ஜுமானா ஜுனைட் கவிதைகள்

Spread the love
1.சொல்லும் சொல்லு செல்வதெங்கே…? 
யாம் சொல்லும் சொல்லெல்லாம்
எங்கே செல்லும்…?
காற்றலையில் கரைவதனால்
வார்த்தைகள்
காணாமல் போயிடுமா..
கண்டபடி சிதறித்தான்
ஏழு
கண்டங்களும் உலவிடுமா..?
உலகின் காந்தமது
ஈர்க்கும் வடபுலந்தான்
விரைந்திடுமோ…
ஊசாட்டம் இல்லாத
இடமொன்று எங்கே
அங்கு சென்றொழிந்திடுமோ…
வார்த்தை பேசிடும் உதட்டளவில்
உறைந்திடுமோ
இல்லை
கேட்டிடும் இதயமெல்லாம் சென்று
குடியிருந்திடுமோ…
ஆறு குளம் மலைகளைத் தான்
அடைந்திடுமா
அண்டவெளி தாண்டி
வார்த்தை சென்றிடுமா…
இந்த வளி மண்டலத்தை
நிரப்பிடுமா…
இதுகாறும்
காணாதவொரு பொருளாய் ஆகிடுமா..?
இருதயத்தில் என்றென்றும்
இருந்திடுமா…
இரு தோள்புறத்தில் இருப்பாரை
அடைந்திடுமா…
ஜுமானா ஜுனைட், இலங்கை.
2.காலம் ஒரு கணந்தான்….! 
இன்று நீ சிரித்தாய்
நேற்று ஏனழுதாய்
நாளை ஏதென்பாய்…
அதை யாரும் அறிவதில்லையே…
ஆயுள் நீண்டிருக்கும்
அதிலே குறைவிருக்கும்
நேற்று கசந்நிருக்கும்
நாளை இனிப்பிருக்கும்
யாரும் அறிவதில்லையே…
எல்லாம் முடிந்த பின்தான்
முழுமை தெரியவரும்.…,
அப்போதும் முழுதாய் அறிந்தவர் யார்
எவருமில்லையே…!
கவலை கடலளவு
மகிழ்வோ மலையளவு
செல்வம் லட்ச அளவு
சொந்தம் அதிகபட்ச அளவு
காலம் “இம்”மென்றசைந்தால்
எல்லாம் எவ்வளவு..?,
வெறும்  எள்ளளவே…!
வாழும்போது வாழ்க்கை
நூற்றாண்டுகள்
போலத்தோன்றுமே
எல்லாம் முடிந்தால்
வாழ்ந்த காலங்கள்
எங்கே என்றெண்ணத் தோன்றுமே…
யுகமாய்த் தோன்றும்
கணமாய்த் தாண்டும்
இந்தக் காலங்கள் –
வாழ்க்கை நிலையே அல்ல நிஜமேயல்ல
என்று சொல்லிப் போகுமே…
நிலையாய் இருக்கும்
நிஜமாயிருக்கும்
வாழ்க்கை எங்கேயென்று
மண்ணில் வாழ்வு முடியும் போது
உண்மை தெரியுமே…!!
———————————————-
ஜுமானா ஜுனைட், இலங்கை.
Series Navigation2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்அன்பின் தீக்கொடி