இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்

dadri-protest-story_647_100615103950

துஃபாயில் அகமத்
 

 
சென்ற செப்டம்பரில் தலை நகர் டெல்லிக்கு அருகே உள்ள தாத்ரி ஊரில்,  முகம்மது அக்லக் என்பவர் பசுமாட்டைக்  கொன்று அதன் மாமிசத்தை தின்றார் என்ற வதந்தியில் ஒரு வெறிக்கும்பல் அவரை அடித்து கொன்றது.
 
1970களிலும் 1980களிலும் பாரதிய ஜனதா கட்சி என்ற ஒன்று  இல்லாத சூழ்நிலையிலும் பசுமாட்டைக்  கொல்வது தடைசெய்யப்பட்டுத்தான் இருந்தது. அந்த குற்றச்சாட்டுகளின் பெயரில் போலீஸ்காரர்கள் வீடுகளை சோதனையிட்டதும் நடந்திருக்கிறது.
 
பசு இறைச்சிக்  கலவரங்கள் நவீன இந்தியாவுக்கு புதியவை அல்ல. பசுக்கள் இஸ்லாமிய உலகில் கொல்லப்படுவதில்லை. இந்திய துணைக்கண்டத்தில் பசுக்கள் கொல்லப்படுவதற்கு முக்கிய காரணம் இஸ்லாமியவாதிகள் பசுவைக்  கொல்வதை இந்து மத கருத்தான பசுவை வணங்குவதற்கு சவாலாகவே அறிமுகப்படுத்தினார்கள்.
 
 
ஃப்க்ர் ஈ நவ் (புது சிந்தனை) என்ற பாகிஸ்தானிய மார்க்ஸிய பத்திரிக்கை பசுவதையை பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
 
 
நீங்கள் வரலாற்றை திரும்பி பார்க்கலாம்.
 
akbar
அக்பர்
பிஜேபியும் ஆர்.எஸ்.எஸும் இருந்திராத 16ஆம் நூற்றாண்டில், பேரரசர் அக்பர் பசுவதையை தடை செய்தார். ஆனால், அந்த சமயத்தில் இருந்த பெரிய இஸ்லாமிய அறிஞரான ஷேக் அஹ்மது ஷிர்ஹண்டி முகலாய பேரரசரை கடுமையாக விமர்சித்து, முஸ்லீம் அரசாங்கத்தின் கீழ் முஸ்லீம்கள்  பசுவை ஏன் கொல்லக்கூடாது என்று கேட்டார்.
 
பெரும்பான்மையாக இருந்த இந்துக்களின் மத உணர்வை மதித்த அக்பருக்கு மாற்றாக, இன்றைய அறிவுஜீவிகள் போன்றே அன்றை ஷேக் ஷிர்ஹண்டி போன்ற இஸ்லாமிஸ்டுகளும் இந்துக்களின் மத உணர்வுகளை மதிக்க விரும்பவில்லை. ஃப்க்ர் ஈ நவ் கட்டுரையும், 1947இல் இந்திய பிரிவினைக்கு பின்னால் பாகிஸ்தான் பகுதிகளுக்கு வந்த இஸ்லாமிஸ்டு அமைப்புகளே பசுவதையையும் கொண்டுவந்தன என்பதை கூறுகிறது.
 
ஆனால், தாத்ரி படுகொலை சம்பந்தமாக விவாதிக்கப்படும் விஷயம் மத சம்பந்தமானதல்ல.
 
இன்று இந்தியா உலகத்தில் முக்கியமான சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், வலதுசாரி இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட ஒருசிலர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துகொண்டால், அவர்களை சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்றும் அவர்கள் தாமதமின்றி சிறைப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.
 
முக்கியமான பாஜக உறுப்பினரும்,கோட்பாட்டு- பாராளுமன்ற உறுப்பினருமான தருண் விஜய், அக்டோபர் 2 ஆம் தேதி எழுதிய கட்டுரையில், இந்த விஷயத்தை அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள வழிமுறைகளின்படி சட்டப்படி அணுகவேண்டும் என்றும், அகிலேஷ் யாதவின் அரசாங்கம் இந்த விஷயத்தை அதன் தீவிரத்தோடு அணுக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
 
article-2419171-1BC8C7F8000005DC-857_306x423
அகிலேஷ் யாதவ்
 
முழுமையான மதச்  சார்பற்ற அணுகுமுறை இதனையே கோருகிறது. அகிலேஷ் யாதவின் சோசலிஸ அரசாங்கம் இந்த விஷயத்தை எந்த தயவு தாட்சணியமுமின்றி அணுகி எவர் சட்டத்தைக்  கையிலெடுத்துகொண்டாலும் கடுமையாகவும் விரைவாகவும் செயலாற்ற வேண்டும். ஆனாலும், மதவாத  அரசியலில்ஈடுபட  விரும்பும் இந்தியாவின் தாராளவாத-மதச் சார்பற்ற அறிவுஜீவிகள் அகிலேஷிடம் இந்த கோரிக்கையை வைக்கவில்லை.
 
ஷோபா டே என்ற கிசுகிசு எழுத்தாளர் அக்டோபர் 1ஆம் தேதி  டிவிட்டரில் இவ்வாறு எழுதினார். “நான் மாட்டுக்கறி சாப்பிட்டேன். வா வந்து என்னை கொல்”
 
 
நமது தாராளவாத மதச் சார்பற்ற அறிவுஜீவிகளையும் , இஸ்லாமிஸ்டுகளையும் பொறுத்தவரை இந்த விஷயம் சட்டப்பூர்வமாக அணுகப்படவேண்டியதில்லை. இது அரசியல். அதுவும் முழுமையாக மதவாதம் தோய்ந்த அரசியல்.
 
உதாரணமாக, பிரதாப் பானு மேத்தா என்ற குறிப்பிடத்தகுந்த இடதுசாரி தாராளவாத அறிவுஜீவி,  யாதவின் சோசலிஸ அரசாங்கம் தாத்ரி கும்பலைக்  கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கோருவதை விட்டுவிட்டு  (பா ஜ கவின்) தருண்விஜயின் மீது பாய்கிறார். இந்த வினோதமான “மதச்சார்பற்ற” அணுகலை அவர் கண்டித்தது தான் காரணம்.
 
தாராளவாதிகளையும்,  பழைமைவாதிகளையும் நான் ஒரு தத்துவார்த்த கட்டமைப்புக்குள் பார்க்கிறேன். பழைமைவாதிகள் சமூக யதார்த்தங்களை எவ்வாறு இருக்கின்றனவோ அப்படி பார்க்கிறார்கள். ஆனால், தாராளவாதிகள் அந்த சமூக யதார்த்தங்கள் தங்களது இடதுசாரி பார்வையில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி விவரிக்கிறார்கள்.
 
பழைமைவாதிகள் நிலத்தில் காலூன்றி உண்மைநிலையை உணர்ந்திருக்கிறார்கள். ஓரளவுக்கு அவநம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் தாராளவாதிகள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பிரிவினைவாதிகளாகவும்,  நடப்பை  விவரிக்கும்போது உண்மையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். லண்டனின் இடதுசாரி பத்திரிக்கையான நியூ ஸ்டேட்ஸ்மனின் முன்னாள் பத்திரிக்கையாசிரியரான ஜான் லாயிட் சொன்னார் :” தாராளவாதிகள், தங்களுடைய சொந்த அனுபவங்களை உதாசீனம் செய்துவிட்டு எப்படி அவர்கள் தத்துவம் அனுமதிக்கிறதோ  அதே போக்கில் சிந்திக்க  மக்களைக்  கட்டாயப்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.
 mehta
பி பி மேத்தாவின் கோட்பாட்டு – அரசியல் அடிப்படை இந்தப் புள்ளியில் தான் அமைந்துள்ளது.  1980களில் இவர்கள் போன்ற கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் எந்த விதமான மதசார்பற்ற அரசியலை ஆதரித்தார்கள் என்பது ராஜீவ்காந்தியின் மதசார்பற்ற அரசாங்கம் இந்தியாவின் இஸ்லாமிஸ்டுகளின் முன்னால் சரணடைந்தபோது அறிந்தோம்.
 
திரு மேத்தா அவர்களே, உங்களது வர்க்கம் இந்தியா குடியரசை பாதித்த மூன்று முக்கியமான முடிவுகளுக்கு காரணம். ஷா பானோ வழக்கு. அயோத்தியாவின் பூட்டுக்களைத்  திறந்தது. சாத்தானின் வசனங்கள் என்ற சல்மான் ருஷ்டி புத்தகத்தை தடை செய்தது.
 
இவ்வாறு இந்தியாவின் மதசார்பின்மையை இஸ்லாமிஸ்டு கண்காணிப்புகளின் முன்னால் பலி கொடுத்ததை, இந்தியாவின் பெரும்பான்மை சும்மா பார்த்துகொண்டிருப்பார்கள்  என்று மேத்தாவின் கருத்து போலீஸ் அறிவுஜீவிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த மூன்று முடிவுகளும், இந்தியாவின் பழைமைவாதிகள் விருத்தியடைய வழிவகுத்தன. இந்த நாட்டின் வேர்களிடமிருந்து உண்மையைத்  தேட உதவி புரிந்தன.
 
உங்களது மதசார்பற்ற கும்பல் பாகிஸ்தானியர்கள் போல வேடம் போட்டு ஆடும் இந்தியாவின் அறிவுஜீவி மையநீரோட்டத்தை ஒப்பிட்டால், இந்தியாவின்  பழைமைவாதிகள் உண்மையான இந்தியர்கள்தாம். உங்களது அரசியல்தான் திரும்பத்  திரும்ப நடந்துகொண்டிருக்கிறது. முக்கியமாக ராஸா இஸ்லாமிய அகாடமியின் பரேல்வி வழி வந்த இஸ்லாமிஸ்டுகள் சல்மான் ருஷ்டியைத்  தாக்கப்போகிறோம் என்று அறிவித்ததை அடுத்து  அவர்களிடம் சரணடைந்தது  ராஜஸ்தானின் ” மதச் சார்பற்ற” காங்கிரஸ் அரசாங்கம்.  2012 ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் கலந்துகொள்ள சல்மான் ருஷ்டிக்கு காங்கிரஸ் அரசு அனுமதி மறுத்தது.
 
தவிர இன்னொரு விஷயத்திலும் மேத்தாவின் கருத்தியல் வரலாற்று அடிப்படையை காணமுடியும். இவரது கருத்தியல் உறவினர்கள், முன்னோர்கள் கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்கள். இந்த இஸ்லாமிய அரசியல் இயக்கம் மகாத்மா காந்தி போன்ற இந்தியாவின் மதச் சார்பற்ற அரசியல்வாதிகளாலும், அந்த காலகட்டத்தின்,  உலக இஸ்லாமிஸ்டுகளாலும் (அலி சகோதரர்கள்) ஆதரிக்கப்பட்டது.  அலிகார் இயக்கத்துடன், கிலாபத் இயக்கமும் இணைந்துதான் 1947இல் இந்தியப்பிரிவினைக்கு காரணமாக இருந்தது.
 
கிலாபத் இயக்கத்தின் மேம்பட்ட வன்முறை பதிப்பே அபு பக்ர் அல் பாக்தாதியால் நடத்தப்படும் இன்றைய இஸ்லாமிய அரசு எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த அமைப்பை பற்றி மதச் சார்பற்ற எழுத்தாளர்களும் பத்திரிக்கையாளார்களும் வாய்மூடி மௌனிகளாக இருக்கும் அதே வேளையில் ஏராளமான இந்திய முஸ்லீம்கள் இதனால் கவரப்பட்டிருக்கிறார்கள் என்பதும் பலர் ஐ.எஸ்.ஐ.எஸில் இணைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
 
திரு மேத்தா அவர்களே, 17ஆம் நூற்றாண்டின் அபு பக்ர் அல் பாக்தாதியான அவுரங்கசீப்பை  உங்களது சித்தாந்த உறவினர்கள் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கை தலையங்கங்களிலும் ஆதரித்தார்கள். இன்று  இஸ்லாமுக்கு மதம் மாற மறுக்கும் முஸ்லீமல்லாதவர்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸால்  ஈராக். சிரியாவின் மைய சதுக்கங்களில் தலை துண்டிக்கப்படுகிறார்களோ அதே போல அவுரங்கசீப்பின் ஆணையால், இந்தியாவின் கவசமான குரு தேக் பகதூர் இஸ்லாமுக்கு மதம் மாற மறுத்ததால், 1675இல் அவரது தலையை டெல்லியின் மைய சதுக்கத்தில் துண்டித்தார்கள்.
 
இந்தியாவின் கலாச்சார அமைச்சரான மஹேஷ் சர்மா சொன்ன வார்த்தைகளை பிடித்துகொண்டிருக்கிறார் பிபி மேத்தா.
 
”கலாச்சார அமைச்சர் ஏ பி ஜே அப்துல் கலாம் ”முஸ்லீமாக இருந்தாலும்” என்ற அடைமொழியுடனேயே அழைக்கப்படுகிறார். அக்லகின் மரணம் வெறுமே விபத்து என்கிறார். இது தருண் விஜய் பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக பாராமுகத்தை காட்டுகிறது. “ என்கிறார்.
 
வளர்ந்து வரும் ஜனநாயகமான இந்தியாவில் இன்னமும் பல்கலைக்கழகங்களுக்கு சென்றிராதவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மக்கள் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் அப்பாவிகள் ஆனால் உண்மையானவர்கள். அடர்ந்த உரைநடை எழுதும் மெத்தப்  படித்த தாராளவாதிகளுக்கு இணையாக தங்கள் கருத்துக்களை மெருகேற்றிச்  சொல்லக்  கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
 
சிலவேளைகளில் இந்த மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பெற்ற பல்கலைக்கழக பட்டங்களை அறிவிக்க கோரப்படுகிறார்கள் (தேர்தல் கமிஷன் ஏன் இந்தியர்கள் தங்கள் பட்டப்படிப்புகளை தெரிவிக்கவேண்டும் என்று கோருகிறது என்று அதுதான் விளக்கவேண்டும்) இவர்கள் செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி போன்ற கல்லூரிகளிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளைப் போன்று அறிவுஜீவியாக இல்லாமல் இருக்கலாம். சில வேளைகளில் அவர்களிடம் ஒரு சர்டிபிகேட்டுக்கும் டிகிரிக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம்.
 
 
மேத்தாவுக்கு ஒன்று சொல்கிறேன். “தார்மீக  பாராமுகம்” என்று நீங்கள் சொல்வதற்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. அது ”political correctness” அதாவது உங்களின் அரசியலுக்கு உகந்தது.
 
அலிகார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ரஷிதா ரானா சித்திக்கி அவர்களிம் சமூகவியல் படித்தேன். பி.ஏ முதலாம் வருடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு வகுப்பில் “பண்பாடில்லாத” uncultured என்ற வார்த்தையை அவர் உபயோகித்தார். இந்த வார்த்தைக்கு சமூகவியல் அர்த்தம் என்ன என்று கேட்டபோது அவர் என்னை திரும்பி பார்த்து, வெகுநேரம் சிந்தித்து பிறகு பதில் சொன்னார். “இது உங்களை பாதித்தால், இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்”
டுங்கு வரதராஜன் செப்டம்பர் 20ஆம் தேதி எழுதிய கட்டுரையில் அமைச்சரை பண்பாடில்லாதவர் என்று வர்ணிக்கிறார். அந்த அமைச்சர் வாய் தவறிச் சொல்லியிருந்தலும், அவர் மனதின் அடியாழத்தில் இருந்த விஷயம் வெளியே வந்துவிட்டது என்கிறார்.

 
வரதராஜனுக்கும் பிபி மேத்தாவுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  முஸ்லீம் நாத்திகர்களும் தாராளவாதிகளும் இஸ்லாமிய மதகுருக்களால், முஸ்லீமல்லாதவர்களாகவும், போதுமான அளவுக்கு முஸ்லீமாக இல்லாதவர்களாகவும், பாதி முஸ்லீமாகவும், பாதி கூட முஸ்லீமாக அல்லாதவராகவும், ஏன் முர்த்தத்(இஸ்லாமை துறந்தவராகவும்) என்றும் கூட அறிவிக்கப்படுகிறார்கள்.
 
இதே வரையறையை இந்தியாவின் உரையாடலின் மையத்தில் வைத்தால் இதுதான் கிடைக்கும். நீங்கள் இந்தியர் அல்ல. போதுமான அளவுக்கு இந்தியர் அல்ல. நீ முதலாவது இந்தியராக இல்லை.  நீங்கள் முதலாவதாக முஸ்லீமாக இருக்கிறீர்கள். இந்த “நீங்கள்” என்பது இந்திய முஸ்லீம்.
 
மேத்தா மாதிரியான மதசார்பற்றவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் உரையாடலின் மையமே இதுதான். முஸ்லீமுக்கு எதிராக இந்தியன்.   அமைச்சரின் வாக்கியம் வாய் தவறி வந்ததல்ல. சமூக நிதர்சனத்தின் கடுமையான உண்மையே அவரது வாய் வழியாக வந்திருக்கிறது. “ஒரு மனிதனின் மனது எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த வழியாகத்தான் வாய் தவறும்” என்பதையே வைத்துகொண்டாலும், அந்த மனது வரதராஜன், பி பி மேத்தா, அமர்த்யா சென் போன்றோரின் ஒற்றை மனதுதான்.
 
ஆகவே, திரு மேத்தா அவர்களே,  நமது பள்ளி சிறுவர்களுக்குக் கூட மிகவும் பிடித்த ஏ பி ஜே அப்துல் கலாமை உங்களது வர்க்கத்துக்கு, சார்பற்றவர்களாக நடிக்கும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், டிவி பேச்சாளர்கள் போன்றவர்களுக்கு ஏன்  பிடிக்கவில்லை என்பது யதேச்சையானது அல்ல.
 
கலாச்சார அமைச்சர் ஷர்மா எழுப்பிய கேள்விகள் நிச்சயம் முக்கியமானவை. மீண்டும்  பார்ப்போம்.
 
Sir Syed Ahmed Khan
சர் சையத் அகமத் கான்
 
இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷாரை 1857ஆம் போரில் எதிர்த்தார்கள். அந்த போரின் முடிவின் பின்னர் , வெகு விரைவில் முஸ்லீம்கள் இந்த ஒருங்கிணைப்பிலிருந்து விலகினார்கள். உதாரணமாக சர் சையது அஹ்மத் கான் அலிகார் பல்கலையை தோற்றுவித்தார். இது பாகிஸ்தான் இயக்கத்தை உருவாக்கியது.  இந்த நடைமுறை 1980களிலும் தொடர்ந்தது. ஆப்கானிஸ்தானில் சிஐ.ஏ காபிர்களுடன் சேர்ந்து போரிட்டார்கள். அந்த போர் முடிவுக்கு வந்ததும், முஸ்லீம்கள் பிரிந்து ஜிஹாத் போரை எல்லா இடங்களிலும் தோற்றுவித்தார்கள். முக்கியமாக காஷ்மீர் தாமாகவே போரைத் தொடங்கினார்கள்.
 
இன்னும் பின்னோக்கி பார்த்தால், 7ஆம் நூற்றாண்டில், மெக்காவின் முஸ்லீமல்லாதவர்கள் முகம்மது நபியை தங்களுடன் இணைந்து அரசியலதிகாரத்தில் பங்கெடுத்துகொள்ள அழைத்தார்கள். ஆனால் அவர் “உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்” என்று பதிலிறுத்தார். இந்த வசனம் குரான் 109:6. இது பல தாராளவாதிகளால், இஸ்லாமின் சகவாழ்வுச்  சிந்தனைக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. உண்மையில் இது மெக்காவாசிகளின் பன்மைத்தன்மைக்கு எதிராக, உங்களுடன் எங்களால் இணைய முடியாது என்று வலியுறுத்துவதற்காகச் சொல்லப்பட்டது.
 
மஹேஷ் ஷர்மா தனது மதசார்பற்றவராகத் தன்னை உணராத ஒரு கணத்தில் நடைமுறையை பளிச்சென சொன்ன காரணம். ஆழ் மன வெளிப்பாடாக, சர்மா நமது காலத்தின் இஸ்லாமிஸத்தையும் இந்தியாவின் வரலாற்றையும் அதன் அரசியலமைப்பையும் எதிரெதிர் முனைகளில் வைக்கிறார்.
 
இந்தியாவின் அறிவுஜீவி அதிகாரத்  தரகர்களாக  அமார்த்த்யா சென், பிபி மெத்தா போன்றவர்கள் இருப்பதினால், உண்மையை அந்த அதிகாரத்தின் முன்னால் சர்மா கூறுகிறார். இதனால், இந்த அறிவுஜீவி அதிகார பீடம் தன் முன்னே உண்மை கூறப்பட்டதால், காயமுற்றுவிட்டது.
அவுரங்கசீப் சாலையை ஏபிஜே அப்துல்கலாமின் பெயருக்கு மாற்றவேண்டும் என்று கலாச்சார அமைச்சர் சொல்வது இங்கே கவனிக்கத்தகுந்தது. ஏபிஜே அப்துல்கலாமை பி பி மேத்தா போன்றவர்களுக்கு பிடிக்காது என்பதும், இவர்கள் இந்துக்களை கொன்றொழித்த அவுரங்கசீப் மீது அன்பு செலுத்துபவர்களாகவும்  அவுரங்கசீபுக்காக வாதாடுபவர்களாகவும்  இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஏபிஜே அப்துல்கலாம் ஒரு சரியான உதாரணம்தானா என்பது விவாதத்துக்குரியது. ஆனால், சர்மாவின் பேச்சு முன்னரே எழுதி தயாரிக்கப்படாதது.  தாராளவாத- மதசார்பற்ற கும்பல் உருவாக்கிய இந்திய உரையாடலிலிருந்து நேரடியாக விளைவதுதான்  அவரது ஒப்பீடு.
 
 ஆகவே, வரதராஜன்களும், அமார்த்யா சென்களும், பிபி மேத்தாக்களும் நான்கு விஷயங்களை செய்யவேண்டும்.
 
 முதலாவது செயிண்ட் ஸ்டீபன்ஸ், கல்கத்தா பிரசிடென்ஸி போன்ற கல்லூரிகளிலிருந்து வராத மக்கள் பிரதிநிதிகளை போட்டு சாத்துவதை நிறுத்த வேண்டும
 
 இரண்டாவது, உங்களது தாராளவாத இடதுசாரி ஒழுக்க மதிப்பீடுகளிலிருந்தே உதாரணங்களை தரவேண்டும். (உதாரணமாக, சோவியத்தில் ஸ்டாலினால் கொல்லப்பட்ட 20 மில்லியன் மனிதர்களிடமிருந்தோ, அல்லது மாவோவின் சைனாவில் 65 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதிலிருந்தோ ஆரம்பிக்கலாம்)
மூன்றாவது, இந்த “பண்பாடில்லாத” ”படிப்பறிவற்ற” மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பதை சற்று புரிந்துகொள்ள முயலவேண்டும்.

 
நான்காவது, நமது வரலாறு பற்றியும் சமூகம் பற்றியும் அறிந்துகொள்ள விரும்பும் இந்திய இளைஞர்களுக்கு சரியான ஆராய்ச்சியை கொடுக்கவேண்டும்.
 
முடிந்தால், ஐந்தாவதையும் சேர்த்துகொள்ளலாம். உங்களது மனச்சாய்வுகளை உங்களுடனேயே வைத்துக்கொள்ளலாம்.
 
நமது மக்கள் பிரதிநிதிகள் மாபெரும் இந்திய ஜனநாயகத்தின் உற்பத்திகள். ஆனால் உங்கள் ஆராய்ச்சிகளோ ஸெயிண்ட் ஸ்டீபன்ஸ் காலேஜின் உற்பத்திகள். இந்தியாவின் ஜனநாயகத்தின் உற்பத்திகள் அல்ல.
 
சில இந்திய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பாகிஸ்தானியர்கள் போல இந்திய ஊடகங்களில் பேசுகிறார்கள். பாகிஸ்தானின் குழப்பநிலையில் படைப்பாற்றலை மேத்தா காண்கிறார். ஆனால், பாகிஸ்தானின் எழுத்தாளர்களே அதன் சமூக நடைமுறையை பற்றி மிகத்தெளிவாக விவரிக்கிறார்கள்.
 
மேத்தா அவர்களே, துருக்கியின் இஸ்லாமிய தீவிரவாதிகளை ஆதரித்த காந்தி போன்று,  நீங்கள் இந்திய வேடம் போட்ட பாகிஸ்தானி மாதிரிதான் எனக்கு தோன்றுகிறீர்கள்.
 
பாகிஸ்தானின் கலாச்சார உதிர்வில் அதன் படைப்பாற்றலை இழப்பதை தருண் விஜய் கூறுவதை நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். ஆனால், உண்மையான பாகிஸ்தானியும், மதிப்புக்குரிய வரலாற்றாசிரியருமான அயீஷா ஜலால் , பாகிஸ்தான் ஒரு “தன்னையே உணராத ஒரு இயலாமைக்கு” சென்றுவிட்டதை கூறுகிறார்.
 
உங்களை மாதிரி எழுதுபவர்களும் நேர்மையற்றவர்களாகவே தோன்றுகிறார்கள். நடுநிலை ஆராய்ச்சியாளர் போல வேடம் போட்ட்டாலும் உங்களது முதல் வரியே பொல்லாத வார்த்தைகளை உபயோகித்து உங்களது நோக்கத்தை படம் போட்டு காட்டிவிடுகிறது.
 
“பொது உரையாடல் எவ்வளவு பொல்லாத, வெறுப்பை உமிழ்வதுமான, இழிந்ததாக ஆகியிருக்கிறது என்பதற்கு உதாரணம் வேண்டுமென்றால்…” என்ற  தொடக்கம்.
 
வருந்துகிறேன். ஒரு உங்கள் தரத்துக்கு உகந்த வார்த்தைகள் அல்ல இவை. இது ஆராய்ச்சி என்ற பெயரில் வந்த அவதூறு. இந்திய பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி மீது நீங்கள் தொடுக்கும் வசை.
 
பிபி மேத்தாவின் கட்டுரையின் தலைப்பு “தாத்ரி கொலை. கட்சியும் அதன் விஷமும்” கொஞ்சம் சுவாரஸ்யமானது.
 
உண்மை என்னவென்றால், நீங்களும், கல்வி துறையிலும் ஊடகத்துறையிலும் இருக்கும் உங்கள் கும்பலுமே இந்த விஷத்தின் விதையும் விளைவுமாக இருக்கிறீர்கள்.
 
அமெரிக்க இணைய ஏடான ஹஃபிங்டன் போஸ்டில் “தாத்ரி கொலை. பழி மொத்தமும் மோதி  மீதே விழ வேண்டும். – பிரதாப் பானு மேத்தா” என்ற தலைப்பில் உங்கள் கட்டுரை வெளியாகியிருக்கிறது.
 
 
இந்தியன் எக்ஸ்பிரஸில், “எவ்வாறு பிரதம மந்திரி நரேந்திர மோதியே விஷம் பரவுதலுக்கு  பொறுப்பு என்று தாத்ரி நமக்கு நினைவூட்டுகிறது” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
 
வெளிப்படையாகத்தான் கேட்கிறேன். திரு மேத்தா அவர்களே, பசுக்கறி கலவரங்கள் நடந்த காலத்தை சேர்ந்த  பேரரசர் அக்பரின் காலத்திலா மோதி  பிறந்தார்?
 
போலிட்பரோ உறுப்பினர்களின் மனைவிகள் பத்திரிக்கையாசிரியர்களாக பொறுப்பேற்கும் காலத்தில், கல்வியறிவு என்பது பலியாடு, உண்மை என்பது பேனாவின் மறுமனையாட்டி. தற்போது இளைஞர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸின் வாசகம் “தைரியத்தின் பத்திரிக்கை”யா? அல்லது “கோழைத்தனத்தின் பயிற்சியா” என்று சந்தேகப்படுகிறார்கள்.
 
தாராளவாத அறிவுஜீவிகளை பற்றி ஜார்ஜ் ஆர்வெல் எழுதினார்.
 
“பொதுமக்களை விட இவர்கள் சர்வாதிகாரிகள்…. பெரும்பாலாக இவர்கள் எல்லோரும் சர்வாதிகார வழிமுறைகளுக்கு தயாராகவே இருக்கிறார்கள். ரகசிய போலீஸ், வரலாற்றை  பொய்யாக எழுதுவது, ஆகியவை அவர்களுக்கு ஒப்புதல் தான் . அதாவது இவர்கள் தரப்பிலிருந்து செய்யப்பட்டால்”
 
பசியை தங்கள் வாழ்க்கையில் கண்டிராத  எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பத்திஎழுத்தாளர்கள் எல்லோருமே சமூக நடைமுறையை அறியாதவர்கள். இவர்களில் பெரும்பாலும் மதச் சார்பற்றவர்கள், தாராளவாதிகள், கம்யூனிஸ்டுகள். மூன்றும் ஒரு சேர அமைந்தவர்கள். இவர்களே கடந்த அறுபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கொள்கைகள் மூலம், நமது மகள்களை டிராபிக் லைட்களில் பிச்சை எடுக்கவைத்தார்கள்.
 
இடதுசாரி, ச் செயல்வீரர்களில் பெரும்பாலானோர் நகர அபார்ட்மெண்ட்களில் உட்கார்ந்துகொண்டு தங்கள் பேனா முனைகளிலிருந்து ரத்தம் பொங்குவதை பார்க்க சந்தோஷப்படுபவர்கள்.   சிலர் மாறி பேராசிரியர்களாக ஆவார்கள், அல்லது வெள்ளைக்கார பேராசிரியரை திருமணம் செய்து வெளிநாட்டுக்கு இடம் பெயர்வார்கள்.
 
அவர்களது மதச் சார்பற்ற கட்சி ஆட்சியில் இருந்த வரைக்கும், மேத்தா, அமார்த்யா சென் போன்ற அறிவுஜீவிகள் தேசத்தின் பிரச்னையாக வறுமையை முன்னுக்கு வைத்ததில்லை. இப்போது முதன்முறையாக ஒரு தேனீர் விற்பவர் உயர்ந்த பதவிக்கு சென்றிருக்கிறார். ஆனால், மோடியின் முதன்மை முக்கியமாக கழிப்பிடங்களை கட்டுவதையும், நமது சாலைகளை சுத்தம் செய்வதையும், திறன் மேம்பாட்டையும் வைக்கும்போது, அதாவது நீண்டகால நல்ல விளைவை உருவாக்கக்கூடிய அடிப்படையான சீர்திருத்தங்களை முன்வைக்கும்போது, மேத்தாவின் கும்பல் நமது ஊடகங்களில் சங்கடப்படுகிறது.
 
நான் ஆர்.எஸ்.எஸையும் பிஜேபியையும் ஆதரிக்க விரும்பவில்லை. ஆனால், இந்த வரலாற்று திருப்புமுனையில், ஜனநாயகம் காங்கிரஸின் வம்சாவளி அரசியலை அழித்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்,  பிஜேபியை ஒரு அனைவரையும் உள்ளடக்கிய கட்சியாக ஆக்க மோடி கடுமையாக உழைக்கிறார் என்பது மிக மிகத்  தெளிவானது.
 
திரு மேத்தா அவர்களே, இதுவரை நீங்கள் கக்கிய விஷத்தினாலேயே இன்றைய இளைஞர்கள் அதுவும் பிடெக் எம் டெக் டிகிரி படித்த இளைஞர்கள் தங்களை டிவிட்டர் வரையறைகளில் “ஆமாம் நான் பக்தன் தான்”, “வலதுசாரி”, “வலதுசாரி இந்து”, “இந்துவென கர்வம் கொண்ட தேசியவாதி” “இந்தியா முதல்”,”நான் தேசியவாதி”, “இடதுசாரியால் துரோகம் இழைக்கப்பட்டவன்”, “இந்திய தேசியவாத குடிமகன்” “இறந்தகாலத்தில் இடதுசாரி, நிகழ்காலத்தில் வலதுசாரி” “என்னை சங்கி என்று சொல்” என்றெல்லாம் வைத்துகொள்கிறார்கள்.
மேத்தாவின் மூன்று தலைப்புகளில் வெளிவந்த கட்டுரை நமக்கு அவரது கட்டுரையின் முக்கிய நோக்கம், இந்தியாவின் மீதான அக்கறையோ, அல்லது இந்திய முஸ்லீம்கள் மீதான அக்கறையோ, அல்லது இந்து முஸ்லீம் உறவின் மீதான அக்கறையோ அல்ல என்றும், அவரது முக்கிய நோக்கமே மோதி  மீது இன்னொரு தாக்குதல்தான் என்று தெளிவாக்குகிறது.

திரு மேத்தா, மதசார்பற்றவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் தலித்துகளுக்காக கவலைப்படுவதில்லை என்று தருண் விஜய் கூறுவதை விமர்சிக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், தருண் விஜய் சொல்வதுதான் சரி. நீங்கள் சொல்வதல்ல.

 
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமும், அதன் ஜனநாயகமும் தலித்துகளுக்காக அக்கறைப்பட்டது. பல கோடிக்கணக்கான தலித்துகளுக்கு சக்தி கொடுத்தது. ஆனால் மதசார்பற்ற இடதுசாரி இயக்கம் அவர்களைக்  கைவிட்டுவிட்டது. அவர்களிடம் மார்க்ஸிய விஷத்தை ஊட்டியது.
 
இதன் சிறந்த உதாரணம் இந்திய இடதுசாரியின் வரலாறுதான். பல வருடங்களாக இந்திய இடது தலைமைப்பதவிகளில் தலித்துகளுக்கு எந்த வித பிரதிநிதித்துவமும் கொடுக்கவில்லை. பொதுவாக பிராம்மணர்களே கம்யூனிஸ கட்சியின் தலைமைப்பதவிகளுக்கு உயர்ந்தார்கள்.
 
 இந்திய இடதுசாரியின் பாசாங்குத்தனம் பெண்ணியவாதத்தில் வெளிப்பட்டது. உங்களைப்போன்ற இடதுசாரிகள் (இன்று தாராளவாதிகளாக உருமாறியிருப்பவர்கள்)  மார்க்ஸிய கோட்பாட்டை தலைகீழாக்கியிருக்கிறீர்கள். பொருளாதாரமே கட்டுமானம். கருத்துக்கள் எல்லாம் மேல் கட்டுமானம். இந்த வாதத்தை வைத்து ஜாதி அடையாளத்தை மறுத்து இதன் மூலம் தலித்துகளுக்கு இடதுசாரி கட்சிகளின் தலைமைப்பதவிகளில் இடம் தர மறுத்தீர்கள். ஆனால் மேல்ஜாதி பெண்களுக்கு  தலைமைப்பதவிகளில் இடம் கொடுத்தீர்கள்.
 
திரு மேத்தா, நீங்கள் தருண் விஜய் பொய் சொல்வதாக கூறுகிறீர்கள். ஆனால், உங்களுடைய அறுபது வருட அறிவுஜீவி பாரம்பரியத்தை சற்றே திரும்பி பார்த்தால் என்ன?
 
தருண் விஜயை நிறைய நாவல்களை படிக்கச்சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன படிக்கிறீர்கள்? மைய நீரோட்ட பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் உங்கள் கட்டுரை தூய அவதூறு என்பதை மதசார்பற்றவர்கள் பார்க்கத்தவறுகிறார்கள்.
 
உங்கள் ஆன்மாவுக்குள் தேடிப்பார்த்தால், ஏன் பகுத்தறிவுவாதிகள் கொல்லப்படுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் பன்மைத்தன்மையில் சார்வாகர்கள் எப்போதுமே வரவேற்கப்படுகிறார்கள். மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டாலும்,  இந்த பயங்கரவாதிகளை கைது செய்வதை, உங்கள் கும்பலின் பத்திரிக்கையாளர்கள் “அராஜக” சட்டங்கள் என்று இந்தியாவின் சட்டங்களை வர்ணிக்கின்றனர். இந்திய முஸ்லீம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸில் சேர்ந்தால், இந்த மதசார்பற்றவர்களை சந்தோஷப்படுத்த, இந்துக்களை மென்மையாகப் பொறுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறீர்கள்.
 
அதிர்ச்சி தரும்படியாக மேத்தா எழுதுகிறார்: “சைவ உணவு என்பது வன்முறைக்கான ஒரு சாக்கு”. வரலாறு சொல்வதை பார்த்தால், மதசார்பின்மையும் கலவரங்களை உற்பத்தி செய்துதான் வந்திருக்கிறது. நீங்கள் எழுதுகிறீர்கள்: “பாரம்பரியம், சுதந்திரத்தின் மீதான வன்முறைக்கு ஒரு சாக்கு”. இந்தியாவில் ஊடகங்களும், அடிப்படை பத்திரிககை தர்மத்துக்கு எதிரான வன்முறையாகத்தான் இருக்கிறது.
 
நீங்கள் மேலும் எழுதுகிறீர்கள்: “கருத்துக்கள் விவாதத்தை முடக்க ஒரு சாக்கு”. நான் ஒப்புகொள்கிறேன். இந்தியாவின் உரையாடல் உங்களைப்போன்றோர்களால், விஷமாக்கப்பட்டுள்ளது.
 
அடுத்து நீங்கள் எழுதுகிறீர்கள்: “கருத்து வேறுபாடு என்பது வன்முறைக்கான தூண்டுதலுக்கு ஒரு சாக்கு” . ஆமாம். சாதாரண கருத்து வேறுபாடுகள் கூட உங்களுக்கு மோதியைத்  தாக்கக்  கிடைத்த ஒரு சாக்குகள்.
 
மேலும் நீங்கள் எழுதுகிறீர்கள்- “உண்மைகள் பொய் பேசுதற்கான சாக்குகள்”: இடதுசாரி, தாராளவாதி, மதசார்பற்றவராக இருக்கும் உங்களைப்போன்றவர்கள் உருவாக்கிய உரையாடலில் ஆழமாக பதிந்திருப்பது பொய் பேசுவது ஒன்றே.
 
இந்தியாவின் மதச் சார்பற்ற-தாராளவாத எழுத்தாளர்களுக்கு இது போன்ற வாக்கியங்களை எழுதும்போது, தங்களது இதயங்களை பார்க்க நேரமோ அல்லது வெட்கமோ இருப்பதில்லை. ”எந்தவிதமான சிந்தனையோ அல்லது இரக்கமோ இல்லாமல், இந்திய தேசமே தனது வன்முறை மனமாச்சரியங்களால் நிறைந்து ஒரு பைத்தியக்காரனைப்போல நடந்துகொள்வது போல இருக்கிறது”
 
வெளிப்படையாக கேட்கிறேன். எந்த மாதிரியான விதைகளை நீங்கள் விதைத்து இன்று அறுவடை செய்துகொண்டிருக்கிறீர்கள்? இதோ கண்ணாடி, திரு மேத்தா அவர்களே, உங்களது மதச்சார்பின்மை என்பது இந்த யுகத்தின் அறிவுஜீவி காட்டுமிராண்டித்தனம். இது இந்திய இளைஞர்களை உங்களது அரசியலுக்காக பிரித்து அவர்களின் இதயத்தில் விஷத்தை விதைத்து அவர்களை மூலைக்குத் தள்ளி, அவர்களை திரும்பத் தாக்கும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது.
 
இந்தியாவின் இளைஞர்கள் உங்களைப் போன்றோரை நம்புவதில்லை.
 
நீங்கள் எழுதுகிறீர்கள்: ”இதற்கான முழுப்  பழியும் மோதியின் மீதே. இந்த விஷத்தை பரப்புபவர்களுக்கு அவரது ஆதரவு இருக்கிறது.”
இப்போதைக்கு நீங்கள் விதைத்த விதைகளின் பலன்களை அனுபவியுங்கள்.

சமூக வலைத்தளங்கள் இன்று இந்தியாவின் சாதாரண மக்களுக்கு உதவ வந்திருப்பது சுவாரஸ்யமானது. அந்த சமூக வலைத்தளங்கள் உங்களைப்போன்ற அறிவுஜீவி அதிகார தரகர்களால் வெறுக்கப்படுவதும் இன்னும் சுவாரஸ்யமானது. இன்னும் முக்கியமாக, உங்களை போன்றோர்களை வெகு வேகமாக அம்பலப்படுத்தவும் இந்த சமூக வலைத்தளங்களால் முடிகிறது.
 
mark-zuckerberg-narendra-modiநரேந்திர மோதி  பேஸ்புக்குடன் இணைந்து ஒவ்வொரு இந்தியரும் ஒரு வலைப்பத்திரிக்கையை நடத்த முடிகிற மாதிரி வசதி செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும். அது மேத்தாக்களுக்கும் அமார்த்யா சென்களுக்கும் அரசியல் கல்லறையாக இருக்கும். இந்தியாவின் மக்களை செல்லாக்காசாக ஆக்கும் பாதி இத்தாலியன் பாதி இந்தியன் வம்சாவளியினர்  உருவாக்கிய பெர்லின் சுவரை உடைத்தெறியும்.
 
உங்களது கட்டுரையின் கடைசி வரிகளை சிறிதே மாற்றி தருகிறேன்.
 
இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிரான அச்சுறுத்தல் இந்த மைய உரையாடலிருந்தே தொடங்குகிறது  என்பதை பிரதாப் பானு மேத்தா நமக்கு நினைவூட்டுவதற்காக நன்றி. இந்த மையமும், மேத்தாவும், சென்னுமே நம்மை அது உண்மையல்ல என்பதை உறுதி செய்யவேண்டும்.
 
Tufail Ahmad is a former journalist with the BBC Urdu Service and Director of South Asia Studies Project at the Middle East Media Research Institute, Washington DC. He can be reached at: tufailelif@yahoo.co.uk

Series Navigationஅவன், அவள். அது…! -8கரடி