s. பாலனின் ‘ உடும்பன் ‘

This entry is part 20 of 45 in the series 26 பிப்ரவரி 2012

தமிழ்த் திரையுலகில் இப்போது ஒரு அதிர்ச்சியான டிரெண்ட் வந்திருக்கிறது. கையில் ஒரு ஐம்பது லட்சம் இருந்தால் போதும், தன் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்த, ஏதாவது ஒரு விசயத்தை தினமும் நினைத்து, அதை ஒரு வெறியாகவே ஆக்கிக் கொண்டு, கொஞ்சம் கூட முன்னனுபவம் இல்லாமல், ஒரு திரைப்படத்தை எடுத்து விடுகிறார்கள். ஒரு திரைப்படம், பெரிய சமூக மாற்றத்தை ஏற் படுத்திவிடும் என்று, தப்பாகக் கனவு கொண்டிருப்பவர்களில் பாலனும் ஒருவர் என்பது இந்தப் படத்தைப் பார்த்தவுடன் தெரிகிறது.
கிராமங்களில், அவலை நினைத்துக் கொண்டு, உரலை இடிப்பது என்று சொல்வார்கள். பருந்தை நினைத்துக் கொண்டு பட்டாம்பூச்சியைப் பிடித்தால் கூட பரவாயில்லை. அது வெட்டுக்கிளியாக இருந்தால்.. அப்படித்தான் இருக்கிறது படம். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய்!
கதை நாயகனுக்கு உடும்பன் என்றே பெயர். உடும்பைக் கொண்டே, உயரக் கட்டிடங்களில் ஏறும் திருடன். ஆரம்பக் காட்சியில் ஒரே ஒரு நிஜ உடும்பைக் காட்டுகிறார்கள். மற்றதெல்லாம் கிராபிக்ஸ். அப்பன் திருடன். பிள்ளைகள் படிப்பு அதனால் கெடுகிறது. பெரியவன் அடியாள் வைத்து பணம் பறிக்கும் திருடன். சின்னவன் உடும்பு கேஸ். கொஞ்சம் விஞ்ஞானத் தகவல். உடும்புக் கறி சாப்பிட்டவன், நூறு பேரை அடிக்கும் திறன் கொண்டவன். உடும்புக் கறி சாப்பிட்டவுடன், உடல் களைக்க வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கறி ஜீரணமாகாமல் மரணம் நிச்சயம். அண்ணன் கொடூரன். ஆனால் உடும்புக் கறி அவனுக்கு ஒவ்வாது. கண்ணைக் கட்டிக் கொண்டு தன்னை வெட்ட வந்தவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் சமாளிப்பவன். தம்பி அண்ணன் மேல் பாசம் மிக்கவன். போலீஸ் ஐஜி வீட்டில் திருடப்போகும் உடும்பனிடம், பிள்ளைகளை பள்ளியில் சேர்த்ததால், வீட்டில் நகை, பணம் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார் ஐஜி. திருடுவதை விட பள்ளி ஆரம்பிப்பது பெரிய கொள்ளையாக இருக்குமே என்று நினைத்து மறைத்து வைத்த பணத்தை எடுத்து பள்ளி ஆரம்பிக்கிறான் உடும்பன். பெரியவன் ஜெயிலிலிருந்து திரும்ப வர, உடும்பனை ஐஜி வீட்டில் திருட முயன்றததற்காக போலீஸ் கைது செய்கிறது. ஆறு மாதத்திற்குப் பிறகு ஊர் வரும் உடும்பனை அண்ணன் வரவேற்கிறான் கோட்டு சூட்டு, கார் அடியாட்களுடன்! ஆறு மாதத்தில் உடும்பனின் பள்ளி இடிக்கப்பட்டு, அண்ணனால் தனியார் பணக்கார பள்ளியாக மாறிவிடுகிறது அது. அதிக கட்டணம், சீருடை என்று அமர்க்களப்படுகிறது. ஊர் மக்களுக்கு ஆண்டுக் கட்டணம் மூவாயிரம் ரூபாயில், பள்ளி நடத்த நினைத்த உடும்பனின் கனவு பறி போகிறது. ஊரிலிருக்கும் நலிவடைந்த அரசு பள்ளியைத் தத்தெடுத்து, மாடல் பள்ளியாக மாற்றுகிறான் உடும்பன். விருதெல்லாம் வாங்குகிறது அந்தப் பள்ளி. கடைசியில் தன் அண்ணனிடமிருந்து பள்ளியை மீட்டெடுக்க போராடுகிறான். அண்ணன் பள்ளியை, அயல்நாட்டினருக்கு விற்க முனையும்போது, உடும்பன் வளர்த்த உடும்பு கொல்லப்பட்டு, அதன் கறியைத் தெரியாமல் அண்ணனுக்கு கொடுத்து விடுகிறார்கள். அண்ணன் உடும்பால் சாகிறான். இதுநடுவில் பிஎச்டி பண்ண, தனியார் பள்ளியின் சீர்கேடுகளைப் பற்றி தீஸீஸ் எழுதும் கதாநாயகி மேல் உடும்பனுக்கு காதல் என்று ஒரு கிளைக்கதை.
படிக்கும்போது இருக்கும் கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யம் படம் பார்க்கும்போது இல்லை. இத்தனைக்கும் எழுத்து, இசை ( கொடுமை ), இயக்கம் என்று, எல்லாம் பாலனே. கிச்சாஸின் ஒளிப்பதிவில் குறையில்லை. அதிலும் ‘கண் கட்டி’ சண்டைக் காட்சியில் துல்லியம். பட்டுக்கோட்டையார், பாரதிதாசன் பாடல்களையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள். படத்தில் இம்பாக்ட் இல்லாததால், விழலுக்கு இறைத்த நீர்.
இந்தியாவின் பைக் ரேஸர் திலீப் ரோஜர் கதாநாயகன். யதார்த்தமான முக பாவங்கள் கொண்ட இவர் வேறு ஏதாவது படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் அறிமுகம் ஆக. நடனம், சண்டைக் காட்சிகளில் கூட தேறி விடுகிறார். ரிச்சா போல முன்னம்பல் முகங்கள் தான் இப்போது டிரெண்ட் போல இருக்கிறது. சானா அப்படித்தான் இருக்கிறார். அழகாக ஆடுகிறார். வாயசைப்புதான் அவுட் ஆப் சின்க். வி டி விஜயன் கிடைத்ததை வெட்டிக் கோர்த்திருக்கிறார். லெனினிடம் பயிற்சி பெற்ற இவர், கிடைக்கும் படங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
மலையைக் கல்லியிருக்கிறார்கள். மரப்பல்லிதான் கிடைத்திருக்கிறது.
#
கொசுறு
நகரத் தந்தை சைதை துரைசாமி பெருநகரமாகிவிட்ட போரூருக்கு வந்திருந்தார். சைரன் போட்டு வழி ஏற்படுத்தி அழைத்து வந்திருப்பார்கள் போல. நாலு முனை சந்திப்பில், மணிக் கணக்கில் காக்க வைக்கப்பட்டிருந்தால், சீக்கிரமே மேம்பாலம் கட்ட முனைப்பு ஏற்பட்டிருக்கும்.
போரூர் கோபாலகிருஷ்ணா தியேட்டர் அருகே உள்ளது காவல் நிலையம். ஆனால் இரவு ஒன்பது மணிக்கு, போக்குவரத்தைக் கட்டுப்படுத்த, ஒரு காவலர் இல்லை. கூடவே அந்தச் சந்திப்பில் கும்மிருட்டு. சாலையைக் கடப்பதற்குள் மரண கூண்டில் மோட்டார் சைக்கிள் தான்.
#

Series Navigationவிவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *