முன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்

This entry is part 37 of 39 in the series 4 டிசம்பர் 2011

 

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

ஆனால், எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி இந்த விமரிசகர்கள் எழுதியது எல்லாமே வெறும் கண்துடைப்பு. அவரது படைப்பில் காணப்பட்ட யதார்த்தமா அவரது மிகப்பெரிய திறன்? அல்லவே அல்ல. அதில் கண்டெடுத்த அழகியல் கூறுகளா, அவையும் அல்ல. கடல் பயணம் மேற்கொள்ளும் பாத்திர வார்ப்புகளா என்றால் அவையும் இல்லை. கவிதையாய் அவர் எழுதிக்காட்டிய கடல் அரித்த உப்பங்கழிகளோ அல்ல. புயலோ அமைதியோ என அவர் வர்ணனைகளும் அல்ல. அவர் எழுத்தில் இடம்பெறும் குட்டிக் குட்டி கிராமாந்திரங்களா… தாத்பர்யம் என்னவென்றால், இவற்றை கால காலமாக அவர் எழுதி ஒரு வாசிப்புப் பழக்கத்தை அவர் உருவாக்கியிருந்தார். நிறைய எழுதிக் குவித்திருந்தார் அவர்.

நம்ம மனித குலத்துக்கே ஒரு பழக்கம், மூத்தோரை வழிபடு. பெரியோரைப் போற்று. அதிலும் நம்ம இங்கிலாந்தில் எந்த நாட்டையும் விட இந்த வயசாளி வழிபாடு ரொம்ப அதிகம். மத்த நாட்டுக்காரர்கள் முதுமையை அவர்களின் உடல் தளர்ச்சி என்று அல்லாமல் கருத்தளவில் மரியாதை தந்தார்கள். நாமதான் நடைமுறையிலேயே அதைக் காட்டிக்கொள்ளும் பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறோம். இப்ப பாருங்கள், நம்மூர் மழலையர் பள்ளியில் குரலே இல்லாத ஒரு கிழட்டுக் குரலில் ‘ப்ரைமா டோனா’ (பாலர் பாடல்கள்) கேட்கச் சொல்வது பிள்ளைகள் செய்த பாவம் அன்றி வேறென்ன? கையைக் காலை அசைத்தாலே நொறுங்கிப்போகிற பாடாவதி நடனக்காரிகைகளை வேறெந்த நாட்டுக்காரனும் காசு கொடுத்துவிட்டு வந்து உட்கார்ந்துபார்த்து கைதட்ட மாட்டான். இடைவேளைப் பொழுதில் அதைப் பாராட்டி வேறு பேசுகிறான்கள். ”ஏ ஜார்ஜ் சார், ஆடினானே அவனுக்கு எப்பவோ வயசு அறுபது கடந்தாச்சி!”

ஆனால் நடனக்காரனை விட்டுவிடலாம். அரசியல்வாதிகளையும், எழுத்தாளனையும் பார்க்கையில் இவர்கள் தொகை பிசிர்கள்தான். ஒரு சமூகப்பணி வகிக்கிறவன் தனது சுயமான புன்னகை, அரிதாரம் பூச நேராமல் இருக்கும்போதே, அலுப்பாக மாறுமுன்னமேயே பணியில் இருந்து விடைபெற்றுக் கொள்ள வேண்டும், என்பேன். ஒரு எழுபது வயது வரை பதவியை விடாமல் பிடித்து மூச்சுத்திணறிக் கொண்டிருக்க வேண்டாம். அதேபோலத்தான் எழுத்தாளனும் நல்ல ஆரோக்கியமான இளம் வயதிலேயே, தன் எழுத்தின் ஆகச் சிறந்த பருவத்திலேயே இடத்தைக் காலி பண்ணிவிடுவது சாலச் சிறந்தது.

நாற்பது வயதில் ஒரு அரசியல்வாதி நாலு பத்தாண்டுகள் கடந்தவன் அல்லவா? ஒரு குமாஸ்தாவாகவோ, தோட்டக்காரனாகவோ, காவல்துறை நீதிமானாகவோ இருந்தால் அவனை வயசாளி என்கிறோம் அல்லவா? நாட்டை ஆளும் முதிர்ச்சியை அவன் எட்டித் தாண்டிவிட்டதாக நினைக்கிறோம். காலகாலமாக இந்த முதியவர்கள், தாங்கள் இளைஞர்களைக் காட்டிலும் ஞானவான்களாக உருவேற்றி வந்திருக்கிறார்கள். தாங்கள் முதியவர்கள் ஆகும்போதுதான் இந்த இளைஞர்களுக்கு இதன் அபத்தம் புரியவும் செய்கிறது. சரி அது அப்படியே இருக்கட்டும், நமக்கும் அந்த வயதில் ஆதாயம் தான் என அவர்களும் விட்டுவிடுகிறார்கள்.

இந்த அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளை அவர்கள் வயசுசார்ந்து யாராவது கணக்கெடுக்கிறார்களா? நாட்டை ஆள்வது என்பதற்கு இன்னுமான மன உறுதி தேவைப்படுகிறது. அதற்கு மூத்தோர் சரிப்படார்…. இந்த எழுத்தாளர்களுக்கு வயதாகி விட்டால் அதிக மரியாதை எதற்குதான் தரவேண்டும்? அது எப்பவுமே எனக்குப் புரிபடவில்லை. ரொம்ப காலமாய் நான் நினைத்தது என்னவென்றால், இந்த புதிய இளைஞர் பட்டாளம் எழுத வந்தபோது, கடைசி ஒரு 20 வருஷங்களுக்கு உருப்படியாய் எதுவும் எழுதாத இந்த முதியவர்களுக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு உள்ளூற ஒரு எதிரி ஒழிந்தான் என்று சந்தோஷப் படுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன். சரி சிலைக்கு மாலைபோட்டாப் போல உயர்த்திப் பேச அவர்கள் முடிவு செய்திருக்கலாம், என்றே தோன்றியது. எதிரி அடங்கிக் கிடப்பதே நல்லம்சம்தான், அப்போது அவனை மேலெழுந்தவாரியாக உதடால் பாராட்டுவதில் நமக்கும் ஒரு திருப்தி கிடைக்கிறது. உண்மையில் அவனை வெறுப்பேத்தி, ஓடிக்கொண்டிருக்கிற அவன் சைகிளில் குச்சியைக் கொடுத்த சந்தோஷம் நமக்கு வாய்க்கிறது.

ஆனால் இது மனிதத்தன்மை அல்ல தான். இதை வக்ரநவிற்சி என உலகம் சொல்லும்படி நான் வைத்துக்கொள்ள மாட்டேன். ஒரு தேர்ந்த ஆய்வுக்குப் பின் இதன் உண்மைக் காரணம் என்ன என நான் கண்டறிந்தேன். ஒரு சாதாரண மனிதனுக்கு மேலான எழுத்தாளனின் வாழ்க்கையின் கடைசித் தருணங்களை நாம் இன்னும் சுகமாகக் கழிக்க ஆறுதல் தரலாம். புத்திசாலிகள் ஒரு முப்பது வயதுக்கு மேல் எதையும் வாசிப்பது கிடையாது. வயது கடக்கவும் அவர்கள் இளமையில் வாசித்த புத்தகங்கள்தான் மனசில் ஒளிபெற்று மிளிர்கின்றன. இத்தனை வருடங்கள் கடந்தும் அவை உள்ளே கிடந்து மேலெழுந்து வருவதில் அந்த வாசகருக்கு அந்த எழுத்தாளர் மேல் மதிப்பு உயரத்தான் செய்கிறது. அதேசமயம் இந்த எழுத்தாளன் இப்பவும் எழுதிக்கொண்டிருக்க வேண்டும். சமூக கவனத்தில் அவன் இருக்கிறாப¢போல பார்த்துக்கொள்ள வேண்டும். எதோ ஒண்ணு ரெண்டு சிறந்த படைப்புகள் கொடுத்துவிட்டோம் என்ற நினைப்பில், ஓய்ந்து அக்கடா என அவன் இருந்துற முடியாது. ஒரு குவியல், ஒரு நாற்பது ஐம்பது படைப்புகளை வரிசை வாரியாக அல்லாமல் கூட அவன் ஜவுளிகள் போல கடைவிரிக்க வேண்டும். அதற்கு நிறைய எழுதவேண்டும். தொடர்ந்து வருட வருடங்களாக எழுதிக் குவிக்கத் தான் வேண்டும். உன் நடையில், எழுத்தின் கனத்தில் உன்னால் அவனைத் திணறடிக்க முடியவில்லையா, உன் மொத்தை மொத்தையான புத்தகங்களின் கனத்தால் அடி

தொடர்ந்து வருட வருடங்களாக எழுதித் தள்ளுவது ஒரு மேதைத்தன்மை என்றால், நம்ம எட்வர்ட் திரிஃபீல்ட் மாதிரி அத்தனை காலம் அத்தனை படைப்புகள் எழுதிக் குவித்த வேறு நபர் இல்லை. அறுபதுகளில் (1860 வாக்கில்) சமூக உயர்மட்ட சமூக மத்தியில், அவர்பேர் அடிபட்டவாறிருந்தது. அவரைத் தாண்டியும் பிறகு அது விரிவடைந்தது. அப்போது அவர்கள் மத்தியில் அவருக்கு நன்மதிப்பு, பேர் இருந்தது. நீதித்துறையின் ஆகச் சிறந்த பிரமுகர்களிடம் அவருக்கு  சிறு அளவில் நற்பெயர் ஏற்பட்டிருந்தது. ஆனால் இளைஞர்களிடையே அத்தனைக்கு சுரத்தாய் அவர் கொண்டாடப்படவில்லை. விஷயம் உள்ள ஆள்த்தான், என அவர் நம்பப்பட்டார். என்றாலும் ஆங்கில இலக்கியத்தின் மகத்தான கலைஞனாக அவர் உணரப்படவே இல்லை.

தமது எழுபதாவது பிறந்தநாளை அவர் கொண்டாடினார். அது சமூகப் பிரமுகர் வட்டத்தில் சிறு சங்கடத்தை உசுப்பி விட்டது. இவரை நாம கண்டுக்கவே இல்லை, என்கிற குற்ற உணர்ச்சி. கிழக்குக் கடலில் தூரத்தே எழும்பிய புயலெழுச்சி போல ஒரு சலனம் அது. ஏய் நமக்கு மத்தில இதோ ஒரு பெரிய நாவலாசிரியர் இருக்க, நாம அதை மறுக்கவும் இல்லை, அதைக் கொண்டாடவும் இல்லை. மறந்துட்டமேப்பா.

உடனே…

இப்போது அவரது புத்தகங்களை நூலகத்தில் தேடி வாசிக்கிறவர்கள் அதிகமானார்கள். அதன்பின் செல்சியிலும் புளூம்ஸ்பரியிலும், மற்ற இடங்களிலும் இருந்து ஒரு நூறு பேனாக்கள், ஒன்றுகூடி பேசிக்களிக்கிற பிரமுகர் வட்டத்தில் இருந்து சுறுசுறுப்பாகி பாராட்டுக்களைக் குவித்தன. அவரைப்பற்றிய ஆய்வுகள், குறிப்புகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள்… போகிற போக்கு குறிப்புகள் எனவோ பெரும் ஆழமான மதிப்பீடு என்றோ அவர் நாவல்கள் பேரடி பட்டன. இவற்றை மாங்கு மாங்கென்று அச்சிலும் போட ஒரு கோஷ்டி, அவரது நாவல்களை இப்போது முழு பகுதியாகவும், தேர்ந்தெடுத்த பகுதிகளாகவும் அச்சில் கிரயம் சின்னதும் பெரியதுமாய் வைத்து, அதிகபட்சம் ஒரு தங்கக்காசு அளவுக்குக் கூட விலை வைத்து வெளியிட்டார்கள். அவரது நடை ஆராயப்பட்டது. அவரது தரிசனம் எடைபோடப் பட்டது. உத்திகளை அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பிழிந்து காயப்போட்டார்கள்.

அடுத்த அஞ்சு வருஷத்தில், அவரது 75ம் வயதில் எல்லாரும் அவரை மேதை என ஒத்துக்கொண்டார்கள். 80 வந்தபோது நம் காலத்தின் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை என அவர் போற்றப்பட்டார். இந்தப் புகழ் அவர் கடைசிமூச்சு வரை நீடித்தது.

இப்போது நாம் நினைத்துப் பார்க்கிறோம். அட இந்தாள் இடத்தை நிரப்ப ஆளே அடுத்து இல்லை, என வருத்தத்துடன் யோசித்துப் பார்க்கிறோம். அவரைப்போல எழுபது வயதுக்காரர்கள் ஒரு சிலர் எட்டிப்பார்க்கிறார்கள் மனதில். அவர் ஸ்தானத்துக்கு அவர்களும் தகுதியானவர்கள்தாம்… என்றாலும் அவர்களிடம் என்னவோ ஊனம் இருக்கத்தான் செய்கிறது.

இதையெல்லாம் நான் விவரிக்க இத்தனை நேரமெடுக்கிறது. ஆனால் என் மனசில் இவை கடகடவென ஓடி யடங்கிவிட்டன. ஒண்ணுமேல் ஒண்ணாய் என்னுள் கவிந்து அலையடித்த நினைவுகள். அதிலும் ஒரு ஒழுங்கு இல்லை. ஒரு சம்பவம், அப்படியே ஒரு உரையாடல் பகுதி, அதுவும் இப்பத்தைய பேச்சுவார்த்தை அல்ல, எப்பவோ கேட்டது… வாசகன் மண்டை காய்ந்துவிடக் கூடாது என நான் ஒரு வரிசைப்பாட்டில் எழுதியிருக்கிறேன். எனக்கு அவை கன்னாபின்னாவென்று முன்பின்னாய் உள்ளே மின்னியடங்கினாலும் எனக்கு மூளைக்கோளாறு ஒண்ணுங் கிடையாது. இதில் இன்னொரு ஆச்சர்யம் எனக்கு, எத்தனை தூரத்தில் இருந்தபடி அவர்கள் பேசினாலும் அவர்கள் உருவமும், அந்தப் பேச்சும் துல்லியமாய்த் தெரிந்தது. என்ன, அவர்கள் உடைபற்றி அத்தனை தெளிவாய் என்னால் சொல்லக் கூடவில்லை, அவ்வளவே. என்றாலும் அவற்றைப் பற்றி ஒண்ணு சொல்லலாம், அவை நாற்பது வருடத்துக்கு முந்தைய நிகழ்வலைகள், ஆக அவர்கள், குறிப்பாக பெண்கள், அந்தக் காலகட்டத்தில் உடை அணிந்த மோஸ்தரே வேறு மாதிரியானது. பிற்பாடு அந்தக் காலம் சார்ந்து நான் பார்த்த சித்திரங்கள், புகைப்படங்கள்… அவற்றின் சாயல் வைத்து இப்போது நினைவு கூர்கிறேன்…

இப்படியாய் என்னுள் பலவித நினைவுகளைப் போட்டு முகாந்திரமில்லாமல் உழப்பிக்கொண்டிருந்தபோது, கதவருகே டாக்சி ஒன்று வந்து நிற்கிற சத்தம். வாசல் அழைப்பு மணி ஒலிக்கிறது. கணீரென்ற குரலில் அல்ராய் கியர் வேலைக்காரனிடம் சொல்கிறார். என்னை அவர் இந்நேரம் சந்திக்க வருவதை நான் அறிந்திருக்கிறேன். அனுமதித்திருக்கிறேன்… கியர் உள்ளே வருகிறார். தாட்டிக தேகம். அலட்டல். அதேசமயம் ஒரு வெளிப்படையான எளிமை. என் பழமை சார்ந்த நினைவுகளை யெல்லாம் சரசரவென்று இடித்துத் தள்ளியபடி என்னை ஆக்கிரமித்தார் அவர். மார்ச் மாதக் காற்றைப்போல அவர் தன்னுடனேயே ஒரு அழுத்தமான ஆளுமையைக் கொண்டுவந்தார்.

”இப்பதான் எனக்குள்ள யோசிச்சிட்டிருந்தேன்…” என்றேன் நான். ”ஆங்கில இலக்கிய மூதறிஞர் என்கிற வகையில் நம்ம எட்வர்ட் திரிஃபீல்டுக்கு அடுத்து அந்த இடம் யாருக்குத் தரலாம். நீங்க என்ன சொல்றீங்க பார்க்கலாம்.”

மந்தகாசமாய் மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தார் அவர். ஆனால் சட்டென அவர் கண்கள் ஒரு ஜாக்கிரதையுடன் உள்வாங்கின.

”அப்படி யாரும் இருக்கறதா எனக்குப் படல்ல” என்றார்.

”ஏன்? உங்களைப் பத்தி என்ன?”

”அட, என்ன சொல்லறீங்க… எனக்கு இன்னும் அம்பது கூட ஆவல்ல வயசு. எனக்கும் இன்னும் ஒரு 25 வருஷம் குடுங்க அப்பா…” அவர் சிரித்தார். ஆனாலும் என்னை அவர் கண்கள் உற்று அவதானித்தன. ஆள் ஆழம் பார்க்கிறாரோ என்கிற உஷார்ப் பார்வை அது. ”ஏ நீ எப்ப என் காலை வாருவேன்னு எனக்குத் தெரியவே தெரியாதப்பா, ஆனால் காலை வாருவேன்னு தெரியும்…” என்று மெல்லச் சொன்னார். ”ஆனால் எதிர்காலம் பத்தி ஞாபகங்கள் தோணுறதைத் தடுக்க முடியாது. இந்த எழுத்து விருட்சத்தில் சாதனையாளர் என்று பார்த்தால் எனக்கும் மேலே ஒரு 15 20 வருஷ மூத்தாரெல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் இடத்தைக் காலிசெய்யும் காலமும் வரத்தான் செய்யும். அவர்களும் போய்விட்டால் அப்புறம் யாரு? அந்த அல்தஸ் இருக்கிறான். ஆனால் என்னைவிட இளையவன் அவன். பூஞ்சை உடம்புக்காரன், உடம்பை நல்லபடியா அவன் கவனிச்சிக்கிறது கிடையாது.

… இனி எதும் விபத்துன்னு வந்தால், அதாவது சடாரென்று ஒரு மேதை எழுதப்புறப்பட்டு ஆள வந்தாலொழிய, இன்னும் ஒரு 20 – 25 வருஷத்தில், நான் சரியா இயங்கி வந்தால், அந்தப் பட்டம் என் கையில். அது சரிதான். எல்லாம்… தாக்குப் பிடிக்கறதுலயும், அதிக காலம் வாழறதுலயும் இருக்கு. கடவுள் அனுகிரகம் வேணும்.”

வீட்டுக்காரி தந்திருந்த கைநாற்காலியில் பொதுக்கென்று உட்கார்ந்தார் ராய். அவருக்கு விஸ்கியும் சோடாவும் தந்தேன்.

”வேணா, நான் ஆறு மணிக்கு முன்னால குடிக்கறது இல்லை” என்றார் அவர். தன்னையே பார்த்துக் கொண்டார். ”இப்படி தனியாள் சிற்றறைகள்… சுகமான இருப்பிடம் தான் இல்லியா?”

”ம். சொல்லுங்க, என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க?”

”ம். அதான் திருமதி திரிஃபீல்ட் உங்களுக்கு அழைப்பு விடுத்தாங்கல்லியா, அதுபற்றி கொஞ்சம் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன். இதை ஃபோன்ல பேசறதை விட, நேர்ல இன்னும் சௌக்யமாப் பேசலாம்னிருந்தது. இதுல ஒரு குறிப்பிட்ட விஷயம் என்னன்னா… திரிஃபீல்ட் வாழ்க்கை பற்றி நான் ஒரு புத்தகம் எழுதலாம்னிருக்கேன்.”

”அப்பிடியா, அதை அன்னிக்கு என்னாண்ட நீங்க சொல்லீர்க்கலாமே?”

அவர்மீது எனக்கு பிரியம் ஏற்பட்டது. ஆ, இவர் என்னை விருந்துக்கு என்று அன்றைக்குக் கூப்பிட்டபோதே, வேற எதோ விஷயம் இருக்குன்னு நான் யூகித்தேனே, அது சரி.

”அதைப் பத்தி நான் இன்னும் முழுசா தீர்மானம் பண்ணல்ல. திருமதி திரிஃபீல்ட் இப்பிடி ஒரு புத்தகம் நான் எழுதி கொண்டுவர சித்தமா இருக்கிறாள். தன்னால எந்த வழிலயெல்லாம் உதவி செய்ய முடியுமோ செஞ்சி தர்றேன்கிறாள். அவளிடம் இருக்கிற குறிப்புகள் அனைத்தையும் எனக்குத் தருவாள் அவள். ரொம்ப வருஷமா அவள் குறிப்புகளைச் சேகரித்து வந்திருக்காப்ல இருக்கு. எத்தனை சிரமமான வேலை அது, இல்லியா? அவ அத்தனை பாடுபட்டதுக்கு நானும் அதை நல்லாப் பண்ண வேணாமா? காமா சோமான்னு பண்ணிற முடியாதில்ல? பிற்காலத்தில் என்னைப் பத்தியும் அது நல்ல விஷயமாய்ப் பேசப்படும். ஒரு நாவலாசிரியன் அப்பப்ப இந்த மாதிரி முக்கிய விஷயங்களையும் எழுதினால் சனங்க அதிகம் மரியாதை குடுக்கறாங்க.

… நான் எழுதிய விமரிசனங்கள்… என் வியர்வை சிந்திய கடும் உழைப்பு. பெரிசா அவை வித்துறல. ஆனால் அவற்றை எழுதியதில் எனக்கு வருத்தம் ஒண்ணுங் கிடையாது. அதுங்களை எழுதினதால் எனக்கு தனி அந்தஸ்து கிடைச்சது. அவற்றை எழுதாமல் அந்த மரியாதை எனக்கு கிடைச்சே யிராது.”

”உங்க யோசனை சரிதான். திரிஃபீல்டோட கடைசி 20 வருஷத்தில் உங்களைவிட அவரோட நெருங்கிப் பழகியவர் யாரும் இல்லை.”

”அதுண்மைதான். ஆனால் நான் அவரோட முதன்முதலாப் பழகினப்பவே அவருக்கு 60 தாண்டிட்டது. நான் அவருக்கு எழுதியிருந்தேன், அவர் புத்தகங்களை நான் எத்தனை கொண்டாடுகிறேன்னு நான் எழுதியதைப் படித்துவிட்டு ஒருநாள் நேரில் வந்து சந்திக்கச் சொன்னார்.

… ஆனால் அவரோட முந்தைய பிராயத்து வாழ்க்கை பத்தி எனக்கு லவலேசமும் தெரியாது. திருமதி திரிஃபீல்ட் அவரை அந்தப் பழைய நாட்கள் பத்தி பேசச்சொல்லுவாள். அவர் சொன்னதையெல்லாம் குறிச்சி வைத்திருக்கிறாள். எப்பவாச்சும் டைரி எழுதி வெச்சது, கொஞ்சம் இருக்கு. தினசரி எழுதுகிற பழக்கம் இல்லை அவருக்கு. தவிர, அவரது நாவல்கள்… சொல்லவே வேணாம், ஓரளவு தன் சுய அனுபவங்கள் சார்ந்துதான், அதே இடங்களை வைத்துத்தான் அவர் எழுதியிருக்கிறார். இதெல்லாமும் இருந்துங் கூட அங்கங்க பெரும் பள்ளம் இருக்கு எனக்கு.

… எந்த மாதிரி அந்தப் புத்தகத்தை நான் எழுதணும்னு நினைக்கிறேன், அதைச் சொல்லிர்றது நல்லது. பொத்தம்போக்கா இல்லாமல் வாழ்க்கையை ஆழமா ஊடுருவிச் சொல்றா மாதிரி அதை நான் எழுத விரும்பறேன். படிக்கிற வாசகனை அது உணர்ச்சிகரமாய்த் தொடணும். அவரது இலக்கிய ஆளுமை பற்றி இதுவரை வெளிவந்த ஏராளமான விமரிசனங்கள், அவற்றையும் அது உள்ளடக்கிக் காட்ட வேண்டும். வாசிக்க முடியாத அளவு இறுக்கிப் பிடிச்சி எழுதக்கூடாது. அவர்மீது மக்கள் அபிமானம் கொள்ள வைக்கிற அதே சமயம், அதில் ஒரு தேடலும் கிடைக்கணும்… நுணுக்கமாய் விவரங்கள் அதில் தரணும். அதற்கு நிறைய மெனக்கெடத்தான் வேணும். திருமதி திரிஃபீல்ட் என்னால முடியும்னு நம்பறாப்ல இருக்கு.”

”உங்களால முடியும் ராய்!”

”ஆமாமா, பண்ணிறலாம்” என்றார் ராய். ”நான் விமரிசனகர்த்தா. நாவல்கள் எழுதுகிறேன்… எனக்குன்னு கொஞ்சம் இலக்கிய அடையாளமும் இருக்கு. ஆனால் இதுல மத்தவங்க தாமாகவே முன்வந்து எனக்கு உதவிகள் செய்யாத வரை… இதில் நான் இறங்கவே முடியாது.”

ஆக மெல்ல அவர் எங்க வர்றாரு, இந்த விஷயத்தில் நான் எங்க வர்றேன், என்று புரிய ஆரம்பித்தது எனக்கு. அதை முடிந்தவரை காட்டிக்கொள்ளாத அளவு முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்தேன். ராய் கொஞ்சம் முன் சரிந்தார்.

”அன்னிக்கு நான்கூட கேட்டேன். நீங்க எதாவது திரிஃபீல்ட் பத்தி எழுதறாப்ல இருக்கீங்களான்னு… அப்படியொண்ணும் யோசனை இல்லைன்னு சொன்னீங்க நீங்க. அது நிச்சயம்தானா?”

”சர்வ நிச்சயம்.”

”ம். சரி. அப்ப உங்ககிட்ட இருக்கிற தகவல்களை யெல்லாம் எனக்குத் தந்து உதவறதுக்கு எதும் ஆட்சேபணை உண்டா?”

”ஆகா, எய்யா, என்னாண்ட ஒரு தகவலும் இல்லை.”

”அட்ட…டா! நல்ல கதையா இருக்கே…” என்று நகையாடினார் ராய். ஏ குட்டி, ஆ காட்டு, என்று குழந்தையிடம் நைச்சியம் பண்ணும் மருத்துவர் பாணி! ”அன்னார் பிளாக்ஸ்டேபிளில் வாழ்ந்தபோது உங்களுக்கு அவரை நிறையத் தெரிந்திருக்கும். தெரியாமல் எப்படி?”

”அட அப்ப நான் சிறு பையன்.”

”இன்னாலும் என்ன? உங்க பக்கத்துல ஒரு எழுத்தாளன்… அதே ஒரு வித்தியாசமான அனுபவம், அதுனால நல்லா அது நினைவில இருக்கத்தான் இருக்கும், இல்லேன்னா எப்பிடி? அவர் ஒரு தனி ஆளுமை… ஒரு அரை மணி அவர் கூட இருந்தாலே உங்களை அவர் ஈர்த்துவிடுவார். ஒரு பதினாறு வயசுப் பையனா இருந்தாலுமே அதுதான் விஷயம். நீங்களும் சாமானியப்பட்ட ஆளில்லை, நல்ல கவனம் உள்ள தீவிர ஆசாமிதான். அந்த வயசிலும் அப்பிடித்தான் இருந்திருப்பீங்க.”

”அதில்ல. இப்ப அவருக்கு கிடைச்சிருக்கிற இந்தப் பல்லக்கு, அதில்லாமல் அந்தக் காலத்தில் அவர் யார் கண்ணுக்கும் மகா புருஷனா எப்பிடிப் பட்டிருக்க முடியும்? சுகக்கேடு வந்தப்ப நம்ம சார்ட்டட் அக்கவுண்டன்ட் அட்கின்ஸ் மேற்குக் கடற்கரைப் பக்கம் போயி, இடமும் தண்ணியும் மாத்திக்கிட்டு குடலைச் சரிபண்ணிக் கிட்டாரே, அது மாதிரி சனங்களுக்கு அறிமுகம் ஆகணும் அவர். எதிர்பாராத இடத்தில் சந்தித்த பெரிய மனிதர்னு மனசில் பதியும்.”

”ஹா, என் கதை என்னாவப் போவுதோ, நானும் சாமானியன், தோட்டக்கார சார்ட்டட் அக்கவுட்டண்ட்னு அறியப்படாமல் இருப்பேனாக!” என்று ரணப்படாமல் புன்னகைத்தார் ராய்.

”ம். அந்தக்காலத்தில் திரிஃபீல்ட் எப்பவும் போட்டிருப்பாரே ஒரு நிக்கர்போக்கர் சூட், படு கெட்டித்துணி. கெட்டிச்சாயம். அப்ப நாங்க ஒண்ணா சைகிளில் ஊர் சுத்துவோம். ஆனால் அவரோட சுத்தறப்பல்லாம் எனக்கு சங்கடமாவே, உறுத்தலாவே தான் இருக்கும்.”

”அதைப்பத்தி இப்ப கேட்க வேடிக்கையா இருக்கு. அவர் எதைப்பத்திப் பேசுவாரு உங்ககூட?”

”தெரியல்ல. பெரிசா எதுவும் பேசிக்கறது இல்லை நாங்க. அப்ப அவருக்கு கட்டடக்கலையில் ரொம்ப ப்ரீதி இருந்தது. பண்ணைத் தொழில் பத்திப் பேசுவாரு. வழியில் எதும் நல்ல விடுதி தென்பட்டால் உடனே வண்டியை நிறுத்தி உள்ளபோய் காட்டமா ஒரு குவாட்டர் அடிப்பார். விடுதிக்காரரிடம் பயிர், விளைச்சல், கரி விற்கிற விலை… அது இதுன்னு பேசிட்டிருப்பார்.”

நான் பாட்டுக்குப் பேசினேன். ராயின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. என்னை ஒரு அலுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார் ராய். அவருக்கு அலுப்பூட்டும் சந்தர்ப்பங்களில் இறுகிக் கடுப்பாகிறார் என்று சட்டென உணர்ந்தேன்.

ஆனால் திரிஃபீல்ட் அந்த நெடிய சைகிள் பயணங்களில், இப்போது பரிமாறிக் கொள்ளும்படி முக்கியமாய் எதுவும் பேசியதாய் எனக்கு நினைவு இல்லைதான். ஆனால் அந்த அனுபவம்… அது அப்படியே நினைவில் இருக்கிறது.

பிளாக்ஸ்டேபிளே அப்படி ஒரு விநோதமான இடம். கடல் பிரதேசம். பாறைகள் சிதறிக்கிடக்கிற கடற்கரை. இடையில் குளங்கட்டிய சதுப்பு நிலக் கடல்பகுதி. ஒரு அரை மைலுக்குள்ளேயே அடங்கிப்போகும் ஊர். கென்ட் பகுதியிலேயே வரப் பட்டிக்காடு என்றால் இதுதான். பசிய வயல்கள், எல்ம் மரத்தோப்புகள் நடுவே கட்டிய கயிறுகளாய்ச் சாலைகள். நல்லாளுமை கொண்டவை, அலாதி மௌனம் காப்பவை… கென்ட் சம்சாரிகளின் இல்லத்தரசிகளைப் போல. அடர்வண்ணத் தோல். வஜ்ரம் பாய்ந்த தேகம் வாய்த்த பொம்பளையாட்கள். கைத் தயாரிப்பு ரொட்டியும் பாலும் வெண்ணெயும் கிரீமும், புது முட்டையுமாய்த் தின்று கொழுத்த உடல்வாசிகள்.

சில சமயம் சாலை குறுகி கருவேல முள்வேலி கட்டிய சந்தாக ஒடுங்கிவிடும். ரெண்டு பக்கமிருந்தும் பச்சை எல்ம் மரங்கள் வேலியைத் தாண்டி வழியும். தலையைத் தூக்கிப் பார்க்க நீலத் துண்டாய் கொஞ்சம் வானம். ஆளைக்கடிக்கிற காற்றைக் கிழித்தபடி நாம் போகையில், உலகம் ஸ்தம்பித்து விட்டதாக உணர்வு தட்டும். வாழ்க்கை முடிவின்றி அப்படியே போகும்… என்று படும். சைகிளை நல்ல வேகத்துடன் சக்தியுடன் செலுத்திக் கொண்டிருந்தாலும் ஒரு ஹாயான விச்ராந்தி.

அப்போது பேச்சு அல்ல, யாரும் பேசாமல் கூட வருவதே சிலாக்கியம். தன் உலகம் தன் அனுபவம் என்கிற கணம் அது. அப்போது அடுத்த நபர் விருட்டென வேகமெடுப்பது எல்லாரிடமும் குபீரென்று சிரிப்பை வரவழைத்து விடும். உடனே எல்லாருமே மூச்சைச் சுருக்கி ஆன வேகத்தில் பறப்போம். ஏய், ஹா ஹுவென்று சத்தம், கேலிகள், எள்ளல்கள்… சொல்றாளுக்கும் சிரிப்பு. கேட்கிறாளுக்கும் பீரிடும் சிரிப்பு. இடையிடையே தோப்புகளும், பண்ணைவீடுகளுமாகக் கடந்து போகும். தோட்டங்களில் விதவிதமான மலர்கள். தெருவையொட்டிய குடிசை வீடுகள். வாசலில் தானியம் காயவைக்கிற முற்றங்கள். வெள்ளாவி சூளைகள். பழங்களைப் பழுக்க வைக்கிற இடங்கள். அரையாய்ப் பழுத்த பழங்களை மாலைபோல் கட்டி தொங்க விட்டிருப்பார்கள்.

சத்திரங்களோ விடுதிகளோ சம்பிரதாயப் பூச்சுகளற்ற எளிமையுடன் சிநேகபூர்வமாய் வரவேற்கும். குடில்களுக்கும் அவற்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை போல இயல்பான தங்குமிடங்கள் அவை. வாசலில் அங்கே ஹனிசக்கிள் கொடிவேய்ந்து கிடக்கும். அந்த விடுதிகளுக்கும் சாதாரண எல்லாரும் அறிந்த பெயர்களாய்த்தான் வைத்திருக்கும். ஜாலி மாலுமி. சந்தோஷ கலப்பையான். நங்கூரமும் கிரீடமும். சிவப்பு சிங்கம் – இப்படிப் பெயர்கள்.

தொடரும்

storysankar@gmail.com

 

Series Navigationஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *