இந்திய தேசத்தின் தலைகுனிவு

இங்கே யாருக்கும் வெட்கமில்லை
சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட
இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு.

2012, ஏப்ரல் மாதம் டி.பி சத்திரம் என்ற ஊரில் மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். நம் ஊர் தொலைக்காட்சிகளுக்கு அது வெறும் பரபரப்பான
செய்தியாக மட்டுமே இருந்தது. பார்ப்பவர்களுக்கும் அதைப் பற்றிய
எவ்விதமான சொரணையும் இல்லை. இறந்துப் போன அண்ணனின் வேலையை கார்ப்பரேஷனிலோ பஞ்சாயத்திலோ வாங்கிய தம்பி சின்னமுனியும் ஜூலை மாதத்தில் அதே போன்றதொரு முடிவில்
மரணமடைந்திருக்கிறார். இறந்துப் போனவர்களுக்கு அரசு நிவாரணம்
எதுவும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

சுதந்திர இந்தியாவில் 1993ல் மனிதக் கழிவை சக மனிதன் கையால்
சுத்தம் செய்யும் கொடுமையைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை மீறுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்
வலுவான அதிகாரத்தை இந்தியாவின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியாளருக்கும்
கொடுத்திருந்தாலும் இன்றுவரை ஒரு மாவட்ட ஆட்சியர் கூட
இச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இதை விட வேடிக்கையும் கொடுமையும் என்னவென்றால் இந்திய
அரசு நிறுவனமான இந்திய ரயில்வேயில் தான் இன்றுவரை
இத்தொழிலைச் செய்வதற்கு என்றே பணியாட்கள் வேலைக்கு
அமர்த்தப்படுகிறார்கள் நேரடியாகவோ ஏஜன்ஸி மூலமாகவோ.

இக்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் இந்திய உச்சநீதி மன்றத்திற்கு வெகு அருகில் உலர் கழிவறைகள் இன்றும் இருப்பதாக
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மட்டும் 13 இலட்சம் உலர் கழிவறைகள் இருப்பதையும் அதைச் சுத்தம் செய்வதில் மனிதர்களும் மிருகங்களும் (பன்றிகள் & நாய்கள் ) சமபங்கு வகிக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

இதோ சில புள்ளிவிவரங்கள்

மனிதர்களால் மிருகங்களால்

டில்லி 583 633

உ.பி 3.26 இலட்சம் 80291

வங்காளம் 1.3 இலட்சம் 72289

ஒரிசா 26496 24222

பீகார் 13487 35009

அசாம் 22139 35394

குஜராத் 2566 4890

மகாராஷ்டிரா 9622 45429

ஆந்திரா 10357 52767

கர்நாடகா 7740 28995

தமிழ்நாடு 27659 26020

இந்தியாவில் உள்ள 24.6 கோடி கழிவறைகளில் 26 இலட்சம் கழிவறைகளின்
மனிதக் கழிவு திறந்தவெளி சாக்கடையில் கலக்கிறது. இச்சாக்கடையை
துப்பரவு தொழிலாளிக்குரிய எவ்விதமான காலணியோ உடைகளோ
கண்ணாடியோ பிராணவாயு சிலிண்டர்களொ இத்தியாதி எதுவுமின்றி
மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்பவன் உங்களையும் என்னையும் போல
நம் சகமனிதன்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு காணச்சொன்ன எவருக்கும்
இந்தியாவின் இந்தக் கொடுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏன் தெரியுமா
அவர்களின் சிறுகுடல் பெருங்குடல்கள் மலம் சுமப்பதில்லை அவர்கள்
மலம் கழிப்பதுமில்லை. இந்தி தொலைகாட்சியில் ஒரு நகைச்சுவை
நடிகர் ஓர் உண்மை சம்பவத்தை கொஞ்சம் நகைச்சுவையுடன்
சொன்னது நினைவுக்கு வருகிறது.

அவருடைய கிராமத்திற்கு அவர் மும்பையிலிருந்து தொலைக்காட்சி
தொடர்கள் மூலம் பிரபலமான பின் சென்றிருந்தப் போது அங்கிருந்த
அப்பாவி கிராமத்து மக்கள் கேட்டார்களாம்,
மும்பையில் தானே பேரழகி ஐஸ்வரியராய் இருக்கிறார் என்று.
இவரும் ‘ஆமாம் ‘ என்றாராம். அதில் ஒருவர் ரகசியமாக வந்து
மெல்லிய குரலில் கேட்டாராம்… ‘ முன்னா, அவுங்களும் நம்மளைப் போல
காலையில் எழுந்து நம்பர் டூ இருக்கத்தானே செய்வாங்கனு!!!”

எதற்கு எடுத்தாலும் அமெரிக்கா அமெரிக்கா என்றும் மேலை நாடுகள் என்றும் பறந்து கொண்டிருக்கும் நம் இளம் அறிவுக் கொழுந்துகளுக்கு ஏன் அந்தந்த நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கழிவுகளை எடுத்துச் செல்லும் வாகனம், சுத்திகரிப்பு தொழிலாளிக்கு அரசு செய்து கொடுத்திருக்கும் வசதிகள்,
அவர்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், எந்திரமயமான
சுத்திகரிப்பு வேலை… இத்தியாதி
எதையும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று எண்ணமே வரவில்லை? ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் நவீன
ஐபேட் இந்திய சந்தையில் வரும் முன்பே டில்லியில் விற்பனை
ஆகும் அளவுக்கு நுகர்வோர் சந்தையைக் கொண்ட இந்திய
சமூகம் இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை?
வால்மார்ட் இந்திய மண்ணில் கால்பதித்தே ஆகவேண்டும் என்று
பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதேஅமெரிக்க நாட்டிலிருந்து
இந்த வசதிகளையும் கொண்டு வர ஏன் முயற்சிப்பதில்லை?

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள
தொழிலாளர்கள் 19 பேர் சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கும் போது
மரணம் அடைந்திருக்கிறார்கள், அவர்களைப் பற்றி பேசவோ
எழுதவோ சாதிப்படிநிலையைத் தாண்டி ஒருவரும் வரவில்லையே! ஏன்?
செத்துப் அந்த 19 பேரும் தமிழர்கள் இல்லையா? அவர்கள் சாவுக்கு
யார் காரணம்? தமிழ் தேசியம், ஈழப்போராட்டங்கள் , மொழி போராட்டங்கள்
மார்க்சிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் இப்படி சமத்துவத்திற்காக போராடும் எத்தனையோ
கூடாரங்களை தொலைக்காட்சியில் பார்க்கிறோமோ… இதில் எந்த ஒரு
பாசறையிலிருந்தும் இவர்களுக்காக இவர்களையும் தன் சகமனிதனாக
நினைத்து குரல் கொடுத்தவர் எத்தனைப் பேர்?

ஏன் எனில் இத்தொழில் இந்திய சமூகத்தில் ஒரு சாதியம் சார்ந்த தொழில்.
இத்தொழிலை செய்வது இவன் தலைவிதி என்று விதிக்கப்பட்டிருப்பதை
காலம் காலமாய் சுமந்து சுமந்து செல்லரித்து போய்
செப்பனிட முடியாத அளவுக்கு சிதைந்து கிடக்கிறது நம் சமூகம்.
இந்தியாவில் மட்டுமே இக்கொடுமை நிலவுவதற்காக
ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும்.
இக்கொடுமை இந்திய தேசத்தின் அவமானம்.

பி.குறிப்பு:

மேலதிக விவரங்களுக்கு : ref: Safai Karamchari Andolan

Series Navigationவெளிநடப்புசென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்