நினைவு நதிக்கரையில் – 1

0 minutes, 0 seconds Read
This entry is part 32 of 45 in the series 2 அக்டோபர் 2011

எனக்கு எப்போது ரஜினி பித்து பிடித்தது என்று சரியாக நினைவில்லை. எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும்போது பிடித்திருக்கலாம், என்று நினைக்கிறேன். எதை செய்தாலும், அதில் அதிதமாய் போவது என்ற என்னுடைய இயல்புப்படி, ரஜினி விஷயத்திலும் நான் மிகத்தீவிரமாக இருந்தேன். சொல்லப்போனால், என்னுடைய வயது ஒத்த பெரும்பாலானவருக்கு சிறு வயதில் ரஜினி தான் ஆதர்சமாய் இருந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது.ரஜினி பிடிக்கும் என்றால், கட்டாயமாய் கமலஹாசனை பிடித்திருக்க கூடாது என்பதுஅன்றைய முதல் விதி. எனக்கோ கமல் டான்ஸ் மிகவும் பிடிக்கும். இதை வெளியே சொன்னால், ரஜினி ரசிகனாய் இருப்பதற்க்கான தகுதியை இழக்க நேரிடும் என்று,வெளியே மிகத்தீவிரமாய் கமலை பழிப்பேன். எங்களை பொறுத்தவரை, கமல் படத்திலேயே “கெட்டப்பழக்கம்” எல்லாம் செய்கிறார் என்றால், நிஜத்திலும் கெட்டவர் தான் என்பது ஒரு முன் முடிவு.

இந்த ரஜினி காதல் என்பது பொங்கல் நாட்களில், வெகு தீவிரமாகி விடும் . எங்களுடைய பள்ளி நாட்களில் , நண்பர்களுக்குள் பொங்கல் வாழ்த்து அனுப்புவது என்பது ஒரு மிகப்பெரிய கேளிக்கை. இதற்கு நண்பர்களுக்கு பிடித்த மாதிரி பொங்கல் வாழ்த்து அட்டை சேகரிப்பது கிட்டத்தட்ட டிசம்பர் வாக்கிலேயே ஆரம்பித்து விடும். ஆண்கள் என்றால் ரஜினி,கமல். பெண்கள் என்றால் ஸ்ரீதேவி, சற்று வயதானவர்கள் என்றால் ஏர் உழவன் அல்லது சூர்யோதயம் இவைதான் அப்போது சக்கை போடு போட்ட வாழ்த்து அட்டைகள். இதில் போட்டி என்னவென்றால், யாருக்கு அதிகமாக வாழ்த்து அட்டை வருகிறது என்பதில் தான். நான் தெரிந்தவர்,தெரியாதவர் அனைவருக்கும் அனுப்பி வைப்பேன். அப்போது தானே , அவர்களும் நமக்கு அனுப்புவார்கள் ? எல்லாம் இப்போது நாம் FB லே தாறுமாறா like போடுவது மாதிரித்தான். நிறைய லைக் வேண்டும் என்றால், நிறைய லைக் போட வேண்டும். இந்த கலை வெறி எல்லாம் வெளியேதான். வீட்டுக்குள்ளே பப்பு வேகாது . சினிமா நடிகன் என்றாலே, எங்க அப்பாவிற்கு ஜென்ம விரோதி என்று அர்த்தம். சினிமா பத்தி பேச்சு எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது . ஒருமுறை, “ரஜினி ரசிகன்” என்ற புத்தகம் வாங்கினேன் என்று துரத்தி துரத்தி அடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

நான் படித்த காண்வென்டின் எதிரில் ஐஸ் விற்ற வீரமணிதான், எனக்கு ரஜினி பற்றிப்பேச கிடைத்த சக நண்பர். மதியம் மூன்று முப்பதுக்கே எனக்கு பள்ளி முடிந்துவிடும் என்றாலும், ரிக்ஷாக்காரர் என்னவோ நான்கு மணி வாக்கில் தான் வருவார். இடைப்பட்ட முப்பது நிமிடம், எனக்கு ரஜினியின் புதுப்பட கதைகளை சொல்வது ஐஸ்காரர் வீரமணி தான்.
எப்படி இவருக்கு மட்டும் யாருக்குமே தெரிந்திராத ரஜினியை பற்றிய புது புது செய்திகள் தெரிந்து இருந்தது என்பது இன்று வரை எனக்கு ஆச்சர்யமே. வீரமணி அவருடைய ஐஸ்பெட்டியில் இருந்து ஐஸ் எடுத்து கொடுக்கும் லாவகத்தை பார்த்த முதல் நாளே, நான் கண்டு பிடித்து விட்டேன், அவர் ஒரு ரஜினி ரசிகர் ஆகத்தான் இருக்க முடியும் என்று.
நீங்கள் கூர்ந்து கவனித்தால், ஒன்று புரியும்.எல்லா ரஜினி ரசிகர்களிடமும் , கொஞ்சம் ரஜினி ஒட்டி கொண்டு இருப்பார். வீரமணியிடம் அது கொஞ்சம் அதிகம். அதே போல்,ரஜினி படக்கதையை சுவாரஸ்யமாக சொல்ல அவரை போல் யாராலும் முடியாது. அவர் “தம்பிக்கு எந்த ஊர்” படத்தின் கதையை சொன்ன விதம் இன்றும் என் நெஞ்சில் இருக்கிறது. வீரமணியை பார்த்தால், அவர் பிழைப்புக்காக ஐஸ் விற்க வந்தவர் போலவே நினைக்க தோன்றாது . எளிமையான ஆடைகள் என்றாலும் அதில் ஒரு ஸ்டைல் ஒட்டி; &இருக்கும் . எதை கையாள்வதிலும் ஒரு நளினம். எதோ பொழுதுப்போக்கிற்காக ஐஸ் விற்கிறார் என்றும், ஐஸ் விற்று முடித்தவுடன், தனது காரில் ஏறி போய்விடக்கூடும் , என்றே எண்ண தோன்றும் .
நான் அக்கௌன்ட் வைத்த முதல் பேங்க் வீரமணி தான். எனக்கு அப்படி, ஒரு சலுகை அவர் கொடுத்ததற்கு காரணம், நானும் ரஜினி ரசிகன் என்பதாலேயே,என்று நான் உறுதியாக நம்பினேன். ; ரஜினியின் புதுப்படம் வரப்போகிறது என்றால், அந்த ஒரு மாதகாலமும் அவரது உடல் மொழியில் ஒரு தீவிரம் கூடி விடும் . எந்த நேரமும், அந்த படத்தை பற்றி மட்டுமே பேச்சு, நினைவு . நாட்கள் நெருங்க நெருங்க ரஜினியே அவருள் இறங்கி விட்டதாகவே நான் உணர்வேன் . படிக்காதவன் ரிலீஸ் என்று நினைக்கிறேன் . தஞ்சை ஜுபிட்டர் திரைஅரங்கில், படம்
பார்த்த அடுத்த நாளே காக்கி சட்டையும், பேண்டும் தைத்து போட்டு கொண்டு வந்தார் .என்னுடைய டான்ஸ்க்கு மிக பெரிய ரசிகரும் வீரமணி தான். அப்போது எல்லாம் பள்ளியில் எந்த விழா என்றாலும், நிச்சயம் என்னுடைய டான்ஸ் ஒன்று இருக்கும். இதை முன்கூட்டியே வீரமணிக்கு நான் தெரிவித்துவிடுவேன் .நிகழ்ச்சி அன்று, எப்படியாவது வாட்ச்மேனின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ,பள்ளிக்குள் நுழைந்து விடுவர்.
ஒரு முறை, அவர்க்கும், அவரது போட்டியாளர் இக்பால்க்கும் ஐஸ் விற்பதில் சண்டை வந்து விட்டது . இக்பால் மிகவும் கனத்த சரீரம். சண்டை வந்த நொடியில், அருகில் இருந்த எனக்கு, இந்த சண்டையை வீரமணி தவிர்த்து விட வேண்டும் என்றே தோன்றியது. வீரமணி எங்களை
ஒதுங்க சொல்லிவிட்டு , இக்பாலை அடித்த விதம் , எந்த ரஜினி படத்திற்கும் நிகரானது. பெருத்த உருவமான இக்பால் அடி தாங்க
முடியமால் ஓட, ஒரு கையால், தலையை கோதி விட்டு கொண்டு , மற்றொரு கையால் தாவி பிடித்து உதைத்த உதையில் இக்பால்,
அதற்கு பிறகு, அங்கு வராமலே போனார்.

காலப்போக்கில் நான் ஆறாம் வகுப்பிற்காக வேறுஉயர்நிலைப்பள்ளி சென்ற உடன், வீரமணியை பார்க்க முடியாமலே போனது.காலமும் உருண்டோடியது . நான் என்னுடைய பழைய பள்ளியை, கடக்கும் போது எல்லாம், வீரமணியை தேடினேன். ஆனால் அதற்கு பிறகு அவரை காணவே இல்லை.

ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கடந்து விட்டது.நான் என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து பின்பு கல்லூரியும் முடிந்து சென்னையில் வேலையில் அமர்ந்தேன்.
ஒரு முறை, சென்னையில் இருந்து மன்னை செல்லும் இரவு பேருந்தில், பயணித்து கொண்டிருந்தேன் . நன்கு தூங்கி விட்ட நிலையில்
ஒரு இடத்தில உணவு அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டு, அங்கு எழும்பிய கானா பாடலில் கண் விழித்து கொண்டேன். தூக்கம்
போனதால், இறங்கி தேனீர் அருந்திவிட்டு, காசு கொடுக்க கை நீட்டியபோது , கல்லா பெட்டியில் இருந்த முகம் பழகிய முகமாய்
தெரிய சட்டென்று பொறி தட்டியது . அது வீரமணியே தான். கூட்டம் அதிகம் என்பதால், படு வேகமாக காசை வாங்கி கல்லா பெட்டியில் எறிந்து
கொண்டு இருந்தார். அதே லாவகம். நான் சற்று தாமதித்து, நீங்கள் ஐஸ்கார் வீரமணிதானே என்று கேட்ட உடன் , சட்டென்று நிமிர்ந்து
என்னை பார்த்தார் . வீரமணியை காலம் சிதைத்து இருந்தது. தலை முழுக்க நரைத்து , முகம் வதங்கி, மிகவும் மெலிந்து காணப்பட்டார் . மிகவும் உருமாறியிருந்த, அவரை எப்படி நான் அடையாளம் கண்டுக்கொண்டேன் என்பதெல்லாம், வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்று.
என்னை அடையாளபடுத்தி கொண்டதும், எழுந்து வந்து என்னை தழுவி கொண்டார். என் வேலை , குடும்பம் குறித்து எல்லாம் மிகுந்த அன்புடன் கேட்டுக்கொண்டார்.
அந்த கடை, தனது தங்கையின் கணவரது என்றும், தான் அதில் வேலை பார்ப்பதாகவும் சொன்னார். குடும்ப வறுமை காரணமாக ,
வெகு நாட்களுக்கு, முன்பே இந்த ஊருக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார். சட்டேன்று, நினைவுக்கு வந்தவராய்,
“தெரியும் இல்லே, பாபா படத்துக்காக ஒரு பெரிய ஆலமரத்தையே, ஏரோப்லேய்ன்லே இமய மலைக்கு கொண்டு போறாங்க. தலைவர் பாபாவில் கலக்குவார் பாரு” என்றார் . இதை சொன்ன நொடியில் , என் கண்ணெதிரே பழைய ஐஸ்காரர் வீரமணி தோன்றி மறைந்தார்.

செந்தில் குமார், டோக்யோ

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்) (கவிதை -50)“அவர் தங்கமானவர்”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *