குற்றம்….

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 10 in the series 26 செப்டம்பர் 2021

                                                

ஜனநேசன் 

 

அந்த மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகம் மரங்கள் சூழ்ந்திருந்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி நெடிது வளரும் யூகலிப்டஸ்தைலமரங்கள், நெட்டிலிங்க மரங்கள் , பறவைகளை நம்பச்செய்து ஏமாற்றும் இலவமரங்கள், இனிப்பும் கசப்பும் இணைந்து  குளிர்நிழல் தரும் வேம்பு ,கருநிழல் பரப்பி தூங்குமூஞ்சி என்று  பெயர்பெற்ற புங்கன் ,கோடையில் விரல்தோரணம் தொங்கவிடும் புளியன் , பொன்மஞ்சள் பூக்களால் வசிகரிக்கும் பூங்கொன்றை , உள்ளங் கைகளை அபிநயித்தது போல் படாடோபமாய் இலை விரித்து நிற்கும் பாதாம்மரங்கள் என அவ்வலுவலகத்தில் பணியாற்றும் பலவகை மனிதர் களின் இயல்புகள் போல் மரங்கள் வியாபித்து  நின்றன.                              அந்த வளாகத்திற்கு கம்பீரம்  சேர்க்கும் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர் தாசில்தாரிடம் அங்கலாய்த்தார்.   ”என்னசார் ,உங்கநண்பர்  ராஜகோபால்  இப்படி பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறார்.? டாஸ்மாக்  மேனேஜர் பதவிக்காக அவனவன் லட்சக்கணக்கில் பணத்தை மூட்டை கட்டிகிட்டு  மந்திரி, எம்பி சிபாரிசோடு அலைந்துகிட்டு இருக்கிற காலத்தில்  கலக்டராகப்  பார்த்து  இவருக்கு போஸ்ட்டிங் போட்டு இருக்கிறார். !  மாவட்டம்  முழுதும்  முன்னூறுகடைகள் இருக்கு;  நூற்றுக்கு மேல் பார்கள்  `இருக்கு. இதிலெல்லாம் வருமானம் உக்கார்ந்து இருக்கிற இடம் தேடிவரும். ! ரிடையராகப் போகிற சமயத்தில் நாசூக்கா நறுக்குன்னு சம்பாதிக்கப் பார்க்காம  லீவைப் போட்டுட்டு போயிட்டாரே! இவரு சம்பாரிக்க இஷ்டமில்லைன்னா, இவரு கண்டுக்காம இருந்தாருன்னாகூட போதும். பிழைக்கிறவன்  பிழைச்சுட்டுப்    போகட்டும்!   அவருகிட்ட நயமா எடுத்துச் சொல்லி  மேனேஜர்போஸ்ட்டில  ஜாயின் பண்ணச்  செய்யுங்க!.  இல்லாட்டி கலெக்டர் சார்  கோவிச்சுக்கப்  போறாரு.”

தாசில்தாருக்கு ராஜகோபாலின் சுபாவம் தெரியும். அவருகிட்ட பேசிப் பயனில்லை. ஆகவே மாவட்ட வருவாய் அலுவலரிடம் “சரிங்க சார் .நீங்க சொன்னதாகச்  சொல்லிப்  பார்க்கிறேன்”  என்று தன்னை விடுவித்துக் கொண்டார். அன்று மாலை தாசில்தார் ,உதவிக்கலெக்டர் பதவி உயர்வு பட்டியலில் உள்ள ராஜகோபாலிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பேசிய ஆதங்கத்தைச் சொன்னார். பதில்  சொல்லாமல்  மெல்ல நழுவிய அவரது கைகளை தாசில்தார் பற்றி நிறுத்தினார்.  மாவட்ட வருவாய் அலுவலரின் ஆதங்கமும் அக்கறையும் தனக்குத் தெரியும். மாவட்ட ஆட்சியரிடமே நான் பேசிக்கிறேன்  என்று  ராஜகோபால்   கேலிமின்ன மென்மையாகச் சிரித்தார்.

மறுநாள் காலையில் ராஜகோபால் மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்குப் போனார்.  மரங்கள்சூழ திறந்தவெளி  விளையாட்டு  மைதானமும்,  பூங்காவும் இருந்தது. மாவட்டஆட்சியர் காலையில் ஆறுமணியிலிருந்து ஏழுமணிவரை டென்னிஸ் விளையாடுவது வழக்கம். அதன்பின் குளித்துவிட்டு மாவட்ட செய்தியலுவலர் கோப்பில் வைத்த அன்றைய செய்தித்தாள்களில் அம்மாவட்டம் குறித்துவந்த  செய்திநறுக்குகளைப் படித்து அந்தந்தத்துறை அலுவலர்களுக்கு செயல்குறிப்புகள் எழுதி அனுப்புவார். பின் சற்று தளர்வாய் பிற செய்தித்தாள்களை வாசிக்கும் நேரம்தான் பேசுவதற்கு உகந்தநேரம். ராஜகோபாலின் மீது  மாவட்டஆட்சியருக்கு நிறைய மரியாதை உண்டு. ராஜகோபாலை மாவட்டஆட்சியர் வரவேற்று அமரச் செய்து, அவரது குடும்ப நலன்களை ,அவரது உடல்நலனை விசாரித்தார்.

மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் நிர்வாகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள், அரசியல் தலையீடுகள். எல்லாம் நீங்கள் அறிந்தவர். உங்களால் பிரச்சினைகளை  சீர்செய்ய முடியும்  என்றுதான்  உங்களை அந்த பணிக்கு அமர்த்தினேன் .பலர் அந்தப்  பணிக்காக ஒற்றைக்காலில் தவமிருக்கிறார்கள். நீங்கள்  ஏன்  மறுக்கிறீர்கள் என்று ஆட்சியர் கேட்டவாறே  ராஜகோபாலின் முகத்தை உற்று நோக்கினார். கலெக்டர் பேசத் தொடங்கும்போது மடித்துவைத்த செய்தித்தாள் காற்றில் படபடத்தது. இவரது மனதை எதிரொலிப்பதாக இருந்தது . உடனே ராஜகோபால் கண்ணாடிகன வில்லையை அதன்மீது வைத்தார். படபடப்பு  அடங்கியது .உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தியும்,  இறுகிய தொண்டையை மென்மையாக சத்தமில்லாமல் செருமி  சரிசெய்து கொண்டும் இறுகிய முகத்தை இயல்பாக்க முயற்சித்தார். பின் ராஜகோபால்  சொல்லத்  தொடங்கினார்.

“ 1970ஆம் ஆண்டு. மதுவிலக்கு அமலில் இருந்த காலம். எனக்கு பத்து வயது.ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளிஆசிரியராக இருந்த என் அப்பா ஒருநாள் சாயந்திரம் வயிற்றுவலின்னு மருத்துவரிடம் போனார். அவரும் அப்பாவின் நண்பர் என்றமுறையில் சாதாரண செரிமானக் கோளாறினால் வந்தவலி. இதற்கு ஜிஞ்சர்பரீஸ்‌ எழுதித் தர்றேன். ராத்திரி ஒருஅவுன்ஸ் நீரில்  கலந்து குடிச்சிட்டு படுங்கள். எல்லாம் சரியாகிவிடும். இதுதடை செய்யப்பட்ட லாகிரி வகையில் சேர்ந்தது. மருந்துசீட்டுக்குத்  தான் கொடுப்பார்கள். ஜாக்கிரதை ,வெளியே  யாருக்கும் தெரியாமல் பயன்படுத்துங்கள் என்று மருந்துசீட்டு எழுதித் தந்திருக்கிறார்.                              அப்பா ,கடைவீதி மருந்துகடையில் வாங்கி சிறிய ரெண்டுஅவுன்ஸ்பாட்டில் தானேன்னு உள்ளங்கையில்  மறைத்தபடி தெருவில்   நடந்து வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்தவழியாக வந்த போலீஸ்காரர் ஒருவர் அப்பாவின் கையில் மதுபாட்டில் இருப்பதைப் பார்த்துவிட்டு அப்பாவை பிடித்து காவல்நிலையத் திற்கு நடக்கச் சொல்லி  இருக்கிறார். அப்பா, தான்                                “ குடிகாரன் இல்லை. ஒரு பள்ளிஆசிரியர். வயிற்றுவலிக்காக வாங்கினேன். இதோ மருத்துவரின்சீட்டும் மருந்துக்கடை பில்லும் இருக்கிறது பாருங்கள் . நான் அரசுஊழியர் என்னை விட்டுவிடுங்கள் .நான் இதுபோல் இனி இப்படி நடந்துகொள்ளமாட்டேன். என்னை விட்டுவிடுங்கள் “ என்று அப்பா கெஞ்சி மன்றாடினார்.                                                                          “அஞ்சுரூபா கொடுத்தால் எந்த டாக்டரும் இப்படி எழுதித் தருவாரு. ஸ்டேஷனில் வந்து அய்யாவிடம் சொல்லிவிட்டு வந்துவிடு” என்று சொல்லி அப்பாவை தரத்தரன்னு ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போயிட்டார். இதைக் கடைவீதியில் போறவங்க வர்றவங்க எல்லாம் பார்க்கவும் அப்பாவுக்கு அவமானமாகப் போய்விட்டது.

மணிஎட்டாகி விட்டதே மருந்து வாங்கப்போன அப்பாவைக் காணோமேன்னு அம்மா தேடிப்போனது. கடைத்தெருவிலிருந்து வந்தவங்க எல்லாம் அப்பாவை போலீஸ் பிடிச்சிட்டுப் போனதைச்  சொன்னாங்க . மானக்கேடாகிருச்சு. அம்மா கதறிஅழுதுகிட்டே வர்றது பார்த்து நானும் அழுதுகிட்டே  அம்மாவின்  சேலையைப் பிடிச்சுகிட்டே ஓடினேன். அப்பா ஸ்டேஷனில் குனிந்து கண்ணீர்வழிய உக்கார்ந்திருந்தார். நாங்கள் வந்ததை உணர்ந்ததும் தலை நிமிராமல் விம்மி  விசும்பினார்

அம்மா  ,ஏட்டய்யாவிடம் கெஞ்சி கதறியது. “ சப்இன்ஸ்பெக்டர், சர்கிள் இன்ஸ்பெக்டர் ‌ யார் வந்தாலும் சொல்லிட்டு இனிமேல் குடிக்க மாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டு  கூட்டிட்டுப் போங்க “ என்று இறுகிய முகத்துடன் ஏட்டய்யா சொன்னாரு. ராத்திரி பதினோருமணி ஆயிருச்சு. சப்இன்ஸ்பெக்டரோ, சர்கிள்இன்ஸ்பெக்டரோ வரவில்லை. அன்னிக்கு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அவுங்க ரெண்டுபேரும் வர்றது உறுதியில்லை  என்றார்கள் . நானும் அழுதுகிட்டே வராண்டாவில் உட்கார்ந்து கண்ணீர் வழிந்தபடியிருந்த அம்மாவின் மடியில் தூங்கிவிட்டேன். காலை நாலு மணி  வரைக்கும் எந்த அதிகாரியும் வரலை. விடிஞ்சா பள்ளிக்கு வேலைக்குப் போகணுமே  , அரசுஊழியர் போலிஸில் மாட்டிகிட்டா வேலை போயிருமேன்னு நெஞ்சைப் பிடிச்சுகிட்டு அழுத அப்பவை காலையில் பிணமாத்தான் பார்த்தோம். அப்பாவுக்கு கருமாதி முடிக்கிறதுக்கு  முதல்நாள் அரசாங்கமே கள்ளு, சாராயக்கடையைத் திறந்திருச்சு. அப்பாவை குடிகாரக் குற்றவாளின்ன அரசு இப்போது குடிக்கிறது குற்றமில்லைன்னு அறிவிச்ச மாதிரி ஆச்சு.  சட்டத்தை மாற்றிய அரசு , செத்துப்போன அப்பாவை மீட்டுத்தர முடியவில்லை.                                                             அப்பா இறந்ததும் வசதியில்லாமல் சமூகநல விடுதியில் தங்கி நான் சொறி சிரங்கோடு போராடி  சிரமப்பட்டு படிச்சேன். எது எங்களது வாழ்க்கையை நொடிப்பொழுதில்  சீரழித்ததோ அதன்‌மீது தலைமைப் ‌பொறுப்பில் அமர வைப்பது காலத்தின் வினோத விளையாட்டாக இருக்கலாம். நான் என்னைச் சுற்றியுள்ள சூழலை எதிர்த்தே வளர்ந்தவன். அந்த குடியினால் பாதிக்கப்பட்ட நான் எப்படி பலரது குடும்பங்களைக் கெடுக்கும் சாராயம் புழங்கும் டாஸ்மாக்கில் மேனேஜரா வேலைசெய்யும் மாபாதகத்தை  செய்யமுடியும்? எப்படி எனது இயல்புக்கு மாறாக நடந்து கொள்ள முடியும்? எனது நிலையைச் சொல்லிவிட்டேன்.                                                       இதற்குமேல் நீங்கள் கட்டாயப் படுத்தினால் நான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓருவருஷம் இருக்கையில் இன்றைக்கே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை .சொல்லி முடித்த அவரின் முகம் நீர்ச்சத்தற்ற நிலம் மாதிரி இறுகிப்போய்  இருந்தது .பொழிந்து கவிழ்ந்த வானம் போல் கண் வெளிரியிருந்தது. மாவட்டஆட்சியர் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி பெருமூச்சு விட்டார்.

 

[டிசம்பர்-௨௦௨௦- புதிய ஆசிரியன் ]

Series Navigation  குமட்டல்குரல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *