இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் இரண்டு

Spread the love

அழகர்சாமி சக்திவேல்

கடந்த அத்தியாயத்தில், புதுக்கல்விக்கொள்கையின் சில பொதுவான விசயங்களை ஒப்பு நோக்கிப் பார்த்தோம். இப்போது அதன் பிரச்சினைகளை சற்று ஒப்பு நோக்குவோம்.

  1. ஏழை பாலகர்களின் அங்கன்வாடி அமைப்புகள்

என்னதான் மத்திய அரசு கல்விக்காக எவ்வளவோ செலவிட்ட போதும், பாலர்கல்வித் திட்டம் என்ற ஒரு திட்டத்தில், மத்திய அரசு இதுவரை, அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதில் ஓர் உண்மை இருக்கிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும், அங்கன்வாடித் திட்டம், தமிழக அரசு கொண்டுவந்த திட்டமே அன்றி, அது போன்ற கல்வித்திட்டம், மத்திய அரசிடம், இதற்கு முன்னர் இருந்ததாக, நமக்குத் தெரியவில்லை. தமிழக அரசு நடத்தும் அங்கன்வாடித் திட்டத்திலும், வறுமைக்கோட்டில் வாழும் பிள்ளைகளின் பசி தீர்ப்பதே ஒரு முக்கியச் செயலாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறதே ஒழிய, அந்தப் பிள்ளைகளுக்கு, உணவோடு சொல்லித்தர, மாநிலம் தழுவிய ஒரு பாலர்கல்வித்திட்டம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சிங்கப்பூரைப் பொறுத்தவரை, பாலர்கல்வி சொல்லித்தரும் ஆசிரியர்கள், அதற்கான முறையான கல்விப் பயிற்சி எடுத்து இருக்கவேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு போட்டு இருக்கிறது. இது போன்ற, அரசு ஏற்று நடத்தும் பாலர்கல்வி ஆசிரியர் பயிற்சிக் கூடங்கள் (Institutes for Early Childhood Education), இப்போது தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரை, மாண்டிச்சேரி(Montessori) போன்ற தனியார் ஏற்று நடத்தும் பாலர் ஆசிரியர் கல்வியே தற்போதைய நடைமுறையில் இருக்கிறது. அப்படி இருக்க அங்கன்வாடிப் பிள்ளைகளை, மத்திய அரசு பாலர்பள்ளி பிள்ளைகளாய் மாற்றுவதில் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. முதலில், அங்கன்வாடியில், தற்போது பணிபுரியும் ஆசிரியர்களை, புதிய கல்விக் கொள்கை பாலர் பள்ளி ஆசிரியர்களாக மாற்ற, அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். பயிற்சியில் தேறாத அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு, தேறுவதற்காய், ஓரிரு வருடங்கள் சந்தர்ப்பங்கள் கொடுக்கவேண்டும். அப்படியும் தேறாதவர்கள், தயவு தாட்சண்யம் பார்க்காமல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். புதியகல்விக் கொள்கையின் கீழ் வரும், அனைத்து பாலர் பள்ளிகளிலும், அங்கன்வாடி அவசியம் ஒரு இணைப்பாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். பாலர்பள்ளிகள் தனியார்வசம் விடுவதில் தவறில்லை. ஆனால் அங்கேயும், ஒரு அங்கன்வாடி நிறுவ, இந்தியாவின் புதிய பாலர்பள்ளிக் கல்விக்கொள்கை ஆவன செய்யவேண்டும்.

  • ஆசிரியர் தேர்வு

மறந்துவிடாதீர்கள். நாம் இன்டர்நெட் யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இன்று நாம் கற்கும் கல்வி, நாளை வேறு ஒரு நிலைக்கு மாறும் அசுரவேகத்தோடு நாம் போட்டிபோடும் நிலையில் இருக்கிறோம். அப்படி இருக்க, ஆசிரியர் வேலைக்கு வரும் முன் படித்த, கல்லூரிக்கல்வியும், ஆசிரியர் வேலைக்கு வரும் முன், படித்த ஆசிரியர் கல்வியும் ஒரு ஆசிரியருக்கு, அவர் வாழ்நாள் முழுதும் கற்பிக்க போதுமானது கிடையாது என்பது புரிந்துகொள்ளப் பட வேண்டும். ஆனால், இந்தியாவின் இன்றைய ஆசிரியர்களின் திறமை, எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா? குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் திறமையாகவே, இன்றைய இந்தியாவின், பெரும்பான்மையான ஆசிரியர்களின் திறமை இருக்கிறது. நான் கேட்கிறேன். அசுர வேகத்தில் வளர்ந்து போகும் இன்டர்நெட் கல்வியின் முன்னால், ஒரு அரசால் எந்த அளவுக்கு ஒரு முறையான பாடத்திட்டம் கொடுத்துவிட முடியும்? ஓரளவிற்கே பாடத்திட்டம் வரைய முடியும். அப்படி கொடுக்கப்படும் பாடத்திட்டத்தை எடுத்துக்கொண்டு, அதனை வளரும் கல்விக்கேற்ப மாணவனைத் தயார் படுத்துவதில்தான் ஆசிரியரின் திறமை இருக்கிறது. இந்திய அரசு, பாடத்திட்டங்களை வரையறுத்து அதற்கேற்ப ஒரு பாடப்புத்தகம் கொடுக்கலாம். ஆனால் அந்தப் பாடப்புத்தகத்துக்குள் மட்டும் ஒரு ஆசிரியர் ஓடாது, அதை வெறும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, அது சார்ந்த இன்னும் பல புதிய தகவல்களை வலைத்தளத்தில் பெற்றுத்தருவதும், மாணவனையும் வலைத்தளம் செல்ல ஊக்குவித்து, அவனையும் பாடம் சார்ந்த தகவல்களைப்பெற ஊக்குவிப்பதே, புதுக்கல்விக் கொள்கை சொல்லும் உலகத்தரம் ஆகும். ஆக, வளரும் கல்விக்கேற்ப, ஒரு ஆசிரியர் தனது திறமையை வளர்த்து இருக்கிறார் என்பதை சோதிக்க, அந்த ஆசிரியர் வருடாவருடம் ஏதாவது ஒரு தேர்வுக்குழு முன் நின்று, தன்னை நிருபிப்பது அவசியம் அன்றோ? கம்யுனிசம் இது போன்ற ஆசிரியர் தேர்வு விசயங்களை எதிர்ப்பது ஏனோ?

ஆசிரியர் கல்வி என்பது, கரும்பலகையில் எழுதுவதும், கத்திக் கத்தி பேசுவதும் அல்ல. மாறாய், மாணவனோடு சேர்ந்து ஆசிரியரும் உட்கார்ந்துகொண்டு, தனது அறிவைப் பெருக்கிக்கொள்வதே புதிய கல்வி முறை. ஆசிரியர் வேலை வாய்ப்பு என்பது, ஜாதியின் அடிப்படையில் தரப்படலாம். ஏற்றத்தாழ்வு மிக்க இந்தியாவில் அது தவறு இல்லை. ஆனால், வேலையில் சேர்ந்த பின்னரும், தனது திறமையை, ஜாதியின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும் என்ற ஜாதிச் சித்தாந்தம் தவறானது. உலகத்தரம் வாய்ந்த புதுக்கல்வி தர, தொடர்ந்து தனது அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொண்டு, out of box போய் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களே புதுக்கல்விக்கு தேவை.

  • மாணவர் தேர்வு முறைகள்

தேர்வுகள் என்றவுடன் மாணவர்கள்தான் அலர்ஜி அடைவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், இப்போது வேலையில் இருக்கும் இந்திய ஆசிரியர்களும் அலர்ஜி அடைகிறார்கள் என்பது நகைப்புக்குரியது. “ஐந்தாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வா” என்ற அங்கலாய்ப்புக்களை நாம் முகநூலில் பார்க்க முடிகிறது. அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள், அதற்கு பக்கம் பக்கமாய் மாணவர்கள் எழுதும் விடைத்தாள்கள், “இந்த வரியை எழுதினால் ஒரு மதிப்பெண் கொடுங்கள்… அந்த வரியை எழுதினால் ஒரு மதிப்பெண் கொடுங்கள்” என்ற கல்வித் தலைமையகத்தின் ஆணையின்படி மதிப்பெண்கள் போடும் ஆசிரியர்கள், இத்யாதி இத்யாதி என்ற காகித நாடகங்களுக்குப் பழகிப்போன சில ஆசிரிய மூளைகள், புதுக்கல்வி குறித்து அங்கலாய்க்கவே செய்யும். ஆனால் புதிய கல்விக்கொள்கையின் வினாக்கள் முற்றிலுமாய் அல்லது பெரும்பாலுமாய் objective type என்ற, தேர்ந்தெடுத்து எழுதும் வினாக்களாகவே இருக்கும். எனவே விடை திருத்தும் வேலை, மிகச் சுலபமாக முடிந்துபோகும். தோராயமாகச் சொல்லப் போனால், இப்போதைய கல்வி முறையில், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளிள், அறுபது சதவிகிதம் புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளை அப்படியே நினைவில் வைத்து எழுதும் நேரடிக் கேள்விகளாகவும், மீதி நாற்பது சதவிகிதம் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களாகவே யோசித்து எழுதும் மறைமுகக் கேள்விகளாகவும் இருக்கிறது. புதுக்கல்வி முறையில் இந்த நிலை மாறும். அதாவது கேட்கப்படும் கேள்விகளில். நேரடிக்கேள்விகள் மிகக் குறைவாகவும், யோசித்து எழுதும் மறைமுகக் கேள்விகள் அதிகமாகவும் இருக்கும். இதனால் அடையும் பெரும்பலன் என்ன தெரியுமா? மாணவர்கள், தான் படிக்கும் பாடத்தில் அரைகுறை அறிவோடு இல்லாமல், முழு அறிவோடு தேர்ச்சி பெறுகிறார்கள்.

குண்டுச்சட்டி ஆசிரியர்களுக்கு சிரமம்தான். மாணவர்கள் முழுமையான அறிவு பெற, அவர்கள் பாடப்புத்தகம், வலைத்தளம், நூலகம் என நிறைய இடங்களுக்குப் போய், தங்கள் அறிவை மேம்படுத்திக் கொண்டு, பின் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். ஆசிரியர்களின் வேலைப்பளு (வேலைப்பளு என்பதைவிட, அறிவுப்பளு என்று நான் சொல்லுவேன்) கூடுவதால், கம்யுனிசம் இங்கே நுழைகிறது. எதிர்ப்புக்குரல் வலுக்கிறது. ஆனால் நான் சொல்லுவேன், இந்த கணினி யுகத்தில் இதெல்லாம் சாத்தியமே.

தேர்வின் முடிவில், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கக்கூடாது. மாறாய், A,B,C என்ற grade systemதான் வழங்கப்பட் வேண்டும். தேர்வு முடிவுகள், பொதுவில் எல்லாருக்கும் தெரியும்படி வெளியிடாமல், அந்த அந்த மாணவனுக்கும், சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் தெரிந்தால் போதுமானது. ஒரு பாடத்தில் தேரமுடியாமல், மற்ற பாடங்களில் தேறியவனுக்கும், அடுத்த வகுப்புக்குப் பாஸ் ஆகிப் போகும் உரிமை, புதுக்கல்வி முறையில் வழங்கப்பட வேண்டும். எந்தப் பாடத்தில் அவன் தேறவில்லையோ, அந்தப்பாடத்தில் அவன் கவனத்தைக் குறைத்து, அந்தப் பாடத்தில் மட்டும் அவனுக்கு அடிப்படை கல்வி கொடுத்தால் போதுமானது என்பதே புதுக்கல்வியின் முக்கியமான சிறப்புக்களுள் ஒன்று.

Series Navigationஅவள் வானத்தில் சில மழைத் துளிகள்மாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது