அந்நியத்தின் உச்சம்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

அவகாசம் கேட்கிறாய்

கடந்த அத்தனை வருட

அவகாசம் போதாதா?

நின்று நிதானித்துப்

பின் யோசித்தேன்

மூளையைக் கசக்கியதில்

உண்மை புலப்பட்டது.

நீ அந்நியன் !

யாரோ ஒருவன்

உன்னிடத்தில் என்னவனை

நாடுவது

பைத்தியத்தின் உச்சம்

என்பது !

உறவிருக்கிறது

உரிமையும் நிலைக்கிறது

நீயோ அந்நியனாய்

முன் நிற்கிறாய் !

காத்திருப்பின்

கணங்கள் பயனற்று

உதிர்ந்து போவதைக்

கண்டது மனக் கண் !

நலமா என்று வினவ

நாள் நட்சத்திரம்

பார்க்க அவகாசம்

தேவைப் படுமோ ?

நீ அந்நியத்தின்

உச்சமோ ?

காலத்தின் எச்சமாய்

நிற்கிறாளோ இவள் ?

அனுபவ யாத்திரையின்

ஒரு மைல் கல்

கடந்தேன்

வலித்த இதயத்தை

தேற்றியபடி !

Series Navigationதிரு நிலாத்திங்கள் துண்டம்பிரித்தறியாமை