இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்

Spread the love


என். எஸ்.வெங்கட்ராமன்

கேரளாவில் இயற்கை எரிவாயு இறக்குமதி அமைப்பு

கேரளா மாநிலம், கொச்சியில்,சுமார் ரூபாய்.4000 கோடி முதலீட்டில், இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் (LNG terminal) அமைக்கப்பட்டது. 

தற்போது, இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை தமிழ்நாடு,கர்நாடாகா மாநிலங்களுக்கு கொண்டு செல்லும், இயற்கை எரிவாயு குழாய் திட்டம் முழுவதும் அமல்படுத்தப்படாமலுள்ள நிலையில், இந்த இயற்கை எரிவாயு இறக்குமதி மையம்,திறனில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவே செயல்பட்டு வருகிறது. இதனால், இந்த நிறுவனத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுவருகின்றது. 

கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு எரிவாயு குழாய் திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசை சார்ந்த கெய்ல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், எரிவாயு குழாய் அமல்படுத்த, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால், கெய்ல் நிறுவனத்தால் எரிவாயு குழாய் திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. இது வரை,கேரளா மாநிலத்தில் சுமார் 60 கிலோ மீட்டர் நீள அளவிலேயே அமல்படுத்தப்பட்டு, தற்போது உபயோகத்தில் உள்ளது. 

இந்த எரிவாயுவை கொண்டு, கேரளா,கர்நாடகா, தமிழ்நாட்டில் சுமார் ரூபாய் 20,000 கோடி அளவு முதலீட்டில் உரம், எரிவாயு, மின் உற்பத்தி நிலையம், ரசாயன தொழிற்சாலைகள் தொடங்கவுள்ள வாய்ப்பை இந்த மூன்று மாநிலங்களும் இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த திட்டங்களால், இந்த மூன்று மாநிலங்களிலும் பெருமளவு தொழில் வளர்ச்சி கூடும் வாய்ப்புள்ளது, ஏராளமான அளவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ள போதிலும், இத்தகைய வாய்ப்புகள் இதுவரை நடைமுறையில் வரவில்லை.

கேரளா அரசின் சாதனை

இத்தகைய நிச்சயமற்ற நிலையில், கேரளாவின் முதல் மந்திரி, துணிச்சலுடன், 2018ம் ஆண்டு ஜனவரி மாதம், கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் எரிவாயு குழாய் திட்டம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிவடைந்து உபயோகத்திற்கு வருமென்று அறிவித்தார். 
இருப்பினும், கேராளவில், 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தாலும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் நில உரிமையாளர்களின்  எதிர்ப்பினால் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டம் நிறைவேறவில்லை. 

எனினும், கேரளா அரசின் விடாமுயற்சியாலும், சாதுர்யமான அனுகுமுறையாலும் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இயற்கை எரிவாயு குழாய் பதிக்க கையகப்படுத்த நிலத்திற்கு நஷ்ட ஈடு அளிக்கப்பட்டு, குழாய் அமைப்பு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் பெறப்பட்டது.

இதனால் ஏற்பட்ட, சுமுகமான நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் வேகமாக அமல்படுத்தப்பட்டு 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடினமான பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு கண்டு ஆக்கபூர்வமான திட்டத்திற்கு வழி வகுக்க கேரள அரசு முன்னுதாரணமாக உள்ளது.

கேரளா – கர்நாடகா இயற்கை எரிவாயு குழாய் அமைப்பு முடிவடைந்த பின் இரு மாநிலங்களிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு ஏற்படுவதற்கு சாதகமாகும். வேலை வாய்ப்பு பெருகி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்கும்.

தமிழக அரசு சாதிக்காதது

சில விவசாய அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் சுமார் 310 கிலோ மீட்டம் நீளத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கெயில் நிறுவனம், தமிழ் நாட்டில் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூபாய் 685 கோடி செலவில் குழாய்களையும், மற்றும் தேவையான உபகரணங்களையும் வாங்கி, தமிழகத்தில் திட்டம் அமைக்க ஏற்பாடு செய்தது. திட்டத்திற்கு எதிர்ப்பினால் நடைமுறைபடுத்த முடியாத நிலையில் கெய்ல் நிறுவனம் தமிழ்நாட்டில் எரிவாயு குழாய் திட்டம் அமைப்பதை கைவிட்டு விட்டதாக அறிவித்தது. இதனை குறித்து தமிழக அரசோ அல்லது தமிழ்நாடு அரசியல் கட்சிகளோ கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. 

தமிழ் நாட்டில் திட்டத்தை எதிர்த்த விவசாய அமைப்புகள் தாங்கள் இந்த குழாய் திட்டத்தினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய நன்மைகளை அறிந்துள்ளதாகவும், விவசாயிகளின் நிலம் கையகப்படுத்துவதற்கு தகுந்த அளவில் நஷ்ட ஈடு அறிவிக்கப்படவில்லை என்பதும்,தங்களது எதிர்கால வாழ்வாதாரங்கள் பாதிக்காமலிருக்கவுள்ள திட்டங்கள் தெரிவிக்கப்படாததும் தான் தங்களது எதிர்ப்பிற்கு காரணம் என்று கூறுகின்றன.  
இந்த நிலையில், தமிழக அரசு பாராமுகத்துடன் நடந்து கொண்டதா என்று சந்தேகப்படும் வகையில், தமிழக அரசு இந்த திட்டத்தை பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை சரிவர நடத்தி தீர்வு காணவில்லையோ என்று தோன்றுகிறது.

தமிழ் நாட்டில் கொச்சி  இயற்கை எரிவாயு இறக்குமதி மையத்திலிருந்து இயற்கை எரிவாயுகை கொண்டு வருவது தமிழ் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த நிலையில்  கேரளா அரசின் அனுகுமுறையை நினைவில் கொண்டு, கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு தகுந்த அளவில் நஷ்ட ஈடு கொடுத்து கெய்ல் நிறுவனம் தமிழ்நாட்டில் எரிவாயு குழாயை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்போவது தமிழக அரசு அல்ல. மத்திய அரசை சார்ந்த கெய்ல் நிறுவனம் தான். இந்த ஆக்கப்பூர்வமான திட்டத்திற்கு மத்திய அரசின் உதவியும், ஒத்துழைப்பும்  கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்தின் அவசியத்தை மனதில் கொண்டு துணிவுடன் தமிழக அரசு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எண்ணூர் எரிவாயு இறக்குமதி மைய அமைப்பின் நிலை என்ன? 

தமிழகத்தில் எண்ணூரில் 5 மில்லியன் டன் அளவில் 5000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து மத்திய அரசின் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் அமைத்துள்ளது. செயற்பட தொடங்கியுள்ளது. 

இந்த மையத்தினால், தமிழ் நாட்டிற்கு முழு அளவில் பயன் கிடைக்க வேண்டுமென்றால், தமிழ் நாட்டின் பல இடங்களுக்கு  எரிவாயு குழாய் அமைத்து, எரிவாயுவை கொண்டு செல்ல வழி வகுப்பது மிகவும் அவசியம். எரிவாயுவை கொண்டு மின்சார உற்பத்தி நிலையம், உரத்தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலைகள் அமைப்பது மட்டுமல்லாமல் வீட்டு உபயோகத்திற்கு எரி பொருள் கொடுப்பதும் சாத்தியமாகும். 

தற்போது எண்ணூரிலிருந்து சுமார் 1170 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 2800 கோடி முதலீட்டில், தமிழகத்தில் பல இடங்களுக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொச்சியிலிருந்து, தமிழகத்திற்கு சுமார் 310 கிலோ மீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய் அமைப்பதில் ஏற்பட்டுள்ள  சிக்கலை காணும் போது, எண்ணூரிலிருந்து 1170 கிலோ மீட்டர் நீளத்திற்கு தமிழகத்தில் எரிவாயு குழாய் அமைத்து எரிவாயுவை கொண்டு செல்ல முடியுமா என்று ஐயம் கொள்வது இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாதது.

தமிழக அரசு எண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையத்திலிருந்து எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் அமைப்பதற்கான திட்டத்தை, மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஆலோசனை செய்து, தகுந்த முறையில் செயலாற்ற வேண்டியது இன்றியமையாதது. 

நன்றி

என். எஸ்.வெங்கட்ராமன்

Series Navigationஅருளிச்செயல்களில் மச்சாவதாரம்