ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்

Spread the love

ராகவன் தம்பி
ஒரு பணிவான (அதே நேரத்தில் கொஞ்சம் நீளமான) குறிப்பு
இங்கு முகநூல் என்று தூய தமிழில் குறிப்பிடாமல் ஃபேஸ்புக் என்று எழுதியிருப்பதை வை
த்து சுத்தத் தமிழ்ப் பற்றாளர்கள் தயவு செய்து கோபம் கொள்ளக் கூடாது.

அதே போல, டிப்பணி என்கிற சொல்லும் துய தமிழ்ச் சொல் அல்ல. சொல்லப் போனால் தமிழ்ச் சொல்லே அல்ல. குறிப்புரை எழுதுவதை டிப்பணி எழுதுவது என்று ஒருகாலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் என்ன, இப்போதும் அதேதான். எனவே, ஃபேஸ்புக் போலவே, டிப்பணி என்பதும் தூய தமிழ் வார்த்தை இல்லை என்றாலும் கேட்பதற்கு ஒலி நன்றாக இருப்பதால் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரயோகத்தில் இருந்த ஒரு சொல்லை புளிபோட்டுத் தேய்த்து மெருகேற்றி அது எதிரிகளின் பாஷை என்றாலும்,மிலேச்சர்களின் பாஷை என்றாலும், நீசர்களின் பாஷை என்றாலும் ஓசைநயத்துக்காக டிப்பணி என்கிற சொல்லை எடுத்தாளலாம் என்று இந்த டிப்பணியாளன் துணிகிறான்.

மீண்டும் முகநூல் விஷயத்துக்கு வருவோம். ஒருமுறை நண்பரின் மகளிடம் இந்தத் தலைப்பை “முகநூல் உரையாடல்” என்று ஒரு சிறுகதை எழுதப்போகிறேன் என்று யதேச்சையாக சொன்னபோது “அங்கிள், நீங்க ஒரு பைத்தியம். Brand Name ஐ யாராவது தமிழ்ப் படுத்துவாங்களா? ராஜஸ்தான், ஹரியானா, உத்ரான்ஞ்சல்லே எல்லாம் Brand Name ஐ யாரும் தன்னோட பாஷைலே இப்படி கண்றாவியா மாத்தறது இல்லை. Rebok னா ஹிந்திலே Rebok னுதான் எழுதறாங்க. Face Book ன்றது ஒரு Brand Name. உங்களை மாதிரி லூசுங்கதான் வேறே வேலை இல்லாமே அதை தமிழ்லே மாத்தி எழுதுவாங்க” என்று அநாயாசமாக சொல்லிவிட்டுப் போய் விட்டாள். சின்னப் பெண் என்றாலும் அதிக விபரமாக இருக்கிறாளே என்ற பொறாமை கலந்த ஆச்சரியத்துடன் இந்த சிறுகதையின் தலைப்பை மேலே கண்டது போல மாற்றிவைக்கத் துணிந்தான் இந்த டிப்பணியாளன்.
அதனால்தான் ஈண்டு செம்மொலியான தமில் மொலியின் தூய்மையைக் குலைக்காமல் கொஞ்சம் உல்டா பண்ணித் தீர்மானித்தது நீங்கள் மேலே காணும் தலைப்பு.

இந்த டிப்பணியாளனுக்கு தமிழ் சரியாக எழுதத் தெரியவில்லை என்றோ, இந்தத் தலைப்பை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு வேறு எங்காவது அல்லது வேறு ஏதாவது வகையில் யாராவது ஆப்பு வைக்கத் துணிந்தார்கள் என்றால் அது அவனுடைய ஜென்மராசி அல்லது இறையருளின் பெருங்கருணையன்றி வேறில்லை என்று அந்த டிப்பணியாளன் எடுத்துக் கொள்வான்.

சரி. விஷயத்துக்கு வருவோம். ஃபேஸ்புக் உரையாடல் என்றவுடனே வேறு எதையோ தவறாக நினைத்து நீங்கள் உங்களை ஆயத்தம் செய்து கொள்வது இந்த டிப்பணியாளனின் கற்பனைத் திறனுக்கும் ஊகத்திறனுக்கும் அடிப்படையாக அமைந்த புலனாய்வுத் திறனுக்கும் வெள்ளிடை மலையெனப் புலனாகின்றது. ஃபேஸ்புக் உரையாடல் என்றால் கோக்குமாக்காகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதியை நம்முடைய புலவர்கள் யாத்துச் சென்றிருந்தாலும் சில நேரங்களில் பல சுவாரசியமான உரையாடல்களும், பக்தி ரசம் ததும்பும் உரையாடல்களும், பாசம் பொங்கி வழியும் உரையாடல்களும், குரோதங்கள் நிரம்பி வழியும் உரையாடல்களும், இலக்கிய நயம் பொங்கும் உரையாடல்களும், மப்பில் மிதக்கும் உரையாடல்களும் ஃபேஸ்புக் வெளியெங்கும் மிகச் சாதாரமாகக் காணக் கிடைக்கும்.

உதாரணத்துக்கு,

பெண்யானை – வணக்கம் சார். முகநூலில் உங்களை சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

(உரையாடல் எதுவாக இருந்தாலும் நாம் கண்டதை கண்டபடி தரவேண்டும் என்னும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் தருமத்தின் அடிப்படையிலும் இங்கே முகநூல் என்னும் சொல் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்று காண்க.)

பாட்டுக்காரன்- வணக்கம். நலமா? இந்த நேரத்தில் நீங்கள் எப்படி?

பெண்யானை- கணவரும் பிள்ளைகளும் ஊரில் இல்லை. எனவே கொஞ்ச நேரம் இணையத்தில் மேயலாம் என்று வந்தேன்.

பாட்டுக்காரன் – பார்த்து மேடம். மேய்கிறேன் என்கிறீர்கள். காளைமாடு ஏதாவது வந்து கசமுசா ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெண்யானை- கிண்டல் எல்லாம் இருக்கட்டும். மேடம் எல்லாம் எதற்கு. பெயர் சொல்லியே என்னைக் கூப்பிடலாமே?

பாட்டுக்காரன்- பெண்யானை என்ற பெயர் அத்தனை அழகான பெயராக இல்லையே என்று பார்க்கிறேன்.

பெண்யானை- சரியான கில்லாடி சார் நீங்க. மெதுவாக சீண்டி என் பெயரை வாங்கி விடலாம் என்று முயற்சிக்கிறீர்கள்.

பாட்டுக்காரன்- சத்தியமாக அப்படி எல்லாம் கிடையாது. நம்மை விட வயதில் மூத்தவர்களை மேடம் என்று அழைப்பதுதானே மரியாதை.

பெண்யானை- எனக்கு வயதெல்லாம் ஒன்றும் அதிகம் இல்லை. உங்கள் புகைப்படத்தை ஒரு வலைப்பூவில் பார்த்தேன். உங்களை விட நான் வயதில் சிறியவள்தான்.

பாட்டுக்காரன்- அதனால் உங்களை வா, போ என்று அழைத்துவிட முடியுமா?

(குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும். இங்கு சில நாகரிகம், கட்டுப்பாடு மற்றும் தமிழ்ப் பண்பாடு கருதி அவசியம் குறுக்கிட வேண்டியிருக்கிறது. இருதரப்பிலும் முயற்சிகள் எப்படி நடக்கின்றன என்று கற்றறிந்த ஆன்றோர்கள் இங்கு கவனிக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ளது போல ஃபேஸ்புக்கில் எப்போதும் ஒரேவகையான உரையாடல்கள் நடப்பது இல்லை. சில நேரங்களில் இப்படியும் உரையாடல்கள் அமைகின்றன).

நூலோன்- அய்யா வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

பிரணவன்-நான் நலம். நீங்களும் பிள்ளைகளும் நலமா?

நூலோன்- சமீபத்தில் நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தில் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதற்கு உங்களுடைய எதிரி எழுத்தாளர் அவருடைய தளத்தில் வாந்தி எடுத்ததையும் படித்தேன்.

பிரணவன்- அதுதான் வாந்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். பிறகு அந்த அசிங்கத்தைப் பற்றி எல்லாம் எதற்குப் பேசவேண்டும்? நமக்கு இடையில் இசை மற்றும் இலக்கியம் மட்டும் தவழ வேண்டும். இப்போது ருமேனிய மொழியில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழில் மொழிபெயர்க்க சரியான ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். வேறு எதைப்பற்றியும் என்னுடைய மனத்தளத்தில் இப்போதைக்கு இடமில்லை. என்னுடைய நேயர்களும் என்னைப் போலவே இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில் என்ன தவறு என்று நீங்களே சொல்லுங்கள்…

நூலோன்- ஒரு நிமிஷம் இருங்கள் ஐயா. எனக்கு அழுகையாகப் பொங்கி வருகிறது.

பிரணவன்- அழுகை வந்தால் அழுது தீர்த்து விடுங்கள். காயப்பட்ட மனதை கண்ணீர் மட்டுமே தூய்மையாக்க முடியும். கண்ணீர் தூய இதயத்தில் சுரக்கும் நல்லூற்று. அழுகை நஞ்சையும் அமுதமாக்கும் பெருமருந்து. என்னுடைய வாசகர்களும் குழுமத்தின் உறுப்பினர்களும் கோழையாக இருக்கலாம். ஆனால் வஞ்சகர்களாக இருக்கக்கூடாது. வஞ்சகர்கள் ஒருபோதும் இறைவனின் பிள்ளைகளாக மாற முடியாது.

நூலோன்- இப்போது என்னுடைய அழுகை இன்னும் அதிகமாகிறது. நீங்கள் மட்டும் சன்னியாசம் பெற்றிருந்தால் அல்லது காஷாயம் தரித்திருந்தால் அல்லது காஷாயம் தரித்தும் பெருமுடி வைத்திருந்தால் பல சாமியார்கள் முகவரி தெரியாமல் மறைந்திருப்பார்கள். உங்களின் நட்பு எனக்கு இறைவன் அளித்த பெருவரம். இந்தப் பிறவியில் உங்களைக் கண்டதும் பேராசானாக அடைந்ததும் என் பெரும்பேறு. கன்னாபின்னாவென்று அழத்தோன்றுகிறது. என்னால் முடியவில்லை.

இங்கு மீண்டும் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவேண்டும். மன்னிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. லேசாகக் கோபம் வந்தாலும் பழுதில்லை. ஆனால் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டால் ஒரு டிப்பணி எழுதுகிறவன் தன்னுடைய கடமையை சரியாக செய்யாதவன் என்ற பாவத்துக்கு ஆளாக நேரிடும். எனவே இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லியாக வேண்டும். ஃபேஸ்புக் உரையாடல் என்பது நீங்கள் வழக்கமாக நினைப்பது போல, காமுகர்களுக்கும் காமுகிகளுக்கும் அல்லது காமுகர்களுக்கும் ஏமாந்த வாசகியருக்கும் இடையில் மட்டுமே பொதுவாக நடக்கும் விஷயம் அல்ல. பரம முட்டாள்களுக்கும் வேஷக்காரர்களுக்கும் இடையிலும் பரவசத்துடன் விரிந்து படரும் உரையாடலும் இந்த ஃபேஸ்புக்கின் பக்கங்களில் மலரும் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதற்காகத்தான் மேற்கண்ட உரையாடலின் முக்கியமான பகுதியை மேற்கண்டவாறு வெட்டி ஒட்டியிருந்தோம்.

இப்போது ஃபேஸ்புக் உரையாடலின் இன்னொரு முகத்தை தரிசனம் செய்வோம். ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வேளை கெட்ட வேளைகளில் பிரவேசிக்கும் நங்கையர் யாராக இருந்தாலும் பொதுவாக மற்றவர்களை விட அதிகம் அல்லலுறுவர் என்பது ஐதீகம்.

அல்லி அரசாணி-அண்ணா நல்லாயிருக்கீங்களா?

மதனகாமராஜன்-நல்லாயிருக்கேம்மா. மாப்பிள்ளை எப்படி இருக்கார். பொண்ணுங்க எப்படி இருக்காங்க?

அல்லி அரசாணி-எல்லோரும் சௌக்கியம்ணா. அண்ணி எப்படி இருக்காங்கண்ணா

மதனகாமராஜன்-என்ன சொல்றது?

அல்லி அரசாணி-என்ன ஆச்சிண்ணா?

மதனகாமராஜன்-பரவாயில்லை விடும்மா. நம்ம தகுதிக்கு ஒத்துக்காத விஷயங்களை இப்போ பேசவேணாம்.

அல்லி அரசாணி-என்னண்ணா இப்படி தலையிலே இடியை எறக்கறே? என்ன ஆச்சு? அண்ணி கோபிச்சிக்கிட்டு எங்காவது போயிட்டாங்களா?

மதனகாமராஜன்-அவளுக்கு என்ன கோபம் வேண்டியிருக்கு?

அல்லி அரசாணி- என்னை தப்பா நினைக்காதேண்ணா. நீ தலைகால் புரியாத மப்பில் ஆட்டம் போட்டு இருப்பே. நம்ம ஜாதிக்கு இது ஆகுமா? ஒரு பொம்பளை எத்தனைநாள் தான் தாங்குவா நீயே சொல்லு? என்னை நீ தப்பா நினைச்சிக்கிட்டாலும் சரி.

மதனகாமராஜன்-நீங்க எல்லோரும்தான் என்னை தப்பா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க. நான் இத்தனை குடிக்கறதுக்கு யார் காரணம்னு நீயே சொல்லு.

அல்லி அரசாணி-அண்ணா, எல்லா குடிகாரன்களுக்கும் தான் குடிச்சு சீரழியறதுக்கு யாரையாவது குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கணும். அதைத்தான் நீயும் பண்றே.

மதனகாமராஜன்-கொஞ்சம் இரு. ஒரே நிமிஷத்தில் வந்துடறேன்.

இந்த அமைதியைப் பயன்படுத்தி ஒரு சிறு குறுக்கிடல். தமிழ் திரைப்படங்களிலும் சிறுகதைகளிலும், நாவல்களிலும் பொதுவாக அண்ணன் தங்கை பாசம் என்பது எப்போதும் காண்பவரை நெக்குருகச் செய்யும் . கண்களில் தாரைதாரையாக நீரைப் பொழிய வைக்கும். பெரும் பாறாங்கல்லை நெஞ்சில் ஏற்றி வைத்துவிடும். ஆனால் ஈண்டு காணும் உரையாடல் வேறு ரகத்தில் பயணிக்கும். இதோ மதனகாமராஜன் வந்து விட்டார். டிப்பணியாளன் அபீட்.

மதனகாமராஜன்-சொல்லும்மா. என்ன சொல்லிக்கிட்டு இருந்தே…

அல்லி அரசாணி- ……..

மதனகாமராஜன்- தங்கச்சி…என்னாச்சி…

அல்லி அரசாணி- …..

மதனகாமராஜன்- சொல்லும்மா… என் கண்ணு… என்ன ஆச்சு ராசாத்தி… எனக்கு உங்களை விட்டா யாருடா இருக்கா? என் உயிரில்லையா நீ…

அல்லி அரசாணி- அண்ணா… உண்மையை சொல்லு. குடிச்சிட்டு வந்திருக்கியா?

மதனகாமராஜன்-என்ன பேசறே நீ?

அல்லி அரசாணி- என்ன பேசறது? உன்னைத் திருத்த முடியாது. இப்போ நேரம் என்னா? இந்த நேரத்துலே குடிக்கிறயே. அண்ணி உன்னை விட்டுப் போகாம என்ன பண்ணுவா?

மதனகாமராஜன்- ஏய்… யாரு குடிச்சிருக்கா? ஏன் இப்படிப் பழி சுமத்துறே. நீ என்ன நேருலே பார்த்தியா?

அல்லி அரசாணி- இதெல்லாம் நேருலே வேறே பார்க்கணுமா? அடிக்கிற கூத்துதான் ஊரே சொல்லுதே..

மதனகாமராஜன்- ஏய்… ஏய்.. இதோ பாரு. மரியாதையா பேசு. என்னடீ நெனச்சிக்கிட்டு இருக்கே..

அல்லி அரசாணி- மரியாதை குறையுது பாரு. நீ எப்படி வேணும்னா நாசமா போயிக்கோ. நீயெல்லாம் ஒரு மனுசன்.

மதனகாமராஜன்- ஏய்… போகாதே. ஒரு நிமிஷம். என்னை என்ன உன்னோட வக்கில்லாத புருஷன் மாதிரின்னு நினைச்சிக்கிட்டியா? ஆம்பிளை சிங்கம்டீ… உன்னை மாதிரி…. என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே… நீயெல்லாம் கூடப் பொறந்தவளாடீ? சத்ருடீ.

அல்லி அரசாணி— (Has left the conversation)

மதனகாமராஜன்- ?????? ?????? ?????? ??????

(Mathanakamarajan has left the conversation)

உரையாடல் சுமுகமாக முடிந்துவிட்டதால் தைரியமான இந்தக் குறுக்கிடல். மேற்காணும் உரையாடலின் இறுதியில் ஒழுக்கசீலர்களின் வசதிக்காகவும் பொதுநாகரீகம் கருதியும் மதனகாமராஜன் அவர்கள் தன் தங்கையிடம் மப்பில் பேசிய ஆபாசமான வார்த்தைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. பொதுவாக மதனகாமராஜன் போன்ற பாமரர்கள் மட்டுமல்ல. படித்தவர்களும் பண்பாளர்களும் இலக்கியவாதிகளும், நவீனத்துவ இலக்கியவாதிகளும், பின்நவீனத்துவ இலக்கியவாதிகளும் பொதுவாக மப்பேறி விட்டால் தங்களுடைய புலமையையும் பண்பாட்டையும் தெள்ளத் தெளிவாகப் புலனாக்குவது இது போன்ற ஃபேஸ்புக் உரையாடல்களில் மட்டுமே. இரவு நேரம் இந்தக் குடிமகன்கள் இடுகாட்டில் மரக்கிளைகளில் காத்திருக்கும் வல்லூறுகள் போல வலைவிரித்துக் காத்திருப்பார்கள். இவர்களுக்கு மப்பு படிப்படியாக ஏறும்பொழுது இடையில் உடன்பிறந்தவர்களே வந்தாலும் அவர்களுடைய கதி அல்லி அரசாணிக்கு நடந்தது போலத்தான். சிலர் மப்படித்து விட்டு வலைப்பூவில் எழுதுவார்கள். சிலர் ஃபேஸ்புக்கில் தங்கள் புலமையைக் காட்டுவார்கள். அங்கு பலியாவது அடிப்படை நாகரிகம் மட்டுமே. “பைத்தியக்கார முண்டை கல்யாணத்தில் முதலில் சாப்பிடுகிறவன் அறிவாளி” என்று கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது பைத்தியம் எப்போது வேண்டுமானாலும் கல் விட்டு எறியும். எனவே அதற்கு ஏதாவது முற்றிப்போவதற்குள் சாப்பிட்டு விட்டு இடத்தைக் காலி செய்பவன் அறிவாளி என்று இதற்கு ஒரு கிளை டிப்பணி. அதாவது நள்ளிரவில் இணையத்துக்கு வந்தோம் என்றால், குறிப்பாக ஃபேஸ்புக் தளத்தில் பிரவேசித்தோம் என்றால் நிறைய மப்பாளர்கள் அங்கங்கே காத்திருப்பார்கள். அவரவர் வினைப்பயனுக்கு ஏற்ப மப்பர்கள் நம் விதியின் குறுக்கில் வருவார்கள். நள்ளிரவில் ஃபேஸ்புக்கில் வழிதெரியாமல் வருபவர்கள் நங்கையர் என்றால் மப்பர்களுக்கு அடித்தது மஹா அதிருஷ்டம் என்று கொள்க. எனவே நங்கையர்களும் நல்லோர்களும் ஃபேஸ்புக் தளத்தில் நள்ளிரவில் பிரவேசிக்காமல் இருப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் சாலச்சிறந்தது மட்டுமின்றி மனநல ரீதியாக பாதுகாப்பான விஷயமும் கூட என்பது இந்த டிப்பணியாளனின் கொசுறு உபதேசம்.
உண்மையான காதலில் ஈடுபடுபவர்கள், அவர்கள் ஏற்கனவே தனித்தனி இடங்களில் கல்யாணமாகித் தனித்தனியே குடும்பங்களைப் பேணிக் கொண்டிருந்தாலும் காதல் அல்லது காமம் என்னும் மாயம் எந்த வயதிலும் கரையை உடைத்துக் கொண்டு வரும் பெருவெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்பது சில நள்ளிரவு ஃபேஸ்புக் உரையாடல்களில் தெளிவாகும்.

பாட்ஷா-Hi..

மொழிமகள்-Hi..

பாட்ஷா- இருக்கியா…

மொழிமகள்-ம்…

பாட்ஷா-ம் னா என்ன அர்த்தம்?

மொழிமகள்- ம் னு அர்த்தம்

பாட்ஷா- அப்புறம்…

மொழிமகள்- அந்தப்புறம்..

பாட்ஷா- ஐயோ..

மொழிமகள்- என்ன ஐயோ…

பாட்ஷா- என்ன இப்படி ஓப்பனா போட்டு அடிக்கிறியே. எனக்கு வெட்கமா இருக்கு…

மொழிமகள்- நேத்து போன்லே வழிஞ்சப்போ இந்த வெட்கம் எல்லாம் மாயமா போச்சாக்கும்.

பாட்ஷா- அப்புறம் சொல்லு

மொழிமகள்- என்ன சொல்ல…

பாட்ஷா- எதையாவது சொல்லு. உடம்பு முறுக்கேறுது..

மொழிமகள்- இங்கேயும் அதே…

பாட்ஷா- அப்புறம் எதையாவது சொல்ல வேண்டியதுதானே..

மொழிமகள்- நீங்க சொல்லுங்க..

பாட்ஷா- நான் என்ன சொல்லட்டும்… நீ…

மொழிமகள்- ஒரு நிமிஷம். என் மாமியார் எழுந்துட்டாங்க போலிருக்கு. டாய்லெட் போவாங்க. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் திரும்ப வர்றேன்…

இதுபோன்ற இடைவெளிகள்தான் டிப்பணியாளன்கள் நுழைய ஹேதுவான இடம். அந்தப் பெண்மணி தன்னுடைய மாமியாரை கழிவறைக்கு அழைத்து விட்டு வருவதற்குள் நம்ம ஆள் இன்னொரு காதலி ஆன்லைனில் இருக்கிறாளா என்று தேடப் போயிருப்பார். மொழிமகளும் மாமியாரை கழிவறைக்குக் கொண்டு போய்விடும் இடைவேளையில் வேறு எந்த நண்பராவது ஆன்லைனில் வந்து காத்திருக்கக் கூடாதே என்ற பதட்டமும் இருக்கும். இந்தப் பிரச்னை எல்லாம் எதுவும் தெரியாமல் சர்க்கரை வியாதி உள்ள மாமியார் டாய்லெட்டில் சற்று அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு காதல் வியாதியில் உள்ளவர்களை பதட்டத்தில் தள்ளிய பாவத்தில் திளைத்துக் கொண்டிருப்பார். மொழிமகள் மீண்டும் திரும்பி வந்தார் என்ன செய்தார் என்பதையும், பாட்ஷா இவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாரா அல்லது வேறு யாராவது தோழி அல்லது தோழனுடன் உரையாடப்போய் விட்டாரா அல்லது, மொழிமகள் திரும்பி வந்து நீரிழிவு நோயுள்ள மாமியாருக்கு மீண்டும் கழிவவறைக்கு செல்லும் உந்துதல் வரும் வரை வேறு யாருடனாவது நெருக்கமான சம்பாஷணையைத் தொடர்ந்தாரா என்பதையும் வாசகர்களின் ஊகத்துக்கு விடப்படுகிறது.

இப்படி இன்னும் வகைவகையாக எத்தனையோ இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திக் கொண்டால்தான் மரியாதை என்பது இந்த டிப்பணியாளனுக்குத் தெரியாத ஒன்றல்ல. ஃபேஸ்புக்கில் இப்போதெல்லாம் மிக அதிகமாக ஜோஸியர்கள் வலம் வருகிறார்கள். கணிணிப் புரட்சியின் பிறகு அவர்களில் பெரும்பாலோர் மரத்தடியைக் காலி செய்து விட்டு வேற்றுத் திணையான இணையத்தில் வலம் வருகிறார்கள். தங்களுக்கான வலைப்பூ, இணையதளம், ஃபேஸ்புக் என்று இன்றைய ஜோசிய திலகங்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களும் ஃபேஸ்புக் பக்கங்களில் இறைதேடும் புலிகளைப் போல கரையோரம் ஒதுங்கியிருப்பார்கள். ஈண்டு யாம் எடுத்தாள்வது அப்படிப்பட்ட கம்ப்யூட்டர் ஜோசியர் ஒருவரின் ஃபேஸ்புக் உரையாடல்.

காலகண்டன்- வணக்கம் முனுசாமி அவர்களே.

முனுசாமி-ஐயா வணக்கம். நலமா?

காலகண்டன்-நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

முனுசாமி-ஏதோ இருக்கிறோம் ஐயா.

காலகண்டன்- என்ன இப்படி சலித்துக் கொள்கிறீர்கள்? ஏதேனும் பிரச்னையா உங்களுக்கு?

முனுசாமி-பிரச்னை யாருக்கு இல்லை ஐயா? அதுவும் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்துக்கு
பிரச்னைக்கு என்ன குறை. பல குறைகள்.

காலகண்டன்- பிரச்னை எல்லோருக்கும்தான் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல யாருக்கு இல்லை சொல்லுங்கள். நம்முடைய கிரக நிலைகளை சரியாகப் பார்த்து வைத்து தகுந்த நேரத்தில் பரிகாரங்கள்
செய்து விட்டால் எந்த நேரமும் யாரையும் ஒன்றும் செய்யாது.

முனுசாமி- அது என்னமோ வாஸ்தவம் ஐயா.

காலகண்டன்- நீங்கள் பிறந்த தேதி, ஊர், சரியான நேரம் மட்டும் சொல்லுங்கள் முனுசாமி.

முனுசாமி- வேண்டாம் விடுங்கள் ஐயா. நடப்பது நடக்கட்டும். எனக்கு எல்லாம் இப்போது பழகிவிட்டது.

காலகண்டன்- இருந்தாலும் சொல்லுங்கள். உங்களை நான் என்ன பணமா கேட்கப்போகிறேன்.

முனுசாமி- ஐயா, காசு தராமல் வைத்தியமும் ஜோசியமும் பார்த்துக் கொண்டால் எதுவும் பலிக்காது என்று என்னுடைய தாத்தா சொல்லுவார்.

காலகண்டன்-பணமெல்லாம் நேரில் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு உங்கள் பிறந்த நேரம், ஊர், தேதி மட்டும் சொல்லுங்கள்.

முனுசாமி- பரணி நட்சத்திரம், மேஷ ராசி ஐயா.

காலகண்டன்- இது மட்டும் சொன்னால் போதாது. நான் கேட்ட விபரங்களும் வேண்டும்.

முனுசாமி-7 ஆகஸ்டு 1958.

காலகண்டன்-பிறந்த ஊர், சரியான நேரம் சொல்லுங்கள். ஏன் இப்படித் தயங்குகிறீர்கள்.

முனுசாமி- கிருஷ்ணகிரி. சர்க்கார் ஆஸ்பத்திரி.

காலகண்டன்-நேரம்?

முனுசாமி- காலை 10.15

காலகண்டன்-கொஞ்ச நேரம் இருக்கிறீர்களா? குத்துமதிப்பாக கணித்துச் சொல்லி விடுகிறேன்.

முனுசாமி- சரி ஐயா. காத்திருக்கிறேன்.

உரையாடலில் இருப்பவர்கள் இப்படிக் காத்திருக்கும் நேரம்தான் டிப்பணியாளன் உள்ளே வந்து தன் காரியத்தை முடித்துவிட்டுப் போக வசதியான சந்தர்ப்பம். இப்போது நமது ஜோசிய திலகம் ஓரிரு தொலைபேசிகள் பேசிவிட்டு வீட்டுக்கு உள்ளே போய் ஒரு காபி குடித்து விட்டு மீண்டும் தன் மடிக்கணிணியில் உட்காருவார். முனுசாமி காத்திருந்தால் அன்று காலகண்டனாருக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். காலகண்டனாருக்காக நம்முடைய முனுசாமி காத்திருக்க மாட்டார் என்னும் வாய்ப்பு மிகக் குறைவுதான். உதாரணத்துக்கு என்னுடைய தீராப் பிரச்னைக்கு லட்டு போல ஒரு தீர்வை நீங்கள் எனக்குக் கொண்டுவந்தால் நான் வேண்டாம் என்று ஓடிவிடுவேனா? எனவே முனுசாமி கண்டிப்பாக காத்திருப்பார். இல்லை என்றாலும் வேறு ஒரு ராமசாமி ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருப்பார். அவரை ஒரு தட்டுத் தட்டலாம்.

இப்படி சொல்லிக் கொண்டே போனால் இதற்கு ஒரு முடிவு கண்டிப்பாக இருக்காது. ஃபேஸ்புக் என்பது நவீன மனிதனின் வாழ்வில் ஒரு அடவி போல ஒன்று கலந்து விட்டது. அடவியில் எல்லாம் இருக்கும். இங்கும் எல்லாம் உண்டு. அடவியில் ஆபத்தும் உண்டு உல்லாசமும் உண்டு. நன்றும் உண்டு. தீதும் உண்டு. எல்லாவகையான மிருகங்களும் அடவியில் எல்லா நேரங்களிலும் உலவிக் கொண்டிருக்கும். எந்த மிருகம் உங்களைக் குறுக்கிடும் என்பதோ நாமே ஏதாவது ஒரு மிருகமாக மாறி யாருக்கு எதிராக செல்வோமோ எல்லாம் அவரவருடைய அன்றன்றைய வினைப்பயன் அடிப்படையில் வாய்க்கும்.

இந்த டிப்பணியை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவதற்கு முன்பு இதனை நண்பர் ஒருவரிடம் படிக்கக் கொடுத்தேன். என்னுடைய குரோதத்துக்கும் விரோதத்துக்கும் பயந்து இது என்ன சிறுகதையாகவும் இல்லாமல் கட்டுரையாகவும் இல்லாமல் ஒன்றுமில்லாமல் இப்படி உருவற்று இருக்கிறதே என்று தயக்கத்துடன் திருப்பிக் கொடுத்தார். இதனை நீங்கள் முன்-பின் நவீனத்துவ சிறுகதையாக வகைப்படுத்தலாம் என்று அவருடைய கண்களைத் தவிர்த்தவாறே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவசரமாக நகர்ந்து விட்டேன். யாருக்கு நேரம் இருக்கிறது? எமக்கு இன்னும் பல நவீன தொடர்பு சாதனங்களின் மீதான டிப்பணியை உடனடியாக எழுதியாக வேண்டும்.

ராகவன்தம்பி

Series Navigationவரலாறும் நமது அடையாளங்களும் – ஜோ டி குருஸ்2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.