அரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்

This entry is part 2 of 16 in the series 20 செப்டம்பர் 2020

              

                         சேரநாட்டை ஆண்ட“த்ருட வ்ரதன்” என்ற அரசனுக்கு மகனாய் கௌஸ்துபரத்தினத்தின் அம்சமாய் குல சேகரர் (ஆழ்வார்) தோன்றினார். மூவேந்தர்களையும் வென்று “கொல்லி காவலன்” ”கூடல்நாயகன்” ”கோழிக்கோன்”குலசேகரன் என்னும் விருதுகளைப் பெற்றார். இவருக்கு “த்ருடவ்ரதன்” என்ற மகனும் “இளை” என்ற மகளும் பிறந்தனர். திருமால் அடியார் களை மிகவும் உபசரித்தும் இராமாயண காலக்ஷேபத்தைக் கேட் பதில் மிகவும் விருப்பமுடையவராகவும் அரச போகங்களில் ஈடுபாடு இல்லாமலும் வாழ்ந்து வந்தார்.

                                           காலம் செல்லச்செல்ல அரச

போகத்தைத் துறந்து தன் மகனுக்கு முடிசூட்டி, தன் மகளை அரங் கனுக்கே மணம் செய்து கொடுத்தபின் திருவரங்கம் சென்று பெரு மானை சேவித்து வந்தார். “குலசேகரன் வீதி” என்ற மூன்றாம் பிரகாரம் கட்டி, திருப்பணிகள் பலவும் செய்தார். பல திருத்தலங் களுக்கும் சென்று தாம் பெற்ற அனுபவங்களையெல்லாம் பெரு மாள் திருமொழியாகப் (105) பாசுரங்கள் பாடினார்.

ஆழ்வாரின் ஏக்கம்                                

                          காவிரியாற்றின் நடுவே பெரிய கோயிலில் அழகிய மணவாளன் ஆதிசேடன் மேல் கண்வளர்கின்றான். அனந் தாழ்வானுடைய நெற்றியில் மாணிக்கங்கள் ஒளிவிடுவதால் இருள் சிதறி ஓடுகிறது. அவன் மூச்சுவிடும் போது எழும் செந்நிற மான வாய்த்தீயால் செண்பகமலர்களால் அமைக்கப்பட்ட விதா னம் போல் காட்சியளிக்கிறது! பெருமான் நாகணை மேல் கிடக்கும் கிடக்கை கண்டு குலசேகரஆழ்வார் உள்ளம் நெகிழ் கிறது, கால்தடுமாற அருகேயுள்ள மணத் தூணைப் பற்றிக் கொண்டு,அரங்கா! வாயார உன்னைப்பாடிக் கொண்டே உன்னை சேவித்துக் கொண்டேயிருக்கும் பேறு எனக்கும் கிட்டுமா என்று ஏங்குகிறார்    

              இருள் இரியச்சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி

                    இனத்துத்தி அணிபணி ஆயிரங்களார்ந்த

               அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும்

                      அணிவிளங்கும் உயர் வெள்ளை

                                       அணையை மேவி

              திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி

                    திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்

              கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்

                   கண்ணிணைகள் என்றுகொலோ

                                           களிக்கும் நாளே?

         [பெருமாள் திருமொழி]  (முதல்திருமொழி) 647

என்றும்

             கடியரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளும்

                    மாயோனை மணத்தூணே பற்றி நின்று

             என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே

              பெருமாள்திருமொழி  (முதல்திருமொழி)  648

என்றும்

            அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்

கோவினை நாவுற வழுத்தி யென்றன் கைகள்

            கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பு நாளே

           [பெருமாள்திருமொழி]  (முதல்திருமொழி)  650

என்றும், அரங்கனைக் காணவும் பணி செய்யவும் தவிக்கிறார்

தொண்டக்குலம்                            

                       இப்படியெல்லாம் தவிக்கும் ஆழ்வார், ”யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்” என்பதற்கிணங்க தொண்டர் குழாங்களோடு கூடி, அவன் திருப்புகழ் பலவும் பாடி ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் பெருக நினைந்து நினைந்து உருகி நாளும் பெருமானைக்கண்டு துள்ளிக்குதித்துப் பூமியில் புரள விரும்புகிறார். அரங்கன் திரு முற்றத்தில் அடியார்களோடு இசைந்து வாழ விரும்புவதை

                  தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்

                          குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி

                  ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர்

                         மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளூம்

                  சீரார்ந்த முழவோசை பரவை காட்டும்

                         திருவங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்

                   போராழியம்மானைக் கண்டு துள்ளிப்

                  பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?

            [பெருமாள்திருமொழி] (முதல்திருமொழி)  655

என்பதால் அறியலாம்.

கண் படைத்தபயன்

                                 வெண்கொற்றக்குடையும் வீரம்மிக்க சேனையும் கொண்ட குலசேகரர் (மன்னன்) திருமால் வழிபாட்டை விட அவன் அடியார் வழிபாடே சிறந்தது என்று எண்ணி

               தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனைத்

                                          திருமாது வாழ்

               வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி

                                    மனங்கொள் சிந்தையராய்

               ஆட்டமேவி, யலந்தழைத்து அயர்வெய்தும்

                                    மெய்யடியார்கள் தம்

               ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகண் பயனாவதே

                  [பெருமாள்திருமொழி] (2ம் திருமொழி 1) 658    

என்ற கொள்கையடையவர்! அதனால்

          ஆடிப்பாடி அரங்காவோ! என்றழைக்கும் தொண்ட

ரடிப்பொடி

          ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும்

                             வேட்கை என்னாவதே?

           [பெருமாள்திருமொழி]  (2ம்திருமொழி2) 659

கங்கயில் நீராடுவதை விட அரங்கனே என்று பாடி ஆடுவதே மேலானது என்று வலியுறுத்துகிறார்.

நாத்தழும்பு எழ நாரணா

                             குலசேகரர் அரசராக இருந்தபோதிலும்,

“நாராயணா”! என்று தொழுது வாழ்த்தும் தொண்டர்களை என் நெஞ்சம் வாழ்த்தும் என்கிறார். பக்தியில் கண்ணீர் பெருக வரும் தொண்டர்கள் கூட்டத்தால் அரங்கன் கோயில் திருமுற்றம் சேறா கும் போது, அப்படிப்பட்ட தொண்டர்களீன் சேவடிகளை என் தலையில் சூடுவேன்

                              அரங்கனுக்கு அடியார்களாய்

               நாத்தழும்பு எழ நாரணா! என்று அழைத்து மெய்

                                  தழும்பத்தொழுது

               ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி

                              வாழ்த்தும் என் நெஞ்சமே

                  [பெருமாள்திருமொழி] (2ம்திருமொழி4)  661

என்றும்

                  ஆறுபோல் வரும் கண்ணீர் கொண்டு

                         அரங்கன் கோயில் திருமுற்றம்

                  சேறுசெய் தொண்டர் சேவடிச் செழுஞ்

                        சேறு என் சென்னிக்கணிவனே

                  [பெருமாள்திருமொழி] (2ம்திருமொழி)  660

என்றும் பெருமிதத்தோடு பேசுகிறார்.

பித்தர் யார்?

                      ஆனந்தக் கண்ணீர் சொரிய, உடல் மயிர்க்

கூச்செரிய, தளர்ந்து கூத்தாடி, சுழன்று சுழன்று ஆடியும் பாடியும் வணங்கி அரங்கனுக்கு அடியார்களாய் அவனுக்கே பிச்சனாகித்

திரிகிறவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள் அல்லர். அரங்க னிடம் பக்தியில்லாத மற்றவர்களே பைத்தியங்களாவார்!

                  மொய்த்துக் கண்பனிசோர மெய்கள்

                              சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று

                  எய்த்துக் கும்பிட்டு நட்டமிட்டு எழுந்(து)

                              ஆடிப்பாடி இறைஞ்சி என்

                  அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்

                              களாகி அவனுக்கே

                  பித்தராமவர் பித்தர்களல்லர்.

                         மற்றையார் முற்றும் பித்தரே.

            [பெருமாள்திருமொழி] (2ம்திருமொழி 9) 666

யார் பித்தர் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார் இவ்வாறு

சொல்பவர் யார்? கொல்லிகாவலன், கூடல்நாயகன், கோழிக் கோன், குலசேகரன்(மன்னன்)!

மையல் கொண்ட மன்னன்.

                              திருமால் அடியார்களிடம் பெருமதிப்பும்  பக்தியும் கொண்ட குலசேகரமன்னன் அரங்கனுக்கு அடியவர் அல் லாதவர்களோடு தொடர்பு கொள்ள விரும்பவில்லை. பெருமா னிடம் மட்டுமே தொடர்புகொள்ள விரும்பினார்.

            மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்

            வையம் தன்னோடும் கூடுவதில்லை யான்.

            ஐயனே! அரங்கா! என்றழைக்கின்றேன்

            மையல் கொண்டொழிந்தேன் என்றன் மாலுக்கே!

                  [பெருமாள்திருமொழி] (3ம் திருமொழி) 668

என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்

பித்தன்

                              அரங்கனிடம் இவர் கொண்ட அதீத ஈடுபாடு காரணமாகத் தன்னைப் பித்தன் என்று சொல்லிக்

கொள்ளவும் இவர் தயங்கவில்லை. உலகத்தவரோடு சேராமல்

அல்லும் பகலும் அனவரதமும் அரங்கனிடம் பித்தேறியஆழ்வார் ,உணவு உடை இவற்றுக்காக அலைந்து திரியும் மக்கள் கூட்டத் தோடு சேர விரும்பவில்லை. உன்மத்தம் பிடித்த இவர் வழி தனி வழி!

                  உண்டியே உடையே உகந்தோடும் இம்

                  மண்டலத்தொடும் கூடுவதில்லை யான்

                  அண்டவாணன் அரங்கன் வன்பேய்முலை

                  உண்டவாயன் தன் உன்மத்தன் காண்மினே

                  [பெருமாள்திருமொழி] (3ம்திருமொழி4) 671

                                  நல்ல வழியில் செல்லாமல் தீய வழியில் செல்லும் அநீதியாளர்களோடும் சகவாசம் கொள்ளேன் அரங்கனிடம் பித்தாகி நிற்கிறேன் என்றவர் இப்பிறவியில் மட்டு மல்ல  ஏழு பிறப்பிலும் நான் பித்தனே என்பதை

                  எம்பரத்தர் அல்லாரொடும் கூடலன்

                  உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதலன்

                  தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர்

                  எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே

                   [பெருமாள்திருமொழி] (3ம்திருமொழி6) 673

என்று உலகோருக்குத், தான் பெருமான் விஷயத்தில் எழுமையும்

பித்தனாக இருக்க விரும்புவதைப் பெருமிதத்தோடு தெரிவிக்கி றார். என் அப்பன், கண்டவர்களோடு சேர்ந்து நான் கெட்டுப்போய்

சீரழியாதபடி நல்ல மனத்தையும் அறிவையும் தந்தருளியிருக் கிறான். அதனால்

                  எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச்

                  சித்தம் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்

                  அத்தனே! அரங்கா! என்றழைக்கின்றேன்

                  பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்க

            [பெருமாள்திருமொழி] (3ம்திருமொழி 7)  674

என்றவர், தன்னைப் பித்தன்  என்றதோடு நில்லாமல்

                  ”பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே

என்றும் பெருமிதம் கொள்கிறார்.

                            பாராளும் மன்னனாக இருந்தாலும் அரங்கனுக்கு ஆட்பட்டு பித்தனாகவும் பேயனாகவும் இருக்க விரும்பும் குலசேகரர்(ஆழ்வார்)  வித்தியாசமானவராகக் காட்சி யளிக்கிறார்.

=======================================================================

Series Navigationமுத்தொள்ளாயிரத்தில் யானைகள்இன்றைய அரசியல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *