இரங்கல்

Spread the love

கு. அழகர்சாமி

நீ வழக்கமாய்  முகத்தில் தெரிவிக்கும் புன்னகை போல்

அதே மின் கீற்றுப் புன்னகை- ஆனால் 

இது உண்மையல்ல.

உன் அறையில் ஓரிரவில் உறக்கம் பிடிக்காமல் விழித்த போது பார்த்த

நீ உறங்கிய அதே உறக்கம்- ஆனால்

இது உண்மையல்ல.

நீயும் நானும் பேசிக் கழித்த கணங்களின் இடையே நிலவியது போல்

நிலவும் அதே அமைதி- ஆனால்

இது உண்மையல்ல.

முன்பு நம் சந்திப்புகளின் இடைவெளியைச் சந்தித்தே நிரப்பியது போல்

நிரப்பும்  இந்த சந்திப்பும்-  ஆனால்

இது உண்மையல்ல.

நம்புவதற்கும் நடப்புக்கும் இடையில் நெடு நேரம் நிற்க முடியவில்லை

உன் முன்.

நீ

நீ தான்

நீயுமில்லையுந் தான்.

உன் நிழலில்லாத வெயில்

வெளியே.

நிழல் மரம் உன் மொழியில்

மெளனமாய்-

அதன் கீழ்

எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் வந்திருப்பவர்கள்

வழக்கம் போல்.

கு. அழகர்சாமி

Series Navigationவண்ணைசிவா கவிதைகள்அக்கா +அண்ணை +நான்..?