த மொழியான தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ் சமூகம், கலை பாரம்பரியமிக்க தமிழ் சமூகம், அமைதியையே எப்போதும் விரும்பும் தமிழ் சமூகம் என்று நமது பெருமைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நம் சமூகத்தில் சிலரிடம் இருக்கிற கட்டுப்பாடின்மை, அரசின் சட்ட விதிகளை மீறும் தன்மை, இலவச மயக்கம், சுத்தம் சுகாதாரம் பேணல், சமூகப் பொறுப்பின்மை போன்ற ஒழுங்கீனங்கள் நமது உயர்ந்த தன்மைகளை பொது வெளியில் மங்க வைத்து நமது பலவீனங்களை பரவலாய் காட்டும்.

சட்டம் ஒழுங்கில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் தான் தமிழகம் இருக்கிறது. அரசின் சட்ட விதிகளை மதிப்பதிலும் நாம் முன்மாதிரியாக இருந்தால்தான் நமக்கும் நம் தலைமுறைக்கும் பெருமை அளித்ததாக இருக்கும்.

இறுதியாக ஒன்று. கொரோனாவென்ற சுனாமியால் அலைக்கழிக்கப் பட்டிருக்கும் நம் சமூகத்தில் பொறுமையுடன் முக கவசம் அணிந்து பொது வெளியில் துப்பாது, சமூக இடைவெளியை கடைபிடித்து பொறுமையாய் இயங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதரின் கால்களையும் நான் தொட்டு வணங்குகிறேன்.

குமரி எஸ்.நீலகண்டன், M.SC, MA

punarthan@gmail.com

Series Navigationஏமாறச் சொன்னது நானா..ஆயுள் தண்டனை

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *