இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து

This entry is part 6 of 12 in the series 4 அக்டோபர் 2020

                            

[எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]

சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, மொழிப்பெயர்ப்பு எனப் பலதுறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர் தோழர் எஸ்ஸார்சி. அவரின் அண்மை வெளியீடு “இன்னும் ஓர் அம்மா” எனும் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் பதினாறு கதைகள் அடங்கி உள்ளன. அவற்றில் முதல் ஒன்பது சிறுகதைகள் அம்மா பற்றி உள்ளன. அம்மாபற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே இருக்கலாம் அன்றோ?

”தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாய் உடன் அணைப்பள்” என்பார் வள்ளலார். அவன் தடித்த மகனாயிருப்பினும் தாயின் அணைப்பிற்குரியவன். முதல் சிறுகதையில் ராமு என்னும் சிறுவன் இளநீருக்கு ஆசைப்பட்டுக் கோயில் நந்தவனத்தின் தென்னை மரத்தில் ஏறி ஒரு காயைப் பறித்து விடுகிறான். பார்த்து விட்ட பண்ணையார். அவனைப் பிடித்து அவன் தந்தையிடத்தில் வந்து புகார் செய்து விட அப்பா ராமுவைக் கட்டி வைத்து அடிக்கிறார். அம்மா வந்து தடுத்து அவிழ்த்து விடுகிறார். மறுநாள் காலையில் வீட்டில் ராமுவைக் காணவில்லை, அப்பொழுது காணாமல் போன கால் ரூபயையும் அவன்தான் எடுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்று அப்பா சொல்ல, “மொதல்ல ஒரு அப்பாவா நடந்துக்குங்க” என்கிறார் அம்மா. கால் ரூபாய் அப்பாவின் மடியிலேயே இருக்க அப்பா கண் கலங்கிகிறார். ராமு யார் மூலமோ வீடு வந்து சேர்கிறான் என்பதுதான் “அம்மா மனசு” கதை. அம்மாக்கள் எப்பொழுதுமே பிள்ளைகள் மீது அன்பு மட்டுமன்று நம்பிக்கையும் வைப்பவர்கள்.

”அம்மாவின் திட்டு” என்பது மகன்களுக்கு அடிக்கடிக் கிடைப்பதுதான். ஆனால் அது கோழி மிதித்துக் குஞ்சு சாகாது என்பது போல அரவணைப்பின் காரணமாக வந்து விழுவதுதான். தான் இல்லாதபோது தன்னைத் திட்டுவதைக் கேட்டுக்கொண்டே மகன் வந்து விடுகிறான், மிகவும் மனம் வருந்துகிறான். ஆனால் குரங்கு தன் குட்டிக்கு உணவு ஊட்டுதல், குருவி தன் குஞ்சுகளுக்கு உணவு தருதல், பூனை தன் குட்டியைத் தன் வாயால் கௌவிக்கொண்டு போதல் முதலியவற்றைப் பார்த்து அம்மாவின் திட்டு மகனைப் பாதிக்காது என உணர்கிறான்.. அதற்குப்பின் அவன் அம்மாவின் வயிற்றில் இருக்கும் மூன்று தழும்புகளைப் பார்த்து அவற்றில் ஒன்று தன்னைப் பிரசவிக்க அறுவை செய்ததால் வந்தது என்றெண்ணும்போது அவன் மனம் கனக்கிறது. அவன் தாய்மையின் முன் சிறுத்துப் போகிறான்

பிள்ளையைத் தன் வீட்டில் திருடியதற்காக அப்பா அடிக்கிறார். அவன் ஓடிப் போகிறான். என் மகன் இல்லாமல் வீட்டிற்கு வராதே. போய்த் தேடிக் கொண்டு வா” என்று அம்மா சொல்ல அப்பா தேடப் போனவர் திரும்பவே இல்லை. ஆனால் மகன் வந்து சேர்ந்து விடுகிறன். அப்பா இல்லாவிட்டலும் அம்மா பூவோடும் பொட்டோடவும் வாழ்ந்து போய்ச் சேர்கிறார். அம்மாவின் மறைவைச் சொல்லி பின் நண்பன் ஒருவன் அப்பா பற்றிக் கேட்கும்போது மகன் சொல்வதாக ”அம்மாவின் பொட்டு” கதை பின்னப்பட்டுள்ளது. நல்ல உத்தி. 

‘அய்யரூட்டம்மா” கதையில் அய்யரூட்டாம்மாவின் கணவர் பிணம் குளத்தில் இருந்து கண்டெடுக்கப் படுகிறது. ஏன் என்பது வாசகனுக்கு மர்மமாயிருக்கிறது. கதையின் முடிவில் அம்மா கணவரிடம் ஒரு கேள்வி கேட்டது சொல்லப்படுகிறது. ”என் மூணு பவுனு சங்கிலியை நோவாம கொண்டுபோயி உன் தங்கைக்குப் போட்டுவிட்டு இங்க வந்து குத்துக் கல்லாட்டம் நிக்குற; அவாளுக்குக் கொடுத்த வார்த்தையை நீ காப்பாத்தற லட்சணம் இப்படியான்னு கேக்கறேன்; நீ என்கிட்டயே வராதே. எங்கிட்ட என்ன படுக்க? உன் தங்கைக்கிட்டயே போயி படுத்துக்க.போ” 

இதனால் அவர் குளத்தில் போய் விழுந்து விட்டார் என ஊகிக்க முடிகிறது.  “நோவாம” என்னும் சொல் அய்யரூட்டாம்மாவின் மொழியில் இடிக்கிறது. ஆமாம்; அம்மாவின் வார்த்தைகள் இது போல நஞ்சாகவும் வந்து விழுகின்றன. கணவனிடம் ஒருவகையானக் கோபம் கலந்த அன்பு கொண்டவர்தான் அம்மா என்று கதை காட்டுகிறது. கசப்பான கதைதான்; ஆனால் யதார்த்தம் மிளிர்கிறது.

தொகுப்பின் தலைப்புக் கதை “இன்னும் ஓர் அம்மா” மனிதாபிமானத்தைக் காட்டும் அற்புதமான கதை. இதுவும் ஒரு பிராமண சமூகக் கதைதான். அடுக்ககக் குடியிருப்பில் குடியிருப்பதால் வரும் ஒரு தொல்லையும் கதை காட்டுகிறது. ஆனால் வீட்டில் நாளை ஒரு மங்கல நிகச்சி நடக்க இருக்கையில் இறந்துபோன உடலைத் தன் வீட்டிற்குள் எடுத்து வர உரிமையாளர் ஒப்புக்கொள்ளாததிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. அம்மா, தம்பி, பொண்ணு, மாப்பிள்ளைவரும்வரை அப்பாவின் உடலை எங்கே கொண்டுபோய் வைப்பது என்றி அவன் தவிக்கிறான். 

அப்போது வீட்டில் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்யும் வேலைக்காரியும் அவள் கணவனும் தங்கள் வீட்டில் கொண்டுவந்து வைக்கவும் சடங்குகள் செய்யவும் சம்மதிக்கிறார்கள், மேலும் அவர்கள் வேறு வீட்டில் போய்த் தங்கிக் கொள்ளவும் முடிவெடுக்கிறார்கள். உடலை எடுத்து வரப் பல வகைகளில் உதவிகளும் செய்கிறார்கள். அந்த வேலைக்காரியைத்தான் அவன், “எனக்கு இன்னொரு அம்மா கெடச்சிருக்கா” என்று சொல்லி அவரின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு எழுகிறான். கதை முழுதும் உணர்ச்சிக் குவியலாய் எழுதி உள்ளார்.

பிள்ளை நல்ல வேலையிலிருக்கிறான். அப்பா எங்கோ ஓடிப் போய்விடுகிறர். அம்மாவையும் சரியான சம்பளம் இல்லாத வேலையில் இருக்கும் மகனையும் வைத்துக் கொண்டு மகள் துன்பப்படுகிறாள். இறுதியில் அம்மாவிடம் சொல்லாமல் அவரைக் கொண்டுபோய்த் தன் அண்ணன் வீட்டில் கொண்டு போய் விட முடிவெடுக்கிறாள். ஆனால் அந்தப் பிள்ளையோ அப்பா வைத்து விட்டுப் போன மூன்று லட்சம் ரூபாயுடன் கொண்டுவந்து விடச் சொல்லிப் போகாத ஊருக்கு வழி சொல்கிறான். ஏற்றிவந்த டாக்சி ஓட்டுநர் கூடப் பணம் வாங்காதபோது சொந்த மகன் பணத்தைப் பெரிதாக எண்ணுவதாகக் கதையின் சூழல் நன்கு காட்டப்பட்டுள்ளது. கடைசியில் அம்மா எனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே என முடிவெடுப்பதாக ”மிதிபட்டாள் அம்மா” கதை சொல்கிறது. ஆமாம்; இப்பொழுதும் இதுபோல பல அம்மாக்கள் மிதிபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் முதியோர் இல்லங்களிலும்.   

சில அம்மாக்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. “இப்படியும் அம்மா” சிறுகதை. கசக்கிறதுதான். ஆனால் இனிப்பும் கசப்பும் கலந்துதானே உலகம். மனித மனம் இன்னமும் புரியாத புதிர்தான். இல்லையெனில் மகனுக்குத் திருமணமான பிறகு ஒரு அம்மா வசதியான கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவனுடன் வாழப் போவாளா? அவள் கணவனும் அவளை மறந்துவிட்டுச்  சில ஆண்டுகள் தன் மகனுடன் இருந்தவன் மனைவி இறந்த செய்தி கேட்டு அவளைப் பார்க்கத்தான் போவனா”  அப்படி நீ ஏன் போனாய்? இனி என் வீட்டிற்குள் நுழையாதே என மகன் கூறுவானா? எல்லார் பக்கத்திலும் ஒவ்வோர் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. வாசகனுக்கு நிறைய ஊகங்களுக்கு வேலை தரும் நவீன இலக்கியச் சிறுகதை இது.

ஆணவக் கொலை என்று புதிய சொல்லாக்கத்தையே இன்றைய சூழல் கொண்டுவந்து விட்டது. ”ஒரே வர்ணம்தான் அதுக்குன்னு நாம உட்டுட முடியாது” என்று தொடங்குகிறது ”அம்மா எப்படி அறிவாள்” சிறுகதை. தன் நிலத்தை வாங்கித் தொல்லை தர தன் மகளுக்குத் தூண்டில் போட்டுவிட்டான் தன் சாதியைச்சேர்ந்தவன் என்று தெரிந்து தன் மகளைக் கொலை செய்து விடுகிறான் அவன். அவன் மனைவிக்கு எதுவும் தெரியாது. அவளோ புத்தி பேதலிக்க அவனோ இறந்துபோகிறான். காதலித்தவனே குடும்பக் காவலாக மாறுகிறான். அம்மாக்கள் ஒன்றும் தெரியாதவர்களாக வைக்கப்படுகிறார்கள் என்று காட்டும் கதை இது. 

அம்மாவுக்குத் திவசம் கொடுக்கிறான் பிள்ளை. வீட்டில் மணமாகிப் போய்த் திரும்பி வந்துப் பத்தாண்டுகளாக இருக்கும்  அவன் தங்கை திவசத்திற்குச் சாப்பிட வந்தவனுடன்  போய் விடுகிறாள். அவள் சொல்லும் காரணம்தான் புதிது. தான் இந்த வீட்டில் இருப்பதால்தான் தன் அண்ணனும் அவன் மனைவியும் கணவன் மனைவியாக வாழவில்லை என்பதுதான் அவள் சொல்லும் காரணம். இது புது மாதிரிக் கதைதான். படிக்க சுவாரசியமாக உள்ளது. நடை அருமை.

படைப்பாளர் ஒருவருக்கு  விருது கிடைக்கிறது. அவர் இறந்துவிட்டதால்  வாங்க யாரும் முன்வரவில்லை. அவரின் பதிப்பாளர் யாரையாவது அழைத்து வர முயன்று விருது பற்றியும், கிடைக்கும் தொகை பற்றியும், வாங்கும் விவரம் பற்றியும் மறைந்துபோன படைப்பாளரின் மகனுக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு என்ன பதில் வந்ததென்று கதை சொல்லவில்லை. வாசகனே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான். முடிவு இனிப்பாகவும் இருக்கலாம்; கசப்பாகவும் இருக்கலாம். ஆகக் காய்த்த மரம் அந்தப் படைப்பாளர்; அதனால்தான் கல்லடி படுகிறாரோ?

பேருந்தின் குடிமகன் செய்யும் லீலைகளைச் சொல்லும் கதை குடிமகன் சிறுகதை. முழுக்கக் குடியின் தீமையைச் சொன்னால் பிரச்சாரம் ஆகிவிடும் என எண்ணினாரோ தெரியவில்லை. இடைஇடையே டோல்கேட் வசூல், கார்ப்பரேட்டுகள், நேரு கண்ட கனவு என்ரு கதாசிரியர் அடுக்கிக் கொண்டே போகிறார்.

பேருந்தில் கல்லூரி மாணவ மானவிகள் செய்யும் அருவருப்பு நடவடிக்கைகளைப் பார்த்துக் கண்டிக்கிறார் ஒருவர். அம்மாணவியினால் அலைபேசியில் புகார் செய்யப்பட்டுக் காவலரால் குடித்து விட்டுத் தொல்லைதந்ததாகக் கண்டித்தவர் இறக்கி நிலையத்துக் கொண்டு செல்லப்படும் கதை ”மாற்றம்”. உண்மையில் இந்தக் கால நடைமுறை இதுதான். நல்லவற்றுக்குக் காலமில்லை. அல்லவைதான் வாழ்கின்றன. நமக்கென்ன என்று எல்லாரும் பேசாமல் இருக்கிறார்கள். இதுதான் மாற்றம். 

சமுத்திர குப்பத்தில் இருந்த நல்ல அரங்கம் எப்படி வீணாகப் போனது என்று சொல்லும் கதை ”நல்லதோர் வீணை செய்தே” என்னும் கதை. அந்த அரங்கத்தில் நடந்த ஒரு பட்டி மன்றத்தில் அரசியல் பேசினார்கள் என்பதால் நகராட்சி அந்த அரங்கத்தைத் திருமணமண்டபமாக மாற்றி விட்டது. இப்பொழுது நாடகம் போடவேண்டிய உபகரணங்கள் சீந்துவாரற்றுக் கிடக்க திருமணச் சடங்குகள் செய்ய உதவுபவை மேடையில் ஏறிவிட்டன. ஆனால் இப்பொழுது அந்த அரங்கத்திற்கு நல்ல பண வசூல் நடக்கிறது. இடம் கொடுத்தால் கண்டபடி பேசக் கூடாதல்லவா? பேசியதால்தானே அந்த வீணை பாழ்பட்டது.

இறுதியில் இருக்கும்  மூன்று சிறுகதைகளும் தொகுப்பில் ஒட்டாமல் தனித்து நிற்கின்றன. பெரும்பாலான கதைகளின் அப்பாக்களையும் அம்மாக்களையும் நாம் அன்றாடம் சந்தித்த உணர்வைத்தான் ஏற்படுத்துகின்றன இத்தொகுப்பின் கதைகள். இதுவே இத்தொகுப்பின் வெற்றி என்றும் கூறலாம். நூலை நல்ல முறையில் கொண்டுவந்துள்ள அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தார்க்குப் பாராட்டுகள்.

[இன்னும் ஓர் அம்மா—சிறுகதைத் தொகுப்பு–வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரும்பூர், சென்னை-600 011—பக்: 144—விலை: ரு140/  94446 40986]

=====================================================================================    

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்வாங்க, ராணியம்மா!
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *