முன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்

This entry is part 36 of 37 in the series 23 அக்டோபர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

ஆனால் வேலைக்காரர்கள் சாப்பிட்டு ஆயிற்று என்று தெரிந்ததும் நான் சமையல் கூடத்துக்குள் போனேன். எவர்சில்வர் வாஷ்பேசினை எமிலி சுத்தம்செய்து கொண்டிருந்தாள். மேரி ஆன் கழுவிக் கொண்டிருந்தாள்.
”சொல்லுங்க, திரிஃபீல்ட் தம்பதிக்கு என்ன குறை?” என்று நான் கேட்டேன்.
மேரி ஆன் பதினெட்டு வயதில் இந்த விகாரேஜுக்கு வந்தவள். நான் சின்னப் பையனாக இருக்கையில் என்னைக் குளிப்பாட்டி விட்டிருக்கிறாள். எனக்குத் தேவைப்பட்டபோது பிளம் ஜாமில் மருந்துப்பொடி குழைத்து சாப்பிடத் தந்து சொஸ்தப்படுத்தி யிருக்கிறாள். (நம்மூர்ப் பாட்டிகள் தேனில் குழைத்துத் தருவார்கள். மொ-ர்) நான் பள்ளிக்கூடம் போக என் பெட்டியை ஒழுங்குசெய்து தந்திருக்கிறாள். ஜுர சமயத்தில் என்னுடனேயே இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு அலுப்பான கணங்களில் கதைப்புத்தகம் வாசித்துக் காட்டியிருக்கிறாள். சேட்டை பண்ணி அவளிடம் திட்டு கூட வாங்கியிருக்கிறேன். வேலைக்காரி எமிலி உல்லாசமான இளம் பெண். என்னை அவளிடம் விட மேரி ஆனுக்கு இஷ்டமே கிடையாது. தன்னிடம் தான் நான் கட்டுப்பாடாய் வளர்வேன் என்கிற எண்ணம்.
மேரி ஆன் பிளாக்ஸ்டேபிள் பெண். தன் வாழ்நாளில் அவள் லண்டனைப் பார்த்ததே இல்லை. தெர்கன்பரியையே மூணு நாலு தடவை அவள் பார்த்திருந்தால் அதிகம். தலைவலி காய்ச்சல் என்று அவள் படுத்ததே கிடையாது. அவளுக்கு எங்கள் வீட்டில் விடுமுறையே கிடையாது. வருஷத்துக்கு 12 பவுண்டு சம்பளம். வாரத்தில் ஒரு மாலையானால் ஊர்வரை போய் அம்மாவைப் பார்த்து வருவாள். எங்கள் விகாரேஜின் சலவைக்காரி அவள் அம்மா. ஞாயிறு மாலையானால் சர்ச். ஆனா ஒண்ணு, பிளாக்ஸ்டேபிளில் நடக்கும் அத்தனை கதையும் கூத்தும் அவள் அறிவாள். யார் யார் என்னென்ன, யார் எவரைக் கல்யாணங் கட்டியது, யாரோட அப்பாவோ எப்பிடிச் செத்துப் போனார், எந்தப் பொம்பளைக்கு எத்தனை குழந்தைகள்… விவரக் கருவூலம் அவள்.
மேரி ஆனிடம் நான் என் கேள்வியைக் கேட்டேன். துடைக்கிற மாப்பின் துரட்டியை சிங்க்கில் சத்தமாய்ப் போட்டபடியே அவள் பேசினாள்.
”உங்க மாமன் சொல்றதுல தப்பேதும் இல்லடா” என்றாள். ”உனக்கு அவங்ககூட ஒரு சகவாசமும் தேவை இல்லை. என் மருமானா இருந்தால் நானே அப்டிதான் சொல்லியிருப்பேன். கூட ஒண்ணாப் போலாம்னு நல்லாத்தான் கூப்பிடடாங்கப்பா… சிலாட்கள் ரொம்ப லஜ்ஜைகெட்டுத் திரியறாங்க.”
சாப்பாட்டுக் கூடத்தில் நடந்த சம்பாஷணை இவள் வரை எட்டியிருக்கிறது, என்று புரிந்துகொண்டேன்.
”எனக்குத் தெரியாதா? நான் என்ன சின்னப் பப்பாவா?” என்றேன்.
”எல்லாம் தெரியும்னு நீ நினைக்கறியேடா, சிக்கலே அங்கதான். நம்ம இல்லத்துக்கு வர்ற அளவு, உள்ள நுழையற அளவு அவங்களுக்குத் துளிர்விட்டுப் போச்சாங் காட்டியும்…” மாப்பின் பிரிகளைப் பிரித்து விட்டாள். ”இங்கியே ஒரு வீட்டையும் பிடிச்சிக்கிட்டு, துரையா, துரைசானியா பாவ்லா காட்டப் பாக்கறாங்களாட்டிருக்குது….”
ராஸ்பெரி டார்ட் சமையல் மேடையில் இருந்தது. அதன் பொறுக்கை ஒடித்து வாயில் போட்டுக் கொண்டேன்.
”டேய் அதை மிச்சம் வெய்யி…” என்றாள் மேரி ஆன். ”ராத்திரிக்கு வெச்சிருக்கு. வேணுன்னா சாப்பிடும்போதே கூட கேட்டு வாங்கிட்டிருக்கலாம்லடா? டெட் திரிஃபீல்ட் எதுலயும் நிலைக்க மாட்டாதவரு. நல்ல படிப்பாளி. அவங்க அம்மாதான் பாவம். அவன் அவதரிச்ச நாள் முதல் அவளுக்குப் பிடிச்சது சனி. அத்தோட… போயும் போயி ரோசி கேன் – அவளைக் கல்யாணம் கட்டி… நான் கேள்விப்பட்டேன். அவரு அம்மாகிட்ட போயி, இந்த மாதிரி ரோசியைக் கட்டப் போறேன்னு சொன்னாரோ இல்லியோ, படுக்கையறைக்குப் போய் கதவைச் சாத்திக்கிட்டவ தான். மூணு வாரம் வெளியவே வரவில்லை. யாரோடும் ஒரு வார்த்தை பேசவேயில்லைன்றாங்க.”
”கல்யாணத்துக்கு முன்னாடி அவ ரோசி கேனாக்கும்… எந்த கேன் குடும்பம் தெரியல்ல.”
பிளாக்ஸ்டேபிளில் தடுக்கி விழுந்தால் கேன் குடும்பப்பெயர் தட்டும். அத்தனை அதிகம். கல்லறையைப் பார்த்தால் கொத்துக்கொத்தாய் கேன் பெயர் இருக்கும்.
”உனக்கு அவங்களைத் தெரியாதுடா. அவங்க அப்பா, பெரிய ஜோசையா கேன். இவளாட்டம் அவரும்… காட்டுப்பய அந்தாளு. ராணுவத்தில் சேர்ந்து கட்டைக்காலோடு வந்து சேர்ந்தாரு. வீட்டுக்கு வெள்ளையடிக்கிற வேலை கீலைன்னு எதாச்சும் பாப்பாரு. பெரும்பாலும் வேலையில்லாம சும்மாதான் கெடப்பாரு. எங்க ரை சந்தில் எங்களுக்கு அடுத்த வீடுதான் அவங்க வீடு. நானும் ரோசியுமா ஞாயிறு பள்ளிக்கூடம் ஒண்ணாப் போவம்.”
”ஆனால் உங்க வயசு இல்லியே அவளுக்கு?” என் வயதை மறந்து துடுக்காய்க் கேட்டே விட்டேன்.
”அவளா… எப்பவோ முப்பது தாண்டியாச்சு அவளுக்கு.”
மேரி ஆன் சில்லுப்போல் சின்ன உடல்காரி. சப்பை மூக்கு. பல்லெல்லாம் அரிச்சிப் போச்சு. என்றாலும் பளீரென்றிருக்கும். இவளுக்கு வயசு 35 தாண்டியிராது என்றே பட்டது.
”என்னை விட ரோசி நாலைஞ்சி வருஷம் சின்னவள். அதைவிட இளமையா அவ அலட்டிக்கிட்டா ஆச்சா? அவ உடையும் ஷோக்கும் அவ வயசை நினைக்கவிடாம அடிக்குதுன்னு சொல்றாங்க…”
”ஒரு மதுவிடுதில வேலை பார்த்தாளாமே அவ?”
”ஆமாமா. ரயில்வே ராணுவப்படையின் விடுதி அது. அப்பறம் ஹாவர்ஷாமில் ‘பிரின்ஸ் ஆஃப் வேலின் இறகுகள்’ என்கிற விடுதியிலும் வேலை செய்தாள். ரயில்வே விடுதியில் திருமதி ரீவ்ஸ்தான், உதவிக்கு என இவளை அமர்த்திக்கொண்டது, இவ அடித்த லூட்டியால் ரொம்ப ரசாபாசமாகி அவளே ரோசியை சீட்டைக் கிழிச்சி அனுப்பி வைக்க வேண்டியதாயிட்டது.”
ரயில்வே ராணுவ விடுதி ஒரு சிறிய நடுத்தர அளவிலான பொதுசன விடுதி. லண்டனின் சாத்தம் மற்றும் தோவர் ரயில்வேக்கு எதிர்வாடையில் அமைந்திருந்தது. நொந்தவர்கள் உல்லாசக் கூடம் அது. குளிர்கால இரவுகளில் அதைத்தாண்டிப் போகையில் கண்ணாடிக் கதவுகளுக்குள்ளே மது அருந்த சனங்கள் கூடுகிறதைப் பார்க்கலாம். அந்த இடத்தை மாமன் அங்கிகரிக்கவேயில்லை. கரிக்கவே செய்தார். அந்த விடுதி நடத்தும் உரிமத்தை ரத்து செய்ய என்று பல வருடங்களாக அவர் போராடிக் கொண்டிருந்தார். ரயில்வே கூலிக்கார எடுபிடிகள் மற்றும் விவசாய சம்சாரிகள் அங்கே வந்து போகிறார்கள். பிளாக்ஸ்டேபிளின் கௌரவப் பிரஜைகள் அதைவிட்டு ஒதுங்கிப்போனார்கள். அவர்கள் போய்வர என்று டியுக் ஆஃப் கென்ட், பியர் அன்ட் கீ என்று வேறு கடைகள் இருந்தன.
”ஏன், அவளை வெளியேத்தற அளவுக்கு என்ன பண்ணினாள் அவள்?” எனக்கிருந்த ஆர்வப் படபடப்பில் கண்ணே பொங்கி வெளியே தெறித்துவிடுமாய் இருந்தது.
”அவ என்னதான் செய்யல்ல?” என்றாள் மேரி ஆன். ”அதையெல்லாம் உன்னாண்ட சொல்ல முடியுமா? உன் மாமன் நான்தான் எல்லாம் உனக்கு ஓதினேன்னு தெரிஞ்சா என்னைச் சும்மா விடுவாரா? விடுதிக்கு வந்த ஒராளை அவ விட்டு வைக்கல்லியே. விவஸ்தையே கிடையாது. அவளால அடங்கிக் கிடக்க முடியாது. ஒராள் மாத்தி மத்தாள்னு மாத்திக்கிட்டே இருந்தாள். கேட்டவங்க சொல்லவே கூசினாங்க. ஜார்ஜ் பிரபுவோட ஒரு பழக்கம்… அவன் போற இடமே இல்லை அது. அவன் பவிஷு அதைவிட எவ்வளவோ அதிகம். என்ன சொல்லிக்கறாங்க, ஒருநாள் ரயில் வரத் தாமதமாயிட்டது. அதான் அவன் விடுதிக்குள்ள போயிருக்கான். அவளைப் பார்த்திருக்கான். அத்தோட அங்கேயே ஐக்கியமாயாச். முரட்டு ஆசாமிகள் எல்லாரோடயும் கலந்து புழங்க ஆரம்பிச்சிட்டான். எல்லாவனுக்கும் அவன் எதுக்கு அங்க வர்றான்னு தெரியும், தெரியாமல் என்ன… அவனுக்கு கல்யாணமும் ஆகி மூணு குழந்தைகள் இருக்கு. பாவம் அவன் பெண்டாட்டி. ஊரெங்கும் இந்தக் கசமுசா ஓயாத பேச்சாயிட்டது. இன்னும் ஒர்ரு நாள் கூட பொறுக்க முடியாதுன்றாப்ல திருமதி ரீவ்ஸ் கடுப்பாயி ரோசிக்கு சம்பளப் பணத்தை எண்ணிக் கைல கொடுத்து, கிளம்புடின்னுட்டா. நான் என்ன சொல்றேன், உபகாரம் இல்லாமல் போனாலும் உபத்திரவம் ஒழிஞ்சது, அதைப் பார்க்கணும்…”
அந்த ஜார்ஜ் பிரபுவை எனக்கு நல்லாத் தெரியும். அவன் பேர் ஜார்ஜ் கெம்ப். அவனது பிரபு பட்டத்தை வைத்து அவனைப் பற்றி ஓகோன்ற பிரமை உண்டாகலாம். எங்களது நிலக்கரி வியாபாரி தான் அவன். என்றாலும் வீடு வாங்க விற்க என்று பணம் பண்ணினான். ஒண்ணு ரெண்டு நிலக்கரிச் சுரங்கத்திலும் அவன் பங்குதாரன். தனி மனையில் செங்கல் வைத்துக் கட்டிய சொந்த வீட்டில் இருந்தான். தன் வாகனத்தைத் தானே ஓட்டி வருவான். நல்ல குண்டு. கூர் தாடி. உடம்புபூரா நகை நட்டு தகதக பொத்தான்னு மாட்டிக்கிட்டிருப்பான். துணிச்சலான அடர் நீலக் கண்கள். பழைய கேவா கலர் டச்சுப் படங்களில் வருமே உல்லாசமான வியாபாரி, அப்படித்தான் இருந்தான் அவன். கண்ணைப் பறிக்கிற வண்ணம் பகட்டாய் உடையணிவான். மேட்டுத் தெரு நடுவே அதிரடி வேகத்தில் அவன் வாகனம் ஓட்டி வருவான். கிட்டத்தட்ட மான் வண்ண முழு கோட். மகா பொத்தான்கள். பழுப்பு நிற புளோயர் தொப்பி ஒரு பக்கமாய்ச் சரிந்திருக்கும். சட்டைப் பொத்தானில் சிவப்பு ரோஜா. தாண்டிப் போகிற எவரையும் திரும்பி ஒரு கணம் பார்க்க வைக்கும் வருகை.
ஞாயிறாச்சின்னால் சர்ச்சுக்கு வருவான். பளபளவென்று மேல்கோட்டு. கவுன்போன்ற உள்கோட்டு. சர்ச் நிர்வாகியாக அவன் ஆக விரும்பியதை எல்லாரும் அறிவோம். அப்படி ஓடியாட அவனுக்கு முடியவும் செய்யும். அவன் ஆயுசில் அந்தப் பதவியை மறந்துறணும், என்று மாமன் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார். மேலிடத்தில் காரியம் ஆக என்று சாப்பல் வரைகூட ஜார்ஜ் பிரபு நூல் விட்டுப் பார்த்தான். மாமன் அசரவில்லை. நகரத்துள் ஒருநாள் நேருக்கு நேர் பார்த்தபோது அவனை ஆளையே உண்டு இல்லைன்னு பண்ணிவிட்டார். சர்ச்சுக்குள் வரவே பகிஷ்காரம் செய்தார். பிறகு சமாதானம்… பழையபடி சர்ச்சுக்குள் அவன் அனுமதிக்கப்பட்டாலும், கூடமாட என்று வேலைகள் செய்ய மட்டுமே அவனுக்கு அனுமதி.
பிரமுகர்கள் அவனை அசிங்கம் பிடிச்சவன் என்றார்கள். எனக்கும் சந்தேகம் ஒண்ணுங் கிடையாது. உதார் பேசும் வெட்டி வீரமணியே அவன். ஒரே இரைச்சலாப் பேசுவான். ஹோஹோவென்று சிரிப்பான். தெருவில் அந்தப் பக்கம் யாரோடுஅவன் பேசினாலும் இந்தப்பக்கம் நமக்கு துல்லியமாக் கேட்கும். நளின நாசூக்கு தெரியாத பயல். கண்ட கருமான்கிட்டயும் போய் ஹிஹின்னு இளிச்சி நட்பு கொண்டாடுவான். பேச்சில் வியாபார சாமர்த்தியம் காட்டவே மாட்டான் என்றாலும் அதுதான் அவன் வியாபார வெற்றி. ஊர்ப் பொதுக்காரியம், திருவிழா என்று நல்லது நடந்தால் அவன் கை முன்நீளும். பொதுசேவை, யாருக்காவது பாராட்டு விழாவா, வருடாந்திர படகுப்போட்டியா, அறுவடை நாளா… தாராளமாய் நிதி தருவான். தந்தாலும் அங்கே அவன் ஸ்திதி கூடியதாக அவன் நினைத்தால் அது தப்பு. எல்லாரும் அவன் நிதியை எந்தச் சலனமுமற்று வெறுமனே வாங்கிக்கொண்டார்கள்.
ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. மருத்துவரின் மனைவி ஒருதடவை எங்கள் வீட்டுக்கு வந்து அத்தையுடன் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது எமிலி உள்ளே வந்து மாமனிடம் ஜார்ஜ் கெம்ப் அவரைப் பார்க்க வந்திருப்பதாய்த் தெரிவித்தாள்.
”அப்டிபயா? அழைப்பு மணி வசல்லேர்ந்தில்ல கேட்டது, எமிலி?” என்றாள் அத்தை.
”ஆமாம் அம்மா, வாசல்பக்கமா அவர் வந்திருக்காரு.”
சட்டென அங்கே அபத்தமான மௌனம் நிலவியது. அந்த விநோதமான சம்பவத்தை எப்படி அணுகுவது என்றே எல்லாருக்கும் ஒரு குழப்பம். யார் முன்வாசலுக்கு வரணும், யார் பக்கவாட்டு வாசல் வழியே வரணும், புறக்கடை வழியே யார் அனுமதிக்கப்பட வேணும்… எல்லாம் அறிந்த எமிலியே தடுமாறினாள். எங்க அததை நல்லாத்மா… சரி இதைப் பெரிசு பண்ண வேணாம் என அடக்கி வாசித்தால், மருத்துவரின் மனைவிக்கு அவன் முன்வாசலுக்கு வந்து நின்றதில் சிடுசிடுப்பு இருந்தது. கடைசியாய் மாமன் சமாளித்தபடி பதில் பேசினார்.
”வரவேற்பு அறையில் அவனை உட்கார வை, எமிலி. நான் தேநீர் அருந்திவிட்டு போய் அவனைப் பார்க்கிறேன்…”
ஆனால் ஜார்ஜ் கெம்ப் தன்னுலகத்தின் நுரைததும்பிய வெள்ளவோட்டத்தில் இருந்தான். ஒரே ஆரவாரப் பேரிரைச்சல். என்ன ஊர் இது… அழுது வழியுது… அதை விழிக்க வைக்கப் போகிறேன். நம்ம ஆள்சேர்த்துக்கிட்டு அருமையா சுற்றுலா கிற்றுலா என ரயிலில் சுத்தி வரலாம். என்ன தப்பு? மார்கேட் போல நாம முயற்சி செய்யக்கூடாதா? நம்ம ஊருக்குன்னு ஒரு மேயர் கூட இருக்கலாம்… ஃபெர்ன் பே பாருங்க. அதுக்கு மேயர் இருக்காரு.
”யார் அந்த மேயர்ன்றே? இவனேதான். அப்பிடியொரு யோசனை அவனுக்கு” என்று பிளாக்ஸ்டேபிள் சனங்கள் பேசிக்கொண்டார்கள். உதட்டைச் சுழித்தார்கள். ”அணையப்போகிற விளக்கு ஆர்ப்பாட்டமா எரியும்பாங்க…”
மாமன் சொன்னார். ”குதிரையைக் கூட்டிப்போய்த் தண்ணிகாட்டலாம், அது தானே குடிச்சாதான் ஆச்சி. அவன்கிட்ட யார் சொல்றது.”
எனக்கும் எல்லாரையும் போலத்தான் அவனைப் பற்றி ஒரு இகழ்ச்சியான யோசனை. நடுத் தெருவில் என்னை அவன் என் கிறித்தவப் பேர் சொல்லிக் கூப்பிட்டு, நிறுத்தி, தரதம்மியம் இல்லாமல் சத்தமாய்ப் பேச ஆரம்பித்தபோது எனக்கு கோபம். ”என் பையன்களோட கிரிக்கெட் விளையாட வரியாடே?” என உரிமையாய்க் கூப்பிட வேறு செய்கிறான். அவர்களுக்கும் என் வயசுதான். அவர்கள் ஹாவர்ஷாமின் இலக்கண வகுப்புகளுக்குப் போகிறார்கள். எனக்கும் அவங்களுக்கும் எந்த சங்காத்தமுமே இருக்க முடியாது.
மேரி ஆன் சொன்னதெல்லாம் எனக்கு அதிர்ச்சியாகவும் கிளர்ச்சியாகவும் இருந்தது. அதையெல்லாம் நம்பவும் இயலவில்லை. நான் நிறைய நாவல்கள் வாசித்திருக்கிறேன். பள்ளிக்கூடத்திலும் இதுபோன்ற சமாச்சாரங்களில் நிறைய ¢கேள்விஞானம் கொண்டிருக்கிறேன்… அதைவைத்து இந்தக் காதல் என்பது வாலிபக் கிறுக்கு என்று நினைத்திருந்தேன். இந்த தாடி வெச்ச மனுசன், அதும் மூணு குழந்தைகளின் அப்பன்… இவர்களுக்கெல்லாங் கூட இந்தக் காதல் வரும் என்பதே திகைப்பாய் இருந்தது. நான் நினைச்சேன், கல்வயாணம்னு ஒண்ணு ஆய்ப்போச்சின்னா இதெல்லாம் முடிஞ்சா மாதிரி, என்று. முப்பது வயசுக்குப் பிறகுங் கூட காதல் கத்திரிக்காய்னு அலையிறது கண்றாவிக் கூத்தாய் இருந்தது.
”என்ன சொல்ல வர்றீங்க? அவங்க ‘எதும்’ பண்ணினாங்களா?” என்று மேரி ஆனைக் கேட்டேன்.
”நான் கேள்விப்பட்டபடி, ரோசி கேன்… எதையும் செய்யாமல் விடல்ல. அதுல சிக்கிய ஆம்பிளைகள் எத்தனையோ பேர். ஜார்ஜ் பிரபு ஒராள் மாத்திரம் அல்ல….”
”ஆனால்… இதச் சொல்லுங்க? அவளுக்கு ஏன் குழந்தையே பொறக்கல்ல?”
நான் நாவல்களில் வாசித்திருக்கிறேன். எவளாவது இப்பிடி முட்டாள்த்தனமா ஆட்டம் ஆடினா உடனே குழந்தை உண்டாயிருவா. அப்படி குழந்தை உண்டாகிற காரணங்களையெல்லாம்… ரொம்ப கவனமா தேர்ந்தெடுத்த மறைக்கப்பட்ட வாக்கியங்களில் நாவலில் எழுதியிருக்கும். பல இடங்களில் எழுத்துக்குளுக்கு பதில் தொடர் ****** ஆஸ்ட்ரிச் குறிகள் இருக்கும். எது எப்பிடியானாலும் அடுத்த பக்கத்தில் அவள் தவிர்க்கவியலாமல் தாயாகியிருப்பாள்.
”நல்லதிர்ஷ்டம் பாதி, சாமர்த்தியம் பாதின்னு வெச்சிக்கலாம்…” என்றாள் மேரி ஆன். சட்டென தன்னிலை மீண்டாள். தட்டுகளை உலர வைத்துக்கொண்டிருந்தவள் அதை முடித்துவிட்டு எழுந்தாள். ”எலேய், உனக்கு இந்த வயசுல எவ்வளவு தெரியணுமோ, அதுக்கு மேலயே தெரிஞ்சு வெச்சிருக்காப்ல இருக்கு,” என்றாள்.
”ம். எனக்குத் தெரியும்…” என்றேன் நான் நெஞ்சு நிமிர்த்தி. ”அதைப்பத்தி என்ன? நான் இப்ப வளர்ந்த பையன். இல்லியா?”
”ஒண்ணு மாத்திரம் சொல்வேன்…” என்றாள் மேரி ஆன். ”திருமதி ரீவ்ஸ் அந்த ரோசியைத் துரத்தி விட்டாளோ இல்லியோ, இந்த ஜார்ஜ் பிரபு உடனே அவளுக்கு ஹாவர்ஷாமில் இருக்கிற பிரின்ஸ் ஆஃப் வேல்சின் இறகுகள், கடையில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டான். பிறகு தவறாமல் அவனும் அங்கே போய்வர ஆரம்பித்தான். இந்தச் சரக்கை விட அங்க சரக்கு ஒசத்தின்னு ஒண்ணுஞ் சொல்ல முடியாது…. தெரிஞ்சுதா?”
”அது சரி, அப்பிடின்னா டெட் திரிஃபீல்ட் ஏன் அவளைக் கல்யாணங் கட்டிக்கிட்டாரு?” என்று கேட்டேன் நான்.
”அது வேற கதை…” என்றாள் மேரி ஆன். ”சிறகுகள் விடுதிலதான் திரிஃபீல்ட் அவளைப் பார்த்தது. அவருக்கு கல்யாணங் கட்ட எவ ஒருத்தியும் கிடைக்கல்லியோ என்னமோ. நல்ல கௌரவப்பட்ட எந்த குடும்பப் பெண்ணும் அவரைக் கட்ட ஆசைப்பட மாட்டாள்.”
”அந்தாளுக்கு அவளைப் பத்தித் தெரியுமா தெரியாதா?”
”அதை அவர்கிட்டியே கேளேன்டா.”
நான் மௌனமாகி விட்டேன். எல்லாம் புதிராய் இருந்தது.
”இப்ப அவள் பார்க்க எப்பிடி இருக்கா?” என்று கேட்டாள் மேரி ஆன். ”அவ கல்யாணத்துக்குப் பிறகு நான் அவளைப் பார்க்கல்ல. அந்த ரயில்வே விடுதில அவ போட்ட ஆட்டத்துக்குப் பிறகு அவளோட நான் பேசறதையே விட்டுட்டேன்.”
”நல்லாதான் இருக்கா” என்றேன் நான்.
”ம். அவகிட்ட என்னைப்பத்திச் சொல்லி, என்னை ஞாபகம் இருக்கான்னு கேளு. என்னைப் பத்தி என்ன சொல்றா பாருடா” என்றாள் மேரி ஆன்.

6
எப்பிடியும் மறுநாள் காலையில் திரிஃபீல்ட் தம்பதியருடன் வெளிய கிளம்பீர்றது… நான் முடிவு பண்ணிவிட்டேன். இது மாமனிடம் சம்மதம் கேட்டு நடக்கிற கதை இல்லை. நாளைக்கு அவருக்கே தகவல் தெரிஞ்சி நாம மாட்டிக்கலாம்… அதை ஒண்ணும் செய்யேலாது. ஆனால் டெட் திரிஃபீல்ட் கேட்டால் சம்மதம் கிம்மதம்லா வாங்கியாச், என்று சொல்லிறலாம்.
ஆனால் நான் பொய்சொல்ல வேண்டியே இருக்கவில்லை. அன்று மதியவாக்கில் கடலில் அலை ரொம்ப உயரமாய் எழுவதாய் இருந்தது. கடலில் ஒரு குளியல் போடலாம் என நான் போனேன். நகரத்தில் மாமனுக்கு என்னவோ வேலை என்று அவரும் கூட பாதி தூரம் வந்தார். பியர் அன்ட் கீ கடையை நாங்கள் தாண்டுகிறோம்… டெட் திரிஃபீல்ட் அதைவிட்டு வெளியே வருகிறார். எங்களைப் பார்த்தவர் நேரே மாமனைப் பார்க்க வந்தார். அந்த சகஜம் எனக்கே திகிலூட்டி விட்டது.
”மதிய வணக்கம், போதகரே…” என்றார். ”என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லியோ. சின்னப் பையனா இருக்கறச்ச நான் கோரஸ் பாடியிருக்கிறேன். டெட் திரிஃபீல்ட். மிஸ் உல்ஃப்போட கோர்ட் குமாஸ்தாதான் எனது பழைய கவர்னரா இருந்தது.”
மாமன் வாஸ்தவத்தில் ரொம்ப தடுமாத்தமான ஆள். சட்டெனப் பின்வாங்கினார்.
”அட ஆமாமா… எப்பிடி இருக்கீங்க? ச். உங்கய்யா… தவறிட்டார்னு கேள்விப்பட்டேன்.”
”உங்க சின்ன மருமானை நான் பரிச்சயம் பண்ணிக்கிட்டேன். நாளைக்கு என்கூட ஒரு சவாரி அவன் சைகிள்ல வர நீங்க விடுவீங்களோன்னு எனக்கு ஒரு இதுவா இருந்தது. தனியா இப்பிடியே சைகிள்ல போறது ரொம்ப அலுப்பான விஷயம்லியா? நான் ஃபேர்ன் சர்ச் வரை போகணும், ஒரு பித்தளை ஜாமானை பொலிவேத்திட்டு வரணும்.”
”நீங்க சொல்றது நல்ல விஷயம்தான். ஆனா…”
மாமன் வேணான்னு முன்னால், திரிஃபீல்ட் இடைப் புகுந்து பேசினார்.
”பய எந்தச் சேட்டையும் பண்ணாமல் நான் பாத்துக்கறேன். அவனே கொஞ்சம் இப்பிடி மெருகேத்தக் கத்துக்க ஆசைப்படுவான்னு நினைக்கிறேன். அவனுக்கும் இந்த வேலை பிடிக்கும். நானே அவனுக்கு உப்புத்தாளும் மெழுகும் குடுத்திர்றேன்… செலவு ஒண்ணும் உங்களுக்கு இல்லை.”
மாமனுக்கு ஒரு நிலைப்பட்ட மனசு கிடையாது. இந்தாள் டெட் திரிஃபீல்ட் என்னாத்துக்கு இவனுக்காக தாளும் மெழுகும் எடுத்து வரணும்… அந்த நினைப்பே அவருக்குப் படபடத்து விட்டது. என்னைப் போகவேண்டாம் என்று சொல்ல வந்ததை மறந்தார்.
”அவனே தாளும் மெழுகும் எடுத்திட்டு வருவான்…” என்றார் அவசரமாக. ”அவன்கிட்ட நிறையத் துட்டு இருக்கு. கடைக்குப் போயி இனிப்பு அது இதுன்னு கண்டதைத் தின்னு உடம்பைக் கெடுத்துக்கறதுக்கு, இப்பிடிச் செலவழிக்கலாம் அவன்…”
”சரி. அவன் ஹேவார்ட் போனால், அங்க உள்ள தாள்க்கடையில் நான் என்ன வாங்கிப் போனேன்னு கேட்டு அதையே வாங்கிக்கலாம். குடுத்திருவாங்க.”
”நான் வர்றேன்…” என்றேன் கிளம்புமுகமாக. சட்னு கழட்டிக்கறது சாலச் சிறந்தது. மாமன் மனசு மாறக் கூடும். கிடுகிடுவென்று தெருவுக்கு அந்தாண்டை கடந்தோடினேன்.

தொடரும்
storysankar@gmail.com

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரிஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 12
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *