ஆறு

==ருத்ரா

மழை நீர் பருக‌
ஆறுகள் எனும்
பாம்புகளே இங்கு வாய்கள்.
அதன் வாலில்
உப்புக்கரித்த வேர்வை
கடல் ஆனது.
சூரியனால் மீண்டும் மீண்டும்
கடையப்படுவதால் தான்
கடல் ஆனதோ?
அமுதமே
மீண்டும் இங்கு ஆறு.
ஆற்று மங்கைகள்
மணல் எனும் துகில் உடுத்தி
மணம் சேர்க்கிறார்கள்.
வளம் தருகிறார்கள்.
மனிதனின் வீடு ஆசை நியாயமானது தான்.
ஆனால்
ஒரே மனிதன் கட்டும் ஒரே வீட்டில்
நூறு பேர் ஆசைகள் அல்லவா
“அஸ்திவாரம்” ஆகின்றன?
ஒருவன் நூறுபேரை விழுங்கும்
பேராசைப் பொருளார‌த்தின் பேய்க்காட்டில்
அந்த அடுக்குமாடிகள்
தலைவிரித்து
லாப ஓலம் போடுவது மட்டுமே
வண்ண வண்ண விளம்பரமாய்
தோரணம் கட்டிக்கொண்டிருக்கின்றன.
ஒரு ரூபாய்ப் பொருளை நூறு ரூபாய்க்கு
பலூன் ஊதி பணவீக்கம் செய்யும்
பகாசுரர்களின்
ராட்சத எந்திரங்களின் கற்பழிப்பில்
நம் அழகிய ஆறுகள்கூட‌
கடலுக்கு போவதற்குப்பதில்
மயானம் நோக்கி அல்லவா
வறண்ட பள்ளங்களாய் போகின்றன.
ஆற்றின் துகில் உரிக்கும்
துச்சாதனர்கள் பெருகிப்போனார்கள்.
அந்த அரக்கர்கள்
லாரிகளில் பசிதீராத‌
ஓநாய்களாக கவ்விக்கொன்டு
ஓடுவது மணல் அல்ல.
மனிதன்
தன் தலையிலேயே
மண் அள்ளிப்போட்டுக்கொள்கிறது
வெறி பிடித்த ஆசை.
பேராசையின் இந்த‌
பொய்ச் சொத்துகளுக்கு
“மெய் சொத்து” எனும்
ரியல் எஸ்டேட் பெயர்
எப்படி வந்தது?
தமிழ் நாட்டின் ஆறுகள்
பிணங்களாய்
அந்த லாரிகளில் ஊர்வலம் போவதை
பாருங்கள்.
அதற்கு ரெண்டு சொட்டுக்கண்ணீரை
அஞ்சலியாய் தருவதற்கும்
அந்த ஆறுகள் தானே
இங்கே நமது ரத்தம்!
ரத்தம் கொதிக்கிறது!
இந்த “கொள்ளை” நோய்க்கு
மருந்து என்ன?
வாக்குப்பெட்டிக்குள்
சடலங்களாய் விழுவதற்கு முன்
ஒரு சரித்திரம் படையுங்கள்.

Series Navigationஅன்பானவர்களுக்குநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8