ஆனந்த்—தேவதச்சன் கவிதைகள் அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…

This entry is part 5 of 25 in the series 17 மே 2015

devathatchan

(தேவதச்சன்)

ஆனந்த் [ 1951 ] மனநல ஆலோசகர் ; மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர். கவிதை , சிறுகதை , குறுநாவல் , கட்டுரை ஆகிய வடிவங்களைக் கையாண்டுள்ளார். மற்றும் நாவல் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இனி ஆனந்த் கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம். ” நாளை வருமென ” ….

 

நாளை வருமெனச் சொல்கிறார்

வெறும் இன்றுகள்தான் வருகின்றன.

இடையறாது

எங்கிருந்து வருகுதிந்த இன்றுகள்

 

காணாது

கண்டு

கண்டதாகிறது

நாளை நேற்றெனச் சொல்கிறார்

இன்றிலென்றும் இல்லை இவையிரண்டும்

இன்றுகள் மட்டும் வருகின்றன

 

” நிகழ் கணத்தில் லயித்தல் ” என்பதுதான் இக்கவிதையின் கரு. புதிய சிந்தனையில் யதார்த்தத்தின் நிலைப்புள்ளி நன்றாக விளக்கப் பட்டிருக்கிறது.

ஆனாலும் நிகழ் கணத்தில் லயித்தல் எனபது போல் ‘ இருத்தல் ” சாத்தியமில்லை. ஒரு நொடிக்கும் குறைந்த கால அளவில் நிகழ்காலம் இறந்த காலம் ஆகிவிடும்.

இந்தக் கவிதையின் நோக்கம் என்ன ? இறந்த காலத்தை எண்ணிப் பயனில்லை. எதிர் காலம் தெளிவாகப் புரியாதது. எனவே நிகழ் காலத்தில் நம் கடமையைச் செய்து

கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என் யூகம்.

 

உனக்கும் எனக்கும் இடையில் ” என்ற கவிதையைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டவுடனேயே நழுவிப் போய் விடுகிறது. இது ஆனந்த் கவிதைகளுக்கு 99 விழுக்காடு

பொருந்தும் . இவ்வியல்பு மொழி சார்ந்த அழகால் மாறும்.

 

என் வானில் ஒரு பறவையின்

ஒரு சிறகடிப்பில்

உனக்கு முதுமை வந்து சேரும்

 

என்பதில் ஒரு புதிய படிமம் அமைந்திருக்கிறது. ஆனால் வெளிப்பாடு எளிமையாக இல்லை. பறவையின் சிறகடிப்பு என்பது குறைந்த காலத்தில் நிகழ்வது. அதற்குள் முதுமை வருமா ? இதை எப்படி விளங்கிக் கொள்வது ? இவ்வரிகளின் தத்துவப் பார்வையில் காலம் விழுங்கப்பட்ட அசாதாரண நிகழ்வு சுட்டப்படுகிறது எனலாம்.

 

நான்

பறவையின் அடுத்த வீச்சில்

கவனம் கொள்வேன்

 

என்ற முத்தாய்ப்பில் செயல்பட விரும்பாத , தன்னைத் தனிமைப்படுத்தி , தனித்துக்காட்டும் தத்துவ மனம் தெரிகிறது. இக்கவிதையில் ” உனக்கு ” என்ற சொல் யாரைக்

குறிக்கிறது ? முடிவுக்கு வர , கவிதையில் எந்தத் தடயமும் இல்லை ஆனாலும் பெண் என யூகிக்கலாம்.

 

” எனக்கு விதிக்கப்பட்டிருந்த நாள் ” ஒரு நீள் கவிதை. 97 வரிகள் கொண்டது. கடற்கரையில் எம தூதன் வந்து நிற்க , ” எடுத்துச் செல்ல என்னுடையது என்று

எதுவுமில்லை ” என்கிறான் ஒருவன். பின் எமனே வருகிறான் அவனிடமும் இதே பதிலைச் சொல்கிறான் அவன் . எமன் போய் விடுகிறான் அதற்கு முன் எமன் குரல்

மனத்தில் கேட்கிறது.

 

நீயே நான்

நானே நீ

 

இப்படி விட்டுப் போவது எம தர்மம் இல்லை ஒரு நம்பிக்கை. அத்வைதக் கோட்பாடு இக்கவிதையில் செயல்பட்டிருக்கிறது. நமக்குச் சொந்தம் என்று எதைச் சொல்வது ?

என்ற தத்துவப் பார்வை கவிதையை நடத்திச் செல்கிறது. எம தூதன் இயல்பாக ஆனந்த் குறிப்பிடுவது

ஊரார் சொன்னது போல்

கடுமை சிறிதுமில்லை

கண் வழி நெருப்பில்லை

கொம்புகள் ஏதுமில்லை

 

எளிய அழகான வெளிப்பாடு.

 

” சற்றைக்கு முன் ” ஆனந்த் வாசகர்கள் மறக்காமல் குறிப்பிடும் கவிதை.

 

சற்றைக்கு முன்

ஜன்னல் சட்டமிட்ட வானில்

பறந்து கொண்டிருந்த

பறவை

எங்கே ?

அது

சற்றைக்கு முன்

பற்ந்து கொண்

டிருக்கிறது.

 

காலம் பிழைபடக் கூறியதில் ஓர் அற்புதமான அழகு பிறந்திருக்கிறது. ” காலம் உடைத்தல் ” என்ற உத்தி பலரும் கையாளாத ஒன்றாகும். இயற்கை ரசனை நங்கு மெருகேற்

–றப்பட்டுள்ளது. ” ஜன்னல் சட்டமிட்ட வானில் “என்ற வெளிப்பாடு அசாதாரணமானது.: அழகானது. ” சற்றைக்கு முன் ” என்பதை ” சற்று முன் ” என்றால் என்ன வேறுபாடு.

 

தேவதச்சன் [ 1952 ] இயற்பெயர் ஏ.எஸ். ஆறுமுகம்: கோவில்பட்டிக்காரர். தத்துவத்தில் எம். ஏ. பெற்றவர். நகைக் கடை நடத்தி வருகிறார். 1970 களில் எழுதத் தொடங்கி

சில கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்

 

“அவரவர் கைமணல்” என்னும் இத்தொகுப்பில் உள்ள 40 கவிதைகளில் 22 கவிதைகள் இவர் எழுதியவை.

 

” அடுத்த கட்டத்தில் “என்ற கவிதையைப் பார்ப்போம்.

 

அடுத்த கட்டத்தில் கால் வைத்துக் கொண்டது

மனித குலம் . இது வெளிப்படை.

 

என்னும் தொடக்கத்தில் எனக்கு ஒரு மறுப்பு உண்டு. ஒரு வாக்கியம் முடிந்து புள்ளி வைப்பதும் , உடன் அதே வரியில் அடுத்த வாக்கியம் தொடங்குவதை உரைநடை

மட்டுமே அனுமதிக்கும். கவிதை அனுமதிக்காது. மேலும் இதை வடிவச் சிதைவு என்றே நான் நினைக்கிறேன்.

 

இந்தச் சிட்டுக் குருவியும் நானும் சுமந்து செல்கிறோம்

நான் போரை , அது அமைதியை

 

குதிரையாய் இருந்தபடி குதிரை ஏறும் தப்புக்கு முன்னால்

வயிற்றின் அமிலத்தில் வதங்குகிறது குதிரை

 

குறியீட்டுப் படிமத்தில் பெரிதாக நயம் ஒன்றும் உணர முடியவில்லை. கவிதயின் முடிவும் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

 

எல்லாம் கண்டதால் அமைதியும், எதுவும்

காணாததால் முயற்சியும் கொண்டு இங்கொரு மனம்

தேடியபடி இருக்கிறது இயல்வதை

 

கவிமொழி வெளிப்பாடு சரியாக இல்லை. ஒரு போதாமை தலை காட்டுகிறது. ” அடுத்த கட்டத்தில் ” என்ற தலைப்பு எதை விளக்குகிறது ?

 

” என் வீட்டுப் பரண்பொருள் ” என்றொரு கவிதை…

இரும்புப் பெட்டியில் அல்ல

குப்பைத் தொட்டியில் அல்ல

பரணில் கிடக்கிறது

நான்

தின்ன முடியாத

எச்சிற் பூமி

 

இதில் பரண் என்பது குறியீடு. வழக்கு அல்லது பிரச்சினை என்று எடுத்துக்கொள்ளலாம். ஒருவன் நிலத்தை இன்னொருவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்ற

செய்தியே இக்கவிதையில் பேசப்படுகிறது எனலாம்.

 

” நம் கதை ” என்ற கவிதை ஒரு பழைய தத்துவ விஷயமாகும்.

 

முட்டையிலிருந்து வெளிவருவது யாராம் ?

எப்போதுமே

முட்டையிட்டவர்

 

முட்டையிடுவது யாராம்

எப்போதுமே

முட்டையில் இருந்தவர்

 

முட்டையைப் பிளப்பது யாராம்

எப்போதுமே

முட்டையிலிருப்பவர்

 

இக்கவிதையின் தத்துவச் சுழிப்பில் நாம் என்ன செய்தியைப் பெற முடியும் ?

 

அடுத்த கவிதை ” இந்த இரவு “……

 

இரவெங்கும் இடிக்கூட்டம் நிற்கின்றன

மின்னல் பெருங்குளம் அடித்தடுத்துக் கிடந்தது

 

என்ற தொடக்கத்தில் மின்னலைப் பெருங்குளமாகச் சொல்வது பொருத்தமாக இல்லை. : இடிக்கூட்டம் நிற்கின்றது ” என்று சொல்லலாமே !

 

எந்த சாவுக்கோ விரும்பாத மனங்கள்

போட்டு வைத்த ஒற்றையடிப் பாதையை

நீர் வீச்சு எடுத்தெடுத்து விழுங்கிற்று

 

மேற்கண்ட பகுதியில் வரி அமைப்பில் ஒரு மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.

எந்தச் சாவுக்கோ

விரும்பாத மனங்கள்

போட்டு வைத்த ஒற்றையடிப் பாதையை

நீர்வீச்சு எடுத்தெடுத்து விழுங்கிற்று

 

நாடி ஒடுங்கிற்று வார்த்தை பூதம்

காலத்தின் சிலைகள் வீழ்ந்து

ஓடி வரலாயிற்று கல்

 

” கல் ” என்று இல்லாமல் ” கற்கள் ” என்றிருக்கலாம்.

 

அசாந்தியின் கூத்தை

சாந்தி பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

கவிதையில் சொற்கள் ” பளிச் ” சென எதையும் சொல்லாமல் மயங்கித் திரிகின்றன.

 

” பகலிலிருந்து ” என்றோரு கவிதை.

பகலிலிருந்து

உதிர்ந்தவனுக்கு

பகலெல்லாம் துவக்கம்

பகல்தொறும் துவங்கும் என் கணம்

ஒரு வெளிறிய சந்தேகம்

இடையறாது சிரித்தோடும் ஓடைப் புனலில்

பார்வைச் சன்னல்

திறந்து கிடக்கிறது

 

பகலிலிருந்து உதிர்ந்தவனுக்கு “என்றால் என்ன பொருள் ? கருத்து வெளியீட்டு முறையில் தொடரும் தெளிவின்மை கவிதையின் வெற்றியை பின்னுக்கு இழுக்கிறது.

தேவதச்சன் கவிதைகள் ஒருவித சோர்வை ஏற்படுத்துகின்றன இது தவிர்க்கப்பட வேண்டும்..

 

 

Series Navigationமலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்இடைத் தேர்தல்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *