இராஜராஜன் கையெழுத்து.

Spread the love

கு.அழகர்சாமி

நெல் விளையும் காவிரி பூமியிலே
கல் விளைத்த கவின் கோயில் அதிசியம்.

பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட
அருஞ்செயலின் கலைச்சிற்ப சாகசம்.

ஏக வெளியைக் காதலித்துக் கைப்பிடித்து
எல்லை தாண்டிய கோபுரக் கலை உச்சம்.

நடமாடாக் கற்கோயில் கலை நடனம்.
நடுவெளியில் நிலத்தொளிரும் கலைதீபம்.

சட்டென இங்கென்று தென்பட்டுச் சிரிக்கும்
காட்டுப் பூவெனும் கட்டிடக் கலையின் மந்தகாசம்.

பறவைகள் வட்டமிட்டுப் பறந்து வியந்து பாடும்
வீழாநிழல் கல்லால(ய) மரமெனும் வித்தகம்.

நேர்கண்டவுடன் நிறைவாகி கண்கள் வழி உள்புக்கு
எளிதினும் எளிதாய் வசமாகும்
அரிதினும் அரிதான காட்சி வசீகரம்.

கடந்து கடந்து செல்லும் காலம் விடும் சவாலுக்கு
கடைசி வரை பதில் சொல்லும் கலைத் துணிகரம்.

காலத்தின் தீராத பக்கங்களில் கடல் கடந்து வென்ற
சோழன் இராஜராஜன் போட்ட அழியாக் கையெழுத்து.

தொடர்ந்து கொண்டேயிருக்கும் தமிழர்
படைப்பு தாகத்தின் வற்றாத கல் ஊற்று.

நாட்டிய கரணமெல்லாம் காட்டும்
ஈசனைப் போற்றும் இந்தப் ’பெரியகோயில்’
சாற்றும் கலை ஞானம் வெறுஞ் சாத்திரமல்ல.

தணியாக் கலைதவத்தில் தமிழர் நிகழ்த்திய
நிலத்தில் மெய்ப்படும் நிலைத்த கலைப் பூரணம்.

’உம் பெருங்கனவின் செயலில் விளையும்
புதிய கலைப்படைப்பின் தனிப்பெருமைத் திறமென்ன?’
என்று
எம் முன்னோர் விட்டுப் போன
காலத்திற்கும் எதிரொலிக்கும் கலைதீரச் சவால்.

Series Navigationஆகஸ்ட் 15டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15