முன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்

This entry is part 41 of 44 in the series 30 அக்டோபர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

திரிஃபீல்ட் தம்பதியர் என்மேல் ஏன் இத்தனை பரிவு பாராட்டினார்கள் என்பதே புரியாப் புதிராய் இருந்தது. இயல்பான இதயத்தின் கனிவே அது. வேறு விளக்கம் இல்லை. சகஜமாய்ப் பேசாத சங்கோஜிதான் நான். என்மேல் டெட் திரிஃபீல்ட் ஆர்வப்பட்டார் என்றால் நானே அறியாத ஏதோ ஒன்றுதான் அதன் காரணமாக இருக்க முடியும். ஒருவேளை எனது கழுத்து உயர்த்திய கர்வத்தினால் அவர் கவரப்பட்டிருக்கலாம். ஒரு மிஸ் உல்ஃபின் கோர்ட் குமாஸ்தாவின் மகனையிட்டு எனக்கு ஒரு மட்டமான அபிப்ராயம் இருந்தது. அந்தாளோடெல்லாம் சகவாசம் வெச்சிக்கக் கூடாது, என்கிற தெனாவெட்டு. மாமன் அந்தாளை சோத்துக்குவீங்கி, அன்னக்காவடி தொம்மணக்கா என்கிறதாகக் கருதிப் பேசிவந்தார். அதனாலேயே ஒரு அலட்சியத்துடன் திரிஃபீல்டிடம் அவரது எதாவது புத்தகத்தை எனக்கு வாசிக்கத் தரும்படி நான் கேட்டேன். அவரும், அட உனக்கு அதில் சுவாரஸ்யமாய் எதும் இருக்காது, என்றபோது, சரி என்று அழுத்திக் கேட்காமல் விட்டும் விட்டேன்.
திரிஃபீªல்ட் தம்பதியருடன் நான் வெளியே வளையவருவதை மாமன் தடை சொல்லாததில், பிறகு நான் அவர்களோடு சுதந்திரமாகக் கலந்துறவாடஆரம்பித்திருந்தேன். மாமனும் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் சிலசமயம் கடலுக்குள் போனோம். சிலசமயம் நல்ல இயற்கைச் சூழல் செறிந்த இடங்களுக்கெல்லாம் ஒண்ணாய்ப் போய்வந்தோம். வாட்டர் கலர் வைத்து சில சமயம் திரிஃபீல்ட் வரையவும் செய்தார். அந்நாட்களில் சீதோஷ்ண நிலை அம்சமாய் இருந்ததா, அல்லது என் வாலிபத்தின் உற்சாகமா தெரியவில்லை… எனக்கு அந்த கோடை நாட்கள் விறுவிறுவென்று ஒன்றன் பின் ஒன்றாக பரபரப்பாகக் கழிந்தன. கிராமந்திரத்தின் பரந்த, பரவசப்படுத்தும் செழுமை எனக்கு ரொம்பப் பிரியமானதொன்றாயிற்று. சர்ச் மாறி சர்ச் நாங்கள் தூர தூரங்கள் பயணம் செய்தோம். பித்தளை சாமான்களையெல்லாம் மெருகேற்றித் தந்தோம். ஆயுதந் தாங்கிய வீரர் சிலைகளை, விரித்த குடையாட்டம் கவுன் அணிந்த பெண் விக்கிரகங்களைப் பொலிவாக்கினோம்.
டெட் திரிஃபீல்ட் என் உற்சாகத்தைக் கிளறிவிட்டவாறிருந்தார். சின்ன வேலைதான் என்றாலும் அவரது ஊக்கத்தில் நான் இன்னும் சுறுசுறுப்பாக பரபரவென்று மெருகேற்றினேன். மாமனிடம் என் தொழில் தேர்ச்சியையும் வந்து காட்டினேன். மாமனுக்கென்னன்னால்… நான் யார்கூடச் சுத்தினால் என்ன, சர்ச்சில் இருக்கிறவரை நல்ல விஷயந்தான் அது…
நாங்கள் வேலையில் மும்முரமாய் இருக்கையில், திருமதி திரிஃபீல்ட் வெளி முற்றத்தில் இருப்பாள். எதுவும் வாசிக்காமல், தையல் வேலை என்றெதுவும் கைக்கொள்ளாமல் வெறுமனே நிலாகாய்கிறாப் போல உட்கார்ந்திருந்தாள்… எந்த வேலையும் செய்யாமல் எத்தனை நாழிகை வேண்டுமானாலும்அவள் அலுப்படையாமல் உட்கார்ந்திருந்தாள். சில சமயம் நான் போய் அவளுடன் புல்வெளியில் கொஞ்சநேரம் உட்கார்ந்து கொள்வேன். என் பள்ளிக்கூடம் பத்தி அவளுடன் பேசுவேன். என் பள்ளிக்கூட சகாக்கள்பற்றிச் சொல்வேன். என் ஆசிரியர்கள் – பிளாக்ஸ்டேபிள் மக்கள்…. என்று என்னென்னவோ பேசுவோம். இன்னதென்று முன்தயாரிப்பற்ற இயல்பான நீரோட்டமாய்ப் பேச்சு நீளும். எதிலும் காலூன்றாத பேச்சு அது. என்னை, மிஸ்டர் ஆஷெந்தன், என்று மரியாதையாய் அழைத்து அவள் என்னை குஷிப்படுத்தினாள்.
என்னை அதுவரை யாரும் மிஸ்டர் போட்டு அழைத்ததாக ஞாபகமில்லை. அட ஆமா, நாம இப்ப வளர்ந்திறலையா, என்றிருந்தது. இன்னாலும் எவன் நம்மை மிஸ்டர் கிஸ்டர்னு கூப்பிடறான், சட்னு மாஸ்டர் வில்லி-ன்னு கூப்பிட்டு விடுகிறார்கள். விருப்பமே இல்லாமல் திரும்பிப் பார்ப்பேன்.
என்ன பேர் இது, எவனுக்குமே இந்தப் பேர் வெச்சிக்க இஷ்டம் இராது. எனக்கானால் இந்த – வில்லி, ஆஷந்தன்… ரெண்டு பேருமே பிடிக்கவில்லை. இதைவிட எத்தனையோ நல்ல நல்ல பேரெல்லாம் எனக்குன்னு மணிக்கணக்கா யோசித்துப் பார்ப்பேன். அதில் ஒரு பேர் ரோட்ரிக் ரேவன்ஸ்வொர்த். அந்தப் பேரில் சர்ர் சர்ர்ரென்று முழுத்தாள்களில் கையெழுத்திட்டுப் பழகியிருக்கிறேன். லுடோவிக் மான்ட்கோமரி – அதுகூட எனக்குப் பிடித்த பேர்தான்.
திருமதி திரிஃபீல்ட் பத்தி எங்க மேரி ஆன் சொன்னதையெல்லாம் என்னால் மறக்க முடியவில்லை. கேள்விஞானப்படி எனக்கு, கல்யாணம் ஆனபின்னால் அந்த ஆணும் பெண்ணும் என்ன செய்வார்கள் என்பது நான் அறிந்ததே. அதைப் பட்டவர்த்தனமாய் என்னால் சொல்லவும் முடியும்… என்றாலும் அந்த விஷயம் எனக்கு அத்தனை தெளிவாய் விளங்கத்தான் இல்லை. அட அது ஒரு வேலையா, என்றுதான் எனக்கு இருந்தது. அந்தக் காரியங்களில் எனக்கு மனசு ஒட்டிய இணக்கம், பிடிப்பு அல்லது நம்பிக்கை, ஏற்படவில்லை.
பூமி கோள வடிவமானது. இதை அறிகிறேன். ஆனால்… அது தட்டையானது, இதை உணர்கிறேன்!
திருமதி திரிஃபீல்ட் வெளிப்படையாய்ப் பேசுகிறவளாய் இருந்தாள். மனம்விட்டுச் சிரித்தாள் அவள். அவளது நடத்தையில் ஒரு இளமையான உல்லாசம், வெகுளித்தனம்… ஓரு குழந்தையின் அம்சம் இருந்தது. மாலுமிகளோடு சுற்றித் திரிகிற அடையாளம் அவளிடம் எனக்குக் கிடைக்கவில்லை. அதும் ஜார்ஜ் பிரபு போல தடித்தாண்டவராயன் கூடவெல்லாம் அவளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நாவல்களில் நான் படித்த கெட்ட பெண்கள், வில்லிகள் போல அவள் கிஞ்சித்தும் இல்லை. ஆனால் அவள் அத்தனை நேர்த்தியான பெண் அல்ல, அவள் பேச்சில் அந்த பிளாக்ஸ்டேபிள் வட்டாரக் கொச்சை, கவிச்சி இருந்தது. அவளது ஆங்கில இலக்கணப் பிழைகள் என்னைக் கலவரப்படுத்தின. ஆனாலும் அவளை எனக்குப் பிடித்திருந்தது. ஐய, இவளையா பழிபோடுகிறாள் மேரி ஆன்… அண்டப்புளுகு ஆகாசப்புளுகு எல்லாம்!
ஒருநாள் அவளிடம் மேரி ஆன் எங்கள் வீட்டு சமையல்காரி என்று சொல்லவேண்டி வந்தது.
”ரை சந்தில் உங்க வீட்டுக்கு அடுத்த வீட்டில் அவள் இருந்தாளாமே?” என்று சொல்லிவிட்டு, எந்த மேரி ஆன்… நான்அப்படி நபரைக் கேள்விப்பட்டதே இல்லை, என்று அவள் சொல்வாள் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் புன்னகைத்தாள். மின்னும் நீலக் கண்கள்.
”ஆமாமா… என்னை ஞாயிறு பள்ளிக்கு அவதான் அழைச்சிட்டுப் போவாள். என்னை அழாமல் வெச்சிக்கற கஷ்டமான வேலை அவளுக்கு பாவம். எதோ விகாரேஜுக்கு ஊழியமா அவள் போயிட்டதா கேள்விப்பட்டேன். இன்னும் அங்கயேதான் இருக்காளா என்ன! எனக்கு அவளை ஒரு மாமாங்கமாத் தெரியும்… திரும்ப அவளைப் பார்க்க முடிஞ்சால் கூட நல்லாருக்கும். அந்தப் பழைய காலம் பத்தில்லாம் பேசிட்டிருக்கலாமே… ஏய் என்னை அவளுக்கு ஞாபகப்படுத்துவியா. ஒரு சாயந்தரமா எங்க வீட்டுப் பக்கமா வரச்சொல்லு. சேர்ந்து தேநீர் அருந்தலாம்.”
தூக்கிவாரிப் போட்டது. நாங்கள் கிரயம் பேசிக்கொண்டிருக்கிற வீடு, திரிஃபீல்ட் தம்பதியர் வாழ்ந்த இடம். அங்கே ஒரு ‘ஜெனரல்’ கூட இருந்தார். மேரி ஆனை தேநீர் விருந்து என்று அழைக்க அவர்களுக்கு அந்தஸ்து கிடையாது. அவள் அங்கேபோய் தேநீர் அருந்துவது, எனக்கே அவமரியாதையாய்த் தான் அமையும். யார் யார் என்ன செய்யணும், அவர்கள் தகுதி என்ன… எதையுமே கணக்கில் கொள்ளாமல் இப்படியும் வாய்க்கு வந்தபடி கோணாமாணான்னு யாரும் பேசுவார்களா? இந்த உறுத்தல் எனக்கு அடங்கவே யில்லை. மேரி ஆனுடனான கடந்த காலத்தையெல்லாம் கொஞ்சமும் இங்கிதமில்லாமல் நெருக்கஉணர்வோடு எப்படி சௌஜன்யமா பேசுகிறாள். மேரி ஆனின் தரம் இப்ப எவ்வளவோ உயர்திருக்கிற நிலையில் இதையெல்லாம் அவர்கள் வாயைத் திறந்து பேசுவதே அதிகபட்சமானது.
ஊர்ல எல்லாவனுக்குமே தங்கள் தரத்தைவிட மேம்பட்ட நினைப்பு, பாவனை கொண்டாட வேண்டி ஒரு அரிப்பு. ஆனால் அப்படி அவர்கள் நடிக்கிறாப்போலவும் தெரியவில்லை. அவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். அவர்களை மறைத்து மூடி முன்னே இருக்கிறது ஒரு ‘கௌரவத் திரை.’ அவர்களைச் சட்டென்று சட்டையைப் பிடித்தாற்போல நிறுத்தவோ, விசாரிக்கவோ உங்களால் முடிகிறது இல்லை.
மதிய உடைகள் அணிந்திருக்கிறார்கள் பெண்கள். பெரும்பாலும் அவர்கள் நம் கண்ணில், கணிப்பில் தட்டுப்படுவதே, சிக்குவதே கிடையாது. நமக்கு அவர்களைப் பற்றி பெரும்பாலான விஷயங்கள் தெரியவே வருவது இல்லை. சகஜமாய் அவர்களை ஒரு மதிய உணவு வேளையில் போல அணுக முடிவது இல்லை. அந்நேரங்களில் அவர்கள் உணவுப் பதார்த்தங்களை ஏராளமாக மேசையில் அடுக்கிக்கொண்டு உற்சாகமாய் உரையாடுவது போல் தோன்றினாலும் அந்தரங்கமாய் அவர்கள் யார், அதை உங்களால் கண்டுபிடிக்க இயலாது. வீடே கலவரப்பட்டு கலகலத்துப் போனலும அவர்கள் காட்டிக்கொள்ளாத கலகலப்புடன் அலட்சிய பாவம் காட்ட வல்லார். அவர்களில் ஒருத்தியின் பிள்ளை ஒரு நடிகை பின்னால் சுத்தி கல்யாணம் முடித்திருக்கலாம். அதைப்பற்றி அவர்கள் சபையில் பேசார்.
பக்கத்து வீட்டுக்காரனும் அடுத்த வீட்டுக்கார அம்மாளும், யப்பா… என்ன கிரகச்சாரம்டா இது, என நீட்டி முழக்கலாம். கூடி உணவு உண்ண நேர்கையில் எவரும் அதைப்பற்றி மூச்சுக் காட்ட மாட்டார். எல்லாம் காதுக்குப் பின்னால், தலைமறைந்த பின்னால் பேசுகிற வம்புதான். ‘மூன்று கேபிள்கள்’ விடுதியை வாங்கிய மேஜர் கிரின்கோர்ட்…. அவர் மனைவி அதில் சூதாட்ட வணிகம் செய்கிறாள். கௌரவப்பட்ட காரியமா அது? அதைப்பற்றி மேஜரோ அவர் சம்சாரமோ நாளிதுவரை வெளியே வாய்திறந்ததே இல்லை. கல்லுளிமங்கன். மங்கி. நாங்களும் அவர்களின் முதுகு பின்னால் இதைப்பற்றி குசுகுசுத்தோம் என்றாலும், திருமதி கிரின்கோர்ட்டின் பெரிய வருமான கேந்திரமான தட்டுமுட்டு சாமான் விற்பனை பற்றி மறந்து கூட பேச்செடுக்கவில்லை.
பெத்த பிள்ளை பண்ணிய காரியம் பொறுக்காமல், அவனை, தம்பிடி காசு உனக்குக் கிடையாதுடா, எனத் துரத்திவிட்ட அப்பனை, ஆத்தாளை நேரே நாங்கள் விசாரித்ததே இல்லை. என் அம்மாவைப் போல, ஒரு வழக்கு வாய்தாக்காரனைக் கல்யாணம் முடித்த பெண்ணை வீட்டுப்பக்கம் தலை வெச்சிப் படுக்காதே, என விரட்டியடித்த பெற்றோர் பற்றி எல்லாமே பின்கதைகள் தாம்.
இதையெல்லாம் எத்தனையோ பார்த்தாச்சி. இது இப்படித்தான் எனவும் நான் புரிந்துகொண்டேன். எனக்கு என்ன அதிர்ச்சியாய் இருந்தது என்றால், டெட் திரிஃபீல்ட் ஹால்பார்னில் உள்ள ஒரு உணவு விடுதியில் சப்ளையர் வேலை பார்த்ததை அவரே சாதாரணமாச் சொன்னார்… இதுல என்ன இருக்கு என்கிறாப் போல. வீட்டைவிட்டு கடலைப் பார்க்க அவர் ஓடிப்போனார். ஆனால் அதில் ஒரு சுவாரஸ்யம் கிடைத்தது எனக்கு. இது… சொல்லிக்கற சமாச்சாரமா என்ன?
நான் வாசித்த புத்தகங்களில் பையன்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள். ஓடிப்போகிறார்கள். சிலர் பெரும் பணக்காரனாக மாறுமுன் பரபரப்பான சம்பவங்கள் திருப்பங்ள் நிகழ்கின்றன. யாராவது ஒரு அதிகாரியின், பிரமுகரின் பெண்ணைக் கைப்பிடிக்கவும் அவர்களுக்கு வாய்க்கிறது….
ஆனால் டெட் திரிஃபீல்ட் மெய்ட்ஸ்டோனில் ஒரு வாடகைக்கார் ஓட்டி வயிற்றைக் கழுவியிருக்கிறார். பர்மிங்ஹாமில் ஒரு லாரியாபிசில் குமாஸ்தா வேலை பார்த்திருக்கிறார். ரயில்வே ராணுவ முகாமைத் தாண்டி மதுவிடுதிப் பக்கமாக நாங்கள் ஒரு முறை சைகிளில் போகிறோம்… திருமதி திரிஃபீல்ட் இது நம்ம வாழ்க்கைல சகஜந்தானே எல்லாருக்கும் என்பதைப் போலச் சொன்னாளே பார்க்கணும்… ”ஏல கேட்டியா, இங்கதான் நான் ஒரு மூணு வருஷம் போல வேலை செஞ்சேன்!”
நான் பார்த்த முதல் வேலை இது, என்றாள். அதுக்கப்பறம் நான் ஹேவர்ஷாம் இல்ல, அங்க ‘ஃபெதர்’சுக்கு வேலைக்குப் போயிட்டேன். கல்யாணம்னு ஆகிப்போனப்பறம் அந்த வேலையை விடவேண்டியதா ஆயிட்டது!…
பழைய நினைவுகளில் அவள் உற்சாகப்பட்டுச் சிரிக்கவும் செய்கிறாள். நான் என்ன பேச, என் முகம் கலவரத்தில் செக்கச் செவேல்னு ஆயிருந்தது.
இதேபோல இன்னொரு சந்தர்ப்பத்தில் நாங்கள் ஃபெர்ன் பே வழியாக ஒரு நெடிய பயணம் முடிந்து திரும்பி வருகிறோம் கடுமையான. வெயில். எங்கள் எல்லாருக்குமே நா வறண்டு தாகமான தாகம். நாம டால்ஃபின் போயி ஆளுக்கு ஒரு பீர் சாப்பிடலாம்… என்கிறாள் அவள்! போனாளா, அங்கே மதுவிடுதியில் பரிசாரகப் பெண்ணிடம் எத்தனை இயல்பாய்ப் பேசுகிறாள். அட வெட்கக்கேடே, அவளிடமே போய்… இந்த வேலையை நான் ஒரு அஞ்சு வருஷம் பாத்திருக்கேன் இவளே… அப்டி இப்டின்னு அரட்டை வேறு. தூக்கிவாரிப் போட்டது. விடுதி முதலாளி எங்களோடு சேர்ந்து கொண்டார். நம்ம டெட் திரிஃபீல்ட் ஒரு பானம் எடுத்துக்கொள்ளும்படி அவரை உபசாரம் பண்ண, உடனே இந்த லங்கிணி… நம்ம பரிசாரகி… அவளுக்கும் ஒரு ‘போர்ட்’ (போர்ச்சுக்கல் நாட்டு சிவப்பு ஒயின்.) வழங்கலாம்… எனகிறாள் ஊக்கமாய். என்ன கூத்து இது… அப்புறம் அவர்கள் எல்லாருமாய் வியாபாரம் பத்தியும், விடுதிகளின் சிரமங்களைப் பத்தியும்… யய்யா இந்த விலைவாசி… என்றும் பேசித் தீர்க்கிறார்கள். எனக்குத் தாளவில்லை. சட்டென எழுந்துவிட்டேன். உடம்பே வெப்பமாய் இருக்கிறதா, குளிர் வாட்டுகிறதா எனச் சொல்லவியலாத திகைப்பு. நான் என்ன செய்யணும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்?… நாங்கள் வெளியே கிளம்பியபோது திருமதி திரிஃபீல்ட் குறிப்பிட்டாள்.
”அருமையான பொண்ணு அவ… டெட், அந்தப் பரிசாரகி. அவ இன்னும் தன்னை உற்சாகமா வெச்சிக்கலாம்… நான் அவகிட்ட சொன்னேன். இது கஷ்ட ஜீவனம்தா£ன். ஆனால் இன்னும் சந்தோஷமா நாம இருக்கலாம். சுத்தி என்ன நடந்திட்டிருக்கு எல்லாம் நாம பார்க்கறோம்தானே. அங்க சீட்டு விளையாடினால், பெரிய இடத்தில் கல்யாணம் முடிக்கணும். அவ கைல பார்த்தேன்… நிச்சயதார்த்த மோதிரம். ஆனால் யாரையும் அவள் காதலிக்கவில்லை போலிருக்கிறது… பார்க்கிற பசங்கள் அவளை, அந்த மோதிரத்தைப் பார்த்ததும் கேலியடிக்காமல் விட்டிர்றாங்களாம். ‘அதற்காக சுமமாவாச்சும் போட்டிருக்கிறேன்…’ என்கிறாள்.”
திரிஃபீல்ட் வாய்விட்டுச் சிரித்தார். அவள் என்னைப் பார்க்கத் திரும்பினாள்.
”நான் விடுதியில் பரிசாரகியாய் இருந்தபோது அற்புதமாய்க் கழிந்தது காலம்… ஆனால் அப்பிடியே போய்ட்டிருக்க முடியாது தான். நாம எதிர்காலத்தைப் பத்தியும் யோசிச்சாக வேண்டிருக்கு.”
அடுத்து வெச்சா பாரு. அதான் ஆப்பு.
செப்டம்பர் மாதம் பாதி முடிந்திருந்த காலம். என் விடுப்புநாட்கள் முடியப் போகின்றன. என் மண்டைக்குள் பூராவும் திரிஃபீல்ட் தம்பதியர் ஆக்கிரமிப்பு. என்றாலும் வீட்டில் அந்தப் பேச்செடுக்க அனுமதி இல்லை.
”அவங்களைப் பத்தி எதுவும் எங்களுக்குக் கேட்கவேண்டாம். நாள்பூரா தொண்டைல கசப்போட அதையே நாங்க நினைச்சி அல்லாடிட்டிருக்க வேண்டாம்…” என்றார் மாமன். ”நாம பேசிக்க ஆயிரம் விஷயம் இருக்குடா… இதைவிடப் பொருத்தமா. ஆனால் ஒண்ணு… டெட் திரிஃபீல்ட் பாரிஷ்ல பொறந்தவர்ங்கறதாலும், தினப்படி உன்னை அவர் சந்திக்கிறதாலும்… அவர் நம்ம சர்ச்சுக்கு வந்து போகணும்னு நான் எதிர்பார்க்கிறேன்.”
ஒருநாள் திரிஃ)பல்டிடம் நான் சொன்னேன். ”மாமன் நீங்க சர்ச்சுக்கு வரணும்னு விரும்பறாரு.”
”ம். அடுத்த ஞாயிறு இரவு நாம சர்ச்சுக்குப் போலாம் ரோசி.”
”ஆ போலாமே…” என்றாள் ரோசி.
மேரி ஆனிடம் அவர்கள் வருகிறதைச் சொன்னேன். எங்கள் சர்ச் கூடத்துக்கு வெளியே பின்வரிசை சாய்வுபெஞ்சு ஒன்றில் உட்கார்ந்து காத்திருந்தேன் நான். முன் பகுதியில் என்ன நடக்கிறது என்று என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. என் இந்தப் பக்கத்து நபர்களின் செயல்பாடுகளில் தெரிந்தது – திரிஃபீல்ட் தம்பதியர் ஆஜர்! அடுத்த நாள் நேரம் கிடைத்தபோது மேரி ஆனிடம் நான் கேட்டேன். ”அவங்களைப் பாத்தீங்களா ஆன்?”
”ம். அவளைப் பார்த்தேன். பார்த்தேன்…” என்றாள் சுரத்தில்லாமல்.
”பிரார்த்தனைக் கூட்டம் முடிஞ்சி அவகூட பேசினீங்களா?”
”ஐய நானா?” என்று சீறினாள். ”சமையல் அறையை விட்டு வெளியே போடா! தினப்படியும் வந்துர்றான், என்னாவாச்சும் தொணதொணன்னுகிட்டு… இப்பிடி வந்து வந்து மறிச்சால் நான் எப்பிடி என் சோலியப் பார்க்கறது…?”
”சரி சரி…” என்றேன் நான். ”உடனே புலம்ப ஆரம்பிச்சிறாதே.”
”எல்லாம் உன் மாமன் குடுக்கற இடம். இஷ்டப்படி ஆட்டம் போட உன்னை அவர் லகானை விட்டுர்றாரு. எல்லா ஆம்பளைங்களையுமே அவ இடுப்புல முடிஞ்சி வெச்சிக்குவா. வெட்கங் கெட்ட மூதேவி. சர்ச்சுக்கு என்ன திண்ணக்கமா வர்றான்றே. டே ஓடுறா… வாய் பாத்திட்டு நிக்கறே. எனக்கு தலைக்கு மேல வேலை கெடக்கு.”
ஏன் இப்ப இப்பிடி என்னைத் தள்ளிவிடுகிறாள் என்று புரியவில்லை. அப்புறம் நான் திருமதி திரிஃபீல்ட் பத்தி பேச்செடுக்கவில்லை. ஆனால் ரெண்டு மூணுநாள் கழித்து எதோ வேலை என்று நான் சமையலறைப் பக்கம் போனேன்… எங்கள் விகாரேஜ் இல்லத்தில் ரெண்டு சமையல் அறைகள் இருந்தன. சின்ன அறையில் சமையல் செய்வார்கள். பக்கத்திலேயே பெரிய அறை ஒன்று – அப்ப அந்தக் காலத்தில் பேராயர்கள் எல்லாரும் தங்கள் மகா குடும்பத்தோடு கூடி, உறவும் சுற்றமும் சூழ விருந்து உண்பார்களோ என்னவோ. அன்றைய வேலைகள் முடித்து பெரிய அறையில் மேரி ஆன் உட்கார்ந்து எதோ தைத்துக்கொண்டிருந்தாள். ஆறிய உணவு மீதம் இருந்தது. அதை ராத்திரி எட்டு மணிக்குச் சாப்பிட்டு விடலாம் என்று முடிவானதில், மாலைத் தேநீர் நேரத்திற்குப் பிறகு அவளுக்கு வேலையற்றுப் போயிற்று.
அப்போது மாலை மணி ஏழு. பகல் பின்வாங்கிக் கொண்டிருந்தது. வெளியே சந்தைக்குப் போக சாமான் வாங்க வேலையெல்லாம் எமிலியின் முறை. அவள் வெளியே போயிருந்தாள். எதிர்பார்த்தபடி மேரி ஆன் தனியே இருந்தாள். ஆனால் நடைவழி நான் போகிறேன்… பேச்சுக்குரலும் சிரிப்பொலியும்… ஆ மேரி ஆனைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்… அடர் பச்சை விளக்குத்தொப்பியில் மறைத்த ஒளி, சமையல் கூடம் கிட்டத்தட்ட இருளாய்க் கிடந்தது. மேசைமேல் டீ குடுவையும் கோப்பைகளும். தன் சிநேகிதியுடன் நேநீர் அருந்திக் கொண்டிருந்தாள் மேரி ஆன். நான் கதவைத் திறக் – பேச்சு சட்டென நின்றது. அடுத்து ஒரு குரல்.
”மாலை வணக்கம்!”
திடுக்கென்றது. அந்தத் தோழி வேறு யாருமல்ல – திருமதி திரிஃபீல்ட். என் ஆச்சர்யத்தைப் பார்த்து மேரி ஆன் சிரிக்கிறாள்.
”ரோசி கேன் என்னோட ஒரு டீ சாப்பிடலாமேன்னு வந்திருக்கிறாள்…” என்றாள் ஆன். ”பழைய நாட்களை அசைபோட்டுட்டிருக்கம் நாங்க.”
மேரி ஆனை அப்படி சட்டென நான் எட்டிப்பிடித்ததில் அவளுக்குச் சிறிது கூச்சம் இருந்தது. ஆனால் அதில் அவளைவிட எனக்குத்தான் கூச்சம் அதிகம்… திருமதி திரிஃபீல்ட் அதே விகல்பல்மில்லாத ஆனால் குறும்புப் பார்வையை மேரி ஆனைப் பார்க்க வீசினாள். அவளுக்கு இந்தச் சூழலில் ஒரு வில்லங்கமும் இல்லை. ஏனோ நான் அப்போது அவள் உடையை கவனித்தேன். அவளது உடை அத்தனை படாடோபமாக இருந்து நான் பார்த்ததே இல்லை. வெளிர் நீல வகையறா. இடுப்பில் இறுகிக் கிடந்தது. நீண்ட முழுக்கை. நீளமான பாவாடை. கீழ விளிம்பில் பூ வேலைப்பாடுகள். கருப்பு வண்ண பெரிய நார்த்தொப்பி. அதில் பெருங்கொத்தாய் ரோஜாப்பூக்கள், இலைகள். வளைவு வளைவாய் ஒரு வில் டிசைன் வேறு. கண்டிப்பாய் ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் வருகையில் அவள் அதை அணிவாளாய் இருக்கும்.
”மேரி ஆன் அவளே வந்து என்னைப் பார்ப்பாள்னு நான் காத்திருந்தால் ஒரு யுகமே கழிஞ்சிருமாய் இருந்தது. அதான் சரி நானே வந்து பாத்திறலாம்னு வந்தேன், பார்த்தாச்சி…”
மேரி ஆன் நெளிந்தபடி புன்னகை பூத்தாள். ஆனால் இவள் வந்ததில் அவளுக்கு மகிழ்ச்சியே என்று தெரிந்தது. யார் வந்து பார்த்தால் என்ன, சந்திச்சிட்டீங்க இல்லியா… என்றபடி அவர்களை விட்டு அகன்றேன். வெளித் தோட்டத்துக்கு வந்திருந்தேன் நான். வேலை ஒண்ணுங் கிடையாது அங்கே. சும்மா லாந்தித் திரிந்தேன். தெருவைப் பார்க்க நடந்துபோனேன்.
நுழைவாயிலைப் பார்த்தேன். இரவு இறங்கியிருந்தது. யாரோ ஒரு மனிதர் குறுக்கும் மறுக்குமாய் நடந்துகொண்டிருந்தார். அந்தாளை நான் சட்டை செய்யவில்லை. என்றாலும் மனிதன் இங்குமங்குமாய் வட்டமடித்துக் கொண்டிருந்தார். அட யாருக்கோ காத்திருக்கிறாரா என்ன… ஒருவேளை அது டெட் திரிஃபீல்டாய் இருக்கலாம் என்றிருந்தது. வெளியே போய் அவரைப் பார்க்க நினைக்கையில் அந்த மனிதர் நின்று, தனது குழாயைப் பற்ற வைத்த வெளிச்… அது ஜார்ஜ் பிரபு!
இங்க என்ன பண்ணிட்… ஆ திருமதி திரிஃபீல்ட்டுக்காகக் காத்திருக்கிறானப்வோவ்… என் இதயம் எகிறிக் குதிக்கிறது. நான் ஏற்கனவே இருளில்தான் இருந்தேன் என்றாலும், இன்னும் புதரான பகுதிக்குள் பம்மிக்கொண்டேன்.
அப்படியே ஒரு சில விநாடிகள் காத்திருந்தேன். இல்லத்துப் பக்கவாட்டுக் கதவு திறக்- திருமதி திரிஃபீªல்ட் வெளியே வர, மேரி ஆன் வழியனுப்புகிறாள். சரளை நடைபாதையில் சரசரப்புகள். வாயில் பக்கம் வந்து கதவைத் திறக் – க்ளிக் – கிறாள். அந்தச் சத்தத்தில் சுவிட்ச் போட்டாப்போல ஜார்ஜ் பிரபு தெருவைக் கடந்து இந்தப் பக்கம் வந்தான். அவள் வெளியே வருமுன் அவளை எட்டி அவள் கையைப் பற்றுகிறான். அப்படியே ஆரத் தழுவிக் கொள்கிறார்கள். அவளது சன்னச் சிரிப்பொலி.
”ஏய் தொப்பியை நசுக்கிறாதே…” என முணுமுணுக்கிறாள்.
அவர்களுக்கும் எனக்கும் ஒரு மூணடி இடைவெளி கூட இராது. ஐயோ என்னைப் பார்த்து விடுவார்களோ என்று பதறியது. இதென்ன வெட்கக்கேடு, என்று வெடவெடத்தது. ஒரு நிமிடம் போல அவளை அப்படியே கைப்பிடிக்குள் வைத்திருக்கிறான் பிரபு.
”நாம தோட்டப் பக்கமாப் போயிறலாம்…” அவன் ரகசியம் பேசுகிறான்.
”இல்ல. அந்தப் பையன் அந்தப் பக்கமாப் போனான். நாம வயல் பக்கமாப் போலாம்…”
அவர்கள் கதவுக்கு வெளியே போனார்கள். அவளது இடுப்பை வளைத்துப் பற்றியிருந்தான் அவன். அப்படியே இருளி ல் அவர்கள் கரைந்து போனார்கள். இப்போது என் இதயம் முட்டிமோதித் தவிப்பது எனக்கே கேட்கிறது. மூச்சே திணறுகிறது. பார்த்த காட்சிகள் அயர்த்திவிட்டன என்னை. என் மூளையே, வேலை செய்யுதான்னே தெரியவில்லை. இதை உடனே யாரிடமாவது சொல்லிவிடப் பரபரத்தது. ஆனால் அது ரகசியம் அல்லவா? இதை நான் காபந்து பண்ணிக் காப்பாற்ற வேண்டும் அல்லவா? அந்த நினைப்பே என்னை மேலும் கிளர்ச்சிகொள்ள வைக்கிறது. மெல்ல தள்ளாடி வீட்டை நோக்கித் திரும்பி நடக்கிறேன். பக்கக் கதவு வழியாகவே உள்ளே நுழைகிறேன். கதவுச் சத்தம் கேட்டு மேரி ஆன் கூப்பிட்டாள்.
”யாரது… மாஸ்டர் வில்லி?”
”ஆமாம்.”
சமையல் கூடத்துக்குள பார்த்தேன். மேரி ஆன் ராத்திரிச் சாப்பாட்டுக்கு எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள்.
”ரோசி கேன் இங்க வந்தது என்னைப் பார்த்தது பத்தி நான் உங்க மாமன் கிட்டச் சொல்லப்போறதில்லை…” என்றாள் என்னைப் பார்த்து.
”சே வேணாம்” என்றேன் நான்.
”எனக்கே ஆச்சர்யம்தான்… அவ வந்தது. இந்தப் பக்கத்துக் கதவில் தட்டற சத்தம்… திறக்கறேன்… ரோசி நிற்கிறாள். அசந்திட்டேன். அப்ப சின்னக் காத்தே என்னை விழுத்தாட்டிருமா இருந்தது. ‘ஹாய் மேரி ஆன்…’ன்னு கூப்பிட்டாள். என்ன நடக்குதுன்னு யூகிக்குமுன்னாடி… அப்பிடியே என்னைக் கட்டிக்கிட்டு என் மூஞ்சி முகரையெல்லாம் முத்த மாரி பொழிஞ்சிட்டாள். உள்ள வா, அப்டின்னு இனியும் கூப்பிடாமல் எப்பிடி சொல்லு? சரி, உள்ள கூப்பிட்டாச்சி, ஒரு வாய் டீ குடுக்காமல் எப்பிடி சொல்லு?”
தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொள்கிற பாவனை இருந்தது அதில். என்ன சௌஜன்யமா உட்கார்ந்து பேசிச் சிரிச்சி அரட்டை அடித்தார்கள்… ஆனால் பேசறதென்னமோ வேண்டாவெறுப்பா உள்ளே விட்டாப்ல… என்றெல்லாம் நான் கிடுக்கி போடவில்லை.
”அவ அத்தனைக்கு மோசமில்லை… இல்லியா?” என்று கேட்டுவைத்தேன்.
மேரி ஆன் புன்னகைத்தாள். கொஞ்சம் கறைபடிந்து அரித்த பற்கள்தாம் என்றாலும் அவை அப்போது இதமாய் இருந்தது.
”அது என்னன்னு சொல்லத் தெரியலடா… அவளாண்ட நமக்குப் பிடிச்ச மாதிரி எதோ இருக்கத்தான் இருக்கு. இங்க அவ இருந்த ஒருமணி நேரம்போனதே தெரியல்ல. எல்லாராண்டயும் அப்பிடி இனிமையா பழகறா அவ. அவ போட்டிருந்த உடை… ஒரு கஜம் 13.11 விலையாக்கும். அதை நம்பித்தான் ஆகணும். அவளுக்கு எல்லாமே ஸ்படிகமா ஞாபகம் இருக்குடா. சின்னவளா இத்தினியூண்டு பொம்மையா அவ இருத்தப்ப அவ முடியை நான் எப்பிடி வாரிவிடுவேன்… அவ டிஃபன் சாப்பிட உட்காரு முன்னாடி அவளோட குஞ்சுக் கையை நான் எப்பிடி அலம்பி விடுவேன்… எல்லாம் சொல்றா. சில சமயம் அவளை எங்க கூட தேநீர் சாப்பிட அனுப்புவாள் அவம்மா. எழுதின சித்திரம்தான் போ… அழகு சொட்டும், அப்பிடி இருப்பா அந்த வயசில்.”
கடந்த காலம் பற்றிய சிறகடிப்பில் விநோத சுருக்கங்கள் கொண்ட அவளது முகம் லேசான வருத்தத்துடன் வீங்கித் தெரிந்தது. ”ஹ்ம்…” என ஒரு பெருமூச்சு விட்டாள். ”நாட்ல அவளைப்போல எத்தனையோ கேடுகாலங்கள் இருக்காங்க… அவளுகளுக்கு இவ ஒண்ணும் பழுதில்லைன்னு வெய்யி. என்ன, மத்தவங்க அழுத்தமா கமுக்கமா இருக்காளுக. இவளைப் பத்தி எல்லாருக்கும் தெரியுது. கொஞ்சம் சபல புத்தி, மத்தவளை விட அவளுக்கு கொஞ்சம் அது தூக்கலா இருக்கு. அடுத்தவளுகளும் பொறாமைலதான் இவளை வாரித் தூத்தறாங்க, அவளுகளுக்கு இப்பிடி வாய்ப்பு அமையாத பொறாமை தான் அது!”

தொடரும்
storysankar@gmail.com

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49அந்நியர்களின் வருகை…
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *